முகங்கள் – 14 : நட்புறா

முகங்கள் – 13 : அறிமுகன்

**

‘கை இல்லாமல்

கால் இல்லாமல்

உறுப்புகள் கோரப்பட்டு

மனுசங்க இருக்காங்க

வயிறு இல்லாத மனிதன்

இல்லவே இல்லை.’

 – மு. சுயம்புலிங்கம்

**

கிராமங்களையும் சொலவடைகளையும் அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது. அதிலும் வயதானப் பாட்டித் தாத்தாக்களின் வாயிலிருந்து உதிரும் சொலவடைகளுக்குள் எப்போதும் பெரும் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். அவ்வகையில் சொலவடைகள் ஒவ்வொன்றையும் கிராமத்தின் படிக்காத பாமரர்களின் திருக்குறள் எனலாம்.  

சொலவடைகள் சொல்வது எப்போது ஆரம்பித்திருக்கும் என்ற ஆராய்ச்சியைக் காட்டிலும், அது எப்போதும் இருக்கும் என்ற மகிழ்ச்சிதான் பெரிதாகப்படுகிறது. அப்படி சிறுவயது முதல் கேட்ட பல சொலவடைகள் ஞாபகம் இருந்தாலும் அதில் மிகப் பிடித்த சொலவடையாக எப்போதும் இருப்பது,

‘சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்’ என்பது.

இச்சொலவடையை என் அம்மாவைப் பெற்ற பாட்டி சொல்லிதான் முதல் முறையாக கேட்டிருக்கிறேன். ஒல்லியாக இருக்கும் என்னைப் பார்த்து, ”இப்டி எலும்புந்தோலுமா இருந்தாக்கா எப்டிடாக் கொறக் காலத்த ஓட்டுவா?” என்றார் ஒருநாள்.

பதிலுக்கு நான், ”ஏய் கெழவி… எலும்புந் தோலுமா இருந்தா என்ன? வரியா என்கூட ஒத்தைக்கொத்த ஓடுவம், யார் எவ்ளோ தூரம் ஓடறம்னு பாப்பமா..?” என்றேன்.

அதற்கவர், ”அடப் போடாப் போக்கத்தவன… செவுரிருந்தாதான் சித்திரம் வரைய முடியுமாம். இவன் நாலெலும்ப வச்சிக்கினு ஓடறானாம், நாக்க வயிக்க..” என்றார்.

இச்சொலவடையை உடல் நலத்தை கருத்தில் கொண்டுதான் கிராமங்களில் சொல்வார்கள். நல்ல உடல்நலத்தோடு இருந்தால்தான் எதையும் செய்ய முடியும், சாதிக்க முடியும் என்பதை இச்சொலவடையின் முழுமையான அர்த்தம் தெரிந்தபோதுதான் உணர்ந்தேன். 

இப்படி… மனமிருந்தால் மார்க்கமுண்டு, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது, ஓடும் பாம்பை எட்டி மிதிக்கும் வயசு… என, உடல் – மனம் – வயது மையமாக வைத்து மட்டும் நூற்றுக்கணக்கான சொலவடைகள் இன்னமும் கிராமங்களில் புழக்கத்தில் இருந்துவருகின்றன. 

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்… அவை எதுவும் கற்பனையாக உருவானதல்ல. அனைத்தும் அனுபவத்தால் உருவானவை. உண்மைக்கு ஆயுள் அதிகம் என்பார்கள். அதனால்தான்  காலம் கடந்தும் இவை எப்போதும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

இப்படி கிராமங்கள்தோறும் உருவான சொலவடைகளை சேகரித்தால் பல ஆயிரங்கள், ஏன் பல லட்சங்கள் கூட தாண்டும். அனைத்தும் பொக்கிஷங்கள். பாதுகாக்கப்பட வேண்டியவை. வாசிக்கப்பட வேண்டியவை. பின்பற்றப்பட வேண்டியவை. ஆம்!

நம் உடல் என்பது மிகப்பெரும் ஆயுதம். ஆயுதம் என்றாலே அதைக்கொண்டு என்ன வேண்டுமானாலும் நிகழ்த்தலாம் என்பதுதானே பொருள். அப்படி உடலென்னும் ஆயுதம் கொண்டு சாதிக்க நினைத்த, சாதித்துக் காட்டியப் பலரைக் கண்டிருக்கிறேன், பேசி இருக்கிறேன்.

