முகங்கள் – 5 : ஏகாந்தர்

முகங்கள் – 4 : திட்டம்மா

**

‘காலையில் கதவைத் திறந்தால்

பால்கனியில் பறவையைக் காணோம்.

மெளன சாட்சியாய் தரையில்

இலவம் பஞ்சு போல் அதன் ஒற்றை இறகு.

குனிந்து கையில் எடுக்கப் போன என்னைப் பார்த்து

அலறியது குழந்தை..

சிறகுக்கு

தானியமும் தண்ணீரும் வைக்கச் சொன்னது குழந்தை..

மறுநாள் காலையில்

கதவைத் திறந்தால்

சிறகு எங்கோ பறந்து போய் இருந்தது..’

 – இந்திரன்.

**

‘ஓடுற பாம்ப எட்டி மெதிக்கிற வயசு’ என்பார்கள் இளமைப் பருவத்தை. காரணம் அப்பருவம்தான் எளிதில் எட்ட முடியாத இலக்கையும் சுலபத்தில் செய்யமுடியாத காரியத்தையும் செய்து காட்டும் வல்லமை வாய்ந்தது.

வயது என்பது வெறும் எண் என என்னதான் நாம் வசனமாகச் சொல்லிக் கொண்டாலும், சிலவற்றை செய்து காட்ட வயதும், அந்த வயது தரும் தெம்பும் பலமும் நம்பிக்கையும் மிக முக்கியமாகிறது.

உதாரணமாக, ஒருவர் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி இந்திய அளவில் அல்லது உலக அளவில் சாதனை படைக்க விரும்புகிறார் என வைத்துக்கொள்வோம். நல்ல ஆசைதான், முடியக்கூடிய ஆசைதான். ஆனால் எல்லோராலும் முடியக்கூடிய ஒன்றா எனில், இல்லை என்பதுதான் பதில்.

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி இலக்கை எட்ட, நல்ல உடல் பலமும், நீண்ட நாள் பயிற்சியும், அத்துடன் விடாமுயற்சியும் ஒருங்கே கொண்ட ஒருவரால்தான் முடியும். அதாவது நல்ல உடல் பலமும் தெம்பும் நீண்ட நாள் பயிற்சியும் விடாமுயற்சியும் ஒருவருக்கு உடல் மற்றும் மனம் சார்ந்தது. இங்கே உடல் சார்ந்தது என சொல்வதை விட வயது சார்ந்தது என சொல்வதே தகும்.

இளமைப் பருவத்தில், உடல் ஒத்துழைக்கும் 40, 45 அல்லது அதிக பட்சம் 50 வயதுக்குள் நிகழ்த்தக்கூடிய சாதனை இது. ஆனால் அதுவே உலகின் மகத்தான புதினம் ஒன்றை எழுத நினைப்பவருக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதால் 80, 90 வயது கடந்தும் கூட எழுதலாம். சாதிக்கலாம்.

ஆக, சிலவற்றை செய்ய வயதும் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாத உண்மையாகத்தான் எப்போதும் பார்க்கிறேன்.

கடந்தாண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள் நண்பரோடு சேர்ந்து தஞ்சாவூரில் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யாராக இருக்கும் என்ற கேள்வியோடு எடுத்தேன்.

”வடிவரசு சாருங்களா? (ஆமாம் என்றேன்) நான் ஒரு புரொடியூசர் பேசுறன் சார் (அவர் பெயரும் சொன்னார்). உங்க நம்பர ஒரு வருசமா தேடிட்டிருக்கன் சார். தினத்தந்தியில வந்த உங்கப் பேட்டியப் படிச்சிட்டு எப்படியாவது உங்ககிட்ட பேசணும் நெனச்சு தந்திலயும், லயோலா காலேஜ்லயும் பலவாட்டி போன் போட்டு கேட்டுப் பாத்துட்டன். இல்லன்னு சொல்லிட்டாங்க. உங்கள பாக்கணும் சார். எப்ப வந்து என்னப் பாப்பீங்க சார்?” என நீண்டது அவரது பேச்சு.

அவரது குரலையும் அவர் பேசிய விதத்தையும் கொண்டு பார்த்தால் அவருக்கு நிச்சயம் 70 வயதிருக்கும் என தோன்றியது. அதோடு அவரது பேச்சில் உதிர்த்த பெரும் பதற்றம், ஏன் இப்படி பேசுகிறார் என்ற கேள்வியையும் எனக்குள் எழுப்பியது.

