ஈழம் அன்ன ஈழம் – 14 : செல்வச்சந்நிதி, வல்வெட்டித்துறை, கொழும்புத்துறை

இந்தியாவிலிருந்து வந்து இன்றோடு (டிச 11) சரியாக இருபது நாட்கள் ஆகின்றன. இந்நாட்களில் இலங்கையின் பல இடங்களை பார்த்திருந்தாலும், அருகில் இருக்கும் முக்கியமான ஓரிடத்தை இன்னும் பார்க்கவில்லை என்று முன்தினம் மாலை புலனம் வழியாகப் பேசிய யாழ்ப்பாண நண்பர் ஒருவர் நினைவுருத்தினார்.
அதன்படி காலை விடிவதற்கு முன்பாகவே வீட்டிலிருந்து கிளம்பி யாழ்ப்பாணம் வந்து, அங்கிருந்து பருத்தித்துறை செல்லும் பேருந்தில் ஏறி, தொண்டைமானாறை ஒட்டியிருக்கும் புகழ்பெற்ற செல்வச்சந்நிதி முருகன் கோயிலுக்குப் போனோம்.
அவர் சொன்ன அளவுக்கு இல்லை என்றாலும், ஆற்றை ஒட்டி மரங்கள் சூழ ரம்மியமான இடத்தில் கோயில் இருந்தது கண்டதும் மிகப் பிடித்துவிட்டது.
வரும் வழியிலேயே ஐ உறங்கிவிட்டதால் எழுப்பாமல், பேருந்து நிலையத்திலிருந்து சற்று தொலைவில் இருந்த கோயில் முன்பாக வந்து, அங்கே இருக்கும் மணல் பரப்பில் நின்றபடி அக்கோயிலையும், அதையொட்டி இருந்த மரங்களையும்; இடங்களையும் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு உள்ளே போனோம்.
சிறிய கோயில்தான். ஆனால், நல்லூர் போன்று கருவறையில் வேல் வைத்திருந்தார்கள். அதைக் கண்டதும் சாளுவன்குப்பம் கோயில் மனக்கண்ணில் வந்து போனது. பக்கத்தில் சென்று வணங்கிவிட்டு, திருமணத்திற்காக அங்கே கூடியிருந்தவர்களை பார்த்துக்கொண்டு, உள் பிரகாரத்தை சுற்றி வந்தோம்.
இலங்கை வந்தது முதல் கவனித்த விடயங்கள் சில உண்டு. அதில் மிக முக்கியமானது, ஊர்ப்பெயர்கள். நாங்கள் தங்கியிருந்த மல்லாகம் தொடங்கி, தெல்லிப்பழை, மாவிட்டபுரம், சுன்னாகம், இணுவில், யாழ்ப்பாணம், அச்சுவேலி, அரியசாலை, சங்கானை, கல்வயல், இடைக்காடு, இயற்றாலை, ஊரெழு, ஏழாலை, கரம்பகம், தொல்புரம், தையிட்டி, சித்தன்கேணி, நீர்வேலி, பண்ணாகம், பனிப்புலம், மயிலிட்டி, மீசாலை, வண்ணார்பண்ணை, வெற்றிலைக்கேணி… என்று பல நல்ல தமிழ்ப்பெயர்கள் காலப்போக்கில் சிதையாமல் இன்னும் இருப்பதை கவனித்தோம்.
அடுத்ததாக, தமிழ்நாட்டில் இருக்கும் சில புராதனமான ஊர்ப்பெயர்கள் அப்படியே இலங்கையிலும் இருக்கப் பார்த்தோம். உதாரணமாக, பூம்புகார், திருநெல்வேலி, நாகர்கோவில், நல்லூர், மன்னார்…
இது ஒருபக்கம் தமிழ் மீது அவர்களுக்கிருந்த பற்றை காட்டினாலும், இன்னொரு பக்கம் கடைகளின் பெயர்களில் அதிகமாகத் தென்பட்ட வடமொழி எழுத்துகளான ஸ், ஷா கொண்ட பெயர்கள் மிகுந்த வருத்தத்தை உண்டாக்கின.
