முகங்கள் – 4 : திட்டம்மா

முகங்கள் – 3 : நூலகன்

**

‘யார்சொன்னது

அந்த நாட்கள் போயினவென்று

தொற்றிய முள்ளையும்

பூவிதழ்களையும்

தோலுக்குள் மறைத்து

இந்த ஒற்றையடிப் பாதையில்

மறுபடி வரும்

புதிது போல’

 – அபி

**

சென்னை பெருநகரமானது பல வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தருகிறது. சிலர் அப்பாடங்களை புரிந்துகொண்டு சாமர்த்தியமாக கரையேறி விடுகிறார்கள். பலரோ கடைசிவரை புரியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். இது ஏதோ இன்று நேற்று மட்டும் அரங்கேறும் ஒன்றல்ல. காலந்தோறும் நிகழும் அந்தரக்கூத்து என்பதை ஒரு சிலரே அறிகிறார்கள். அந்த ஒரு சிலர்தான் வாழ்வில் வென்றும் காட்டுகிறார்கள்.

அடிக்கடி ஒரு கேள்வி எனக்குள் எழுவதுண்டு. ஏன் இந்த சென்னை மாநகரம் மட்டும் எங்கெங்கோ இருந்து வரும் ஏழை பணக்காரன், படித்தவன் படிக்காதவன், கருத்தவன் செவத்தவன், உயர்ந்த சாதியன் தாழ்ந்த சாதியன் என்ற எப்பாகுபாடும் பார்க்காமல் தன் பிள்ளைகளாய் யாவரையும் கரங்களில் ஏந்தி அணைத்துக் கொள்கிறது, வாழவும் வழிவகை செய்கிறது?

உலகின் மற்ற நகரங்களைக் காட்டிலும் கூடுதலாக இச்சென்னை மாநகர் மட்டும் இப்படியொரு தனித்த மனமும் அடையாளமும் கொண்டுள்ளது ஏன்? இப்படி பல கிளைக் கேள்விகளுடன் நீளும் கேள்வியது. 

இன்று சென்னையில் உள்ளவர்களில் பாதிக்கும் குறைந்தவர்களே இங்கே பிறந்து வளர்ந்து சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். மிக அதிகமானோர் பிழைப்புக்காக ஊரை விட்டு, குடும்பத்தைவிட்டு, சொந்தபந்தம் மண் மக்கள் வாய்க்கால் வரப்புகள் ஆடு மாடு கோழி மலை கண்மாய்கள் என யாவற்றையும் விட்டு வந்தவர்கள்.

சமீப ஆண்டுகளில் தமிழகமெங்கும் இருந்து வந்தோர்களுக்கு நிகராக வடமாநிலத்திலிருந்து வந்தோரின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இதை ஒருநாள் சென்னை – மத்திய இரயில் நிலையத்திற்குப் போய், வடமாநிலங்களில் இருந்துவரும் ஒரேயொரு ரயிலைப் பார்த்தாலே புரிந்துவிடும்.

சில வாக்கியங்கள், சொற்றொடர்கள் காலத்துக்கும் அழியாது என்பார்களே, அப்படிப்பட்ட ஒன்றாகத் தான் பார்க்கிறேன், ‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என்பதை.

ஆம்! சென்னை குறித்து சொல்ல இன்னும் எவ்வளவோ விஷயங்கள் உண்டு என்னிடம். இருந்தாலும் ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு கடந்துபோதல் இப்போதைக்கு சாலச்சிறந்ததென நினைக்கிறேன்.

கிராமத்தில் அடிக்கடி ஒரு சொலவடை சொல்வார்கள், ‘என்னதான் ஒருத்தன் ஏக்கராக் கணக்குள மாளிக கட்டி வச்சாலும், அவன் கடசிலப் போய் சேரப்போறது ஆறடி நெலத்துலதான்’.

இதுகுறித்து பல தடவை சிந்தித்ததுண்டு. ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஒரு முன்னிரவு வேளையில் சிந்தித்தது சற்று மாறுபட்டது. மறக்க முடியாதது.

அன்றைய தினம் முழுக்க எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு, மின்சார ரயிலில் ஏறி கோடம்பாக்கத்தில் வந்திறங்கி, ரயில்வே மேம்பாலத்தின் மீது நின்று கொஞ்சநேரம் வரும்போகும் ரயில்களையும், யாருமற்றை தண்டவாளத்தையும், தூரத்தில் தெரியும் மின் விளக்குகளையும், அவ்வழியாக கடந்து செல்வோரின் முகங்களையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

இப்படி ரயில்வே மேம்பாலத்தின் மீது நின்று மணிக்கணக்காக வேடிக்கைப் பார்ப்பது மிகப் பிடித்த விஷயங்களில் ஒன்று.

