முகங்கள் – 16 : மீயாய்

 

முகங்கள் – 15 : அவளான்

**

‘அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு’

 – திருவள்ளுவர்

**

சிறியதிலிருந்து விரிந்து பரந்து பெரியதாகும் அனைத்துமிங்கே மகத்தானவை ஆகின்றன. உதாரணமாக, சிறு விதையிலிருந்து பெருமரம். சிறு துளியிலிருந்து பெருங்கடல். இன்னும் இன்னும்.

ஆனால், அவை அனைத்தும் சிறியதாக இருக்கும்போது பெரியதானப் பின்னர் கிடைக்கும் மதிப்பிலும் மகத்துவத்திலும் பாதியையாவது பெற்றனவா எனில் இல்லை என்பதுதான் பதில். ஆம்!

என்னதான் இவை இயற்கையின் அனைத்துப் படைப்புகளுக்கான சம நியதியாக இருந்தாலும் மனிதர்களுக்கு என்று வரும்போது அதன் வெளிப்பாடு சற்று அதிகமாக இருப்பதை உணரமுடிகிறது.

ஒருவேளை நாம் மனிதர்களாக இருப்பதால் அப்படி இருக்குமோ என்னவோ?!

‘தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை

தெள் நீர்க் கயத்துச் சிறு மீன் சினையினும்

நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னர்க்கு இருக்க நிழலாகும்மே!’

என்றொரு தமிழ்ப்பாடலுண்டு. 

மீன்களின் முட்டை என்பது மிகச்சிறிய ஒன்று. அதிலும் சிறுமீன் முட்டை என்பது அதனினும் சிறியது. அப்படிப்பட்ட சிறுமீனின் சினையிலும் அதாவது முட்டையிலும் சிறியது ஆலமரத்தின் விதை என இப்பாடலில் ஆலமர விதைக்கு சிறுமீனின் முட்டை உவமை சொல்லப்படுகிறது.

அத்தகைய சிறுமீனின் முட்டையிலும் சிறிதாக இருக்கும் ஆலம் விதையானது முளைத்து செடியாகி பரந்து விரிந்து மரமாகும்போது அதன் நிழலில் அண்ணல் யானை அணிதேர்ப்புரவி ஆட்பெரும் படையுடன் மன்னர் இளைப்பாறலாம் என்பது பாடலின் முழுப் பொருள்.

அதே போன்றுதான் வானின் கருமேகத்திடமிருந்து பிரிந்து மண் நோக்கி விழும் சின்னஞ்சிறு மழைத்துளிகள் பல சேர்ந்து மகத்தான நீர் நிலைகளாக உருவெடுத்து நிற்பதும்.

இப்படி இயற்கையின் படைப்பில் எத்தனையோ நம் முன்னால் சாட்சிகளாக இருப்பதுபோல் மனிதர்களிலும் ஆங்காங்கே சில சாட்சிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சாட்சியை முதல் தடவை கண்டபோது வியந்துதான் நின்றேன்.

ஆம்! அப்போது அவர் பல இன்னல்களையும் போராட்டங்களையும் தடைகளையும் கடந்து பெரும் விருட்சமாக இருந்தார். ஆனால், சின்னஞ்சிறு விதையாக, சின்னஞ்சிறிய துளியாக, மாபெரும் கனவை நோக்கிய முதலடியை சிறியதொரு புள்ளியாக வைத்தபோது எப்படி மனித சமூகத்தில் பார்க்கப்பட்டிருப்பார்? எவ்வாறான சவால்களையெல்லாம் கடந்து இந்நிலைக்கு வந்திருப்பார் என யோசிக்க யோசிக்க வியப்பாக இருந்தது.

இன்னொரு பக்கம் அவரது சிறு புன்னகை யாவற்றுக்குமான மருந்தாக, நம்பிக்கையாக, ஊக்கியாக எப்போதும் இருந்தது என் அனைத்துக் கேள்விகளுக்குமான ஒற்றை பதிலாக இருந்தன.

