முகங்கள் – 11 : ஞாளியார்

**
‘காணாமல்போய்க் கொண்டிருக்கிறது
கமுகு தெங்கு மிளகு
காணாமல்போய்க் கொண்டிருக்கிறது
காடு மலை அருவி ஆறு
காணாமல்போய்க் கொண்டிருக்கிறது
கவிதை தமிழ் பசுமை ஈரம்
காணாமல்போய்க் கொண்டிருக்கிறார்கள்
காவியநாயகர்கள் தலைவர்கள் மனிதர்கள்’
– விக்ரமாதித்யன்
**
‘தனிமை என்பது உண்மையில் தனிமையல்ல; நம்முடன் நாம் இருப்பதே!’ என முன்னமே ஒரு வரியை எங்கோ எழுதியிருக்கிறேன். அப்படி தனிமையில் இருக்கும்போது பல விந்தையான கேள்விகளும் பதில்களும் எனக்குள் உதித்ததுண்டு. பல பாடல்களும் கவிதைகளும் எழுந்ததுண்டு. சில நினைவுகள் மறுபடியும் மீட்டப்பட்டு மனத்திரையில் ஓடியதுண்டு.
ஆம்! தனிமைகள் அழகானவை மட்டுமல்ல; ஆச்சர்யம் தருபவை. எப்போதுமா என்றால், பெரும்பாலும் என்பதுதான் என் பதிலாக இருக்கும்.
தனிமையில் இருக்கும்போது ஒரு நாள்… ஏன் கண்டங்கள் என்றும், தேசங்கள் என்றும், மாநிலங்கள் என்றும், மாவட்டங்கள் என்றும், தொகுதிகள் என்றும், ஊர்கள் என்றும் கோடுகள் போட்டு நிலத்தையும் மனிதர்களையும் இப்படி பிரித்து வைத்திருக்கிறார்கள்? இதெல்லாம் இல்லாதிருந்தால் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்? மனிதர்களின் திட்டமிட்ட சதிவேலைகள்தானே இதெல்லாம் என்று யோசித்திருக்கிறேன்.
இன்னொரு நாள்… இயற்கையின் படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றென்றும், ஓருயிர் மற்றோர் உயிரை ஏதோ ஒரு வகையில் சார்ந்ததென்றும், ஒன்று மற்றொன்றுக்கு உதவக்கூடியது என்றும், ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்றும், அவற்றில் குறிப்பாக மனிதர்கள் கொஞ்ச கொஞ்சமாக சுயநல மோகம் பீடித்து அப்படியே தலைகீழாக மாறிவிட்டனர் என்றும் யோசித்திருக்கிறேன்.
பிறகொரு நாள்… இவையெல்லாம் என்றைக்கு மனிதன் இயற்கையில் தானும் ஓர் அங்கமே எனும் எண்ணம் விடுத்து, இயற்கையை சுரண்ட அதையோர் விற்பனைப் பண்டமாக நினைத்து இயற்கை வாழ்விலிருந்து மெல்ல விலகி அழிவை நோக்கிய பொய்மை வாழ்வில் முதலடி எடுத்து வைத்தானோ அப்போதே தொடங்கிவிட்டது என்றும், அது இப்போது நினைத்துப் பார்க்க முடியாத தூரத்திற்கு மனித இனத்தை இயற்கையிடமிருந்து பிரித்துக் கூட்டி வந்துவிட்டது என்றும் யோசிக்கலானேன்.
மனிதன் ஆகச் சிறந்த சல்லிப்பயல் எனச் சொன்னது எத்தனை உண்மையானது எனப் பல தடவை உணர்ந்திருக்கிறேன். அதற்காக வெட்கித் தலைகுனிந்தும் வேதனையில் விம்மித்தும் இருக்கிறேன்.
அதேநேரம் மனிதன் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மகத்தானவன். அவனால் அளப்பரும் பல அரிய காரியங்களை தன் சக உயிரினங்களின் மேன்மைக்காக செய்யமுடியும் என்றும் உணர்ந்திருக்கிறேன். அதற்காக நெஞ்சை நிமிர்த்தியும் மகிழ்வில் திளைத்துமிருக்கிறேன். ஆம்!