பின் அங்கிருந்து புறப்பட்டு இரு பக்கமும் மரங்கள் நின்றிருக்கும் அபிபுல்லா சாலையில் நடந்து, வடக்கு உஸ்மான் சாலை சந்திப்பு அருகே இடதுபுறமிருக்கும் தேநீர்க்கடை முன்னால் போய் நின்றேன்.  

பெரும்பசி. அறை நண்பன் எனக்கும் சேர்த்து இரவு உணவு வாங்கி வைத்துவிட்டதாக குறுஞ்செய்தி ஒன்று அரைமணி நேரத்துக்கு முன்பே அனுப்பியிருந்தான். அதனால் அறைக்கு சென்றுதான் சாப்பிட வேண்டும். அதுவரை பொறுக்க முடியாது என்பதால் சற்றுநேரம் பசியை ஒத்திப்போட நினைத்து தேநீர் ஒன்று குடிக்கத் தீர்மானித்தேன்.

தேநீரை நன்கு சூடாக இருக்கும்போது தொடங்கி அது கொஞ்சம் கொஞ்சமாக ஆறும் வரைக்கும், அதாவது குறைந்தது பத்து நிமிடங்களாவது ரசித்தும் ருசித்தும் குடிப்பது என் வழக்கம். அதற்குள் உடன் இருப்பவருடன் கதைகள் பேசுவேன். யாரும் இல்லாத பட்சத்தில் கவிதையோ, பாடலோ நகர்பேசியில் எழுதுவேன். 

அன்றப்படி தேநீர் குடிக்கும்போது ஏதோ ஒரு கவிதை வரி சட்டென்று தோன்ற எழுதத் தொடங்கி நான்கைந்து வரிகள்தான் எழுதினேன். அதற்குள் தேநீர் தீர்ந்துவிட்டது. அதற்கானப் பணத்தைத் தந்துவிட்டு அருகில் இருக்கும் பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் போய் உட்கார்ந்து மீத வரிகளை எழுத நினைத்தேன்.  

வேலை முடித்துவிட்டு செல்வோர் கூட்டம். உட்கார இடம் கிடைக்காததால் ஓரமாக கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டே கவிதையின் அடுத்தடுத்த வரிகளை எழுதிக் கொண்டிருந்தேன்.

அப்போது யாரோ ஒருவர் அருகில் வந்து நின்று என்னையேப் பார்ப்பதாகத் தோன்ற, வெடுக்கெனத் திரும்பிப் பார்த்தேன். பெண் ஒருவர், 45 வயதிருக்கும், மொட்டையடித்து வளர்ந்த சிறு நீள முடியுடன், மிக ஒல்லியாக, கையில் பச்சை நிற பிளாஸ்டிக் பை, அதில் தண்ணீர் பாட்டிலொன்று வெளியில் தெரியும்படி இருந்தது. பார்க்க சென்னைக்கு சற்றும் பொருந்தாதவராய் தோற்றமளித்தார். ஏதோ கேட்கப்போகிறார் என்பது மட்டும் அவர் முகத்தைப் பார்த்ததும் தெரிந்தது.

உடனே என்னைப் பார்த்து, ”போனு’’ என்றார்.

‘யாருக்கோ அவசரமா பேசப் போறார் போல’ என நினைத்து கையிலிருந்த நகர்பேசியை அவரிடம் கொடுத்தேன். எந்தவித சலனமும் இல்லாமல் வாங்கியவர், ஏதோ ஓர் எண்ணை அழுத்தி காதில் வைத்தார். அடுத்த சில நொடிகளில் என்னை ஒரு மாதிரியான கோபத்துடன் பார்த்து,

”பொறம்போக்கு பொறம்போக்கு… வெளங்கமாட்ட வெளங்கமாட்ட..’’ எனச் சொல்லி என் கையில் நகர்பேசியைத் தந்துவிட்டு வேகமாக தியாகராய நகர் நோக்கி சாலையோரமாக நடக்க ஆரம்பித்தார்.

