ஈழம் அன்ன ஈழம் – 4 : கீரிமலை, மாவிட்டபுரம்

இரவு நன்றாக உறங்கி காலையில் எப்போதும் போல சீக்கிரமாகவே எழுந்துவிட்டேன். நாங்கள் இருவர் மட்டுமே ஐ’யை பார்த்துக்கொள்வதால் இருந்த மிகுதியான நேரம் குறைந்து மிகக் குறைவான நேரமே எழுதவும் படிக்கவும் கிடைத்தன. ஆகையால் என்ன செய்வது என யோசித்து, கடந்த செப்டம்பர் தொடங்கி நான்கு மணிக்கு எழுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
முதல் சில தினங்கள் கடினமாக இருந்தாலும் போகப் போகப் பிடித்துப்போய், இப்போது அது பழக்கமாகவும் மாறிவிட்டது. எனினும் பயணங்களின் போது மட்டும் தவிர்க்கலாம் என நினைத்ததற்கு மாறாக, இலங்கையின் முதல் விடிகாலையிலும் தூக்கம் களைந்து விழித்துவிட்டேன்.
யாவரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். எழுந்து சத்தம் போடாமல் மெதுவாக ஓய்வறைக்குச் சென்று பல் துலக்கி முகம் கழுவிவிட்டு வந்து, எங்கள் அறைக்கு முன்பாக இருந்த வரவேற்பறையில் ஒரு சிறு மின் விளக்கைப் போட்டு உட்கார்ந்து படிப்பதற்காக கொண்டு போயிருந்த அ.முத்துலிங்கத்தின் ‘நாடற்றவன்’ கட்டுரைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினேன்.
பயணங்களில் வாசிப்பை அறவே தவிர்ப்பதுண்டு. ஆனால், இது நீண்ட நாள் பயணம் என்பதால் நிறைய நேரம் கிடைக்கும்; சூழலுக்கு ஏற்ப வாசிக்கப் பயன்படுத்தலாம் என எண்ணி இரண்டு புத்தகங்களை மட்டும் உடன் எடுத்துப் போயிருந்தேன்.
ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கும். நண்பரும் அவர் மனைவியும் எழுந்து வந்து நான் எப்போதோ விழித்து தன்மறந்து வாசிப்பதை பார்த்துவிட்டு, ஒரு தேநீர் போட்டுத் தந்தார்கள்.
இலங்கையின் தேநீர் என்பது மூன்று வகையானவை. ஒன்று, பால் பவுடர் கொண்டு போடுவது. இதைதான் மிகுதியானோர் பருகுகிறார்கள்; அதிகமாகவும் கிடைக்கும். குறிப்பிட்டு சொல்லாமல் நம்மூர் மாதிரி தேநீர் என்று சொன்னால் இதுதான் தருவார்கள். இரண்டாவது, பால் கலந்தது. அரிதாக எங்கோதான் கிடைக்கும். இந்தியாவிலிருந்து வந்திருப்பதால் எங்களுக்காக பால் வாங்கி போட்டிருந்தார்கள். மூன்றாவது, பிளைன் டீ என்று சொல்லக்கூடிய பாலில்லாதது. பால் பவுடருக்கு அடுத்தபடியாக இதையே குடிக்கிறார்கள்.
தேநீர் குடித்துவிட்டு தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் எழுந்து வந்த மதியும் தேநீர் பருகியபடி அருகில் வந்து உட்கார்ந்து, அங்கிருந்த புத்தகங்களில் நா.முத்துக்குமாரின் ‘வேடிக்கை பார்ப்பவன்’ எடுத்து வாசிக்கத் தொடங்கினாள்.
ஐ எழும் வரைக்கும் படித்திருந்துவிட்டு, அவன் எழுந்ததும் கூட்டிக்கொண்டு ரயில் தண்டவாளம் ஒட்டிய சாலை வழியாக அருகில் இருந்த கிராமம் வரைக்கும் காலை நடை போய்விட்டு, ஒரு மணி நேரம் கழித்து வந்தோம்.
ஐ பிறந்தது முதல் யார் வீட்டிலும் இரவு தங்கியதில்லை. அதனால் எப்படி இருப்பானோ என பயந்துகொண்டிருந்தோம். ஆனால் அவனோ, நினைத்ததற்கு மாறாக எல்லோருடனும் பேசி விளையாடிக்கொண்டு சமத்தாகவே இருந்தான்.
நண்பரும் அதைதான் சொல்லியிருந்தார். ”இங்கே குழந்தைகள் இருப்பதால் பயப்பட வேண்டாம். அவன் எளிதாக இருந்திடுவான்.’’