ஆம்! சென்னையின் பரபரப்பு மிகுந்த பகுதிகளில் ஒன்றின் முக்கிய சாலையிலிருந்து வலதுபக்கம் திரும்பி மரங்களடர்ந்த சிறு சாலையில் நுழைந்து சற்று தூரத்தில் இடது பக்கம் உள்ள பூங்காவின் முன்புள்ள தெருவில் சென்றால் வலது பக்கத்திலுள்ள பழைய கட்டடம் ஒன்றின்முன் பல ஆண்டு வலிகளைத் தாங்கியப் புன்னகையோடு அவர் நின்றிருந்தார். 

மாநிறம், சற்று உடல் பருமன், 65 வயது, அதைத் தாண்டிய சுறுசுறுப்புடன் என்னைப் பார்த்து,

”வடிவரசு சாருங்களா? (ஆமாம் என்றேன்) வாங்க வாங்க..?’’

இதுதான் அவர் என்னிடம் பேசிய ஆரம்ப வார்த்தைகள்.

மென்மையான அக்குரல் அதன் பின்னுள்ள எண்ணிக்கையிலடங்காத வலிகளையும் அதைக் கடந்த மகிழ்வையும் ஒருங்கே உணர்த்தியது.

உள்ளே அழைத்துச் சென்றவர் சிறுசிறு தடுப்புகள் போட்டு பிரிக்கப்பட்டிருக்கும் வகுப்பறைகளைக் கடந்து வலது பக்கம் திரும்பி உடனே இடது பக்கம் திரும்பி நேராகச் சென்று கடைசி இடதுபக்க அறைக்குள் அழைத்துப் போய் உட்கார வைத்தார்.

”காபி குடிக்கிறீங்களா? டீ குடிக்கிறீங்களா?”’ என்றார்.

”அதெல்லாம் எதுவும் வேணாம் மேடம்..” என்றேன்.

உடனே அவர், ”என்ன சார் மொதல் தடவையா எங்கப் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கீங்க, கண்டிப்பா ஏதாவது குடிக்கணும்..’’ என்றார்.

”எதுனாலும் பரவால்ல மேடம்..’’ என்றேன் புன்னகைத்துவிட்டு.

அவரே அங்குள்ள சமையலறைக்குச் சென்று தேநீர் போட்டுவந்து கொடுத்து அதன் முதல் மிடறை நான் பருகியதும்,

”Sugarலாம் சரியா இருக்கா சார்..?’’ என்றார்.

”ம்… சரியா இருக்கு மேடம்..’’ என்றேன்.

அருகில் உள்ள இருக்கையில் உட்கார்ந்து நான் கேள்வி கேட்கும் முன்னமே என் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்.

மிகப் பழையக் கட்டடம் அது. அதோடு வீடாக இருந்து பள்ளியாக மாற்றப்பட்டதென்பதை உள் நுழைந்தபோதே அறிந்துகொண்டேன். அவ்வறையின் இடதுபக்க சுவரில் மாட்டப்பட்டிருந்த பள்ளிச் சீருடையில் இருக்கும் மாணவியின் ஒளிப்படத்தைக் காட்டி,

”அது யாரு மேடம்?” எனக் கேட்டேன்.

”என்னோட மகள் சார். அவங்க பேருலதான் இந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தறோம்..’’ என்றார்.

உடனே, ”அவங்க எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க மேடம்?’’ என்றதும், நான் சொன்னது கேட்காதது போல் எதையோ யோசித்தபடி அமைதியாக இருந்தார்.

”மேடம்..’’ என்று இன்னொரு தடவை அழைத்ததும் நினைவு வந்தவராய்,

”சொல்லுங்க சார்” என்றார்.  

அதே கேள்வியைத் திரும்பவும் கேட்டேன்.

”அவங்க இப்போ எங்கேயும் படிக்கல சார்..’’ என்றவர், சில நொடிகள் கழித்து,

”அவங்க இப்போ உயிரோடவும் இல்ல சார்..’’ என்றார்.