அருகிலிருந்தவர்கள் நான் ஏதோ அந்த அம்மாவிடம் செய்துவிட்டது போன்ற பார்வையை வீச எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

என்ன செய்வதெனத் தெரியாமல் அங்கிருந்து நடந்து சிறிது தூரம் சென்று சாலையைக் கடக்கும் கோட்டருகே நின்று வாகனங்கள் வராதநேரம் பார்த்து வேகவேகமாக சாலை கடந்து எதிர்பக்கமிருக்கும் அபிபுல்லா சாலையில் நான்கைந்து கட்டடங்கள் தாண்டி இடதுபுறம் திரும்பும் பெரியார் சாலையின் தொடக்கத்தில் உள்ள அரசமரத்தடியில் போய் நின்றேன்.

அதே குரல். அதே வார்த்தைகள்.

”பொறம்போக்கு பொறம்போக்கு… வெளங்கமாட்ட வெளங்கமாட்ட..’’

திரும்பத் திரும்பக் கேட்டது.

‘ஏன் அந்தம்மா அப்டி சொன்னாங்க? அவங்க நம்மளதான் திட்டனாங்களா? இல்ல யாரத் திட்டிருப்பாங்க? உதவின்னு கேட்டவங்களுக்கு உதவி செஞ்சது தப்பா?’ ஏதேதோ யோசனைகள்.

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. அவர் நிச்சயம் என்னை திட்டவில்லை. அதோடு அவர் ஏதோ பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த பாதிப்பால்தான் அப்படி நடந்து கொண்டார். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன், நம்பினேன்.

அதோடு அங்கிருந்து கிளம்பி அறைக்கு வந்து சேர்ந்தும் அந்நிகழ்வு மனத்தைவிட்டு அகலவில்லை. அதை அறை நண்பனிடம் சொல்லவும் தோன்றவில்லை. நான்கைந்து நாட்களிருக்கும், கோடம்பாக்கம் லிபர்டி பேருந்து நிறுத்தம் அருகில் ஒருநாள் முன்னிரவு எட்டரை மணியிருக்கும், எதிரில் அவர் நடந்து வருவதைப் பார்த்து விட்டேன். அதே பச்சை நிற பிளாஸ்டிக் பை, வாட்டர் கேன், அன்று கட்டியிருந்த அதே புடவை.

சில நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன். அவர் என்னைக் கடந்து போனதும், சட்டெனத் திரும்பி எங்கே செல்கிறார் எனப் பார்த்து  பின்னாலேயே சென்றேன். சரியாக பேருந்து நிறுத்தத்தில் போய் நின்றவர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, என் வயதொத்த நபர் ஒருவரிடம் சென்று,

‘போனு’ என்றார்.

ஏற்கனவே அந்தநபர் ஏதோ பிரச்சினையில் இருந்திருப்பாரென நினைக்கிறேன். அதோடு அவர் காசுதான் கேட்கிறார் என நினைத்து எரிச்சலோடு, ‘இல்ல போம்மா’ என்றார்.

உடனே எவ்வித சலனமுமற்று சற்று தள்ளிப் போய் நின்றார். பின் சில நிமிடங்கள் கழித்து இன்னொரு நபரிடம், அவரும் என் வயதை ஒத்தவர்தான்,

‘போனு’ என்றார்.

அவர் சற்றும் யோசிக்காமல் தன் கையிலிருந்த நகர்பேசியை அவரிடம் தர, வாங்கி அதேபோல் ஓர் எண்ணை அழுத்தி காதில் வைத்தார். சில நொடிகளில் வேகமாக வாங்கிய நபரிடம் தந்துவிட்டு,

‘பொறம்போக்கு பொறம்போக்கு… வெளங்கமாட்ட வெளங்கமாட்ட..

பொறம்போக்கு பொறம்போக்கு… வெளங்கமாட்ட வெளங்கமாட்ட..’  என விடாமல் சொல்லிக்கொண்டே வேகவேகமாக கோடம்பாக்கம் பாலம் நோக்கி நடந்தார். இது நான் ஏற்கனவே கண்ட காட்சி என்பதால் எனக்குப் புதிதாகத் தோன்றவில்லை. அதனால் அவர் எங்கே செல்கிறார் எனப் பார்க்க பின்தொடர்ந்து போனேன்.

நேராக சேகர் எம்போரியம் தாண்டி, தெரு முனையில் வலது பக்கம் திரும்பி ரயில் நிலையம் செல்லும் வழியில் நடந்தார். கொஞ்சம் கூட வேகம் குறைக்காது இரயில் நிலையம் முன்னால் போய் கூட்டமாக ஆறேழு பேர் சூழ நின்று சூப் குடித்துக் கொண்டிருக்கும் கடையருகே நின்றார். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அங்கிருந்த ஒருவரிடம்,

‘போனு’ என்றார்.