இங்கே வேடிக்கையான விடயம் ஒன்றுண்டு. ட வரிசைக்கு பதிலாக ற வரிசையையும், வட எழுத்தான ஜ’வுக்கு பதிலாக ய’வையும் உபயோகிப்பவர்கள், மொழிப் பற்று குறைந்து அல்லது இல்லாமல் ஸ’வும், ஷா’வும் ஏகத்துக்குப் பயன்படுத்துவதுதான்.
அடுத்ததாகக் கவனித்தது, நம்மூர் போன்று அதிகமாக உணவகங்களும், தேநீர்க் கடைகளும், பேக்கரிகளும் இல்லாதது. இது குறித்து வந்த புதிதில் மத்திய இலங்கையில் இருக்கும் வாசக நண்பர் ஒருவரிடம் கேட்டதற்கு அவர் சொன்னார். ”இங்கே உணவகத்தில் சென்று உண்பவர்கள் மிகக் குறைவுதான், சகோ. அதோடு, வெளியில் சென்று தேநீர் பருகுபவர்கள் மிகக் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். முதல் காரணம், எல்லோரும் வீட்டு உணவைத்தான் அதிகம் விரும்புவார்கள்; உண்பார்கள். அப்படியே வெளியில் உண்ண வேண்டிய; பருக வேண்டிய தேவை பயணங்களின் போதுதான் ஏற்படும். அப்போது மட்டும்தான் உண்பார்கள். இரண்டாவது காரணம், விலை அதிகம் இருப்பதும்; தரம் குறைவாக இருப்பதையும் சொல்லலாம்.’’
மேலும் யாழ்ப்பாணத்தில் சுற்றித் திரிகையில் ஓரிடத்தில் கூட பழைய புத்தகக் கடையையோ, பழைய புத்தகங்களையோ பார்த்ததில்லை. எங்கே, எந்த ஊருக்குப் போனாலும் அங்கிருக்கும் பழைய புத்தகக் கடையை முடிந்தவரை சென்று பார்ப்பவன்; அங்கே கிடைக்கும் அரிய நூல்களை தேடி வாங்குபவன், இலங்கை வந்து இத்தனை நாள் ஆகியும் ஒரு கடையைக் கூட காணாததால், ஒரு நாள் பேருந்து நிலையம் அருகே இருந்த புத்தகக் கடைகளில் ஒன்றில் போய் கேட்டுப் பார்த்தோம்.
அவர்களுக்கு பழைய புத்தகங்களை விற்கக் கூட கடைகள் இருக்கும் என்ற விசயமே தெரியாமல் இருந்தது. அதோடு, எதிர்பட்ட ஐந்து வெவ்வேறு வயதினரிடம் கேட்டதற்கு, எங்களை வித்தியாசமாகப் பார்த்ததை ஒருபோதும் மறக்க முடியாது.
இன்னொரு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயம். இலங்கைத் தமிழர்களிடையே போர் குறித்த வருத்தம்; காயம் இப்போதும் இருப்பதை பார்க்க; கேட்க முடிந்தது. குறிப்பாக, போர் குறித்த பேச்சை எடுத்தாலே அவர்கள் முகம் சோகம் கொள்வதையும், அதனால் பாதிக்கப்பட்ட விதத்தை சொல்கையில் தம்மை அறியாமல் கண் கலங்குவதையும் கவனிக்க முடிந்தது.
அதிலும் ஒருநாள் பல்கலைக்கழகம் செல்லும்போது பேருந்தில் சந்தித்தப் பெரியவர் சொன்னது எப்போதும் நினைவில் இருப்பது. ”இங்கே எல்லோரும் நல்லவர்கள்தான் தம்பி. சில அரசியல்வாதிகள் செய்த சதியால்தான் எல்லாம் நடந்தது. இப்போதும் கூட தெரிந்தும் தெரியாமல் நடந்து வந்தாலும், நிலைமை கொஞ்சம் தேவலாம் என்றுதான் சொல்ல வேண்டும்.’’
மிகச் சிறிய கோயில் என்பதால், சில நிமிடங்களிலேயே சுற்றிப் பார்த்துவிட்டு, மேலும் அங்கே பார்க்க எதுவும் இல்லாததால் எதிரில் இருந்த தெருவுக்குள் போய் அங்கிருந்த உணவகம் ஒன்றில் காலை உணவு உண்டோம்.
