ஈழம் அன்ன ஈழம் – 13 : Jaffna Monitor நேர்காணல், நயினா தீவு, திருக்கேதீச்சரம்

சோமசுந்தரப் புலவர் பிறந்த நவாலியூரில் இருக்கும் முது பனை மரத்தடியில் வைத்து ‘தாவர சங்கமம்’ நூல் வெளியிட்டது பற்றி முகநூலில் பதிவிட்டிருந்தேன். பார்த்துவிட்டு Jaffna Monitor இதழின் சிறப்புச் செய்தியாளர் ஒருவர் இன்று காலை (டிச 09) தொடர்புகொண்டு, ”வாழ்த்து” கூறினார்.
பிறகு நேரில் வந்து சந்தித்து விரிவாக நேர்காணல் செய்துவிட்டு, ”இது மிக முக்கியமான ஒரு நேர்காணல். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வந்து நீங்கள் இங்கே நிகழ்த்திய இந்த புத்தக வெளியீடு மிக அரிய ஒன்று. இலங்கை மட்டுமல்லாமல்… உலகின் பல இடங்களில் இருக்கக்கூடிய ஆளுமைகள் பலர் இதை வாசிப்பார்கள்; கொண்டாடுவார்கள்’’ என்றுவிட்டு சொன்னார்.
”டிசம்பர் பதினாறாம் தேதி வெளியாகும் இதழில் இந்நேர்காணல் வெளியாகும். தொடர்ந்து இதேபோன்று தனித்துவமாக, எவ்வித சமரசமும் இல்லாமல் இயங்குங்கள். தமிழுக்கு பல புதிய படைப்புகளை கொடுங்கள். அதற்கு எங்களது வாழ்த்துகள்.’’
மகிழ்வோடு ”நன்றி” கூறிவிட்டு, அவர் கேட்ட ஒளிப்படங்களை எல்லாம் தந்து அனுப்பி வைத்துவிட்டு, கிளம்பி யாழ்ப்பாணம் வந்தோம்.
அங்கிருந்து தென் மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாகதீபம் என்னும் நயினா தீவு போகும் பேருந்தில் ஏறி, முன்தினம் நண்பரோடு ஆட்டோவில் சென்ற சாலை வழியாக இம்முறை நேராகப் போய், கடல் நீரையும், ஆங்காங்கே வடியாமல் நின்றிருந்த வெள்ள நீரையும், வழியெங்கும் இருந்த தாவரங்களையும், அதிலும் குறிப்பாக பனைகளை, ஊர்களையும், வீடுகளையும் (சில சிதைந்த வீடுகளை), கோயில்களையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டு, வானர் பாலம் வழியாக பூங்கொடித் தீவுக்குள் நுழைந்து குறிக்காட்டுவான் துறைக்கு வந்தோம்.
கடலுக்குள் சிறிது தொலைவு வரை செல்லும் செய்பாதை வழியாகப் போய், அங்கிருந்து நயினா தீவு போகும் அடுத்த கப்பலில் ஏறினோம். ஒருவருக்கு 80 ரூபாய் கட்டணம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அந்தமான் போயிருந்தபோது கடைசியாகக் கப்பலில் பயணித்தது. அதன் பிறகு 2022 இல் காசி சென்றபோது கங்கையில் பெரிய கப்பலில் பயணித்திருந்தாலும் கடலில் பயணிப்பது இப்போதுதான்.
அது தந்த உற்சாகத்தில் வரும் வழியிலேயே தூங்கிவிட்ட ஐ’யை எழுப்பாமல், திரும்பி வரும்போது அவன் பார்க்கட்டும் என்று தோளில் சாய்த்து தூங்க வைத்துக்கொண்டு, கப்பலில் சுமார் இருபது நிமிடம் பயணித்து நயினா தீவுக்குப் போனோம்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் சப்த தீவுகளில் ஒன்றாகவும், இந்து மற்றும் பௌத்த சமயத்தவர் போற்றும் புனித இடமாகவும் கருதப்படும் இந்நயினா தீவில், வரலாற்று சிறப்புமிக்க நாகபூசணி அம்மன் கோயில் இருப்பது பற்றி முன்னமே வாசித்திருக்கிறேன்.