அவரும் தரலாமா, வேணாமா என்பதுபோல் சில நொடிகள் அந்தம்மாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு பிறகு தந்தார்.

அதே போன்றதொரு நிகழ்வு. வழக்கமான திட்டல். அதே வேக நடை.

எனக்கு விசித்திரமாகப் பட்டது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? எதற்கு உதவி செய்பவர்களை எல்லாம் திட்டிப்போகிறார்? யாருக்கு அழைத்திருப்பார்? ஏன் எதிர்முனையில் யாரும் எடுப்பதில்லை? அவர் இந்த அம்மாவுக்கு என்ன உறவாக இருக்கும்? எடுக்காத கோபத்தில் தான் திட்டுகிறாரா? சாரை சாரையாகக் கேள்விகள்.

வேக வேகமாக கோடம்பாக்கம் ரயில் நிலைய மேம்பாலத்தில் ஏறியவர் அடுத்தப் பக்கம் இறங்கி, அபிபுல்லா சாலை வழியாக நடந்து உஸ்மான் சாலையைக் கடந்து, மீண்டும் எதிர்புறம் இருக்கும் அபிபுல்லா சாலையில் நடந்து சிறிது தூரம் சென்றவர் ஓரிடத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அங்கே வலதுபக்கம் பெரிய தூங்குமூஞ்சி மரத்தின் அருகிலிருக்கும் மூடிய மருந்துக் கடையின் மேல் படிக்கட்டில் ஏறி உட்கார்ந்தார்.

இவ்வளவு தூரம் நிற்காமல் நடந்துவந்த வேகத்துக்கு நிச்சயம் அவருக்கு மூச்சு வாங்கியிருக்க வேண்டும் (எனக்கு வாங்கியது). சுற்றிலும் பார்த்தார். பின் தன் கையில் வைத்திருந்த பைக்குள் கைவிட்டு ஏற்கனவே பாதி தின்றிருந்த பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வெளியில் எடுத்தார். பெரும் பசியிலிருந்திருப்பார் என்பது அவர் பிஸ்கட்டை தின்றுவிட்டு தண்ணீர் குடித்ததைப் பார்த்ததும் நன்கு உணர முடிந்தது.

அந்த பிஸ்கட் காகிதத்தை கசக்கி தன் பைக்குள் போட்டவர், வாட்டர் கேனையும் அதனுள் வைத்துவிட்டு, உள்ளிருந்த சால்வை ஒன்றை வெளியில் எடுத்தார். மீண்டும் சுற்றிலும் பார்த்தார். மணி எப்படியும் இரவு பத்தாகியிருக்கும். பார்த்தவர் சட்டென அந்த சால்வையை மேலே போர்த்திக்கொண்டு, தன் கையில் வைத்திருந்த பையை இன்னும் கெட்டியாகப் பிடித்தபடி படியிலேயே படுத்துக்கொண்டார்.

அருகிருந்த பெரிய மரம் ஒன்றின் பின்புறம் நின்று யாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த என் கண்கள் என்னையறியாமல் கலங்கிவிட்டது.

யார் இந்த அம்மா? ஏன் இவர் இங்கே வந்து படுக்க வேண்டும்? இவருக்கென இந்த பெரும் நகரத்தில் யாருமே இல்லையா? இவருடைய இந்நிலைக்கு யார் காரணமாக இருக்கும்? இன்னும் ஏதேதோ யோசித்தபடி அறை நோக்கி நடந்து வந்தேன்.

அறைக்கு வந்து வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லை. வெளியில் சென்று உட்கார்ந்து திரும்பத் திரும்ப அவர் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன்.

முதன் முதலில் என்னிடம் நகர்பேசி கேட்டது. திட்டியது. ஒவ்வொன்றாக கண்முன் வந்து போகிறது. அதிலும் கடைசியாகக் கண்ட காட்சி, என்னில் அதிக பாதிப்பினை உண்டாக்கி, அதிலிருந்து எவ்வளவு முயன்றும் விடுபட முடியாமல் செய்தது. 