தூக்கத்தில் இருந்து எழுப்பித் தந்ததால் ஐ சரியாக உண்ணவில்லை. சரி, என்று கூட்டிக்கொண்டு வந்து கோயில் முன்பாக இருந்த மணலில் விட்டதும் உற்சாகமாகி, அங்கும் இங்கும் ஓடி விளையாடினான்.
பிறகு இன்னொரு தடவை கோயிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வந்து, முன்புறமாக எழுதியிருந்த ‘எந்நிதியும் தருவான் செல்வச் சந்நிதியான்’ என்ற வரியை ஒருதடவை அவனுக்கு வாசித்துக் காட்டிவிட்டு, பின்புறமாக இருந்த ஆறை போய் பார்த்தோம்.
ஓரிடத்தில் நான்கு பேர் தீவிரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் நின்று வீசிய இதமானக் காற்றில் அவர்களையும், அவர்கள் பிடித்த மீன்களையும், அந்த இடத்தையும், அங்கிருந்தே கோயிலையும் இன்னொரு தடவை பார்த்துவிட்டு, சில ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டு, மெதுவாக நடந்து வழியில் இருந்த தாவரங்களை ஐ’க்கு காட்டி, அதன் பெயர்களை சொல்லிக்கொண்டு பேருந்து நிறுத்தம் வந்தோம்.
அங்கிருந்த பாலத்தில் நின்று பார்த்தால், ஆறு கடலில் கலக்கும் அழகானக் காட்சி தெரிவதை முதலில் சென்று பார்த்துவிட்டு, மதியையும், ஐ’யையும் கூப்பிட்டுக் காட்டினேன். அவர்கள் வந்த மறுநிமிடமே ஓர் அரசுப் பேருந்து வந்ததால் கை காட்டி நிறுத்தி ஏறிக்கொண்டோம்.
ஏறுவதற்கு முன்பாக மதி சொன்னாள். ”இன்னும் கொஞ்சநேரம் பார்த்துட்டு, அடுத்தப் பேருந்துல ஏறியிருக்கலாம்.’’
ஒன்றும் சொல்லாமல் வெறுமே தலையாட்டினேன்.
பேருந்தில் ஏறியதும் ஒலித்த, ‘பிரபாகரன் பேரை சொல்லி மீசையை முறுக்கு / பிரபாகரன் தாண்டா எங்கள் விடுதலை நெருப்பு’ என்ற பாடலை கேட்டதும் அவள் முகமே மாறிவிட்டது.
உடனே நான் சொன்னேன். ”அடுத்தப் பேருந்துல ஏறியிருந்தா… இப்படி ஒரு பாட்டக் கேட்டுட்டுப் போய் வல்வெட்டித்துறையில நாம இறங்கியிருக்க முடியாது. இந்த நேரத்துக்கு ஏத்த சரியான சூழல் பாட்டுனா அது இதுதான். அதுவும் நமக்காகவே போட்டமாதிரி இருக்கு.’’
”ஆமாம்’’ என்று உதடசைத்துப் புன்னகைத்தவாறு சொன்னாள்.
என் வயதொத்த நடத்துநரிடம் நூறு ரூபாயைக் கொடுத்து, ”வல்வெட்டித்துறை போக வேண்டும்’’ என்றோம்.
வாங்கிக்கொண்டு, ”அங்கே எந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும்’’ என்று கேட்டார்.
அதுவரை அது ஏதோ சிறிய கிராமம் என்றே நினைத்திருந்தேன். அவரது கேள்வியால் எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு, ”பிரபாகரன் ஐயா வீடு பார்க்க வேண்டும். அதற்கு எங்கே இறங்கணுமே… அங்கே கொடுங்க’’ என்றேன்.
சட்டென்று முகம் மலர்ந்தவர், பின்னணியில் ஓடும் பாடலுக்கு ஏற்ப நாங்கள் போக வேண்டிய இடம் சொன்னதைக் கேட்டுவிட்டு நேசக் குரலில், ”எங்கே இருந்து வர்றீங்க?’’ என்று கேட்டார்.
சொன்னோம்.
அவர் அகம் முழுக்க அலர்ந்ததை முகத்தில் கண்டோம்.