பதினெட்டு மகா சக்தி பீடங்களில் ஒன்றாக அதாவது, தேவியின் சிலம்புகள் விழுந்த சக்தி பீடமாகக் கருதப்படுவது. அதேபோல, கௌதம புத்தர் விஜயம் செய்ததாக நம்பப்படும் பதினாறு பௌத்த புனித தலங்களில் ஒன்றாக இங்குள்ள நாகவிகாரை சொல்லப்படுகிறது.
எங்களைத் தவிர அனைவரும் உள்ளூர்க்காரர்கள். நாங்கள் மட்டுமே அந்தத் தீவையும், அங்குள்ள நாகபூசணி அம்மன் கோயிலையும் பார்க்கப் போயிருந்தோம்.
தமிழர்களின் முன்னோர்களாக சொல்லப்படும் நாகர் இனத்தவர்களின் முக்கிய வழிபாடாக இருந்தது நாகவழிபாடு. தமிழகம் மட்டுமின்றி, ஈழத் தமிழர்களிடையேயும் ஆதி முதலே அது காணப்பட்டதற்கு உதாரணமாக, அதன் எச்சங்களாக இப்போதும் இருக்கும் வழிபாட்டு முறைகளையும், ஊர்ப் பெயர்களையும் கூறலாம். அதில் மிக முக்கியமானது இந்நாக தீவும், இங்குள்ள நாகபூசணி அம்மன் கோயிலும்.
வீசும் காற்றில் மெதுவாக நடந்து, தீவின் அழகை ரசித்தபடி கோயில் அருகில் சென்று காலணிகளை ஓர் ஓரமாகக் கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தோம்.
வாயில் அருகில் உட்கார்ந்திருந்தவர் எங்களைப் பார்த்து, ”இப்போ சாமிய பார்க்க முடியாது, மூடிட்டாங்க. மறுபடியும் மாலைதான் திறப்பாங்க’’ என்று சொன்னார்.
கப்பலில் இருந்து இறங்கும்போதே எதிர்பார்த்ததுதான் என்பதால், ஒன்றும் சொல்லாமல் வெறுமே தலையாட்டிவிட்டுப் போய், அங்கிருந்த நா நீட்டியிருக்கும் நந்தி சிலை முன்பாக நின்று உள்ளே இருக்கும் நாகபூசணி அம்மனை மனக்கண்ணில் கண்டு வணங்கிவிட்டு, அழகான மண் தரையில் நடந்தபடி வளாகத்தில் இருந்த மரங்களையும், நாக சிற்பங்களையும் பார்த்துக்கொண்டு கோயிலை சுற்றி வந்தோம்.
ஒரு கடை கூட இல்லை. பசிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரத்தடியில் நின்றிருந்த பெரியவரிடம் போய் கேட்டோம். சற்று தள்ளி இருந்த ஒரு கட்டடத்தைக் காட்டி, ”அங்கே அன்னதானம் போடுவாங்க. போய் சாப்பிடுங்க’’ என்றார்.
மகிழ்ச்சியோடு சென்று உள்ளே உட்கார்ந்து ஐ’யை மடியில் படுக்க வைத்துக்கொண்டு, சிகப்பு அரிசி சோறு, பூசணிக் கூட்டு, அப்பளம், ரசம் என்று மிகச் சுவையான உணவை முதலில் நாங்கள் உண்டோம். பிறகு ஐ’யை எழுப்பி சாப்பிட வைத்து, சிறிது நேரம் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பினோம்.
”கடைசிப் பேருந்து ஐந்தரை மணிக்கு” என்றார்கள். நேரம் பார்த்தோம், நான்கு ஆக இன்னும் பத்து நிமிடம் இருந்தது. இருந்தாலும் வேகமாக நடந்துபோய் காத்திருந்து, அடுத்து புறப்பட்ட கப்பலில் ஏறிக்கொண்டோம்.
