முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

முகங்கள் – 7 : மோனன்

**

‘கவிந்த மெளனத்தை

நீளும் அமைதியைச்

சரசரவெனக் கீறியபடி

இருவருக்குமிடையில்

காற்றில் அலையுதொரு இலை’

 – ரவிசுப்பிரமணியன்

**

சிலரின் முகமும் பேச்சும் பலநாள் பேசிப் பழகியது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இத்தனைக்கும் அவர்களை இதற்கு முன் எங்கும் பார்த்திருக்க மாட்டோம், பேசியிருக்க மாட்டோம். ஆனாலும் அதுபோன்றதோர் உணர்வும் எண்ணமும் எழும்.

அப்படியான சிலரை இதுவரையான என் வாழ்வில் சந்தித்ததுண்டு. அவர்களுடன் மணிக்கணக்கில் பேசாமலேயே பேசியதாகவும், நாட்கணக்கில் பழகாமலேயே பழகியதாகவும் தோன்றியதுண்டு. அதிலும் அவர்களுடனான சில சந்திப்புகளும் நிகழ்வுகளும் ஏற்கனவே என் வாழ்வில் நடந்தது போன்ற அனுபவத்தையும் கேள்வியையும் எனக்குள் எழுப்பிவிட்டுப் போகும். ஆம்!

தினந்தோறும் காலை மாலை என இரு தடவை தேநீர், சில நேரம் குளம்பி அருந்துவதை கடந்த ஐந்தாண்டுகளாக வாடிக்கையாக வைத்திருக்கிறேன். அதிலும் சென்னையின் பல இடங்களில் பல தேநீர்க் கடைகளை என் விருப்பக் கடைகளாக தேர்வு செய்து, அந்தப் பகுதிக்குச் செல்லும்போதெல்லாம் சரியாக அக்கடைகளுக்குச் சென்று தேநீர்க் குடிப்பது வழக்கம்.

அப்படி நுங்கம்பாக்கம் காமராஜபுரத்திலுள்ள என் அறையிலிருந்து பத்து நிமிட நடை தூரத்திலிருக்கும் தேநீர்க்கடை ஒன்றுக்கு வாரத்தில் குறைந்தது நான்கு தடவையாவது செல்வது வாடிக்கை. காரணம் அக்கடையின் சுத்தமான சுவையான தேநீர். அதோடு அங்கு புகைபிடிக்க அனுமதி இல்லாததால் யாரின் புகைவளையத்திலும் சிக்கிக்கொள்ளாமல் நிம்மதியாக நின்றும் உட்கார்ந்தும் ஆற அமர ரசித்து ருசித்து பருகிவிட்டு வரலாம்.

அன்றொரு நாள் காலை எட்டு மணிவாக்கில் சென்று ஒரு தேநீர் வாங்கிக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்தபடி குடித்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் பார்த்து அங்கே வந்த வயதானப் பாட்டி ஒருவர் தேநீர்க்கடை அண்ணனிடம்,

‘டேய் பையா, பாட்டிக்கி கொஞ்சம் தண்ணிக் குட்றா குடிக்க..’ என்று கேட்டவாறு உள்ளே நுழைந்து, நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரிலிருக்கும் இருக்கையில் அமர்ந்து, அதன் அருகேயுள்ள கேனிலிருந்து தண்ணீரை தான் வைத்திருந்த பாட்டிலில் பிடித்துக் குடித்தார்.

‘ஏ கெழவி, தெனக்யும் இதே வேலயாப் போச்சில்ல ஒனக்கு? ஒன்ன ஒருநாள் செமடி அடிக்கப்போறன் பாத்துக்கோ..’ என தேநீர்க்கடை அண்ணன் சொல்ல… நான் அப்பாட்டியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

நன்கு பரிச்சயமான முகம். அதிலும் ஏற்கனவே பல வருடங்கள் பார்த்துப் பேசியது போன்ற தோற்றமும் குரலும். எப்படியும் அவருக்கு தொண்ணூறு வயதிருக்கும். குனிந்த கூன் விழுந்த முதுகோடு, மெது மெதுவாக கோல் ஒன்றை ஊன்றி நடந்து சிறு தூரத்திற்கு ஒருதடவை நின்று, பின் மீண்டும் நடந்தென தினந்தோறும் காலையிலும் மாலையிலும் அங்கு வந்து போகிறவர்.

அன்றப்படி வந்தவர் எதிரில் தேநீர் குடித்துக்கொண்டிருந்த என்னை தற்செயலாகப் பார்க்க, அதேநேரம் நானும் அவரை பார்ப்பதை பார்த்துவிட்டு கண்களை மெல்ல நொடிநேரம் மூடி குழந்தையைப்போல் சிரித்தார். அச்சிரிப்பு என்னை ஏதோ செய்தது.

