முகங்கள் – 6 : நகலி

**
‘பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை.
யார் மேலும் பட்டுவிடாமல்
இரண்டு கைகளையும் வீசிக்கொண்டு
இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும்.
அவ்வளவுதான்.’
– கல்யாண்ஜி
**
அதிகாலைகள் அதிசயத்தை உண்டாக்கக் கூடியவை. அதிகாலைப் பயணங்கள் பெரும் ஆச்சரியத்தையும், பேரின்பத்தையும் ஒருங்கே தரக்கூடியவை. அதனால் அதிகாலையில் எழுவதையும், பயணிப்பதையும் மிகப் பிடித்த விஷயங்களாக எப்போதும் கொண்டிருக்கிறேன்.
அதிலும் ஆள் நடமாட்டம் இல்லாத, காகங்கள், குருவிகள், கிளிகள் போன்ற பட்சிகளின் கூக்குரல் கேட்டபடி, இரு பக்கமும் மரங்கள் நிறைந்த நகரச் சாலைகளிலும் தெருக்களிலும் நடத்தல் பெரும் சுகம் தரக்கூடியவை. கிராமம் குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. சொன்னால் அது தேன் இனிக்கும் என்பதுபோல் ஆகிவிடும்.
அன்றைய தினம் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருக்குமென சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு, மரங்களின் சலசலப்பையும் புள்ளினங்களின் மென் குரலையும் கேட்டு ரசித்தபடி வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தத்தில் போய் காத்திருந்தேன்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நான் செல்ல வேண்டிய பேருந்து நான்கைந்து பேர்களோடு வந்து நிற்க, அதிலேறி அண்ணாநகர் வட்டகையில் இறங்கி, கோபுரப் பூங்கா செல்லும் வழியில் உள்ள தேநீர்க்கடையில் குளம்பி ஒன்று வாங்கி மெதுமெதுவாக ரசித்துக் குடித்தேன்.
காலை நேரத்தில், அதுவும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் யாவும் இரட்டிப்பு சுவையுடன் இருப்பதாக தோன்றும். அதிலும் குறிப்பாக பயணங்களின் போது பருகும் தேநீருக்கும், குளம்பிக்கும் எங்கிருந்துதான் கூடுதல் சுவை வந்து சேர்ந்துவிடுகிறதோ என ஆச்சரியமாக இருக்கும். அன்றைய தினம் பருகிய குளம்பி அப்படியான கூடுதல் சுவை தந்ததை இப்போது நினைத்தாலும் அதன் ஒரு துளி வந்து நாவில் சப் கொட்ட வைக்கிறது.
பின் அங்கிருந்து நடந்து பூங்காவினுள் நுழைந்து யாருமற்ற தனியிடம் ஒன்றைப் பார்த்து அமர்ந்தேன். அவ்விடம் கொத்துக் கொத்தாய்ப் பூத்துச் சிரிக்கும் புங்கை மரம் ஒன்றிருந்தது. அதன் மணமும், அதில் தேன் எடுக்க வந்த வண்டுகளின் சிறு ரீங்காரமும் தந்த லயிப்பில் சில நிமிடங்கள் என்னை மறந்து உட்கார்ந்திருந்தேன்.
பொழுது நன்கு விடிந்து மனிதர்களின் பேச்சிரைச்சல் மரங்களில் ஆங்காங்கே உட்கார்ந்திருந்த பறவைகளின் குரலைத் தாண்டி கோரமாக கேட்டது. அதிலும் பத்திருபது பேர் பூங்காவின் மையத்திலுள்ள கோபுரம் அருகில் வட்டமாக நின்று கத்திச் சிரிக்கும் சத்தம் (சிரிப்பு யோகாவாம்!) ஒருவித உபாதையை எனக்குள் உண்டுபண்ணுவது போன்றிருந்தது.
புத்தகங்கள் படிப்பது 2012-ல் ஆரம்பித்த பழக்கம். அதுமுதல் ஞாயிறுதோறும் சென்னை – அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்று படிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். சில புத்தகங்களை ஏதாவது புதிய இடங்களுக்கோ அல்லது ஏற்கனவே பரிட்சயமான மிகப் பிடித்த ஓர் இடத்திற்கோ போய் தனியாக உட்கார்ந்து படிக்க வேண்டும் போல் தோன்றும். அப்படியொரு புத்தகத்தோடு சென்றமர்ந்திருந்த எனக்கு, அப்படியே நேரெதிரில் குழந்தைகள் விளையாடும் பகுதியில் இருபத்தைந்து வயது பெண் ஒருவர் உயரமாக வளர்ந்திருந்த அசோக மரத்தில் சாய்ந்தபடி புது வாகாக நின்றிருந்தது ஏதோ வித்தியாசமாகப் பட்டது. அதனால் கொஞ்ச நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒடிசலான கருத்த உடம்பு. பாவாடை சட்டை அணிந்துகொண்டு, மேலே ஒரு துண்டை துப்பட்டா போல போட்டிருந்தார். பார்க்க சாதாரண பெண் போன்று அவர் இல்லை என்பது அவரது முகத்தையும் நிற்பதையும் பார்த்ததும் என்னால் நன்கு உணரமுடிந்தது.
