மலையாற்றுப்படை – 2 : சதாசிவ கோணே

”மலை ஒரே நேரத்தில் மலரைவிட மென்மையாகவும், இடியைவிட வலிமையாகவும் தெரிவதாக உணர்வதுண்டு. வேறு சொற்களில் சொல்வதென்றால், மலை ஒரே நேரத்தில் சிறுகுழந்தையாகவும், பெருவயோதிகராகவும் தெரிவதுண்டு.’’

                   (பிப்ரவரி 15, 2026)

                         ***

அசலம், அடுக்கம், அத்திரி, அரி, இரவி, இறும்பு, இறும்பூது, ஏந்தல், ஓங்கல், ஓதி, ஓதிமம், கடறு, கந்தரம், கல், கல்லகம், கிரி, குதரம், குத்திரம், குவடு, குறிஞ்சி, குறும்பு, குறும்பொறை, குன்றம், குன்று, கோ, கோடு, கோத்திரம், கோத்திரை, சக்கரம், சயிலம், சாரல், சிகரம், சிகரி, சிமயம், சிமிலம், சிலம்பு, சிலை, சிலோச்சயம், சையம், தடம், தரணி, தரம், தராதரம், தாணு, தாபரம், திகிரி, துங்கசேகரம், துங்கம், துடரி, நகம், நவிரம், நாகம், பதலை, பருப்பதம், பருவதம், பறம்பு, பாதவம், பிறங்கல், பூதரம், பொகுட்டு, பொங்கர், பொச்சை, பொருப்பு, பொறை, பொற்றை, போதி, மலை, மாதிரம், முகடு, முடி, மேதரம், மேரு, வரை, விண்டு, விந்தம், விலங்கல், வீரம், வெற்பு, வேதண்டம்… என மலையைக் குறிக்க மலையளவு சொற்கள் உண்டு நம்மிடம்.

இவற்றில் மலையை மட்டும் எடுத்துக்கொண்டால்… திருஅண்ணாமலை தொடங்கி மேல்மலையனூர் வரை முன்னொட்டாகவும், இடையொட்டாகவும், பின்னொட்டாகவும் கொண்ட ஊர்கள் எண்ணிலாதவை. அதேபோல, மலைக்கட்டுக்குளம் ஆரம்பித்து மலைவேம்பு முடிய உடைய சொற்களின் பட்டியல் மிக நீண்டது. [அண்ணாமலை, ஏழுமலை என மாந்தர்களின் பெயர்களில் உள்ளது தனிக்கணக்கு.]

தமிழின் மிக மூத்த இலக்கியப் பனுவலான சங்க இலக்கியத்தில் மட்டும் 468 இடங்களில் மலை என்ற சொல் ஆளப்பட்டிருக்கிறது. அதிலும் மிகுதியாக, அகநானூறில் 80 இடங்களிலும், நற்றிணையில் 68 இடங்களிலும். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 44 இடங்களில் ஆண்டிருக்கிறார். கம்பர் கம்பராமாயணத்தில் 230 இடங்களில்.

மலைக்கு, தமிழ் லெக்சிகன் அகராதி ஐந்து பொருட்களைத் தருகின்றன. 1. Hill, mountain; பருவதம். 2. Collection, aggregation; ஈட்டம். 3. Abundance, bigness, as a mountain; மிகுதி. 4. Occupation of war; போர்த்தொழில். 5. he squares in the board of an indoor game, where the pieces cannot be cut; கட்ட ஆட்டத்தில் காய்வெட்டுதற்கு இயலாத கட்டங்கள்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியோ, மேற்கண்ட ஐந்தில் முதல் நான்கை அப்படியே தந்தாலும், முதலாவதில் பருவதம் என்பதற்குப் பதிலாக வளமுள்ள பெரிய இடம் என்கிறது.

இவற்றையெல்லாம் மனத்துக்குள் அசைபோட்டபடி அதிகாலை மிகச் சீக்கிரமாக எழுந்துக் கிளம்பி, சென்னை – சென்ட்ரலிலிருந்து 114 கிலோமீட்டர் பயணித்து, ஆந்திர மாநிலம் – புத்தூர் சென்று இறங்கினேன். அங்கிருந்து சதாசிவ கோணே மலையடிவாரம் செல்ல நான்கு கிலோமீட்டர். பேருந்து அல்லது பகிர் வண்டியில்தான் போகவேண்டும். பின்னதில் ஏறி இருபது நிமிட பயணத்துக்குப் பிறகு மலையடிவாரத்தை அடைந்தேன்.