இவர் யாராக இருக்குமென நடுநடுவில் அவரை பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தபோது,

‘டீ குடிக்கிறயாக் கெழவி?’ என தேநீர்க்கடை அண்ணன் அவரிடம் கேட்டார்.

‘இல்லடாப் பையா, வேணாம். நான் வரன் பொசாய்க்கா..’ எனச் சொல்லிவிட்டு எழுந்து வெளியில் போய் இடது பக்கமாக திரும்பி மெதுவாக நடந்து போனார்.

அதுதான் அவரை முதலில் பார்த்தது. அதிலும் அன்றவர் சொன்ன ‘பொசாய்க்கா’ என்ற வார்த்தை எங்கள் கிராமத்தில் பேசப்படும் வட்டார வழக்குச் சொல். அதன் பொருள் மாலைநேரம், சாயும்காலம், சாயந்திரம் என்பது. அதெப்படி சென்னையில் இருக்கும் இவரிடம் வந்து அச்சொல் சேர்ந்ததென ஒருபக்கம் ஆச்சர்யம்.

அதற்கடுத்த ஒரு வாரம் கழித்து பனகல் பூங்காவிலிருந்து உஸ்மான் சாலை வழியாக பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தருகில் நடந்து வந்துகொண்டிருந்தேன். எதிரில் அந்தப் பாட்டி ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தார், குச்சி ஊன்றி – முதுகு வளைந்து – தரையை நோக்கிய உடலுடன் – நடுநடுவில் அப்பக்கமும் இப்பக்கமுமாக தலையை மட்டும் தூக்கிப் பார்த்தபடி.

அவரைப் பார்த்ததும் அப்படியே ஓரமாக நின்று… அவர் என்ன செய்யப் போகிறார், எங்கே போகப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் நின்றவர், மெதுவாக நடந்து இன்னும் கொஞ்ச தூரம் போய் மீண்டும் நின்றார். வயது காரணமாக நடக்க முடியாமல் நின்று நின்று போகிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் சிறிது நேரத்தில் அவர் யாரையோ தேடுகிறார் என்று தோன்றியது.

ஆம்! நினைத்தது போல் அவர் யாரையோ தேடிக் கொண்டிருந்தார். அங்கிருந்து சற்று முன்னால் நடந்து, வலது பக்கத்தில் உள்ள பெரிய அரசனும் வேம்பும் பின்னிப் பிணைந்த மரத்தடியில் அமர்ந்திருந்த வயதான முதியவர் ஒருவரிடம் போய், தன் கையில் வைத்திருந்த சிறு பொட்டலம் ஒன்றை (உணவாக இருக்க வேண்டும்) கொடுத்துவிட்டு, அவரருகில் கால்களை மடக்கி குத்துகாலிட்டு உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

வயதானவர்களால் நம் போன்று சட்டென சம தரையில் உட்கார்ந்துவிட முடியாது. அதனால் அப்படி உட்காருவார்கள். அன்றவர் அப்படி உட்கார்ந்தது எங்கள் ஐயாவை எனக்கு நினைவுப்படுத்தியது.   

பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். அங்கிருந்து எழுந்தவர் மெல்ல நடந்து பேருந்து நிறுத்தம் தாண்டி நின்று நின்று மெதுவாக அத்தேநீர்க்கடைக்குள் நுழைந்தார்.

‘என்னடா பையா சாப்டயா..?’ என தேநீர்க்கடை அண்ணனிடம் கேட்டவாறு நுழைந்தவர், அன்றைக்கு உட்கார்ந்த அதே இருக்கையில் போய் உட்கார்ந்தார். நானும் எனக்கு ஒரு தேநீர் சொல்லிவிட்டு உள்ளே போய் உட்கார்ந்தேன்.

‘ஏய் கெழவி, இல்லன்னு சொன்னா என்ன சோறாப் போடப்போற..?’ என அந்த அண்ணன் பாட்டியிடம் திருப்பிக் கேட்க,

‘போடாமலாடா பையா வுட்றுவன்..’’ என்றதும் அந்தண்ணன் சிரித்தபடி,

‘போட்டாலும் போடுவடி கெழவி நீ..’ எனச் சொல்லி, அவரிடம் ஒரு தேநீரையும் என்னிடம் ஒன்றையும் தந்துவிட்டு போனார்.