சில நிமிடங்கள் சென்றிருக்கும். குழந்தை ஒன்றை அவர் அம்மா ஏணிப்படியில் ஏற்றிவிட்டு சறுக்கி விளையாடிக்கொண்டிருந்ததை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். பின் அக்குழந்தையை கூட்டிக்கொண்டு அந்தம்மா சென்றதும், அவர் நேராகப் போய் அக்குழந்தை ஏறியது போலவே ஏணிப்படியில் ஏறி, அக்குழந்தை தன் அம்மாவிடம் பேசியது போலவே ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டு, ‘ஹே…’ என குழந்தை கத்திக்கொண்டே சறுக்கி கீழே வந்தது போன்று அவரும் கத்திக்கொண்டு சறுக்கி கீழே வந்தார்.
அவரது அச்செயல் எனக்கு விநோதமாகப் பட்டது. இத்தனைக்கும் அவ்விடத்தில் ’13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே விளையாட அனுமதி’ என்ற பலகை வேறு இருந்தது.
ஏன் இப்படி செய்கிறார் என யோசிக்கும் நேரத்தில், அருகில் இன்னொரு குழந்தை ஊஞ்சலில் ஆடுவதையும், அதை அவரது வயதானத் தாத்தா நின்று தள்ளிவிடுவதையும் பார்த்துக் கொண்டிருந்தார். பின் அவர்கள் அங்கிருந்து சென்றதும் அதே போன்று ஊஞ்சலில் உட்கார்ந்து, பின்னாலிருந்து யாரோ தள்ளிவிடுவது போன்று கற்பனை செய்து ஆட ஆரம்பித்தார்.
அவர் அப்படி செய்வதை பூங்காவில் என் தவிர ஓரிருவர் பார்க்கிறார்கள் என்பதைக் கூட கவனிக்காமல் தன் பாட்டுக்கு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது, என் தவிர யாவருக்கும் நிச்சயம் ஒருவித எள்ளல் கலந்த சிரிப்பையும், கூடவே அவர் குறித்த ஏளனசொற்களையும் வரவழைத்திருக்கும்.
தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்பதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து என்னைக் கடந்து பூங்காவின் நுழைவுவாயில் அருகே முதியோர்கள் உட்கார போடப்பட்டிருக்கும் ஸ்டோன் பெஞ்ச் ஒன்றில் போய் அமர்ந்தார்.
நடுநடுவில் அவர் தன் மேலே போட்டிருந்த துண்டை சரி செய்வதும், பாவாடையை இழுத்து சரி பண்ணுவதும், பெண்களுக்கே உரித்தான பாதம் முதல் மார்பு வரைக்குமான அங்க அழகை லேசாகக் குனிந்து நொடிநேரப் பார்வையில் ரசிப்பதுமாக இருந்தார்.
அவர் உட்கார்ந்திருந்த ஸ்டோன் பெஞ்ச் அருகில் சுற்றிலும் வரிசையாக செடிகளும் மரங்களும் அதிகமாக இருக்கும். அதோடு அவ்விடம் பூங்காவின் நுழைவு வாயிலுக்கு அருகிலேயே இருப்பதால் முதியவர்கள் மட்டுமல்லாது அனைத்து வயதினரும் அங்கே வந்து உட்காருவார்கள்.
பெரியவர் ஒருவர், வாக்கிங் வந்தவராக இருக்க வேண்டும் வெளியில் விற்கும் அறுகம்புல் சாற்றையோ, வாழைத்தண்டு சாற்றையோ வாங்கி வந்து அங்கே உட்கார்ந்து மிடரு மிடராக சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி குடித்துக் கொண்டிருந்தார். பின் தன் நகர்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்துப் பேசியவர் வேக வேகமாக குடித்து முடித்துவிட்டு எழுந்து வெளியில் போனார்.
