ஈழம் அன்ன ஈழம் – 15 : வருகை

சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்துவிட்டு, ஐ சாப்பிட வைத்திருந்த பழமும், பிஸ்கெட்டும் காலியாகிவிட்டதால் வாங்குவதற்காக அருகில் இருக்கும் பழக்கடைக்குப் புறப்பட்டோம்.
திடீரென்று போகும் வழியில் எதிர்பாராத விதமாக பெருமழை வந்ததால், குடை பிடித்துக்கொண்டு ஓடிப் போய் சாலையோரம் இருந்த இனிப்புக் கடை முன்பாக நின்றுகொண்டோம்.
ஓர் அரை மணி நேரம் ஆகியிருக்கும். மழை விடுவதாக இல்லை. அதனால் அவர்களை அங்கேயே பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு, நான் மட்டும் தனியாக குடை பிடித்தபடி போய், தெல்லிப்பழை செல்லும் வழியில் இருந்த பழக்கடையில் 80 ரூபாய்க்கு ஒரு கிலோ கப்பல் வாழைப் பழமும், 100 ரூபாய்க்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு வந்தேன்.
அதற்குள் கடையில் இருந்த அம்மாவிடம் மதியும், ஐ’யும் மிகுந்த நட்பாகிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஐ’க்கு அவர் ஒரு லட்டு தந்ததோடு, மதி கேட்ட ஒடியல் கூழ் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் விளக்கமாக சொல்லித் தந்தார்.
பிறகு மழை விட்டதும் அங்கிருந்து மெதுவாக நடந்து, மல்லாகம் சந்தி அருகில் இருந்த உணவகம் ஒன்றில் போய் சாப்பாடு வாங்கிக்கொண்டு, வழியில் உள்ள தேவாலயத்தில் சிறிது நேரம் அமர்ந்து இருந்துவிட்டு, இருட்டியதும் வீட்டுக்கு வந்தோம்.
கொஞ்ச நேரம் அறையில் படுத்திருந்தேன். பின் நண்பரின் மாமனாரோடு உட்கார்ந்து போர்க் காலம் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவர் சென்றதும் வீட்டின் பின்னால் கொடியில் காயப்போட்டு இரண்டு நாட்கள் ஆகியும் காயாமல் இருந்த துணிகளையெல்லாம் எடுத்து வந்து ஒரு நெகிழிப் பையில் தனியாகவும், மற்ற துணிகளை தனியாகவும் வைத்துவிட்டு, கொண்டு போயிருந்த இரு பெட்டிகளில் அடுத்த நாள் அணியக்கூடிய ஆடைகளை மட்டும் வெளியில் வைத்துவிட்டு, மற்ற அனைத்தையும் உள்ளே வைத்தேன்.
”இப்போவே எதுக்கு வைத்துக்கிட்டு… காலையில் வைக்கலாம்’’ என்றாள் மதி.
”இல்ல இல்ல… புறப்படற நாள்ல எந்த வேலையும் வச்சிக்க வேணாம். இன்னிக்கே எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, வச்சிட்டுப் படுப்போம். அப்போதான் நிம்மதியா தூங்கி ஏந்திரிக்க முடியும்’’ என்று விடாப்பிடியாகச் சொல்லி எடுத்து வைத்தேன்.
தூக்கம் வரவில்லை என்றாலும் இரவு முன்னதாகவே படுத்து, அடுத்த நாள் (டிச 13) காலையில் வழக்கம் போல சீக்கிரம் எழுந்து வாசித்துவிட்டு, குளித்துக் கிளம்பினோம்.
‘சின்ன விமான நிலையம்தான். கூட்டமும் அதிகம் இருக்காது. அதனால் பத்தரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் போதும்’ என்று முன் தினமே நண்பர் சொல்லியிருந்ததால், ”எங்காவது பக்கத்தில் நடந்துபோய் வருவோம்’’ என்றாள் மதி.
