முகங்கள் – 1 : பாட்டையா

முகங்களின் முதலில்…

**

‘குவலயம் கண்கூச

வீசியெறி வானப் பரப்பெங்கும்

விண்மீனாய்ச் சுடரும் தமிழ்ச் சொற்கள்!

அவை

ஊரான் முதலல்ல தம்பி,

உன்மொழியின் வெள்ளாமை!

ஏழைக்கு இரங்குபவள்

கலைமகள் மாத்திரமே!

சோத்துக்குச் செத்தாலும்

சொல்லுக்குச் சாகாதே,

தொன்மைத் தமிழ்க் குடியே!’

  – நாஞ்சில் நாடன்.

**

பொருட்களை அதன் தேவை மற்றும் பயன்பாடு கொண்டு மதிப்பிடுவது போன்று, சக மனிதர்களை எப்போது மனிதன் மதிப்பிடத் தொடங்கினானோ, அப்போதே மனிதம் வீழ்ந்து உறவுகள் சிதைய ஆரம்பித்துவிட்டன.

அதிலும் பொருட்களில் புதியவற்றுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் உள்ளது போல், மனிதர்களிலும் பார்க்க ஆரம்பித்ததன் விளைவு, பெற்ற தாய், தந்தையர்களை வயதானவர்கள், பழையவர்கள், எதற்கும் பயனற்றவர்கள் என நினைத்தொதுக்கி, பழைய பொருட்களை வீசியெறிவது போல் நடுத்தெருவிலும், முதியோர் இல்லங்களிலும் தள்ளும் அவலம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

முதுமை என்பது சாபமல்ல, வரம் என்பார்கள். காரணம், அவர்களது நெடுங்கால வாழ்வின் அனுபவங்கள் இளம் தலைமுறையை வழிநடத்தக்கூடிய பொக்கிஷங்கள். அதோடு, முதுமை என்பது ஓடியாடி உழைக்க அல்ல, இவ்வளவு காலங்கள் உழைத்ததற்கு ஓய்வெடுக்க வேண்டியப் பருவம். அதனால்தான், 60 வயதில் (சில இடங்களில் 58 வயதில்) பணி ஓய்வுதந்து அனுப்புகிறார்கள்.

ஆனால் இளையவர்கள் இதனை சரிவரப் புரிந்துகொள்ளாமல் முதியவர்களை பெரும் சுமையாகக் கருதி, அவர்கள் சிறு வயதுமுதல் செய்தவற்றையெல்லாம் மறந்துவிட்டு, பயனற்றப் பொருளாய் சட்டென வீசியெறிகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால், ஒரு பொருளை வீசி எறிவதைக் காட்டிலும் மோசமாக முதியவர்களை உதாசீனப்படுத்தி, காயப்படுத்தி, அவமானப்படுத்தி, ஏளனப்படுத்தி, புறக்கணித்து, வெறுத்தொதுக்குவது தான்.

பொருட்களுக்கு மனதில்லை, உயிரில்லை அதனால் தேவை தீர்ந்தவுடன், இனி பயனில்லை என தெரிந்தவுடன், வீசியெறியலாம் சரி. ஆனால், முதியவர்களுக்கு?

அதனால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்? எதுகுறித்தும் இன்றைய அவசர மனிதர்கள் சிந்திப்பதில்லை. அதனால்தான் இன்றைக்கு எத்தனை எத்தனையோ முதியோர் இல்லங்கள் திறக்கப்படுகின்றன. எவ்வளவோ முதியோர்கள் நடுத்தெருவில் விடப்பட்டு அடுத்தவரிடம் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இத்தனைக்கும் இக்கொடுமையை செய்பவர்கள் நாளைக்குத் தாங்களும் அம்முதுமையை அடையப் போகிறவர்கள் என நன்கு தெரிந்தவர்கள் தான் என்றபோதும் மனிதமற்று, மனசாட்சிக்குக் கட்டுப்படாமல் கேடுகெட்ட இச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. ஆம்!

