அரம்பு போற்றுதும் – 026 :  சறுக்கு கதை வேணும்

மே 01, 2026

*

காலை பத்து மணி இருக்கும். துணியெல்லாம் துவைத்துக் குளித்துவிட்டு, ஒரு சூடானத் தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு எனது எழுத்து மேசையில் வந்து ஆசுவாசமாக உட்கார்ந்து, படிப்பதற்காக வைத்திருந்த நூல்களில் கரு.ஆறுமுகத்தமிழனின் ‘உயிர் வளர்த்த திருமந்திரத்தை’ எடுத்து புரட்டத் தொடங்கினேன்.

இன்னொரு பக்கம் இவை யாவற்றையும் பார்த்தும் பார்க்காமல், சற்று தள்ளி சுவரோரமாக இருந்த தனது சறுக்கில் சுண்ணத்துண்டு (Chalk piece) வைத்து மிகத் தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்த; கிறுக்கிக்கொண்டிருந்த ஐ, அதனை முடித்துவிட்டு வந்து எனது தொடையில் தட்டி, ”அப்பா’’ என்று கூப்பிட்டான்.

அது நான் எதிர்பார்த்த அழைப்புதான் என்பதால், உள்ளுக்குள் சிரித்தபடி திரும்பிப் பார்த்து, ”என்ன பப்பு?’’ என்று கேட்டேன்.

”இங்க வா.’’

”எங்க சாமி?’’

”அங்க” தனது பின்னால் இருந்த சறுக்கை காட்டிச் சொன்னான்.

புத்தகத்தை மூடாமல் அப்படியே மேசையில் வைத்து, அதன்மீது இன்னொரு பனுவலை எடுத்து எடைக்காக வைத்துவிட்டு எழுந்து, ஒரு கையில் தேநீரோடு சறுக்கு அருகில் போனேன்.

”கீழ ஒக்காரு.’’

உட்கார்ந்தேன்.

”சறுக்கு கத வேணும்.’’

”அப்பா டீ குடிக்கறன்ல்ல… நீ சொல்லு, பப்பு. அப்பா டீ குடிச்சிட்டு… அப்பறம் சொல்றன்.’’

”இல்ல, அப்பா சொல்லு.’’

‘சரி, இவன் விடமாட்டான்’ என்று மெல்லிதாக தலையாட்டிச் சிரித்துவிட்டு, எப்போதும் கூறும் சறுக்கு கதையை சொல்லத் தொடங்கினேன். ”ஒரு நாள் ஐ பாப்பாவுக்கு, ரண்டாவது பொறந்தநாள் வந்துச்சில்ல…’’

உடனே தன் வலது கையால் என் வாயை மூடி நிறுத்தியவன், தனது இன்னொரு கையால் சறுக்கை தொட்டுக் காட்டி, ”இந்த சறுக்கு கதை வேணும்’’ என்றான்.

அதாவது, சறுக்கு முழுக்க அவன் இவ்வளவு நேரமாக சுண்ணத்துண்டு கொண்டு எழுதிய; கிறுக்கிய கதையை நான் படித்துச் சொல்ல வேண்டுமாம்.

மனத்துள், ‘பயபுள்ளக்கிட்ட இன்னிக்கி நல்லா மாட்டிக்கிட்டோம்’ என நினைத்துக்கொண்டு, அதிலிருந்து அத்தனை எளிதாக தப்பிக்க முடியாது என்று தெரிந்தும் வெறுமே சொல்லிப் பார்த்தேன். ”ஐ பப்பு… இது நீ எழுதின கதைதான. அதனால நீயே படிச்சி சொல்லு, சாமி. அப்போதான் நல்லாருக்கும்.’’

சட்டென்று இரண்டு கைகளையும் உதறி அடம்பிடித்தவன், ”அப்பா சொல்லு’’ என்றான்.

‘சரி, வேறு வழியில்லை’ என்று எண்ணிக்கொண்டு, அவன் எழுதியதை; கிறுக்கியதை பெரும் சிரத்தையோடு படிப்பதாக பாவனை காட்டி இவ்வாறு கூறத் தொடங்கினேன். ”ஒருநாள் என்னாச்சி தெரியுமா?……….’’

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=