நூல் வெளியாகும் முன்பே முப்பதாயிரம் ஈட்டிய நூல்…

ஆடூஉ மகடூஉ குழந்தைகளுக்கான 8000+ புதுப்பெயர்களும்; சார்ந்த கட்டுரைகளும்‘ என்ற பெயரில் குழந்தைகளுக்கு இதுவரை இல்லாத எட்டாயிரத்துக்கும் அதிகமான புதுப்பெயர்களையும், பெயர்கள் சார்ந்த சில கட்டுரைகளையும் நூலாக எழுதியிருப்பது பலரும் அறிந்ததே.

இது முழுக்க முழுக்க தமிழுக்கு புதுமையான படைப்பு. ஆகையால் இதில் இருக்கும் சில பெயர்களை சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தேன் (பெயர்களை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை அறியும் நோக்கோடு). அதைக் கண்ட சிலர் தேடிவந்து அதிலுள்ள பெயர்களை தம் குழந்தைகளுக்கு சூட்டிக் கொள்ள அனுமதி கோரினார்கள். உவகையோடு இசைந்தேன். இன்னும் சிலரோ அதேபோன்று தாம் விரும்பும் எழுத்தில் பெயர்கள் உருவாக்கித் தருமாறு கேட்டார்கள். தந்தேன். அதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணமும் செலுத்தினார்கள்.

இதில் உச்சமாய் யாரென்று தெரியாத நபர் (அவரது தாய்மொழி மலையாளம். அவர் மனைவிக்கோ கன்னடம். ஆனால் இருவருக்கும் தமிழ் மீது அளவற்ற காதல்.) ஒருவர் சில தினங்களுக்குமுன் வந்து தம் மகனுக்கு புதுப்பெயர் சூட்டிட விரும்பி ஆலோசனை கேட்டார். மகிழ்வோடு கூறினேன். அதற்கு பரிசாக (ஆம், கட்டணமாக அல்ல; பரிசாக) கேட்காமலேயே மூவாயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார்.  

இப்படியாக இந்நூல் வெளிவருவதற்கு முன்பே இதுவரை முப்பதாயிரம் ரூபாய் ஈட்டியிருக்கிறது. அவ்வகையில் இந்த ‘ஆடூஉ மகடூஉ’ நூல் மட்டுமல்ல. இவற்றால் நிகழ்ந்தவையும் தமிழுக்குப் புதுமை என்றே சொல்லத் தோன்றுகிறது.

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=