சென்னை போரூர் கார்டனில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு மேல் தங்கியிருந்திருக்கிறேன். தெரிந்த அண்ணன் ஒருவருடன், அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் நண்பனுடன் தங்கியிருந்த அக்காலங்கள் என்றைக்கும் மறக்க முடியாதவை. அப்போதுதான் அப்பகுதி அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது.
போரூர் காரம்பாக்கத்திலிருந்து உள்நுழைந்து சென்றால் அழகிய மரங்களும் வயல்வெளிகளும் கடந்து வளைந்து நெளிந்து செல்லும் பாதையின் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் போரூர் கார்டன் பகுதி முழுக்க முழுக்க விவசாய நிலமாக இருந்து மிக அண்மையில் கட்டடக் காடாக மாறியது.
அதனால் தென்னை, பனை, வேப்பம், புளியம், பூவரசம், கொடுக்காய்ப்புளி, முருங்கை, கொளஞ்சி, நெல்லி, வாகை போன்ற மரங்கள் அதிக அளவில் அங்கு நிறைந்திருப்பதைக் காணலாம்.
அதோடு விவசாய நிலத்திற்கே உரிய மண் தன்மையும் குளுமையும் எப்போதும் இருக்கும். இதனை பல தடவை உணர்ந்திருக்கிறேன். அதற்காகவே மாலை நேரங்களில் பாடல் கேட்டவாறு வீதிகளில் நடந்து செல்வதையும், முன்னிரவில் வெறும் காலில் தங்கியிருந்த தெருவில் சிறிது தூரம் நடைபோடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தேன்.
அப்போது ஒருநாள் நான் எங்கோ வெளியில் சென்றுவிட்டு நண்பனோடு அறைக்குத் திரும்பிப் போகும்போது அண்ணன் வீட்டுக்கு யாரோ வந்திருந்தார்கள். யாராக இருக்கும் என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்த எங்களிடம்,
”இவரு என்னோட friend. சைனாவுல இருந்து வந்திருக்காரு. ரெண்டு மாசம் இங்கதான் நம்மக் கூட தங்கப் போறாரு..’’ எனச் சொல்லி அண்ணன் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
சீனப் படங்களில் பார்த்த முரட்டுத் தோற்றத்துடன் மொட்டையடித்து சிறிது வளர்ந்த முடியுடன் பார்க்க வாட்ட சாட்டமாக பற்கள் நன்கு தெரிய பெரிதாகப் புன்னகைத்து ”ஹலோ” என்று கை நீட்டினார். நாங்களும் பதிலுக்கு ”ஹலோ” என கை கொடுத்தோம்.
அதுதான் அவருடனான முதல் சந்திப்பு. அதுமுதல் தினந்தோறும் மாடியிலிருந்து கீழே இறங்கி வெளியில் செல்லும்போதும், வெளியிலிருந்து உள்ளே நுழைந்து மாடிக்கு ஏறிப் போகும்போதும் (அந்த வீட்டில் மாடிக்கு செல்லும் வழி ஹாலில்தான் உள்ளது. அதனால் ஒவ்வொரு தடவை அறைக்கு செல்லும்போதும் வீட்டுக்குள் சென்றுதான் போக வேண்டும்), ஹாய் ஹலோ எனும் இரு வார்த்தைகளை அவரிடம் தவறாமல் உதிர்த்துச் சென்றோம்.
வந்த இரண்டாவது நாளாக இருக்கும், மாடியில் உள்ள எங்கள் அறையில் உட்கார்ந்து மடிக்கணினியில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென ஏதோ வித்தியாசமான வாடை ஒன்று வந்தது. பக்கத்து வீட்டில் ஏதோ செய்கிறார்கள் போல என நினைத்து விட்டுவிட்டேன். நேரம் ஆக ஆக வாடை இன்னும் அதிகமானதோடு அது ஒருவித ஒவ்வாமையை வரவழைத்து வாந்தி வருவது போல் இருந்தது.
என்னவாக இருக்கும் என மூக்கை மூடியவாறு கீழே இறங்கி வந்தால் சமையலறையில் அவர் எதையோ சமைத்துக் கொண்டிருந்தார். அதோடு சமையல் அறை இதுவரை பார்த்திடாத புதுக் கோலத்தில் (ஏராளமானப் புதுப் பாத்திரங்களும் உணவுப்பொருட்களும் குவிக்கப்பட்டு) இருந்தது.
