முகங்கள் – 19 : ஊம்பிங்தாத்தா
*முன்குறிப்பு : இம்முகம் கெட்ட வார்த்தையை சரளமாகப் பேசக்கூடிய முகம் என்பதால், விருப்பமில்லாதவர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

**
‘என் முகம்
மலரச் செய்த சிறுகாற்று
அந்த இலைச்சருகை
சாக்கடையில் தள்ளியது.’
– வைதீஸ்வரன்
**
கற்பனையைக் காட்டிலும் நிஜங்கள் எப்போதும் பல மடங்கு சக்தி வாய்ந்தவை. என்னதான் கற்பனையின் உச்சத்திற்குப் போய் சிலவற்றை மனித மூளை சிந்தித்தாலும் சில நிஜங்களுக்கு முன் அவை தோற்றுத்தான் போகின்றன.
கற்பனை – நிஜம் இரண்டும் எதிரெதிரானது என்றபோதும் சில கற்பனைகள் நிஜங்களாகவும், சில நிஜங்கள் கற்பனை போன்றும் இருப்பதை பல தடவை நாம் உணர்ந்திருக்கலாம்.
உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கலைப்படைப்புகள் கற்பனையாக உருவாக்கப்பட்டிருப்பினும் அதில் நிஜங்கள் இல்லாமல் இருக்க முடியாது. அதைப்போல் முழுக்கமுழுக்க நிஜங்களை வைத்து உருவாக்கப்படும் கலைப்படைப்புகளில் கற்பனைகள் கலக்காமல் இருக்க முடியாது.
சிறுவயது முதலே நிஜங்களை கற்பனையாகவும் கற்பனையை நிஜங்களாகவும் மனத்துக்குள் எண்ணிப் பார்க்கும் பழக்கம் எனக்குள் உருவானது. இது கலைஞர்களுக்கே உண்டான தனி குணம் என்றாலும் சில நேரங்களில் நம்மையும் மீறி நம்முன் நிகழும் நிஜங்களையும் நம்முள் உருவாகும் கற்பனையையும் நம்மால் தடுக்க முடியாது.
அதிலும் சில நிஜங்கள் அப்போதுதான் கண்முன் நிகழ்வது போன்றிருக்கும். ஆனால் கற்பனையில் ஏற்கனவே நிகழ்ந்தது போன்ற எண்ணத்தை உருவாக்கும். அதேபோல் சில கற்பனைகள் இப்போதுதான் உதித்தது போன்றிருக்கும். ஆனால் நிஜத்தில் முன்னமே நடந்த ஒன்றாக இருக்கும்.
நிஜம், கற்பனை இரண்டும் கலந்ததுதான் மனிதர்களின் வாழ்வும், அவர்கள் உருவாக்கும் கலைப்படைப்புகளும் என்றாலும்… சில நிஜங்களையும் சில கற்பனைகளையும் அவ்வளவு எளிதில் மனமானது ஏற்பதில்லை. அதிலும் சில நேரங்களில் நம்முன் நிகழும் நிஜம் ஒன்றை எவ்வளவு முயன்றும் நிஜமென மனித மூளை ஏற்க மறுப்பதையும் கண்டிருக்கிறேன். ஆம்!
அன்றைய தினம் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்காத ஒன்று கண்முன் நிகழ்ந்தது. முதலில் அது நிஜம்தான் என உணர புத்தி மறுத்ததையும் பின் நீண்டநேரம் கழித்து ஏற்றதையும் இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.
அன்றைய தினம் எனக்கு மதுரையில் உள்ள நண்பனின் அறையில்தான் விடிந்தது. முன்தினம் அவனோடு சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் அழகர்கோயில், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலைமீது ஏறிவிட்டு வந்த சோர்வில் அடித்துப் போட்டதுபோல் இரவு தூங்கிவிட்டேன்.
அதனால் மறுநாள் காலையில் தாமதமாக எழுந்தவன் வேகவேகமாக குளித்துக் கிளம்பி அருகிலிருக்கும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு அவனது இருசக்கர வாகனத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் போய் இறங்கினேன்.
பின் அங்கிருந்து விருதுநகரில் உள்ள இன்னொரு நண்பனின் வீட்டுக்குச் செல்ல பேருந்தேறி உட்கார்ந்ததும் நண்பனை அழைத்து தகவலைச் சொல்லிவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டேன்.