ஆனால், உடல் என்னும் ஆயுதம் கொண்டு விருப்பமற்ற காரியத்தை செய்யும் ஒருவரிடம் அன்றைக்குதான் முதல் தடவையாகப் பேசினேன். ஆம்! அது நான் சற்றும் எதிர்பாராதப் பேச்சு.

அன்றைய தினம் அதிகாலை நான்கு முப்பது மணிக்கு எழுந்து குளித்துக் கிளம்பி ஆதவன் விழிக்கும் முன்னமே அறையிலிருந்து பேருந்து நிறுத்தத்துக்கு நடந்துபோய் கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏறினேன்.

ஊருக்குச் செல்வதென்றால் எப்போதும் உள்ளம் துள்ளிகுதிக்க ஆரம்பித்துவிடும். அதிலும் சொந்த ஊருக்குச் செல்வதென்றால் சொல்லவே வேண்டாம். எங்கிருந்துதான் உற்சாகமும் ஆர்வமும் வந்துவிடுமோ தெரியாது, அந்தளவுக்கு மகிழ்ச்சியை மனமானது கொண்டுவிடும்.

அதிலும் விழிக்கும் ஊர்களையும் அதன் தெருக்களையும் பார்ப்பது பெரும் அலாதியானது. அப்படி பேருந்தின் சன்னலோரம் உட்கார்ந்து விழித்திடும் சென்னையையும் அதன் தெருக்களையும் பார்த்தவாறு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தேன். 

அங்கிருந்து சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்து நடத்துநரிடம் பயணச்சீட்டு வாங்கிவிட்டு புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே தூங்கிப் போனேன்.

பயணத்தில் குறிப்பாக பேருந்து மற்றும் ரயில் பயணத்தில் புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் தூங்கி விடுவது என் வழக்கம். அதிகபட்சம் அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம்தான் தூங்குவேன். அதன்பின் முழுக்க முழுக்க ரசிப்பது மட்டும்தான்.

அன்றப்படி ஒரு மணி நேரத்துக்கு சற்றுக் குறைவான நேரம் உறங்கிவிட்டு சன்னல் வழியாகத் தெரியும் மரம் செடி கொடி மலை ஆறு ஏரிகளையும், கடந்து செல்லும் ஊர்களையும் வீடுகளையும் மனிதர்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நான்கு மணி நேரத்தில் திருவண்ணாமலையைச் சென்றடைந்தேன்.

பேருந்து நிலையத்தில் இறங்கியதும் எதிரில் உள்ள உணவகத்தில் போய் சாப்பிட்டுவிட்டு, தேநீர்க் கடையொன்றில் உட்கார்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தேன். சரியாக அப்போதுதான் பல மணிநேரங்களுக்குப் பிறகு பாக்கெட்டிலிருந்த நகர்பேசியை வெளியில் எடுத்து ஊரிலுள்ள அண்ணனுக்கு அழைத்து,

‘திர்ணாமலயில இருக்கன். இன்னும் ஒரு மணி நேரத்துல ஊருக்கு வந்துடுவன்..’’ என்று சொல்லிவிட்டு வைத்தேன்.

பின் முகநூலைத் திறந்ததும் புதிதாக நட்புப் பட்டியலில் இல்லாத பெண் ஒருவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று ‘Hi..’ என வந்திருந்தது.

யாராக இருக்குமென அவரது பக்கத்துக்குச் சென்று பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம் என முடிவெடுத்து பதிலுக்கு நானும் ஒரு ‘Hi..’ அனுப்பினேன்.

உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. வந்த பதில் நான் கனவிலும் நினைக்காதது. ஆம்! அதைக் கண்டதும் முதலில் அதிர்ந்துதான் போனேன்.

‘நான் ஒரு Call Girl. உங்களுக்கு விருப்பமிருந்தா சொல்லுங்க, என்னோட Amount சொல்றன்..’ என்பது அந்த குருஞ்செய்தி.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தேன்.

