முகங்கள் – 20 : வினாமுகர்

**
‘மலைகள் என்னும்
குறும்பற்கள்
முளைத்திராத
பூதலத்தின்
கொக்குப் போலக்
காலூன்றி
நிற்கும் மரங்கள்.
அதற்கப்பால்
எழுந்து வீழ்ந்து
தடுமாறும்
நடக்கத் தெரியாக் கடலலைகள்
யார் சென்றாலும்
விரல் நீட்டும்.’
– ஞானக்கூத்தன்
**
மனித வாழ்க்கை என்பது கேள்விகளாலும் பதில்களாலும் ஆனது. இரண்டும் பார்ப்பதற்கு வேறுவேறு போன்று இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.
எல்லாக் கேள்விகளுக்கும் பதிலுண்டு என்றபோதும் சில கேள்விகளுக்கான பதிலை காலமும் வாழ்வும் அவ்வளவு எளிதில் தந்து விடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சில கேள்விகள் பதில்கள் இல்லாமலேயே மனிதர்களோடு சேர்ந்து மறைந்துவிடக்கூடியவை.
கேள்விகள் எப்படித் தொடங்கியிருக்கும்? முதன்முதலில் மனித சமூகத்தில் எழுந்த கேள்வி எதுவாக இருக்கும்? மனித வாழ்க்கை ஏன் கேள்விகளைக் கொண்டு வாழும் இனமாக மாறியது? மற்ற உயிரினங்களில் கேள்விகள் இருக்குமா? இதுவரை உருவானக் கேள்விகள் மட்டும் சுமார் எத்தனை இருக்கும்? அது நிச்சயம் மனிதர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகத் தானே இருக்கும்? எந்தக் கேள்வி மனிதனை இவ்வளவு தூரத்திற்கு அழைத்து வந்திருக்கும்? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் மனிதன் தினந்தோறும் குறைந்தது ஒரு கேள்வியையாவது கேட்காமல் அல்லது எதிர்கொள்ளாமல் ஒருநாளைக் கடப்பதென்பது சாத்தியமில்லை என்பதுதான்.
மிகச் சாதாரணக் கேள்விகள் தொடங்கி (சாப்பாடு தயாரா?), மிக அரிய கேள்விகள் வரைக்கும் (உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு எப்போ முற்றுப்புள்ளி வைப்பாங்க?), அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இன்றைக்கு நம்முன் உள்ள கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஏதோ ஒரு கேள்வியில் ஆரம்பித்து பதில்களாக முளைத்துவந்தவையே. இவ்வரிசையில் இன்னும் பல கேள்விகள் இன்றைக்குப் பதில்களைத் தேடி பயணித்துக் கொண்டிருக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால் மனிதனின் திறமைகள் கேள்விகளைக் கொண்டுதான் அளவிடப்படுகின்றன. அது பள்ளித் தேர்வுகள் தொடங்கி கல்லூரித் தேர்வுகள், வேலைக்குச் செல்லும் இடங்கள் என எங்கு சென்றாலும்.
அதனால்தான் பிறந்து வளரும் குழந்தையிடம், ‘இது யாரு சொல்லு?’, ‘அது என்ன சொல்லு?’ என கேள்விகள் கேட்டு வருங்கால கேள்வி – பதில் வாழ்க்கைக்கு அவர்களைத் தயார்படுத்துகிறோம்.
மொத்தத்தில் கேள்வி – பதில் விஷயத்தில் எனக்கோர் ஐயமுண்டு. பதில்களே இல்லாத கேள்வியென ஒன்று உண்மையில் உண்டா? உண்டெனில், அது இன்னும் பதில் கிடைக்காத கேள்வி என்றுதானே ஆகும்?