இருபது அல்லது இருபத்தைந்து நிமிடத் தூக்கத்தில் யாரோ ஒரு வயதானவரைச் சுற்றி நின்று கூட்டமாக நாங்கள் சிரிப்பதுபோன்றும், நான் போய் அந்த வயதானவரிடம் எதையோக் கேட்பதுபோன்றும் கனவு வந்தது. சரி கனவுதானே என அதோடு அதை விட்டுவிட்டு சன்னல் வழியாக வெளியில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.
சரியாக விருதுநகர் பேருந்து நிலையத்தில் போய் இறங்கியதும் அங்கே எனக்காக காத்திருந்த நண்பன் ஓடிவந்து கட்டியணைத்து அங்கிருந்து ஏழெட்டு கிலோமீட்டர் தாண்டி தன் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துப் போனான்.
விருதுநகர் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது வெயிலாகத்தான் இருக்கும். அதனை சென்றிறங்கிய சில நிமிடங்களிலேயே என்னால் உணரமுடிந்தது.
நன்கு சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு அங்குள்ள புகழ்பெற்ற வெயிலுகந்த அம்மன் கோயில் திருவிழாவைக் காண வெயில் தாழ்ந்ததும் புறப்பட்டுப் போனோம்.
போனதும் கோயிலருகில் உள்ள தேநீர்க்கடையில் ஆளுக்கொரு தேநீர் குடித்துவிட்டு அருகில் இருக்கும் அவனது மாமாவின் நகர்பேசிக் கடைக்குக் கூட்டிப் போனான். சென்றதும் என்னை அவருக்கு அறிமுகப்படுத்திவிட்டு இருவரும் கடையின் முன்புள்ள வேப்பமரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது திடீரென அங்கு பெரும் சிரிப்புச் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தோம். நண்பனின் மாமாவும் அவரது நண்பர்கள் இருவரும் அருகிருக்கும் பெட்டிக்கடை தாத்தாவும் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்கள். சரியென விட்டுவிட்டு நாங்கள் மீண்டும் பேச ஆரம்பித்தோம்.
மீண்டும் சிரிப்புச் சத்தம். அத்தோடங்கு ஒரு வார்த்தை, அதுவும் கெட்ட வார்த்தை திரும்பத் திரும்ப ஒலித்ததை என்னால் கேட்க முடிந்தது. உடனே நண்பனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
”ஊம்பர்த்துக்கு போனான்..’’
”ஊம்பர்த்துக்கு வந்தான்..’’
”ஊம்பிட்ருந்தான்..’’
என வார்த்தைக்கு வார்த்தை அங்கிருந்த வயதானத் தாத்தா சொல்ல, உடனிருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் அந்த தாத்தாவுக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். உடன் இருந்தவர்களுக்கு முப்பதுக்குள்தான் இருக்கும்.
கற்பனை போன்று இருந்தாலும் அது நிஜம் என்பதை எனது புத்தி வெகுநேரம் ஏற்கவில்லை. பின் ஏற்றபோது ஆச்சர்யத்தோடு அவரது அச்செயல் எனக்குப் பெரும் விந்தையாகவும் பட்டது.
அதோடு அக்காட்சி காலையில் பேருந்தில் வரும்போது கண்ட கனவில் வந்த காட்சிபோன்று இருந்ததும் நினைவுக்குவர வியப்பாக இருந்தது.
“நேத்து ராஜா எங்கப் போனான்..’’ இது நண்பனின் மாமா.
”ஊம்பர்த்துக்குப் போனான்..’’ இது அந்தத் தாத்தா.
”அங்கப் போய் என்னப் பண்ணான்?’’
“ஊம்பிட்டு வந்தான்..’’
”அவன் தெனமும் எதுக்கு வருவான்..’’
”ஊம்பர்த்துக்கு வருவான்..’’
”மொத்தத்துல அவன் என்ன ராஜா?’’
”ஊம்பர ராஜா..’’
வார்த்தைக்கு வார்த்தை மிக சகஜமாக அவ்வார்த்தையை உச்சரித்தார். அதுவும் என்ன கேள்விக் கேட்டாலும் அதற்கானப் பதிலாக அவ்வார்த்தையினை சேர்த்து யாதொரு தங்கு தடையுமின்றி மிகச் சரளமாகப் பேசினார்.