என்ன பதிலனுப்புவது? ஒருவேளை தெரிந்தவர்கள் யாராவது நம்மிடம் விளையாடுகிறார்களா? ஏதேதோ யோசித்தேன். ம்ஹூம்.

அங்கிருந்து எங்கள் பக்கத்து ஊர் வழியாக செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். மீண்டும் அவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

‘R u there?’

ஒருவாறு மனதை திடப்படுத்திக் கொண்டு,

‘Sorry Madam, எனக்கு விருப்பமில்ல. நீங்க வேற யார்க்கிட்டயாவது போய் கேளுங்க. நன்றி!’ என்றேன்.

அவரும் உடனே, ‘Its ok. நன்றி..’ என பதிலளித்தார்.

‘அப்பாடா’ என்றிருந்தது. ஆனாலும் மனதுக்குள் ஒரு சந்தேகம்.

‘ஃபேஸ்புக்ல எவ்வளவோ பேர் இருந்தும், அவங்க ஏன் நம்ம கிட்ட வந்து அப்டிக்கேக்கணும்..?’

உடனே எனதுக் கேள்வியை அவரிடம் கேட்டேன். சிரித்துக்கொண்டே குரல்வழிச் செய்தி அனுப்பினார்.

”தோ பாருங்க சார், ஃபேஸ்புக்ல உங்க ப்ரொபைல் பாத்தன். உங்க போஸ்ட் எல்லாம்கூட படிச்சுப் பாத்தன். ரேண்டமா சில பேர்கிட்ட இதுவரைக்கும் கேட்டிருக்கன். உங்கக் கிட்டயும் கேக்கணும்னு தோணுச்சு. அதான்..’’ என்றார்.

இன்னொரு குரல்வழிச் செய்தியில், ”நான் பணத்துக்காகதான் இந்த வேலய செய்யுறன் சார். ஆனாலும் எல்லார் கூடவும்லாம் செய்ய மாட்டன்.  எனக்கு சேஃப்டியும் நம்பிக்கயும் ரொம்ப முக்கியம். உங்கக் கிட்ட அது இருக்கும்னு தோணுச்சி, அதான் கேட்டன். தப்புன்னா மன்னிச்சிக்கோங்க..” என்றார்.

அவரது குரலைத் தாண்டி குழந்தையின் அழுகுரல் ஒன்று கேட்டது.

‘அப்போ இவரு கல்யாணம் ஆனவராதான் இருப்பார் போல… ஏன் வீட்டுக்குத் தெரியாம இப்படிப் பண்ணணும்?’

பலவாறு யோசித்தேன். அதற்குள் அவரிடமிருந்து இன்னொரு குரல்வழிச் செய்தி வந்திருந்தது.

”சார், கேக்கறனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்கக்கிட்ட பணத்துக்காக செக்ஸ் வச்சிக்கதான் மொதல்ல நெனச்சன். ஆனா நீங்க விருப்பம் இல்ல வேற யார்கிட்டயாவது கேளுங்கன்னு டீசன்டா சொன்னதுக்கு அப்புறம் ஒருமாதிரி கஷ்டமாப் போச்சு. இதுவரக்கும் யாரும் அப்படி சொன்னதில்ல..’’

அடுத்த பதிலில், ”மனசுக்கு ஆறுதலாப் பேச எனக்குன்னு ஒரு நண்பர் கூட இல்ல. நீங்க ஒரு நண்பரா எனக்கு இருக்க முடியுமா சார்?” என்று கேட்டிருந்தார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரது குரலை வைத்துப் பார்க்கும்போது, எப்படியும் 22, 23 வயதுதான் இருக்கும் எனத் தோன்றியது. எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

அதற்குள் நான் சென்ற பேருந்து என் பக்கத்து ஊரில் போய் நின்றது. அதிலிருந்து இறங்கியதும் அங்கே எனக்காக அண்ணன் இருசக்கர வாகனத்தில் காத்திருந்தார். முகநூலை மூடி பாக்கெட்டில் வைத்துவிட்டு அவருடன் ஊருக்குச் சென்றேன்.

