முகங்கள் – 13 : அறிமுகன்

முகங்கள் – 12 : திருநி

**

‘அலைகளைச் சொல்லிப்

பிரயோஜனமில்லை;

கடல் இருக்கிற வரை’

 – நகுலன்

**

இப்பூமியில் மனிதராகப் பிறக்கும் ஒருவருக்கு முதலில் அறிமுகமாவது அவரின் தாய். பிறகு தந்தை. பின் குடும்ப உறுப்பினர்களும் சொந்தங்களும். அதன்பின் வளர வளர பக்கத்து வீட்டினர் எதிர் வீட்டினர் என ஒவ்வொருவராக அறிமுகம் ஆவார்கள்.

பள்ளிக்குச் சென்றதும் ஆசிரியர்களும் உடன் படிப்பவர்களும் அறிமுகமாவார்கள். அதன்பின் கல்லூரி, அதற்கப்புறம் வேலை செய்யுமிடம். தவிர போகும் இடம், வருமிடம்.

இப்படி மனிதராகப் பிறந்த ஒருவருக்கு எத்தனை எத்தனையோ பேர் அறிமுகமாகிக் கொண்டேயிருப்பார்கள். அப்படி அறிமுகமாகும் நபர்களில் பெற்றோர் தொடங்கி சம்பந்தமே இல்லாத நபர்கள் வரைக்கும் பலர் அடங்குவர்.

அதிலும் இன்றைக்கு ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என தொழில்நுட்ப உலகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நமக்கு… அங்கேயும் நாளுக்கு நாள் புதுப்புது நபர்களின் அறிமுகம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

ஆக, அம்மாவிடம் தொடங்கிய அறிமுகப்படலம் என்பது வாழ்வின் கடைசி மூச்சு வரை தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று எனலாம்.

சிலருக்கு சிலர் அறிமுகமான விதமே வியக்கும் விதத்தில் இருக்கும். சிலருக்கோ மிகச் சாதாரணமாக நடந்திருக்கும். இன்னும் சிலர் ‘ஏன்டா இவன்லாம் அறிமுகமானான்’ என்று தோன்றுபடியும், சிலரது அறிமுகம் ‘கிடைக்காதா’ என்று ஏங்கும்படியும் இருக்கும்.

மொத்தத்தில் தனியராக (சிலர் இரட்டையராக, இன்னும் சிலர் அதற்கும் மேலாக) தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் நாம், இறக்கும்போது குறைந்தது நூறு பேரின் அறிமுகத்தோடாவது மண்ணுக்கும் நெருப்புக்கும் செல்வோம்.

ஆக, மனித குலத்தில் அறிமுகப்படலம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

‘எங்கே அம்மா சொல்லு..’ என தாய் தன்னைக் காட்டி அறிமுகம் செய்துகொள்வதில் ஆரம்பிக்கும்.

‘இது என் புள்ள..’ என நம்மை பிறரிடம் அறிமுகப்படுத்தும்.

தொடர்ந்து செல்லும் இடம்தோறும் நாம் நம்மையோ, பிறர் நம்மையோ அல்லது நாம் பிறரையோ யாரிடமாவது அறிமுகப்படுத்திக் கொண்டேயிருப்போம்.

சிலநேரம் எதற்கிந்த அறிமுகப்படலம் என்றெல்லாம் கூட தோன்றியதுண்டு. மனிதன் சமூக வாழ்க்கை வாழும், அதாவது சமூகத்தை சார்ந்து வாழும் உயிரி. அதனால் அறிமுகப்படலம் என்பது அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தவிர்க்க முடியாதது.

அதோடு இது நம்மையே அறியாமல் நமக்குள் காலம்தோறும் பயிற்றுவிக்கப்பட்டு நாமும் அதன் சுழலுக்குள் சிக்கி நம்மையறியாமல் நம்மை யாரிடமாவது அறிமுகம் செய்துகொள்வதிலும், பிறரின் அறிமுகத்தை தெரிந்துகொள்வதிலும் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம்!

அறிமுகப்படலம் என்பது மனித குலத்தின் பொதுமை விதி. மனிதர்களின் இயல்பில் கலந்தது. ஆம்! அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு எங்கோ வெளியூரில் பயணத்தில் இருந்ததாக நினைவு. முகநூலில் ஒரு முகம் தெரியாதவரின் நட்பழைப்பு வந்தது. யாராக இருக்குமென அவரது பக்கத்தில் போய்ப் பார்த்தபோது, என் நெருங்கிய நண்பர்கள் பலர் அவருக்கும் நண்பர்களாக இருந்தார்கள். அதனால் உடனே அவரது நட்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன்.