இதனை பக்கத்து ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த அப்பெண், எழுந்து பெரியவர் உட்கார்ந்து சாறு பருகிய இடத்தில் போய் அமர்ந்து, அவரைப் போன்ற தோரணையில் நெஞ்சை நிமிர்த்தி, அவர் செய்தது போலவே சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, கையில் காகிதக் குவளையில் சாறு இருப்பதுபோல் கற்பனை செய்து குடித்துக்கொண்டிருந்தார்.
அதிர்ச்சியாக இருந்தது. இவர் நிச்சயம் மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனாலும் ஒரு பக்கம் அவர் அப்படியெல்லாம் திட்டமிட்டு நடிப்பதாகவும் பட்டது. அப்போதே முடிவு செய்தேன், இன்றைக்கு நாம் படிக்கவேண்டிய புத்தகம் இவர்தான் என.
காலை மணி ஒன்பது என பூங்காவின் மைய கோபுரத்தின் மீதிருந்த ஒலிபெருக்கி அறிவித்தது. சரி காலை உணவை முடித்துவிட்டு வந்து விடலாம், இவர் எப்படியும் இங்கே தான் இருப்பார் என்று உறுதியாக எண்ணிக்கொண்டு வெளியில் போய் ஓர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.
நினைத்தது போல் அவர் அங்கேதான் இருந்தார். இம்முறை அவர் பூங்காவில் உள்ள புல்தரைக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த நபரை, எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என யூகித்துவிட்டேன்.
ஆம்! அரை மணி நேரமாக புல் தரைக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவரையே பார்த்தவர், அவர் அங்கிருந்து சென்றதும் நேராகப் போய் அவர் கீழே போட்டுச் சென்ற தண்ணீர் வராத பழுப்பை எடுத்து, புல்தரைக்கு சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தார்.
அவருடைய இச்செயலையும் அவரையும் அப்பக்கமாக வருபவர்கள் போகிறவர்களில் பலர் பெரும் விந்தையாகப் பார்த்தார்கள். இன்னொரு பக்கம் எனக்கு அவரின் செயல்கள் வித்தியாசமான வேடிக்கை என்பதைத் தாண்டி கவலை தரக்கூடிய ஒன்றாகவே இருந்தது.
அவர் உடுத்தியிருந்த உடை பழையதும் கிழிந்ததுமாக இருந்தாலும், அவர் அதை அணிந்திருக்கும் நேர்த்தி வேண்டுமென்றே இப்படியெல்லாம் நடிக்கிறாரோ என்றுதான் யோசிக்க வைத்தது.
சரி கொஞ்ச நேரம் எடுத்துவந்த புத்தகத்தைப் படிக்கலாம், படித்தவாறே அவரையும் நடுநடுவில் பார்க்கலாம் என முடிவெடுத்து சிறுவர்கள் விளையாடும் பகுதியில் உள்ள ஒரு மரத்தடி பெஞ்சில் போய் உட்கார்ந்தேன்.
அண்ணா நகர் கோபுரப் பூங்காவில் எனக்கு மிகப் பிடித்த இடம் அது. காரணம் சுற்றிலும் மரங்கள். எப்போது சென்றாலும் அவ்விடத்தில் ஒலித்திடும் கிளிகளின் கீச்சொலி. வரிசை கட்டிவரும் குழந்தைகளும் அவர்களது இடைவிடாத விளையாட்டும் என்னில் எப்போதும் கூடுதல் உற்சாகத்தை விதைத்துவிடும்.
நேரம் மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. நடைப்பயிற்சிக்கு வந்தவர்களின் கூட்டம் குறைந்து, பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமானது. அதிலும் அருகிலிருந்த கல்லூரியின் மாணவர்கள் பலர் வந்தவண்ணம் இருந்தார்கள். அவர்களில் ஒரு பெண்ணும் பையனும், காதலர்களாக இருக்க வேண்டும் தனியாக எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் போய் அமர்ந்தார்கள்.
சற்று நேரம் ஏதோ மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென சத்தம்போட்டு சண்டை போட ஆரம்பித்தனர். பின் சில நிமிடங்களில் அவர்களது சண்டை முடிவுக்கு வர, அந்தப் பெண் அவனது தோள் மீது சாய்ந்து கொண்டு சிரித்துப் பேச ஆரம்பித்தார்.
சட்டென அப்பெண்ணின் நினைவு வர திரும்பிப் பார்த்ததும், அவர்களுக்கு அருகில் இருக்கும் மரத்தில் சாய்ந்தவாறு நான் பார்த்த அவர்களது செய்கையையே அவரும் பார்த்துக்கொண்டிருந்தார்.