சென்று மாலை வரைக்கும் ஐயா அம்மா மற்றும் அண்ணன் குழந்தைகளுடனும் இருந்துவிட்டு, ஆறு முப்பது மணி வாக்கில் மீண்டும் அண்ணனுடன் பக்கத்து ஊருக்கு வந்து அங்கிருந்து திருவண்ணாமலைக்குப் பேருந்து ஏறினேன்.

பேருந்தில் ஏறி பயணச்சீட்டு வாங்கியதும் முதல் வேலையாக பாக்கெட்டிலிருந்த நகர்பேசியை எடுத்து முகநூலைத் திறந்தால் அவரிடமிருந்து வரிசையாக குறுஞ்செய்திகளும், குரல்வழிச் செய்திகளும் வந்திருந்தது.

‘என்னாச்சு சார்?’

‘ஏன் சார், எந்த பதிலும் இல்ல?’

‘Hello, இருக்கீங்களா?’

‘உங்களக் காயப்படுத்திருந்தா என்ன மன்னிச்சிடுங்க..’

இப்படி நீண்டது.

அதிலொன்றில், ”என்ன தப்பா எடுத்திருப்பீங்கன்னு நல்லாவேத் தெரியும் சார். சத்தியமா சொல்றன், உங்கக்கிட்ட இனி எப்பவும் செக்ஸ் பத்தி பேசமாட்டன். வெறும் நட்பு மட்டும்தான். அதுவும் ஃபேஸ்புக்ல மட்டும்தான். என் குழந்த மேல வேணா சத்தியம் பண்ணி சொல்றன். இனி உங்க விருப்பம் சார்..” என்று அனுப்பியிருந்தார்.

அவர் இப்படி வெளிப்படையாகப் பேசியது ஒருவித நம்பிக்கையை தந்தாலும் உள்ளுக்குள் பயம்.

‘பணத்துக்காக ஒடம்ப விக்கிறவங்களா மட்டும் இருந்திருந்தா, விருப்பமில்லன்னு சொன்னதும் அடுத்த ஆளப் பாத்து போயிருப்பாங்க. ஆனா, இவங்க நம்மக்கிட்ட நட்பா இருக்கணும் நெனக்கிறாங்க. இதுல என்னத் தப்பிருக்கு? ஒருவேள அவங்க நம்ம முகநூல் பதிவலாம் பாத்துட்டு அப்படி நெனச்சிருக்கலாம். சரி அவங்க என்ன வேலப் பாத்தா நமக்கென்ன? அது அவங்க தனிப்பட்ட விருப்பம். மனுஷி, அவங்களும் ஒரு மனுஷி. நட்பா தான இருக்க நெனக்கிறாங்க. பேசுவோம். பேசிப் பாப்போம். நம்மக்கிட்ட எல்லை மீறாத வரைக்கும் பேசுவோம்..’ என ஒருவாறு யோசித்து முடிவெடுத்து,

‘சரி..’ என்றேன்.

உடனே அவர், ”நன்றி நண்பரே!” என்றார்.

அவரிடம் சரியென சொல்வதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவாக முடிவு செய்துவிட்டுதான் சொன்னேன். அது அவராக தன் சொந்த வாழ்க்கை குறித்து சொல்வதற்கு முன் நாமாக அவை குறித்து எதுவும் கேட்கக்கூடாது என்பது.

ஆம்! கடைசி வரை இம்முடிவில் உறுதியோடு இருக்கவேண்டுமென்று நினைத்தேன்.

நினைத்ததுபோல் நான்கைந்து நாட்களுக்கு பொது விஷயங்கள் பற்றி மட்டுமே பேசினார். பிறகு ஒருநாள் திடீரென அவராகவே தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். நானும் அமைதியாக அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

”எனக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது. சித்தி வீட்டுலதான் வளர்ந்தன். பி.காம் சி.ஏ படிச்சிட்டு chartered accountant ஆகணும் ஆச. என் ஆசைப்படியே நல்லக் காலேஜ்ல சீட்டும் கெடைச்சது. நல்லாவே படிச்சிட்டிருந்தன். அப்போ எதிர்பாராத விதமா ஒரு பையனோட அறிமுகம் கெடச்சது.