ஆக, கேள்வி – பதில் என்னும் நீள் வலைக்குள் நுழைந்தால் இதுபோன்று இன்னும் பல கேள்விகளும் பதில்களும் வந்துகொண்டுதான் இருக்கும். காரணம், நம் மனிதமூளை அப்படியான வடிவமைப்பைக் கொண்டது. அதனால் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி… கேள்விகளையும் பதில்களையும் நம்மால் ஒருபோதும் தவிர்க்க முடியாது. ஆம்!
அப்போது நான் முதுகலை முதலாமாண்டு முடித்து விடுமுறையில் ஊரில் இருந்தேன். அன்றைய தினம் முன்னிரவில் சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக கன்னியாகுமரி செல்லும் ரயிலில் நண்பர்களுடன் சேர்ந்து சாத்தூரில் உள்ள நண்பன் வீட்டுக்கு செல்வதாக திட்டம்.
நான் சொந்த ஊரில் இருப்பதால் வழியில் விழுப்புரத்தில் ஏறிக்கொள்வதாகச் சொல்லியிருந்தேன். அதற்காக மதியம் தயாராகிக் கொண்டிருக்கும்போது தோழி ஒருவர் அழைத்து தன் அப்பாவும் தங்கையும் திருவண்ணாமலையில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு வந்திருப்பதாகவும், வாய்ப்பிருந்தால் சென்று பார்க்குமாறும் சொல்ல, சரி போகும் வழியில்தானே பார்த்துவிட்டுப் போகலாம் என நினைத்தேன்.
திருவண்ணாமலை எப்போதும் மனதிற்கு மிக நெருக்கமான ஊர். காரணம் அது எங்கள் ஊர் என்பதைத் தாண்டி… மரம் செடி கொடிகள் மலைகள் என இயற்கை எழிலுடன் விளங்கும் அதன் தோற்றம்.
அதைப் பார்த்து ரசிப்பதற்காகவே பவுர்ணமி தினங்களில் பல தடவை மலையைச் சுற்றி கிரிவலமும் தீப தினங்களில் மலைமீதும் ஏறியிருக்கிறேன்.
மலைமீதிருந்து பார்க்கும் திருவண்ணாமலை இரண்டு மூன்று மடங்கு அழகானது என்பேன். இரண்டு காரணங்கள். ஒன்று, பிரமிப்பும் ரம்மியமும் கலந்து தெரியும் பெரிய கோயிலும் அதைச் சுற்றியுள்ள நகரமும். இரண்டு, நகரைச் சுற்றித் தெரியும் மலைகளும் மரங்களும் விவசாய நிலங்களும் ஏரிகளும் பார்க்கப் பார்க்க சலிக்காதவை.
தோழியிடம் அவர் அப்பாவின் தொடர்பு எண் வாங்கிப் பேசிவிட்டு, அவர் இருக்கும் இடத்திற்குப் போனேன். அங்கே எனக்காக காத்திருந்தவர் நான் அடையாளம் காணும் முன்பே என்னைக் கண்டுகொண்டார்.
“வடிவு, வா வா… எப்டி இருக்க? என்ன இவ்ளவு ஒல்லியா இருக்க? ஒழுங்கா சாப்புட்றியா? இல்ல சாப்டாம ஏமாத்தறியா?” வரிசையாக பல கேள்விகள். அதுவும் ஒன்றாகக் கேட்டார்.
“நல்லாருக்கன்ப்பா. நீங்க எப்டி இருக்கீங்க?’’ அவர் கேட்ட அத்தனைக் கேள்விக்கும் இதை மட்டுமே பதிலாக சொன்னேன்.
”பாப்பா (என் தோழி) ஒண்ணப் பத்தி நெறய சொல்வாப்ல. வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க? விவசாயம்தானப் பண்றாங்க? என்ன பயிர் போட்ருக்காங்க?’’
மீண்டும் நீண்டது அவரது கேள்விகள்.
“ஆமாம்பா, இப்போ நெல்லும் மல்லாட்டயும்..’’ என்றேன்.