ஆரம்பத்தில் ஏன் அவர் இப்படிப் பேசுகிறார் என்றுதான் நினைத்தேன். பின் நண்பனிடம் கேட்டபோது,
”அடேய் அவரு இடுப்புல யார்னாக் குத்தனா ஒடனே அந்த வார்த்த சொல்லிடுவாரு. அதுவும் நாம என்ன கேட்டாலும் அதோட சேர்த்து சொல்லுவாரு. அதான் பாவா (அவன் மாமா) பக்கத்துல நின்னுட்டு இடுப்புலக் குத்திக் குத்திக் கேள்விக் கேக்கறாரு..’’ என்றான்.
அவன் சொன்ன பிறகுதான் அவனது மாமா பக்கத்தில் நின்று அவரது இடுப்பில் குத்துவதை கவனித்தேன். அப்போதும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. உடனே நண்பனிடம்,
“டேய் கதவுடாத, அவரு சும்மாதான அப்டி நடிக்கிறாரு..’’ என்றதும்,
”போடா வெண்ண. நான் ஏன்டா பொய் சொல்லப்போறன். நீ வேணுன்னாப் பாரு..’’ என்று சொல்லிவிட்டு அவனது மாமாவிடம் போய் எதையோ சொன்னான்.
உடனே அவன் மாமா, ”தாத்தா, அதோ ஒயரமா இருக்காரே (என்னைக் காட்டி) அவரு என் மச்சானோட நண்பரு. சென்னையில இருந்து வந்திருக்காரு. அவரக் கொஞ்சம் வரவேற்பமா?’’ எனச் சொல்லிவிட்டு, ஒவ்வொருக் கேள்வியாகக் கேட்டுமுடிக்கையில் அவரது இடுப்பில் குத்தினார்.
”அவரு எங்கர்ந்து வந்திருக்காரு?’’
”ஊம்பர்த்துலர்ந்து வந்திருக்காரு..’’
எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். என் தவிர அனைவரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
“அங்க என்ன பண்றாரு?’’
”ஊம்பிட்ருக்காரு..”
”இங்க என்ன பண்ணப்போறாரு?’’
”ஊம்பப்போறாரு..’’
”அவர எப்டி வரவேற்கலாம்..?’’
”ஊம்பிட்டு வரவேற்கலாம்..’’
அவரது அச்செயல் ஆரம்பத்தில் அருவருப்பாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்குமேல் என்னையே அறியாமல் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தது.
அதனால் அவரையும் அவரது அச்செயலையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். சரியாக அந்நேரம் பார்த்து மதுரையிலிருந்து இன்னொரு நண்பன் வந்துசேர அவனை வரவேற்க ஆரம்பித்தார்கள். அதேபோன்று, அதே வார்த்தைகளுடன், அதே சிரிப்பு சத்தத்துடன்.
இம்முறை வந்திருந்த நண்பனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அதனால் கடுப்பாகிவிட்டான். பின் விஷயம் தெரிந்ததும் சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
உடனே அவரருகில் போய்,
”தாத்தா… ஏன் அந்த வார்த்தைய இடுப்புலக் குத்துனா சொல்றீங்க?’’ என்று கேட்டேன்.
“தெரியல, சின்ன வயசுலர்ந்து அப்படிதான்..’’ என்றார்.
“கஷ்டமா இல்லயா?” என்றேன்.
எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.
“உங்க வீடு எங்கருக்கு?’’ என்று கேட்டதும், நண்பனின் மாமா அவரது இடுப்பில் குத்த,
”ஊம்பர்த்துல இருக்கு..” எனச் சொல்லிவிட்டு,
”அய்யோ இல்லல்ல, பக்கத்து ஊர்ல..’’ என்று லேசாக சிரித்தபடி சொன்னார். உடன் இருந்தவர்கள் கத்தி சிரித்தனர்.
அதற்குள் நண்பனின் மாமா தெருவில் செல்லும் ஒருவரைக் காட்டி (அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்),
“அப்பறம் தாத்தா… அதோ அங்கன அவரு எதலப் போயிட்ருக்காரு?’’ என்று கேட்டுவிட்டு இடுப்பில் குத்த,
”ஊம்புர்த்துல போயிட்டிருக்கான்..’’ என்றார்.