”பேசிப்பார்த்தன், நல்லப் பையனா இருந்தான். ரெண்டு பேரும் லவ் பண்ணோம். வேற வேற சாதி, அதனாலக் கண்டிப்பா பிரச்சன வரும்னு ஆரம்பத்துல அவன்கிட்ட எவ்ளோ சொல்லிப் பார்த்தன். கேக்காம எல்லாம் நான் பார்த்துக்கிறன்னு சொன்னான். நானும் நம்பிக்கையோட இருந்தன்.

”ஒருநாள் எப்படியோ எங்க சித்திக்கு நான் லவ் பண்ற விஷயம் தெரிஞ்சுப்போச்சு. அடி அடின்னு அடிச்சு ‘இனி காலேஜிக்கே போவேணாம். இங்கயே கெடந்து சாவுன்னு’ ரூம்ல வச்சிப் பூட்டிட்டாங்க. அவங்களுக்குத் தெரியாம ஒருநாள் தப்பிச்சி அவன நம்பி ஓடி வந்துட்டன். அவனும் நான் பாத்துக்குறன் கவலப்படாதன்னு சொல்லி கோயிலுக்கு கூட்டிட்டுப் போய் தாலிகட்டி வீடுலாம் எடுத்து தங்க வச்சான்.

”நல்லாதான் போயிட்டு இருந்தது. திடீர்னு ஒருநாள் அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாயி நாலு வயசுல பெண் கொழந்த இருக்குன்னு தெரிஞ்சி, ஏன்டா என்ன ஏமாத்தனன்னு கேட்டன். சாகற அளவுக்கு போட்டு அடிஅடின்னு அடிச்சிட்டுப் போனவன்தான், அதுக்கப்பறம் வரவே இல்ல..”

வரிசையாக அவர் அனுப்பிய ஒவ்வொரு குரல்வழிச் செய்தியையும் கேட்டுவிட்டு,

‘ம்..’ என்றேன்.

”எட்டு மாசக் கொழந்தய வயித்துல வச்சுகிட்டு என்ன பண்ண முடியும் என்னால? பக்கத்து வீட்டு அம்மாதான் தெய்வம் மாதிரி வந்து உதவி பண்ணாங்க. அதுக்கப்புறம் வேலைக்கிப் போலாம்னு எங்கெங்கயோ போய் பார்த்தன். ஒண்ணும் செட் ஆகல. டிகிரி முடிக்காம ஒரு நல்ல வேலையும் கெடக்கல. அந்த நேரத்துல எதிர்பார்க்காம நடந்ததுதான், எனக்குப் பணத்தயும் என் கொழந்தய நல்லா வளர்த்துட முடியும்ன்ற நம்பிக்கையயும் கொடுத்துச்சு..” என்றார்.

அதற்கும், ‘ம்..’ என்றேன்.  

”காலேஜ் Friends யாரும் contact-ல இல்ல. எனக்குன்னு சொல்லிக்க ஒரு friend கூட இல்ல. என்னதான் பணத்துக்காக நான் ஒடம்ப வித்தாலும் மனசுவிட்டுப் பேச ஒருத்தர் இல்லனா வாழ்க்க நரகம்தானே. அதத்தான் நாலு வருசமா அனுபவிச்சிட்ருக்கேன்..” என்றார்.

உடனே நான், ”அதுக்கப்புறம் வேலைக்கிப் போகணும்னு நெனச்சதில்லயா?” என்றேன்.

”நெனச்சிருக்கன். எங்க வேலக் கேட்டுப் போனாலும் மேலயும் கீலயும் பார்த்துட்டு படுக்கறதுக்குத் தான் கூப்பிடுறானுங்க. டிகிரி முடிக்காம வேலைக் கேட்டுப் போன Certificate-க்கு பதிலா பொண்ணோட ஒடம்பத் தந்தாப் போதும்ன்றானுங்க. அதான் வேலயும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்ன்னு வந்துட்டன்..” என்றதும்,

”இப்டிலாம் கூடவா இருக்காங்க..?” என்று பதிலுக்குக் கேட்டேன்.

‘ஹாஹா..’ என சிரித்துவிட்டு, ”இப்டி மட்டும்தான் இருக்காங்க. எத்தனைப் படி ஏறிருப்பன், எத்தனை மூஞ்சியப் பார்த்திருப்பன். நொந்துப்போச்சு. அதுக்கு Sex workஏ எவ்ளோத் தேவலாம்னு தோணுச்சு..” என்றார்.

