முகங்கள் – 7 : மோனன்

முகங்கள் – 6 : நகலி

**

‘நீ

உன் வீட்டைக்கட்டு போதும்

குருவி கூட்டை

குருவி கட்டிக்கொள்ளும்!’

 – ஜெ. பிரான்சிஸ் கிருபா.

**

மொழிகள் குறித்து எண்ணும்போதெல்லாம் எல்லையற்ற ஆச்சரியமானது மனதுக்குள் வரிசைகட்டி எழும். அதிலும், உலகெங்கிலும் எத்தனை ஆயிரம் மொழிகள்? ஒவ்வொரு மொழியும் எப்படி உருவாகியிருக்கும்? எப்படியெல்லாம் அது தன்னை காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டு இத்தனை ஆண்டுகள் கடந்து வந்திருக்கும்? முதலில் உருவான மொழி எதுவாக இருக்கும்? அதை முதன்முதலில் உருவாக்கிப் பேசிய மனிதர்கள் நினைத்திருப்பார்களா, இத்தனை மொழிகள் மனித இனத்தில் உருவாகுமென்று? அது இத்தனை ஆண்டுகள் தாண்டியும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் என்றெல்லாம்…?

ஆதியில் மொழிகள் உருவாவவதற்கு முன் சைகைகள் மூலமாகவும் தொடல் மூலமாகவும் ஒலிக்குறிப்புகள் மூலமாகவும் நம் மூதாதையர்கள் பேசிக்கொண்டனர், தகவல்கள் பறிமாறினர் என நூல்கள் நமக்கு போதிக்கின்றன. அது குறித்து பல தடவை சிந்தித்ததுண்டு.

இன்றைக்கு இத்தனை ஆயிரம் மொழிகளும் லட்சக்கணக்கான சொற்களும் இருந்தும் சில விஷயங்களை, குறிப்பாக உணர்வுகளை சிலநேரம் அடுத்தவரிடம் சரிவர சொல்ல முடியாமல் தவிக்கிறோம். திணறுகிறோம். ஆனால் மொழிகள் என ஒன்று உருவாகாத, சொற்கள் என்றால் என்னவென்று கூட அறியாத காலகட்டத்தில் ஒலிக்குறிப்புகள் கொண்டும் சைகைகள் வழியாகவும் எப்படி அடுத்தவரிடம் தகவலை பகிர்ந்திருப்பார்கள்? தம் உணர்ச்சிகளை கடத்தியிருப்பார்கள்?

மொழிகள் என்பது மனித குலத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம் அல்லவா? அப்படிப்பட்ட அரிய பொக்கிஷத்தை இன்றைக்கு நாம் சரிவர கையாள்கிறோமா? அதன் மேன்மைக்கும் வளமைக்கும் கடுகளவாவது பங்களிப்பு செய்கிறோமா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.

லட்சத்தில் ஒருவர், கோடியில் ஒருவர் செய்யலாம் (,செய்திருக்கலாம்). ஆனால் அது மட்டும் போதுமா? அப்படி போதுமாக இருந்திருப்பின் ஏன் இன்றைக்கு பல்லாயிரம் மொழிகள் உலகெங்கிலும் அழிந்திருக்கும், அழியும் நிலைக்கு வந்திருக்கும்?

மொழிகள் குறித்து பேசப் புகுந்தால் பக்கங்கள் போதா.

அதிலும் ஆதி மொழி என்னும் மவுன மொழி பேசிய நம் பாட்டனுக்கு பாட்டன்கள், முப்பாட்டன்கள் எப்படி அம்மொழி மூலம் தம் எண்ணத்தை கருத்தை உணர்வை மற்றவருக்கு தெரிவித்திருப்பார்கள்?

நினைக்கும்தோறும் வியப்பில் ஆழ்த்தும் கேள்வியிது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் அவரை எனக்குத் தெரியும். அவர் எனக்கு அறிமுகமானதே ஓர் எதிர்பாராத சம்பவம் மூலமாகத் தான்.