‘அய்யோ… இப்போ என்ன நடக்கப்போவுதோ?’ என ஒருபக்கம் ஆர்வம், இன்னொரு பக்கம் பதற்றம்.
நான் பதற்றப்படக் காரணம் அவ்விடம் சுற்றிலும் இப்போது கல்லூரி மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரின் செயலைப் பார்த்தால் நிச்சயம் புரிந்துகொள்ள முற்பட மாட்டார்கள். மாறாக அவரை கத்தி கேலி செய்து வம்பு இழுப்பார்கள்.
ஆம்! நினைத்தது போலவே நடந்தது. அந்தக் காதலர்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர் அருகில் காலியான இன்னொரு பெஞ்சில் போய் உட்கார்ந்து அந்தப் பெண் செய்தது போலவே பக்கத்தில் ஒருவர் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு அவரிடம் பேசுவது போலவே பேசிக்கொண்டிருந்தார்.
பின் அருகில் இருப்பவர் தோள் மீது சாய்வது போன்று கற்பனை செய்துகொண்டு சாய்ந்து, சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அவரையும் அவரது செயலையும் கல்லூரி மாணவர்களில் ஒருவன் பார்த்து மற்றவர்களுக்குச் சொல்ல… அவ்விடத்தில் இருந்த பெரும் கூட்டமே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதில் அவர் யாரைப் பார்த்து அப்படி செய்துகொண்டிருக்கிறாரோ அந்த காதலர்களும் அடக்கம்.
சில நிமிடங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவன், சிறிதாக ஒரு கல்லை எடுத்து அந்தப் பெண்ணை நோக்கி வீசினான். அது அவர் மீது படவில்லை. ஆனால் மிக அருகில் போய் விழுந்தது. அடுத்து இன்னொரு கல் எடுத்து வீச அது நேராக அப்பெண்ணின் மார்புமீது போய் பட்டது.
இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் பயந்து நடுங்கிப்போனார். சுற்றிலும் பெரும் கூட்டம் ஒன்று தன்னைப் பார்ப்பதையும், ஏதோ செய்ய காத்திருப்பதையும் பார்த்து அதிர்ந்தார்.
‘ஹே… லூசப் பார்றா மாமா டேய். ஒண்ண மாதிரி ஆக்ட் வுடுது..’’ என ஒருவன் சத்தமாக சொல்ல, உடன் இருந்தவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் கத்திக் கூச்சலிட ஆரம்பித்தனர்.
என்ன செய்வதென தெரியாத அப்பெண், பயந்து நடுங்கியபடி மெதுவாக எழுந்து சில அடிகள் மெல்லமாக நடந்து பின் வேகமாக ஓட ஆரம்பித்தார். நேராக ஓடி இடது பக்கம் திரும்பி கழிவறைக்கு எதிரிலிருக்கும் குட்டையை ஒட்டிய வழியில் சென்று மறையும் வரைக்கும் இவர்களது ஏளனப் பேச்சும் வெற்றுக் கூச்சலும் உரத்து ஒலித்தது.
எனக்குக் கோபமாக வந்தது.
‘படிக்கிற நாய்ங்க இப்டியா நடந்துப்பாங்க? அந்தப் பொண்ணயும், அதோட செய்கயயும் பாக்கறக் கொழந்தக் கூட புரிஞ்சிக்கும். இதுங்கலாம் படிச்சி என்னத்தக் கிழிக்கப் போறாங்களோ?’ என நினைத்துக்கொண்டு, எழுந்து அவர் சென்ற வழியாக நானும் நடந்து சென்றேன்.
தண்ணீர் அடிவரை வடிந்து சிறுசிறு குட்டைகளாக நின்றிருக்க, அதில் கூட்டமாக வந்த நாரைகள் அங்கொன்று இங்கொன்றாக நடந்து மீன்கள் தேடிக்கொண்டிருப்பதை நடுநடுவில் பார்த்தபடி கடந்து பூங்காவின் மறுபக்க மதில் சுவர் வரைக்கும் தேடிச்சென்றும் அப்பெண்ணை எங்கேயும் காணவில்லை.
பாவம் அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும். யாரையும் தொந்தரவு செய்யாமல் அவர் பாட்டுக்கு தனக்குத் தோன்றியதை செய்யக்கூட இங்கே உரிமையில்லையா? அவரின் நிலையைப் புரிந்துகொள்ள அத்தனை பேர் இருந்த கூட்டத்தில் ஒருவர்கூட இல்லையா?