ஜூலை வெயில் லேசாக சிந்திக்கொண்டிருக்கும் காலை வேளையில், சென்னையின் நெருக்கடிகளில் சிக்காமல் ஒதுங்கியபடி தேநீர்க்கடையொன்றின் வாசலருகில் போய் நின்றேன். 

‘ஒரு டீ குடிச்சா என்ன?’ என்றது மனம்.

தேநீர் ஒன்றை வாங்கிக்கொண்டு அருகிலிருந்த பூட்டிய கடையொன்றின் முன் நிழலில் நனைந்தவாறு சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி பருகிக்கொண்டிருந்தேன்.

பக்கத்தில் ஒருவர் படிக்கட்டில் அமர்ந்துகொண்டு செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வழியாகச் சென்ற பெரியவர் ஒருவர், எப்படியும் எழுபது வயதிருக்கும்; அவரருகில் வந்து, அங்கிருந்த செய்தித்தாளில் ஒன்றை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி உட்கார்ந்தார்.

சட்டென என்ன நினைத்தாரோ பக்கத்தில் இருந்தவரிடம், அவரது தொடைகளுக்குக் கீழே காற்றில் பறக்காமல் வைத்திருந்த செய்தித்தாள்களில் ஒன்றினை தரும்படிக் கேட்க,

‘யோவ்.. அதப்படிச்சியா மொத? சும்மா அதக்கொடு இதக்கொடுன்ட்டு..’ என்றார் எரிச்சலோடு.

உடனே பெரியவர், ‘மரியாத இல்லாம யோவ்ன்ற, பேப்பரதானக் கேட்டன்’ என்றார் மென்மையாக.

‘அப்டிதான் சொல்வன். என்னக் கீச்சிருவியா?’ என்றதும் பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது.

‘ஒன் அப்பனா இருந்தா இப்டி சொல்வியா..?’

‘தோ பார்ரா சட்டமேத. என் அப்பன் ஏன் ஒண்ணமாரி ரோட்டப் பொறுக்கிட்ருக்கப்போறான்’ என சூடான வார்த்தைகளைச் சொல்ல, பெரியவரின் கோபம் தலைக்கேறியது.

‘ஏன்டா நாய, நீயெல்லாம் மனுசனாடா? பெரிவங்ககிட்ட எப்டிப் பேசணும்னு கூடத் தெர்ல… த்தூ’ என எழுந்தார்.

‘ஏய் பொறம்போக்கு நாயே… யார்டா நாயி? ஒலுங்கா ஓடிடு, இல்லன்னா அடிச்சியேக் கொன்னுடுவன்.’

‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.’

‘மவன ஓடிட்றா, இல்லனாக் கொன்னுடுவன்.’

‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.’

‘டேய் கெழவா, ஒலுங்கு மரியாதயா ஓடிடு. இன்னும் ஒரு நிமிசம் இருந்தன்னா சாவடிச்சிடுவன்.’

‘ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.’

அவர் எது சொன்னாலும் பெரியவர் பதிலுக்கு ஒரு திருக்குறளை சொல்ல அவரது கோபம் இன்னும் அதிகமானது. எங்கே அடிதடியில் போய் முடிந்துவிடுமோ என மனம் கேட்காமல் ஓடிச் சென்று,

”ஐயா ஐயா இப்டி வாங்கய்யா..’’ என பெரியவரின் கையைப் பிடித்து தேநீர் கடையருகில் கூட்டிவந்தேன். 

இத்தனைக்கும் பெரியவரை மரியாதை இல்லாமல் பேசி நடத்தியவருக்கு வயது நாற்பதுக்குள் தான் இருக்கும். அத்துடன் அவர் படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளும் அவருடையது இல்லை. தேநீர்க்கடையுடையது.

