முகங்கள் – 12 : திருநி

முகங்கள் – 11 : ஞாளியார்

**

‘வேப்பம் பூ

வாசனை நடுவே

மொட்டை மாடியில்

கோடை சேமிக்கிறாள்

கூழ் வற்றல்

போட்டு’

 – கலாப்ரியா

**

ஒருநாள் என்பது இரவு பகல் எனும் இரண்டால் ஆனது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. இரவு இல்லையேல் பகலும், பகல் இல்லையேல் இரவும் இல்லை எனலாம். இரவு இருட்டையும் பகல் வெளிச்சத்தையும் குறிக்கும் என்பார்கள். இன்னும் சொல்லப்போனால்… இரவு கருமை நிறத்தையும், பகல் வெண்மை நிறத்தையும் குறிக்கும் என்றுகூட சொல்லலாம்.

சிலர் பகல் முழுக்க விழித்துவிட்டு இரவில் உறங்குவர். சிலர் இரவில் விழித்துவிட்டு பகலில் உறங்குவர். இன்னும் சிலர் இரண்டையும் மாறி மாறி செய்வர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இரவும் பகலும் இரு உலகங்கள் எனச் சொல்லலாம். பகலில் பார்த்த உலகம் அப்படியே மாறி இரவில் வேறோர் உலகமாக மாறிவிடுவதை இரவில் விழித்துப் பார்த்தோர் மட்டுமே அறிவர்.

இரவு எத்தனை அழகானதோ அதே அளவுக்கு கொடுமையானதும் கூட. என்னதான் சிலரது வாழ்வு இரவை நம்பியே இருந்தாலும் அவ்விரவை எல்லோரும் விரும்புவது கிடையாது. அப்படியே விரும்புபவர்களும் எல்லா இரவுகளையும் விரும்புவதில்லை.

இரவு என்பது பலருக்கு இன்பமாகவும் சிலருக்கு துன்பமாகவும் இருந்தாலும் உண்மையில் இரவு என்பதுதான் என்ன? பல தடவை உதித்தக் கேள்வி இது.

பகல் முழுக்க உழைத்தவர்கள் ஓய்வெடுக்கக் கிடைத்ததே இரவு என சிறுவயதில் நினைத்துக்கொண்டிருந்த எனக்கு… இரவு முழுக்க விழித்து வேலை பார்த்துவிட்டு பகலில் ஓய்வெடுக்கும் பெரும் கூட்டமும் இவ்வுலகம் முழுக்க இருக்கிறது என்பதை முதல் தடவை அறிந்தபோது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

கிராமத்தில் மிகக்குறைந்த, இன்னும் சொல்லப்போனால் திருவிழா, தெருக்கூத்து போன்ற மிகக் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே விழித்ததுண்டு. சென்னைக்கு வந்தப் பிறகு இரவின் மீது அளவுகடந்த ஈர்ப்பும் மோகமும் உருவானது. அதனால் பல நாட்கள் இரவில் வேண்டுமென்றே விழித்திருக்கிறேன்.

ஊர்முழுக்க உறங்க அமைதி பூசிய இரவில் தனித்து விழித்திருத்தல் ஏதோ ஒருவித மகிழ்ச்சியை சுகத்தை எனக்குள் ஏற்படுத்தும். அதனால் எப்போதெல்லாம் நேரம் வாய்க்கிறதோ அப்போதெல்லாம் இரவை முழுமையாக விழித்திருந்து ரசிப்பேன். குறிப்பாக இரவுகளில் பயணிப்பது, யாருமற்ற சாலைகளில் நடந்து போவது, மொட்டை மாடியில் உட்கார்ந்து உறங்கும் ஊர்களையும் விழித்திருக்கும் வானத்தையும் ஒருங்கேப் பார்ப்பது, சில தினங்களில் இரவு முழுக்க புத்தகம் வாசிப்பது, படம் பார்ப்பது, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது, தூரமாக நடந்துபோய் தேநீர் பருகிவிட்டும், குல்ஃபி ஐஸ் சாப்பிட்டுவிட்டும் வருவது, இப்படி ஏதேதோ செய்துகொண்டு இரவின் சுவையைப் பருகியதுண்டு.

