முகங்கள் – 15 : அவளான்

**
‘சொல்லாத
சொல்லொன்று
சுழல்கிறது பம்பரமாய்…
இன்னும்
விரியாத உனது
உள்ளங்கை வனப்பில்’
– பழநிபாரதி
**
மனிதரின் மனமும் புத்தியும் பலநேரம் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. ஒன்றுக்கு சரியெனப்படும் விஷயம் இன்னொன்றுக்கு தவறெனப்படும். சிலநேரம் நூலின் இரு நுனிகள் போன்றது. அதிசயமாய் ஒரு விஷயம் இரண்டுக்கும் சரி அல்லது தவறெனப்படும்.
புத்தியானது மூளை எனப்படின் மனமானது எது? அது எங்கே உள்ளதென பலதடவை கேள்வி வந்ததுண்டு. சிலர் நெஞ்சத்தில் உள்ளது என்றும், இன்னும் சிலர் மனிதரின் தலையில்தான் உள்ளது என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். சரி, அது எங்கிருந்தால் என்ன? மனிதருக்குள் இருக்கிறது. அது போதுமென விட்டுவிடுவேன்.
நம்மில் சிலர் பேச்சுவாக்கில் ‘மனசு சொல்றதக் கேளு’ என்பார்கள். இன்னும் சிலரோ ‘புத்தி சொல்றதக் கேளு’ என்பார்கள். ஏனெனக் கேட்டால் புத்தி அறிவு சம்பந்தமானது அதற்கு உணர்வு பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால் மனசு உணர்வு சம்பந்தமானது, அதனால் மனித உணர்வுக்கு எப்போதும் மதிப்புக் கொடு என்பார்கள்.
மனித உணர்வு மேன்மையான ஒன்றுதான் எனினும் எல்லா நேரமும் அதற்கான மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நம்மிடமிருந்து நமக்கே பல நேரங்களில் மதிப்பும் மரியாதையும் கிடைக்காமல் போவதுதான்.
‘யார் என்ன சொன்னா எனக்கென்ன, என் மனசாச்சிக்கு சரின்னு பட்டுச்சு..’ என்பார்கள் கிராமத்தில்.
‘மனசுங்கறது கடவுள் மாதிரி. அதுக்குக் கட்டுப்படாதவங்க மனுசனா இருக்கவே முடியாது..’ என்பது கிராமத்தின் படிக்காத பாமர மக்களின் எழுதப்படாதக் கூற்று.
அதனால்தான் அவர்கள் எப்போதும் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு எத்தனை இடர்கள் வந்தபோதும் சற்றும் அதிலிருந்து விலகாமல் வாழ்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மனசாட்சிக்கு பயந்து உயிர்விட்டவர்கள் கூட இருக்கிறார்கள்.
‘மனுசன்னா மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வாழணும்’ என்பார் ஐயா. அதனால்தான் நாம் செய்யும் தவற்றினை யாரும் அறியாத போதும் நமக்குள் இருக்கும் மனசாட்சியானது அறிகிறது. அறிவதோடு நம்மை தட்டிக்கேட்கவும் செய்கிறது.
ஆக, மனிதமும் உணர்வும் துளிர்க்கும் மனதொரு பக்கம். எதையும் தர்க்க நோக்கில் மட்டுமே பார்க்கும் புத்தியொரு பக்கம். இதில் எப்பக்கம் மனிதர்கள் இருக்க வேண்டுமென்றால் அது அந்தந்த நேரத்து சூழலுக்கு ஏற்ற முடிவு என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம்… புத்தி எதையும் மிக எளிதில் கடந்து சென்றுவிடும். ஏனெனில் அதற்குதான் உணர்வு கிடையாதே. ஆனால், மனம் அப்படி கிடையாது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அப்படியே அதிலிருந்து விடுபடாமல் உழன்று கொண்டிருக்கும்.
அதனால் மனத்தின் முடிவு என்பது அவரவரைப் பொறுத்தது. அதனை இன்னொருவர் மனதால் மட்டுமே பார்க்க முடியும், உணர முடியும். அப்படிப் பார்த்தால் மட்டுமே அது புரியவும் கூடும்.
அதை விட்டுவிட்டு மனத்தின் முடிவை புத்தியால் பார்த்தால் பல நேரங்களில் அது முட்டாள் தனமாகத்தான் தோன்றக்கூடும். அதேபோன்று புத்தியின் முடிவை புத்தியால் மட்டுமே பார்க்க வேண்டும்.