ஒடிசலான தேகம். முன் வழுக்கைத் தலை. முகம் முழுக்க சோகம் பூசிய வெறுமை. அதிகமும் இல்லாத குறைவும் இல்லாத அழுக்கு வெண்ணிற வேட்டி, சட்டை. பாக்கெட்டில் அழுக்கும், கசங்கலும் கொண்ட சிறு டைரி ஒன்று. முதுமையும் வியர்வையும் கலந்ததொரு வாசம். ஆம்! இப்படித்தான் இருந்தார் அப்பெரியவர்.

”78 வயசாவுது, என்னப்போய் யோவ்னு சொல்றான். இவன்லாம் வெளங்குவானா?’’

”விடுங்கய்யா, அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்..’’

”பெரிவங்களுக்கு மரியாதக் கொடுக்காதவன்லாம் கேடுகெட்டுபோய்தான் சாவான்..’’

”அத விடுங்கய்யா, அவங்க எப்டியோப் போனாப்போறாங்க..’’

”ஆக்க மழியினு மல்லவை கூறாத

தேர்ச்சியில் தேர்வினிய தில்.”

”என்னப் பாட்டுய்யா இது?”

”இதுவா..? பூதஞ்சேத்தனார் பாடுன இனியவை நாற்பது வரி’’

”இதெல்லாம் எப்டிய்யா தெரியும் உங்களுக்கு?’’

”அறிவ தறிந்தடங்கி யஞ்சுவ தஞ்சி

உறுவ துலகுவப்பச் செய்து – பெறுவதனால்

இன்புற்று வாழு மியல்புடைய ரெஞ்ஞான்றும்

துன்புற்று வாழ்த லரிது.

இது நாலடியார்ல வர்ற வரி. எல்லாம் படிச்சதுதான்..’’ என்று சொல்லிவிட்டு லேசாகப் புன்னகைத்தார்.

ஆச்சரியமாக இருந்தது. எந்தவித யோசிப்பும், தடங்களுமின்றி சரளமாக ஓடிவரும் வரிகள். இவரிடம் பேசவும், கேட்கவும் எவ்வளவோ இருக்குமெனத் தோன்றியது.

”என்ன ஊர்ய்யா நீங்க?” என்றேன்.

அதற்குள் பெரியவரிடம் சண்டையிட்டவன் பெரியவரையும், என்னையும் பார்த்து முறைத்துவிட்டு இரண்டு கடைகள் தள்ளி ஓரமாக நின்றிருந்த ஆட்டோவில் ஏறிச்சென்றார். அப்போதுதான் அவர் ஆட்டோ ஓட்டுநர் என்பதை அறிந்தேன்.

”விழுப்புரம் பக்கத்துல ஒரு கிராமம். அங்க ராஜாமாரி வாழ்ந்தவன்தான், இன்னிக்கி இங்க கண்ட நாய்க்கிட்டலாம் பேச்சி வாங்கிட்ருக்கன்..’’ என உடையும் குரலில் வருத்தத்தோடு தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

”தினைச் சிலம்புவ, தீம் சொல் இளங் கிளி;

நனைச் சிலம்புவ, நாகு இள வண்டு; பூம்

புனைச் சிலம்புவ, புள் இனம்; வள்ளியோர்

மனைச் சிலம்புவ, மங்கல வள்ளையே.

கம்பன் கோசல நாட்டப் புகழ்ந்துப் பாடுனப் பாட்டுல ஒண்ணுதான் இந்தப் பாட்டு. இதுமாரிதான் இருந்தது என்னோட ஊரும் ஒரு காலத்துல. காலில ஏன்ச்சி, பால் கரந்துட்டு, மாட்டப்புடிச்சிக்கினு கொல்லிக்கிப் போனன்னா, என் புள்ளமாரி நான் நட்டப் பயிருங்களும், மரங்களும் என்னப் பாத்து சிரிக்கும்.

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்

காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு

பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு.