நான்கைந்து நாட்கள் சென்றிருக்கும். அவரிடமிருந்து, ‘Hi’ என ஒரு குறுஞ்செய்தி வந்தது. நானும் பதிலுக்கு ‘வணக்கம்’ என அனுப்பினேன்.

‘எங்க தங்கி இருக்கீங்க? உங்கள நேர்ல சந்திச்சிப் பேசணும்..’ என அடுத்த குறுஞ்செய்தி அவரிடமிருந்து.

உடனே நான் ‘என்ன விஷயமா?’ என்றேன்.

‘நான் உங்க Close frind ஓட (அவர் பெயரையும் சொன்னார்) friend. அவர் உங்களப் பத்தி நெறய சொல்லியிருக்காரு. அதான் உங்கள நேர்ல சந்திச்சுப் பேசணும்னு ஆசப்படுறேன்..’  என்றதும்,

‘சரி நம்மளப் பத்தி இவ்ளோ தெரிஞ்சிருக்காரு. சந்திச்சிதான் பார்ப்போமே..’ என ஓரிடம் சொல்லி அடுத்தநாள் மாலை அங்கே வரச்சொல்லியிருந்தேன்.

வந்தார். சந்தித்து அரை மணிநேரம் பேசினோம். பேசினோம் என்பதைவிட பேசினார் என்றுதான் சொல்ல வேண்டும்.  

என்னை விட சற்று உயரமானவர் (உடல் எடையும்கூட). கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர். எங்கோ ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு நடிகர் ஆக வேண்டுமென்று ஆசை உள்ளதாகவும், அதற்கு தான் என்ன செய்ய வேண்டுமென என்னிடம் ஆலோசனை கேட்டு வந்ததாகவும் சொன்னார்.

அவர் சொல்வதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு எனக்குத் தெரிந்த சில வழிகளை அவரிடம் பகிர்ந்து ‘வாழ்த்துகள்’ சொல்லி அனுப்பினேன்.

ஒரு மாதம் சென்றிருக்கும். மீண்டும் ஒருநாள் அழைத்தார்.

”உங்கள உடனேப் பாக்கணும். எங்க இருக்கீங்க..” என்றார்.

அண்ணா நூலகத்தில் (அன்று ஞாயிற்றுக்கிழமை) இருப்பதாகச் சொல்ல, ஒரு மணி நேரத்தில் வருவதாக சொன்னார்.

அவர் சொன்ன நேரம் கடந்து நான் வழக்கமாக கிளம்பும் நேரமாகியும் அவரங்கு வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக காத்திருந்தேன். நகர்பேசியில் அழைத்தால் அழைப்பு போகிறது, எடுக்கவில்லை. சிறிதுநேரம் கழித்து மீண்டும் அழைத்தேன். அப்போதும் எடுக்கவில்லை. அதனால் கடுப்பாகி அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன்.

அன்றிரவு – மறுநாள் – அதற்கடுத்த நாள் – அதற்கடுத்த வாரம், ம்ஹூம். கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் அவரிடமிருந்து யாதொரு பதிலும் வரவில்லை.

இத்தனைக்கும் அவர் முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் வந்து வந்து போகிறார். கடமைக்குக் கூட அழைத்து ஏன் அன்றைக்கு வருவதாக சொல்லி வரவில்லை என ஒருவார்த்தைகூட சொல்லவில்லை.

அதன்பிறகு ஒருநாள் அவராக முகநூலில் வந்து,

‘Sorry Sorry, என்ன மன்னிச்சிடுங்க..’ என்றார்.

‘Its ok..’ என்றேன்.

‘இன்னிக்கு உங்கள பார்க்க முடியுமா?’ என்றார்.

அதற்கும் ‘சரி’ எனச் சொல்லி, தியாகராய நகர் – நடேசன் பூங்காவுக்கு மாலை ஏழு மணிக்கு வரச் சொன்னேன்.

விதவிதமான மரம் செடி கொடிகள் என சென்னையின் அழகு மிகுந்த பூங்காக்களில் அதுவும் ஒன்று. அதிலும் அங்குள்ள பல மரங்கள் நூறு வயதை தாண்டிய மரங்கள். சுற்றிப் பார்த்தபடி அவருக்காக காத்திருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சென்றிருக்கும். தாமதமாக வந்தவர்,

”Sorry Sorry..” எனச் சொல்லி பேச ஆரம்பித்தார்.

