முகங்கள் – 10 : பத்தாள்

முகங்கள் – 9 : வக்கீலண்ணா

**

‘காற்றில் வாழ்வைப் போல்

வினோத நடனங்கள் புரியும்

இலைகளைப் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும்

இலையைப் பிடிக்கும்போது

நடனம் மட்டும் எங்கோ

ஒளிந்து கொள்கிறது’

 – தேவதச்சன்

**

ஞாயிறு என்பது சிலருக்கு தூங்கிக் கழிக்கவும், ஒருவார துணிமணிகளை துவைத்து வரும் நாட்களுக்கு தயாராகவும் பயன்படும். சிலருக்கு யாதொரு கவலையுமின்றி ஊர் சுற்றவும், படம் பார்க்கவும், விளையாடவும் பயன்படும். சிலருக்கோ குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவழிக்கப் பயன்படும். இன்னும் சிலருக்கோ குடிக்கவும் கும்மாளமிடவும் பயன்படும்.

ஆனால் எனக்கு, பள்ளிக்கூடம் படிக்கும்போது… காடு மலை ஏரி கால்வாய் கிணறு ஆறு ஓடை குட்டை என சுற்றித்திரியவும், சைக்கிள் எடுத்துக்கொண்டு அருகமை ஊர்களுக்கு நண்பர்களோடும் தனித்தும் சென்று அங்குள்ள மலைகளில் ஏறி அதன் உச்சியைக் கண்டு ரசிக்கவும் உரக்கக் கத்தவும், விறகு வெட்டி வந்து வீட்டுக்கு உதவி செய்யவும், நண்பர்களோடு சேர்ந்துகொண்டு கோலி, பம்பரம், கபடி, கப்பை, கிரிக்கெட், கோட்டிப்புல், குரங்காட்டம், ஓரி, குச்சியாட்டம் என  விளையாடி மகிழவும் பயன்பட்டது.

அதன்பிறகு இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாமாண்டு வரைக்கும் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றவும் படம் பார்க்கவும் விளையாடவும் நன்கு சாப்பிட்டுவிட்டு உறங்கவும் பயன்பட்டது. கடந்த 2012 முதல் அப்படியே தலைகீழாக மாறி நூலகம் சென்று படிக்க மட்டுமே பயன்படும் தினமாக என் ஞாயிறுகள் மாறியது.

ஆம்! ஞாயிறுகள் மிக அழகானவை. மற்ற எக்கிழமைகளுக்கும் இல்லாத கூடுதல் சிறப்புகள் ஞாயிறுகளுக்கு உண்டு. எனக்கு மட்டுமல்ல; கிட்டத்தட்ட நம்மில் எல்லோருக்கும். அதிலும் ஞாயிறுகள் இறக்கை முளைத்து சிறகு விரித்து உயர வானில் பறப்பதாகப்படும். இன்னொரு முக்கியமான சிறப்பு, ஞாயிறுகளை வெறுத்தவர் என ஒருவரும் இருக்க மாட்டார்கள். ‘எப்போ ஞாயிறு வரும்’ என்றுதான் பலரும் காத்திருப்பார்கள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு, மெதுவாக நடந்து பேருந்து நிறுத்தம் போய், கூட்டமில்லா பேருந்தின் சன்னலோர இருக்கையில் உட்கார்ந்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி, பின் அங்கிருந்து கோட்டூர்புரம் நோக்கிப்போகும் காந்திமண்டபம் சாலையில் இருபக்கமும் உள்ள விதவிதமான மரங்களைப் பார்த்து ரசித்தவண்ணம் நடந்துபோவேன்.

சென்னையின் மிகப் பிடித்த சாலைகளில் ஒன்று இது. முதல் காரணம்… அச்சாலையின் இருமருங்கிலும் வரிசைகட்டி நிற்கும் காட்டுவாகை, வெப்பாலை, ஆலம், புங்கை, சவுண்டல், பனை போன்ற மரங்கள் (இன்றைக்கிருக்கும் மரங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான மரங்கள் வர்தா புயலுக்கு முன்பிருந்தது எனக்கு மட்டுமேயான இழப்புச்செய்தி). இரண்டாவது காரணம்… அவ்வழியாக மிக அருகில் இறங்கி ஏறும் விமானங்களும் அதன் ஈர்க்கும் சத்தமும்.