அப்போதவர் லேசாக கண் கலங்கியதைப் பார்த்ததும் சங்கடமாகி,

“Sorry Madam..” என்றேன்.

உடனே அவர் புன்னகைத்துவிட்டு, ”அட அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்..’’ என்றுவிட்டு, அவருக்கு முன்னால் மேசை மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து குடித்தார். பின் எதையோ யோசித்தவராய்,

”ஒன்பதாவது படிக்கிறப்போ தற்கொலை பண்ணிக்கிட்டாங்க சார்..’’ என்றார்.

அமைதியாக எனக்குள் ‘ம்’ கொட்டிக்கொண்டு லேசாக தலையாட்டினேன்.

”படிப்புக்கும் அவங்களுக்கும் அவ்வளவு நெருக்கம். கிளாஸ்லயே மொத மார்க் வாங்குவாங்க. அன்னிக்கி என்னமோ தப்புப் பண்ணிட்டாங்கன்னு டீச்சர் எல்லார் முன்னாடியும் திட்டுனது தாங்காம அவசரப்பட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க…

”ஒரே பொண்ணு. எங்க ஆச கனவு எல்லாமே அவங்கதான். ஒடஞ்சு போயிட்டேன். இனி யாருக்காக வாழணும் செத்துடலான்னு கூட துணிஞ்சிட்டன். அந்த நேரத்துலதான் அவங்களோட ஆசை ஞாபகம் வந்துச்சு…

”அடிக்கடி என்கிட்ட சொல்வாங்க, அம்மா நான் படிச்சு பெரியாளாயி ஸ்கூல் கட்டி ஏழ பசங்களலாம் படிக்க வைப்பன்னு. அதை செத்துப் போன அவங்களே வந்து ஒருதடவ என் காதுல சொன்ன மாதிரி இருந்துச்சு. உடனே நாம ஏன் சாகணும், நம்மப் பொண்ணுதான் சாகலையே, நம்மள விட்டு எங்கையும் போகலயே, இனி அவங்க ஆசை வழியா என் கூடவே இருக்கப் போறாங்கன்னு உள்ளுக்குள்ள தோணுச்சு. ஆமா… ஒருத்தரா இல்ல… பத்து பேரா, நூறு பேரா…

”உடனே என் கணவர் கிட்டப் போய் சொன்னன். அவரும் சரின்னு சொல்லிட்டாரு. வாடகைக்கு ஒரு எடம் பாத்து என் பொண்ணுக்காக சேர்த்து வச்சிருந்த பணத்தைப் போட்டு அவங்க பேர்லயே வசதி இல்லாத ஏழை மாற்றுத்திறனாளிக் கொழந்தைங்க இலவசமாப் படிக்கிறதுக்கு இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்கிட்டோம்…

”ஆமாம் சார், இருபது வருசத்துக்கு முன்னாடி ரெண்டே ரெண்டுப் பசங்களோட தொடங்கினப் பள்ளிக்கூடத்துல இன்னிக்கி 120 பசங்க படிக்கிறாங்க..’’ என்று சொல்லிவிட்டு மென்மையாக புன்னகைத்தார்.

எனக்கு அவரின் இச்செயல் பெரும் கனவு போன்றிருந்தது. எதுவும் சொல்லாமல் அவரைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்துவிட்டு அவ்வறையை சுற்றிலும் இன்னொரு தடவை பார்த்தேன்.

பின் மீண்டும் ஒரு தடவை சுவரில் மாட்டப்பட்டிருக்கும் அவரது மகள் படத்தைப் பார்த்தேன்.

”ஒரு புள்ள இல்லன்னு ஒடஞ்சிப்போயிருந்தன் அன்னிக்கி. 120 புள்ளைங்களோட நிமிர்ந்து ஒக்காந்திருக்கன் சார் இன்னிக்கி..’’ என்று பெருமிதத்தோடு சொல்லி புன்னகைத்தார்.