அப்போது நான் சென்னை – போரூர் கார்டனில் தங்கியிருந்தேன். அங்கிருந்து அண்ணா சாலையில் உள்ள நான் வேலை பார்த்த விகடன் அலுவலகத்துக்கு தினந்தோறும் பேருந்துகளில் சென்று வருவது வாடிக்கை. அதிலும் காலையில் வெகு சீக்கிரமாக அலுவலகம் சென்று விடுவது வழக்கம்.

அன்று காலை ஆறு முப்பது மணியிருக்கும். போரூர் காரம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பிராட்வே செல்லும் பேருந்தில் ஏறியவன், ஓட்டுநர் இருக்கைக்கு இரண்டு இருக்கை பின்னால் போய் உட்கார்ந்தேன். அதற்கு அடுத்த நிறுத்தமான லட்சுமி நகரில் ஏறிய அவர் நேராக எனக்கு முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார்.

நான் மாதாந்திர பயணச்சீட்டு வாங்கி இருந்ததால் அதை நடத்துநரிடம் எடுத்துக் காட்டிவிட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நடத்துநர் யாரையோ பார்த்து,

 ‘டிக்கெட் டிக்கெட்… யோவ் முன்னாடி இருக்க புளு சட்ட…’ என கேட்கும் சத்தம் கேட்டது.

யாரைக் கூப்பிடுகிறார் என பார்ப்பதற்குள் கடுப்புடன் எழுந்து வந்த நடத்துநர் என் முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்த அவரிடம் போய், 

‘காதென்ன செவுடா ஒனக்கு? எத்தன வாட்டிக் கூப்பட்றது. காலையிலயே உயிர வாங்க வந்துட்றானுங்க..’ என சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவர் தன் பாக்கெட்டிலிருந்த மாதாந்திர பயணச்சீட்டை எடுத்துக் காட்டினார்.

‘இத முன்னாலயேக் காட்டிருக்க வேண்டியதான? இப்பயும் வாயத் தொறந்து பேசறானாப் பாரு..’ என எரிச்சலோடு கத்த,

‘எனக்கு பேச வராது, காது கேட்காது’ என சைகை மூலமாக சொல்லிவிட்டு எழுந்து போய் எனக்கு அப்படியே நேராக பெண்கள் அமரும் பக்கம் படிக்கட்டருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தார்.

‘இவனுங்கல்லாம் வீட்டுக்குள்ளயே இருந்து தொலைய வேண்டியதான… எதுக்கு வெளியில வந்து உயிர வாங்குறானுவளோ தெரில..’ என எரிச்சலோடு சொல்லிக்கொண்டு பின்பக்கம் உள்ள தனது இருக்கையில் போய் உட்கார்ந்தார் நடத்துநர்.

அவர் அப்படிச் சொன்னதும் எனக்குக் கோபமாக வந்தது. விகடன் நிருபர் வேறு அப்போது. உடனே எழுந்துபோய் நடத்துநரிடம்,

”என்ன சொல்லிட்டு வந்திங்க இப்போ?’’ என்றேன்.

ஒருமாதிரி பார்த்தார்.

”உங்க கிட்டதான் சார் கேக்கறன். இப்போ ஏதோ சொல்லிட்டு வந்தீங்களே?” என்றேன் மீண்டும்.

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

”வயசானவங்கன்னு பாக்குறன் (எப்படியும் அவருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும்). இல்லன்னா அவ்ளோதான்..’’ என்று சொல்லிவிட்டு,

”டிக்கெட் கொடுக்கிறது மட்டும்தான் ஒங்க வேல. வாய் பேச முடியாதவங்க காது கேட்காதவங்கலாம் வீட்டுக்குள்ளயே இருக்கணும் அது இதுன்னு ஏதாவது இனி சொன்னீங்கன்னா அவ்ளோதான் பாத்துக்கோங்க..’’ என கத்தி அருகில் இருப்பவர்களுக்கெல்லாம் கேட்கும்படி சொல்லிவிட்டு வந்து என் இருக்கையில் அமர்ந்தேன். 