அண்ணா நூலகம் வரைக்கும் இடையிடையே ஏதேனும் பாடல் வரிகள், கவிதை வரிகள் தோன்றினால் நின்று நகர்பேசியில் எழுதியபடி செல்வது வாடிக்கை. அப்படி எழுதிய பாடல்கள் மட்டும் இதுவரை நூறுக்கு மேலிருக்கும்.

சென்று நூலகம் முன்பிருக்கும் தேநீர்க் கடையில் ஒரு தேநீரோ அல்லது குளம்பியோ பருகிவிட்டு, நூலகத்தின் பின்னால் அல்லது முன்னால் இருக்கும் மரமொன்றின் அடியில் உட்கார்ந்து வருபவர்களை போகிறவர்களை வேடிக்கை பார்த்தவாறு அல்லது நகர்பேசியில் ஏதேனும் படித்தவாறு மேலே செல்லும் விமானங்களைப் பார்த்து ரசிப்பேன். 

அதன்பின் ஒன்பது மணிக்கு நூலகம் திறந்ததும் இரண்டாவது மாடியில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவுக்குச் சென்று தேவையான புத்தகங்களை எடுத்துக்கொண்டு என் விருப்பமான இடத்தில் போய் (அவ்விடத்தில்தான் பெரும்பாலும் அமர்ந்து படிப்பேன்) உட்கார்ந்து பதினொரு மணிவரைக்கும் படிப்பேன்.

நடுநடுவில் பாடல்களும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுவேன். வெளியில் தெரியும் இயற்கை காட்சிகளையும் ரசிப்பேன். பின் இடைவேளை எடுத்துக்கொண்டு வெளியில் போய் தேநீர் குடித்துவிட்டு வந்து மீண்டும் ஒன்றரை இரண்டு மணி வரைக்கும் படிப்பேன்.

அதன்பிறகு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வந்து மூன்றரை நான்கு மணி வரைக்கும் படித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அருகிலிருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைவேன்.

நுழைந்து விளையாட்டுத் திடலின் ஓரத்தில் உள்ள வேப்ப மரத்தின் அடியிலோ புளிய மரத்தின் அடியிலோ பார்வையாளர் இருக்கைகளிலோ அல்லது கலையரங்க வாயில் படிக்கட்டிலோ மரங்களுக்கு அடியில் ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் இருக்கைகளிலோ உட்கார்ந்து ஐந்து மணி வரைக்கும் பாடல்கள் கேட்பேன் அல்லது விருப்பமான யாரையாவது அழைத்துப் பேசுவேன்.

அதன்பின் அங்குள்ள தேநீர்க் கடைக்குச் சென்று ஒரு தேநீர் குடித்துவிட்டு, மெதுவாக நடந்து பாடல்கள் கேட்டவாறு மாலை மங்கும் அழகையும், அங்குமிங்கும் உள்ள மரங்களையும் அதன் ரம்மியத்தையும் அதிலுள்ள பட்சிகளின் குரலையும் கேட்டு ரசிப்பேன்.

பிறகு ஆறு மணி வாக்கில் முன்புற நுழைவு வாயில் வழியாக வெளியில் வந்து வலது பக்கமாக திரும்பி சாலையோரமாக நடந்து சைதாப்பேட்டை ரயில் நிலையம் போய் மின்சார ரயிலில் ஏறி கோடம்பாக்கத்தில் இறங்கி நடந்து அறைக்குச் செல்வேன்.

இதுதான் என் பெரும்பாலான ஞாயிறுகளின் நிகழ்ச்சி நிரல். சில ஞாயிறுகள் சற்று மாறுபட்டும் வேறுபட்டும் இருக்கலாம்.

அன்றைய தினம் நூலகம் சென்று படித்துவிட்டு சைதாப்பேட்டையில் நான் பி.எட் படித்த அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் எதிரில் சுரங்கப்பாதை அருகில் உள்ள விருப்பத் தேநீர்க்கடையில் தேநீர் குடித்துவிட்டு ரயில் நிலையம் வந்தேன்.

முதன் முதலில் எனக்கு சென்னை அறிமுகமானதே சைதாப்பேட்டையில்தான். அதிலும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பல அழகான நினைவுகளை மனதுக்குள் தாங்கி நிற்பது.

அதையெல்லாம் அங்குள்ள இருக்கையில் அமர்ந்தவாறு சற்று நேரம் அசைபோட்டுவிட்டு அடுத்து வந்த கடற்கரை செல்லும் ரயிலில் ஏறி கோடம்பாக்கம் வந்திறங்கினேன்.