ஒரு பச்சை பிளாஸ்டிக் பை, ஒரு வாட்டர் கேன், ஒற்றை சால்வை, கட்டிய பழைய கிழிந்த புடவை, இவை மட்டும்தான் அவரது உடைமைகளா? அதிலும் சிறு சால்வையை போர்வையாகக் குளிருக்கும் கொசுவுக்கும் போர்த்திக் கொண்டு, யாதொரு பாதுகாப்பு உத்தரவாதமற்ற சென்னை மாநகர வீதியொன்றின் கடை வாசலில், தன் உடலையும் கால்களையும் கைகளையும் குறுக்கி நான்கடிக்குள் ஒடுங்கிக்கொண்ட அவ்வுருவம் நினைக்கும்தோறும் உலுக்கியெடுப்பது.

‘அப்போ ஒரு மனுசன் செத்ததுக்கு அப்பறம் பொதைக்க ஆறடி நெலம் போதும்னு சொல்றாங்களே… ஆனா உயிரோட இருக்க இவங்களுக்கு தூங்க நாலடி எடமே போதுமா இருக்கே இந்த பெரிய சென்னையில..’

இப்படி ஏதேதோ தோன்றியது எனக்குள்.

அடுத்தநாள் எழுதிய ‘உங்கள் சென்னை’ தனிப்பாடலில், ‘நான்கடி இருந்தால் போதும் / வாழ்க்கை மலருமே!’ என ஒரு வரி எழுதினேன். பலரும் அதனை ரசித்தார்கள். உண்மையில் இவ்வரிக்கு சொந்தக்காரர் அந்த அம்மாதான். அதனால், எப்போதும் அவருக்கு நன்றி சொல்லலாம்.  

அதன்பின் அந்த அம்மாவை எங்கும் பார்க்க முடியவில்லை. அவரை முதல் தடவை சந்தித்த பாரதி நகர் பேருந்து நிறுத்தம், இரண்டாவது முறை சந்தித்த கோடம்பாக்கம் லிபர்டி பேருந்து நிறுத்தம் என எங்கும் தேடிப் பார்த்துவிட்டேன். 

பல தடவை அவர் குறித்து யோசித்திருக்கிறேன். ஏன் அவரை இவ்வளவு நாட்களாக காணவில்லை? என்னாகியிருப்பார்? ஒருவேளை சென்னையை விட்டு போயிருப்பாரா? அப்படி போயிருந்தால் எங்கே போயிருப்பார்?

ஒருநாள் அவர் படுத்து உறங்கிய அந்த அபிபுல்லா சாலை மருந்துக் கடைக்குக் கூட இரவு பத்து மணிக்கு சென்று பார்த்தேன். இல்லை.

எனக்கு ஒரே ஓர் ஆசை தான். அந்த அம்மாவுக்கு ஒருவேளை சாப்பாடு வாங்கித் தர வேண்டும். அவர் தன் கவலைகள் எல்லாம் மறந்து, பசியை கொஞ்சம் கொஞ்சமாக வெல்லும் அம்முகத்தை ஒரேயொரு தடவை பார்க்க வேண்டும்.

அதோடு அவர் ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருக்கும்போது என்னிடம் வந்து, ‘போனு’ என மீண்டும் ஒரு தடவை கேட்க வேண்டும். நானும் மகிழ்வோடு தரவேண்டும். பின் அவர் சொல்லும்,

‘பொறம்போக்கு பொறம்போக்கு… வெளங்கமாட்ட வெளங்கமாட்ட..’

எனும் வார்த்தைகளை ஒரே ஒரு தடவை காதில் கேட்க வேண்டும். அவ்வளவுதான். 

புத்தகங்கள் சொல்லித்தரும் பாடங்களைக் காட்டிலும், இவர் போன்ற எளிய மனிதர்களும் இச்சென்னையும் சொல்லித் தரும் பாடங்கள்தான் எனக்கு எப்போதும் பெரிதாகப்படுகிறது. அதற்காகவே சென்னையின் வீதிகள்தோறும் நடக்கிறேன். இன்னும் இன்னும் நடப்பேன். ஆம்!

சிலரது முகங்கள் வெறும் முகங்கள் மாத்திரமல்ல, பாடங்கள். வாழ்வின் அதி உன்னதப் பாடங்கள். சிலர் மட்டுமே அதனைப் படிக்கிறார்கள். அந்த சிலரில் நானும் ஒருவனாய் எப்போதும் இருந்திட வேண்டும். ஆம்!

இதைவிட வேறென்ன பெரிதாகக் கேட்டுவிடப் போகிறேன்?!

(ஏப்ரல் 04, 2020)

**

முகங்களின் முதலில்

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=