அவரது புன்னகையின் பின்னாலுள்ள இருபது வருடங்களை நினைத்துப் பார்த்தேன். ஒரு பள்ளி தொடங்குவது எத்தனை பெரிய காரியம். அதிலும் பணத்தாசையின்றி கட்டணக் கொள்ளைகள், நன்கொடை மோசடிகள் எதுவும் இல்லாமல் ஏழை எளிய அதிலும் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளின் வாழ்வில் கல்வி விளக்கு ஏற்ற நினைத்து பள்ளி தொடங்கி அதை தொடர்ந்து நடத்துவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை அவர் சொல்லாமலேயே என்னால் உணரமுடிந்தது.

இதிலும் அன்றைக்கு அப்பள்ளியில் படித்து மாநில அளவில் (மாற்றுத்திறனாளிப் பிரிவில்) பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியைப் பேட்டி எடுக்கத்தான் போயிருந்தேன். எதிர்பார்க்காத அவரது அறிமுகம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை தந்ததாக அவரிடம் சொல்லிவிட்டு விடைபெற்று வந்தேன்.

அடுத்த அவள் விகடன் இதழில் அக்கட்டுரை வெளியானதும் அழைத்து நன்றி சொன்னவர் அம்மாத இறுதியில் நடக்கவுள்ள அவர் மகளின் நினைவு தினக் கூட்டத்துக்கு என்னையும் கலந்துகொள்ள வருமாறு அழைத்தார். மறுக்க முடியாமல் பள்ளியில் நடந்த அந்நிகழ்ச்சியில் போய் கலந்துகொண்டேன்.

நிகழ்ச்சி முடிந்து பள்ளிக் குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து மரத்தடி நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்தவர்,

”என்ன சார் இங்க நிக்கறீங்க? உள்ளே உட்காந்திருக்கலாமே..’’ என்று கேட்டுவிட்டு, ”நல்லா சாப்பிட்டீங்களா சார்?” என்றார்.

”ம்… சாப்டன் மேடம். நீங்க?” என்றேன்.

”இனிமேதான் சார் சாப்டணும். கொழந்தைங்க பசி தாங்க மாட்டாங்க. அதான் அவங்களுக்கு மொதல்லக் கொடுத்துட்டு பொறுமையா சாப்புடுவன் சார்..’’ என்றார்.

”சரிங்க மேடம் நான் கெளம்பறேன்..’’ என்றதும்,

”இருங்க சார் ஒரு நிமிஷம்..” என உள்ளே ஓடிப் போய் இரண்டு பிரியாணி பொட்டலத்தை எடுத்து வந்தார்.

”சார் இத எடுத்துட்டுப் போங்க. போற வழியில யாராவது பசியோட இருந்தாங்கன்னா ஒங்கக் கையாலக் கொடுங்க..’’ என்றார்.

”கண்டிப்பா மேடம்..’’ எனச் சொல்லி வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வந்தேன்.

அதன்பின் சில மாதங்கள் கழித்து ஒருநாள் விடாமல் மழை பெய்து சென்னை முழுக்க நீர் நிரம்பி வெள்ளக் காடாக இருக்கும்போது அவரிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்ததும்,

”பத்தரமா இருக்கீங்களா சார். நேத்துலயிருந்து ஒங்க ஞாபகமாவே இருக்கு. அதான் மனசுக் கேக்காம கூப்பிட்டேன்..’’ என்றார்.

அவர் அப்படிச் சொன்னது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அதோடு அவரது குரலில் தெரிந்த லேசான சோகம் என்னை வருத்தமடைய செய்தது.

”என்னாச்சு மேடம்? குரல் ஒருமாதிரி டல்லா இருக்கு. நல்லாருக்கீங்க’ல்ல..?” என்றேன்.

”நான் நல்லாருக்கன் சார், பள்ளிக்கூடத்த நெனச்சாதான் கஷ்டமா இருக்கு..’’ என்றார்.

”ஏன் என்னாச்சு மேடம்? ஏதாவது பிரச்சனையா..?” என்றேன் உடனே.