”சரி” என்றுவிட்டு மெல்ல நடந்து தெல்லிப்பழை துர்க்கை கோயிலுக்குப் போய் சிறிது நேரம் இருந்துவிட்டு, எதிரே இருந்த கடையில் ஆளுக்கொரு தேநீர் பருகிவிட்டு, சென்ற சில நாட்களில் பழக்கமான அந்தக் கடைக்காரரிடம் கிளம்பும்போது, ”ஊருக்குப் போய் வருகிறோம்’’ என்று சொல்லிவிட்டு, அவர், ”நல்லபடியாக போயிட்டு வாங்க’’ என்று கூறி ஐ’க்கு தந்த மிட்டாயை மகிழ்வோடு வாங்கிக்கொண்டு, கதை பேசியபடி இன்னும் கொஞ்சம் நேரம் நடந்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்.
சரியாக பத்தரை மணிக்கு நண்பர் வந்து, ”புறப்படலாம்” என்றார்.
முதலில் அவ்வளவாக எடை இல்லாத இரு பெட்டிகளையும் கொண்டுபோய் காரில் வைத்துவிட்டு, நண்பர் வீட்டாரிடமும்; மாமனாரிடமும் விடைபெற்றுக்கொண்டு, மூன்று வாரமாக இருந்த வீட்டை விட்டும், சுற்றி இருந்த தாவரங்களை விட்டும், குறிப்பாக கள்ளியையும், பனையையும் விட்டுப் புறப்பட்டு அடுத்த பதினைந்து நிமிடத்தில் விமான நிலையத்தை அடைந்தோம்.
மழை வருவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாமல் வானம் மிகத் தெளிவாகவும் அதேநேரம், வெய்யில் சற்று குறைவாகவும் இருந்தது.
நண்பரிடம், ”போயிட்டு வர்றோம், பிரதர். பார்த்து இருங்க. எல்லாத்துக்கும் நன்றி’’ என்றுவிட்டு விடைபெற்று, உள்ளே நுழைந்து விமான நிலைய சோதனைகள் ஒவ்வொன்றாக முடித்துக்கொண்டு, மிக விரைவாகவே காத்திருப்போர் அறைக்கு சென்று உட்கார்ந்தோம்.
பயணச்சீட்டு வழங்கிய இளம் தமிழ்ப் பெண் ஒருவர், ஐ’யின் பெயரை கடவுச்சீட்டில் பார்த்து ஆச்சர்யமாகப் புன்னகைத்துவிட்டு, ”நல்ல பெயர் வைத்திருக்கீங்க. வாழ்த்துகள்’’ என்றுவிட்டு சொன்னார். ”ஆனால், ஐரோப்பிய நாடுகளுக்குப் போகும்போதும், அரேபியா நாடுகளுக்குப் போகும் போதும் சிக்கல் வர வாய்ப்பிருக்கு. அதை மட்டும் சற்று கவனத்தில் கொண்டு, எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.’’
”சரிங்க மேடம், நன்றி’’ என்று மகிழ்வோடு கூறிவிட்டு வந்தோம்.
நினைத்ததைவிட சீக்கிரமாகவே வாயில் திறக்கப்பட்டு, வரும்போது கூட்டிவந்த அதே சிறிய பேருந்தில் கூட்டிப்போய், 6E-1178 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானத்தில் ஏற்றினார்கள்.
இம்முறை அவ்வளவாகக் கூட்டம் இல்லை. பாதி இடங்களுக்கு மேல் காலியாக இருந்தது. வரும்போது உட்கார்ந்த அதே … என்ற இருக்கைகளில் உட்கார்ந்து, சாளரம் வழியே தெரிந்த நிலத்தை பார்த்து சில நொடிகள் கண்மூடி மனத்துக்குள் சொன்னேன். ‘போய் வருகிறோம், ஈழ மண்ணே… போய் வருகிறோம். இனி எப்போது வருவோம் என்று தெரியாது. ஆனால், நிச்சயம் வருவோம். அவ்வாறு வருகையில்… இதோ, நாங்கள் முதல் தடவையாக வந்துவிட்டு செல்வது பற்றி எழுதப்போகும், ‘ஈழம் அன்ன ஈழம்’ என்னும் நூலை கையில் கொண்டு வருவோம். அது மட்டும் உறுதி. இத்தனை நாட்கள் பத்திரமாக தாங்கிக் காத்தருளி வழியனுப்பி வைப்பதற்கு நன்றி தாயே. உம்மையும், உம் மக்களையும் ஒருபோதும் மறக்க மாட்டோம். போய் வருகிறோம்.’
