முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 2 : அம்மணள்

**

‘அவனுக்கும் எனக்கும் நடுவில்

வருடங்களின் தொலைவு – எனினும்

புத்தகத்தின் முதற் பக்கத்துக்கும்

இரண்டாம் பக்கத்துக்கும்

இடைப்பட்ட நெருக்கம்…’

 – சுகுமாரன்

**

திருக்குறளின் வினைத்திட்பம் அதிகாரத்தில் வரும்,

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து’

என்ற குறளினை மிகப் பிடித்த குறள்களில் ஒன்றென்பேன். காரணம், அவை உதிர்க்கும் செய்தி. அதனை நாள்தோறும் மனத்தில் தாங்கி நடப்பதால், எங்கும் எப்போதும் யார் ஒருவரின் உருவத்தைப் பார்த்து கேலி பேசுவதையும், வடிவத்தை வைத்து எடைபோடுவதையும் அறவே வெறுப்பவன். இதை எனக்கு முப்பால் பாடிய வள்ளுவத் தாத்தன் மட்டும் சொல்லித்தரவில்லை. யாவற்றையும் படைத்த இயற்கை அன்னை சொல்லித்தந்தாள். இன்று நேற்றல்ல; என்றைக்கும்.

ஆம்! அவள் படைப்பில் உயர்ந்தது, தாழ்ந்தது என எதுவும் இல்லை. அவளுக்கு எறும்பும் ஒன்றுதான், யானையும் ஒன்றுதான். புலியும் ஒன்றுதான், பூனையும் ஒன்றுதான். ஆண்டியும் ஒன்றுதான், அரசனும் ஒன்றுதான். 

சென்னை மாநகரில் மிகப் பிடித்த இடங்களில் நூலகத்திற்கு எப்போதும் முதன்மையிடம் தருவேன். அதிலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்தபடியாக என் பட்டியலில் இருப்பது எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம். கிட்டத்தட்ட ஆறு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் (எண்ணியாப் பார்க்கப்போறோம்!). பழைமை மாறாமல் இயங்கிவரும் இந்நூலகத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வதை பல தடவை பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் மனதுக்குப் பிடிக்காத நூலகமாக இருந்த கன்னிமாரா, கடந்த இரண்டு வருடங்களாக வாரத்தில் ஓரிரு நாள் தவறாமல் சென்று வரும் இடமாக மாறிவிட்டது.

சென்னையின் பரபரப்பு மிகுந்த முக்கிய இடங்களில் ஒன்றுதான் இந்த எழும்பூர். அதன் முக்கிய சாலைகளில் ஒன்றான பாந்தியன் சாலையில், அதுவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவர்களும் வந்து செல்லும் பழம்பெருமை வாய்ந்த பல அரிய பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் நூறு வயதைக் கடந்து கம்பீரமாய் நிற்கும் பெரும் மரங்கள் அடர்ந்த இடத்தின் மையத்திலிருக்கும் கன்னிமாரா நூலகமும், அதன் வடிவமைப்பும் பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

சரியாக ஈராண்டுகளுக்கு முன்பு ஒருநாள் அங்கே சென்று நூலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள தமிழ் நூல் அடுக்குகளை ஒவ்வொன்றாகப்  பார்வையிட்டு, கடைசியாக ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’ நூலை எடுத்துப்போய் வரிசையாகப் போட்டிருந்த இருக்கைகளில் கடைசி இருக்கையில் உட்கார்ந்தேன்.

புத்தகம் வாசிக்கையில் சின்ன சத்தம் கூட கேட்கக் கூடாதென நினைப்பேன். அதிலும் குறிப்பாக யாராவது பக்கத்தில் பேசிக்கொண்டிருந்தால் எரிச்சலாக வரும்.