மதிய உணவுக்குப் பிறகு அருகில் இருக்கும் புராதன சிவாலயங்களுள் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரம் போனோம். இது இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆலயங்களுக்கு நிகர் பழமையானதாகவும், இந்தியாவின் காசி, ராமேஸ்வரம் போன்று பிதிர்க்கடன் தீர்க்கும் ஒரே இடமாகவும் கூறப்படுவது.
‘விஜயன் என்னும் அரசன் இந்தியாவிலிருந்து வந்து தனது அரசாட்சியை தொடங்கும் முன்பாக, தன் அரசுக்குப் பாதுகாப்பாக நான்கு திக்கிலும் நான்கு சிவாலயங்களை எழுப்பினான்’ என்கிறது யாழ்ப்பாண வைபவ மாலை. அதில் வட திக்கில் இருக்கும் இந்த நகுலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஆலயத்துள், ஆண்கள் சட்டையை கழட்டிவிட்டு வெற்றுடம்புடன் நுழையச் சொன்னார்கள்.
”இலங்கை முழுக்கவே இதுதான் வழக்கம்’’ என்றார் நண்பர்.
”சரி’’ என்று முகம் சுழித்தபடி கழட்டிவிட்டு உள்ளே சென்றால், ‘கொடி மரம் தாண்டிப் போக அனுமதி இல்லை’ என்றார்கள்.
சுமார் நாற்பதடி தூரத்தில் இருந்துதான் உள்ளிருக்கும் நகுலேஸ்வரரை பார்க்க முடிந்தது. ஐந்தரை அடி உயர லிங்கம். இலங்கையின் மிகப் பெரிய லிங்கமாக சொல்கிறார்கள்.
அடுத்து தென் வாசலில் நின்ற கோலத்திலிருக்கும் நகுலாம்பிகையையும், அதற்கடுத்து தெற்கு நோக்கின ஆலமர் செல்வனையும், பின்புறம் இருக்கும் லிங்கோத்பவரையும், வடக்கு நோக்கின துர்க்கையையும் வணங்கியபடி சுற்றி வந்தோம்.
தமிழ்நாட்டுக் கோயில்கள் போல பிரமாண்டமாக இல்லாமல் சிறிதாகவே இருந்தது. அதோடு, கேரள பாணியில் மரங்களையும், ஓடுகளையும் அதிகமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அடுத்ததாக, கோயிலில் அவ்வளவாக ஆட்களே இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், பழமையான கோயிலுக்கான எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்தது.
இலங்கையில் நாங்கள் பார்க்கும் முதல் கோயில் என்பதால், என்னென்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என ஒவ்வொன்றாக உண்ணிப்பாகப் பார்த்துக்கொண்டு வந்தோம். மொத்த கோயிலிலேயே மகா மண்டபத்தின் தனிச்சன்னதியில் இருந்த நடராசர் சிலை மட்டும்தான் தனித்துவமான ஈர்க்கும் விதத்தில் இருந்தது. பொதுவாக நடனம் ஆடும் கோலத்தில் தலைமுடி விரித்திருப்பதற்கு பதிலாக, முடித்து கிரீடம் சூடிய நிலையில் ஆனந்த நடனம் புரிவது அத்தனை அழகாக இருந்தது.
அதனைச் சுட்டிக் காட்டி வணங்கியதும், ஐ சொல்லாமலேயே கை கூப்பி வணங்கினான். மதி வழக்கம் போல மனத்துக்குள் ரகசியமாகக் கும்பிட்டாள்.
பிறகு வெளியில் வந்து அங்கிருந்த மண் பரப்பில் நின்று புதிதாகக் கட்டியிருக்கும் கோபுரத்தையும், தல விருட்சமான ஜம்பு நாவல் மரத்தையும், அருகில் சற்று தள்ளி சிதிலுற்றிருக்கும் முது கட்டடங்களையும் பார்த்துவிட்டு, சிறிது தொலைவில் இருக்கும் கண்டகி தீர்த்தம் என்னும் கேணியை பார்க்கப் போனோம்.
சிவபெருமானால் சபிக்கப்பட்டு கீரிமுகம் அடைந்த யமதக்னி என்னும் முனிவர், இந்நன்னீரூற்றில் தீர்த்தமாடி இங்குள்ள சிவனை வழிபட்டு தன் கீரி முகம் மாறப் பெற்றதாலும், சுற்றிலும் இருக்கும் கிராமங்களை விட இங்குள்ள நில மட்டம் சற்று உயர்ந்திருப்பதாலும் இந்த இடத்துக்கு ‘கீரிமலை’ எனப் பெயர் வந்ததாக கர்ண பரம்பரை கதை சொல்கிறது.