யார் இந்தப் பாட்டி? ஒருவேளை அந்த அண்ணனுக்கு உறவினராக இருக்குமோ? இவ்வளவு உரிமையாக தினமும் கடைக்கு வருகிறார், தண்ணீர் பிடிக்கிறார், தேநீர் குடிக்கிறார், பேசுகிறார் என யோசித்தபடி பருகிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து அன்றைக்கு சிரித்தது போலவே கண்களை மூடி சிரித்தார்.

எந்தவொரு பாசாங்குமற்ற வெள்ளந்திச் சிரிப்பு என்பார்களே, அதுபோன்றதொரு சிரிப்பு அது. அச்சிரிப்பை மறுமுறை கண்டதும் என்னை அறியாமல் அவர் மீது ஓர் அளவு கடந்த பாசம் உருவானது.

”பையா இங்க வாயேன்..’’ என என்னைப் பார்த்துக் கூப்பிட்டார் பாட்டி.

”நானாப் பாட்டி..?’’ என்றேன், அவர் என்னைதான் கூப்பிடுகிறாரா என்ற சந்தேகத்தோடு.

”ஆமான்டா பையா,  உன்னதான்..’’ என்றார்.

உடனே எழுந்து அவர் அருகில் போக, தன் சுருக்குப் பையிலிருந்து சில்லறை காசுகளையும் சில பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டுகளையும் எடுத்து மேசைமீது வைத்து,

”இதல எவ்ளோ இருக்குன்னு பாட்டிக்கு பாத்து சொல்லுடா பையா..’’ என்றார்.

அங்கேயே அவர் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து எண்ணி சொன்னேன்.

கண்களை மூடி புன்னகைத்தவர்,

”சில்லறக் காசு பத்து ரூபாய மட்டுக்கும் தனியா எடுத்துக்குட்றா பையா..’’என்றார்.

அதிலிருந்து சில்லறை காசுகள் பத்து ரூபாயை மட்டும் தனியாக எடுத்து தந்தேன். அதை அங்கேயே மேசைமீது வைத்தவர், மற்ற காசை எடுத்து தன் சுருக்குப் பையில் போட்டுக்கொண்டார்.

பின் என்னைப்பார்த்து வழக்கம்போல் கண்களை மூடி சிரித்துவிட்டு எழுந்து தேநீர்க் கடை அண்ணனிடம் ஏதோ சொல்லிவிட்டு வெளியில் போய் வலதுபக்கம் திரும்பி நடந்து போனார்.

அவர் போனதும் வந்த தேநீர்க்கடை அண்ணன் சிரித்தபடி,

‘எவ்ளோ சொன்னாலும் கேக்கமாட்டாக் கெழவி. அவகிட்ட யாரு இப்ப டீக்கு காசுக் கேட்டது..’ என சொல்லியபடி அக்காசையும், அவர் குடித்துவைத்த கண்ணாடி கிளாஸையும் எடுத்துக்கொண்டு போனார்.

இப்படி பல நாட்கள் அந்தப் பாட்டியை அக்கடையில் வைத்து பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள்.

ஒருநாள் சனிக்கிழமையன்று செங்கல்பட்டில் இருக்கும் நண்பனைப் பார்க்க கோடம்பாக்கம் ரயில்நிலையம் சென்று கொண்டிருந்தேன். அப்போது வழியில் உள்ள அந்த தேநீர்க்கடைக்கு போய் ஒரு தேநீர் குடித்துவிட்டுப் போகலாம் என சென்றபோது அப்பாட்டி உள்ளே எப்போதும் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.

தேநீர் ஒன்று சொல்லிவிட்டு அவரைக் கடந்து உள்ளே போய் எதிரில் உட்கார்ந்தேன். இம்முறை அவர் சிரிக்கும் முன்னமே அவரைப் பார்த்து அவர் சிரிப்பது போன்று கண்களை நொடிநேரம் மூடி சிரித்துக் காட்டினேன். அவரும் பதிலுக்கு சிரித்துக்காட்டினார்.

”யாருடா பையா நீ, தெனமுக்கும் இங்க வர்ற?” என்றார் என்னைப் பார்த்து.

அந்நேரம் சரியாக தேநீர் கொண்டு வந்த அண்ணன்,

‘ஏன் கேட்டு பொண்ணுப் பாத்து கட்டிவக்கப் போறியாக் கெழவி..?’ என்றார்.

‘ஏன் கேட்டா என்னடா பையா..’ என்று அவரைப் பார்த்து சொல்லிவிட்டு, என் பதிலுக்குக் காத்திருப்பது போல் திரும்பி தலையாட்டிக் கேட்டார்.