அவரது குரலில் ஒலித்த வருத்தமும் வெறுப்பும் என்னால் நன்கு உணர முடிந்தது.

பிறகு நீண்ட யோசனைக்குப் பிறகு, ”நான் வேல வாங்கித் தந்தா போவீங்களா?” என்றேன்.

அமைதியாக இருந்தார். அந்த அமைதி நான் அப்படிக் கேட்டதை அவர் விரும்பவில்லை என்றும், அதோடு அது அவரை காயப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது கோபப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் தோன்றியது.

உடனே, ”என்னாச்சு?” என்றேன்.

அதற்கும் பதிலில்லை. சிறிது நேரம் கழித்து,

”நான் உங்கக்கிட்ட நட்பத்தானக் கேட்டன். வேலக் கேக்கலயே..” என்றார்.

அந்த வார்த்தைகள் அவரது கோபத்தை எனக்கு உணர்த்தியது. அதோடு, இன்னொரு நாள் பேசுவதுதான் சரி என்றும் தோன்றியது. அதனால், ‘ம்..’ என்று மட்டும் பதில் அனுப்பிவிட்டு வெளியில் வந்துவிட்டேன்.

இப்படி பல நாட்கள் அவரிடம் முகநூல் வழியாகப் பேசியிருக்கிறேன். அவற்றில் அவராக அவரைப் பற்றி சொன்னது மட்டுமே. அதில் எது நிஜம், எது பொய் என்ற கேள்வியெல்லாம் ஒருநாளும் எழுந்ததில்லை. அதோடு அவர் என் குறித்து முகநூலில் பார்த்துத் தெரிந்து கொண்டது மட்டும்தான். அதைத் தவிர என் பற்றி எதையும் என்னிடம் கேட்டதில்லை.

ஆம்! அவர் தான் சொன்னதுபோல் எப்போதும் நட்பாக இருந்தார். அதுபோல் நானும் இருந்தேன். என்றபோதும் அவர் கடைசியாக சொன்ன, ‘நான் உங்கக்கிட்ட நட்பத்தானக் கேட்டன். வேலக் கேக்கலயே..’ என்ற வார்த்தைகள், நான் எனதெல்லையை தாண்டிவிட்டதாக ஓரிரு தடவை எனக்குள் சிந்திக்க வைத்தது.  

கிட்டத்தட்ட இந்நிகழ்வு நடந்து இரண்டு மாதம் ஆகிறது. இன்னமும் நான் அனுப்பிய ‘ம்..’ என்னும் பதிலை அவர் பார்க்கவில்லை. அதோடு அதன் பிறகவர் முகநூலுக்கும் வரவில்லை.

‘என்னாச்சு அவருக்கு? ஏன் வரவில்லை?’ இரண்டு மாதமாக யோசித்தும் ஒரு பதிலுமில்லை.

ஒருவேளை நான் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னது அவரை பெரிதும் காயப்படுத்தியிருக்குமோ? அதனால்தான் என்னிடம் பேசாமல் தவிர்க்க முகநூல் வராமல் இருக்கிறாரோ? என்றெல்லாம் கூட சிலநேரம் தோன்றியதுண்டு.

பலரும் நினைக்கலாம், ‘வாழறதுக்கு போயும் போயும் இந்த வழிதான் அவருக்கு கெடச்சதா?’ என.

கேள்வி கேட்பது யாருக்கும் இங்கே எளியதுதான். அவருக்குத்தான் தெரியும் இவ்வழியை அவர் தேர்வு செய்வதற்கு முன்னால் பட்டப் பாடுகளும், தேர்வு செய்ததற்குப் பிறகு படும் பாடுகளும்.

ஆம்! கால் வயிற்றை நிரப்ப மனிதர்கள் தேர்வு செய்யும் அனைத்து வழிகளையும்விட கொடுமையானதும் கடினமானதும் இவ்வழிதான். பார்ப்பதற்கு எளிமையாகத் தெரியலாம். யாரென்று தெரியாத ஒருவருக்குப் பணத்துக்காக உடலைக் கொடுத்து மனம் ஒன்றாமல் ஒத்துழைப்பது என்பது எத்தகைய வேதனை தரக்கூடியது என்பதை அவர் மட்டுமே அறிவர்.