இந்தக் கையப் பாரு… (பார்த்தேன்) கொடுத்துக் கொடுத்து தேஞ்சிப்போனக் கையி. இன்னிக்கி செய்திபேப்பரக் கேட்டன்னு எவன் எவனோ என்னயப் பொறம்போக்குன்றான்..’’

பெரியவரின் கண்கள் லேசாக கலங்கியது. அதை நான் பார்த்துவிடக்கூடாதென மறைக்க முற்பட்டார். 

”எங்கயா இந்தப் பாட்டலாம் படிச்சீங்க?”

பேச்சை வேறு பக்கம் திருப்ப நினைத்துக் கேட்டேன்.

”ஹாஹா… அதுவா..? எங்க ஊருப் பக்கத்துல ஒரு லைப்ரரி இருக்கு, அங்கதான். ஒரு புக்குவுடாமப் படிச்சிருக்கன் அங்க..’’

உடனே ஆச்சரியத்தின் உச்சிக்குப் போய் ‘எல்லா புக்கையுமா?’ என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. சற்று அமைதியானவர்,

”ஆமா… நீ எந்த ஊருன்னு சொல்லலயே..?” என்றார், என் முகத்தை நேருக்கு நேர் பார்த்து.

”திருவண்ணாமல பக்கத்துல திருவடத்தனூர்னு ஒரு கிராமம்யா..’’ என்றேன்.

”ஓ நம்மூர்க்காரப் பையனா நீ… மொகத்தப் பாத்தப்பயே நெனச்சன்..’’

சின்னதாக புன்னகைத்தேன். அவரும் பதிலுக்கு அதே அளவுக்கு புன்னகைத்தார்.

”திருவண்ணாமல எவ்ளோ அழகான ஊர்’ல..’’ என்று தலையாட்டியபடி சொன்னவர்,

”ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி

யார்கள்பத மேதுணைய தென்றுநாளும்’னு பாடுன அருணகிரிநாதரத் தந்த ஊரு திருவண்ணாமல. அவர மட்டுல்ல… எத்தன எத்தன மகான்கள, சித்தர்களத் தந்திருக்கு..’’ என்றார்.

எனக்கு மட்டும் கேட்கும் குரலில் ”ஆமாம்யா..’’ எனச் சொல்லி, அதையே தலையசைத்தும் காட்டினேன்.

”கோயிலுக்குலாம் போவியா?”

”எப்பவாது தோணுச்சுனாப் போவன்யா..’’

”ம்… இனி அடிக்கடிப் போ. இறைவன வணங்காதவன் எதுக்கும் வணங்கமாட்டான். சிவன், அல்லா, ஏசு, புத்தர்னு வாய்ல வந்ததலாம் சொல்வாங்க, அதயெல்லாம் கேக்காத. எல்லாம் ஒண்ணுதான். அது சிவன் தான்.

ராமலிங்க அடிகளாரு, ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி’ன்னு ஜோதியதான் கடவுள்னு சொல்றாரு. அந்த ஜோதி யார் தெரிமா? அதுவும் சிவன் தான். திருவள்ளுவர் ‘ஆதி பகவன் முதற்றே உலகு’னு சொல்றாரு. பட்டினத்தானோ ‘உருவ வழிபாட வேண்டாங்குறான். இப்டி எத்தனப் பேரு எத்தன விதமாச் சொன்னாலும், யாரும் கடவுள் இல்லன்னு சொல்லலப் பாத்தியா..’’

சிரித்தார். பெருங்குரலெடுத்து சிரித்தார். அவ்வழியாக செல்வோரில் பலர் எங்களைப் பார்த்தார்கள். அவருக்கு நான் மட்டுமே தெரிந்தேன். அதனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வேண்டிய மட்டும் சிரித்தார்.

”திருவாசகத்துல மாணிக்கவாசகரு, தான் பாத்து அச்சப்படும் பத்து விசயத்த பாட்டாப் பாடறாரு. அதல முக்கியமான ஒண்ணா எத சொல்றாரு தெரிமா?”