சதாசிவ கோணே என்கிற சதாசிவ மலை, ஆந்திர மாநிலம் –  சித்தூர் மாவட்டத்தில், திருப்பதிக்கு அருகில் அமைந்துள்ள பழைமையான சிவக்கோவில் இருக்கும் இடம். சுமார் 1781 அடி உயரமும், ஏழு கிலோமீட்டர் நடை தொலைவும் கொண்டது. அடர்ந்த காடுகள், ஆண்டு முழுக்க நீர் வற்றாத அருவிகள் மற்றும் அரிய மூலிகைகள் நிறைந்த மலைப்பகுதி. இயற்கையை ரசிப்பவர்களுக்கும், ஆன்மீக பயணிகளுக்கும் ஏற்ற தலம்.

கோணே என்றால் தெலுங்கில் மலை என்று பொருள். சிவபெருமான் சதாசிவமூர்த்தியாக இருப்பதால், இம்மலை சதாசிவ கோணே என்று ஆதிமுதல் அழைக்கப்பட்டு வருகிறது. மேலும், சாதாசிவ கோனை; கோனா என்றும், கோணலாக இருப்பதால் தமிழில் கோணமலை என்றும் சொல்வதுண்டு.

வருடத்தில் ஒருதடவை அதுவும், மகா சிவராத்திரியை ஒட்டி, அன்றும், முன்தினமும், அடுத்த நாளுமாக மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு பகலாக எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் வரலாம்; போகலாம். விரும்பினால் மலைமீது தங்கலாம் என்பதால் வழிநெடுக விழாக்கோலம் கொண்டிருந்தன.

வண்டியில் வரும்போதே ஈரிடங்களில் கைகாட்டி மறித்து சாப்பிடச் சொன்னார்கள். மலையடிவாரத்தில் நான்கு இடங்களில் அன்னதானம் போட்டார்கள். இறங்கியதும் முதல் வேலையாக ஓரிடத்தில் சென்று பொங்கலும் வடையும் வாங்கி உண்டேன்.

எங்கு பார்த்தாலும் மக்கள் திரள். அதிலும் சரிபாதி தமிழர்கள். அடிவாரத்தில் இருந்த பழைய சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு, அதன் அருகில் இருந்த சிறு குளத்தைப் பார்த்துவிட்டுப் போய் மலையேற ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் முன்னதாகவே நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார். ”மலையில் அதிகமா செம்மரம் இருக்கும். தெரியாம சின்னக் குச்சியை உடைத்திட்டாக்கூட அங்கிருக்கிற வனக் காவலர்கள் கடுமையா தண்டிப்பாங்க. கவனமா போயிட்டு வா.’’

மலையின் காலடியில் முதல் அடி வைத்ததுமே இச்சொற்கள் நினைவுக்கு வந்தன. சுற்றிலும் பார்த்தேன். ஒரு செம்மரம்கூட இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, நன்கு தெரிந்த மூங்கில், வேம்பு, காரை, சரக்கொன்றை, கலா, வெப்பாலை, பூலா… முதலான தாவரங்களே இருந்தன. [கூடவே, வனக் காவலர்கள் ஓரிருவர் கூட்டத்தோடு கலந்து சீருடையிலும், இல்லாமல் இருப்பதும் தெரிந்தது.] ஒருவேளை மலைமீது இருக்கும்போல என எண்ணிக்கொண்டு, வழியோரம் இருந்த இளநீர் கடைகளையும், இரண்டு இடங்களில் குவித்து வைத்து நெல்லிக்காய் விற்பதையும் கண்டும் காணாமல் ஏறினேன்.

ஏறுபவர்களில் சிலர் அங்கிருந்த உள்ளூர்வாசிகளிடம் பத்து ரூபாய் கொடுத்து சிறு மூங்கில் கழியை வெட்டித் தரச்சொல்லி வாங்கி ஊன்றுகோலாக வைத்துக்கொண்டு ஏறினார்கள். நானோ, வெள்ளியங்கிரி அளவுக்குப் பெரிதான; கடுமையான மலை இல்லை என்பதால், வெறும் கைகளை வீசிக்கொண்டு நடந்தேன்.

