அரம்பு போற்றுதும் – 031 : வரி விட்டு வரி பாடுவது

மே 28, 2026
*
ஐக்கு நகர்பேசியில் பாடல் போட்டுக் காட்டுவதை ஆரம்பத்திலிருந்து தவிர்த்து வந்தோம். இடையில் எப்படியோ பழகிக்கொண்டவன், அவ்வப்போது நகர்பேசி கேட்டு அடம் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். நாங்களும் மாற்ற எவ்வளவோ முயன்றோம். முடியவில்லை.
அதற்கடுத்த மாதங்களில் இலங்கைக்கு சென்று வந்ததில் இருந்து அந்தப் பழக்கத்தை தானாகவே மறந்துவிட்டான். இருந்தாலும் அவனுக்கு அடிக்கடி இல்லாமல் வாரத்தில் சில தினங்களில் மட்டும் அதுவும், எனது மடிக்கணினியில், கொஞ்ச நேரத்திற்கு சிறார் பாடல்களை தேர்ந்து போட்டுக் காட்டுவோம். அவனும் தன்மறந்து ஆர்வத்தோடு பார்த்தும்; கேட்டும் கொண்டிருப்பான்.
இந்நிலையில் இன்று தற்செயலாக அவன் பார்க்க; கேட்கக் கூடிய பாடல்களில் இருந்து ஒரு பாடலின் முதல் வரியை மட்டும் பாடினேன். உடனே, அவன் அதன் அடுத்த வரியை பாடினான்.
இதை சற்றும் எதிர்பாராத நாங்கள் மெல்லிதாகச் சிரித்துக்கொண்டு, அதற்கடுத்த வரியை பாடினோம். அவனும் அதற்கடுத்த வரியை பாடினான். இப்படியே முழுப் பாடலையும் பாடி முடித்தோம்.
இதற்கு முன்பு வரை அவனிடம் ஏதாவது ஒரு பாடலை பாடச் சொன்னால் வெறுமே, ”ஆ….. ஆ……….’’ என்றுதான் பாடுவான்.
நாங்களும், ‘இவன் என்னடா எப்பப் பாரு பாட்டு வரியப் பாடாம… ஆ…. ன்னு மட்டும் பாடிட்டு இருக்கான்’ என்று நினைப்பதுண்டு.
ஆனால், இன்று அவனது பாட்டுப் பாடும் ரகசியத்தைக் கண்டறிந்த பிறகு, இதையே அவன் அடிக்கடி கேட்கும் எல்லாப் பாடலுக்கும் பொறுத்திப் பார்த்தோம். நினைத்தது போல அனைத்துப் பாடல்களின் ஒன்றடுத்த ஒரு வரியை பாடினான்.
‘சரி, முதல் வரிக்கு பதிலாக இம்முறை இரண்டாவது வரியை பாடுவோம்’ என்று பாடினால், அவன் அதற்கடுத்த வரியை அதாவது, மூன்றாவது வரியை பாடுகிறான். ஆக, அவனுக்குப் பாடலின் எல்லா வரிகளும் தெரிகிறது. வேண்டுமென்றேதான் இப்படிப் பாடுகிறான் என்பதை அறிந்துகொண்டோம்.
அதற்கடுத்து, ‘என்ன செய்கிறான்?’ எனப் பார்ப்பதற்காக வரிகளில் சில வார்த்தைகளை மட்டும் மாற்றிப் பாடினேன்.
உடனே, ”அம்மா… அப்பா பாட்டு மாத்திப் பாடறாங்க’’ என்று புகார் சொன்னான்.
‘சரி, சொல்லட்டும்’ என்று அடுத்ததாக பாடலில் அவனையும் பங்குபெறச் செய்ய சில இடங்களில் அவன் பெயரையும், அவன் செய்யும் சேட்டைகளையும் உள்வைத்துப் பாடினேன்.
கேட்டதும் மகிழ்ந்து சிரித்தவன், அதற்கடுத்த வரியை அதுவும், தன்னைச் சேர்த்து வழக்கம்போல பாடினான்.
ஆக, அவனது பாட்டு ரகசியத்தை முழுவதுமாகக் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் அப்படியே அவனை அள்ளி ஓர் ஆசை முத்தம் ஈந்துவிட்டு, என் கன்னத்தைக் காட்டினேன்.
பதிலுக்கு முத்தம் ஈவான் என்று பார்த்தால், இடுவது போல கிட்டே வந்து ஒரு கடி கடித்துவிட்டு ஓடிவிட்டான்.
நான் பாட்டுக்கு எதுவும் நடக்காதது போல இம்முறை வேண்டுமென்றே பாடலின் நடுவில் இருக்கும் ஐந்தாம் வரியை பாடத் தொடங்கினேன்.
*