அவர் எதை சொல்லப்போகிறார் என்பது ஓரளவுக்குப் புரிந்தது. இருந்தும் அதை அவரே சொல்லட்டும், அதுவும் அவரது குரலில் கம்பீரத்தோடு பாடக் கேட்க வேண்டும் போல் இருந்தது. அதனால், ”தெரில’’ என்பதாய் தலையாட்டினேன்.

”கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே’ன்னு சொல்றாரு. இந்த வரில அவரு என்ன சொல்றாரு தெரிமா..? படிக்காதவனப் பாத்தா பயமா இருக்குன்னு சொல்றாரு..’’ என்றார்.

எதுவும் சொல்லாமல் அமைதியாக ‘ம்’ என தலையாட்டினேன்.

சிறிது இடைநிறுத்தியவர், ”இதல படிக்காதவன்னு அவர் சொல்றது ஸ்கூலு, காலேஜிப் படிக்காதவன இல்ல. இந்த வாழ்கைய, மனுசங்கள, இயற்கைய, பெரிவங்கள, உறவுகள… இது எல்லாத்துக்கும் மேல அந்த இறைவன. இதுதான் உண்மையானப் படிப்பு.

”இதயெல்லாம் படிச்சவங்க இன்னிக்கி எத்தனப் பேரு இருப்பாங்க சொல்லு? சரி அத வுடு. எங்க என்னப் பாத்து சொல்லு, நான் என்னப் படிச்சிருப்பன்னு?”

யோசிப்பதுபோல் நடித்தேன், எப்படியும் சற்று நேரத்தில் அவரே சொல்லிவிடுவார் என்ற நம்பிக்கையில்.

”நான்லாம் எந்த ஸ்கூலுக்கும் போனதில்ல, எந்த காலேஜி படியும் மெதிச்சதில்ல. ஆனா, வாழ்க்கைல படிக்கவேண்டிய எல்லாத்தயும் படிச்சிருக்கன். ஆனா, நீங்களாம் படிச்சி பட்டம் வாங்கிட்டு என்னமோ எல்லாத்தயும் படிச்சிக் கீச்சிட்டமாரி வானத்துக்கும் பூமிக்கும் தைதக்கன்னு குதிச்சிட்டிருக்கீங்க..’’

அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். தெளிந்தவர்கள் பேசும் போதும், பெரியவர்கள் பேசும்போதும் அமைதியாக கேட்டல் நற்பழக்கம் மட்டுமல்ல, நல்லொழுக்கம் கூடத்தான்.

”கேட்டா நாலு பட்டம் படிச்சிருக்கன்னு சொல்வான், பெத்த அப்பன் ஆத்தாவ மதிக்கமாட்டான். இவன்லாம் என்ன லவடாப் படிப்பப் படிச்சிருப்பான்? பெத்தவங்களயே மதிக்காதவன் எப்டி ஊரயும், மத்தவங்களயும் மதிப்பான்?’’ கண்கள் சிவக்க கோபமாகச் சொன்னார்.

”எல்லாரும் அப்டி இல்லய்யா..’’ என்றேன் மெல்லமாக.

”நான் எல்லாரயும் சொல்லல. ஆனா, இன்னிக்கி நூத்துல தொண்ணத்தெட்டு பேரு இப்டிதான இருக்கானுவ. எங்க எத்தனப் புள்ளிங்க இன்னிக்கி பெத்தவங்கள மதிக்கறாங்க சொல்லு? எத்தனப் புள்ளிங்க வளத்தவங்கள ஒக்கார வச்சி சோறு போடுறாங்க சொல்லு? போயிப்பாரு எத்தன முதியோர் இல்லம், எத்தன வயசானவங்க ரோட்லப் பிச்ச எடுத்துட்ருக்காங்கன்னு..’’