அதுதான் அவரை முதலில் சந்தித்தது. எவ்வளவோ பேசினார். தோழியின் அப்பா என்பதைத் தாண்டி பலநாள் பேசிப் பழகிய நெருங்கிய நண்பரைப் போன்று பேசினார். அதனால் அவரை சந்தித்த சில நிமிடங்களிலேயே பிடித்துப்போனது.
அங்கிருந்து அருகிலுள்ள தன் அண்ணன் மகள் வீட்டுக்கு அழைத்துப் போய் சாப்பிடச் சொன்னார்.
”இல்லப்பா வேணாம், இப்போதான் சாப்டுட்டு வந்தேன்..” என எவ்வளவு மறுத்தும் சாப்பிடவைத்து விட்டார்.
பின் அவரோடு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ‘நண்பர்களோடு வெளியூர் செல்ல ரயிலுக்கு நேரமாகிவிட்டது, விழுப்புரம் செல்ல வேண்டும்’ என சொல்லிவிட்டு விடைபெற்று வந்தேன்.
அதுமுதல் அடிக்கடி நகர்பேசியில் அவரிடம் பேசுவேன். அவருக்கும் எப்போதெல்லாம் என் ஞாபகம் வருகிறதோ உடனே அழைத்துவிடுவார்.
”நல்லா சாப்டு வடிவு. ஒடம்ப இப்டி ஒல்லியா வச்சிருக்காத. என்னக் கஷ்டம்னாலும் என்கிட்ட சொல்லு..’’ என அக்கறையோடு பேசுவார்.
நன்கு படித்தவர், அரசு வேலையில் இருப்பவர். ஐந்தடி உயரம், மாநிறம், வெளியே செல்லும்போதும் படிக்கும்போதும் எழுதும்போதும் மறக்காமல் கண்ணாடி அணிபவர். இதுதான் எல்லை என எதுவும் வைத்துக் கொள்ளாமல் எது குறித்தும் பேசுபவர்.
அடிக்கடி பேசும்போது, ”வீட்டுக்கு வா வடிவு. நல்லா சாப்டமாட்ற, அதான் ஒல்லியா இருக்க. வந்தன்னா நாலு நாளு சாப்பாடுப் போட்டு ஒடம்ப எப்டித் தேத்தறன் பாரு..’’ என்பார்.
ஒருநாள் புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே சென்றுசேர இரவு வெகுநேரமாகி விட்டது. பேருந்து நிறுத்தம் வந்து அழைத்துப் போனவர், கொஞ்ச நேரம் பேசிவிட்டு உறங்கச் சொன்னார். உறங்கினேன்.
அடுத்தநாள் காலையில் எழுந்ததும் எனக்காக மீன், கோழி, முட்டை எல்லாம் வாங்கிவந்து சமைத்துக் கொண்டிருந்தார்.
அவர் சமையல் குறித்து பலதடவை தோழி சொல்லியிருக்கிறார். ஆனால் அன்றுதான் முதல் தடவையாக நேரில் பார்த்தேன், சாப்பிட்டேன். அவ்வளவு சுவையாக சமைத்திருந்தார்.
”நீயும் நல்லா சமச்சிக் கத்துக்கோ வடிவு. அப்பதான் சாப்பாட்டோட அருமபெருமத் தெரியும். அதுஒரு பெரிய வேலலாம் இல்ல. சாப்புட்றதவிட சமைக்கிறது ஜாலியான வேல..’’ என்பார்.
அன்று எனக்காக அலுவலகம் விடுப்பு எடுத்துக் கொண்டவர் என்னோடு உட்கார்ந்து கதைகள் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘எப்படி இவரு இவ்ளோ ஜாலியா பொண்ணோட ஃபிரெண்டுகிட்ட பேசுறாரு’ என்று.