”உங்களமாதிரி Journalist ஆகணும்னு இருக்கேன். அதுக்கு நான் என்ன பண்ணணும்?” என்று கேட்டார்.

உடனே நான், ”அப்போ அன்னிக்கி சொன்ன நடிகர் ஆசை?’’ என்றேன்.

”அதுவும் இருக்கு. ஆனா, அதுக்கு முன்னாடி Journalist ஆகணும்..” என்றார்.

எனக்கு எரிச்சலாக வந்தது. வெளியில் காட்டிக் கொள்ளாமல் அதற்கான வழிமுறைகளை சொல்லி அனுப்பினேன்.

அதன்பிறகு ஒருநாள் என் நண்பர்களை சந்தித்தபோது நண்பன் ஒருவன்… அவர் சில தினங்களுக்கு முன் தன்னை வந்து சந்தித்ததாகவும், அவரிடம் எனது நண்பர் எனச் சொல்லிப் பேசியதாகவும், தான் ஓர் ஒளிப்படக்காரர் ஆகப்போவதாகவும், அதற்கு தன்னிடம் ஆலோசனை கேட்டுவிட்டுப்போனதாகவும் சொன்னான். 

உடனே இன்னொரு நண்பன்… அதேபோல் அவர் தன்னை இன்னொரு நண்பரின் நண்பர் எனச் சொல்லி வந்து சந்தித்ததாகவும், தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளர் ஆக ஆசைப்படுவதாகச் சொன்னதாகவும் சொன்னான்.

ஆக, எங்கள் நால்வரிடமும் ஒருவர் பெயர் மாற்றி ஒருவரிடம் நண்பர் என பொய் சொல்லி சந்தித்தது தெரியவந்தது.

‘யாரு இவன்? எதுக்கு தனித்தனியா நம்மல வந்து சந்திச்சிருக்கான்? அதுலயும் ஒவ்வொருத்தர்கிட்டயும் ஓராசய வேற சொல்லிருக்கான்?’

ஏதேதோ தோன்றியது. அதோடு, அவரது இச்செயல் எனக்கு விநோதமாகவும் பட்டது.

சில நிமிடங்கள் அவர் குறித்த பேச்சு நீண்டது. ஒருகட்டத்தில் என் தவிர அனைவரும் அவரை கண்டபடி திட்ட ஆரம்பித்தனர்.

”இனி அவன் மட்டும் என் கண்ல படட்டும்… ஒதைக்காம விடமாட்டேன்..’’ என அவர் மீது கோபத்தின் உச்சத்தில் இருந்தான் ஒரு நண்பன்.

அதற்குப் பின் அவரிடமிருந்து எந்த அழைப்பும் குறுந்தகவலும் வரவில்லை. திடீரென ஒருநாள் (மூன்று மாதங்களுக்குப் பின்) எழும்பூர் கன்னிமாரா நூலகத்தின் முன்புள்ள இக்சா மையத்தில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில் தற்செயலாக அவரை சந்தித்தேன். தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு அவராக வந்து பேசினார்.

பேச்சின் நடுவில், ”கம்ப்யூட்டர் சயின்ஸ் ஈசியா இருக்குமா? கஷ்டமா இருக்குமா?” எனக் கேட்டார்.

‘இவன் எதுக்கு இப்போ கம்ப்யூட்டர் சயின்ஸ் பத்திக் கேக்குறான்..’ என்று யோசித்தவாறு,

”ஏன் கேக்கறீங்க?” என்றேன்.

”இல்ல, கம்ப்யூட்டர் சயின்ஸ்’ல பார்ட் டைமா டிகிரி பண்ணலாம்னு இருக்கேன்..’’ என்றார்.

அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என ஓரளவு யூகித்துவிட்டேன். வந்த கோபத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டு,

”புரிஞ்சிப் படிச்சா ரொம்ப ஈஸியாதான் இருக்கும்..’’ என்றேன்.

அதோடு அவசர வேலை ஒன்று இருப்பதாகச் சொல்லி அவரிடமிருந்து தப்பித்து வந்துவிட்டேன்.