நான் வந்து பார்த்ததை அறையிலிருந்து வெளியில் வந்த அண்ணன் பார்த்துவிட்டு,
”என்னப் பாக்கறீங்க? சைனீஸ் சமையல்..’’ என்றார் சிரித்தபடி.
”எதுவுமில்ல சார் (அவரை எப்போதும் சார் என்றுதான் அழைப்பேன். அவரும் அப்படியே), சும்மா..’’ என்றேன்.
உடனே அவர், ”அவரு ஹோட்டல்லலாம் நம்மல மாதிரி சாப்ட மாட்டாரு. அதான் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வந்தாச்சு..’’ எனச் சொல்லி வாங்கி வந்தப் பொருட்கள் ஹாலின் ஓரத்தில் குவிக்கப்பட்டிருப்பதைக் காட்டினார்.
அவை ஏதோ நாற்பதைம்பது பேர்கள் சாப்பிட வாங்கி வந்தது போல் இருந்தது.
உடனே அண்ணனிடம், ”இவ்ளோவா?” என்றேன்.
”ஹாஹா… இதுக்கே இப்டின்னா, இன்னும் போகப்போகப் பாருங்க..’’ என்றார் சிரித்தபடி.
பின் அவரே, ”Smell தான் கொஞ்சம் அப்டியிப்படி இருக்கும், adjus பண்ணிக்கோங்க..’’ என்றார்.
நானும் ‘சரி’யென சொல்லிவிட்டு மேலேறி அறைக்கு வந்துவிட்டேன்.
ஒரு மணிநேரம் கழித்து அலுவலகத்திலிருந்து வந்த நண்பன், ”டேய் என்னடா நடக்குது இங்க?” என்றான்.
”ஏன் என்னாச்சுடா’’ என்றேன்.
”வெளிலக் கொஞ்சம் போய் பாரு. ஊர்ல இருக்க எல்லா நாயயும் கூட்டிட்டு வந்து அந்த சைனாக்காரன் சோறு போட்டுட்டிருக்கான். என்ன கருமம்டா அது? நாத்தம் தாங்க முடில..’’ எனச் சொல்லி புலம்பியபடி கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு வேகமாக கழிவறைக்குள் ஓடிப்போய் வாந்தி எடுத்தான்.
”இருடா, நான் போய் பாத்துட்டு வர்றன்..’’ எனச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போனேன்.
வெளியில் கிட்டத்தட்ட பத்து நாய்களுக்கு மேலிருக்கும். தனித்தனியாக வைத்திருந்த பிளாஸ்டிக் பாத்திரத்தில் (அதற்காகவே வாங்கி வந்திருப்பார் போல) வைக்கப்பட்ட உணவை இரண்டு மூன்றாக நாய்கள் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
எனக்கு அக்காட்சி நல்ல விஷயமாக தோன்றினாலும் அவ்வுணவுகளின் வாடை குமட்டிக்கொண்டு வாந்தியை வரவழைத்தது. ஓடிப்போய் அருகிலிருந்த கொய்யா மரத்தின் அடியில் வாந்தி எடுத்தேன். அதைப் பார்த்த அவர் புரிந்து கொண்டவராய் உள்ளே சென்று அண்ணனை அழைத்து வந்தார்.
”என்ன சார் வாந்தி எடுத்துட்டீங்கப் போல..?’’ என்று கேட்டவாறு அருகில் வந்து பாட்டிலில் தண்ணீர் தந்தார்.
”ஆமாம் சார். வாட ரொம்ப முடியல..’’ என்றேன்.
”இதுக்கே இப்டினா இன்னும் ரண்டு மாசம் எப்டி தாக்குப்புடிக்கப்போறீங்களோ..’’ என்றதும் உள்ளுக்குள் பதறியது.
அதை அண்ணனிடம் காட்டிக்கொள்ளாமல் அறைக்கு சென்றுவிட்டேன். அதுமுதல் தினந்தோறும் பத்து பதினைந்து பேர்களுக்கு சமைப்பார். கோழி, முட்டை, மீன் நிச்சயம் அதிலிருக்கும்.