இருபது ரூபாய் பயணச்சீட்டு இரண்டை தந்துவிட்டு, மீதம் அறுபது ரூபாயை தந்தவர், சட்டென்று தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறு தாளை எடுத்து எதையோ எழுதி என்னிடம் நீட்டி, ”இதிலே ஒரு எண் இருக்கு. கீழே இறங்கியதும் அந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்க. ஒருவர் வந்து உங்களைக் கூட்டிப் போய் தலைவர் வீட்டைக் காட்டுவார்’’ என்று சொன்னார்.
அது நாங்கள் சற்றும் எதிர்பாராதது என்பதால், உடனே ”நன்றி’’ கூறி வாங்கிக்கொண்டு, பாடல் வரிகளைக் கேட்டபடி சாளரம் வழியாகத் தெரிந்த காட்சிகளை பார்க்கத் தொடங்கினேன்.
உடுப்பிட்டி தாண்டி அடுத்த சில நிமிடங்களில் வல்வெட்டித்துறை வந்தது. காவல் நிலையம் அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில், ”இதோ, இந்தத் தெருவில் நேராகப் போக வேண்டும்’’ என்று சொல்லி ஒரு தெருவைக் காட்டி எங்களை இறக்கி விட்டுவிட்டுப் போனதும், அந்தத் தாளை சட்டை பையிலிருந்து எடுத்து, ‘இது நிச்சயம் தேவைப்படாது’ என்று கால் சட்டை பைக்குள் வைத்துவிட்டு, அங்கிருந்த தேநீர்க் கடைக்குப் போய் ஒரு தேநீர் வாங்கிக்கொண்டு, பக்கத்தில் இருந்த படிக்கட்டில் அமர்ந்து பருகினோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் இலங்கைத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் இருக்கக் கூடிய தமிழ் நேசர்கள் யாவரிடையேயும் மிகப் பிரபலான ஊர் இது.
அதேநேரம், போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஊருக்குள் புதிதாக யார் வருகிறார்கள், அவர்கள் எங்கே செல்கிறார்கள், என்னென்ன செய்கிறார்கள் என்று இன்னமும் கண்காணித்தபடிதான் இருக்கிறார்கள் என்பதை சென்ற சில நிமிடங்களிலேயே தெரிந்துகொண்டோம்; உணர்ந்துகொண்டோம்.
எதிரே கடை ஒன்றில் இருந்த நடுத்தர வயதுப் பெண்ணிடம் போய், ”பிரபாகரன் ஐயா வீட்டுக்கு எப்படிப் போக வேண்டும்?’’ என்று கேட்டோம்.
எழுந்து சாலைக்கு வந்து நின்று கை காட்டி, ”இப்படியே ஒரே நேராகப் போனால்… கோயில் தாண்டி இடது பக்கமாக ஆல மரம் இருக்கும். அந்தத் தெருதான் ஆலடித் தெரு. அதில்தான் அவர் வீடு இருக்கிறது. அங்கே போனாலே தெரியும், கொடியெல்லாம் கட்டியிருப்பார்கள்’’ என்று விளக்கமாக வழி சொன்னார்.
”நன்றி” கூறிவிட்டு, அவர் சொன்னபடி எந்த சிரமமும் இல்லாமல் போனோம்.
மிகச் சிறிய இடம். மொத்த வீடும் வெடி வைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டு புல் முளைத்திருந்தது. வெளியே இருந்த சுவரில், ‘தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிறுபிராயத்தில் வசித்த இல்லம்’ என்று எழுதி, அதன் கீழே முன்பு இருந்த வீட்டின் ஒளிப்படம் போட்டியிருந்தார்கள். பக்கத்திலேயே அண்மையில் முடிந்த அவரது 71 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி ஒரு தட்டியும் ஒட்டியிருந்தார்கள்.
இரண்டு தினங்களுக்கு முன்பு நண்பரின் மாமனாரிடம் பேசும்போது சொன்னார். ”பிரபாகரன் இருக்கும்வரை அந்த இடம் அரசுக்கு ஒரு பிரச்சினையாக இல்லை. அவர் இறந்ததாக அறிவித்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்… அங்கே விளக்கேற்றி கோயில் போன்று வழிபடத் தொடங்கினார்கள். அதைக் கண்டதும் அவர்களால் தாங்க முடியவில்லை; அவர்களுக்கு அது புரியவும் இல்லை. அதனால்தான் ஒரு கல் கூட இல்லாத அளவுக்கு வெடி வைத்து தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள்.’’