பின் அவரிடம் நான் சென்னை வந்ததும் அழைத்துவிட்டு நேரில் வந்து பார்ப்பதாகச் சொல்லி வைத்துவிட்டேன். நான்கு நாட்கள் கழித்து மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு, அன்று காலையில்தான் சென்னைக்கு வந்திருந்தேன். மாலை போல அவரை சந்திக்கலாம் என்பதுதான் திட்டம். அதற்குள் அவரே அழைத்து,

”மெட்ராஸ்க்கு வந்துட்டீங்களா சார்? எப்போ என்ன வந்து பாப்பீங்க சார்? வயசானவன்னு ஒதுக்கிடாம தயவுசெஞ்சி வந்து பாருங்க சார்’’ என்றார்.

அவர் அப்படிக் கேட்டது ஒருவித சங்கடத்தை உண்டு பண்ணியது. அவரிடம் இன்றைக்கே வந்து பார்ப்பதாகச் சொல்லி முகவரி கேட்டு குறித்துக் கொண்டேன்.

சென்னையின் மிக முக்கிய சாலைகளில் ஒன்றான அண்ணாசாலை. பரபரப்பான ஆயிரம் விளக்குப் பகுதி. அவர் சொன்ன உணவகத்துக்கு பக்கத்துத் தெருவில் நுழைந்து – மருந்துக் கடை கடந்து – தேநீர்க்கடை தாண்டி – இரண்டாவது வலதுபுறத் தெருவுக்குள் திரும்பி – அவர் குறிப்பிட்ட அடையாளத்தோடு செம்பருத்திப் பூச்செடிக்கருகில் இருக்கும் மர கேட்டைத் திறந்து அழைப்பு மணியை அழுத்தினேன்.

இடுப்பில் பழைய துண்டு ஒன்றை கட்டிய வயதான முதியவர் ஒருவர் வந்து,

”வடிவரசு சாருங்களா?’’ என்றார்.

”ஆமாங்கய்யா” எனச் சொன்னதும், உள்ளே சென்று சாவி எடுத்துவந்து பூட்டிய பழைய கிரில் கதவின் பூட்டைத் திறந்து ஒரு பக்கத்தை மட்டும் தள்ளிவிட்டு உள்ளே வருமாறு அழைத்துப் போனார்.

”அஞ்சு நிமிசம் இங்க உக்காருங்க சார். சாமி கும்புட்டுட்டு இருந்தன், இதோ வந்துடுறன்..’’ எனச் சொல்லி அருகில் இருந்த அறைக்குள் சென்றார்.

அவர் காட்டிய இருக்கையில் உட்கார்ந்தேன். மிகப் பழைய வீடு. எப்படியும் கட்டி நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அவர் தவிர வேறு யாரும் வீட்டில் இருப்பது போல் தெரியவில்லை. பெரிய மின்விசிறி ஒன்று மெதுவாக லேசான சத்தத்துடன் சுற்றிக்கொண்டிருந்தது. அதன் கீழே ஹாலின் மத்தியில் ஒரு மர டேபிள். அதன்மீது ஒரு பிளாஸ்டிக் தட்டு. அதில் இரு ஆப்பிளும் ஓர் ஆரஞ்சுப் பழமும். அதற்குப் பக்கத்தில் ஓரமாக நான்கைந்து டயரியும், இரண்டு புத்தகமும், செய்தித்தாளும், அதற்கு அப்படியே நேராக சுவர் ஓரத்தில் மரக்கட்டில் ஒன்றும். அதன் மீது அழுக்கான போர்வையும், இரண்டு அழுக்குத் தலையணையும். ஹாலின் மறு பக்கத்தில் பழைய மாடல் சோனி டிவி ஒன்றும், அதனருகே அரசு தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் இருந்தது.