மதிய உணவு நேரம் நெருங்கியது. பசித்தது. ஆனால் சாப்பிட மனமில்லை. கையில் வைத்திருக்கும் புத்தகத்தைப் படிக்கலாம் என நினைத்தால் அதற்கும் மனம் ஒன்றவில்லை.
சுற்றிலும் திரும்பத் திரும்பப் பார்க்கிறேன். அங்கிருந்து குட்டையின் மறுபுற வழியாக நடந்து இன்னொரு தடவை குட்டையை சுற்றி வந்தேன். எங்கும் காணவில்லை.
இந்த மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம், குணம் கொண்டவர்கள் என்றபோதும் ஏன் சிலர் மட்டும் கேலிக்கு உரியவர்களாகிறார்கள்? ஒருவர் பிறர் செய்வதைப் பார்த்து அப்படியே திருப்பிச் செய்கிறார் என்றால் அவர் குழந்தை அல்லது குழந்தைக்கு நிகரானவர் என்றுதானே அர்த்தம். பிறகேன் அவரை கேலி செய்ய வேண்டும்? பிறக்கும்போதே யாவரும் யாவற்றையும் கற்றுக்கொண்டா வந்தோம்? அல்லது அனைத்தையும் கற்றுக் கொண்டுதான் போகப்போகிறோமா?
ஒரு சொல்லுக்குள் பொருள் அடங்கியிருப்பது போல ஒருவரது செயலின் பின்னாலும் ஒரு காரணம் இருக்கத்தானே செய்யும்? பிறகேன் அதைக் கண்டறிய முற்படாமல், குறைந்தபட்சம் மதிக்கக் கூட எத்தனிக்காமல் ஏளனப்படுத்தவேண்டும்?
அப்போ… யாரையும் தொந்தரவு செய்யாமல், காயப்படுத்தாமல், தான் கண்டதை, தான் உணர்ந்ததை, தான் நினைத்ததை செய்யும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? இல்லை… அவரது தோற்றத்தையும், அவரின் செய்கையையும், அதற்குப் பின்னுள்ள காரணத்தையும் மருந்துக்கும் அறியாது, பொருட்படுத்தாது எடுத்த எடுப்பில் கேலியாக்கி, பயப்படுத்தி, ஏளனப்படுத்தி துரத்திக் காயப்படுத்திய இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா?
ஒருபக்கம் அவர்கள் மீது அளவுகடந்த கோபம். இன்னொரு பக்கம் அப்பெண்ணை நினைத்த வருத்தம். எதுவும் செய்ய முடியவில்லை. மீண்டும் மீண்டும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன். எங்காவது இருக்கமாட்டாரா என்று கண்களும் மனதும் தேடுகிறது.
இல்லை. இல்லை. அவர் எங்கு தேடியும் இல்லை. என்ன செய்வது?
அருகிலிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டுபோன புத்தகத்தை திறந்து அதன் முன்னுரையை மட்டும் படித்தேன். மீண்டும் ஏதோ யோசனையில் விழுந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
தூரத்தில் ஒரு மரத்தின் பின்னால் நின்றுகொண்டு யாரோ ஒருவர் பார்ப்பது போன்று தோன்றியது. அது அவராக இருக்க வேண்டும் என விரும்பியது மனம். ஆம்! அவரேதான்.
அதுவும் அவர் என்னைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததும், அவரை நான் பார்த்துவிட்டது போல் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் புத்தகத்தை எடுத்து கொஞ்ச நேரம் புரட்டிப் பார்த்துவிட்டு அங்கிருந்து எழுந்து பூங்காவின் பின்பக்க வாசல் நோக்கி நடந்தேன்.
நினைத்தது போல் மரத்தின் பின் பக்கத்திலிருந்து மெல்ல வெளியில் வந்தவர், ஒருவித பயத்தோடும் நடுக்கத்தோடும் மெதுவாக நடந்து நான் உட்கார்ந்திருந்த பெஞ்ச் அருகில் வந்து சுற்றிலும் பார்த்தார். பின் என்ன நினைத்தாரோ உற்சாகமாகி நான் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்தது போலவே உட்கார்ந்து புத்தகம் படித்ததுபோலவே படிக்க ஆரம்பித்தார்.
ஆம்! அவர் மீண்டும் தனக்குப் பிடித்ததைப் பார்த்து ரசித்து அதைப்போலவே செய்ய ஆரம்பித்துவிட்டார்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அந்த இருபத்தைந்து வயதுக் குழந்தையும் எனக்கு தெய்வமாகவே பட்டது. அதனால் மனதுக்குள் மகிழ்வுடன் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வந்தேன்.
(ஏப்ரல் 06, 2020)
*