அதிலும் உச்சமாய் அன்று மாலை வெளியில் சிறிதுதூரம் நடந்து சென்றுவிட்டு வரும்போது,
”அப்பறம் கேக்க மறந்துட்டன் வடிவு. டிரிங்க்ஸ்லாம் சாப்டுவியா?’’ என்றார்.
‘அய்யய்யோ, ஏன் இவரு இப்போ இதக் கேக்குறாரு? ஒருவேல அவ (தோழி) சொல்லிருப்பாளோ?’ என்று யோசிப்பதற்குள்,
”பெரிய தப்புலாம் ஒண்ணுல்ல வடிவு. சாப்புடுவன்னா சொல்லு, வாங்கிட்டு வந்து தர்றன்..’’ என்றதும் பகிர் என்றது.
உடனே, “இல்லப்பா, அதல்லாம் சாப்பிட மாட்டன்..’’ என்றேன்.
”அடக் கூச்சப்படாம சொல்லு வடிவு..’’ என்றார் மீண்டும்.
இனியும் இவரிடம் மறைக்க முடியாதென நினைத்து,
“எப்பவாது தோனுச்சின்னா பீர் மட்டும் ஒண்ணுக் குடிப்பன்ப்பா. இன்னிக்கித் தோனல, வேணாம்ப்பா..’’ என்றேன்.
லேசாக சிரித்துவிட்டு,
“இப்டிதான் இருக்கணும். சரக்கு சாப்புட்றதுலாம் தப்புக் கெடயாது. எப்பவாது தோனுச்சினான்றது நல்ல விஷயம்தான்..’’ என்று சொல்லி தோளில் தட்டிக்கொடுத்தார்.
அடுத்தநாள் காலை உணவு சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டேன். அதன்பின் பல தடவை நகர்பேசியில் அவரோடு பேசியிருக்கிறேன். எப்போது பேசினாலும்,
“என்ன வடிவு, எப்பதான் அந்த ஒடம்ப தேத்தறதா உத்தேசம்? பத்துநாள் கெளம்பி வந்துடுன்னா கேக்கமாட்ற. ஒன்ன நல்லா சாப்டவச்சி தேத்தி அனுப்பலான்னு நெனச்சா வரமாட்ற..’’ என்பார்.
அவர் அப்படி சொல்லும் போதெல்லாம் அவ்வளவு மகிழ்வாக இருக்கும். பெற்ற தந்தை போன்று அக்கறையோடு பேசுவதால் மட்டுமல்ல… நல்ல நண்பரைப் போன்று எப்போதும் நடந்துகொள்வதால். ஆம்!
எத்தனையோ நண்பர்கள், தோழிகள் வீட்டுக்கு இதுவரைக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இவரைப் போன்ற ஒருவரை எங்குமே பார்த்ததில்லை என்றுதான் சொல்வேன். ஆம்!
எதுகுறித்தும் பேசும் அவரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கவேண்டும் என பல தடவை முயற்சிசெய்தும் முடியாமல் போனது. அவர் குறித்து தோழி வருத்தப்பட்டு சொல்லும் ஒரே விஷயம்,
“அவரும் அம்மாவும் ஏன்னே தெர்லடா வடிவு, பேசிக்கவே மாட்டாங்க. நாங்களும் சின்ன வயசுலர்ந்து எவ்ளவோ கேட்டுப் பாத்துட்டோம். முயற்சிப் பண்ணியும் பாத்துட்டோம். சொல்லவே மாட்றார்டா..’’
ஏன் அவர் தன் மனைவியிடம் பேசாமல் இருக்கிறார்? இது பார்க்க ஏதோ சாதாரணக் கேள்வி போன்று தோன்றலாம். அது எவ்வளவு வலி மிக்கது என்பதை அருகிலிருந்து பார்த்தபோதுதான் என்னால் உணரமுடிந்தது.