இவை தவிர, சுவரில் அங்கொன்று இங்கொன்றாக மூன்று பெரிய கடிகாரங்கள், இரண்டு மாத காலண்டர்கள் மற்றும் ஒரு நாள் காலண்டர். அதற்கு கொஞ்சம் மேலாக, பழைய திரைப்படங்களில் வரும் கறுப்பு வெள்ளை ஒளிப்படம் போன்று வரிசையாக நான்கைந்து ஒளிப்படங்கள் சட்டகம் போட்டு மாட்டியிருந்தது. அதில் எது இவராக இருக்கும் என உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அறைக்குள்ளிருந்து வேட்டிக்கு மாறி வெளியில் வந்தார்.

”மன்னிக்கணும் சார், உங்கள காக்கவச்சிட்டன்..’’ என்று சொல்லிவிட்டு, மேசை மீதிருந்த டைரியை எடுத்து அதனுள்ளே வைத்திருந்த செய்தித்தாளை வெளியில் உருவி,

”நான் பொய் சொல்றன்னு நீங்க நெனச்சிடக் கூடாது சார். உங்கப் பேட்டி வந்த தினத்தந்தி பேப்பரு இது. யார் யார்கிட்டயோ உங்க நம்பரக் கேட்டுப்பாத்துட்டன். பேப்பர் வந்த அன்னிக்கே தந்தி ஆபீசுக்கு போன் போட்டுக் கேட்டேன். நீங்க படிச்ச லயோலா காலேஜிலதான் என் மருமக வேலப் பாத்தாங்க. அங்கையும் கேட்டுட்டேன். கடைசியா உங்க ஊருக்கே கெளம்பி வந்துடலாம்னு நெனச்சப்போதான் ராணியில உங்கப் பேட்டி வந்தது. அவங்கதான் சார் உங்க நம்பரக் குடுத்தாங்க..’’ என விடாமல் பேசியவர், சிறிது இடைநிறுத்தி, 

”யாரும் நம்பி தர மாட்றாங்க சார் நம்பரு. நான் ஒரு புரடியூசர், சேம்பர்ல கூட இருக்கன்னு சொல்லிப்பார்த்துட்டன். ஒரு நிமிசம் இருங்க சார்…’’ என மீண்டும் நடந்து போய் பூஜை அறைக்குள் இருந்து ஒரு பையை எடுத்து வந்தார்.

”இத பாருங்க சார். இதோ முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) பக்கத்துல நிக்கிறது யாருன்னு பாருங்க சார். என்னோடப் படத்தப் பாராட்டி ஒரு லட்ச ரூபா பரிசு கொடுத்தாங்க சார். இது என் படத்தோட பூஜயில எடுத்தப் போட்டோ சார், சிவாஜி எம்ஜிஆர் எல்லாரையும் எனக்குத் தெரியும் சார். அவங்க கூடயெல்லாம் வேலப் பாத்திருக்கன். கண்ணதாசன்தான் என் படத்துல எப்பவும் பாட்டு எழுதுவாரு. இந்த போட்டோவப் பாருங்க சார், இது என்னுடைய முதல் பட ஷூட்டிங்ல எடுத்தது. இது வாகினி ஸ்டூடியோவுல எடுத்தது. இது என் படம் பத்தி நியூஸ் பேப்பர்ல வந்த செய்தி சார்..’’

அவரிடம் இருக்கும் ஓர் ஒளிப்படம் விடாமல் காட்டினார். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு விளக்கம் வேறு சொன்னார். திடீரென என்ன நினைத்தாரோ,

”சார் என்ன நீங்க மன்னிக்கணும் சார். வீட்டுக்கு வந்தவருக்கு தண்ணி கூட குடுக்கல பார்த்தீங்களா சார். ஞாபகமறதி சார். வயசாயிடுச்சு, 73 வயசாவுது, தப்பா எடுத்துக்காதீங்க சார். இந்தாங்க, இந்தத் தண்ணியக் குடிங்க சார்..’’

கண்ணாடி கிளாஸ் ஒன்றில் தண்ணீர் பாட்டிலிலிருந்து ஊற்றிக் கொடுத்தார். பேருக்கு ஒரு வாய் வாங்கிக் குடித்தேன்.

”வீட்ல யாராது இருந்திருந்தா கேட்டிருப்பாங்க சார். நான் ஒண்டிக்கட்ட. எத எங்கவச்சன்னுக் கூட தெரிய மாட்டேங்குது சார். மறதி சார். நோவாளி சார்..“

அதற்குள் வெளியில் யாரோ அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது.