சமைத்தவர் தனக்கும் அண்ணனுக்கும் (அவரும் வேறு வழியின்றி அவரது சாப்பாடை சாப்பிடப் பழகிக் கொண்டார்) கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு, அங்கே தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு மட்டுமல்லாது பக்கத்துப் பகுதிக்கும் எடுத்துப்போய் அங்குள்ள நாய்களுக்கும் தேடித் தேடி உணவு வைத்துவிட்டு வந்தார்.
எனக்கு அவரது செயல் புதுமையாக இருந்தது. ஏன் தினந்தோறும் நாய்களுக்கு உணவு வைக்க வேண்டும்? அதிலும் அவர் வளர்க்கும் நாய்கள் கிடையாது. ஆங்காங்கே தெருவில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு. அதுவும் இருபது முப்பது நாய்களுக்கு.
இப்படி கறியும் சோறும் தினமும் வைத்தால் எப்படி அவரால் சமாளிக்க முடியும் என்றெல்லாம் யோசித்தேன். அது குறித்து ஒருநாள் அண்ணனிடம் கேட்டும் விட்டேன். அப்போது அவரும் அருகில்தான் இருந்தார். அதனால் நான் கேட்டக் கேள்வியை அப்படியே அண்ணன் அவரிடம் ஆங்கிலத்தில் கேட்க, அவரும் பதிலுக்கு ஆங்கிலத்தில் என்னை நோக்கி,
”நீங்க வேளா வேளைக்கு தவறாம சாப்பிடுறீங்க. உங்களுக்குப் பசித்தா கேட்க வாயிருக்கு. அதுவும் உயிர்தானே, அதுக்கும் பசிக்கும்தானே, அது யார் கிட்டப் போய் கேட்கும்? யார் அதுக்கு சாப்பாடு தருவாங்க?’’
எதுவும் சொல்லாமல் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
”எங்க தாத்தா பாட்டி எல்லாம் நாமப் பசியோடப் படுத்தாலும் சரி, நம்மள சுத்தி இருக்குற உசுருங்கள பசியோட படுக்க விடக்கூடாதுன்னு சொல்லி எங்கள வளர்த்திருக்காங்க. அதான்..’’ எனச் சொல்லி மென்மையாகச் சிரித்தார்.
நம் மூதாதையர்களும் அப்படித்தானே இருந்தார்கள். ஆடு மாடு கோழி நாய் காகம் என்று நம்மைச் சுற்றி வாழும் ஓருயிர் விடாமல் பசி போக்கிவிட்டுதானே உண்டார்கள். எறும்புக்குக் கூட அரிசி மாவில் கோலமிட்டு பசி போக்கினவர்கள்தானே நம் மூதாதையர்கள் என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
பின் அவரிடம், ”அதுக்காக தெனமும் இவ்ளோ செலவு பண்ணணுமா?” எனக் கேட்டேன்.
உடனே அவர் சிரித்துவிட்டு, ”இதுக்கு செலவு பண்ணாம வேற எதுக்குப் பண்ணப்போறோம்?” என்றார்.
பின் சிறிது இடைவெளி விட்டு, ”இந்த இயற்கை அப்படி நெனச்சிருந்தா நமக்கு சுத்தமானக் காற்றையும் தண்ணியையும் கொடுத்திருக்குமா? என் அப்பா அம்மா நல்ல அறிவையும் கல்வியையும் துணியையும் எனக்கு கொடுத்திருப்பாங்களா?” என்றார்.
”ஒண்ணு ரெண்டு நாய்’னா சரி. அதுக்காக இத்தன நாய்க்கு..?” என்ற என் அடுத்தக் கேள்வியை முடிக்கும் முன்னமே,
”இத்தனை நாய்க்கு சோறு போடுகிற அளவுக்கு கடவுள் என்னை வச்சிருக்கிறதே அதுக்காகத்தான். இதை நான் வீண் செலவாப் பார்க்கல. எனக்கான கடமையாப் பார்க்குறன். ஒரு பூச்செடி பூ தர்றதுக்கு முன்னாடி அப்படி யோசிச்சா பூ தருமா? பழ மரம் பழம் தருமா? கிழங்குக் கொடி கிழங்குதான் தருமா?” என்றார் என்னைப் பார்த்து.