இறங்கி அங்குள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்து முகநூலில் பதிவிட எதையோ டைப் செய்து கொண்டிருந்தேன். அந்நேரம் பார்த்து அங்கு வந்த பெண் ஒருவர், அவருக்கு எப்படியும் 45 வயதிருக்கும் பார்க்க மிக நேர்த்தியாக உடையணிந்து பாவமாக தன் முகத்தை வைத்துக்கொண்டு,

”தம்பி கேக்கறனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. ஊரப்பாக்கம் வரைக்கும் போகணும். பத்து ரூபா டிக்கெட்டுக்கு காசு தரமுடியுமா? வச்சிருந்த காச எங்கயோ தொலச்சிட்டன்..’’ என்றார்.

அவரது உருவமும் குரலும் உண்மையாக இருக்கும் என்றே பட்டது.

இதற்கும் சென்னையில் விதவிதமான வசனங்கள் சொல்லி பணம் கேட்ட பலரை கடந்த பத்தாண்டுகளில் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் இவரைப் பார்த்தால் அவர்களில் ஒருவராகத் தோன்றவில்லை. அதனால் உடனே நம்பி,

”வாங்கம்மா நானே டிக்கெட் வாங்கித்தர்றன்..’’ என்றேன்.

”இல்ல தம்பி, உங்களுக்கு எதுக்கு சிரமம். ஏதோ எழுதிட்டு வேற இருந்தீங்க..” எனச் சொல்ல, அவர் சொல்வதும் சரிதான் எனப்பட்டது.

உடனே எழுந்து பின் பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தேன். வாங்கியவர் நன்றி சொல்லிவிட்டு நேராகப் பயணச்சீட்டு வாங்குவதுபோல் நடந்து போனார்.

என்றபோதும் அவர் மீது எனக்கு ஒருவித சந்தேகம் இருக்க, பயணச்சீட்டு வாங்குகிறாரா எனப் பார்க்க அவருக்கே தெரியாமல் மறுபக்க வழியாகச் சென்று பார்த்தேன். நினைத்தது போலவர் பயணச்சீட்டு வாங்கப் போகவில்லை.

மாறாக அங்குள்ள மறைவான ஓர் இருக்கையைப் பார்த்து அதில் போய் உட்கார்ந்து தன் பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை வெளியில் எடுத்து குடித்துக் கொண்டிருந்தார்.

அந்நேரம் பார்த்து தாம்பரம் வரைக்கும் செல்லும் மின் ரயில் ஒன்று வந்து நின்றது. அதையே பார்த்தவர் வேகமாக ஓடி அதில் ஏறிக்கொண்டார்.

அவர் என்னை ஏமாற்றி விட்டார் என ஒருபக்கம் கோபம். இன்னொரு பக்கம் ஊரப்பாக்கம் செல்வதாக சொன்னவர் ஏன் தாம்பரம் வரைக்கும் செல்லும் மின் ரயிலில் ஏற வேண்டும்? ஒருவேளை தாம்பரம் சென்று மாறிக்கொள்வாரா? இல்லை சொன்ன இடம்கூட பொய்தானா? சரி, அவர் பின்னாலேயே போய் பார்ப்போம் என திட்டமிட்டு அவரேறிய அதே பெட்டியில் பின்பக்கம் உள்ள வாயிலில் போய் ஏறினேன்.

ஏறி வாயிலருகில் நின்றபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மிக சகஜமாக நின்றுகொண்டு சுற்றிலும் திரும்பி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். நடுவில் ஒருதடவை தன் பையைத் திறந்து ஏதேனும் அழைப்பு வந்துள்ளதா என நகர்பேசியை எடுத்துப் பார்த்தார்.

சரியாக அந்நேரம் பார்த்து அடுத்த நிறுத்தமான மாம்பலத்தில் ரயில் நிற்க சட்டென இறங்கிவிட்டார். இது நான் சற்றும் எதிர்பார்க்காதது. உடனே நானும் இறங்கி ஓரமாக ஒரு கடையின் பக்கத்தில் போய் மறைவாக நின்று அவரை பார்த்துக்கொண்டிருந்தேன்.

இறங்கியவர் சிறிது நேரம் ஓரிடத்தில் நின்று சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். வந்த ரயில் புறப்பட்டு சில நிமிடங்கள் கழித்து கூட்டம் குறைந்தவுடன் என் போன்று அங்கே பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து எதையோ நகர்பேசியல் பார்த்துக்கொண்டிருந்தவரிடம் போய்,

‘தம்பி கேக்கறனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. கூடுவாஞ்சேரி வரைக்கும் போகணும். பத்து ரூபா டிக்கெட்டுக்கு காசு தரமுடியுமா? வச்சிருந்த காச எங்கேயோ தொலச்சிட்டன்..’ என்றார்.