”இருங்க சார்’’ என சொல்லிவிட்டுப் போனவர், வெளியில் யாரிடமோ கத்திப் பேசிக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் உள்ளே வந்தவர்,

”மேல வீட்ல டிவி ஓடலன்னு போன் பண்ணாங்களாம். என் உயிர வந்து வாங்குறான். மேல வீட்லக் கூப்டதுக்கு அங்கதான சார் போய் பாக்கணும். இப்டி தெனமும் என் உயிர வாங்கவே நாலு பேர் வந்துட்றானுங்க. ஒரு நிமிசம் சார்..“

மேசை மீதிருந்த இன்னொரு நோட்டிலிருந்து தினமணியில் வந்த என் பேட்டியையும், தினமலரில் வந்த பேட்டியையும் எடுத்துக் காட்டினார்.

”ஒரு வருசமா உங்கள தேடிட்டு இருக்கன் சார். உங்க ஊருக்கு போலாம்னு கூட தயாராயிட்டன். மத்தவங்க மாரி நெனச்சதும் எங்கேயும் வெளியலாம் என்னால போவ முடியாது சார். துணைக்கு ஒருத்தர தேடணும். கடவுள் புண்ணியத்துல ராணி ஆபீஸ்ல உங்க நம்பர் குடுத்தாங்க. இல்லன்னா கார் வச்சி ஒரு ஆளுக்கு கூலி கொடுத்து கூட கூட்டிட்டு அவ்ளோ தூரம் வந்திருக்கணும் சார்.

”சேம்பர்ல கூட உங்க நம்பரு கேட்டுப் பார்த்துட்டேன் சார். பாடலாசிரியர் சங்கத்துல கூட கேட்டுட்டேன் சார். என்ன சார் பண்ணுவன் இந்த உடம்பு வச்சிகிட்டு. நோவாளி சார். வீட்டுக்குள்ள நடந்தாலே கால் வலி தாங்க முடியல…’’ என்றபோது, மீண்டும் அழைப்பு மணி அடித்தது. கடிகாரத்தை பார்த்தார். இரவு 8 மணி.

”சாப்பாடு வந்திருக்கும், இருங்க சார்..’’ என்று எழுந்து போனவர், ஒரு பிரபல உணவகத்தின் பையோடு உள்ளே வந்தார்.

”சாப்பாடு சார். தெனமும் மூணு வேள ஹோட்டல்ல இருந்துதான் வருது சார். எவ்ளோ தராணுங்க பாருங்க சார். நாலு வாய் கூட உள்ளாரப் போவ மாட்டேங்குது சார். ஒண்ணுக்கு ரெண்டு பொண்டாட்டி கட்டியும் கடைசி காலத்துல தனியா வுட்டுட்டு போயிட்டாளுவ. புள்ளிங்க ரெண்டு பேர் இருந்தும் ஒருத்தனும் இருக்கானா இல்லயான்னு கூட எட்டிப் பாக்க மாட்டானுங்க. பொண்ணு வெளிநாட்டுல இருக்கா சார். அவதான் நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்படக் கூடாதுன்னு மாசம் பதினஞ்சாயிரம் கட்டி மூணு வேள சாப்பாடு தர சொல்லியிருக்கா…“

சட்டென பேச்சை நிறுத்திவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார். என்ன நினைத்தாரோ, எழுந்து அறைக்குள் போய் ஓர் ஒளிப்படத்தை எடுத்து வந்து,

”இதுதான் சார் என் பசங்க. லட்ச லட்சமா சம்பாதிக்கிறாங்க. பெரிய வீடும் கட்டி, குடும்பத்தோட இருக்காங்க. எப்பவாது மூணு நாலு மாசத்துக்கு ஒருதடவ கடனுக்குன்னு வந்து எட்டிப் பார்த்துட்டு போவானுங்க. அஞ்சு நிமிசம் கூட இருக்கமாட்டாங்க சார். அவ்ளோதான் சார் புள்ளைங்க. இதான் சார் என் வாழ்க்க. சொல்லவே கூசுது சார். அதான் அவனுங்க போட்டோ கூட வெளியில இருக்கக்கூடாதுன்னு கழட்டிட்டுப் போய் உள்ளார வச்சிருக்கன்.. ” என்று சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் எழுந்து போனார்.