எனக்கு முன்புறம் உள்ள இருக்கையில் ஐம்பது வயதான ஒருவர் உட்கார்ந்து நகர்பேசியில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு எதையோ வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் மேசை மீது தமிழிலக்கண புத்தகம் ஒன்று இருந்தது. சிறிது நேரம் நான் வாசித்த புத்தகத்தை வைத்துவிட்டு, அவரையும் அவர் முன்புள்ள புத்தகத்தையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படி யோசித்தும் அவருக்கும் அந்த புத்தகத்திற்கும் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. அதுவும் காஷ்மீர் – கன்னியாகுமரிக்குமான தூரத்தில் இருப்பதாகப்பட்டது.

நன்கு வாரிய தலைமுடி, சலவை செய்த உடை, நேர்த்தியாக அணிந்துகொண்டு, சரியாக தினந்தோறும் ஒன்பதரை மணிக்கு கன்னிமாரா நூலகத்தின் உள்ளே நுழைந்திடும் அவருக்கு, நூலகம் என்பது அமர்ந்து நகர்பேசியில் படம் பார்க்கவும், சார்ஜ்  தீர்ந்தவுடன் அருகில் இருக்கும் பிளக் பாயிண்டில் சார்ஜ் போட்டுவிட்டு பக்கத்தில் அமர்ந்திருப்பவருடன் கதைகள் பேசி சிரிக்கவும் தான்.

என் புத்தகத்தை படித்துக் கொண்டே நடுநடுவில் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் அக்கம்பக்கம் கூட திரும்பிப் பார்க்காமல் ஏதோ வீடியோ ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென ஹெட்போனைக் கழற்றி மேசைமேல் வைத்துவிட்டு, கால்சட்டை பாக்கெட்டிலிருந்த சார்ஜரை எடுத்துக் கொண்டுபோய் அருகில் மலையாளப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் வரிசைக்கு பக்கத்திலிருக்கும் பிளக் பாயிண்டில் சார்ஜ் போட்டுவிட்டு வந்தமர்ந்தார்.

சரி இப்போதாவது படிப்பார் என எதிர்பார்த்த எனக்கு பெருத்த ஏமாற்றம். அவர் வழக்கம் போல் புத்தகத்தை தொடவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். பின் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு நபரிடம் பேச ஆரம்பித்தார். சரி சில வார்த்தைகள் பேசிவிட்டு நிறுத்திவிடுவார் என நினைத்தேன். ஐந்து நிமிடங்களுக்கும் மேல் விடாமல் பேசி சிரித்துக் கொண்டிருக்க, என்னால் சுத்தமாக அவர்களது பேச்சு சத்தத்தில் படிக்க முடியாமல் போனது. உடனே புத்தகத்தை மேசை மீது வைத்துவிட்டு, அவர்களைப் பார்த்து முறைத்தேன்.

ஒரு தடவை என்னைப் பார்த்தவர், பார்த்தும் பார்க்காதது போல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பின் மீண்டும் என் பக்கம் திரும்பியவர், இன்னமும் நான் அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு, பேச்சை நிறுத்துவது போல் பாவனை காட்டிவிட்டு எழுந்து வெளியே போனார்.

சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தவர், நேராக சென்று சார்ஜில் போட்டிருந்த தன் நகர்பேசியை எடுத்துவந்து அமர்ந்து ஹெட்போன் செருகி மீண்டும் படம் பார்க்க ஆரம்பித்தார். 

சிறிதுநேரம் படித்த நான் மதிய உணவுக்கு நேரம் ஆகிவிட்டதால் படித்த புத்தகத்தை எடுத்துப் போய் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன்.

மீண்டும் அடுத்த வாரம் நூலகம் சென்றபோது அதேபோல் காலை ஒன்பதரை மணிக்கு சரியாக வந்து சேர்ந்தார். வந்தவர் நேராக கட்டுரைத் தொகுப்புகள் வைக்கப்பட்ட நூலடுக்கில் சென்று கைக்கு வந்த ஒரு புத்தகத்தை எடுத்து வந்து வழக்கம்போல் மேசைமேல் வைத்துவிட்டு, பேருக்குக் கூட அப்புத்தகத்தை திறக்காமல் நகர்பேசியில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு படம் பார்க்கத் தொடங்கினார்.