”என்னிக்கி சார் பிரச்சனை இல்லாம இருந்திருக்கு. இங்கே கெட்டத செஞ்சாக்கூட சும்மா இருந்துடுவாங்க. ஆனா நல்லதை செஞ்சா அதை தடுக்குறதுக்குன்னு கூட்டம் கூட்டமா வந்துட்றாங்க சார்..’’ என்றார்.

இதுகுறித்து நகர்பேசியில் பேசுவது அவ்வளவு சரியாக இருக்காது என்பதால்,

”வருத்தப்படாமப் போய் தூங்குங்க மேடம். நாம செய்ற நல்லதை அவ்ளோ ஈஸியாலாம் யாராலயும் ஒண்ணும் பண்ணிட முடியாது..’’ என்று சொல்லிவிட்டு வைத்தேன். 

அதன்பிறகு ஒருநாள் அவர் வீடிருக்கும் பகுதியில் தங்கியிருந்த கல்லூரி நண்பன் ஒருவனைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போதவர் ஞாபகம் வர உடனே அழைத்துப் பேசினேன்.

”கண்டிப்பா வீட்டுக்கு வரணும் சார்..’’ என மகிழ்ச்சியோடு அழைத்தார்.

பழைய மூன்று மாடி வீடு. சுற்றிலும் மரங்களும் செடிகளும். அதன் இரண்டாவது மாடியில் உள்ள அவரது வீட்டின் அழைப்பு மணியை அடித்தேன். புன்னகையோடு வரவேற்று உட்காரவைத்தவர்,

”எப்படி இருக்கீங்க சார்? ரொம்ப நாளாச்சு பார்த்து..’’ என்று நலம் விசாரித்துவிட்டு உள்ளே சென்று தேநீர் போட்டு எடுத்து வந்தார்.

அவர் வருவதற்குள் அவரது வீட்டின் சுவர்களில் மாட்டியிருக்கும் படங்களையும் ஆங்காங்கே வைத்திருக்கும் பொருட்களையும் பார்த்தேன். அதில் நான் மகிழ்ந்த ஒரு விஷயம் அன்றைக்கு நான் எழுதியக் கட்டுரையை போட்டோ பிரேம் போட்டு சுவரில் மாட்டி வைத்திருந்தது.

”ஐயாக்கூடவும் அம்மாக்கூடவும் பேசுனீங்களா சார்?” எனக் கேட்டவாறு தேநீரோடு வந்தவர் எனக்கொன்றை தந்துவிட்டு, அவருக்கொன்று எடுத்துக்கொண்டு எதிரில் இருக்கும் இருக்கையில் உட்கார்ந்தார். பேச்சின் நடுவில்,

”இந்த Government-கிட்ட எத்தனையோ வாட்டி பள்ளிக்கூடத்துக்கு உதவிக் கேட்டுப் பார்த்துட்டோம். ஒரு உதவியும் பண்ண மாட்றாங்க. கைல இருந்தக் காசு நக எல்லாத்தயும் கொஞ்ச கொஞ்சமா வித்து வட்டிக்கிக் கூட பணம் வாங்கி பள்ளிக்கூடத்த நடத்திட்டிருக்கோம். எவ்ளோதான் சார் வயசான எங்களால பண்ணமுடியும்?

”எதெதுக்கோ கோடிக் கோடியா செலவுப் பண்றாங்க. ஏழைப் பசங்களுக்கு நடத்தறப் பள்ளிக்கூடத்துக்கு உதவின்னு போய் நின்னா நாயை விடக் கேவலமா வெரட்டறாங்க. இன்னொருப் பக்கம் நீ எப்படி ஃப்ரீ எஜுகேஷன் கொடுக்கலாம்னு நாலாப்பக்கமும் தொல்லக் கொடுக்குறாங்க. எவ்ளோ போராட்டத்ததான் சார் நாங்க தாண்டி வர்றது?