இவை அனைத்தையும் அங்கிருந்தவாறு பார்த்தவர், என்னைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு, அவரை என் அருகில் வந்து அமரும்படி அழைத்தேன். உடனே எழுந்து வந்து பக்கத்தில் உட்கார்ந்தவர், என் கையைப் பிடித்துக்கொண்டு ‘நன்றி’ என்றார் தன் சைகை மொழியில் உதடசைத்து.

ஏற்கனவே வாய் பேச முடியாத தோழி ஒருவருடன் பேசிப் பழக்கமுள்ள எனக்கு, அவர் பேச்சை அதாவது சொல்வதைப் புரிந்துகொள்வதில் யாதொரு சிரமமும் இருக்கவில்லை.

தன் சொந்த ஊர் பீகார் என்றும், இங்கே ஸ்பென்சர் பிளாசாவில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்வதாகவும், லட்சுமி நகரில் தன் ஊர்க்காரர்களுடன் தங்கியிருப்பதாகவும், சென்னைக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆவதாகவும் சொன்னார்.

நானும் அவரிடம், ”நான் அடிக்கடி ஸ்பென்சர் வருவேன். அங்க பக்கத்துலதான் என்னோட ஆபீஸ் இருக்குது. இது என்னோட விசிட்டிங் கார்டு வச்சுக்கோங்க. கண்டிப்பா யூஸ் ஆகும்..’’ எனச் சொல்லி தந்தேன். 

அதற்குள் பேருந்து அண்ணா சாலை ஸ்பென்சர் அருகில் உள்ள டி.வி.எஸ் நிறுத்தத்தை அடைய… இருவரும் இறங்கி விடைபெற்று எதிரெதிர்ப் பக்கமாக நடந்தோம்.

அதுமுதல் அடிக்கடி அவரை பேருந்துகளிலும் ஸ்பென்சர் பிளாசாவிலும் பார்க்க நேரிடும். ஒரு நாள் மாலை நான்கு மணி இருக்கும். நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக ஸ்பென்சர் சென்று காத்திருந்ததாக நினைவு. சட்டென பின்புறம் வந்து தோளைத் தொட்டுவிட்டு முன்னால் வந்தவர் அதே மென்மையான புன்னகை காட்டி,

”எப்படி இருக்கீங்க? இங்க என்ன பண்றீங்க?” என்றார்.

”நண்பர் ஒருத்தரப் பாக்க வந்தேன். அவருக்காக காத்திருக்கேன்’’ என்றேன்.

”மதியம் சாப்டீங்களா? இப்ப ஏதாவது சாப்படுறீங்களா?” என்றார்.

”ம்.. மதியம் இங்கதான் சாப்பிட்டேன். இப்போ எதுவும் வேணாம்..’’ என்றேன் பதிலுக்கு.

உடனே அவர் நான் சற்றும் எதிர்பார்க்காத, ”ஏன், என் கூடலாம் சாப்ட மாட்டீங்களா?” என்றார்.

அவர் தான் செய்யும் வேலை குறித்த தாழ்வு மனப்பான்மையோடுதான் அப்படிக் கேட்கிறார் எனப் புரிந்து கொண்டேன். உடனே லேசாகப் புன்னகைத்து,

”அப்டிலாம் இல்லயே’’ என்றேன்.

”அப்போ என்கூட வாங்க டீ குடிக்கலாம்..’’ என என் கையை பிடித்து, தன் இன்னொரு கையில் வைத்திருந்த தரை துடைப்பானை அங்கே ஓரமாக வைத்துவிட்டு இரண்டாவது மாடியில் உள்ள தேநீர்க் கடை ஒன்றுக்கு அழைத்துப் போனார்.

ஸ்பென்சரில் உள்ள அனைத்து கடையினருக்கும் கிட்டத்தட்ட அவரை தெரியும் என்பதால் அவருடன் சென்ற என்னையும் யார் என்பதாய் அவர்களில் பலர் பார்த்தனர்.