மிகப் பிரம்மாண்டமான மலைக்காடு. பல்வகை தாவரங்களும், உயிரினங்களும் செறிந்தது. பல மரங்கள் நூற்றாண்டு கடந்ததைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.

இயற்கையில் நனைந்தபடி, தேனீக்களின் ரீங்காரத்தையும்,  பறவைகளின் கூக்குரலையும், பட்டாம்பூச்சிகளின் சிறகசைப்பையும், இன்னபிற உயிரோசைகளையும் மனிதர்களின் பேச்சொலிக்கு நடுவில் கேட்டுக்கொண்டு, மிகுந்த உற்சாகத்துடன் கூட்டத்தில் தனியனாக சென்றுகொண்டிருந்தேன்.

படிக்கட்டுகள் எதுவும் இல்லாமல் கரடுமுரடாக அதே நேரம் மிகத் தெளிவாக இருந்தது பாதை. சிறிது தூரம் போனதும் இரண்டாகப் பிரிந்ததில் எதில் செல்வது எனத் தெரியாமல் நின்றுபோது, பின்னால் வந்த ஐம்பது வயதுக்காரர் ஒருவர் கேட்காமலேயே, ”இப்படியே வலது பக்கமா போனா சீக்கிரம் போயிடலாம், தம்பி. ஆனா, வழி கொஞ்சம் கடினமா இருக்கும்” என்று நற்றமிழில் சொன்னார். புன்னகைத்துத் தலையாட்டிவிட்டு, அவர் குறிப்பிட்ட வழியில் அவரோடு நடக்கத் தொடங்கினேன்.

”நீங்க தமிழ்நாடுதான, தம்பி? முகத்தைப் பார்த்தாலே தெரியுது. தனியாவா வந்திருக்கீங்க? நாங்க ஊத்துக்கோட்டையிலிருந்து வர்றோம். இதோட பதினாலாவது வருசமா வர்றேன்.’’ மறுபடியும் கேட்காமலேயே சொன்னவர், உடன் வந்த தன் மனைவியையும், இரு மகன்களையும் அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து அம்மலை குறித்தும், ஒவ்வோர் ஆண்டு வந்து போகும்போதும் அவர் கண்டு வியந்த விஷயங்கள் குறித்தும் நீண்டநாள் பேசிப் பழகியவரிடம் பகிர்வதுபோல சொல்லி வந்தவர், சட்டென்று ஓரிடத்தில் நின்று அங்கே வழியோரம் சாய்ந்து கிடந்த பெரிய கருங்காலி மரத்தைக் காட்டி, ”இந்த மரத்தை ஒவ்வொரு தடவை வரும்போதும் பார்க்குறேன். இப்படியேதான் இருக்கு’’ என்றுவிட்டு, என் குறித்து கேட்டார். மிகச் சுருக்கமாக இரண்டு வரிகளில் சொன்னேன்.

எழுத்தாளர் என்றது கேட்டு மகிழ்ச்சியானவர், உடன் வந்த மகன் சார்பில் கேட்டார். ”இவனுக்கு மலைன்னா என்ன, குன்றுன்னா என்னன்னு தெரியனுமாம். வீட்டுல இருந்து கேட்டுட்டு வர்றான். தெரியாதுன்னு சொல்லிட்டோம். கேட்க மாட்றான். நீங்க கொஞ்சம் சொல்றீங்களா, தம்பி?’’

முறுவலித்தவாறு அச்சிறுவனைப் பார்த்துவிட்டு, சில ஆண்டுகளுக்குமுன் வாசித்தவற்றை நினைவிலிருந்து மீட்டிச் சொன்னேன். ”குன்றுன்னா சுத்தி இருக்கிற இடங்களைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுற ஒரு நில அமைப்புன்னு பொதுவா சொல்வாங்க, தம்பி. அதாவது, மலையைவிட உயரம் குறைந்தும், சரிவு குறைந்தும் இருக்கிறது. மலை இதுக்கு அப்படியே நேர்மாறா, இப்போ நாம ஏறிட்டு இருக்கோமே இதுமாதிரி இருக்கும். புவியியலாளர்கள், கடல் மட்டத்துல இருந்து 300 மீட்டருக்கு அதாவது, 1,000 அடிக்கு மேல உயரம் கொண்ட குன்றுகளையே மலைன்னு கருதினாங்க. ஆனா, குன்றில் நடக்கறவங்க, அதை ஏத்துக்கல. கடல் மட்டத்திலிருந்து 610 மீட்டருக்கு அதாவது, 2,000 அடிக்கு மேற்பட்டதையே மலைன்னு எடுத்துக்கிறாங்க. ஆக்ஸ்போர்டு அகராதி, 610 மீட்டர் உயரத்துக்கு மேல உள்ளதையே மலைன்னு குறிப்பிடுது.’’