கிட்டத்தட்ட முப்பது வருடமாக அவர் தன் மனைவியிடம் பேசவில்லை. ஏன் என கேட்டு பதிலில்லை. எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டார்கள். அதிலும் தோழியும் அவளது தங்கையும் நான்கைந்து தடவை தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூட சொல்லி மிரட்டிப் பார்த்துவிட்டார்கள். அப்போதும் அவரை பேசவைக்க முடியவில்லை.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் அவர் தன் மனைவி சமைப்பதைக் கூட சாப்பிடமாட்டார். ஒன்று, தான் சமைக்க வேண்டும். இல்லையெனில் தன் மகள்கள் சமைக்க வேண்டும். இத்தனைக்கும் ஒரே வீட்டில்தான் இருப்பார்கள் (அதுவும், அவர்களது இரு மகள்களுக்காக). ஒருவர் முகத்தையொருவர் பார்க்கக் கூட மாட்டார்கள்.
முதல்தடவை தோழி இதை சொல்லும்போது என்னால் நம்பவே முடியவில்லை. பிறகு நேரில் பார்த்தபோதுதான் நம்பினேன்.
அப்படியென்ன முப்பதாண்டுகளுக்கு முன் நடந்திருக்கும்? ஒரு மனிதர் தான் கட்டிய மனைவியுடன் இவ்வளவு ஆண்டுகள் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருக்க முடியுமா? அதுவும் ஒரே வீட்டில்?
யோசிக்க யோசிக்க வியப்பாக இருந்தது. அதிலும் இவ்வளவு வெளிப்படையாக மகளின் நண்பர்களுடன் சகஜமாக பேசி சிரிப்பவர், எப்படி இந்த விஷயத்தில் மட்டும் இப்படி இருக்கிறார்? இதுகுறித்து எப்படி அவரிடம் பேசுவது? ஒருவேளை பேசினால் கோபப்படுவாரா? பேசாமல் போய்விடுவாரா? ஏதேதோ யோசித்தேன்.
புதுச்சேரி கடற்கரைக்கு என தனிமுகம் உண்டு. அதிலும் மாலை நேரங்களில் அங்குள்ள கற்களில் அல்லது ஓரமாக இருக்கும் இருக்கைகளில் உட்கார்ந்தவாறு கடல் பார்த்தல் தனி சுகம்.
அப்படியொரு நாள் பார்க்க எண்ணி உடன் அவரையும் கூட்டிக்கொண்டு சென்றிருந்தேன். சென்றவர்கள் அங்கிருக்கும் பாண்லே’வில் (நம்மூர் ஆவின் போன்று) எனக்கொரு குல்ஃபி ஐஸும், அவருக்கொரு பாதாம் பாலும் வாங்கிக்கொண்டு அருகிருக்கும் இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டோம்.
பின் பக்கத்திலிருக்கும் பாரதி பூங்காவுக்குள் சென்று ஒரு மரத்தடி இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கடற்கரைக்குப் போனோம்.
சற்றுதூரம் மெதுவாக தெற்கு நோக்கி நடந்துவிட்டு அங்குள்ள ஓர் இருக்கையில் உட்கார்ந்தோம். உடனே அவர் என்னைப் பார்த்து,
“எப்ப வடிவு கல்யாணம் பண்ணப் போற?’’ என்றார்.
திடீரென அக்கேள்வியை அவர் கேட்டதும் சிலநொடிகள் என்ன சொல்லலாம் என யோசித்துவிட்டு,
“பண்ணணும்பா, எப்போன்னுத் தெரில..’’ என்றேன்.
“அதிகபச்சம் 32 வயசுக்குள்ள பண்ணிடணும் வடிவு. அதுக்குமேல தள்ளிப்போடக் கூடாது..’’ என்றார்.
“சரிப்பா..’’ என்றேன்.
சில நிமிடங்கள் கடலைப் பார்த்தவாறு அமைதியாக இருந்தார். நான் கடலையும் நடுநடுவில் அவரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
பின் ஒருவாறு தைரியம் கொண்டு,
“அப்பா ஒங்கக்கிட்ட ஒண்ணுக் கேக்கணும்..’’ என்றேன்.