‘அப்படி எதத்தான் இந்த மனுசன் மணிக்கணக்காப் பாப்பாரு?’ எனப் பார்க்க, புத்தகம் தேடுவது போல் எழுந்து அவரின் பின்பக்க அடுக்கில் புத்தகம் எடுக்கப் போய் பார்த்தால் சமையல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.

‘அடப்பாவிங்களா… என்ன இந்த ஆளு சமையல் வீடியோ, அதுவும் இங்க வந்து உக்காந்து பாத்துட்டிருக்காரு’ என எண்ணியவாறு திரும்பவும் வந்து என் இருக்கையில் உட்கார்ந்தேன்.

ஒரு மணி நேரம் சென்றிருக்கும். வழக்கம்போல் அவரது நகர்பேசியில் சார்ஜ் தீரும் வரை வீடியோ பார்த்தவர், எழுந்துபோய் பின்புறம் உள்ள பிளக் பாயிண்டில் சார்ஜ் போட்டுவிட்டு வந்து அருகில் இருப்பவருடன் பேச ஆரம்பித்தார்.

இந்த தடவை அவரைப் பார்த்து முறைக்கவில்லை. இரண்டு நிமிடம் பேசட்டும் என விட்டுவிட்டு,

”பேசற மாதிரினா வெளிலப் போய் பேசுங்க..’’ என்றேன்.

சரி என்பதுபோல் தலையாட்டிவிட்டு, இரண்டு நிமிடம் அமைதியாக சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பின் மீண்டும் பக்கத்திலிருந்தவருடன் குசுகுசுவென பேச ஆரம்பித்தார். எரிச்சலும் கோபமும் வந்தது.

”ஹலோ… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா? இது லைப்ரரி. உங்க இஷ்டத்துக்கு சிரிச்சிப் பேசுற எடமில்ல..’’ என கொஞ்சம் சத்தமாக சொல்ல அமைதியாகிவிட்டார்.

பின் அருகில் இருந்தவரிடம் சார்ஜ் போட்டிருக்கும் தன் நகர்பேசியைக் காட்டி பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, வெளியில் போய் அரை மணிநேரம் கழித்து வந்தார். வந்தவர் நேராக சென்று செல்போனை எடுத்து வந்து என் முன்னால் உட்கார்ந்து, என்னைப் பார்த்து முறைத்துவிட்டு படம் பார்க்க ஆரம்பித்தார்.

இந்த தடவை அவர் பாடல் கேட்கும் சத்தம் ஹெட்போனைத் தாண்டி வெளியில் கேட்டது. அச்சத்தம் தொடர்ந்து படிப்பதற்கு இடையூறாக இருக்க அவரைப் பார்த்து, ”சவுண்ட் கொஞ்சம் கொறைங்க, டிஸ்டர்ப் ஆகுது..’’ என்றேன்.

எரிச்சலோடு என்னைப் பார்த்து முகம் சுழித்துவிட்டு கொஞ்சமாக சத்தத்தை குறைத்தார். அடுத்த வாரம், அடுத்த வாரம் என இரண்டு மூன்று மாதங்கள் இப்படியே போனது. ஒருநாள் மீண்டும் பழையபடி எதிரில் அமர்ந்துகொண்டு சத்தமாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். இந்த தடவை நான் முறைப்பது தெரிந்தும் அவர் வேண்டுமென்றே பேசுவது தெரிந்தது. ஒரு கட்டம் வரைக்கும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்த நான்,

”ஹலோ சார், நீங்க லைப்ரரிக்கு படிக்க வர்றீங்களா? இல்ல படம் பார்க்கவும் கதப்பேசவும் வர்றீங்களா?” என்றேன்.

”ஏன் எதுக்கு வந்தா என்ன?” என்றார் நக்கலாக.

”நானும் போனாப் போவுதுன்னு பாத்துட்டிருக்கன். சும்மா நொய் நொய்னு பேசி படிக்கிறவங்க எல்லாரயும் டிஸ்டர்ப் பண்ணிட்டிருக்கிங்க. இனிமே ஒரு வார்த்த பேசுனீங்கனா லைப்ரரியன் கிட்டப் போய் கம்ப்ளைன்ட் பண்ணுவன்..’’ என்றேன் கத்தி கோபமாக.