உடனே அவ்வழியாகச் சொல்லும் இன்னொரு அண்ணனைக் காட்டி,
”அந்த அண்ணன் எங்கப் போறாரு?’’ என்றதும்,
”ஊம்பர்த்துக்குப் போறான்..’’
இவர் அப்படி சொன்னதை அவ்வழியாக சென்ற அம்மா ஒருவர் கேட்டுவிட்டு அவரையும் எங்களையும் பார்த்து முறைத்துவிட்டுப் போனார்.
அடுத்தது இன்னொரு தாத்தாவைக் காட்டி,
”அந்த தாத்தா கைல என்ன வச்சிருக்காரு?’’
”ஊம்பர்த்து வச்சிருக்காரு..’’
அவரிடமிருந்து வரும் அவ்வார்த்தை ஆரம்பத்தில் கேட்டபோதுதான் கெட்ட வார்த்தை போன்று இருந்தது. கேட்கக் கேட்க பழகிய ஒரு வார்த்தையானதை என்னால் உணர முடிந்தது.
அதோடு அவர் அதனை ஒரு கெட்ட வார்த்தையாக நினைத்து சொல்லவில்லை என்பதையும், அதை சொல்லும்போது ஒருபோதும் விரும்பிச் சொல்லவில்லை என்பதையும் அவரது முகத்தில் படர்ந்திருந்த சோக ரேகைகளை வைத்து என்னால் நன்கு உணர முடிந்தது.
பின் அவரிடம் சென்று, ”இந்தப் பழக்கத்த மாத்திக்கவே முடிலயா தாத்தா?’’ என்றேன்.
”ம்ஹூம்..’’ என்பதுபோல் தலையாட்டினார்.
உடனே அவர் அருகிலிருந்த நண்பனின் மாமா,
”போலீஸ் ஸ்டேஷன்லக் கூட்டிட்டுப் போய் வச்சு அடிச்சிக்கூடப் பாத்துட்டாங்க..” என்றார்.
திரும்பி அவரைப் பார்த்து, ”எதுக்கு?’’ என்றேன்.
”போலீஸ்னு தெரியாம மப்டில இருக்க லேடி போலீஸைக் காட்டி எதயோக் கேட்டு குத்திவிட்ருக்காங்க. தலைவரும் அந்த வார்த்தைய சொல்லிருக்காரு. உடனே அந்த லேடி கடுப்பாயி இன்னொரு போலீஸ்கிட்டப் போய் சொல்லிட்டாங்க. வந்து கூட்டிட்டுப் போயி இடுப்புலக் குத்திக் குத்தி கேட்ருக்காங்க. இவரும் திரும்பத் திரும்ப அதையே சொல்ல, போலீஸ்னு தெரிஞ்சும் சொல்றியான்னு அடிஅடின்னு பின்னிட்ருக்காங்க. அப்பறம் எல்லாரும் போய் சொல்லிதான் கூட்டிட்டு வந்தாங்க..’’ என்றதும்,
சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள். எனக்கேனோ அப்போது சிரிப்புக்குப் பதிலாக அவர் மீது பரிதாபமே உருவானது.
இன்னும் இதுபோல் வாழ்விலவர் எத்தனை எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்க நேரிடும். அதனால் இதுவரை பெற்றதைவிட இழந்தவைதான் அதிகமாக இருக்குமென்றும் அவர் சொல்லாமலேயே தெரிந்துகொண்டேன்.
பின் அங்கிருந்து கிளம்பி நண்பர்களுடன் திருவிழாவுக்கு வந்து வெகுநேரம் சுற்றித் திரிந்தும் அவரையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் என்னால் மறக்க முடியவில்லை. அதனால் நான் ஒருமாதிரி இருந்ததைப் பார்த்த நண்பன்,
”என்னடா மாப்ள?’’ என்றான்.
”இல்லடா அந்த தாத்தாவ நெனச்சி கஷ்டமாருக்கு..’’ என்றேன்.
”கஷ்டந்தான், என்னப் பண்றது? எவ்ளவோ முயற்சிப் பண்ணி பார்த்துட்டாங்க. மாத்தமுடியல..’’ என்றான்.