ஒரு வார்த்தை மாறாமல் (இடத்தின் பெயரை மட்டும் மாற்றி) அப்படியே என்னிடம் சொன்னதை அவரிடம் சொன்னார். அவரும் அதை நம்பி பத்து ரூபாய் நோட்டை எடுத்துத் தர, அவரும் அதை வாங்கிக்கொண்டு பயணச்சீட்டு வாங்கப் போவது போல் நடந்து சென்று அதே போன்று மறைவான ஓர் இருக்கை பார்த்து உட்கார்ந்தார்.

பின் அடுத்த ரயிலில் ஏறி சைதாப்பேட்டையில் இறங்கி அதேபோன்று ஒருவரிடம் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி அதேபோன்று பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு அதேபோல் ஓரிடம் பார்த்து உட்கார்ந்து அதேபோல் அடுத்து வந்த ரயிலில் ஏறிக்கொண்டார்.

நானும் அவற்றையெல்லாம் பார்த்தவாறு அவரேறிய ரயிலில் அதேபோல் ஏறிக்கொண்டேன்.

ஏமாற்றுவதையே தொழிலாக வைத்திருக்கும் அவர்மேல் பெரும் கோபமாக வந்தது. இன்னொரு பக்கம் அவரது சாமர்த்தியம் என்னை வியக்கவைத்தது.

நினைத்துப் பார்த்தேன், ஒரு நாளைக்கு அவர் இதுபோன்று 50 பேரை சந்தித்தால் 500 ரூபாய் கிடைக்கும். ஒருவேளை 100 பேரை சந்தித்தால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இப்படி மாதத்தில் 500, 1000 ரூபாய் என்றால் எத்தனைப் பேரை ஏமாற்றி எத்தனை ஆயிரங்கள்?

அதற்குள் வண்டி கிண்டியில் நின்றது. வழக்கம்போல் இறங்கியவர் கூட்டம் குறையும் வரைக்கும் காத்திருந்துவிட்டு, அங்கு உட்கார்ந்திருந்த ஒருவரிடம் போய் ஏற்கனவே என் உட்பட மூவரிடம் ஒப்பித்த வசனத்தை தனக்கே உரிய அந்த சாமர்த்தியமான நடிப்புடன் ஒப்பித்துக் கொண்டிருந்தார்.

சரியாக அவர் முடிக்கும் நேரத்தில் அங்கு போய்,

”இந்தாங்கம்மா பத்து ரூபா. எங்க சிங்கப்பெருமாள் கோயிலுக்குதான போகணும்? இந்தாங்க இன்னொரு பத்து ரூபா… அடுத்த ஸ்டேஷன்ல எறங்கவேணாம் நேரா செங்கல்பட்டுக்குப் போக வச்சுக்கோங்க..’’ எனச் சொன்னதும் அவருக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவர் பணம் கேட்டு நின்றவருக்கோ ஒன்றும் புரியவில்லை.

”எங்கள மாதிரி (அருகில் நின்றிருப்பவரையும் காட்டி) ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ஒரு மடையன் கெடைப்பான். நீங்க அறிவாளின்னு நெனச்சி ஏமாத்திட்டுப் போவீங்க அப்டிதான?’’

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

”கை கால்லாம் நல்லாதானமா இருக்கு?” என்றேன், அவரது கைகளையும் கால்களையும் ஒருதடவை பார்த்துவிட்டு.

அதற்கும் மவுனமாக இருந்தார்.

”கண்ணுத் தெரியாதவங்க கூட தன்மானத்த விட்டுக்கொடுக்காம வேர்கடலை பர்பி, சோப்பு, சீப்புன்னு எத எதயோ வித்து கவுரவமாப் பொழக்கிறாங்க. அதே டிரெயின்ல வர்ற நீங்க கை கால் நல்லாருந்தும் ஏமாத்திப் பொழக்கிறீங்க. இந்தப் பொழப்புக்கு, த்தூ…’’ என சொல்லி கீழே துப்பிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்தவன்,

எதிர்ப்பக்கம் புறப்பட தயாராக நின்றிருக்கும் கடற்கரை வரைசெல்லும் மின் ரயிலில் போய் ஏறிக்கொண்டேன்.