அடுத்த அரை மணி நேரம் அவர்களோடு பேசிக்கொண்டு, இடையிடையே தாவரங்களையும், உடன் ஏறுபவர்களையும், எதிரில் இறங்கி வருபவர்களையும், வழியில் ஆங்காங்கே புதிதாக முளைத்திருந்த கடைகளையும் பார்த்துக்கொண்டு நடந்தேன்.

வழியெங்கும் ஓங்கி வளர்ந்த மரங்கள் மிகுந்திருந்ததால் சுட்டெரிக்கும் வெய்யில் கொஞ்சம்கூட தெரியவில்லை. அதேபோல, பாதை செங்குத்தாக இல்லாமல் மிதமாக உயர்ந்து போனதால் ஏறுவதற்குக் கடினமாகவும் இருக்கவில்லை.

சட்டென்று ஓரிடத்தில் மலை சமதளமானது. அங்கே ஒரு சிறிய கோயிலும், அதையொட்டி கூட்டமும் இருப்பதைப் பார்த்துவிட்டு அருகில் சென்றோம். உள்ளே ஒரு சிறுவனும், உடலெங்கும் விபூசி பூசிய பெரியவரும் இருந்தார்கள். எல்லோரும் வரிசையாக நின்று பெரியவரிடம் விபூதியும் தாயத்தும் வாங்கினார்கள்.

உடன் வந்தவர், ”இதுதான் நடுமலை, தம்பி. இப்படியே கொஞ்ச தூரம் சமதளத்துலப் போயி இறங்கி, மறுபடியும் ஏறினா கோயில் வந்துடும்.’’ அங்கிருந்து மரங்களுக்கு நடுவே லிங்க உருவில் தெரியும் ஒரு சிகர மலையைக் காட்டி வணங்கிவிட்டு, ”இதோ இருக்காரே, விபூதி சித்தர். இவர் கையால விபூதி வாங்கினா நல்லதுன்னு சொல்வாங்க. நீங்க போயிட்டே இருங்க, தம்பி. நாங்க உட்கார்ந்துட்டு வர்றோம்’’ என்றுவிட்டு அங்கேயே நின்றுகொண்டார். மகிழ்வோடு விடைபெற்று நடக்க ஆரம்பித்தேன்.

ஓங்கி வளர்ந்த பெரிய பெரிய மரங்கள். அவற்றில் பலவற்றின் பெயர்கள் தெரியாமல் இருப்பது நினைத்து வருத்தமாக இருந்தது. ஒருவேளை உள்ளூர்வாசிகள் யாரையாவது உடன் கூட்டிவந்திருந்தால் சிலவற்றின் பெயர்களையாவது கேட்டு அறிந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

வழியில் ஓரிடத்தில்கூட உட்காராமல் மிதமான வேகத்தில் நடந்து, இதுநாள் வரை ஏறிய மலைகள் பற்றி எண்ணிக்கொண்டு, நெடுக இருந்த தாவரங்களையும், ஓரிடத்தில் கூட்டமாக அமர்ந்திருந்த குரங்குகளையும், தவிட்டுக் குருவிகளையும், மரக் கொத்தியையும், காட்டுப் புறாக்களையும், நடுநடுவில் தெரிந்த பக்கத்து மலையின் செந்நிற பாறை உச்சியையும் பார்த்தபடி, இடையில் வெய்யிலுக்குக் குளுமையாக சேமியா ஐஸ் ஒன்று வாங்கி சுவைத்துக்கொண்டும் போனேன்.

சிறிது தூரம் சென்றதும் மரங்கள் குறையத் தொடங்கி, மக்கள் கூட்டம் அதிகமானது. கூடவே, கடைகளும். வழியை ஒட்டிய மரத்தடி நிழலில் சிலர் உட்கார்ந்தும்; படுத்தும் இருந்தார்கள். அதோடு, இரவு பெருங்கூட்டம் தங்கிப் போனதற்கான தடயங்களும் இருந்தன.