என்னதான் பார்க்க இரண்டும் எதிரெதிர் துருவங்கள் போன்று இருந்தாலும் இரண்டுமே மனிதருக்குள் இருப்பது. சமமானவை; அவசியமானவை; உன்னதமானவை. ஆம்!
அன்றைய தினம் ஊட்டியின் நடுங்கும் குளிரில் விழித்து, இளஞ்சூடான நீரில் குளித்துவிட்டு, நான் தங்கியிருந்த வேலி வியூ பகுதியிலிருந்து லவ்டேல் ரயில் நிலையத்திற்குப் போகும் பாதை வழியாக குளிரையும் நடுநடுவில் வந்துபோகும் மழைத் துளிகளையும் கனலியின் மென்கதிர்களையும் மெதுவாக நடந்து ரசித்தவாறு சென்று கொண்டிருந்தேன்.
மூன்று கிலோமீட்டர் தூரமிருக்கும் அவ்வழியானது மிகவும் ரம்மியமானது. மரம் செடி கொடி பூக்கள், அருகிலிருக்கும் மலைகள் பள்ளங்கள், தூரத்தில் தெரியும் மலைச் சிகரங்கள், கிராமங்கள் அதன் வீடுகள், சிறுசிறு கட்டங்களாகத் தெரியும் விவசாய நிலங்கள் யாவும் பார்க்கப் பார்க்கத் திகட்டாதவை.
இதுபோன்ற சாலைகளில் தனியாக நடப்பது பெரும் சுகம். அன்றப்படி நடந்துபோகும்போது என்னையறியாமல் உள்ளம் துள்ளிக் குதித்தபடி வந்ததை பலதடவை உணர்ந்தேன்.
அதிலும் பயணங்களின் பெரும்பாலான தினங்களை யாதொரு திட்டமிடலும் இன்றி தொடங்குவது என் வழக்கம். அன்றப்படி தொடங்கிய தினம் என்னை ஊட்டியின் மிக அழகான ரயில் நிலையங்களில் ஒன்றான லவ்டேல் முன்னால் கூட்டிப்போய் நிறுத்தியது.
உடனே அங்கிருந்த ஒருவரிடம்,
”குன்னூருக்குப் போக அடுத்த வண்டி எப்போ?’’ என்று கேட்டேன்.
கை கடிகாரத்தை பார்த்துவிட்டு, ”இன்னும் நாற்பது நிமிசம் இருக்கு..” என்றார்.
‘சரி டிக்கெட் வாங்கிட்டு பக்கத்துல கொஞ்சநேரம் சுத்தலாம்’ என நினைத்து உள்ளே சென்று பயணச்சீட்டு வாங்கினேன்.
வாங்கிவிட்டு நடைபாதையில் நின்று அவ்விடத்தையும் அதன் எழில்மிகு தோற்றத்தையும் தூரத்தில் சென்று வளையும் யாருமற்ற தண்டவாளத்தையும் சில நிமிடங்கள் மெய்மறந்து ரசித்தேன்.
அப்போது என்போன்று டிக்கெட் வாங்கிவிட்டு வந்த பெரியவர் ஒருவர், வயது 75 இருக்கும் என்னைக் கடந்து அருகில் இருக்கும் இருக்கையில் போய் உட்கார்ந்தார். பின் என்ன நினைத்தாரோ கையில் வைத்திருந்த பையைத் திறந்து அதிலிருந்த மிகச் சிறிய வடிவிலான ஒளிப்படக்கருவியை எடுத்து, ரயில் நிலையத்தையும் அருகில் இருக்கும் யாருமில்லாத இருக்கைகளையும் பின் தண்டவாளத்தையும் ஒளிப்படம் எடுத்தார்.
நானும் இரண்டு மூன்று சுயமிகளும் ஒளிப்படங்களும் என் நகர்பேசியில் எடுத்துக்கொண்டேன்.
உடனே அவர் தன் கேமராவை அருகில் இருக்கும் இன்னொரு இருக்கை மீது டைம் செட் செய்து வைத்துவிட்டு வேகமாக ஓடிச் சென்று உட்கார்ந்து போஸ் கொடுத்தார். அது எனக்கு புதிதாகத் தெரியவில்லை. ஆனால் அவர் ஒளிப்படத்துக்கு போஸ் கொடுத்த விதம் விநோதமாகப் பட்டது.
பக்கத்தில் யாரோ இருப்பது போன்றும், அவர் மேல் இவர் கைபோட்டு லேசாகப் பிடித்துக் கொண்டிருப்பது போன்றும் போஸ் கொடுத்தார்.