பி.காம் சி.ஏ முடித்துவிட்டு chartered accountant ஆக நினைத்தவர் வாழ்வில் காதல் ஆடிய ஆட்டம் எப்படியெல்லாம் அவரது வாழ்வைப் புரட்டிப் போட்டுவிட்டது என்பதை நினைத்தால் வருத்தத்தை தாண்டிய கோபமும் இச்சமூகத்தின் மீது வரத்தான் செய்கிறது. 

அவரிடம் பேசிய ஆரம்ப நாட்களில் ஒருநாள் நள்ளிரவில் தூக்கம் வராமல் மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. ஓர் ஒளிப்படம். திறந்து பார்த்தால் ஓர் அழகான ஆண் குழந்தை சிரித்தபடி இருந்தது. அவ்வளவு அழகானக் குழந்தை. நிச்சயம் அவரது குழந்தையாகத்தான் இருக்கும் என அவர் சொல்லாமலேயே தெரிந்துகொண்டேன்.

‘இந்த சிரிப்புக்காகத்தான் எல்லாம்..’ என்று, அந்த ஒளிப்படத்தின் கீழே ஒருவரியை அனுப்பியிருந்தார். என்னையறியாமல் அப்போது கண் கலங்கிவிட்டேன்.

அதை அவரிடம் காட்டிக்கொள்ளாமல்.. ‘ம்..’ என மட்டும் அப்போது பதில் அனுப்பி இருந்தேன்.

இந்த வாழ்க்கை மீது இதுவரை எனக்கெந்தப் புகார்களும் கிடையாது. என்றபோதும், மனிதர்கள் மீது அப்பப்போ சில புகார்கள் எழுவதுண்டு. அப்படியொரு புகார் அன்றைக்கு அவரைக் காதலித்து நம்பவைத்து ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுப்போன அக்கொடூரன் மீது எழுந்தது.

ஆம்! இங்கே யாரோ ஒருவர் அறம் தவறும்போது அவரை மட்டுமன்று அவர் சார்ந்தவர்களும் அதனால் வீழ்ந்துபோதல் எவ்விதத்தில் நியாயம் என்று அடிக்கடி எனக்குள் ஒரு கேள்வி ஒலிக்கும்.

யாரிடம் சென்று கேட்பதிதை? கேட்டால்தான் சரியான பதில் கிடைத்துவிடுமா? வெறும் கேள்வியை மட்டும் வைத்துக்கொண்டு இங்கென்ன செய்ய முடியும்?

என் வேண்டுதலெல்லாம் இங்கே ஒன்றே ஒன்றுதான். அவர் தனக்கான வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஏனெனில், அவர் என் முகம் தெரியாத தோழமை. நான் அவருக்கு முகம் தெரிந்த தோழமை. என்றபோதும் எங்களுக்குள் அழகானதொரு நட்பு இருந்தது. இருந்தது என்பதைவிட இருக்கிறது; அது எப்போதும் இருக்கும் என்றே சொல்வேன்.

ஆம்! அன்புத் தோழமையே… உனக்கொரு நண்பன் இல்லையென்று ஒருபோதும் நினைக்காதே. எப்போதும் அதே நட்புடன் பேச இங்கே ஒருவன் இருக்கிறான். அவனுக்கு மனிதர்களும் அவர்களது மனதும் மட்டும்தான் தெரியும். அதனால் எப்போதும் இருப்பான்.

ஆம்! எப்போதும் இருப்பான்!

(ஏப்ரல் 14, 2020)

*

முகங்களின் முதலில்…

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 4 : திட்டம்மா

முகங்கள் – 5 : ஏகாந்தர்

முகங்கள் – 6 : நகலி

முகங்கள் – 7 : மோனன்

முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

முகங்கள் – 9 : வக்கீலண்ணா

முகங்கள் – 10 : பத்தாள்

முகங்கள் – 11 : ஞாளியார்

முகங்கள் – 12 : திருநி

முகங்கள் – 13 : அறிமுகன்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=