இம்முறை சற்று சிறிய பழைய பாணி கப்பல். அதோடு, ஐ விழித்திருந்து பயணிக்கும் முதல் கப்பல் பயணம். அதனால், முழுக்க முழுக்க அவன் வேடிக்கை பார்க்கும் விதமாக ஓர் இடம் பார்த்து அமர்ந்துகொண்டு, பத்திரமாக அவனை நிற்க வைத்து பிடித்து வந்தேன்.
கப்பல் புறப்பட்டதும் நீள விரிந்திருக்கும் ஆழி நீரை மிக அருகில் பார்த்துவிட்டு, ”நண்ணி… நண்ணி…’’ என்றான் முதலில்.
கொஞ்ச நேரம் ஆனதும் அலையில் மிதந்தாடும் கப்பலையும், அசைவுறும் நீரையும் பார்த்து மகிழ்ந்தவனாய், கைகள் இரண்டையும் அகல விரித்துக் காட்டி, ”அம்மா… அவ்………ளோ நண்ணி… அப்பா அவ்………ளோ நண்ணி’’ என்று சொல்லி உற்சாகத்தில் துள்ளிக் குதித்திட்டான்.
நயினா தீவு எங்கள் பயணத் திட்டத்திலேயே இல்லை. முதலில் நண்பர் குடும்பத்தோடு செல்ல எண்ணியிருந்தோம். அதற்கான சூழல் அமையாததால் விட்டுவிட்டு, மற்ற இடங்களை பார்த்து வந்தோம். ஆனால், இன்று தற்செயலாக யாழ்ப்பாணம் வந்ததும் அங்கே நின்றிருந்த நயினா தீவு போகும் பேருந்தை பார்த்துவிட்டு மதிதான் கேட்டாள். ”போயிட்டு வருவோமா?’’
எனக்கும் உள்ளுக்குள் விருப்பம் இருந்தது. நேரம் வேறு மதியம் ஆகிவிட்டதால், ‘என்ன செய்யலாம்?’ என்ற கேள்வியோடவே பக்கத்தில் நின்றிருந்த இளைஞர் ஒருவரிடம் கேட்டேன். ”இப்போ இந்தப் பேருந்துல போனா… நயினா தீவு போய் கோயில் பார்த்துட்டு, மாலைக்குள்ள திரும்பி வந்துட முடியுமா?’’
தனது நகர்பேசியில் நேரம் பார்த்துவிட்டு, ”கண்டிப்பா வந்துடலாம். போயிட்டு வாங்க’’ என்றார்.
உடனே ஓடிப்போய் புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் ஏறிக்கொண்டோம்.
அத்தனைப் பெரிய கடலை, அதுவும் அதற்குள் பயணித்து, ஐ அதுவரை பார்க்காததால் பெரிதிலும் பெரிதாய் மகிழ்ந்திட்டான்.
கப்பலில் இருந்து இறங்கி, அங்கே நின்றிருந்த கடைசிப் பேருந்தில் ஏறாமல், இன்னும் நேரம் இருந்ததால், சென்று கடல் நீரில் கால் நனைத்தும், கரையில் மோதித் தெரித்த அலை நீரில் நனைந்தும், கடலுக்கு நடுவே போகும் சாலையில் நடந்தபடி ஆங்காங்கே நின்றிருந்த கப்பல்களையும்; படகுகளையும், ஓரிடத்தில் இயந்திரம் கொண்டு சாலை சீர்செய்வதையும், தூரத்தில் தெரிந்த மற்ற தீவுகளையும், கண்டுவிட்ட வந்த நயினா தீவையும்; கோயிலையும் பார்த்துக்கொண்டு வந்தோம்.
சட்டென்று மேகம் கருத்து இருண்டுகொண்டு வருவதை பார்த்துவிட்டு, வேகமாக ஓடிப்போய் அங்கிருந்த மூடிய கடை ஒன்றின் முன்பாக நின்றுகொண்டோம். நல்லவேளை அடித்த காற்றில் களைந்து மழை வராமல் போனது. இல்லையென்றால் பெருமழையில் சிக்கிக்கொண்டு அல்லாடியிருப்போம்.