”விட்ற மாதிரி இல்ல சார். ஒடம்புல உசுரு இருக்கற வரக்கும் எல்லாத்தயும் தாண்டி பள்ளிக்கூடத்த நடத்துவேன் சார். வயசானப் பொம்பள அப்டி என்ன பண்ணிக் கிழிச்சிடுவான்னு எளக்காரமா நெனச்சிட்டாங்க. அவங்க முன்னாடி எல்லாத்தையும் பண்ணிக் காட்டுவன் சார்…

”120 கொழந்தைங்க எங்கள நம்பி வர்றாங்க. அவங்களும் என் புள்ளைங்கதான சார். எப்படி சார் நடுத்தெருவுல வுடமுடியும்..’’

இன்னும் ஏதேதோ பேசினார். பட்ட ஒவ்வொரு கஷ்டங்களையும் சொன்னார். தன் காது மூக்கு கையில் கழுத்தில் ஆசை ஆசையாக வாங்கிப் போட்டிருந்த நகைகளையெல்லாம் விற்று பள்ளிக்கூடக் கட்டடத்திற்கு வாடகை கொடுத்த கதைகளையெல்லாம் சொன்னார்.

ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவரை நினைத்து பெருமையாகவும் இருந்தது. என்னால் முடிந்த உதவிகளையும் எனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக சில உதவிகளையும் அவருக்கேத் தெரியாமல் செய்ய ஏற்பாடுகள் செய்தேன். மகிழ்ச்சியோடு அழைத்து ஒவ்வொன்றையும் சொல்லி மகிழ்வார்.

அதன்பிறகு நான் வேலையை விட்டுவிட்டு பாடல் எழுத முயற்சி செய்வது பற்றியும், தனிப்பாடல்கள் தொடர்ந்து எழுதுவது குறித்தும் தினத்தந்தியில் வெளியான என் பேட்டியைப் படித்துவிட்டு அழைத்தார்.

”என்ன சார் இவ்ளோ நடந்திருக்கு, எதுவுமே எங்கக்கிட்ட சொல்லல. நாங்கலாம் யாரோன்னு நெனச்சி சொல்லாம விட்டுட்டீங்களா சார்..’’ என்று உரிமையோடு கேட்டார்.

பின் திடீரென ஒருநாள் விடிகாலை ஏழு மணிக்கு அழைத்தவர்,

”எங்க இருக்கீங்க சார்? உங்களப் பாக்கணும் போல இருக்கு. இன்னிக்கி ஸ்கூல் வரைக்கும் வரமுடியுமா?” என்றார்.

கிளம்பிப் போனேன். வரவேற்று அமர வைத்து வழக்கம்போல் தேநீர் போட்டு வந்துக் கொடுத்தவர், என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.

”நீங்க எதுக்கு வீட்டு வாடகைலாம் கொடுத்துட்டு கஷ்டப்படணும். பேசாம எங்கக் கூட எங்க வீட்லயே வந்து தங்கிக்கலாமே..’’ என்றார்.

அவர் அதனை என் மீதுள்ள அக்கறையால்தான் சொல்கிறார் எனப் புரிந்துகொண்டேன். உடனே அவரிடம்,

”நான் கஷ்டலாம் ஒண்ணும் படல மேடம். விரும்பிதான் இந்த ரிஸ்க்கை எடுக்குறன். நண்பர் கூடதான் இப்போ ரூம்ல தங்கியிருக்கேன். எதுவும் பிரச்சினை இல்ல. உங்களுக்கு ஏதாவது உதவின்னா உடனே  கூப்புடுங்க, இதேப் போல வந்து நிப்பேன்..’’ என்றேன்.

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் அங்கிருந்து எழுந்து சென்றவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். வந்தவர் அறையின் இடதுபுற சுவரோரம் இருக்கும் பீரோவைத் திறந்து எதையோ எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியில் சென்றார்.

ஐந்து நிமிடம் சென்றிருக்கும். நான் எனது நகர்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது உதவியாளர் வந்து என்னிடம் அவர் தரச்சொன்னதாக கவர் ஒன்றை தந்தார்.