”இங்கதான் பாட்டி பக்கத்துல தங்கிருக்கன்..’’ என்றேன் அவரிடம்.

”ஓ சரிடா பையா, பாட்டி வர்றன்..’’ என சொல்லி சிரித்துவிட்டு எழுந்து வெளியில் போனார்.

தினமும் காலையில் ஒருதடவை மாலையில் ஒருதடவை அக்கடைக்கு வரும் பாட்டி, காலையில் வந்து தன் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு போவதையும்… மாலையில் வந்து ஒரு தேநீர் குடித்துவிட்டு அதற்கான காசை வைத்துவிட்டு போவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

அன்றப்படி என்னைப் பார்த்து யாரென்று கேட்டதால் அந்த தேநீர்க்கடை அண்ணன் என்னிடம் வந்து,

”பாட்டி சும்மாக் கேட்டிருப்பாங்க… மனசுல எதுவும் வெச்சுக்காதீங்க சார்..’’ என்றார்.

உடனே அவரிடம், ”அட, அதல்லாம் ஒண்ணுமில்லண்ணா. யார் அந்தப் பாட்டி..?’’ எனக் கேட்டேன்.

”அவங்களா..? இங்கதான் பக்கத்து ஏரியாவுல இருக்காங்க. தெனமும் காலில வருவாங்க தண்ணீப் புடிப்பாங்க போவாங்க. சாயந்தரம் வந்து டீ குடிச்சிட்டு எவ்ளோ சொன்னாலும் கேக்காம காசு வச்சுட்டுப் போவாங்க..’’ என்றார்.

பின் அவரே, ”அஞ்சி வருசமா வர்றாங்க. பாவம் யாரும் இல்லாதவங்க. தெனம் தி.நகர்ல போய் பிச்ச எடுக்குறாங்க. அதல கெடக்கிற காசவச்சு நாலஞ்சு ஒடம்பு முடியாதவங்களுக்கு சாப்பாடு வாங்கித் தந்துட்டுப் போவாங்க. ரொம்ப நல்ல கெழவி. இந்த வயசுலயும் என்ன மனசு பாருங்க..’’ என்றதும், பாட்டியை இன்னும் அதிகமாக பிடிக்க ஆரம்பித்தது.

அதுமுதல் அவரையும் அந்த சிரிப்பையும் பார்ப்பதற்காகவே அவர் வரும் நேரத்திற்கு அந்தக் கடைக்குப் போக ஆரம்பித்தேன். அப்படி போகும்போது அவரைப் பார்த்து நானாகவே முதலில் சிரித்து வைப்பேன். அவரும் பதிலுக்கு சிரிப்பார்.

அன்றொருநாள் வழக்கமாக தேநீர் குடித்துவிட்டு, அதற்கான காசை மேசை மீது வைத்துவிட்டு எழுந்துபோய், தேநீர் கடை அண்ணனிடம் ஏதோ பேசிவிட்டு சென்றவரை பின்தொடர்ந்து நானும் போனேன்.

நேராகப் போய் பாலத்தை கடந்து மறுபக்கமாக சென்றவர், இடதுபக்கம் முதல் தெரு வழியாக (அதுவொரு சந்து) நுழைந்து நின்று நின்று நடந்துபோனார். போனவர் வலதுபக்கம் திரும்பி உயர்ந்து வளர்ந்திருக்கும் அரசமரத்து பிள்ளையார் கோயில் தாண்டி மூன்றாவதாக உள்ள சிறிய பழைய ஓட்டு வீடு ஒன்றினுள் நுழைந்தார்.

அதுதான் அவரது வீடாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டு அங்கிருந்து அறை நோக்கி நடந்து வந்தேன்.

அவர் குறித்து நினைக்கும்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். இந்த தள்ளாடும் வயதில் தினமும் கிட்டத்தட்ட இரண்டரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் காசைக் கொண்டு முடியாத நான்கைந்து பேருக்கு உணவு வாங்கித் தந்துவிட்டு, மீண்டும் அவ்வளவு தூரம் நடந்து வந்து தானும் உண்டு உறங்குவதை நினைத்தால் இவரைப்போன்ற மனிதர்களால்தான் நாட்டில் இன்னும் மழை பொழிவதாகத் தோன்றும்.

பார்க்க நல்ல உடல்நலத்துடன் இருந்தும் ஏதேதோ காரணங்கள் சொல்லியும் உடல் ஊனத்தைக் காட்டியும் பிச்சை கேட்டுவரும் எத்தனையோ பேரை தினம்தினம் இச்சென்னையில் பார்க்க நேரிடுகிறது. அதில் இவரைப் போன்ற வேறு வேலை செய்து பிழைக்க உடல் பலமற்றவர்களுக்கு வழியற்றவர்களுக்கு நம்மிடமிருக்கும் ஒரு ரூபாயையோ, இரண்டு ரூபாயையோ தருவதால் ஒன்றும் நாம் குறைந்துபோய் விடமாட்டோம்.