ஏன் அப்படி செய்கிறார் என யோசித்தவாறு நடுநடுவே அவரையும், அவரது செயலையும் பார்த்தபடி வெளியில் சென்று ரயில் வரும்வரை சுற்றலாம் என்ற திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு ஓங்கி வளர்ந்த மரங்களையும் அவ்வழியாக பறந்தோடும் புள்ளினங்களையும் ரசித்துக்கொண்டிருந்தேன்.
செப்டம்பர் மாதத்தின் மைய தினங்கள் என்பதால் மழையும் வெயிலும் விட்டுவிட்டு வந்து தன் இருப்பை நினைவுப் படுத்திவிட்டுப் போனது.
அதேபோன்று டைம் செட் செய்துவிட்டு ஒளிப்படக்கருவியை வைத்தவர் ஓடிச்சென்று இம்முறை வேறு மாதிரி போஸ் கொடுத்தார். அதிலும் அவருடன் ஒருவர் இருப்பது போன்ற போஸ். அவரது செய்கை ஒருபக்கம் எனக்கு விநோதமாகப் பட்டாலும் இன்னொரு பக்கம் கவனிக்கவும் அதற்கானக் காரணம் தேடவும் தூண்டியது.
அதனால் அவர் அப்படி நான்கைந்து இடங்களில் ஒளிப்படம் எடுத்து முடித்ததும் தற்செயலாக அவரிருக்கும் பக்கம் செல்வது போன்று சென்றேன். அப்போதவர் சிமென்ட் குடை ஒன்றின் அடியில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தவாறு ஒளிப்படம் எடுக்க முயற்சிசெய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்தவன்,
”சார், நான் வேணா எடுத்துத் தரவா?” என்றேன்.
”இல்லப் பரவால்ல, உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என்றார்.
உடனே நான், ”அதெல்லாம் ஒரு சிரமமும் இல்ல சார். எனக்கு போட்டோகிராபின்னா ரொம்பப் புடிக்கும்..’’ என்று அவர் சொல்வதற்கு முன்னமே அவரிடமிருந்த ஒளிப்படக்கருவியை கை நீட்டி வாங்கிக்கொண்டேன்.
குடைக்குக் கீழே இருக்கும் இருக்கையில் உட்கார்ந்தவர், வழக்கம்போல் அருகில் ஒருவர் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு போஸ் கொடுத்தார். அவரது இச்செய்கை ஓரளவு எனக்குப் புரிந்தாலும் அதை எப்படி அவரிடம் கேட்பது என்ற கேள்வியுடன் இரண்டு மூன்று இடங்களில் உட்கார வைத்தும் நிற்க வைத்தும் ஒளிப்படம் எடுத்தேன்.
நன்றி சொல்லிவிட்டு வாங்கியவர் அருகிலிருக்கும் இருக்கையில் போய் உட்கார்ந்தார். நானும் அமைதியாகப் போய் அவரருகில் உட்கார்ந்தேன்.
ஏதோ யோசனையில் இருந்தார் என்பதால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். நடுநடுவில் யாருமற்ற தண்டவாளத்தையும் தூரத்தில் பயணச்சீட்டுக் கொடுக்கும் இடத்தருகே நின்றிருக்கும் இரண்டு மூன்று பேரையும் பார்த்தவர், அடிக்கடி தன் கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தில் நேரம் பார்த்தார்.
எப்படி ஆரம்பிப்பது? ஒருவேளை ஏதாவது தவறாக எடுத்துக் கொள்வாரா அல்லது திட்டிவிடுவாரா என சிந்தித்தவாறு துணிச்சலோடு,
”சார், உங்கக்கிட்ட ஒண்ணுக் கேக்கலாமா?” என்றேன்.
”Yes… கேக்கலாமே!’’ என்றார் மென்மையாகப் புன்னகைத்து.
”இல்ல… போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது கூட யாரோ இருக்கமாதிரி போஸ் கொடுத்தீங்களே..’’ என்று கேள்வியை முடிப்பதற்குள்,
”அது ஏன்னுதானே கேட்க வர்றீங்க..?” என்றார் சிரித்துக்கொண்டு.
”ஆமா சார்..” என்றேன் பதிலுக்கு நானும் லேசாகப் புன்னகைத்து.
”அத ஏன் தயங்கித் தயங்கிக் கேட்கணும், நேராவே கேட்டிருக்கலாமே..’’ என்று சொன்னவர்,
”சரி கேட்டுட்டீங்க… உங்கக்கிட்ட சொல்றதுல என்னயிருக்கு. அது என் மனைவி… இல்லல்ல காதலி. பக்கத்துல இருக்க மாதிரி நானா நினைத்துக்கிட்டு கொடுத்த போஸஸ்..’’ என்றார்.