”என்ன மேடம் இது?” என்றேன் அவரிடம்.

”தெரியல சார். மேடம்தான் கொடுக்க சொன்னாங்க..’’ என்று சொல்லிவிட்டு வெளியில் போனார்.

அவர் சென்றதும் பிரித்துப் பார்த்தால் அதில் பணம் இருக்கக் கண்டு அதிர்ந்தேன். இவர் எதற்கு பணம் தருகிறார்? அதுவும் நேராக என்னிடம் தராமல் இன்னொருவரிடம் கொடுத்து தரச் சொல்கிறார்? கோபமாக வந்தது.

உடனே அப்பணத்தை அக்கவரிலேயே போட்டு மேசை மீது வைத்துவிட்டு அதன்மேலே,

”உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி மேடம்..’’ என எழுதிவிட்டு எழுந்து அங்கிருந்து வேகவேகமாக வழியில் உட்கார்ந்திருந்த அவர் முகத்தைக் கூட பார்க்காமல் வெளியில் வந்துவிட்டேன்.

எதற்கெனக்கு பணம் தர வேண்டும்? நான் கஷ்டப்படுகிறேன் என்று நினைத்து தந்தாரா? இல்லை, நான் செய்த உதவிகளுக்குப் பணம் தந்தாரா என ஏதேதோ  யோசித்தவாறு அங்கிருந்து நடந்து வந்து அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்தேன்.

அப்போதுதான் அவர் சில தினங்களுக்கு முன் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஒருநாள் என் நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு அப்பள்ளியைக் காட்டச் சென்றிருந்தேன். அப்போது என்னை மட்டும் தனியாக அழைத்து பேசிக் கொண்டிருந்தவர் பேச்சின் நடுவில்,

”இந்த சார் (அவர் அப்படித்தான் என்னை அழைப்பார்) மேடம் எல்லாம் எதுக்கு இனிமே, அம்மான்னே என்னக் கூப்டலாமே..’’ என்றார்.

எதிர்பார்க்காதது என்றபோதும் வெளியில் பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் லேசாகப் புன்னகைத்துவிட்டு,

”ஆரம்பத்துலருந்து மேடம்னு கூப்டுப் பழகிடுச்சு. திடீர்னு மாத்திக்கிறது கஷ்டம் மேடம்..’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

முதலில் அம்மா என அழைக்கச் சொன்னது. அடுத்தது அவர் வீட்டில் வந்து தங்கச் சொன்னது. இப்போது பணம் தந்தது. ஒவ்வொன்றும் கண்முன் வந்து வந்துப் போனது.

பார்க்க ஒருபக்கம் அவர் என்மீதுள்ள அக்கறையாலும் அன்பாலும் செய்ததாகப் பட்டாலும் இன்னொரு பக்கம் ஏதோ தவறாகவும் பட்டது. அதோடு இதனை உடனே முடித்துவைக்க வேண்டியதும் அவசியம் என்றும் தோன்றியது.

அதனால் அதன்பிறகு அங்கு செல்வதையும் அவரிடம் பேசுவதையும் நிறுத்திக்கொண்டேன். கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் நானும் அழைக்கவில்லை அவரும் அழைக்கவில்லை (என்றபோதும் அவர் குறித்து நினைக்காமலில்லை, பள்ளிக்கு முடிந்த உதவிகளை செய்யாமல் இல்லை). அதுவே நான் நினைத்தது சரி என்பதை சொல்லாமல் சொல்லியது.

மகத்தான காரியம் ஒன்றை சிறு புள்ளியில் ஆரம்பித்தவர். கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் ஏராளமானத் தடைகளைத் தாண்டிப் போராடி  பெரும் விருட்சமாக இன்றைக்கு உருவாக்கியிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்தவர். வணங்கத்தக்கவர். பொது நலத்தை தன்நலமாகக் கொண்டவர்.