இன்னும் நம்மில் பலர் இரவு என்பது உறங்குவதற்காக மட்டும்தான் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். இரவு என்பது உறங்க மாத்திரமல்ல, உழைக்கவும்தான் என்பதை பெருநகரங்களில் ஒரே ஒருநாள் விழித்திருந்து பார்த்தால் போதும் நன்கு புரிந்துவிடும். ஆம்!

அன்றைய இரவு நான் கண்ட காட்சியை இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது. பாதி மகிழ்வாலும் மீதி கண்ணீராலும் ஆனது. ஆம்! அப்படித்தான் சொல்கிறது மனம்.

அப்போது லயோலா கல்லூரியில் இரண்டாமாண்டு முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். சென்னையின் மிகப் பிடித்த இடங்களில் மட்டுமல்ல… உலகின் மிகப் பிடித்த இடங்களில் கூட எப்போதும் லயோலா கல்லூரியைச் சொல்வேன். அந்த அளவுக்குப் பிடிக்க முதற்காரணம், அங்குள்ள ஆயிரக்கணக்கான மரங்கள். அதிலும் நான் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தவன் என்பதால், பகலில் பார்த்த கல்லூரியையும் அதன் ரம்மியமான மரங்களடர்ந்த வளாகத்தையும் இரவிலும் பார்த்து இரண்டாண்டுகளுக்கு மேல் ரசித்திருக்கிறேன்.

அன்றைய தினம் ‘விடுதி தினவிழா’ என்பதால் விடுதி அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு நன்கு சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது தூரத்திலிருந்து நண்பனொருவன் அழைத்ததும் திரும்பிப்பார்த்தேன்.

”டேய் மச்சி… Friends கூட நைட் ஷோ படத்துக்குப் போறன். நீயும் வரியா?” என்றான்.

”சரி போலாம்’’ எனச் சொல்லி அவனோடு சேர்ந்து (உடன் அவன் நண்பர்கள் எட்டு பேர். என்னையும் அவனையும் சேர்த்து மொத்தம் பத்து பேர்) ஸ்கைவாக்கில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் ‘பயணம்’ திரைப்படத்துக்குப் போயிருந்தோம். சென்னையில் நான் பார்த்த இரண்டாவது இரவுக் காட்சிப் படம் அதுதான்.

படம் பார்த்துவிட்டு அங்கிருந்து நடந்து நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக கல்லூரி நோக்கி வந்து கொண்டிருந்தோம். அது சென்னையில் நான் விழித்துக் கொண்டிருக்கும் பல பத்து இரவுகளில் ஒன்றாக இருப்பினும், அப்படி நண்பர்களோடு நள்ளிரவில் சாலைகளில் சுற்றித்திரியும் முதல் இரவு அதுதான். அதனால் அவ்வழியாக நடக்கையில் கண்ட பல காட்சிகள் எனக்குப் புதிதாக இருந்தது.

மேத்தா நகருக்கு கொஞ்சம் முன்னமே ஆரம்பித்து வழி நெடுகிலும் ஆங்காங்கே நின்றபடி ஏராளமான திருநர்’கள் (திருநங்கை, திருநம்பி என இரண்டு சொற்கள் எதற்கு? திருநர் என்னும் ஒற்றைச்சொல் போதும்தானே!) அவ்வழியாக வருபவர்களையும் செல்பவர்களையும் கைகாட்டி அழைத்தவண்ணம் இருந்தனர்.

உடன் வந்த நண்பன் என்னை விட கொஞ்சம் விவரமானவன் என்பதால், அவர்கள் அப்படி அங்கே நிற்பது குறித்தும் அவர்களது தினசரி வாழ்வு குறித்தும் சொல்லிக்கொண்டே வந்தான்.

அவன் சொன்னதில் பாதி ஏற்கனவே தெரிந்ததாகவும், சில விஷயங்கள் புதுத் தகவலாகவும் இருந்தது. இருந்தாலும் எதுவும் தெரியாததுபோல் தலையாட்டிக்கொண்டு அவன் சொல்வது ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டு வந்தேன்.