முழுக்க அவரை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு, தெரிந்த தகவல்களை மதிக்கும் ஐ’க்கும் சொல்லியபடி, அவர் பிறந்து வளர்ந்த வீடிருந்த இடத்தில் சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலாக இருந்துவிட்டு, அங்கே ஓரமாக இருந்த பழைய பாழடைந்த சேந்துக் கிணறு தொடங்கி, வேப்ப மரம் வரைக்கும் யாவற்றையும் தொட்டுப் பார்த்துவிட்டு, பக்கத்து வீட்டிலிருந்து தன் குழந்தையோடு வந்த அவரது சொந்த அக்கா மகளிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு, தெரு முனைக்கு வந்து திரும்பி, சற்று தூரத்தில் இருந்த அவர் சிறுவனாக இருக்கையில் ஓடி விளையாடிய முத்து மாரியம்மன் கோயிலையும், வைத்தீசுவரன் கோயிலையும் கண்டுவிட்டு, அதன் முன்பாக சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு, கப்பலுடையார் கோயில் வழியாக கடற்கரைக்குப் போனோம்.
ஒருவர் கூட இல்லாத அந்தக் கடற்கரையில், ஐ’யை பத்திரமாக பிடித்துக்கொண்டு அலையில் கொஞ்ச நேரம் நனைந்து விளையாட விட்டுவிட்டு, பிறகு அங்கிருந்து கடலோரமாக நடந்து போய் பேருந்து நிறுத்தம் தாண்டி இருந்த ஓர் உணவகத்தில், வேறு வழியின்றி ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு கொத்து பரோட்டா வாங்கி அதில் பாதியை மட்டும் உண்டுவிட்டு, மீதியை இரவு சாப்பிட கட்டி எடுத்துக்கொண்டு, அடுத்து வந்த பேருந்தில் ஏறி யாழ்ப்பாணம் வந்தோம்.
அடுத்த நாள் காலையில் (டிச 12) எங்கே செல்வது என்று தெரியாமல் வெறுமே கிளம்பி யாழ்ப்பாணம் வந்து காலை உணவு உண்டுவிட்டு, எதிரில் வந்த கொழும்புத்துறை செல்லும் பேருந்தில் கை காட்டி நிறுத்தி ஏறிக்கொண்டோம்.
உண்மையில் கொழும்புத்துறை எங்கே இருக்கிறது, அங்கே என்ன இருக்கிறது எதுவும் தெரியாது. நடத்துநரிடம் கடைசி நிறுத்தத்துக்கு பயணச்சீட்டு கேட்டு வாங்கிக்கொண்டு, கடற்கரை ஒட்டிய மீனவப் பகுதிகளுக்குள் பேருந்து செல்ல முடியாத சிறு சிறு வழிகளில் எல்லாம் செல்வதையும், ஆங்காங்கே வழியில் எம்.ஜி.ஆருக்கு சிலைகளும்; ரசிகர் மன்றமும் இருப்பதையும் பார்த்துக்கொண்டு, அடுத்த அரை மணிநேரத்தில் கொழும்புத்துறை கடைசிப் பேருந்து நிறுத்தும் இடத்தில் போய் இறங்கினோம்.
கடற்கரை ஒட்டிய சிறு மீனவ கிராமமான அங்கே ஒரு கடை கூட இல்லை. எப்போது முன்பின் தெரியாத இடத்துக்குப் போனாலும், முதலில் அங்கிருக்கும் தேநீர்க் கடையில் போய் உட்கார்ந்து ஒரு தேநீர் பருகிவிட்டு வரும் எங்களுக்கு, என்ன செய்வதென்று தெரியாமல், ‘அங்கிருந்து யாழ்ப்பாணம் செல்லும் அடுத்தப் பேருந்து எப்போது?’ என்று மட்டும் கேட்டுக்கொண்டு, சிறிது தூரம் நடந்ததும் அங்கே ஒரு வீட்டில் சின்னதாக பெட்டிக்கடை இருப்பது தெரிந்தது.