அங்கிருந்த காவலர், ராணுவ வீரர் எல்லாம் சேர்த்து மொத்தமே இருபது பேர்தான் இருந்திருப்போம். எல்லா கடைகளும் மூடப்பட்டு, முன்னிரவு ஊர் அடங்குவது போல அடங்கி இருந்தது.
சற்று தள்ளி திறந்திருந்த ஒற்றை சிங்களர் கடையில் போய் பால் தேநீர் இல்லாததால் எனக்கு மட்டும் கருந்தேநீர் வாங்கி, அங்கிருந்த ஓர் இருக்கையில் தனியாக அமர்ந்து, அந்த இடத்தையும், சூழலையும் ரசித்தபடி பருகிவிட்டு, ஐ’க்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி எடுத்துக்கொண்டு, அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்ட பேருந்தில் ஏறி யாழ்ப்பாணம் வந்தோம்.
சோர்வாக இருந்தாலும் பொருட்படுத்தாமல், காங்கேசன்துறை செல்லும் சாலையில் ஓர் அரை மணிநேரம் இலக்கின்றி நடந்துகொண்டு, வழிநெடுக இருந்த கடைகளையும், குறிப்பாக அவற்றின் பெயர்களை, எதிர்படும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்துவிட்டு, பேருந்தேறி வீட்டுக்கு வந்தோம்.
இரு தினங்களுக்கு முன்பாகவே நண்பர், மன்னாரில் உள்ள தனது நண்பரிடம் கேட்டு, ‘திருக்கேதீச்சரம் செல்லும் சாலை பழையபடி சரிசெய்து… பேருந்துகள் சென்று வருவதாக’ சொன்னதால், இன்று (டிச 10) அதிகாலை சீக்கிரமாகவே எழுந்து கிளம்பி யாழ்ப்பாணம் வந்து, வழியில் சாப்பிட இடியாப்பமும், பிஸ்கெட்டும் வாங்கிக்கொண்டு, கொட்டும் மழையில் குடை பிடித்தபடி மன்னார் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிக்கொண்டோம்.
நடத்துநரிடம் கேட்டதற்கு, ”இரண்டரை மணி நேரம் ஆகும்” என்றார்.
’’சரி, வந்ததும் சொல்லுங்கள்’’ என்றுவிட்டு, வழி நெடுக இருந்த ஊர்களையும், காடுகளையும், வெற்று நிலங்களையும், விதவிதமான தாவரங்களையும், கடலையும், நடுவில் ஓரிடத்தில் வரிசையாக வந்த காற்றாலைகளையும்; யாழ்ப்பாணம் நுழைவு வளைவையும் பார்த்தபடி ஐ’க்கு காட்டி சொல்லிக்கொண்டு, ‘இருங்கடற் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் கேடிலாத கேதீச்சரம்’ என்று ஞானசம்பந்தராலும், ‘பாலாவியின் கரைமேற் திடமாஉறை கின்றான்றிருக் கேதீச்சரத் தானே’ என்று சுந்தரராலும் போற்றிப் பாடப்பட்ட இலங்கையின் மற்றொரு தேவாரப் பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சரம் போனோம்.
வழிநெடுக காலியாக இருந்த பெரு நிலங்களையும், நீர் நிலைகளையும், அவ்வளவாக வீடுகள் இல்லாமல் ஆனால், மிக செழிப்போடு காணப்பட்ட ஊர்களையும், நெடிதுயர்ந்த மரங்கள் முதல் ஆளுயர முட்புதர்கள் வரை இருந்த காடுகளையும் பார்க்கையில் இதுதான் தோன்றியது. ”இவ்வளவு வளம் மிக்க பூமியா இருக்கறதாலதான்… உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டு பணவெறியர்களும் கைப்பற்றி கூறுபோட நினைக்கிறார்களோ? அதற்காக எப்படி எப்படியெல்லாமோ முயற்சிக்கிறார்களோ?’’