பகலில் பார்த்த பரபரப்புகள் எதுவுமற்ற வெறிச்சோடிய யாருமற்ற சாலையைப் பார்க்கப் பார்க்க புதுவித அனுபவமாகவும், வழிநெடுக ஒளிரும் மின்விளக்கு வெளிச்சம் புதியதோர் ஊரைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை தருவதாகவும் இருந்தது.

சரியாக சூளைமேடு சிக்னல் வந்தபோது… இடது பக்கம் திரும்பும் சாலையின் இடது மற்றும் வலது பக்கத்தில் உள்ள பகுதிகளைக் காட்டி,

”மச்சி டேய்… சென்னையிலயே இந்த ஏரியாவுலதான் திருநங்கைங்க அதிகமா இருக்காங்க..’’ என்றான் நண்பன்.

அவன் சொன்ன பகுதிகளை ஒரு தடவை பார்த்துவிட்டு, ”ம்..’’ என்றேன்.

சிறிது நேரம் கழித்து, ”நாம எவ்ளோ ஜாலியா சாப்டுட்டு படம் பார்த்துட்டு வர்றோம். ஆனா அவங்களப் பாத்தியா ரோட்டு ஓரத்துல நின்னுட்டு எவனாவது வரமாட்டானான்னு காத்துட்றாங்க. பாவம்ல..’’ என்றான்.

உடனே நான், ”யாருமே வரலனா என்னடாப் பண்ணுவாங்க?” எனக் கேட்டேன்.

”அவங்க யாரும் பெரிய Savings வச்சி வாழறவங்கக் கெடயாது. இன்னிக்கி யாரும் வரலனா நாளிக்கிப் பட்டினிதான்..’’ என்றதும், 

”அதுக்கு அவங்க இந்த வேலய விட்டுட்டு வேற நல்ல வேலக்கிப் போவலாம்ல..’’ என்றேன்.

”போவ அவங்க தயாரா இருந்தாலும், யாரு இங்க அவங்களுக்கு வேலத் தர தயாரா இருக்காங்க..?’’ என்றான்.

அதற்குள் நுங்கம்பாக்கம் ரயில்வே பாலம் கடந்து, கல்லூரி சுற்றுச் சுவர் ஓரமாக நடந்து கல்லூரி முன்புள்ள பேருந்து நிறுத்தம் அருகில் வந்து சேர்ந்தோம்.

கல்லூரி முன்புள்ள பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேடிக்கைப் பார்ப்பது மிகப் பிடித்த விஷயம் என்பதும், இதுவரை இரவு நேரங்களில் அங்கே உட்கார்ந்து வேடிக்கை பார்த்ததில்லை என்பதாலும், நண்பனிடம் சிறிது நேரம் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் வா என சொல்லி கூட்டிப் போய் உட்கார்ந்தேன்.

நேரம் எப்படியும் நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். அவனும் நானும் உட்கார்ந்தவாறு (அவனுடன் வந்த நண்பர்கள் விடுதிக்கு சென்று விட்டனர்) ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். உடனே மனதுக்குள், ”இந்த நேரத்துல சுடச்சுட ஒரு டீ குடிச்சா செமயா இருக்கும்ல..’’ எனத் தோன்ற, அவனிடம் சொன்னேன்.

”நல்லாதான் இருக்கும். ஆனா டீ’க்கி எங்கப்போறது?’’ என்றான்.

”ஏன் இப்போ எங்கயும் டீ’க்கட இருக்காதா?”

”கஷ்டந்தான் மச்சி. எதுக்கும் வா ஸ்டெர்லிங் ரோட்ல ஒருக்கட இருக்கு.  அங்கப் போய் பாக்கலாம்..’’ எனச் சொல்லி அழைத்துப்போனான்.

நேராகச் சென்று இடது பக்கம் வளைந்து கல்லூரிக்கு நேரெதிரில் போகும் சாலை வழியாக கொஞ்ச தூரம் நடந்து போனோம். அவன் சொன்ன கடை மூடியிருந்தது. அதனால் ஏமாற்றத்தோடு திரும்பி கல்லூரி நோக்கி வந்தோம். சரியாக கல்லூரி நுழைவு வாயிலுக்கு நேர்  எதிர்பக்கச் சாலைக்கு வந்து ஓரமாக நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தோம்.