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
”இயற்கையோட படைப்பு விதியே நம்மள சுத்தி இருக்க உயிர்களோட சேர்ந்து எதையும் பகுத்து உண்ணணும் என்பதுதானே? எல்லா உயிரும் அதை செய்யும்போது, மனிதன் மட்டும் ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டான். அதனாலதான் பாருங்க, சாதாரண ஒரு விஷயத்தைக் கூட ஏதோ சாதனை செய்தது மாதிரி பார்க்குறீங்க..’’ எனச் சொல்லி சத்தமாகச் சிரித்தார்.
உடனே அண்ணன், ”அவங்க ஊர்ல எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்க. நான் போனப்ப எனக்கு எல்லாமே புதுசாதான் இருந்தது. அப்புறம் பாக்கப் பாக்கப் பழகிப்போச்சு. அதுவும் இல்லாம அவங்க குடும்பமே பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அண்ணன், தங்கச்சி, குழந்தைங்கன்னு கொறஞ்சது இருபது முப்பது பேர் இருப்பாங்க. தெனமும் கல்யாண வீட்டுக்கு சமைக்கிற மாதிரிதான் சமையலே நடக்கும்..’’ என்றவர்,
”இவரு இங்க நாய்க்கு சாப்பாடுப் போட்டதப் பாத்தே இப்டி சொல்றீங்களே… அவங்க ஊருக்குப் போனீங்கன்னா ஈ எறும்புக்குப் போடறதக்கூடப் பாக்கலாம்..’’ எனச் சொல்லிவிட்டு, அதையே அவரிடம் ஆங்கிலத்தில் சொல்ல, அவரும் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையாட்டினார்.
எனக்கு ஒருபக்கம் ஆச்சர்யமாக இருந்தது. இன்னொரு பக்கம் அது எனக்கு சரியாகவும் பட்டது. அதனால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் பல மடங்கு எனக்குள் கூடியதை உணர்ந்தேன்.
ஒருநாள் நண்பன் ஊருக்கு சென்று விட்டதால் நான் மட்டும் தனியாக இறங்கி உணவகத்துக்கு சாப்பிடச் சென்றேன். அப்போது நாய்களுக்கு உணவு வைத்துவிட்டு வெளியில் படிக்கட்டில் உட்கார்ந்தவாறு வீடியோ காலில் யாரோ ஒரு வயதானப் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
சென்று சாப்பிட்டுவிட்டு பாடல்கள் கேட்டவாறு அங்குள்ள தெருக்களில் நடந்து சுற்றிவிட்டு ஒரு மணிநேரம் கழித்து வீட்டுக்கு வந்தேன். அப்போதும் அவர் யாரோ ஒரு குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரைதான் பார்க்கிறேன் என புரிந்து கொண்ட அண்ணன்,
”தாத்தாகிட்ட ஆரம்பிச்சவரு இப்போதான் அவரோட பொண்ணுக்கிட்ட பேசிட்டிருக்காரு. தெனமும் கொறஞ்சது ஒருமணி நேரம் வீட்ல எல்லார்கிட்டயும் பேசிட்டுதான் தூங்குறாரு. நாமதான் வாரத்துல ஒரு தடவ வீட்டுக்கு போன் போட்டுப் பேசறதுக்குக் கூட யோசிக்கிறோம்..’’ என்றார்.
ஆமாம் என்பதுபோல் தலையாட்டினேன்.
”சண்டே நாளைக்கி வள்ளுவர் கோட்டம் தெறந்திருக்குமா சார்?” எனக் கேட்டார்.
”இருக்காது சார். வார நாள்லதான் இருக்கும்..’’ என்றேன்.
”இல்ல, அவங்க ஊருக்குப் போயிருந்தப்ப திருவள்ளுவரைப் பத்தியும் திருக்குறளைப் பத்தியும் சொன்னேன். அத ஞாபகம் வச்சி அவங்க மொழியில வந்த திருக்குறளைப் படிச்சிட்டு வந்து வள்ளுவர் கோட்டத்தப் பாக்கணும் கூட்டிட்டுப் போய் காட்டுங்கன்னு பத்து நாளாக் கேக்குறாரு..’’ என்றார்.