லேசாகப் புன்னகைத்துவிட்டு, ‘கேளு’ என்பதுபோல் தலையாட்டினார்.
“முப்பது வருசமா அம்மாக்கூடப் பேசாம இருக்கீங்க. இதுக்கு எப்பதான்ப்பா ஒரு ஃபுல் ஸ்டாப் வக்கப் போறீங்க?’’ என்றதும் அவர் முகமே மாறிவிட்டது. உடனே எழுந்தவர்,
”வடிவு, நீ வீட்டுக்குப் போய்டு..’’ என்று சொல்லிவிட்டு வேகவேகமாக நடந்து போனார்.
பின்னாலேயே நானும் எழுந்து, ”அப்பா… அப்பா…’’ என்று மூன்று நான்கு தடவை கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்.
எனக்கு பெரும் சங்கடமாகப் போய்விட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் தோழிக்கு அழைத்துச் சொன்னேன்.
“அதல்லாம் ஒண்ணும் நீ பண்ணவேணாம் கெளம்பி வீட்டுக்கு வா..’’ என்றார்.
போனதும், “பெத்தப் பொண்ணுங்க நாங்களே சாவப் போறன்னு சொல்லிப் பாத்துட்டம், ஒண்ணும் பண்ண முடியல. சொந்தக்காரங்க தெரிஞ்சவங்கன்னு எல்லாரும் முயற்சிப் பண்ணிப் பாத்துட்டாங்க. எதுவும் முடியல. அவரு அவ்ளோதான் வடிவு, எங்களுக்கெல்லாம் பழகிப் போச்சு..’’ எனச் சொல்லிவிட்டு கண்கலங்கினார்.
இரவு லேட்டாக வீட்டுக்கு வந்தவர் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் என்னிடம் பேசாமல் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த தோழியிடம்,
”வடிவு சாப்டாப்லயா?’’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டு,
“படுத்து தூங்க சொல்லு, நேரமாச்சு..’’ என சொல்லிவிட்டு, அவரும் போய் படுத்துக் கொண்டார்.
அதன்பிறகு அதுகுறித்து அவரிடம் எதுவும் கேட்கவில்லை. அவரும் அச்சம்பவத்தை அதோடு மறந்துவிட்டு பழையபடி சாதாரணமாக பேச ஆரம்பித்தார்.
எனக்கு அவரை நினைத்து வியப்பாக இருந்தது.
‘என்ன மனுசன் இவரு? ஏன் இப்படிப் பண்றாரு? இதுக்குப் பின்னாடி அப்படி என்னக் காரணம் இருக்கும்? இவரப் புரிஞ்சிக்கவே முடிலயே?’
இப்படி பலதடவை அவர் குறித்து பலவாறு யோசித்திருக்கிறேன்.
திடீரென ஒருநாள் அதிகாலை நான்குமுப்பது மணி இருக்கும். தோழியிடமிருந்து அழைப்பு. இந்நேரத்தில் அவசர அழைப்பாகத்தான் இருக்குமென உடனே எடுத்ததும்,
”வடிவு, அப்பா செத்துட்டாருடா. என்னப் பண்றதுன்னு ஒண்ணுமே புரில. நீ கெளம்பி வாடா..’’ என அழ, உடனே கிளம்பிப் போனேன்.
போகும் வழிமுழுக்க அவர் குறித்த சிந்தனைதான் வந்துவந்து போனது. அதிலும் அவரை முதல்தடவை எங்கள் ஊரில் வைத்துப்பார்த்தது, அதன்பின் புதுச்சேரியில் வீட்டில் சந்தித்தது, பிறகு கடற்கரையில் கேட்டது, ஒன்றன்பின் ஒன்றாக நினைத்தபடி காலை 10.30 வாக்கில் சென்றடைந்தேன்.