அந்நேரத்தில் சூளைமேடு பக்கத்திலிருந்து சிகப்பு வண்ணக் கார்  ஒன்று வேகமாக வந்தது. அதை தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்டேன். வந்த வேகத்தில் அதன் பின்புறக் கதவு திறந்து எதையோ தூக்கிப் போட்டுவிட்டு (நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு நாற்பதடி தூரம் முன்னால்) வேகமாக எங்களைக் கடந்து போனது. 

‘டம்..’ என சத்தம் மட்டும் தான் முதலில் கேட்டது. என்னவென யோசிப்பதற்குள்,

‘ம்மா… ய்யோ..’ என யாரோ அழும் குரல் கேட்க, ஓடிப் போய் பார்த்தோம்.

திருநர் ஒருவர். உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் கை கால் முகம் என உடலின் பல இடங்களில் ரத்தம் வழிய சாலையோர முட்செடிகளில் விழுந்து கிடந்தார்.

என்ன செய்வதென இருவருக்கும் தெரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு,

”டேய் வேணான்டா வா போயிடலாம்..’’ என்றான் நண்பன்.

”கண்ணு முன்னாடி இப்டி ஒருத்தர விட்டுட்டு எப்டிடாப் போறது?” என்றேன்.

”அது அவங்க தலவிதி, நாம என்ன பண்ணமுடியும்?” என்றான்.

”இப்பதான்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்களுக்கு யாரும் வேல தர மாட்றாங்க, பாவம்ன்னு வருத்தமா சொன்ன. இப்ப நீயே..?” எனக் கேட்டதும்,

”அது வேற, இது வேற..” என்றான்.

நாங்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும்போது,

‘ம்மா… வலிக்குதே, அய்யோ…’ என வலி தாங்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தார்.

”டேய் மனுசனா இருந்தா வாடா..’’ எனச் சொல்லிவிட்டு அவர் அருகில் போய் தூக்கி உட்கார வைத்தேன்.

உடலெங்கும் காயம். அதில் ஏற்கனவே காரிலிருந்து விழுவதற்கு முன்னான காயமும், விழுந்த பிறகு உருவான காயமும் தனித்தனியாகத் தெரிந்தது.

அதற்குள் அவனும் வந்துவிட்டான். இருவரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்து தூக்கிநிறுத்தி மெல்லமாக நடக்கவைத்து அருகில் உள்ள சிறு கோயில் ஒன்றின் சுவரில் சாய்த்து உட்கார வைத்தோம்.

‘அய்யோ வலி தாங்க முடிலயே..’ என்ற அவரது வலியின் குரல் தொடர்ந்து கேட்டது.

எனக்கு அவர் வலியில் துடிப்பது ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும், அவர் உடலில் பொட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக இருப்பது இன்னொரு பக்கம் சங்கடமாக இருந்தது.

பெரிதாக யோசிக்கவெல்லாம் இல்லை. உடனே நான் போட்டிருந்த டி சர்ட்டை கழட்டி அவரிடம் கொடுத்து போடச் சொன்னேன்.

”டேய் என்னடாப் பண்ற? தேவயில்லாத வம்புல மாட்டப்போறம் இன்னிக்கி..” என்றான் அவன்.

”ஹே விட்றா… ஹாஸ்டல்க்குதானப் போவப்போறோம். நைட் டைம் யாரு பாக்கப்போறாங்க..’’ என்றேன்.

‘ம்மா… வலிக்குதே’

ஒருவழியாக வலியை பொறுத்துக்கொண்டு என் டி- சர்ட்டை போட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் வாங்க மறுத்தவர், பின் வேறு வழியின்றி வாங்கிக்கொண்டார்.

”யார் நீங்க..? எதுக்கு ஒங்கள கார்லயிருந்து தூக்கிப் போட்டாங்க..?’’ என்றேன் கொஞ்ச நேரம் கழித்து.

”எல்லாம் வயித்து பொழப்புக்காக பட்டப்பாடுதான்..” என்றவர் தலையை கீழே குனிந்து அமைதியானார்.

