அரம்பு போற்றுதும் – 032 : வயிரெழுத்து

ஜூன் 04, 2026
*
பென்சிலில் ஆரம்பித்து பேனா, ஸ்கெட்ச் என எது கிடைத்தாலும் எடுத்து தரை தொடங்கி சுவர் வரைக்கும் கிறுக்கோ கிறுக்கென்று கிறுக்கி [எழுதி; வரைந்து] வந்த ஐ, இன்று ஒரு பூனை போல பின்னால் வந்து நின்று, நான் எழுதுவதை பார்ப்பது மாதிரி சில நொடிகள் நடித்துவிட்டு, எட்டி மேசையில் வைத்திருந்த பேனாவில் ஒன்றை எனக்கு தெரியாமல் எடுப்பதாக நினைத்து எடுத்துக்கொண்டு, மெல்லடி வைத்து புத்தக அடுக்கருகில் போய் அமர்ந்துகொண்டான்.
‘சரி, என்னதான் செய்கிறான், பார்ப்போம்’ என நடுநடுவில் திரும்பிப் பார்த்தபடி, தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன்.
முதலில் அங்கிருந்த சிறு மேசை மேல் வைத்திருந்த நோட்டை (மதி அவனுக்காகக் கொடுத்தது) எடுத்து சற்றுநேரம் எழுதிக் கொண்டிருந்தவன், பின் அதை மூடி பழையபடி இருந்த இடத்தில் வைத்துவிட்டு, தனது உள்ளங்கையில் எழுதினான்.
பிறகு என்ன நினைத்தானோ, சட்டென்று தன் வயிற்றுப் பகுதியில் எழுத ஆரம்பித்தவன், அது தந்த கூச்சத்தாலா இல்லை, தான் எழுதிய விஷயத்தாலா தெரியவில்லை, மெல்லிதாக உதடசைத்து தனக்குள் சிரித்துக்கொண்டு தீவிரமாக எழுதினான்.
வழக்கம்போல நடுநடுவே பார்த்துக்கொண்டிருந்த நான், ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு அவன் எழுதி முடிப்பதற்காக காத்திருந்தேன்.
ஓர் ஐந்து நிமிடம் எழுதியிருப்பான். ‘சரி, இதற்கு மேல் பொறுக்க முடியாது’ என்று எழுந்து சத்தம் போடாமல் அவன் அருகில் போய் உட்கார்ந்து கேட்டேன். ”ஐ பப்பு, என்ன சாமி பண்றீங்க?’’
சிறு வெள்ளாட்டுக் குட்டி தலையுயர்த்தி தாயைப் பார்ப்பது போல பார்த்தவன், ”ஐ பாப்பா எழுது’’ என்றான்.
”ஓ… அப்பா அங்க எழுதிட்டிருக்க மாதிரி, நீ இங்க எழுதுறியா?’’
வேகமாகத் தலையாட்டி, ”ஆமா’’ என்றான்.
”சரி, எங்கே எழுதியிருக்க அப்பாவுக்குக் காட்டு.’’
”இங்க’’ வயிற்றைத் தொட்டுக் காட்டிச் சொன்னான்.
உடனே முகத்தை வியப்பாக மாற்றி, அதில் பாதியை குரலிலும் கடத்தி, ”வாவ்’’ என்றுவிட்டு கேட்டேன். ”ஏன் சாமி, நோட்டுல எழுதாம… வயித்துல எழுதியிருக்க?’’
இதை எப்படியும் நான் கேட்பேன் என முன்கூட்டி அறிந்தவன் மாதிரி மிகுந்த உற்சாகத்துடன் சொன்னான். ”வயிறு எழுத்து.’’
‘ஓ, தலையெழுத்து போல இது வயிரெழுத்தா?’ என எனக்குள் சொல்லிச் சிரித்துக்கொண்டு மேலும் ஆச்சர்யத்துடன், ”என்னது, வயிறு எழுத்தா? சூப்பர்டா, அப்பு’’ என்றுவிட்டு கேட்டேன். ”சரி, என்ன எழுதியிருக்கன்னு… அப்பாவுக்குப் படிச்சி சொல்றியா?’’
சட்டென, ”இல்ல’’ என்று தலையாட்டி, ”அப்பா படி’’ என்றான்.
‘சரியாப்போச்சி போ’ என மனக்குரலில் கூறிக்கொண்டு, குனிந்து அவன் எழுதியவற்றை ஒவ்வொன்றாக எழுத்துக் கூட்டி வாசிப்பது போல பாவனை காட்டி சொன்னேன். ”அன்புள்ள அப்பா, அம்மா… உங்களுக்குத் தெரியுமா? ஐ பாப்பா சமத்துப் பாப்பா. ஐ பாப்பா சக்கரப் பாப்பா. அப்பா அம்மா சொல்றத எப்பவும் கேட்பான்…’’
அதுவரை மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், உடனே என் வாயில் கை வைத்துத் தடுத்துவிட்டு, இன்னொரு கையில் இருந்த பேனாவால் மேலும் எதையோ எழுதிவிட்டு சொன்னான். ”அப்பா படி.’’
‘ரைட்டு. இவன் இன்னிக்கி முழுக்க இப்படித்தான் எழுதி எழுதி நம்மள படிக்க வைக்கப் போறான்’ எனப் புரிந்து சுதாரித்துக் கொண்டு, அடுத்த வரியை படிக்க முற்படுவது போல அதிலிருந்து தப்பிக்கும் மாபெரும் வழியை தேடத் தொடங்கினேன்.
*