அரம்பு போற்றுதும் – 029 :  வெங்காயத் தண்ணி

மே 14, 2026

*

நாம் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ அதை பல நேரங்களில் ஐ கேட்கமாட்டான் என்றாலும், மிகச் சில நேரங்களில் மட்டும் அரிதாக; அதிசயமாகக் கேட்பதுண்டு. முன்னதற்கு உதாரணமாக, குப்பைகளை எடுத்துப் போய் சமையலறை கழுவும் தொட்டியில் (wash basin) போடுவதையும், சாப்பிடும்போது நடுநடுவில் படுப்பதையும், யாராவது உறங்கிக்கொண்டிருந்தால் போய் அவர்களது இமைகளைத் திறந்து பார்த்து சிரிப்பதையும், பின்னதற்கு உதாரணமாக, புத்தகங்களை எடுத்து கிழிக்காமல் விதவிதமாக வைத்து விளையாடுவதையும் சொல்லலாம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வீட்டிலிருக்கும் 25 லிட்டர் தண்ணிர் கேனுக்குள் எதையாவது போட்டுவிட்டு சிரிப்பதை நோக்காகக் கொண்டிருந்தவன், அவ்வப்போது அதனைத் திறந்து தண்ணிர் சாய்த்துவிட்டு மூடும் அரை நிமிட நேரத்தில் எங்களது தடுப்பையும் மீறி கரண்டி, எழுதுகோல்… போன்றவற்றைப் போட்டு அதில் சிறு வெற்றியும் கண்டுவந்தான்.

இதுவரை அதனால் பிரச்சினை என்று எதுவும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு எப்படியோ அதற்குள் ஒரு வெங்காயத்தை அதுவும், லேசாகக் கெட்டுப்போயிருந்ததை போட்டுவிட்டான். உடனே எடுத்துவிட்டால் சரியாகிவிடும் என நினைத்து எவ்வளவோ முயன்று பார்த்தோம். முடியவில்லை.

இத்தனைக்கும் அப்போதுதான் சென்று கஷ்டப்பட்டு பிடித்துத் தூக்கி வந்திருந்தேன். ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும் வெளிக்காட்டாமல் கோபமுகம் காட்டிப் போய் நடுவீட்டில் விளையாடிக்கொண்டிருந்தவனைக் கூட்டிவந்து அதட்டும் குரலில் கேட்டேன். ”எதுக்குடா, வெங்காயத்த உள்ள போட்ட?’’

சிரித்துக்கொண்டு, ”வெங்காயத் தண்ணி’’ என்றான்.

இன்னும் கடுகடுப்புடன் முகம் காட்டி கேட்டேன். ”சிரிக்காம ஒழுங்கா சொல்லு.’’

உடனே சிரிப்பை மறைத்துக்கொண்டு மென்குரலில் அதாவது, பயந்த குரலில், ”வெங்காயத் தண்ணி’’ என்றான்.

வேறு வழியில்லாமல் அடக்கினச் சிரிப்பை சில நொடிகளுக்கு மட்டும் வெளிக்காட்டிவிட்டு, திரும்பவும் கண்டிப்பானக் குரலுக்கு மாறி, ”இனிமே உள்ள எதையும் போடக்கூடாது, செரியா?’’ என்றேன்.

வேகமாகத் தலையாட்டி, ”சரி’’ என்றான்.

பிறகு மொத்த நீரையும் ஊற்றிவிட்டு நன்றாக ஒருதடவை கழுவிவிட்டுப் போய் மறுபடியும் புதிதாக நீர் பிடித்துக்கொண்டு வந்தேன்.

இவை அனைத்தையும் ஒன்றும் நடக்காத மாதிரி ஓர் ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்தவன், கேன் கொண்டுவந்து வைத்ததும் சத்தமின்றி நிழல் போல பின்னால் வந்து நின்றான்.

நானும் அவனுக்குத் தெரியாமல் வேறு எங்கோ பார்ப்பது போல கையில் என்ன வைத்திருக்கிறான் என்று பார்த்தேன். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து வந்த பாவக்காய்.

‘சரிதான், இனி இவன் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான். நாமதான் கொஞ்சம் கவனமா திறந்து மூடணும்’’ என்று சொல்லிக்கொண்டு, திரும்பி அவனைப் பார்த்து முகத்தை சற்று வியப்பாக வைத்தபடி இப்படிச் சொன்னேன்.

”டேய் ஐ பப்பு… அப்பா ரூம்ல ஒரு பெரிய புக்கு இருந்துச்சில்ல. அதுல இருந்த பட்டாம்பூச்சிலாம்… கூட்டமா பறந்து வெளியே வந்துர்ச்சிடா. வேகமா ஓடிப்போய் பாத்துட்டு வர்றியா?’’

உடனே ஆர்வ மிகுதியில் தலையாட்டி கையில் வைத்திருந்த பாவக்காயை கீழேப் போட்டு ஓடிப்போய் அவன் பார்த்துவிட்டு வருவதற்குள், கேனை சாய்த்து நீர் ஊற்றிக்கொண்டு பத்திரமாக மூடிவிட்டோம். கூடவே, மறக்காமல் அவன் போட்டுவிட்டுப் போன பாவக்காயையும் எடுத்து மறைத்து வைத்துவிட்டோம்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=