‘என்ன இந்த சீனக்காரர்கள் இப்படி இருக்கிறார்கள்?’ எனத் தோன்றியது. அதோடு நம் ஊரின் மகத்துவம் எங்கோ இருக்கும் அவர்கள் வரைக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் நாமோ, திருவள்ளுவரையும் திருக்குறளையும் ஏதோ பள்ளிக்கூட மாணவர்கள் மதிப்பெண்ணுக்காக மட்டும் படிக்கும் ஒன்றாக நினைத்து இன்னமும் ஒதுக்கிவருகிறோம்.
அதற்குள் தம் வீட்டாருடன் பேசி முடித்துவிட்டு வந்தவர் நாங்கள் திருவள்ளுவர் குறித்து பேசுவதை புரிந்து கொண்டவராய்,
”he is very interesting poet..” என ஆரம்பித்து திருக்குறளையும் அதன் பெருமைகளையும் பேச ஆரம்பித்தார்.
வியப்பாக இருந்தது. பின் வள்ளுவர் கோட்டம் சென்று வந்தவர், அது குறித்து தன் குடும்பத்தாரிடம் சொல்லி பெரிதும் மகிழ்ந்ததாக அண்ணனிடம் சொல்லியிருக்கிறார்.
எனக்கு அவரையும் அவரது செயல்களையும் பார்க்கப் பார்க்க நாளுக்குநாள் மிக நெருங்கிய உறவினர் போல தோன்ற ஆரம்பித்தார். அதோடு சீனாவுக்குச் சென்று அவர்களது வாழ்க்கை முறையை அவர்களுடன் சிறிது காலத்திற்கேணும் வாழவேண்டும் என்ற ஆசையும் உருவானது.
அதன்பிறகு ஒருநாள் நானும் அறை நண்பனும் நன்றாக சாப்பிட எண்ணி (விடுமுறை தின மதியத்தில்) ஹோட்டலிலிருந்து ஆளுக்கொரு முழு சாப்பாடு வாங்கி வந்தோம் (அவருக்கும் அண்ணனுக்கும் சேர்த்து). அதை அவரிடம் தந்ததும் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு எங்களோடு தரையில் உட்கார்ந்து இலையில் வைத்து சாப்பிட்டார்.
சாப்பிட்டு முடித்ததும், ”ஏன் இவ்ளோ சுவையான நல்ல உணவ விட்டுட்டு சீஸ், பர்கர், பீட்சா’ன்னு வாங்கி சாப்டு ஒடம்பக் கெடுத்துக்கிறீங்க..?” என்றார்.
அவர் அக்கேள்வியை என்னைப் பார்த்து மட்டும் கேட்கவில்லை. ஒட்டுமொத்த தமிழினத்தையும் பார்த்துக் கேட்டார் என்பதால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
”நீங்களும் (தமிழர்கள்) நாங்களும் (சீனர்கள்) இயற்கையோட மிக நெருக்கமா வாழ்ந்தவங்க. நம்மக் கிட்டதான் பாரம்பரியமான பல சிறப்புகள் உள்ளது. அதை நாங்க ஓரளவுக்கு விட்டுக்கொடுக்காம இன்றைக்கு வரைக்கும் வைத்திருக்கோம். ஆனா நீங்க மொத்தமா விட்டுட்டிங்களோன்னு தோணுது..’’ என்றார்.
வழக்கம்போல் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தேன்.
இப்படி ஒரு சில நிகழ்வுகள்தான் அவருடன் என்றாலும் அனைத்தும் மனத்துக்கு மிக நெருக்கமானது. அதோடு அவரது செயல்கள் எனக்குள் பல கேள்விகளையும் பதில்களையும் விதைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் அன்றைக்கு அவர் நாய்களுக்கு சாப்பாடு வைப்பது குறித்து கேட்டபோது சொன்ன,
”பிறக்கும்போது எதையும் கொண்டு வராத நமக்கு எல்லாத்தையும் கொடுத்தது இந்த பூமிதான். அதை திருப்பி இந்த பூமியில இருக்க உயிர்களுக்கு நாம செய்யுறோம். அவ்ளோதான..?’’ என்ற பதில்,
‘நாம மட்டும் ஏன் இவ்ளோ சுயநலத்தோட இருக்கோம்?’ என்ற கேள்வியை திரும்பத் திரும்ப மனத்துக்குள் எழுப்பியது.