விமானம் மெல்ல நகரத் தொடங்கியது. நேரம் பார்த்தேன். பிற்பகல் 12.15 தான் ஆனது. அதாவது, பதினைந்து நிமிடம் முன்பாகவே புறப்பட்டது.
ஐ’யும் மதியும் வெளியில் பார்த்துக்கொண்டிருக்க, விமானம் ஓடுபாதையை அடைந்து சில நொடிகள் நின்று, பிறகு வேகமெடுத்து ஓடிப்போய் வான் நோக்கிப் பாய்ந்தது.
கடந்த 22 நாட்களாக இருந்த; வாழ்ந்த இலங்கை என்னும் சேய் தேசத்திடமிருந்து விடைபெற்று கொஞ்சம் கொஞ்சமாக வானடைந்து, வங்காள விரிகுடா மீது இல்லாமல் இம்முறை தமிழ்நாட்டு நிலப்பரப்பு மேலாக இந்தியா என்னும் தாய் தேசத்துக்கு விமானம் பறந்தது.
ஐ’க்கு ஒரு வாழைப் பழமும், பிஸ்கெட்டும் கொடுத்தோம். ஆர்வத்துடன் உள்ளே இருப்பவர்களையும், குறிப்பாக விமானப் பணிப் பெண்களை, வெளியில் தெரிந்த வெண் மேகங்களையும் வேடிக்கைப் பார்த்தபடி உண்டுவிட்டு, சிறிது நேரம் எங்களோடு விளையாடிவிட்டு உறங்கிவிட்டான்.
மதியிடம் கேட்டேன். ”என்ன ஆத்தா, இலங்கை பயணம்லாம் எப்படி இருந்தது?’’
மெல்லிதாக முறுவலித்துவிட்டு சொன்னாள். ”நல்லா இருந்தது. இந்தப் புயல் மட்டும் நடுவுல வராம இருந்திருந்தா… இன்னும் நல்லா இருந்திருக்கும்.’’
”ஆமா… ஆனா, அதுவும் ஒரு பெரிய அனுபவத்த தந்ததுல்ல.’’
உடனே, ”ஆமாம்” என்று தலையாட்டியவள், ”யோசித்துப் பார்த்தா… மூணு வாரம் எப்படிப் போனதுன்னே தெரியல.’’
”ஆமாம்.’’
”நல்ல நாடு. நல்ல மக்கள். நல்ல பயணம்.’’
’’ம்.’’
அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் திரும்பி, சாளரம் வழியாகத் தெரிந்த கொத்துக் கொத்தான மேகங்களையும், கீழே மங்களாகக் காட்சியளித்த நிலத்தையும் பார்க்கத் தொடங்கினாள்.