”திருநங்கன்னு தெரிஞ்சிதான் நாய்ங்க கூட்டுனு போனானுங்க. உள்ள அவனுங்க எதிருபாத்தது இல்லன்னு அடிச்சி இப்டித் தூக்கிப் போட்டுட்டுப் போய்டானுங்க… தெவிடியாப் பசங்க… நாசமாதான் போவானுங்க..’’

நானும் நண்பனும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

”நாங்கனா அவ்ளோ எளக்காரமாப் போச்சு ஆம்பளங்கிளுக்கு. இஷ்டத்துக்கு இஷ்டத செய்னு சொல்வானுங்க. முடிஞ்சுப்போச்சுன்னா நாய விடக் கேவலமா ரோட்ல தூக்கிப் போட்டுப் போவானுங்க. பொட்டப் பசங்க..’’

பேசியவாறு எழ முற்பட்டார். முடியவில்லை. இருவரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்துத் தூக்கி நிறுத்தினோம்.

”ஒங்களுக்குப் புண்ணியமாப் போவும். சூளமோட்ல என்னை கொண்டு போய் வுட்டுடுங்க..’’ என்றார்.

வேண்டாம் என்பது போல் தலையாட்டினான் நண்பன். அதற்குள் ‘சரி’ என்று சொல்லிவிட்டேன் நான்.

அவரை மெதுவாக சாலையின் எதிர்ப்புறம் கூட்டிப்போய், கல்லூரி சுற்றுச் சுவர் ஓரமாக நடக்கவைத்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் நோக்கி மெதுவாகப் போனோம்.

”தேவிடியாப் பசங்க அவனுங்கதான தொங்கப்போட்டுனு வந்தாங்க. நானாப் போனன். காசக் கூடக் கொடுக்கல, பொறம்போக்குங்க. அடி அடின்னு அடிச்சு ஓட்ற கார்லயிருந்து மூட்டயத் தூக்கிப் போடறமாரி தூக்கிப் போட்டானுங்க. நல்ல சாவே வராது, நாசமாதான் போவாங்க. எச்சக்கலங்க..’’ என ஏதேதோ சொல்லி திட்டியபடி வந்தார்.

நடுநடுவில் எங்களைப் பற்றியும் கேட்டார். ரயில்வே பாலம் கடந்து சூளைமேட்டின் வலது பக்கம் திரும்பிப் போய், அவர் சொன்ன தெருவழியாக உள்நுழைந்து, அவர் தங்கியிருக்கும் வீட்டின் படியேறி மாடியில் உள்ள சிமென்ட் ஓடு வேய்ந்த வாடகை வீட்டின் முன்னால் உள்ள திட்டில் உட்கார வைத்தோம்.

”அந்த கூத்தாண்டவன்தான் ஒங்கள அனுப்பி வச்சிருப்பான். ரெண்டுபேரும் நல்லாருக்கணும் தம்பி..’’ என்றார்.

நண்பனிடம், ”கைல எவ்ளோக் காசிருக்கு..?’’ என்றேன், அவருக்கு கேட்காத சத்தத்தில்.

ஐம்பது ரூபாய் எடுத்து நீட்டினான். என்னிடம் நூறு ரூபாய் இருந்தது. இரண்டையும் சேர்த்து அவரிடம் கொடுத்தேன்.

இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை, அவர் முகமாற்றத்தை வைத்தே எளிதில் உணர முடிந்தது.

”இல்ல தம்பி வேணாம்..’’ என்றார்.

எவ்வளவு வற்புறுத்தியும் வாங்கவில்லை.

”ஒடம்ப வித்து மானங்கெட்டு பொழக்கிறதுதான் என் பொழப்பு. வீட்ட வுட்டு ஓடி வந்தப்ப பிச்ச எடுக்கக்கூடாது ஒடம்ப வித்து பொழக்கக்கூடாதுன்னு நெனச்சிதான் வந்தன். ஆனா வயித்துக்கு வேற வழி தெரில தம்பி.

”இப்டி ஒடம்ப வித்துப் பொழக்கிறத நெனச்சாலே சில நேரம் நாண்டுக்கிட்டு செத்துடலாம்னு தோணும். இப்போ காச கை நீட்டி வாங்குனன்னா பிச்ச வாங்கனதா ஆயிடும். தயவுசெஞ்சி வேணாம் தம்பி..’’ என்று கையெடுத்து கும்பிட்டார்.