அவரது கோபமும், கேள்வியும் நியாயமாகப் பட்டது. அதனால் அவர் சொல்வதையெல்லாம் எதுவும் பேசாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

”வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தை

போதுற்ற எப்போதும் புகலும் நெஞ்சே? இந்தப் பூதலத்தில்

தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியம் என்?

காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே.

எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. பசங்க ரெண்டுபேரயும் புள்ளயா நெனச்சி வளத்த ஆட்ட, மாட்டயெல்லாம் வித்து வேர்வ சிந்திப் படிக்க வச்சி ஆளாக்கி கல்யாணம் பண்ணிவச்சன். இன்னிக்கி என்னடான்னா, நீ பாத்துக்கோ… நீ பாத்துக்கோன்னு… ஒருத்தணும் பாத்துக்காம நடுதெருவுல வுட்டுட்டாணுங்க..’’ என்றதும் அவரது கண்கள் கலங்கிவிட்டன.

”பெத்தப் புள்ளிங்களே சோறு போட யோசிக்கறப்ப வீட்டுக்கு வந்தப் பொண்ணுங்க பச்சத் தண்ணிக் கூட கொடுக்காம மானத்த வாங்கனது எனக்கொண்ணும் பெருசாத் தெரில. அதப் பாத்தப் பொண்ணு ‘நான் பாத்துப்பன் என் அப்பன’ன்னுக் கூட்டுனுப் போனா… அவளக் கட்னவன் சும்மா இருப்பானா? எதுக்கு இந்தக் கறிய வச்சிட்டு ஒருத்தருக்கு சொமயா இருக்கணுன்னு தான் யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஓடியாந்துட்டன்.’’ படபடவென சொல்லிவிட்டு அமைதியானார்.

கீழே குனிந்தபடி, ”சாவவும் மனசில்ல..’’

மீண்டும் அமைதியானார்.

சில நொடிகள் கழித்து நிமிர்ந்து என்னைப் பார்த்து, ”ஏன் சாவலத் தெரிமா? பெத்த அப்பனுக்கு சோறு போடாதவங்களே வெக்கம் மானம் இல்லாம கறிய வச்சினு இருக்கப்ப நான் ஏன்டா சாவணும்னுதான்..’’

கோபம் கலந்த ஏளனத்தோடு லேசாக உதடசைத்து சிரித்துவிட்டு,  

”வயசானா என்ன, என்னால முடிஞ்சத செஞ்சா நாலுக் காசு தரமாட்டாங்களா? இல்ல கஞ்சிதான் ஊத்தமாட்டாங்களா?’’ கேள்வியோடு நின்றார்.

குரல் தேய்ந்து, உடல் தளர்ந்து காலையில் சாப்பிடாதவர் போலத் தெரிந்தது. எப்படிக் கேட்பதெனத் தயக்கத்துடன் கேட்டேன்.

”ஏதாவது சாப்புட்றீங்களாய்யா..?”

வேண்டாம் என்பதுபோல் தலையாட்டினார்.

”ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு”

”ஒரு டீயாது குடிங்கய்யா..’’

”நான் டீ குடிக்கமாட்டன்..’’

”அப்போ காபி, இல்லனா பால்’’

”எதும் வேணாம்ப்பா. நீ கேட்டதேப் போதும்.’’

”இல்லய்யா, எனக்காக நீங்க ஏதாவது குடிக்கணும்’’ என வற்புறுத்த, பால் குடிக்க சம்மதித்தார்.

”உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே”

அருகிலிருந்த கடையின் முன்புற நிழலில் அவரை நிற்கவைத்துவிட்டு, பக்கத்திலிருந்த தேநீர்க்கடைக்குப் போய் பால் வாங்கி வந்து தந்துவிட்டு, என் பற்றிய சிறு அறிமுகத்தை சொன்னேன். அமைதியாகக் கேட்டவர்,

”நீ எவ்ளோப் பெரிய ஆளா ஆனாலும், ஒன் அப்பா அம்மாவ வுட்றாத. ஒன் பீய வாரிப்போட்டவங்க. ஒன் மூத்தரத்தத் தொடச்சவங்க. இந்த ஒலகத்துல தாய், தந்தைதான் மொத தெய்வம். அவங்கள மதிக்காதவன் யாரும் மனுசன் இல்ல, பொணம்..’’ என மனதிலிருந்து அவர் சொல்ல,

மெல்ல தலையாட்டியபடி கேட்டுக்கொண்டேன். 

”மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.’’

அவர் பெரும் பசியோடு இருந்திருப்பார் என்பதை, அவர் பால் குடிப்பதைப் பார்த்ததும் தெரிந்துகொண்டேன். சாப்பிடச் சொன்னால் வேண்டாம் என்கிறார். பணம் ஏதாவது கையில் கொடுத்தால் திட்டிவிடுவாரோ அல்லது தவறாக எடுத்துக்கொள்வாரோ என ஒருபக்கம் பயம். என்ன செய்வது?

சரியாக அவர் பால் குடித்து முடிக்க, அவருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிக்கொண்டிருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. உடனே அவரிடம் இசையமைப்பாளர் ஒருவரைச் சந்திக்கப்போக நேரமாகிவிட்டதைச் சொல்லி,

”ஒங்களப் பாத்துப் பேசுனதுல ரொம்ப சந்தோசம்யா. இதான் என்னோட எண். ஒங்களுக்கு எப்ப, என்ன உதவினாலும் கூப்டுங்க..’’ என்று சொல்லி என் நகர்பேசி எண்ணை ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தேன்.

வாங்கிக்கொண்டு, ”நீ நல்லபையன். ஒன் மொகம், பேச்சு, நடவடிக்க எல்லாம் சொல்லுது. அப்பா, அம்மாவ நல்லாப் பாத்துக்கோ. ஒன் கூட்டாளிங்ககிட்டயும் இதப் போய் சொல்லு..’’ என்று கெஞ்சல் கலந்த உரிமையோடு சொல்லிவிட்டு, சட்டென என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

”சரிங்கய்யா, கண்டிப்பா சீக்கிரமே வந்து ஒங்களப் பாக்குறன்..’’ என்றேன்.

”கோயம்பேடு பழ மார்க்கெட்லதான் எங்கனா இருப்பன். எப்ப என்னப் பாக்கணும்னாலும் அங்க வந்தாப் பாக்கலாம் சரியா..’’ எனச் சொல்லி விடை தந்தார்.

இன்னும் அவரிடம் எவ்வளவோ பேசவேண்டும்போல் இருந்தது. மனதில்லாமல் விடைபெற்று வந்தேன். அதன்பின் அடிக்கடி அவர் நினைவு வந்தாடும். அவரது குரலும் முகமும் அப்படியே கண்முன் தெரியும். சரி அவர் சொன்ன பழ மார்க்கெட்டுக்குப் போய் பார்க்கலாம், அவரோடு இன்னும் இன்னும் பேசலாம் என நினைத்து நான்கைந்து தடவை சென்றிருக்கிறேன். ஒரு தடவையும் அவரை பார்க்க முடியவில்லை.

எங்கே போயிருப்பார்? என்னாகியிருப்பார்? சாப்பிட்டாரா? தூங்கினாரா? எண்ணற்றக் கேள்விகள் மனதில் எழுந்தபோதும், ‘எங்கே இருந்தாலும் அவர் நல்லபடியா இருப்பார்’ என்ற ஒற்றை பதிலையே மனமானது எப்போதும் கேட்டது. ஆம்!

இதைத்தாண்டி வேறென்ன பெரிதாக கேட்டுவிடப்போகிறது?!

(ஏப்ரல் 01, 2020)

*

முகங்களின் முதலில்…

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=