மெதுவாகக் கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்து, கடந்த நவம்பர் 22 ஆம் தேதி காலை வீட்டிலிருந்து கிளம்பி சென்னை விமான நிலையம் வந்தது முதல்… குடிவரவு அதிகாரியிடம் ஐ பெயருக்காக சண்டையிட்டது, பிறகு முதல் தடவையாக மதியும் ஐ’யும் விமானத்தில் பயணித்தது கண்டு ரசித்தது, முப்பதாயிரம் அடி வான் உயரத்தில் வைத்து, ‘ஆயிரம் வேர் கொண்ட மரம்’ நூல் வெளியிட்டது, ஈழ மண்ணில் முதல் முறையாக கால் வைத்தது, அங்கிருந்து மல்லாகத்தில் இருக்கும் நண்பர் வீட்டுக்குப் போனது, சுற்றிலும் இருந்த மரம் செடி கொடிகள் யாவற்றோடும் நட்பானது, கீரிமலையில் ஆரம்பித்து… மாவிட்டபுரம், யாழ்ப்பாணம், நல்லூர், நந்திக்கடல், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், திருகோணமலை, கொக்குவில், காங்கேசன்துறை, நவாலி, காரை நகர், நயினா தீவு, திருக்கேதீச்சரம், செல்வச்சந்நிதி, வல்வெட்டித்துறை, கொழும்புத்துறை… என மூன்று வார காலம் இலங்கையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றித்திரிந்து, பலவித மனிதர்களை சந்தித்துப் பேசி, இனிதான முறையில் ஒரு சிறு வாழ்வு வாழ்ந்துவிட்டு, இதோ, தாய் நாட்டுக்குப் புறப்பட்டு விமானத்தில் அமர்ந்து அவை யாவற்றையும் நினைத்துப் பார்ப்பது வரை… மொத்தப் பயணத்தையும் மனத்திரையில் ஒருதடவை உவகையோடு ஓட்டிப் பார்த்துவிட்டு, பெருங்களிப்புடன் கண்கள் திறந்து மடியில் உறங்கிக்கொண்டிருந்த ஐ’யையும், பக்கத்தில் உட்கார்ந்து தீவிரமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதியையும் கண்டேன். மனத்துக்கு மிக நிறைவாக இருந்தது.
விமானப் பணிப்பெண் தந்த குடிநீரை வாங்கிப் பருகிவிட்டு, எட்டிக் கீழே பார்த்தேன். அவ்வளவாக நீரின்றி வெறும் மணல் பரப்பாக ஒரு பெரிய கோடு போன்று வளைந்து செல்லும் ஆறு ஒன்று தெரிந்தது. உடனே, காவிரி என்று கண்டுகொண்டு மதியிடம் சொன்னேன்.
பிறகு என்னை அறியாமல் மனம், இலங்கையில் குறிப்பாக, யாழ்ப்பாணப் பகுதியில், இத்தனை நாட்களாக இருந்துவிட்டு வந்ததை எண்ணி வரிசையாக சிலவற்றை அசைபோட்டது. அதில் நான்கை மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ஒன்று, நாட்டின் விலைவாசி உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும், ஒட்டுமொத்த வளர்ச்சியில் முப்பதாண்டுகள் பின்தங்கியிருக்கிறது. படித்த; வசதி படைத்த சிலர் மட்டும்தான் உலக வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் ஓரளவுக்கு முன்னேறியவர்கள்.
இரண்டு, இளையோர்களை பொறுத்தவரையில் நம்மூர் மாதிரி ரீல்ஸ் பார்த்துக்கொண்டு, அர்த்தமுள்ள வாழ்வின் அரிய பொழுதுகளை வீணே கழிப்பதை பரவலாக பார்க்க முடிந்தது.
மூன்று, போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவதையும், அதனால்தான் யாழ்ப்பாணம் போன்ற நகரங்கள் கூட முன்னிரவு எட்டு, எட்டரைக்கெல்லாம் கடைகள் மூடப்பட்டு அடங்கிவிடுகிறது.
நான்கு, முன்னமே நண்பர்கள் சொல்லியும், நூல்களில் வாசித்தும் அறிந்திருந்த மிதமிஞ்சிய சாதிப் பாகுபாடு ஓரளவுக்கு குறைந்தது மாதிரி தெரிந்தாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வை மிக அதிகமாகவே காண முடிந்தது.
அடுத்து வந்த பெரிய ஆறினைக் காட்டி, ”இது என்ன ஆறு, சொல்லுங்க பார்ப்போம்?” என்று கேட்டாள் மதி.
எட்டிப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, ”எங்கள் தென்பெண்ணை’’ என்று சொன்னேன்.