கூடவே, மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ இளவரசி கி.பி எட்டாம் நூற்றாண்டில் இங்கு தீர்த்தமாடி தனக்கிருந்த குதிரை முகம் மாறப் பெற்றதாகவும், ராமன், ராவணன் முதலான பலர் வந்து நீராடி சாப விமோசனம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அலை ஆர்ப்பரிக்கும் அழகிய கடற்கரையோரத்தில் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கேணியில் பலர் குளித்துக் கொண்டிருந்தார்கள். அத்தனைத் தெளிவாக இருந்தது நீர்.
பொதுவாக இங்குள்ள கடல் நீரை புனிதமானதாகவும், அதில் குளிப்பது ஆன்மீக ரீதியாக நன்மை பயக்கும் என்றும் நம்பப்படுகிறது. காரணம், கடல் நீரில் உள்ள கனிமங்கள் சருமத்திற்கு நன்மை அளிப்பதோடு, உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இலங்கையின் வட முனையாக சொல்லப்படும் இடத்தில் நின்றுகொண்டு, கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் தெரிந்த பசுந்நீலப் பெருங்கடலை பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
அருகில் ஆறுமுக நாவலருக்கு அழகான சிலை ஒன்று அமைத்திருந்தார்கள். சைவத்துக்குப் பேர் போன இலங்கையில் அவர் சிலை இல்லையென்றால்தான் அதிசயம் என்று எண்ணிக்கொண்டு, அங்கிருந்த பூங்கா ஒன்றின் ஊஞ்சலில் ஐ’யை சிறிது நேரம் உட்காரவைத்து ஆட்டிவிட்டு, பின் சற்று தூரத்தில் கோயிலை ஒட்டி சிதைந்து போய் தொல்லியல் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறாப்பர் மடத்தை கண்டுவிட்டு, சிவனை வணங்கி நோய் தீர்க்கவும்; பிதிர்க்கடன் தீர்க்கவும் வந்திருந்தோரையும், சாலையின் இரு மருங்கும் இருந்த கடைகளையும் பார்த்துவிட்டு, அங்கிருந்த பேராலமரம் ஒன்றின் அடியில் போய் நின்றிருந்தோம்.
பின்னால் தன் மகனோடு வந்து நின்ற நண்பர், ”தேநீர் அருந்தலாமா?” என்று கேட்டார்.
மகிழ்வோடு ”சரி” என்றோம்.
அருகிலிருந்த கடையில் ஒரு தேநீர் விலை 250 ரூபாய் என்றார்கள். அதுவும், பால் பவுடர் போட்டதுதான். நம் இந்திய மதிப்பில் சுமார் 75 ரூபாய். விலையை கேட்டதும் குடிக்கும் எண்ணமே போய்விட்டது. ”வேண்டாம்’’ என்றோம்.
நண்பர் சிரித்துக்கொண்டே, ”இந்திய ரூபாயை மனத்தில் வைத்து பயப்படாதீர்கள்’’ என்றார்.
”சரி’’ என்றுவிட்டு, இலங்கையின் விலைவாசி உயர்வு குறித்து பேசிக்கொண்டு சுரத்தில்லாத அந்தத் தேநீரைப் பருகினோம்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு வரும் வழியில் போரால் பாதிப்புக்குள்ளாகி கைவிடப்பட்டிருந்த சிமிண்ட் தொழிற்சாலையையும், இன்ன பிற இடிபாடுகளையும் வருத்தத்தோடு பார்த்துக்கொண்டு, பழமை மிக்க மாவிட்டபுரம் -கந்தசாமிக் கோயிலுக்குப் போனோம். எங்களைத் தவிர ஒருவர் கூட அங்கே இல்லை.
உள்ளே கருவறையில் இருக்கும் மூலவரான முருகன் வள்ளி தெய்வானை சிற்பம் ஒரே கல்லில் அழகாக செதுக்கப்பட்டது என்று எங்கோ படித்ததாக நினைவு. கொடி மரத்தருகே நின்று பார்த்ததால் சரியாகத் தெரியவில்லை. அத்தோடு, தொன்மையான கோயில் போன்று இல்லாமல் அண்மையது மாதிரியே இருந்தது.