ஆளுக்கொரு தேநீர் வாங்கி குடித்துவிட்டு அதற்கான தொகையை நான் எவ்வளவு வற்புறுத்தியும் தரவிடாமல் அவரே தந்தார். பின் தன்னுடன் ஐந்து நிமிடம் வர முடியுமா என்றார். அதற்குள் என்னை சந்திக்க வந்திருந்த நண்பரும் வந்துவிட, காத்திருக்குமாறு சொல்லிவிட்டு அவருடன் சென்றேன்.

நேராக தன் பொருட்கள் இருக்கும் அறைக்கு (வேலை செய்பவர்களுக்கான அறை அது) கூட்டிப் போனவர், ஒரு சிறு அட்டைப் பெட்டியிலிருந்து சில்லறை காசுகள் மொத்தமாக வைத்துக் கட்டிய பை ஒன்றை எடுத்து என்னிடம் தந்தார். 

”வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு உங்க விகடன் மூலமா உதவி செய்றாங்கன்னு கூட வேல செஞ்சவங்க பேசிக்கிட்டாங்க. இத என் சார்பா எடுத்துக்க முடியுமா?” என்றார்.

இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் திடீரென அப்படி சொன்னதால் ஏனோ என்னை அறியாமல் லேசாக கண் கலங்கிவிட்டது. அதைக் கண்டு கொண்டவராய்,

”ஏதோ என்னால முடிஞ்சது..” என்று சொல்லி மென்மையாக சிரித்துவிட்டு, என்னை அங்கிருந்து கூட்டிவந்து சந்தித்த இடத்திலேயே விட்டுப்போனார்.

எங்கோ ஒரு மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி இவ்வூருக்கு வந்தவர். எப்படியும் அவர் சம்பளம் ஆறாயிரத்துக்கு மேல் இருக்காது. அதிலேயே வீட்டு வாடகை, சாப்பாடு, போக்குவரத்து செலவெல்லாம் பார்த்துக்கொண்டு ஊருக்கு வேறு பணம் அனுப்ப வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் இவர் கொஞ்ச கொஞ்சமாக உண்டியலில் சேர்த்து வைத்த காசை மொத்தமும் எடுத்துவந்து தருகிறாரே. அவரை நினைத்து பெருமையாக இருந்தது.

எப்படியும் அதில் நானூறு ரூபாய் இருந்திருக்கும். நம்மில் பலருக்கு அது பெரிய பணம் இல்லை என்றாலும், அவருக்கு அது பெரும் பணம். கோடி கோடியாக வைத்திருப்பவருக்கு கூட இல்லாத மனம் அவருடையது. அதுமுதல் அவர் மீதான அன்பும் மதிப்பும் இன்னும் பல மடங்கு அதிகமானது.

அதன்பின் அடிக்கடி அவரை சந்தித்துப் பேசியிருக்கிறேன். நான்கைந்து தடவை அவருடன் தேநீர் அருந்தியிருக்கிறேன். ஒரு தடவை முதல் மாடியில் உள்ள வெளிப்புறக் கடையில் ஐஸ்க்கிரீம் கூட சாப்பிட்டிருக்கிறேன்.

ஒருநாள், 2016 ஜனவரி கடைசியாக இருக்கும். மதிய உணவு சாப்பிட நண்பருடன் ஸ்பென்சருக்கு சென்றிருந்தபோது எதிரில் வந்தார். நலம் விசாரித்துவிட்டு உடன் வந்திருந்த நண்பரிடம் அவரை என் நண்பர் எனச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தேன். பெரிதும் மகிழ்ந்தார்.

பின் அவரிடம் நான் வேலையை விட்டுவிட்டதையும், இனிமேல் இந்தப் பக்கம் அடிக்கடி வரமாட்டேன் என்பதையும் சொல்ல அவரது முகமே மாறிவிட்டது. அதை புரிந்துகொண்டவனாய் உடனே,

”ஆனா உங்களப் பாக்க கண்டிப்பா அடிக்கடி வருவன். நீங்க என் friend..’’ என்றதும் கையைப் பிடித்துக்கொண்டு பல் தெரிய புன்னகைத்தார்.