”போய் சொல்லுங்க, யார் வேணாம்னா..’’

‘இந்தாளுக்கு எவ்ளோ திமிரிருந்தா லைப்ரரிக்குள்ள ஒக்காந்துப் படிக்காம பேசுறதுமில்லாம, தெனாவட்டா போய் கம்ப்ளைன்ட் பண்ணுனு சொல்வாரு..’ என்று எழுந்து போய் அருகில் இருந்த நூலக உதவியாளர் ஒருவரிடம்,

”அந்த லாஸ்ட் பெஞ்சில உட்கார்ந்து இருக்கவரு, ஒருத்தரயும் படிக்கவிடாம கதப்பேசி தொந்தரவு பண்ணிட்டே இருக்காரு. கேட்டா திமிரா வேற பதில் சொல்றாரு..’’ எனச் சொல்ல, அவரும் உடனே எழுந்து போய் அவரிடம்,

”சார் பேசாமப் படிங்க. இல்லனா வெளிலப் போங்க..’’ என்றார்.  

அதுதொடங்கி என்னை பார்க்கும்போதெல்லாம் முறைப்பார். நானும் பதிலுக்கு முறைத்துவிட்டு என் வேலையைப் பார்ப்பேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்தும் அவர் தினந்தோறும் காலையில் ஒன்பதரை மணிக்கு நூலகம் வருவதையும், பேருக்கு ஒரு புத்தகம் எடுத்து வந்து மேசை மீது வைத்துவிட்டு நகர்பேசியில் படம் பார்ப்பதையும், சமையல் வீடியோ மற்றும் காமெடி வீடியோ பார்ப்பதையும், பாடல்கள் கேட்பதையும், சார்ஜ் காலியானவுடன் சார்ஜ் போட்டுவிட்டு அருகில் இருப்பவருடன் கதைகள் பேசுவதையும் தொடர் வேலையாக வைத்திருந்தார்.

நானும் ‘இந்தாளு சொன்னாத் திருந்துற ஜென்மம் இல்லப்போல’ என ஒரு கட்டத்துக்குமேல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

ஒருபக்கம் அவரது செயல்கள் பார்க்க எரிச்சலாக இருக்கும். இன்னொரு பக்கம், அவரது முகத்தில் எப்போதும் ஒட்டியிருக்கும் சோக ரேகை ஒன்று அவர் மீதான கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிடும். 

ஒருநாள் பத்து மணி ஆகியும் அவரைக் காணவில்லை. ‘என்னடா ஆள இன்னும் காணோமே? ஒடம்பு கிடம்பு ஏதாவது சரியில்லாம லீவு போட்டுட்டாரோ’ எனப் பார்த்தால், கடைசி பெஞ்சில் இருந்து தன் இடத்தை மாற்றி நான்கு பெஞ்ச் முன்னாடி சென்று புதிதாக ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறார்.

‘ஓஹோ… பயபுள்ள எடத்த மாத்திட்டுப் போய் வேலயப் பாக்குறாருப் போல’ என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.

காலை எட்டரை முதல் ஒன்பதுக்குள் நூலகம் சென்றுவிடும் நான், பதினோரு மணி வாக்கில் ஒருமுறை இடைவெளி எடுத்துக்கொண்டு நூலகம் எதிரில் இருக்கும் தேநீர்க் கடைக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு வருவது வழக்கம்.

அன்றப்படி செல்லும்போது தரைதளத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு வெளியில் வர, அவர் சரியாக அப்போதுதான் மின் தூக்கியிலிருந்து இறங்கி வெளியில் வந்தார்.

‘படிச்சிக் கீச்சது ரொம்ப அதிகம்னு இந்தாளு லிஃட்டுல எறங்கி வர்றாரே’ என்று நினைத்துக்கொண்டு தேநீர் அருந்தப் போனேன்.