யாரும் சொல்லாமலேயே கோயில் அருகில் வந்துவிட்டோம் என மனத்துக்குள் குதித்துக்கொண்டு, அங்கிருந்த கடைகளை எல்லாம் தாண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைப் பார்த்துக்கொண்டு (அவை வருவதற்கு தனியாக ஒரு வழி உள்ளது), வரிசையாக அன்னதானம் போடுவதையும், ஓரிடத்தில் மோரும் சுடச்சுட பாதாம் பால் கொடுப்பதையும் கண்டேன்.

வெய்யிலுக்கு இதமாக மோர் மட்டும் வாங்கிப் பருகிவிட்டு, வலது பக்கமாக நடந்து சென்று, அங்கிருந்த விநாயகரை வணங்கிவிட்டு பள்ளத்தில் இறங்கி, அருவி நீர் கொட்டும் இடத்தருகில் பெரும் பாறைகளை ஒட்டி கோயில் இருப்பது கண்டதும் உள்ளம் குதூகளிக்கத் தொடங்கியது.

இறங்கி ஓர் ஓராமாக செருப்பு கழற்றிவிட்டு, சில்லென்ற ஓடை நீரில் அழகழகாகக் குவிந்துகிடக்கும் கூழாங்கற்களில் கால் வைத்து நடந்து, அளவுக்கு அதிகமாகக் குவிந்திருக்கும் மனிதக் கூட்டத்துக்குள் புகுந்து, ஓங்கி வளர்ந்திருந்த முது மா மரங்களையும், அருவி விழும் இடத்தில் பறை ஒட்டி வளர்ந்து தொங்கும் ஆல மர விழுதுகளையும், ஓரிடத்தில் கூட்டம் கூட்டமாகத் தேங்காய் உடைத்து விளங்குகள் ஏற்றுவதையும் பார்த்துக்கொண்டு போய் கோயில் அருகில் நின்றேன்.

ஒரு பக்கம் அத்தனை ரம்மியமான இடத்தைத் தேர்ந்து சிவனார் வீற்றிருப்பது கண்டு மகிழ்வுற்றேன். இன்னொரு பக்கம் கொஞ்சம்கூட கலை ரசனை இல்லாமல், அவ்விடத்தையும் சூழலையும் குலைப்பது மாதிரி மிகத் தட்டையாக ஒரு கான்கிரிட் கட்டடம் கட்டி, அதைக் கோயில் என்று சொல்லி அதனுள் போக கட்டணம் வசூலிப்பவர்களை எண்ணிக் கோபமாக வந்தது.

மெல்ல அருவி நீர்த்துளி படும் இடமாகச் சென்று நின்றுகொண்டு, அவ்விடம் மனித அவலம் அறங்கேறுவதற்கு முன்னால் எப்படி இருந்திருக்கும்? என விழிமூடி கற்பனை செய்து, எந்நேரமும் அருவியில் நீராடியபடி இருந்த சதாசிவரை மானசீகமாகக் கண்டு வணங்கிவிட்டு, கண்கள் திறந்து பார்த்தேன். அந்த இடத்தில் அத்தனை நூறு பேர்கள் இருந்தும், நானும் சிவரும் மலையும் அருவியும் மட்டுமே இருப்பதாகத் தோன்றியது.

மனத்துக்குள் மலையளவு மகிழ்ந்தவனாய் அங்கிருந்து புறப்பட்டு, பிரசாதமாகத் தந்த சக்கரை வள்ளிக்கிழங்கை வாங்கி உண்டபடி எதிர்ப்பக்கமாக மேலே ஏறி, இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போனேன். அங்கேயும் ஓர் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. கூடவே, பெரிய பாறைகளும், முது மா மரங்களும்.

சிறிது நேரம் எவ்வித யோசிப்பும் இல்லாமல் சுற்றித் திரிந்துவிட்டு, ஓரிடத்தில் வரிசையில் போய் நின்று அன்னதானம் வாங்கி வயிறாற உண்டு அருவி நீர் பருகிவிட்டு, அங்கிருந்து திரும்பவும் நடக்கத் தொடங்கினேன்.

