முகங்களின் முடிவில்…

முகங்கள் – 20 : வினாமுகர்

தொடர்ந்து இருபது நாட்கள் இருபது முகங்கள் என… ஏப்ரல் 01, 2020 முதல் ஏப்ரல் 20, 2020 வரை முகநூலில் எழுதியதுதான் இம்முகங்கள் அனைத்தும்.

ஒவ்வொரு முகமும் எனக்குள் ஏதோ ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தியவை. சில காலம்போன்று சட்டெனக் கடந்து போனவை என்றபோதும் மனத்தின் அடியாழத்தில் தம் முகத்தை அழுந்தப் பதிவு செய்துவிட்டு போனவை. சிலதோ நாளுக்குநாள் இன்னும் இன்னுமென நினைவறையில் ஆட்சி செய்து வருபவைகள்.

என் இதுநாளைய வாழ்வில் எத்தனையோ முகங்களைப் பார்த்திருந்தாலும், படித்திருந்தாலும் சிலரது முகங்கள் மட்டும் நினைக்கும்தோறும் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் மனத்தில் தோன்றி கண்ணீரையோ, பரிதவிப்பையோ, புன்னகையையோ, வலியையோ தந்துவிடுகிறது.

அப்படிப்பட்ட முகங்கள் குறித்து எழுதலாம் என்ற எண்ணம் ஈராண்டுகளுக்கு முன் உதித்ததுமே முதலில் தோன்றிய தலைப்பு ‘முகங்கள்’ என்பதுதான். சரி அப்பெயரிலேயே ஒரு நூல் எழுதிவிடலாம் என அப்போதே முடிவு செய்துவிட்டேன்.

என்றபோதும் இந்நூலை உடனே எழுதுவதாக திட்டமில்லை. 2021 அல்லது 2022-ல் எழுதலாம் என்பதுதான் திட்டம். இக்கொரோனா – தொடர் வீடைடைவு காலம் என… எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேற, ‘நாம ஏன் முகங்கள் நூல இப்பவே எழுதக் கூடாது? அதுவும், முகநூலில் தினம் ஒரு முகம்?’ எனத் தோன்ற, உடனே தொடங்கிவிட்டேன்.

உண்மையில் சொல்லப்போனால் எழுத ஆரம்பித்த முதல் ஓரிரு நாட்களும் ஓரிரு முகங்களும் மட்டும்தான் நினைவிலுள்ளது. அதன்பின் அதுவாக என்னைக் கொண்டு எழுதிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எழுதுதல் எவ்வளவு மகிழ்ச்சிகரமானது, அதிலும் தொடர்ந்து எழுதுதல் எத்தனை சுகந்திரமானது என்பதை மனதார உணர்ந்த நாட்கள் இம்முகங்கள் பற்றி எழுதிய இருபது நாட்களும். அதோடு வரும் நாட்களில் மிகக் குறைந்த நாட்களில் தொடர்ந்து இதுபோன்ற பல படைப்புகளை என்னால் தமிழுக்குக் கூடுதல் உற்சாகத்தோடு தரமுடியும் என்ற நம்பிக்கையையும் ஒருங்கே தந்தது இம்முகங்கள் என்பேன்.

இம்முகங்கள் ஒவ்வொன்றுக்கும் அந்தந்த முகத்திற்கேற்ப புதிதாக பெயரொன்று வைத்திருக்கிறேன். அதை வாசித்த ஒவ்வொருவரும் குறிப்பிட்டு சொன்னதும், கொண்டாடியதும் மறக்க முடியாதது. அதோடு பல முகங்கள் தங்களை உலுக்கியதாகவும், இரவெல்லாம் உறங்கவிடாமல் அழவைத்ததாகவும் சொன்னதும், ஒவ்வொரு முகமும் வாசிக்கையில் உருவம்கொண்டு கண்முன் நின்றதாகவும், வாசித்தபின் மறக்கமுடியாத இடம்பெற்று மனத்துக்குள் இருப்பதாகவும் பலரும் சொன்னது என் எழுத்துக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகவே நினைக்கிறேன்.

இதில் வரும் முகங்கள் யாவும் வெறுமனே படித்துவிட்டு கடந்து போவதற்கானதல்ல. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாடங்களைச் சொல்லித் தருவன. சொல்லித் தருவதோடு மட்டுமல்லாமல், நமக்குள் பல வினாக்களை எழுப்புபவை. எழுப்பி விடைகளையும் உடன் தருபவை. நம் இதுநாளைய இருப்பை உணர்த்துபவை. வருநாளைய வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தத்தோடு வாழ வழிகாட்டுபவை. ஆம்!

படைப்புகளில் வரும் கற்பனைப் பாத்திரங்களைக் காட்டிலும் நிஜப் பாத்திரங்களுக்கு வலிமை அதிகம் என்பார்கள். அவ்வகையில் இம்முகங்கள் அனைத்தும் நிஜமானவை. என் சிறுவயது முதல் இப்போது வரைக்கும் கண்டவை. வாழ்க்கைக்கான அர்த்தத்தை பல்வேறு தருணங்களில் உணர்த்தியவை. ஏடுகள் சொல்லித்தராத எத்தனையோ உன்னதப் பாடங்களைச் சொல்லித் தந்தவை.

ஆம்! எனக்கு மட்டுமல்ல… வாசித்த உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் சிறு சலனத்தையாவது இம்முகங்கள் ஏற்படுத்தி இருக்குமாயின் அதுவே எனக்கும் இந்நூலுக்குமான பெருவெற்றி என்பேன்.

ஏப்ரல் 22, 2020                                        முகங்களின் நினைவுகளோடு,

சென்னை – 34                                        வடிவரசு

*

முகங்களின் முதலில்…

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 4 : திட்டம்மா

முகங்கள் – 5 : ஏகாந்தர்

முகங்கள் – 6 : நகலி

முகங்கள் – 7 : மோனன்

முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

முகங்கள் – 9 : வக்கீலண்ணா

முகங்கள் – 10 : பத்தாள்

முகங்கள் – 11 : ஞாளியார்

முகங்கள் – 12 : திருநி

முகங்கள் – 13 : அறிமுகன்

முகங்கள் – 14 : நட்புறா

முகங்கள் – 15 : அவளான்

முகங்கள் – 16 : மீயாய்

முகங்கள் – 17 : ஐயார்

முகங்கள் – 18 : மன(த்)தி

முகங்கள் – 19 : ஊம்பிங்தாத்தா

முகங்கள் – 20 : வினாமுகர்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=