எப்போது நூலகம் சென்றாலும் அவர் அங்கு இருப்பார். ஒன்று நகர்பேசியில் படம் பார்த்துக் கொண்டிருப்பார். இல்லை என்றால் அருகில் இருப்பவரிடம் (நூலக நண்பர்கள் போல!) கதை பேசிக் கொண்டிருப்பார்.

‘என்ன இந்தாளு இதயே ஒரு தொழிலா வச்சிருக்காரு போலயே’ என நினைத்து, மதிய உணவு நேரத்தில் ஒருநாள் அவர் எழுந்துபோவதைப் பார்த்து நானும் பின்னாலேயே போனேன். வழக்கம்போல் மின்தூக்கியில் இறங்கி அவர் தரைதளம் வருவதற்குள், நான் படிகள் வழியாக இறங்கி சென்றேன். கழிவறை சென்று சிறுநீர் கழித்து விட்டு வெளியில் வந்தவர், நேராக பொருட்கள் வைக்கும் இடத்திற்குப் போய் தன் பாக்கெட்டிலிருந்த டோக்கனைக் கொடுத்து தன் சாப்பாட்டு பையை வாங்கினார்.

பின் நேராக வெளியில் சென்றவர், நூலகத்தின் வலது பக்கம் உள்ள சாப்பிடும் இடத்திற்குப் போனார். அங்கே அவருக்காக காத்திருக்கும் நண்பர்களுக்கு (சாப்பிடும் நேர நண்பர்கள்!) ‘ஹாய்’ சொல்லிவிட்டு அவர்களுடன் உட்கார்ந்து கதைகள் பேசியவாறு சாப்பிட ஆரம்பித்தார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. யார் இவர்? ஏன் தினந்தோறும் அலுவலகம் செல்வது போல் சலவை செய்த நேர்த்தியான உடைகள் உடுத்திக்கொண்டு, டை மட்டும்தான் கட்டவில்லை, மதிய உணவு கூட வீட்டிலிருந்து விதவிதமாக கட்டிக்கொண்டு வருகிறார்?

இங்கே வருவது அவர் வீட்டில் உள்ளோருக்குத் தெரியுமா அல்லது தெரியாமல்தான் வந்து போகிறாரா? ஒருவேளை வேலைக்கு செல்வதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு இங்கு வருகிறாரா? இது அவர்கள் வீட்டுக்குத் தெரிந்தால் என்னாகும்? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.

சரி அடுத்த வாரம் வரும்போது என்னானாலும் காத்திருந்து அவர் எங்கே செல்கிறார் என பின் தொடர்ந்துபோய் வீட்டை பார்த்துவிடவேண்டியதுதான் என முடிவெடுத்தேன்.

நினைத்தது போல் அடுத்த வாரம் மாலை 6 மணிக்கு அவர் நூலகம் விட்டுக் கிளம்ப, அவரைப் பின் தொடர்ந்து நானும் கீழே இறங்கி வந்தேன். மின் தூக்கியில் இறங்கியவர் நேராக கழிவறைக்கு வெளியே உள்ள தண்ணீர் குழாயில் முகம் கழுவி, தலை சீவி, கைக்குட்டையால் நன்கு துடைத்துக்கொண்டு, தன் உடையை நேர்த்தியாக மீண்டும் இன் செய்துகொண்டு வெளியில் வந்தார்.

வந்தவர் நேராக சென்று மரத்தடியில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனம் ஒன்றில் தன் உணவுப் பையை மாட்டிவிட்டு, வாகனத்தை பின்புறம் நகர்த்தி, அதன் மீது உட்கார்ந்து ஹெல்மெட் மாட்டிக்கொண்டு புறப்பட்டு நுழைவு வாயில் நோக்கிச் சென்று வலதுபக்கம் திரும்பினார் (அதுவும் ராங் ரூட்டில்).