ஏமாற்றதோடு ஒரு சுற்று சுற்றிக்கொண்டு, இரு புறமும் இருந்த மா முதல் மூங்கில் வரையான மரம் செடி கொடிகளை பார்த்துவிட்டு, அருகில் புதிதாகக் கட்டியிருக்கும் சிவபூமி திருக்குறள் வளாகத்துக்குப் போனோம். சென்னை – வள்ளுவர் கோட்டம் போன்ற முயற்சி என்றார்கள்.
நாங்கள் போன நேரம் மூடியிருந்ததால், ‘பிறகு ஒருநாள் வருவோம்’ என்று அங்கிருந்து கிளம்பி, ஆறுமுக நாவலர் பற்றியும், அவரது சைவ மற்றும் தமிழ்ப் பணிகள் குறித்தும் பேசிக்கொண்டு, சுன்னாகம் அடுத்துள்ள மருதனார்மடம் சந்தைக்கு காய்கறி, பழங்கள் வாங்கப் போயிருந்தோம்.
நம்மூரில் இருக்கும் அதே தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கேரட் எல்லாமும் இருந்தது. ஆனால், அவற்றின் வடிவம் சற்று மாறி இருந்தது. அதாவது, சற்று செழிப்பாகவும், சிலது வண்ணம் மாறியும். கூடவே, இதுவரை பார்த்திடாத கெக்கேரிக்காய், ஈரப்பலா, நீட்டுப் பூசனிக்காய், கப்பல் வாழைப்பழம் போன்றவற்றையும் பார்க்க முடிந்தது.
சட்டென்று வானம் கருத்தது. மழை கொட்ட ஆரம்பிப்பதற்குள் ஒருவாறு சுதாரித்து காரில் ஏறி வீட்டுக்கு வந்து, முதல் வேலையாக ஒரு நல்ல தேநீர் போட்டு பருகிவிட்டு, குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தோம்.
பிறகு ஏழு மணி வாக்கில் கிளம்பி, அருகில் ஐந்து வீடுகள் தள்ளியிருக்கும் உறவினர் வீட்டுக் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள் விழாவுக்கு, மெல்லிதாகத் தூறும் மழையில் நனைந்தும் நனையாமல் போனோம்.
இலங்கையில் கலந்துகொள்ளும் முதல் விழா. சுமார் நூறு பேர் வந்திருந்தார்கள். மலையாள சினிமாவில் பார்த்தது போல மரஞ்செடிகொடிகளுக்கு நடுவே இருக்கும் வீட்டில் மின் விளக்கு அலங்காரம், சினிமாப் பாட்டு என்று கொண்டாட்டமாக இருந்தன.
சென்று கூட்டத்துக்குள் காலியாக இருந்த இடங்களில் அமர்ந்துகொண்டோம். எங்களைப் பார்த்ததுமே அந்நிலத்துக்குப் புதியவர்கள் என்பதை எளிதாகக் கண்டுகொண்டார்கள்.
நாங்களோ எதையும் பொருட்படுத்தாமல் அங்குள்ளோரின் முகங்களையும், அவர்களது பேச்சையும், உடைகளையும், பிறந்தநாள் நிகழ்வையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
கேக் வெட்டும்போது அங்குள்ள சிறுவர்களை எல்லாம் மேடைக்கு வரச் சொன்னார்கள். ஐ’யை கூட்டிப் போனாள் மதி.
மேடையில் குழந்தைகளோடு குழந்தையாய் நின்று, அவர்கள் தந்த பரிசுப் பெட்டியை வாங்கி வந்து என்னிடம் நீட்டி, ”இந்தா’’ என்று பெருமை பொங்கச் சிரித்தான் ஐ.
மகிழ்வோடு பெற்றுக்கொண்டு, ”வெரி குட், பப்பு’’ என்று தோளில் தட்டிக்கொடுத்தேன்.
பிறகு எல்லோரோடும் சேர்ந்து மேடைக்கு சென்று, ஐ கையால் பிறந்தநாள் குழந்தைக்கு ‘மகவே வருக’ நூலினை பரிசாகத் தந்துவிட்டு, அங்கிருந்த வீட்டுக்குள் அமர்ந்து இடியாப்பம், கோழிக்கறி, கொத்து பரோட்டா, மாசிக் கருவாடு மசியல் என ருசித்து உண்டுவிட்டு, தூவிக்கொண்டிருந்த பொடி மழையில் விரும்பி நனைந்தபடி வீட்டுக்கு வந்தோம்.
வயிறார உண்டதாலா இல்லை, காலையிலிருந்து சுற்றித் திரிந்ததாலா, தெரியவில்லை. படுத்ததும் பேருறக்கம் வந்து கண்களைத் தழுவிக்கொண்டது.
[இன்னும்]