அதற்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அதனால் எதுவும் சொல்லாமல்,

”சரிக்கா… நாங்க ஹாஸ்டல் போவணும். நீங்க ஒடம்பப் பாத்துக்கோங்க..’’ என்று சொல்லி அங்கிருந்து திரும்பி நடக்க,

”தம்பி ஒங்க சட்ட?” என்றார்.

மெல்ல திரும்பி, ”அதயாது பிச்சயா நெனக்காம தம்பி அன்பாக் கொடுத்ததா நெனச்சிக்கோங்க..’’ எனச் சொல்லிவிட்டு கீழே இறங்கி நடந்து வந்தோம்.

மனம் கனத்தது. நடந்ததை நினைக்க நினைக்க ஏதோ மாதிரி வலித்தது. ஏதேதோ சிந்தித்தபடி எதுவும் பேசாமல் கல்லூரிக்குள் நுழைந்தோம். மேல் சட்டை இல்லாமல் வெறும் பனியனோடு இருந்த என்னைப் பார்த்து வாயில் காவலர் நிறுத்திக் கேட்டார். நடந்ததைச் சொன்னோம். விடுதி அடையாள அட்டையைக் காட்டச் சொல்லி பார்த்துவிட்டு பின்னர் அனுப்பினார்.

விடுதி அறைக்கு வந்தும் மனம் கேட்கவில்லை. திரும்பத் திரும்ப அதையே நினைத்தது.

ஒருபக்கம் வயிற்றுப் பிழைப்புக்காக ஆடை கிழித்து நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தி ஓடும் காரிலிருந்து சாலையோரம் வீசி எறியப்பட்ட முகம்.

இன்னொரு பக்கம் நண்பர்களோடு சேர்ந்து குடித்து கும்மாளமிட்டு உடலரிப்பை போக்க திருநரை அழைத்துப்போய் மிதமிஞ்சிய போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கொடுமைப்படுத்தி வீசியெறிந்துவிட்டுப் போன முகங்கள்.

வாழ்க்கை எத்தனை கொடூரமானது, இந்த மனிதர்கள் எத்தனைக் கொடூரமானவர்கள் என இச்சம்பவம் நினைவுக்கு வரும்போதெல்லாம் தோன்றும். அதிலும் மனித சமூகம் மூன்றாம் பாலினத்தவருக்கு இழைக்கும் கொடுமைகளும் துரோகங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

அவர்களில் மிகச் சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த மூன்றாம் பாலின சமூகத்தையும் வெறுத்தொதுக்கி புறக்கணிப்பது பெரும் கொடுமையன்றி வேறென்ன?

அன்றைக்கு அங்கிருந்து கிளம்பும்போது அவர் சொன்ன வார்த்தைகள்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

‘எல்லாரும் ராத்திரி வந்தா சந்தோசமா சாப்டுட்டு நிம்மதியாப் படுத்து தூங்குவாங்க. ஆனா நாங்க மட்டும் பயந்து நடுங்கினு இருப்போம். ஒருத்தனும் எங்கள மனுசனா நடத்த மாட்டான். எங்களுக்கும்  மனசுன்னு ஒன்னு இருக்குன்னு பாக்கவே மாட்டங்க. மிருகத்தவிட கேவலமா நடத்துவாங்க. நாங்களும் வேற வழி இல்லாமப் பொருத்து பொருத்துப் பழகிப்போச்சு. இந்த ராத்திரிய என் வாழ்க்கயில என்னிக்கும் மறக்கமாட்டன் தம்பி..’

அந்த சம்பவம்தான் திருநர் மீதான மதிப்பையும் புரிதலையும் எனக்குள் அதிகமாக்கியது என்பேன். அதுமுதல் விழித்திருக்கும் இரவுகளில் நிச்சயம் ஒரு தடவையாவது அவர்களை நினைத்துப் பார்த்துவிடுவேன். அதோடு அவர்களை எங்கே எதிர்கொண்டாலும் அவர்களுக்கான மதிப்பையும் மரியாதையும் தவறாமல் தந்துவிடுவேன்.