கொடுமையான மரணம் என்பார்களே… அது, அதுதான். நான்கு நாட்களுக்கு முன்னர் மகள்கள் எதையோ அவரிடம் கேட்க சண்டை பெரிதாகி கோபத்தில் வீட்டைவிட்டு வெளியில் சென்று விட்டார்கள் (உடன் அவர் மனைவியும்). அந்தக் கோபத்தில் தனியாக வீட்டுக்குள் உட்கார்ந்து சாப்பாட்டில் விஷம் கலந்து சாப்பிட்டுவிட்டு படுத்திருக்கிறார்.
மூன்றாம்நாள் இரவு அக்கம்பக்கத்து வீட்டினர், வீட்டுக்குள்ளிருந்து ஏதோ நாற்றம் வருகிறது என்று தோழியை அழைத்துச்சொல்ல, என்னமோ ஏதோவென பதறியடித்துக்கொண்டு வந்து கதவைத் தட்டியிருக்கிறார்கள். திறக்கவில்லை. அதற்குள் போலீஸ் வந்து கதவை உடைத்துப் பார்க்க, உள்ளே அழுகிய நிலையில் பிணமாக கிடந்திருக்கிறார்.
நான் சென்று தோழிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போது, post mortem முடித்து உடலை எடுத்து வந்தார்கள். உருவமாக அல்ல, ஒரு பொட்டலமாகக் கட்டி.
எது முகம்? எது கால்? என்று கூடத் தெரியாமல் அவசர அவசரமாக சடங்குகள் முடித்துக்கொண்டிருந்தார்கள்.
அருகில் உட்கார்ந்து இதையெல்லாம் பார்த்தும் பார்க்காதமாதிரி துளி கண்ணீர்கூட சிந்தாமல் இருந்தார் அவரது மனைவி. (இச்சம்பவம் வைத்து, ‘வேப்பமரம்’ என்றொரு சிறுகதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.)
அவரை அக்கோலத்தில் பார்த்ததும் துடித்துப்போய் அழ ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவு பேசியிருக்கிறார்? எத்தனை நாள் அக்கறையோடு எனக்கு சமைத்துத் தந்திருக்கிறார்? கடைசியில் அவரது முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போய்விட்டதே.
அடக்கம் செய்ய இன்னொரு வண்டியில் வைத்து அவரது உடலை எடுத்துப் போனார்கள். அவர் உடல் மட்டும் அதில் செல்லவில்லை. அவருடன் சேர்ந்து,
‘ஏன் அவர் முப்பது வருஷமா தன் மனைவியிடம் பேசவில்லை?’ என்ற கேள்விக்கான பதிலும் சென்றது.
ஆம்! சில கேள்விகளுக்கு கடைசிவரை பதில் கிடைப்பதில்லை. அதிலும் இதுபோன்ற மனத்தின் அடி ஆழத்தில் பதில் இருந்தும் சொல்லப்படாமல் கடைசிவரை கேள்வியாகவே இருந்துவிட்டுப் போகும் கேள்விகள் வெறும் கேள்விகள் மாத்திரமல்ல.
தீராத வலிகள்; ஆறாத வடுக்கள்; நில்லாத கண்ணீர்; இன்னும் இன்னும்.
‘ஒரு மனிதர் இப்படியெல்லாம் கூட இருக்க முடியுமா?’ என்ற கேள்வியோடு முதல்தடவை சந்தித்தவரை, ‘ஒரு மனிதர் இப்படியெல்லாம் கூட இருந்துவிட்டுப் போக முடியுமா?’ என்ற இன்னொரு கேள்வியோடு கடைசியாகப் பார்த்துவிட்டு வீடுவந்து சேர்ந்தேன்.
மனிதர்கள் எப்போதும் விசித்திரமானவர்கள். அதிலும் அவர், விசித்திரத்திலும் விசித்திரமானவர்.
ஆம்! அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது!
(ஏப்ரல் 20, 2020)
*