ஒரு நிமிடம் கூட இருக்காது. போன வேகத்தில் வெளியில் வந்தவர், ”படம் ஒண்ணு பண்ணணும் சார். இவங்க முன்னாடிலாம் நான் யாருன்னு காட்டணும் சார். என்ன அவமானப்படுத்துன எல்லாருக்கும் நான் யாருன்னு காட்டணும் சார்..’’ என்றார்.

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

”நீங்கதான் சார் என் படத்துக்கு பாட்டு எழுதணும். எழுத மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க. கதையெல்லாம் ரெடியா வச்சிருக்கன். ரெண்டு மூணு பேரு கதையும் தரன்னு சொல்லிருக்காங்க. நீங்க இன்னொரு நாளு வாங்க சார். கதைய சொல்றன். கண்டிப்பா நீங்கதான் சார் பாட்டு எழுதணும்..’’ என்றார்.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆகிவிட்டது. அவரும் சாப்பிட வேண்டும், நானும் அறைக்கு சென்று சமைத்து சாப்பிட வேண்டும்.

”சரிங்கய்யா, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றன்..’’ என்று சொல்லி இருக்கையிலிருந்து எழுந்தேன்.

”கண்டிப்பா வரணும் சார். இவங்க முன்னாடி நான் படம் பண்ணிக் காட்டணும் சார்..’’ என்று சொன்னதையே திரும்பத் திரும்ப நான்கைந்து தடவை சொன்னார்.

பார்க்க பரிதாபமாக இருந்தது. அவரது முகம், வயது, உடல்நிலை, சுற்றம், சூழல் யாவும் அறைக்கு வரும்வரை நினைவில் வந்துவந்து போனது.

இந்த வயதில் ஏன் இவருக்கு இப்படி ஓர் ஆசை? உண்மையில் இது சரியான ஆசைதானா? பணமும் திறமையும் இருப்பதாகவே இருக்கட்டும். அது மட்டும் சினிமா எடுக்கப் போதுமா? இந்த வயதில் எப்படி இவரால் ஒரு படம் இயக்க முடியும்? வீட்டுக்குள் நடப்பதற்கே கால் வலிப்பதாக சொல்பவர், எப்படி ஷூட்டிங், எடிட்டிங், ரெக்கார்டிங் என அலைவார்?

இன்னொரு பக்கம் இவரிடம் நாம் தான் சொல்லி எப்படியாவது புரிய வைக்க வேண்டும். இல்லையெனில் ஏமாற்றுவோர் அதிகம் நிறைந்த சினிமா உலகம் இவரை வெகு எளிதில் ஏமாற்றி, இருக்கும் வீட்டையும், ஏன் கட்டிய வேட்டியையும் கூட உருவி விடுவார்கள் என்று நினைத்தவாறு அன்றைக்கு உறங்கிப் போனேன்.

இரண்டு வாரம் சென்றிருக்கும் அவரே அழைத்தார்.

”என்ன சார் வரன்னு சொல்லிட்டு வரவே இல்ல. வந்து என் கதைய கேட்குறன்னு சொன்னீங்க சார். வயசானவன் ஏதோ சும்மா வேலவெட்டி இல்லாம பொலம்புறான்னு நீங்களும் நெனச்சுட்டீங்களா சார்?” என்று அவர் கேட்க, சங்கடமாகப் போய்விட்டது.

உண்மையில் அந்த இரண்டு வாரமும் வேலையாகத்தான் அலைந்து கொண்டிருந்தேன். இரண்டு தடவை நடுவில் அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்தும், அதற்கான நேரம் அமையவில்லை. நாளைக்கே வருவதாக சொல்லி, அடுத்த நாள் காலையிலேயே அவரது வீட்டுக்குப் போனேன்.

அன்றைக்கும் நான் சென்ற நேரம் பூஜையில் இருந்தார். உட்காரச் சொல்லிவிட்டு சில நிமிடங்களில் மீண்டும் அன்றைக்கு காட்டிய அதே ஒளிப்படங்களோடு வந்தார். திரும்பவும் அவற்றையெல்லாம் பார்க்கச் சொல்லி தந்தார். பார்த்தேன். பின் அவற்றை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவர், இன்னொரு பேப்பர் கவரோடு வந்தார். அதிலிருந்த நோட்டு ஒன்றை வெளியில் எடுத்து,

”இதுதான் சார் நான் எடுக்கப் போற படத்தோட கத. பெற்று வளர்த்த தந்தைய மதிக்காம உதாசீனம் செய்த பிள்ளைகளை தந்தை ஜெயிச்சி காட்டுறாரு. இதான் சார் படத்தோட ஒன்லைனு..’’ என்று சொல்லி என் கையில் அந்நோட்டை தந்தார்.