அப்படி அவருக்கு ஏதாவது நம்மால் முடிந்ததை செய்ய வேண்டுமென நினைத்து ஒரு நாள் மாலை அவர் வரும் நேரத்தில் தேநீர்க் கடைக்கு போயிருந்தேன். வழக்கம்போல் வந்தவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு தன் சுருக்குப் பையிலுள்ள சில்லறைக் காசை எண்ணித்தருமாறு கேட்டார். நானும் எண்ணித்தரும்போது உடன் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை வைத்து தந்ததைப் பார்த்துவிட்டார்.

உடனே கோபமாக, ”டேய் பையா, உனுகிட்ட எப்பயாக்கும் நான் காசு வேணுமுன்னு கேட்டனா..?” என்றார்.

என்ன சொல்வதென தெரியாமல் அமைதியாக இருந்தேன். உடனே அந்த நூறு ரூபாய் நோட்டை என்னருகில் வைத்துவிட்டு வேகவேகமாக எழுந்து வெளியில் சென்று அவர் வீடு நோக்கி நடந்து போனார்.

”எங்கந்தக் கெழவி டீ கூட குடிக்காமப் போயிட்டா..?’’ எனக் கேட்ட தேநீர்க்கடை அண்ணனிடம் நடந்ததை சொன்னேன்.

”விடுங்க சார்… பாட்டியோடக் கோவம் இன்னிக்கேப் போயிடும்..’’ என்றார்.

அவர் அப்படி சொல்லியும் மனம் கேட்கவில்லை. ஏதோ மாதிரி இருந்தது. என்ன செய்வது? பேசாமல் பாட்டியிடம் போய் மன்னிப்புக் கேட்டுவிடலாமா என்று யோசித்தேன். உடனே அவரது வீடு தேடி சென்றால் இன்னும் கோபம் கொள்வாரோ எனத் தோன்ற அம்முடிவை கைவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் அவர் வரும் நேரம் பார்த்து தேநீர் கடைக்கு அருகிலிருக்கும் மரத்தடியில் நின்று வருகிறாரா எனப் பார்த்துக்கொண்டிருந்தேன். தூரத்தில் பாட்டி வருவதைப் பார்த்துவிட்டு கடைக்குள் போய் தேநீர் வாங்கிக் கொண்டு உட்கார்ந்தேன்.

வந்தவர் வழக்கம்போல் அண்ணனிடம் பேசிக் கொண்டே உள்ளே வந்து தான் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து தண்ணீர் பிடித்தார். பிடித்து விட்டு எதிரில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்தார். உடனே கண்களை மூடி சிரித்துவிட்டு மெல்ல எழுந்து வெளியே போனார்.

அந்த வழக்கமான சிரிப்பு அவர் என்மீது கொண்ட கோபத்தை மறந்துவிட்டதை சொல்லாமல் சொன்னது. அதோடு இவ்வாழ்க்கை குறித்த பல விடை தெரியாத கேள்விகளுக்கும் விடையைச் சொல்லிப்போனது.

ஆம்! முதியவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் எனச்சொல்லி பெற்ற பிள்ளைகள் முதியோர் இல்லங்களில் தள்ளும் காலத்தில் இவர் தன் முதுமையை ஓர் ஆயுதமாகக் கொண்டு, முதியவர்களால் இளையவர்களைக் காட்டிலும் மகத்தான காரியங்களை செய்ய முடியுமென தன் வாழ்வின் மூலமாகச் சொல்லி வருகிறார்.

முதுமை என்பது சாபமல்ல; வரம்! ஆம்! அப்படித்தான் சொல்வார் நிச்சயம் பாட்டியிடம் கேட்டால்.

கற்றல் இனிது; அதிலும் இவரைப் போன்ற எளிய வெள்ளந்தி மனிதர்களைப் பார்த்து அவர்களது அர்த்தமுள்ள வாழ்வைக் கற்றல் பேரினிது!

ஆம்! வேறென்ன சொல்ல?!

(ஏப்ரல் 08, 2020)

*

முகங்களின் முதலில்

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 4 : திட்டம்மா

முகங்கள் – 5 : ஏகாந்தர்

முகங்கள் – 6 : நகலி

முகங்கள் – 7 : மோனன்

 

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=