அரம்பு போற்றுதும் – 027 : டி பாப்பாவுக்கு பொட்டு வை

மே 07, 2026
*
ஐக்கு கண்ணூறு கழிப்பதற்காகவே நாங்கள் புதிதாக ஒரு பாடல் இயற்றி, அதற்கென ஒரு முறைமையையும் உருவாக்கி வைத்திருக்கிறோம்.
அதாவது, இன்ன தினம் என்று இல்லாமல் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள், இரவு உறங்கப்போகும் முன்பாக ஐயையும் மதியையும் நடுவீட்டில் ஓர் இடத்தில் உட்கார வைத்துவிட்டு நானோ அல்லது ஐயையும் என்னையும் உட்கார வைத்துவிட்டு மதியோ போய் திருநீறு வைத்திருக்கும் சிறிய தட்டில் கற்பூரம் ஏற்றி எடுத்து வந்து,
‘ஊரு கண்ணு –
உறவு கண்ணு –
நாய் கண்ணு –
நரி கண்ணு –
எல்லா கண்ணும் பட்டுப் போயிடனும்…
பேயி கண்ணு –
பிசாசு கண்ணு –
காத்து கண்ணு –
கருப்பு கண்ணு –
எல்லா கண்ணும் விட்டுப் போயிடனும்…
ஊரு ஒலகுல –
உள்ள சாமி எல்லாமே…
வந்து காத்துடவேணும் –
எங்க தங்கப் பாப்பாவ…
வானு மண்ணுல –
வாழும் தெய்வம் எல்லாமே…
சுத்தி பாத்துக்கவேணும் –
எங்க வைரப் பாப்பாவ…
(ஊரு…)’
*
என்ற கண்ணூறு பாடலை பாடியவாறு இருவருக்குமாக ஒருசேர இடப் பக்கமிருந்து வலமும், வலப்பக்கமிருந்து இடமுமாக மும்மூன்று தடவை சுற்றிவிட்டு, எடுத்துப்போய் வாசலில் கற்பூரத்தை மட்டும் தள்ளிவிட்டு வந்து பொட்டு வைப்போம்.
இதை எங்களை விட ஐ பெரிதாக ரசித்து மகிழ்பவன் என்பதால், அவ்வப்போது அவனாகவே வந்து, ‘ஊரு கண்ணு வேணும்’ என்று கேட்பதை வாடிக்கையாக வைத்திருப்பான்.
இன்று அவ்வாறு அவன் கேட்டதும் எங்கள் இருவரையும் வழக்கமான இடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு மதி போய் கற்பூரம் ஏற்றி எடுத்து வந்தாள்.
அதற்குள் ஐ ஓடிப்போய் தன் பொம்மைகளுக்கு நடுவில் இருந்த கரடி பொம்மையான ‘டி பாப்பா’வை எடுத்துவந்து மடியில் வைத்துக்கொண்டு, அதற்கும் சேர்த்து சுற்றச் சொன்னான்.
”சரி’’ என்று மதியும் சுற்றினாள்.
அதன் பிறகு பொட்டு வைக்கச் சொன்னான். அதையும் செய்தாள்.
அதோடு முடிந்ததா? என்றால், இல்லை.
கூடாரம் போட்டு படுப்பதற்காக உள்ளே போனபோது கூடவே அதையும் எடுத்துப்போய், எப்படி பால் கொடுத்து தாலாட்டு பாடி மதி அவனை தூங்க வைப்பாளோ அதேபோல, அவனும் அதனை பக்கத்தில் படுக்கவைத்து தாலாட்டு பாடி தூங்க வைத்தான்.
இதுவரை நடந்ததுகூட பரவாயில்லை. அவன் அப்பொம்மையை படுக்கப்போட்டு தூங்க வைத்தது எனது படுக்கையில். அதற்கு போர்த்திவிட்டது என் போர்வையை. ஆக, அவன் தூங்கும் வரை உள்ளே சென்று எடுத்துவிட்டு நான் தூங்க முடியாது.
எனவே, வேறு வழியின்று அவன் சீக்கிரம் உறங்குவதற்காக எல்லாம் வல்ல இயற்கையாளை வேண்டிக்கொண்டு, நான் மட்டும் தனியாக எனது அறைக்குள் உட்கார்ந்து முட்ட முட்ட விழித்துக்கொண்டு, ஊரெல்லாம் உறங்கிக் குறட்டைவிடும் இந்நள்ளிரவு வேளையில் இதோ, இந்தப் பதிவை எழுதிவிட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வெகுநேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
*