பழைய கோடு போட்ட நோட்டு. இங்க் பென்னால் எழுதியிருந்தார். எப்படியும் இருபது வருடங்களுக்கு முன்பு எழுதியிருப்பார் என நினைக்கிறேன். ஆங்காங்கே அடித்தல் திருத்தல். நான்கைந்து வரிகள் படித்துப் பார்த்தேன். நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முந்தைய தோரணையில் இருந்தது.

என்ன சொல்வது? எப்படி சொல்லி அவருக்கு புரிய வைப்பது? பெரும் சங்கடத்தில் சிக்கிக் கொண்டதாய் உணர்ந்தேன். உடனே அவரிடம்,

”கடைசியா என்ன படம் பார்த்தீங்க ஐயா?” என்றேன்.

”கே. டிவில தான் எப்பயாவது படம் பார்ப்பன் சார். படமா எடுக்குறாங்க? சகிக்கல சார். கொஞ்சநேரம் பார்த்தாலே தலவலி வந்துடும், ஆஃப் பண்ணிட்டு படுத்துடுவேன் சார்..’’ என்றார்.

பிறகு ஒருவாறு துணிந்து, ”ஐயா, சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க இந்த வயசுல படம் எடுக்கணும்னு நெனைக்கிறத நான் தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா அதுக்கான ஆசை மட்டும் இருந்தாப் போதாது. நான் சொல்லிதான் உங்களுக்குத் தெரியணும்னு இல்ல. சினிமாங்கிறது ஒருத்தர் சம்பந்தப்பட்ட வேலை இல்ல. பல பேர சந்திக்கணும். பல பேர்கிட்ட வேலை வாங்கணும். ஒடணும், அதுக்கு உடம்புல தெம்பிருக்கணும். அதிக ஏமாத்து நடக்குற இடம் சினிமான்னு சொல்வாங்க. அதனால எப்பவும் எச்சரிக்கையா இருக்கணும். அதோட முக்கியமா இன்னிக்கு இருக்க சினிமா வேற, நீங்க பாத்த சினிமா வேற, இதுக்கு ஏத்த மாதிரி நீங்க அப்டேட்டா இருக்கணும். இது எதுவுமே உங்களுக்கு சரியா வரும்னு எனக்குப் படல ஐயா. அதனாலதான் சொல்றன், இந்த சினிமா ஆசைய இத்தோட தூக்கி ஓரமா வச்சிடுங்க. அதான் உங்களுக்கு நல்லதுன்னு எனக்குத் தோணுது. என்னடா இவன் இப்டி சொல்றானேன்னு தப்பா நெனச்சாலும் பரவால்ல ஐயா. உங்கமேல இருக்க அக்கறையினாலயும், நீங்க யார்கிட்டயும் மாட்டி ஏமாந்து நடுத்தெருவுல நிக்கக்கூடாதுன்னும்தான் சொல்றன். அப்புறம் உங்க விருப்பம் ஐயா..’’ என்று ஒருவாறு சொல்லி அவருக்குப் புரிய வைத்தேன்.

அவரும் புரிந்து கொண்டவராய் தலையாட்டினார். ஆனாலும், அவரது

முகத்தில் தெரிந்த வருத்தமும் ஏக்கமும் என்னையும் வருந்தச் செய்தது.

‘வேறு வழியில்லை, நாம செய்ததுதான் சரி’ என மனதை தேற்றிக்கொண்டேன்.

அதுமுதல் அவர் என்னை அழைக்கவில்லை. இருந்தபோதும் வாரத்தில் இரண்டு மூன்று தடவையாவது அவரது ஞாபகம் வந்துவிடும். சரி என்றாவது அழைப்பார் என்று விட்டுவிடுவேன். பின் சில மாதங்கள் கழித்து என் முதல் புத்தகமான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூலின் ஒரு பிரதியை அவருக்குக் கொடுத்தால் என்ன என்று தோன்ற, ஒருநாள் காலை பதினோரு மணி வாக்கில் நேராக அவரது வீட்டுக்குச் சென்று  அழைப்பு மணியை அழுத்தினேன்.