ஏதோமாதிரி இருந்தது. இதுவரைக்கும் அப்படி யாரையும் திட்டியதில்லை. குறிப்பாக பெண்களை.

 ‘திட்டியிருக்கக் கூடாதோ? ஒருவேள நாம செஞ்சது தப்போ..’ என்றெல்லாம் எனக்குள் திரும்பத் திரும்பக் கேட்டவாறு கோடம்பாக்கத்தில் வந்திறங்கினேன்.

பின் அங்கிருந்து நடந்து அறைக்கு வரும் வரைக்கும் அவரது தோற்றமும் அவர் கேட்ட வார்த்தைகளும் அவரை நான் திட்டியதும் வந்துவந்து போனது.

‘என்னதான் இருந்தாலும் நாம அவர அப்டி திட்டிருக்கக் கூடாது..’ என்றது மனம்.

‘இல்லல்ல… நீ செஞ்சதுதான் சரி..’ என்றது புத்தி.

ஒருவாறு என்னை சமாதானம் செய்துகொண்டு அன்றைய தினம் உறங்கிப்போனேன்.

அதுமுதல் என் ஞாயிறில் சைதாப்பேட்டையில் இருந்து கோடம்பாக்கம் வந்திறங்கும் போதெல்லாம் அவரது அன்றைய நினைவும் தவறாமல் வந்து போனது.

ஏன் இந்த சென்னையில் பணத்திற்காக ஒருவர் ஒருவரை ஏமாற்ற நினைத்து இப்படி ஏதேதோ கதைகளைச் சொல்கிறார்கள்? இவர்களுக்கு மத்தியில் உண்மையிலேயே பணம் வேண்டுவோர் என்ன செய்வார்கள்? இவர்களால் அவர்களுக்கும் அவமதிப்புதானே உண்டாகும்.

இன்னொரு பக்கம் உண்மையில் பணம் தொலைத்தவர்கள் இதுபோன்று எவரிடமும் போய் பணம் கேட்டு கதைசொல்லி நிற்கமாட்டார்கள் என்றே பட்டது.

ஒருவேளை நம்மிடம் பணம் இல்லாத சூழல் உருவானால் என்ன செய்வோம் என எப்படி யோசித்தும் முன்பின் தெரியாதவரிடம் போய் பணம் கேட்பதாய் கற்பனையில் கூட தோன்றவில்லை.

இதே சென்னையில் கையில் காசில்லாமல் பல கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். பலவேளை உணவு சாப்பிடாமல் பட்டினியில் கழித்திருக்கிறேன். சில நாட்கள் இருக்கும் சொற்பக் காசை வைத்து தேநீரோடு பசியை கடந்து போயிருக்கிறேன். அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது இவர்களது செயல்கள் பெரும் கோபத்தை மட்டுமே உண்டு பண்ணியது. 

கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக நூலகம் சென்று படித்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் கொஞ்ச நேரம் ஓய்வாக உலவிவிட்டு, அங்குள்ள தேநீர்க்கடையில் தேநீர் குடித்துவிட்டு, வழக்கம்போல் அங்கிருந்து நடந்து சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்து ரயிலுக்காக காத்திருந்தேன்.

கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக ஒரு ரயில் கூட வரவில்லை. அதன்பின் வந்த ரயிலில் ஏறி ஓரமாக காலியாக இருந்த இடத்தில் போய் உட்கார்ந்தேன்.

அப்போது, ‘வேர்க்கடலை பர்பி… வேர்க்கடலை பர்பி..’ என ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

பயணங்களின் போது, குறிப்பாக ரயில் பயணங்களின்போது விற்பனை செய்பவர்களின் முகங்களை பார்க்கப் பிடிக்கும். பெரும்பாலும் பார்வை சவால் கொண்டவர்கள், கை கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் தங்கள் குறைகளை கடந்து பசியை வெல்ல முற்படும் அவர்களது முயற்சி அவர்களின் முகத்தில் தெரியும். அதை எப்போதும் பார்ப்பதும் முடிந்தவரை அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை வாங்கி அவர்களது அம்முயற்சியை ஊக்குவிப்பதையும் தொடர்ந்து செய்வேன்.