‘ஒரு புள்ள இல்லைன்னு வருத்தப்பட்ட எனக்கு, இப்போ 120 புள்ள’ என்று பெருமிதத்தோடு சொன்னவர்.

ஏனோ என்னை மட்டும் அவர்களில் ஒருவராகப் பார்க்காமல் தனித்துப் பார்த்தது அவரது இத்தனை வருடப் போராட்டத்துக்கும் உழைப்புக்கும் மகத்துவப் பணிக்கும் ஒட்டாத ஒன்றாகவேப் பட்டது. அதனால் அவரது விஷயத்தில் நான் செய்ததும் எனக்கு சரியாகவே பட்டது.

இருந்தபோதும் சில மாதங்களுக்கு முன் ஒருநாள் எனது முதல் நூலின் ஒரு பிரதியை அவரிடம் தர வேண்டுமென்று மனத்தில் தோன்ற உடனேக் கிளம்பி அவரிடம் வருவதாகக் கூட சொல்லாமல் பள்ளிக்கு சென்றுவிட்டேன்.

என்னை சற்றும் எதிர்பார்க்காதவர் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்தார். பின் அவரிடம் என் புத்தகத்தை கொடுத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்.

”ரொம்ப ரொம்ப நன்றி சார். இவ்ளோ நாள் கழிச்சியும் எங்கள ஞாபகம் வச்சி தேடி வந்துக் கொடுத்ததுக்கு..’’ என்றார்.

அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்த ‘சார்’ என்ற சொல்லில், அவரை கடைசியாக சந்தித்தபோது இருந்த என் மீதான சுயநல அக்கறை இல்லாமல் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

ஆம்! மீண்டும் அவர் பழையபடி 120 குழந்தைகளுக்கு தாயாக இருந்தார்.

மகிழ்வோடு விடைபெற்று வெளியில் வந்து வலதுபக்கம் திரும்பி சற்று தூரம் நடந்து வந்து திரும்பிப் பார்த்தேன். அப்பள்ளி எனக்கொரு பெரும் ஆலமரம் போன்று காட்சி தந்தது. அதனுள்ளிருக்கும் அவர் அதன் ஆணிவேராய்த் தெரிந்தார்.

என்னதான் இந்த வாழ்க்கை எனக்கு எத்தனை எத்தனையோ முகங்களையும் முகவரிகளையும் காட்டினாலும் அதில் அவரது முகமும் அவரின் மேன்மைமிகு பள்ளியின் முகவரியும் எப்போதும் மனத்தில் நீங்காமல் இருக்கும் என்பதை எனக்குள் ஒரு தடவை சத்தமாய் சொல்லிக்கொண்டேன்.

அதோடு அவர் சொல்வதற்கு முன்னமே அவரை என் பெற்றெடுக்காத அன்னையாக நினைக்க ஆரம்பித்துவிட்டேன். ஆம்!

சிலதை சொல்வது நல்லது சிலவற்றை சொல்லாமல் இருப்பது நல்லது என்பார்கள். அவ்வகையில் எனது பின்னது.

ஆம்! அன்பு அம்மாவே… இன்றுபோல் என்றும் மகிழ்ந்திருங்கள். யாவரையும் மகிழ்த்திடுங்கள். என்றைக்கும்போல் தூரத்திலிருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பேன்.

உங்களிடம் வேறென்ன இதைவிட பெரிதாக இவ்வெளியவன் கேட்டுவிடப்போகிறேன்?!

(ஏப்ரல் 16, 2020)

*

முகங்களின் முதலில்…

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 4 : திட்டம்மா

முகங்கள் – 5 : ஏகாந்தர்

முகங்கள் – 6 : நகலி

முகங்கள் – 7 : மோனன்

முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

முகங்கள் – 9 : வக்கீலண்ணா

முகங்கள் – 10 : பத்தாள்

முகங்கள் – 11 : ஞாளியார்

முகங்கள் – 12 : திருநி

முகங்கள் – 13 : அறிமுகன்

முகங்கள் – 14 : நட்புறா

முகங்கள் – 15 : அவளான்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=