பிறகொரு நாள் அலுவலகத்தில் பணிபுரியும் வேறு குழுவைச் சேர்ந்த சீனியர் ஒருவர் என்னிடம் வந்து அவர் பெயரைச் சொல்லி,

”அவர உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

ஏதோ பஞ்சாயத்து என்பது மட்டும் புரிந்தது.

”தெரியும் சார்..’’ என்றேன்.

”சரி” என சொல்லிவிட்டுப் போனவரை அழைத்து, ”என்னாச்சு சார்..” என்றேன்.

”இல்ல எதுக்கோ என்னப் பாக்கணும்னு கேட்டாரு. உங்கள வேற தெரியும்னு சொன்னாரு. அதான் கேட்டேன்..’’ என்றார்.

‘இவன் எதுக்கு நம்மப் பெயரச் சொல்லணும்? அதோட சம்பந்தமே இல்லாம இவரை ஏன் வந்து சந்திக்கணும்?’

உடனே அவரது எண்ணுக்கு அழைத்துக் கேட்டேன்.

”இல்ல அவர்கிட்ட ஒரு சந்தேகம் கேக்கணும். அதான்..’’ என்றார்.

”தோ பாருங்க… நீங்க யாரனாப் போய் சந்திங்க, சாவுங்க. அது எனக்குப் பிரச்சன இல்ல. அவர்கிட்ட எதுக்கு என் பெயர யூஸ் பண்ணீங்க..?” என்றேன் கோபமாக.

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

எரிச்சலோடு, ”இனிமே என் பெயர யூஸ் பண்ற வேலலாம் வச்சிக்காதீங்க..’’ எனக் கத்திவிட்டு வைத்துவிட்டேன்.

அன்றிரவு பத்து மணியிருக்கும். முகநூலில் இன்னோர் ஊடக நண்பர்  அவரைத் திட்டி ஒரு நீளமானப் பதிவு எழுதியிருந்தார். அதில் ‘இனி அவன் மட்டும் என் முன்னாடி வந்தான்னா செத்தான்’ என்பது போன்ற ஒரு வரி.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படி பொதுவெளியில் ஒருவர் கோபமாகப் பதிவு எழுதும் அளவுக்கு அவர் என்ன செய்திருப்பார்? அதோடு அவர் ஏன் இப்படி ஒருவர் விடாமல் போய் சந்திக்க வேண்டும்? எதற்கு ஒவ்வொருவரிடமும் தன்னை அறிமுகம் செய்ய வேண்டும்?

இது ஒரு வியாதியா? இல்லை தெரிந்துதான் வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்கிறாரா? ஏதேதோ யோசித்தவாறு அறை நண்பனிடம் அவர் குறித்து (அவனையும் அவர் சந்தித்திருக்கிறார்!) பேசினேன்.

”டேய் நல்லா தூங்கப்போற நேரத்துல எதுக்குடா அந்த நாயப் பத்திப் பேசற..?’’ என்றான்.

”ஏன்டா என்னாச்சு..?” என்றேன்.

”அவன்லாம் ஒரு ஆளுன்னு அவனப்பத்தி பேச வந்துட்ட. போடா டேய்..’’ என எரிச்சலானான்.

அதோடு அவனிடம் அவர் குறித்த பேச்சை விட்டுவிட்டு உறங்கிப்போனேன்.

அதன்பிறகு ஒருநாள் மதியம் ஸ்பென்சரிலிருந்து சாப்பிட்டுவிட்டு அருகிலுள்ள விகடன் அலுவலகத்திற்கு வந்துகொண்டிருந்தேன். அப்போது அவரிடமிருந்து ஒரு குறுந்தகவல் வந்திருந்தது.

‘Book Fair-க்கு போறீங்களா..?’

அந்த எண் என்னிடம் இல்லாத புது எண். யாராக இருக்கும் என True Caller-ல் பார்த்தால், அவர்.

‘இத்தன நாள் கழிச்சி எதுக்கு இப்போ புது நெம்பர்ல இருந்து மெசேஜ் அனுப்பி அக்கறையாக் கேக்குறான்..’ என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு,  

‘ஆமாம், இன்னிக்கி சாயந்தரம் போறன்..’ எனப் பதிலளித்தேன்.

உடனே அவர், ‘நானும் வரேன். எனக்கு கொஞ்சம் புக்ஸ் சொல்லுங்க, வாங்கிப் படிக்கிறேன்..’ என்றார்.

‘சரி வாங்க’ என்றேன்.