நான்கு பேர் ஓரமாக நின்று ஒரு மரத்தைக் காட்டி செம்மரம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். உடனே, ஆர்வமாகி சுற்றிலும் பார்த்தேன். அதே போன்ற ஆயிரக்கணக்கான மரங்கள் மலையெங்கும் இருந்தன.

‘ஓ, இதுதான் செம்மரமா?’ என்று கேட்டுக்கொண்டு போய் ஒரு மரத்தை தொட்டு வருடிப் பார்த்தேன். உடனே, செம்மரம் குறித்து வாசித்து அறிந்த தகவல்கள் மனத்துள் வரிசைகட்டி வந்தன.

செம்மரம், செஞ்சந்தனம், பிசனம், கணி, ரத்தச் சந்தனம், உதிரச் சந்தனம் எனப் பல பெயர்களில் காலந்தோறும் அழைக்கப்பட்டு வந்துள்ள செம்மரத்துக்கு, உள்ளூரைக் காட்டிலும் வெளிநாடுகளில் பெருத்த வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக, ஜப்பானில் திருமணமானப் பெண் புகுந்த வீட்டுக்குப் போகும்போது, செம்மரத்தால் செய்யப்பட்ட ஒருவித இசைக் கருவியை எடுத்துச் செல்வது வழக்கம்.

அதேபோல, ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் ஒயின்களில் செம்மரத்தூள் பயன்படுத்தப்படுவதும், சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மிக உன்னதமான இடம் பெற்றிருப்பதும் குறிப்பாக, இதிலிருந்து பெறப்படும் எண்ணெய் நறுமணம் மிக்கதும், பயன் மிக்கதுமாக இருப்பதும், இது மருந்துக்காக மட்டுமின்றி, அத்தர் வகைகளிலும் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தவிர, செம்மரத்தில் சிலைகள், மரப்பாச்சி பொம்மைகள், தேர்ச் சிற்பங்கள், உண்கலத் தட்டுகள் முதலானவை செய்யப்படுவதும், அணுக்கதிர் வீச்சை தடுக்கும் வல்லமை கொண்டதாக செம்மரம் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

பின்னாலேயே, காஞ்சி பெரியவர் ஒரு வருட காலம் இம்மலையில் வந்து தங்கி ஈசசையும் ஈசானியையும் பூசித்து வழிபாடு செய்திருந்த தகவலும் நினைவுக்கு வந்தன. ‘இல்லை இல்லை, இருவரோடு சேர்த்து இம்மலையையும் பூசித்து வழிபாடு செய்திருப்பார்’ எனக் கூறிக்கொண்டு, நெடுக இருந்த செம்மரங்களை பார்த்தபடி சரியாக சதாசிவர் கோயிலுக்கும், காமாட்சியம்மை கோயிலுக்கும் நடுவில் உள்ள கல் ஒன்றின்மீது போய் சிறிது நேரம் உட்கார்ந்தேன்.

பிறகு, ஒருவித மன உந்தலில் யாராவது கவனிக்கிறார்களா? என்று மட்டும் பார்த்துவிட்டு எழுந்து, பின்பக்கமாக இருந்த மலையின் மேலே இலையோசையும், பெயர் தெரியாத புள்ளினங்களின் இசையோசையும் கேட்டபடி ஏறிச்சென்று, அதன் உச்சியில் செம்மரங்களுக்கு நடுவில் நிழல் போர்த்தியிருந்த வட்டமான பாறையின் மத்தியில் சம்மணமிட்டு அமர்ந்து, கண்களை மூடி கம்மியக் குரலில் சொல்லிக்கொண்டேன். ”அடுத்ததா, கர்நாடகாவில் இருக்கிற நந்தி மலை ஏறுவோம்.’’

உடனே, மனத்துக்குள் கண்டுவிட்டு வந்த ஈரருவி நீரும் மிக மெல்லிதாகத் தூவத் தொடங்கியது.

                        ***

மலைகளோடு

உரையாட

உரையாட

தானறுகிறான் மனிதன்

அன்றும் இன்றும்

மனிதர்களோடு

உரையாட

உரையாட

தானறுகிறது மலை

இன்றும் என்றும்.

தானறுதலில்தான்

உயிர்க்கிறாள் எப்போதும்

சுழல் பூமிக்கும்

சுட்டெரி கனலிக்கும் தாயான

ப்ரியப் பிரபஞ்ஞனி.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=