மறுபடியும் ஒருதடவை சோதிப்பது போல ஆறை பார்த்துவிட்டு கேட்டாள், ”அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”
”அதெல்லாம் அப்படிதான்.”
”அதான், எப்படின்னு கேட்குறேன்.”
”அதான், அதெல்லாம் அப்படிதான்னு சொன்னனே.’’
உடனே பொய்க் கோபம் காட்டியவள், ”ஆமாம், இவருக்கு மனசுல பெரிய நடமாடும் ஜி.பி.எஸ்’ன்னு நெனப்பு’’ என்று மென் குரலில் சொல்லிக்கொண்டு; திட்டிக்கொண்டு வெளியில் பார்த்தாள்.
சத்தமின்றி உதடசைத்துச் சிரித்து ரசித்துவிட்டு, அவள் தோள் தொட்டுக் கூப்பிட்டு சொன்னேன். ”காவேரிக்கு அடுத்த பெரிய ஆறுன்னா… தென்பெண்ணைதான். அத வச்சிதான் சொன்னன்.’’
”சரி’’ என்றுவிட்டு, விட்ட இடத்திலிருந்து வேடிக்கை பார்ப்பதில் மும்முரமானாள்.
அதன் பிறகு சிறு சிறு மலைகளும், அதைத் தாண்டி ஆங்காங்கே சிறிய; பெரிய ஏரிகளும் நீர் நிரம்பித் தெரிவதைப் பார்த்தேன். ‘இவ்வளவு ஏரிகள் இன்னமும் திருடப்படாமல் உயிர்ப்புடன் இருக்கிறதா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது.
அடுத்த சிறிது நேரத்தில் பெரிதாக ஊர் ஒன்று வருவது பார்த்து, ‘இது என்ன ஊராக இருக்கும்?’ என யோசித்த மறுநொடி, சரியாக விமான ஓட்டி, ”இன்னும் சில நிமிடங்களில் சென்னையில் தரை இறங்கப் போகிறது’’ என்று ஒலிபெருக்கியில் அறிவித்தார்.
‘அதுக்குள்ள வந்துட்டமா?’ என்று நகர்பேசி எடுத்து நேரம் பார்த்தேன். அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வந்திருந்தது.
அவர் சொன்னபடி அடுத்த சில நிமிடங்களில் விமானம் கொஞ்சம் கொஞ்சமாகத் தாழ்ந்து, திருநீர்மலையை ஒட்டி நிலப்பரப்புக்கு மிகப் பக்கத்தில் வந்து, விமான நிலைய ஓடுபாதையில் தரை தொட்டு இறங்கி, சற்று தூரம் வேகமாக ஓடிச்சென்று பிறகு மெதுவாகி நகர்ந்து ஓரிடத்தில் போய் நின்றது.
எந்தச் சலனமும் இல்லாமல் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஐ’யை எழுப்பாமல், அப்படியே மடியிலிருந்து தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டு, முதலில் நானும், அடுத்து மதியும் விமானத்திலிருந்து மெதுவாகக் கீழே இறங்கினோம்.
முதலில் வலது காலை மண்ணில் வைத்தபோது, என் மனம் முழுக்கச் சொன்னது. ‘வணக்கம் தமிழ்நாடு!’
ஆம்! இருபத்தி இரண்டு நாட்கள் பயணம் முடித்து சென்னையில் வந்து இறங்கிய அம்மதியப்பொழுது, அதிக வெப்பம் இல்லாமல் இதமாக ஒளியைச் சிந்தி எங்களை இன்முகத்தோடு வரவேற்றது.
அதிலும் குறிப்பாக, உலகெங்கும் இருக்கக்கூடிய 8,355,162,917 பேர்களில் ஐ என்னும் பெயரைக் கொண்ட ஒரே ஒருவனை; உலகெங்கும் வாழக்கூடிய சுமார் 15 கோடி தமிழர்களில் முதல் ஓரெழுத்துப் பெயர் கொண்டோனை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு வரவேற்றது.
[முற்றும்]
*