பேருந்தில் இருந்து இறங்கியதும் எங்களை வரவேற்கும் விதமாக மயில் ஒன்று அகவும் ஒலி கேட்டது. உடனே ஐ’யிடம், ”ஐ பப்பு… இப்போ ஒரு சத்தம் கேட்குதே… அது என்னன்னு சொல்லு, பார்ப்போம்” என்றேன்.
சுற்றிலும் பார்த்துவிட்டு எதுவும் கண்ணில் படாததால், ”காக்கா’’ என்றான்.
மதி சிரித்துக்கொண்டு அவனை என்னிடம் இருந்து வாங்கி, அங்கிருந்து சற்று தொலைவில் ஆலமரம் பக்கத்தில் செடிகளுக்கு நடுவில் நின்றிருந்த மயிலை காட்டி சொன்னாள். ”காக்கா இல்ல, தங்கம். அதோ, அங்க இருக்கு பாரு… மயில். அதுதான் கத்துச்சு.’’
ஏற்கனவே மயில் பார்த்திருந்தாலும், முதல் தடவை பார்ப்பது போல கண்கள் விரியக் கண்டவன், ”மயிலு… மயிலு…’’ என்றான்.
அங்கிருந்து கோயிலுக்கு செல்லும் அழகான சாலை வழியாக நடந்து, எதிரில் எங்களைக் கடந்து கோயில் அருகில் வேகமாகப் போன ஆண் மயில் ஒன்றை பார்த்துக்கொண்டு போனோம்.
எதிர்பார்த்த அளவுக்கு பெருங்கோயில் இல்லை என்றாலும், அழகாக; பழைமையாக தமிழ்நாட்டு பாணியில் இருந்தது.
நேராக கோயிலுக்குள் செல்வதை பார்த்த அங்கிருந்த கடைக்கார அம்மா எங்களைக் கூப்பிட்டு, ”ஆண்கள் சட்டை இல்லாமல் வேட்டி கட்டிட்டுதான் போகணும். பெண்கள் பூ வைக்காமல் தலை முடிந்துகொண்டு போகணும்’’ என்றுவிட்டு, அங்கிருந்த ஒரு வேட்டியை எடுத்து என்னிடம் தந்தார்.
‘சட்டை இல்லாமப் போகணும் சொன்னீங்க, சரி. இப்போ, என்னடா புதுசா வேட்டி கட்ட சொல்றீங்க?’ என்று உள்ளுக்குள் கேட்டுக்கொண்டு, வழவழவென்று இடுப்பில் கயிறு போட்டு கட்டினால் கூட நிற்காத வகையில் இருந்த அவ்வேட்டியை வேண்டா வெறுப்பாக வாங்கி, வேறு வழியின்றி போட்டிருந்த ஜீன்ஸ் மேலேயே கட்டிக்கொண்டு, சட்டையையும் பனியனையும் கழட்டி கையில் பிடித்துக்கொண்டு உள்ளே போனேன்.
மொத்தமே ஒரு பதினைந்து பேர்தான் இருந்திருப்பார்கள். அதிலும் கோயில் பணியாளர்கள் ஐந்து பேர். நடை சாத்துவதற்கு முன்பான பூசை நடப்பதாக சொன்னார்கள்.
‘நல்லவேளை சீக்கிரம் வந்துவிட்டோம். இல்லையென்றால் அவ்வளவுதான்’ என்று நினைத்துக்கொண்டு போய் கேதீசுவரரையும், கெளரியையும் வணங்கிவிட்டு, அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்த கோயிலை சுற்றி வந்தோம்.
சுந்தரருக்கும், சம்பந்தருக்கும் தனித் தனிச் சன்னதிகள் இருந்தன (அதன் பக்கத்திலேயே அவர்கள் பாடிய பாடலை பொறித்து வைத்திருந்தார்கள்). அதோடு, ஒவ்வொரு சன்னதியும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்தன. அதிலும் குறிப்பாக, தேவ சபையும், அதன் நடுவில் ஆடிக்கொண்டிருந்த ஆனந்த நடராசரும் கண்டதும் ஈர்த்தது. அடுத்ததாக, அங்கிருந்த மிகப் பெரிய சோமாஸ்கந்தர் சிலை (இதுதான் உலகிலேயே மிகப் பெரியது என்கிறார்கள்) அத்தனை தத்ரூபமாக செதுக்கியிருந்தார்கள்.