அவரையும் உடன் சாப்பிட வருமாறு அழைத்தேன். தான் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்துவிட்டதாகச் சொன்னார்.

”பரவால்ல அத வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் நைட்டு சாப்பிடுங்க..’’ எனச் சொல்லி அவரது கை பிடித்து கூட்டிப் போனேன்.

அதன் பிறகு எப்போதெல்லாம் ஸ்பென்சர் பிளாசா போவேனோ, அப்போதெல்லாம் அவரையும் பார்த்துவருவேன். அந்த வெள்ளந்தியான முகம், அதில் எப்போதும் அரும்பிடும் மென்மையான புன்னகை, யாதொரு எதிர்பார்ப்புமற்ற அவரது அன்புள்ளம், இதற்காகவே அவரை அடிக்கடி பார்க்கத் தோன்றும்.

அப்படி கடந்தாண்டு இறுதியில் ஒரு தடவை தோழியோடு ஸ்பென்சர் பிளாசா சென்று இரண்டாவது மாடியில் உள்ள கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சட்டெனப் பின்னாடி வந்து தோளைத் தொட்டவர் திரும்பிப் பார்த்ததும் பெரிதும் புன்னகைத்தவாறு,

”எப்படி இருக்கீங்க? ஆளே வர்றதில்ல. பாத்து ரொம்ப நாளாச்சு” என்றார்.

”ஆமா… கொஞ்சம் வேல, அதான் வர முடியல..’’ என்றேன்.

உடனே அவர், ”ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க? வேலையெல்லாம் நல்லாப் போகுதா? காசு எதாவது வேணும்னா கேளுங்க. என்னால முடிஞ்சத தருவன்..’’ என்றார்.

அவர் அப்படிக் கேட்பார் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதோடு எனக்கது பெருமையாகவும் இருந்தது.

”அதெல்லாம் வேணாம் இருக்கு. சாப்புட்றீங்களா?” என்றேன்.

”இல்ல இப்பதான் சாப்டேன்..’’ என்று சொல்லிவிட்டு, தான் அடுத்த வாரம் ஊருக்குப் போவதாகவும், வந்து ஐந்தாண்டுகள் ஆவதாகவும், அம்மா, அப்பா, தம்பி, தங்கை எல்லாம் தனக்காக காத்திருப்பார்கள் என்றும் சொன்னார்.

”சூப்பர்… பாத்துப் போயிட்டு வாங்க..’’ என்று சொல்லியபடி, கை கழுவிவிட்டு பர்சிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் தந்து,

”அப்பா அம்மாவுக்கு எதாவது வாங்கிட்டுப் போங்க. நான் ரொம்பக் கேட்டதா சொல்லுங்க” என்றேன்.

வெகுநேரம் வாங்க மறுத்தவர், ”நான் உங்க Friend-னா வாங்கிட்டுப்போங்க, இல்லனா வேணாம்..’’ என்றதும் உடனே வாங்கிக்கொண்டு, என் கைகளைப் பற்றி மென்மையாக புன்னகைத்து விடைபெற்றார்.

பார்க்க மாநிறத்தில் எப்போதும் ஒரு புன்னகையுடன் இருக்கும் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நாற்பது வயதிருக்கும். அது குறித்து ஒரு தடவை ஸ்பென்சர் பிளாசாவின் முன்புறமுள்ள பூச்செடிகள் அழகுக்காக வளர்க்கப்பட்டிருக்கும் இடத்தருகில் படியில் உட்கார்ந்து பேசியபோது கேட்டிருக்கிறேன். அவர் தன் குடும்பத்திற்காக திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், அது பற்றிய எண்ணம் கூட இதுவரை தனக்கு வந்ததில்லை என்றும் சொன்னார்.

கடைசியாக அவரை சென்ற மாதம் கன்னிமாரா நூலகம் சென்று படித்துவிட்டு மதிய உணவு சாப்பிட ஸ்பென்சர் சென்றபோது பார்த்தது. ஓடிச்சென்று தன் அறையிலிருந்து செய்தித்தாளுக்குள் மடித்து வைத்திருந்த எதையோ எடுத்துவந்து தந்தார்.