வந்தார். எந்தவித மாற்றமும் இல்லாமல் முதல் நாள் சந்தித்தது போன்று அப்படியே இருந்தார். பேசினார். பேச்சின் இடையில் ஒரு பிரபல பத்திரிகையின் ஆசிரியர் பெயரை சொன்னார்.

”அவர எப்டி உங்களுக்குத் தெரியும்?” எனக் கேட்டேன்.

”அவர இப்போதான் மீட் பண்ணிட்டு வர்றன்..’’ என்றார்.

உடனே நான், ”என்ன விசயமா மீட் பண்ணிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றேன்.

”இல்ல சும்மாதான் போய் மீட் பண்ணேன்..” என்றதும்,

”அவரு அவ்ளோ சீக்கிரம் யாரையும் பாக்கமாட்டாரே, எப்டிப் போய் பாத்தீங்க?” என்றேன்.

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். எனக்குப் புரிந்துவிட்டது. நிச்சயம் யாரோ ஒருவரின் பெயரைச் சொல்லி (அது நானாகக் கூட இருக்கலாம்) அவரது நண்பர் என்றுதான் போய் பார்த்திருக்க வேண்டும். அதை எங்கே நம்மிடம் சொன்னால் திட்டுவேனோ என பயந்துதான் சொல்லாமல் இருக்கிறார். ஆம்!

”எதுக்கு இப்டியொரு பழக்கம் உங்களுக்கு? ஒருத்தர விடாமப் போய் பாத்திருக்கீங்க. ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொருத்தரோட பேர வேற சொல்லிருக்கீங்க. நான் தெரியாமதான் கேக்குறன், என்னதான் ஒங்கப் பிரச்சன? எதுக்கு இத்தனப் பேரப் போய் பாக்கணும்? அத்தன பேர்கிட்டயும் ஒங்கமேல ஒரு சிம்பதிய கிரியேட் பண்ணி, உங்கள அறிமுகப்படுத்தி, ஒங்க ஆசய சொல்லி, அதுவும் விதவிதமான ஆச, என்னதான் பண்ணப் போறீங்க?” என உச்சகட்ட கோபத்தில் கேட்டேன்.

தலையைக் குனிந்துகொண்டு எதுவும் பேசாமல் நின்றார்.

”தோ பாருங்க. தயவு செஞ்சி இந்தப் பழக்கத்த மாத்திக்கோங்க. ஒங்க நல்லதுக்குதான் சொல்றன்..’’ என்றேன்.

அப்போதும் வாயைத் திறக்காமல் அப்படியே நின்றிருந்தார்.

”என்ன தவிர எல்லாரும் ஒங்கமேல செமக் கோவத்துல இருக்காங்க. ஒருத்தர் கெடச்சா அடிப்பேண்ணு வேற சொல்லிருக்காரு. தயவுசெஞ்சு இதோட எல்லாரயும் போய் பாத்து அறிமுகப்படுத்திக்கிறத நிறுத்திக்கோங்க..’’ எனச் சொல்லிவிட்டு வேகவேகமாக அங்கிருந்து நடந்து வந்துவிட்டேன்.

சிலரது அறிமுகங்கள் வாழ்வில் தேவைதான். அதற்காக இவரைப் போன்று ஒருத்தர் விடாமல் போய் சந்திப்பது எனக்கென்னவோ பெரும் தவறாகத்தான் பட்டது. அதுவும் ஏதோ ஒரு விதத்தில் பயன்பட்டால் சரி. இவர் இதையே ஒரு தொழிலாகவும் போதையாகவும் செய்து வருவது கோபத்தை மட்டுமே உண்டு பண்ணியது.

அதன்பிறகு அவரை பல மாதங்கள் காணவில்லை. ‘என்னாகியிருப்பார்?’ என இரண்டு மூன்று தடவை யோசித்திருக்கிறேன். அப்படி ஒருநாள் யோசித்தபோது எதிர்பாராத விதமாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தேன்.

எதிரில் வந்தவர் ஒரு மாதிரி சோகமாக இருந்தார்.

”என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றேன்.

”இல்ல எப்பவும் போலதான் இருக்கேன்..’’ என்றார்.

உடனே, ”என்ன இந்தப் பக்கம் அதிசயமா?” என்றேன்.

”குரூப் எக்ஸாம்க்கு Prepare பண்றன்..’’ என்றார்.