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் பழைமையான துறைமுக நகரமான மாதோட்டத்தில், பாலாவி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயில், முதலில் சோழர்களால் கட்டப்பட்டது. பிறகு போர் முதலான காரணங்களால் சிதிலமானதை, 1600 வாக்கில் மறுபடியும் எடுத்துக் கட்டியிருக்கிறார்கள்.
திடீரென்று லேசாக மழை தூரத் தொடங்கியது. நனையாமல் ஐ’யை தூக்கிக்கொண்டு ஒதுங்கி ஓரிடத்தில் உட்கார்ந்து, நகர்பேசி எடுத்து முதலில் தேவாரம் இரண்டாம் திருமுறையில் நட்டராகப் பண்ணில் ஞானக் குழவியான திருஞானசம்பந்தர் பாடிய, ‘விருது குன்றமா மேருவில் நாணர’ என்று தொடங்கும் பதிகத்தையும், பிறகு ஏழாம் திருமுறையில் நட்டபாடை பண்ணில் ஈசனுக்கு நண்பரான சுந்தரர் பாடிய, ‘நத்தார்புடை ஞானன்பசு ஏறிந்நனை கவுள்வாய்‘ என்று தொடங்கும் பதிகத்தையும் ஒருதடவை எங்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் பாடினேன்.
அடுத்த சில நிமிடங்களில் மேளமும், நாதஸ்வரமும் ஒலிக்க, ஈசருக்கும் அவர்தம் இணைவிக்கும் தீபாராதனை காட்டினார்கள். எழுந்து போய் வணங்கிவிட்டு, திரை போட்டதும் கோயிலை இன்னொரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.
வேட்டி கொடுத்த அம்மா எங்களுக்கு ஒரு தொன்னை நிறைய சுவையான சக்கரைப் பொங்கலும், இன்னொரு தொன்னையில் வெட்டிய பழக்கலவையும் கொடுத்தார்.
”நன்றி’’ கூறி மகிழ்வோடு வாங்கி உண்டுவிட்டு, கோயிலுக்கு முன்பாக இருந்த இடங்களை குறிப்பாக, மடங்களையும், கடைகளையும், குளத்தையும் பார்த்தபடி சற்று நேரம் நடந்து சுற்றிவிட்டு, கதைகள் பேசியவாறு பேருந்து நிலையம் வந்தோம்.
மனிதர்களுக்கு பதிலாக அங்கே நான்கு கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. பார்த்துச் சிரித்துக்கொண்டு பக்கத்தில் போய் நிறுத்தி ஐ’யிடம் கேட்டோம். ”இது என்ன, சொல்லு பாப்போம்?”
துளியும் யோசிக்காமல் உடனே, ”குதர’’ என்றான்.
”இல்ல, தப்பு’’ என்றோம்.
இப்போது யோசித்துவிட்டு, ”மாடு’’ என்றான்.
”இல்ல, இப்போவும் தப்பு.’’
மறுபடியும் யோசித்துவிட்டு, ”ஆடு’’ என்றான்.
அடுத்து எப்படியும் பூனையையும், நாயையும் சொல்வான் என்று சிரித்துக்கொண்டு, ”இல்ல தங்கம், கழுதை” என்றோம்.
அவனுக்கு அதை சரியாக உச்சரிக்கத் தெரியாமல், வாய்க்கு வந்தபடி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்.
அருகில் இருந்த ஆறுமுக நாவலர் சிலையை சென்று பார்த்துவிட்டு வந்து, அடுத்த பேருந்து எப்போது வருமென்று தெரியாமல் காத்திருந்தோம்.