வெளியில் வந்தவர் என்னை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உள்ளே அழைத்து உட்காரவைத்து,

”பெத்த புள்ளைங்கதான் நம்ப மாட்றாங்க, அவமானப் படுத்துறாங்கன்னு உங்ககிட்ட சொன்னேன் சார். நீங்களும் என்ன நம்பாம ஆசை, கனவுல்லாம் இந்த வயசுல எதுக்கு தூக்கிப்போடுன்னு சொல்லிட்டு போனது கஷ்டமா போச்சு சார். அப்புறம் யோசிச்சு பார்த்தா நீங்க சொன்னதுதான் சரின்னும் பட்டுச்சு. சரி கடவுளாப் பார்த்து இவர அனுப்பி வச்சிருக்காரு போலன்னு உங்களுக்கு நாலஞ்சு தடவை போன் போட்டேன் சார். லைனே கிடைக்கல. நம்பர் கிம்பர் மாத்திட்டீங்க போல, இனி பாக்கமுடியாதுன்னு நெனச்சிட்டன் சார். நல்ல வேள நீங்களே வந்துடீங்க..’’ என்றார்.

‘அப்பாடி’ என்றிருந்தது. நல்லவேளை நான் சொன்னதை புரிந்துகொண்டார் என மகிழ்ந்தேன்.

பின் அவரிடம் என் புத்தகத்தை கொடுத்தேன். அவ்வளவு மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டார்.

”எவ்ளோ சம்பாதிச்சு என்ன சார் நான்லாம் சாதிச்சிட்டன். கடைசி காலத்துல கேக்க நாதியத்துப் போய் இருக்கன். ஆனா நீங்க பெத்து வளத்தவங்கள, இதவிட வேறென்ன சார் பெருமைபடுத்திடமுடியும்..’’ என்று ஏதேதோ சொன்னார்.

பின் அங்கிருந்து விடைபெற்று வந்தேன். அடுத்தடுத்த தினங்களில் ஒவ்வொரு கட்டுரையாக வாசித்துவிட்டு அழைத்துப் பேசினார். ஒவ்வோர் அத்தியாயம் குறித்தும் அவ்வளவு சிலாகித்து சொன்னார். புத்தகத்தை முழுதாகப் படித்துவிட்டு,

”இன்னும் இந்த ஆண்டவன் ஏன்டா என்ன உயிரோட வச்சிருக்கான்னு ஒவ்வொரு நாளும் நெனைப்பேன் சார். இந்த புத்தகத்தப் படிக்கவும், இப்படி ஒரு புள்ளய வாழ்க்கையில பார்க்கவும்தான்னு இப்போ தோணுது சார். மனசார சொல்றன் நீங்க எப்பவும் நல்லாருக்கணும் சார். கண்ணதாசன்லாம் தாண்டி பெரிய பாடலாசிரியரா வரணும் சார். வயசுல சின்னவன்லாம் நெனக்கல சார், உங்க கால்ல விழுந்து கும்பிடலாம் சார்..’’ என்றதும், என்னையறியாமல் கண் கலங்கிவிட்டேன்.

”ஐயாய்யா பெரிய வார்த்தைலாம் சொல்லாதீங்கய்யா. நீங்க மனசார வாழ்த்தினதே எனக்குப் போதும்யா. இதைவிட பெரிய ஆசீர்வாதம் என்னய்யா எனக்கு இருந்துடப் போவுது..’’ என்று சொல்லி நன்றி கூறிவிட்டு, சீக்கிரமே நேரில் வந்து பார்ப்பதாகச் சொல்லி வைத்தேன்.

அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு மூன்று தடவை அவரைப் பார்க்க நினைத்து புறப்பட்டும் வேறு வேலைகளால் போகமுடியாமல் போனது.

ஒருநாள் இரவு பதினொரு மணி இருக்கும், அவரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போதுதான் படுத்தேன்.

‘ஏன் இந்த நேரத்துல கூப்பிடுறாரு, ஒருவேள ஏதாவது அவசரமா இருக்குமோ?’ என உடனே எடுத்தேன்.  