”ஓ… நல்ல விஷயம். நல்லாப் பண்ணுங்க..’’ எனச் சொல்லி புறப்படத் தயாரானதும்,

”உங்கக்கிட்ட ஒரு உதவி கேக்கணும் நெனச்சன். ஆனா, நீங்க என் மேல கோவமா இருப்பீங்கன்னு விட்டுட்டேன்..’’ என்றார்.

”என்ன உதவி கேளுங்க. முடிஞ்சாப் பண்றன்..’’ என்றேன்.

உடனே தயங்கியவாறு, ”இல்ல… Exam-க்கு தமிழ் Choose பண்ணிருக்கன். அதுல நெறய எனக்குப் புரியல. அதெல்லாம் சொல்லித்தர முடியுமா?” என்று கேட்டார்.

”Syllabus அனுப்பி வைங்க. அதுக்கு முன்னாடி இதுதான் உங்க நிரந்தரமான Final ஆசயான்னு முடிவுப் பண்ணிட்டு அனுப்புங்க..’’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டேன்.

கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் ஆகிறது. இன்னும் அவர் அதனை எனக்கு அனுப்பவில்லை. அதோடு அவரது அறிமுகப்படலமும் அது சார்ந்து புகார்களும் இன்னமும் ஓயவில்லை.

ஏன் அவர் இப்படி இருக்கிறார்? இத்தனைப் பேரைச் சந்தித்தும் ஏனவர் இப்படியே இருக்கிறார்? ஒருவரிடமும் நல்லப் பெயர் இல்லை. அதோடு இதுவரை எத்தனையோ பேரைச் சந்தித்தும் தன் வாழ்விலேன் ஒருபடியும் மேலேறவில்லை? பிறகெதற்கு இந்தத் தொடர் சந்திப்புகள், அறிமுகங்கள்?

அவரது இச்செயல் குறித்து நினைத்தாலே ஒருபக்கம் எரிச்சலாகவும் கோபமாகவும் வரும். இன்னொரு பக்கம் பாவமாகவும் இருக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம். அவருக்கு இருக்கும் இப்பழக்கமானது எல்லோருக்கும் எளிதில் வாய்த்திடாத ஒன்று. ஒருவகையில் பெரும் திறமையும் கூட. ஆம்!

எவ்வளவு சாமர்த்தியம் இருந்தால் எளிதில் நெருங்க முடியாதவர்களையும் எப்படியோ பேசி, யார் பெயரையாவது சொல்லிப் போய் சந்தித்து அறிமுகமாக அவரால் முடியும்?

சிலநேரம் நினைத்திருக்கிறேன். அவர் தன் வாழ்வில் இப்பழக்கத்தை மட்டும் சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவு சாதிக்கமுடியும் என்று.

அறிமுகப்படலம் என்பது மனிதருக்குக் கிடைத்த அரியவரம் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் ஒருவரது அறிமுகம் இன்னொருவரின் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய வல்லமை வாய்ந்தது. அப்படிப்பட்ட திறனை வைத்துக்கொண்டு என்னென்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் நம்மிடையே உண்டு. ஆம்!

சிறுவயது முதல் இதுவரைக்கும் எத்தனையோ பேரின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதில் அவர் தனித்துவமானவர்; குறிப்பிடத்தக்கவர்; மறக்கமுடியாதவர்.

என் விருப்பமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர் தன் வாழ்வில்… இனி ஒரே ஓர் ஆசையைக் கொண்டு, அந்த ஒரே ஓர் ஆசையை நிறைவேற்ற நினைத்து, அது சார்ந்த சரியான நபர்களை மட்டும் தேர்வு செய்து அவர்களை சென்று சந்தித்து அறிமுகமாகி, அந்த ஆசையை நிஜமாக்கி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

அவ்வளவு தான்!

அவ்வளவு தான்!

அவ்வளவு தான்!

(ஏப்ரல் 13, 2020)

*

முகங்களின் முதலில்…

முகங்கள் – 1 : பாட்டையா

முகங்கள் – 2 : அம்மணள்

முகங்கள் – 3 : நூலகன்

முகங்கள் – 4 : திட்டம்மா

முகங்கள் – 5 : ஏகாந்தர்

முகங்கள் – 6 : நகலி

முகங்கள் – 7 : மோனன்

முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

முகங்கள் – 9 : வக்கீலண்ணா

முகங்கள் – 10 : பத்தாள்

முகங்கள் – 11 : ஞாளியார்

முகங்கள் – 12 : திருநி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=