பின் சிறிதுநேரம் கழித்து, ”அவரோடப் பேரயே எல்லாரும் மறந்துட்டாங்க மாப்ள. இப்ப ஊம்புதாத்தான்னுதான் எல்லாரும் சொல்வாங்க. பாவம்.
”வீட்ல, சொந்தத்ல, ஊர்லன்னு எவ்ளோப் பிரச்சனைய சந்திச்சிருக்காரு. ஆனா எல்லாம் ஆரம்பத்துலதான். இப்போ எல்லாருக்கும் பழகிப்போச்சு..’’ என்று சொல்லிவிட்டு,
முதல்வன் படத்தில் வரும் நடிகர் வடிவேல் அவர்களது பாத்திரம் இவரை வைத்துதான் உருவாக்கப்பட்டது என்ற தகவலையும் சொன்னான்.
அதுமுதல் எப்போது அவனிடம் பேசினாலும் தவறாமல் அவர் குறித்தும் கேட்பேன். அவனும் சொல்வான். கடந்த இரண்டாண்டுகளுக்குமுன் அதே திருவிழாவுக்குப் போயிருந்தபோது எவ்வளவு முயன்றும் அந்த தாத்தாவை பார்க்க முடியவில்லை.
கடைசியாக இரு வாரங்களுக்கு முன்பு நண்பனிடம் பேசும்போது அவர் குறித்துக் கேட்க, சமீபத்தில்தான் அவர் இறந்து விட்டதாகவும், கடைசிக் காலத்தில் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை என்றும், விருதுநகரில் வைத்திருந்த அக்கடையை ஏதோ பிரச்சனையால் மூடிவிட்டதாகவும், உடல்நலம் சரியில்லாமல் இறந்துபோனதாகவும் சொல்ல,
‘ஊம்பர்த்துலர்ந்து வந்திருக்காரு..’
‘ஊம்பிட்ருக்காரு..’
‘ஊம்பப்போறாரு..’
‘ஊம்பிட்டு வரவேற்கலாம்..’
என அன்றைக்கவர் என்னை வரவேற்கச் சொன்ன வார்த்தைகள் மனத்துக்குள் திரும்பத் திரும்ப ஒலிக்கக் கேட்டேன்.
ஆம்! அந்த ஒரே ஒரு தடவைதான் அவரை பார்த்திருக்கிறேன். என்றபோதும் பல ஆண்டுகள் பேசிப் பழகிய முகம். கேட்டுப் பழகிய குரல். என்னையறியாமல் கண்கலங்கி விட்டேன்.
அன்றைக்கு மட்டுமல்ல… இதோ இதை எழுதும் இந்நிமிடத்திலும்.
நிஜமான அவரையும் அவரது அச்செயலையும் அன்றைக்கு கற்பனையாக நினைத்து மனம் ஏற்க மறுத்துப் பின் ஏற்றது. ஆனால் நிஜமான அவரது இறப்பையும் அவரது அச்செயலையும் இன்றைக்கு ஏனோ கற்பனையாக நினைத்து மனம் ஏற்க மறுத்து மறுத்து மறுத்துக்கொண்டே இருக்கிறது. ஆம்!
இந்தநிமிடம் கடவுள் (இருந்தால்!) என்முன் வந்து வரமொன்று கேட்கச் சொன்னால் அவரை மீண்டும் அதே ஊரில் அதே வீட்டில் பிறக்கச் செய்து அப்பழக்கத்தால் இழந்ததையெல்லாம் திரும்பக்கிடைக்க செய்யவேண்டும் என்பேன்.
அன்றைக்கு அவரை சுற்றிநின்று எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் மட்டும் சிரிக்காமல் சிரிப்பது போன்று நடித்துக்கொண்டிருந்தார். அன்று மட்டுமல்ல வாழ்நாள் முழுக்கவும் அவர் அப்படித்தான் இருந்திருப்பார்.
அழுவதை விட சிரிப்பதுபோல் நடிப்பது எத்தனைக் கொடுமையானது என்பதை உணர்ந்த ஒவ்வொருவரும் கடவுளிடம் இதைத்தான் கேட்பார்கள். நானும் கேட்கிறேன்.
கடவுளே, எனது வேண்டுதலை நிறைவேற்றி வையும்!
(ஏப்ரல் 19, 2020)
*