அப்படி கடந்த 2017-ம் ஆண்டு நண்பர் துருவன் ராஜபாண்டியுடன் சேர்ந்து திருநர் பிரியாபாபு அவர்கள் இயக்கிய ‘வானம் தாண்டி’ (தனிப்பாடல்) என்னும் மூன்றாம் பாலினத்தவருக்கான கீதத்தை  எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதை என் வாழ்நாள் பெருமை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவ்வளவு மகிழ்வுடன் பாடலின் ஒவ்வொரு வரிகளையும் கோத்தேன். அப்பாடல் வெளியான மூன்றாவது நாள் ஏதோ ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

எடுத்துப் பேசியதும், பேசியவர்… தான் ஒரு திருநங்கை என்றும், தங்களை இதுவரை இவ்வுலகம் ஒம்போது, நைனு, சக்கா, அலி, ஹே, ஓய் என குப்பையைவிட கேவலமாக மட்டுமே அழைத்து நடத்தியதென்றும், முதல் தடவையாக திருநங்கைகளை இவ்வளவு உயர்த்தி எழுதப்பட்ட பாடலைக் கேட்டதாகவும், அப்பாடல் கேட்டது முதல் தானொரு திருநங்கையாகப் பிறந்தது குறித்து பெருமைப்படுவதாகவும், இதுவரை தான் செய்து வந்த பாலியல் தொழிலை விட்டுவிட்டு இனி உழைத்து மட்டுமே சாப்பிட நினைப்பதாகவும், அதற்கு நீங்கள் எழுதிய பாடல்தான் காரணம் என்றும் சொல்லிவிட்டு வைத்தார்.

அவ்வளவு மகிழ்வாகவும் பெருமையாகவும் உணர்ந்தேன். அதோடு என் எழுத்துக்கு கிடைத்த மிக உயரிய விருதாகவும் அதனைப் பார்த்தேன். ஆம்!

அன்றைக்கு சாலையில் ஆடையின்றி அடிபட்டுக் கிடந்த திருநரும், என் வரிகள் மூலமாக இனி ஒருபோதும் தான் பாலியல் தொழில் செய்ய மாட்டேன் என சொன்ன திருநரும் எனக்கென்னவோ ஒருவராகவே இருக்குமோ (அவர் மட்டுமே அதை அறிவர்!) என்று தோன்றியது.  

முதல் காரணம்… அன்றைக்கு அவரைக் கூட்டிக்கொண்டு படியில் ஏறும்போது எங்களிடம் பெயரைக் கேட்டு தெரிந்துகொண்டார். பதிலுக்கு நாங்கள் அவரிடம் பெயரைக் கேட்கவில்லை. அதேபோன்று இவர் என் பெயர் தெரிந்துதான் என்னிடம் பேசினார். ஆனால் கடைசிவரை அவரது பெயரை சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை.

இரண்டாவது காரணம்… இருவரது குரலும் ஒரே மாதிரி இருந்தது.

யாதொரு எதிர்பார்ப்புமற்று வாழ்வில் நாம் செய்யும் சிறு செயல்கள் கூட சில நேரங்களில் மகத்தான பெரும் காரியங்களாக மாறிவிடக் கூடும் என்பதை பலதடவை உணர்ந்திருக்கிறேன். அப்படியான ஒன்றாகத்தான் இவை இரண்டையும் பார்க்கிறேன். ஆம்!

மூன்றாம் பாலினத்தவர்கள் முகவிழியால் பார்க்கவேண்டியவர்கள் அல்லர். அகவிழியால் பார்க்கப்பட வேண்டியவர்கள்.

ஆம்! அவர்களும் நம்போன்று மனிதர்கள்தான். அவர்களுக்கும் நம்போன்று மனதுண்டுதான்.

தெரிவோம்! தெளிவோம்!

(ஏப்ரல் 12, 2020)

*

முகங்களின் முதலில்…

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 4 : திட்டம்மா

முகங்கள் – 5 : ஏகாந்தர்

முகங்கள் – 6 : நகலி

முகங்கள் – 7 : மோனன்

முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

முகங்கள் – 9 : வக்கீலண்ணா

முகங்கள் – 10 : பத்தாள்

முகங்கள் – 11 : ஞாளியார்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=