அன்றப்படி குரல் கேட்டதும் குனிந்து நகர்பேசியை பார்த்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தேன். எதிர்பார்த்தது போல் மாற்றுத்திறனாளிகள் யாரும் இல்லை. மாறாக வேர்க்கடலை பர்பிக்கும் ரயில் விற்பனைக்கும் சம்பந்தமே இல்லாத ஒருவர். அதோடு அவரை இதற்கு முன் எங்கேயோ பார்த்தது போன்ற முகமும் தோற்றமும்.

எங்கென யோசிக்கும் நேரத்தில் அவரது குரலும் அவரோடு நெருங்கி வந்தது.

ஆம்! அன்றைக்கு பத்து ரூபாய் கேட்டு ஏமாற்றிய அந்தப் பெண்மணிதான். அவரேதான்.

அதே நேர்த்தியான உடை. அதே தோற்றம். ஆனால் இம்முறை நேர்மையாக யாரையும் ஏமாற்றாமல் பொய் சொல்லாமல் வேர்கடலை பர்பி விற்கிறார்.

ஆச்சர்யமாக இருந்தது. அவரது இம்மாற்றம் எப்படி நிகழ்ந்தது? அதற்கு யார் காரணமாக இருக்கும்? ஒருவேளை அன்றபடி நாம் திட்டிவிட்டி வந்ததால் இருக்குமோ? ஏதேதோ யோசித்தவாறு பாக்கெட்டுக்குள் கைவிட்டு பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்து,

”ரெண்டு வேர்க்கடல பர்பி கொடுங்க..’’ என்றேன்.

எடுத்துக் கையில் தந்துவிட்டு நான் தந்த பணத்தை வாங்கிக்கொண்டு  லேசாகப் புன்னகைத்துவிட்டு கடந்து போனார்.

போனவர் நான் இறங்கவேண்டிய கோடம்பாக்கத்தில் இறங்கி எதிரில் தாம்பரம் செல்ல தயாராக இருந்த இன்னொரு ரயிலில் ஓடிப்போய் ஏறினார்.

என்னையறியாமல் பெரிதாக ஏதோ சாதித்தது போன்று உணர்ந்தேன்.

அதே இடம், அதே நபர், சில மாதங்களுக்கு முன் பொய் சொல்லி ஏமாற்றி நம்மிடமிருந்து பணம் பிடுங்கிச் சென்றார்.

அதே இடம், அதே நபர், இன்றைக்கு வேர்க்கடலை பர்பி விற்று நேர்மையாக நம்மிடமிருந்து அதற்கான பணத்தை பெற்றுப் போகிறார்.

இக்காலம்தான் எத்தனை வல்லமை கொண்டது. அதிலும் அவை நிகழ்த்தும் மாற்றங்களும் ஏற்றங்களும் தான் எத்தகைய மேன்மை வாய்ந்தது.

ரயில் ஒலித்து லேசாக நகர்ந்து புறப்பட்டது. ஓடிச்சென்று அவர் ஏறிய பெட்டியில் நானும் ஏறினேன். நேராக அவர் அருகில் போய் யாரிடமோ வேர்க்கடலை பர்பி எடுத்துக் கொடுத்தவரிடம்,

”ரெண்டு வேர்க்கடல பர்பி கொடுங்க..’’ எனச் சொல்லி இன்னொரு பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன்.

உடனே இரண்டு வேர்க்கடலை பர்ப்பியை எடுத்துத் தந்துவிட்டு, அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு லேசாகப் புன்னகைத்து நடந்துபோனார்.

மனத்துக்குள் மகிழ்ந்து அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அடுத்த நிறுத்தமான மாம்பலத்தில் இறங்கிக்கொண்டேன்.

நிச்சயம் என் மனத்துக்குள் நான் சொன்ன வாழ்த்து அவரது மனத்துக்கு கேட்டிருக்கும். அதோடு அவ்வாழ்த்து என் அன்றைய வார்த்தைகளை மெல்ல அழித்திருக்கும். ஆம்!

காலமும் சூழலும்தான் ஒருவரை தவறு செய்யத் தூண்டுகிறதென்றால்… அதே காலமும் சூழலும்தான் ஒருவரை சரியானது செய்யவும் தூண்டுகிறதென எனக்குள் சொல்லிக்கொண்டேன். 

ஆமாம்தானே?!

(ஏப்ரல் 10, 2020)

*

முகங்களின் முதலில்

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 4 : திட்டம்மா

முகங்கள் – 5 : ஏகாந்தர்

முகங்கள் – 6 : நகலி

முகங்கள் – 7 : மோனன்

முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

முகங்கள் – 9 : வக்கீலண்ணா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=