சற்று நேரத்தில் அங்கே வந்த ஒரு வயதான அம்மா, ”இன்னும் கொஞ்ச நேரத்துல வரும்’’ என்றார், நாங்கள் கேட்காமலேயே.
”சரிங்கம்மா’’ என்றுவிட்டு அவரோடு பேசிக்கொண்டிருதோம்.
’’இந்தியாவில் இருந்தா வந்திருக்கீங்க? ரொம்ப சந்தோசம் தம்பி. எனக்கும் இந்தியா வரணும், திருவண்ணாமலை வரணும்னு ஆசை. அடுத்த வருசம்தான் மகள் கூட்டிட்டுப் போறதா சொல்லியிருக்கா. அவ இப்போ லண்டன்ல இருக்கா, தம்பி. போர் நடந்தப்போ போனவ… இன்னும் வரல.’’
அவரிடம் என் சொந்த ஊர் திருவண்ணாமலை என்றும், இப்போது சென்னையில் இருப்பதாகவும் சொன்னேன்.
கையெடுத்து அண்ணாமலையாரைக் கண்டது போல கும்பிட்டவர், ”அந்த ஊரில் பிறக்க புண்ணியம் செய்திருக்கணும், தம்பி. நீங்களெல்லாம் ரொம்பக் குடுத்து வைத்தவங்க. நினைத்த நேரத்தில் அண்ணாமலையாரை பார்க்கலாம். நாங்களெல்லாம் நினைத்து ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் பார்த்த பாடில்லை.’’
”கண்டிப்பா வாங்கம்மா. இதுதான் எனது எண். எப்போது வந்தாலும் கூப்பிடுங்க. உங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் என் நண்பர்கள் அங்கே செய்வாங்க.’’
மறுபடியும் கையெடுத்துக் கும்பிட்டவர், ”அந்த அண்ணாமலையார் உங்களுக்கு எப்போதும் அருளுவார் தம்பி’’ என்றுவிட்டு, வந்து நின்ற பேருந்தில் எங்களோடு ஏறி, அடுத்து வந்த தனது கிராமத்தில் இறங்கிக்கொண்டார்.
சற்றும் எதிர்பாராத வகையில் கடுமையான மழை கொட்டத் தொடங்கியது. சிறிது நேரம் பேருந்தில் இருந்தவர்களுடன் பேசிச் சிரித்து விளையாடிக்கொண்டு வந்த ஐ, வழியில் வாங்கித் தந்த இலங்கையின் புகழ்பெற்ற கப்பல் வாழைப் பழத்தை உண்டுவிட்டு உறங்கிவிட்டான்.
நினைத்ததைவிட சீக்கிரமாகவே யாழ்ப்பாணம் வந்து இறங்கியவர்கள், அங்கே துளி கூட மழை இல்லாததைப் பார்த்து சிரித்துக்கொண்டு, பேருந்து நிலையத்தருகில் இருந்த ஓர் உணவகத்தில் போய் கொத்து பரோட்டோ வாங்கி பகிர்ந்து உண்டுவிட்டு, அங்கிருந்து காங்கேசன்துறை செல்லும் சாலைக்கு நிகராக அடுத்துள்ள கஸ்தூரியார் சாலையில் நடந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு, வண்ணை – வைத்தீசுவரர் கோயிலுக்குப் போய் சிறிது நேரம் இருந்துவிட்டு, மறுபடியும் அங்கிருந்து நடந்து நாச்சிமார் கோயில் வரை வந்து பேருந்தேறி வீட்டுக்கு வந்தோம்.
வீட்டுக்குள் நுழையும் வரைக்கும் மனம் முழுக்க திருக்கேதீச்சரத்து இறைவனும், இறைவியும் நிரம்பி இருக்க, அங்கே அமர்ந்து பாடிவிட்டு வந்த தேவாரப் பாடல்கள் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தன.
*
பின்னிணைப்பு – 1 : Jaffna Monitor இதழில் வெளியான நேர்காணல் – https://www.jaffnamonitor.com/the-world-survives-only-when-all-life-is-honoured-writer-vadivarasu/