”என்ன இது?” என்றேன்.

”பிரிச்சிப் பாருங்க..’’ என்றார் தன் கைகளைக் காட்டி.

ஆர்வத்தோடு பிரித்துப்பார்த்ததும் புத்தகம் (சேத்தன் பகத்தின் ‘Revolution 2020’) இருப்பது கண்டு மகிழ்ந்தேன்.

”இத எங்க ஊர்ல இருந்து உங்களுக்காக வாங்கிட்டு வந்தன். நீங்கதான் நெறயா புத்தகம் படிப்பீங்களே, உங்களுக்குப் புடிக்குமே. புடிச்சிருக்கா?’’ என்றார் மெல்ல பல்தெரிய புன்னகைத்து.

”ம்… ரொம்ப ரொம்ப…’’ என்று பதிலுக்குப் புன்னகைத்தவாறு கைகளை குழந்தை போல் அகல விரித்துக்காட்டினேன். அவ்வளவு மகிழ்ந்தார். பின் அவரது கையைப் பிடித்து ‘நன்றி’ சொன்னேன்.

பிறகவர் தன் அப்பா அம்மா தம்பி தங்கை அனைவரிடமும் என்னைப் பற்றி சொன்னதாகவும், அவர்கள் என்னை மிகவும் கேட்டதாகவும் சொல்ல பெருமகிழ்ச்சியாக இருந்தது.

என் வாழ்க்கையானது இவரைப் போன்ற எத்தனை எத்தனையோ எளிய மனிதர்களின் அன்பாலும் அக்கறையாலும்தான் ஆனது என்பதை பல தடவை உணர்ந்திருக்கிறேன். அதற்காக பெருமையும் பட்டிருக்கிறேன்.

இதை எழுதும் இந்த நிமிடம் நினைத்துப்பார்க்கிறேன். கிட்டத்தட்ட ஆறாண்டுகளுக்கு முன்பு பேருந்தில் எதிர்பாராமல் அவரை சந்தித்தது. இத்தனைக்கும் எனக்குத் தெரிந்த தமிழ்மொழி அவருக்குத் தெரியாது. அவரின் தாய்மொழி எனக்குத் தெரியாது. இருந்தாலும் யாவருக்கும் பொதுவான மவுனமொழியில் இருவரும் உரையாடிக்கொண்டோம். ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி அன்பை பொழிந்துகொண்டோம்.

இதுதானே வாழ்க்கை? இதற்காகத்தானே இப்பூமியில் பிறப்பெடுத்து வந்தோம்?

கூடிய சீக்கிரத்தில் எப்படியும் அவரை ஸ்பென்சர் பிளாசாவில் போய் சந்திப்பேன். நிச்சயம் அவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்நேரம் தன் உண்டியலை உடைத்திருப்பார். அதை கண்டிப்பாக என்னிடம் தந்து உதவி தேவைப்படும் யாருக்காவது தரச் சொல்லிக் கொடுப்பார்.

ஆம்! அவரது மனம் நானறிவேன். அவர் பேசும் மவுனமொழியும் நான் அறிவேன்.

வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை நாம் இவர் போன்ற எளிய மனிதர்களிடம் இருந்து மட்டும்தான் கற்றுக்கொள்ள முடியும். இவர்கள் பெரும் பணமும் பதவியும் மாளிகையும் தோட்டமும் துரவுகளும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதமும் அன்பும் நிரம்பப் பெற்றவர்கள். இவர்கள் வெறும் எளிய மனிதர்கள் மாத்திரமல்ல; கடவுளின் செல்லப் பிள்ளைகளும் கூட.

ஆம்!  அப்படித்தான் பார்க்கிறேன். அப்படி மட்டுமே பார்ப்பேன்!

(ஏப்ரல் 07, 2020)

*

முகங்களின் முதலில்

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 4 : திட்டம்மா

முகங்கள் – 5 : ஏகாந்தர்

முகங்கள் – 6 : நகலி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=