”மன்னிக்கணும் சார். தூக்கத்துல உங்கள தொந்தரவு பண்ணிட்டன். நோவாளி சார் நானு. பத்து நாளா படுத்தப் படுக்கையா இருக்கன் சார். ஒருத்தரும் வந்து பாக்கல சார். பெத்த புள்ளைங்க மருந்து மாத்தரய வாங்கி கொரியர்ல அனுப்பி வக்கிறாங்க சார். இந்த உலகத்துல இப்படிப்பட்ட புள்ளைங்கள வேற எங்கேயாவது பாத்திருப்பீங்களா சார். எப்படிப்பட்ட புள்ளைங்கள பெத்திருக்கன் பாருங்க சார். நீங்களாவது ஒரு தடவ இந்த நோவாளிய வந்து பாக்கமாட்டீங்களா சார்?” என்று சொன்னதும் உடனே,

”ஐயா, அப்டிலாம் நெனைக்காதீங்க. நாளிக்கு காலையில வீட்ல கண்டிப்பா இருப்பன்யா. இப்போ படுத்து தூங்குங்க..’’ எனச் சொல்லி வைத்தேன்.

எவ்வளவோ முயன்றும் அன்றிரவு தூக்கம் வரவில்லை. வெளியில் சென்று உட்கார்ந்தவாறு ஏதேதோ யோசனையில் சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அதிகாலை மூன்று மணிக்குதான் தூங்கினேன். காலை ஏழு மணிக்கு எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு, அவரிடம் தர பழங்கள் கொஞ்சம் வாங்கிக் கொண்டு, சரியாக பத்து மணிக்கு அவர் வீட்டின் அழைப்பு மணியை போய் அழுத்தினேன். மிகுந்த சோர்வோடு எழுந்து வந்தவர் என்னைப் பார்த்ததும் மென்மையாக புன்னகைத்து,

”வாங்க சார், நீங்க ஒருத்தராவது இந்த நோவாளியப் பாக்க வந்திருக்கீங்களே, சந்தோசம் சார்..’’ என்று ஆரம்பித்து ஏதேதோ பேசினார். கடைசியாக,

”நான் சம்பாதிச்சு கட்டுன வீடு சார் இது. என் உயிர் இங்கதான் போவணும் சார். பத்து நாளா படுத்த படுக்கையா இருந்தும் பெத்த அப்பன்னு கூட எட்டிப் பாக்காத எவன் வீட்டு வாசப்படியையும் மிதிக்க மாட்டேன் சார். நாலு கிலோமீட்டர் கூட இல்ல, அங்கயிருந்து கொரியர்ல அனுப்புறானுங்க சார் மருந்த. நாயிங்க, த்தூ..’’ என்றார் கோபத்தோடு.

”விடுங்கய்யா, எல்லாம் நல்லதுக்குன்னு எடுத்துக்கோங்க. உங்களுக்கு எப்போ என்ன உதவினாலும் எனக்கு ஒரு போன் போடுங்க..’’ என்று சொல்லி, வாங்கிச்சென்ற பழங்களை அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.

அதன் பின் அவரைப் பார்க்கவில்லை. ஆனாலும் முன்பைவிட அதிகமாக நினைக்கிறேன். கொரோனா வைரஸ் – 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு –  உணவுப்பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு. எப்படி இருக்கிறார்? எப்படி சமாளிக்கிறார்? ஏதேதோ கேள்விகள்.

ஏப்ரல் 14-க்குப் பிறகு முதல் வேலையாக அவரை சென்று பார்க்க வேண்டும். அவரிடம் ஒரே ஒரு தடவை கேட்காமல் விட்ட மன்னிப்பை கேட்க வேண்டும். அதுவும், அவரது படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையை, கனவை தகர்த்ததற்காக. ஆம்!

ஓர் ஆசை தகர்ந்து போனால் எவ்வளவு வலிக்கும் என்பதை ஓரளவு உணர்ந்தவன் நான். அதனால், நிச்சயம் அவர் என் மன்னிப்பை ஏற்பார் என்று நம்புகிறேன். பார்ப்போம்!

(ஏப்ரல் 05, 2020)

**

முகங்களின் முதலில்

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 4 : திட்டம்மா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=