சரியாக இரண்டு மாதங்கள் கழித்து ஒருநாள் வெளியில் சென்றுவிட்டு அறைக்கு வந்தேன். அப்போது அண்ணனிடம் அவர் என்னிடம் சொல்லச் சொன்னதாக தன் அன்பையும் வாழ்த்தையும் சொல்லிப்போயிருந்தார்.
அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதோடு இதுதான் மனிதம், இதுதான் பண்பாடு, இதுதான் கலாச்சாரம் என்றும் புரிந்து கொண்டேன்.
தமிழன் உயர்ந்த நாகரிகம் கொண்டவன், கலாசாரம் கொண்டவன், அவன் இவன் என ஏதேதோ வெற்றுப் பழம்பெருமை பேசிக் கொண்டிருக்கும் நாம், அதில் ஒரு சதவிகிதத்தைக் கூட இன்றைக்கு பின்பற்றுவதில்லை. இதில் வாய்கிழிய பேச்சு வேறு.
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி எனப் பெருமை பேசும் நம்மில் எத்தனை பேர் பக்கத்து வீட்டு மரத்தின் இலை நம் வீட்டில் விழுவதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்?
தவறிழைத்தது தெரிந்ததும் உயிர்விட்ட பாண்டிய மன்னனின் சிறப்பைப் பேசும் நம்மூர் தலைவர்களில் எத்தனை பேர் தவறு மேல் தவறு செய்தும் பலரது குடியைக் கெடுத்தும் கடுகளவாவது வருந்தியிருக்கிறார்கள்?
வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தும் படித்து தெரிந்துகொண்டு தேர்வில் மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமல்ல. நாமும் பின்பற்ற, அதை இன்னும் இன்னும் சிறப்பாக்க, அதன் தொடர்ச்சியை பெருமையுடன் நீட்டிக்க. ஆம்!
அவர் சென்றதும் அவரைத் தேடி அவர் உணவிட்ட நாய்கள் வீடுதேடி வந்தன. ஒருநாள் அல்ல, இருநாள் அல்ல. பல நாட்கள். இத்தனைக்கும் அவர் தன் வேலை விஷயமாகத்தான் நம் ஊருக்கு வந்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதத்தில் இருபது முப்பது பேரையாவது சந்தித்திருப்பார். ஆனால் அவர்களில் ஒருவரும் அவரைத்தேடி வீட்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை.
தினமும் வந்து வந்து ஏமாந்து வெறும் வயிற்றோடு செல்லும் நாய்கள் பற்றி அண்ணன் அவரிடம் பேசும்போது சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட அவர் மனம் நெகிழ்ந்தும் வருந்தியும்,
”தயவு செய்து நாளை முதல் அவைகளுக்கு உணவு கொடுங்கள். அதற்கான செலவை முழுமைக்கும் நான் ஏற்கிறேன்..’’ என சொல்லியிருக்கிறார்.
அதைக் கேட்ட அண்ணன் நெகிழ்ந்து போய், ”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நானே என்னால் முடிந்தவரைக்கும் செய்கிறேன்..’’ எனச் சொல்லி தினந்தோறும் நாய்களுக்கு உணவு வைத்து வருகிறார்.
ஆக, மனிதம் என்பது தேசத்தின் எல்லைக் கோடுகளாலும் மொழியாலும் இனத்தாலும் பிரிக்கப்பட்டதல்ல… அது மனத்தை சார்ந்தது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிப் போயிருக்கிறார். ஆம்!
மனிதம் பரப்பும் அனைவரும் மகத்தானவர்களே! அவ்வகையில் அவர் சீனராக இருந்தால் என்ன? பாகிஸ்தானியராக இருந்தால் என்ன?
வாழ்த்துவோம்! வணங்குவோம்!
(ஏப்ரல் 11, 2020)
*