உடனே சென்று அங்கிருந்த ஓர் அம்மாவிடம், ”எங்களுக்கு தேநீர் போட்டுத் தர முடியுமா? அதற்கானக் பணத்தை தந்துவிடுகிறோம். இங்கே கடைகள் எதுவும் இல்லாததால்தான் கேட்கிறோம்’’ என்றோம்.
முதலில் எங்களைக் கண்டு பயந்தவர், நாங்கள் குழந்தையோடு அதுவும், இந்தியாவில் இருந்து வந்திருப்பதை அறிந்துகொண்டு, ”சரி, இருங்க’’ என்றுவிட்டு உள்ளே போய் அடுத்த சில நிமிடங்களில் இரண்டு பால் தேநீர் போட்டு வந்து தந்தார்.
மகிழ்வோடு வாங்கிக்கொண்டு வெளியில் வந்து கடை முன்பாக இருந்த பனை மரத்தடியில் நின்று, எதிரில் இருந்த அழகான கடற்கரையையும், அருகில் முதியவர்கள் இருவர் கதை பேசியபடி வலை சரிசெய்து கொண்டிருப்பதையும், சிறுவர்கள் மூவர் கல் கொண்டு சற்று தூரத்தில் இருந்த சிறு பனை மரத்தை குறி பார்த்து அடித்து விளையாடுவதையும், ஆங்காங்கே மாடுகள் மேய்வதையும், அதில் ஒரு கருப்பு மாட்டின் மீது இரு காகங்கள் போட்டிப் போட்டு உட்காருவதையும், தூரத்தில் கடலுக்கு அந்தப் பக்கமாகத் தெரிந்த நிலத்தையும் பார்த்தபடி பருகினோம்.
‘சுவையான இத்தேநீருக்கு எவ்வளவு பணம் கேட்பாரோ?’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு போய் அந்த அம்மாவிடம் காலியானக் குவளைகளை தந்துவிட்டு கேட்டோம். ”தேநீர் ரொம்ப நல்லா இருந்ததும்மா… எவ்வளவு பணம் தரணும்?’’
சட்டென்று முறுவலித்தவர், ”அதெல்லாம் எதுவும் வேண்டாம், தம்பி. நீங்கள் எவ்வளவோ தூரத்தில் இருந்து எங்களையும், எங்கள் நிலையையும் பார்க்க வந்திருக்கீங்க. ஏதோ, எங்களால் முடிந்ததை செய்திருக்கோம். அதற்குப் போய் பணம் தந்துட்டு’’ என்றுவிட்டு, ஐ’க்கு ஒரு மிட்டாய் எடுத்துத் தந்தார்.
ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இன்னொரு பக்கம் சங்கடமாகவும் இருந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் மனத்தார, ”நன்றி’’ கூறிவிட்டு, இன்னும் கொஞ்சம் நேரம் அவரோடும், அவர் பேத்தியோடும் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்த கடற்கரையையும், வரிசையாக அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளையும், ஓரிடத்தில் மீனவ இளைஞர்கள் நால்வர் வட்டமாக நின்றுகொண்டு எதையோ தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தபடி வந்து, அடுத்துப் புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் ஏறி யாழ்ப்பாணம் வந்தோம்.
அடுத்த நாள் ஊருக்குக் கிளம்புவதால் இன்னும் வாங்க எண்ணியிருந்த சில பொருட்களை அங்கிருந்த வணிக வளாகத்தின் தரை தளத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் போய் வாங்கிக்கொண்டு, ‘இலங்கையின் புகழ்பெற்ற ஒடியல் கூழ் எங்கேயாவது கிடைக்குமா?’ என்று தேடி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அலைந்து திரிந்துவிட்டு, எங்கும் கிடைக்காததால் மருத்துவமனை எதிரே இருந்த ஓர் உணவகத்தில் மதி ஆவளோடு உண்ண விரும்பிய ‘சிலோன் பரோட்டா’ வாங்கி உண்டுவிட்டு, சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தோம்.
அப்போது எங்களோடு கொழும்புத்துறையில் பருகிய விலை மதிப்பற்ற தேநீரின் சுவையும், அதை யாரென்று தெரியாத எங்களுக்குப் போட்டுத் தந்த அவ்வெளிய அம்மாவின் அன்பும் வந்தன.
*