என்னிடம் இருசக்கர வாகனம் இல்லாத காரணத்தால் என் பின்தொடரும் திட்டத்தை அதோடு கைவிட்டு அறைக்குத் திரும்பினேன். சரியாக இரண்டு மாதம் கழித்து ஒருநாள் நண்பரை ஐந்தரை மணி வாக்கில் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கன்னிமாரா நூலகம் வரச் சொல்லியிருந்தேன்.

வந்தவருடன் வெளியில் மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, சரியாக ஆறு மணிக்கு அவர் நூலகம் விட்டு வெளியில் வந்தார். உடனே அவரை நண்பரிடம் காட்டி,

”நாம இன்னிக்கு அவர ஃபாலோ பண்ணி அவர் வீட்டு வரக்கும் போகப்போறோம். ஏன், எதுக்குன்னு அப்பறம் சொல்றன்’’ என்றேன். அவரும் சரி என்றார்.

சொன்னதுபோல் அவரைப் பின்தொடர்ந்துப் போக, மேயர் ராமநாதன் சாலை வழியாக சேத்துப்பட்டு சிக்னல் கடந்து, ஈகா திரையரங்கம் முன்புறம் இடதுபக்கம் திரும்பி, பச்சையப்பன் கல்லூரி தாண்டி, அமைந்தகரை என்னும் அமிஞ்சிக்கரையின் தெரு ஒன்றில்  நுழைந்தார். பின்னாலேயே சென்ற நாங்கள், அவர் வாகனம் வசதியான அடுக்ககம் ஒன்றினுள் நுழைவதைப் பார்த்து ஓரமாக நிறுத்தினோம்.

அதன் முன்புறம் ஒரு தேநீர்க்கடையும், அதையொட்டி ஒரு துணி சலவை செய்யும் கடையும் இருந்தது.

நண்பரிடம் ”ஒரு டீ சாப்டலாமா?” என்றேன்.

ஆளுக்கொரு தேநீர் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தின் அருகில் சென்று நின்றவாறு, அவர் சென்ற அடுக்ககத்தையே பார்த்துக்கொண்டு சில நிமிடங்கள் எதுவும் பேசாது நின்றிருந்தேன். பின் நண்பரிடம் அவரைப் பற்றியும், அவரது தினசரி வேலைகள்  பற்றியும் சொல்ல, ஏதோ மாதிரி பார்த்தார்.

அந்த பார்வையில் ஓராயிரம் கேள்விகள் இருந்தன. எல்லா கேள்விக்குமான ஒற்றை பதிலாக இருக்கும் அவருக்கு பெயர் ஒன்று வைக்க நினைத்தேன். சட்டென மனம் சொன்னது, நூலகன். என்னையறியாமல் சின்னதாக புன்னகைத்தேன். அதேநேரம் நண்பரும் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

அறிவை விரிவாக்கவும், மனதை விசாலப்படுத்தவும் நூல்களைத் தேடி வாசிக்க ஒவ்வொருவரும் நூலகம் நோக்கி செல்கிறோம். இந்த வாழ்க்கைதான் எத்தனைப் புதிரான புத்தகம். தினந்தோறும் அதைப் படிக்கப் படிக்க வியத்துகிறது. சிலர் அதன் அருமை உணர்ந்தவர்கள். ரசித்து ரசித்துப் படிக்கிறார்கள். சிலரோ, அதன் மகத்துவம் அறியாதவர்கள். முதல் பக்கத்தைக் கூட இன்னமும் திறக்காமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.

ஆம்! அவர் குறித்து இங்கே நமக்கு ஆயிரம் கேள்விகள் எழலாம். சிலருக்கு அவர் ஏளனமாகத் தெரியலாம். பலருக்கு ஒரு பொருட்டாகவே இல்லாமல் இருக்கலாம்.

வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் என்பார்கள். நிச்சயம் அவருக்கும், அவரது இத்தகைய வாழ்க்கைக்கும், செயலுக்கும் பல நியாயங்கள் இருக்கத்தான் செய்யும்.

ஆம்! அது அவருக்கானது. அவருக்கு மட்டுமேயானது.

(ஏப்ரல் 03, 2020)

*

முகங்களின் முதலில்…

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=