எதுவும் புரியாததுபோல் அவரைப் பார்த்தேன். மென்மையாகப் புன்னகைத்தார்.
”அடுத்து நீங்க என்ன கேட்கப்போறீங்கன்னு தெரியும். இருங்க அதுக்கும் சேர்த்து பதிலைச் சொல்லிடுறேன்..’’ என்றவர்,
”அதுக்கு நீங்க அவங்களக் கூட்டிட்டு வந்திருக்கலாமேன்னு தான?’’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
”ஆமாம்..’’ என்று தலையாட்டினேன்.
”எனக்கும் ஆசைதான். ஆனா, அவங்களால வரமுடியாது..’’ என்று சொல்லிவிட்டு அமைதியானார்.
முதலில் கீழே குனிந்து, பிறகு தலையை நிமிர்த்தி நேராக, அதன்பின் லேசாக இடதுபக்கம் திரும்பி மெதுவாகப் பார்த்துவிட்டு தன் கை கடிகாரத்தில் நேரம் பார்த்தார். பின் லேசாக நிமிர்ந்து என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு,
”இந்த லவ்டேல்தான் என்னோடக் காதல் ஆரம்பித்த எடம். இதோ இங்கே வச்சுதான், என்னோடக் காதலை அவங்கக்கிட்ட மொத தடவ சொன்னன். சொல்லி சரியா இன்னைக்கோட ஐம்பது வருசம் ஆகுது…
”ஐம்பது வருசத்துக்கு முன்னாடி ரெண்டுபேரும் காலேஜ் படிச்சிட்டிருந்தோம். டூர் கூட்டிட்டு வந்திருந்தாங்க. இங்கயிருந்து குன்னூர் போறதுக்காக 120 பேர் காத்திட்டிருந்தோம். அப்போதான் அவங்ககிட்ட என் காதலை சொன்னேன்..’’
அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்தோடு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
”அன்னிக்கி என் காதலை சொன்னப்போ, சரின்னும் சொல்லல No’ன்னும் சொல்லல. எனக்காக என்ன செய்வீங்கன்னு கண்ணப் பார்த்துக் கேட்டாங்க. உடனே நான் என்ன செய்யணும்னு கேட்டேன். ஐம்பது வருசம் கழிச்சி இதே காதலோட இந்த எடத்துக்கு வந்து இதே மாதிரி உங்க காதல என்கிட்ட சொல்லணும் செய்வீங்களான்னுக் கேட்டாங்க. யோசிக்கலாம் இல்ல… சரின்னு சொல்லிட்டேன்.
”படிச்சி முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நல்லவேல நல்ல சம்பளம். ஒரு பையன் ஒருபொண்ணு. நினைத்துப்பார்த்ததை விட வாழ்க்கை ரொம்ப நல்லாவே போயிட்டிருந்தது. திடீர்னு ஒருநாள் மகராசி தூங்கும்போதே என்ன தனியா விட்டுட்டுப் போயிட்டா. கூடவேப் போயிடணும்னுதான் மனசு சொல்லிச்சு. புத்திதான் இல்லன்னு தடுத்தது..’’
சில நொடிகள் அமைதியானார். அடுத்தென்ன சொல்வார் என எதிர்பார்த்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
”அஞ்சு வருசம் அவங்க இல்லாம அவங்கள மட்டுமே நெனச்சு வாழ்ந்திருக்கன். இந்தநாள் நெருங்க நெருங்க என்னப் பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தன். என் பசங்கக்கிட்ட சொன்னா அவங்களுக்கு அதுப் புரியாது. அதனால கோவையில இருக்க நண்பனப் பார்க்கப் போறன்னு சொல்லிட்டு இங்கக் கெளம்பி வந்துட்டேன்.
தோ அங்கதான் அவங்க அவங்களோட Friends’ஓட நின்னுட்டிருந்தாங்க. நான் அங்கயிருந்து வந்து இந்த எடத்துல நின்னுதான், ‘அமுதா… நான் உங்கள விரும்பறன், கல்யாணம் பண்ணிக்க ஆசப்படுறன். என்னை கட்டிப்பீங்களா’ன்னு நேருக்கு நேரா தைரியமா நின்னு கேட்டேன். சுத்தி இருந்தவங்களாம் ஆடிப் போயிட்டாங்க.
இன்னிக்கி மாதிரி அன்னிக்கில்லாம் காதல சொல்றது அவ்வளவு சுலபம் இல்ல. எனக்கு நல்லாத் தெரியும், அவங்க No சொல்ல மாட்டாங்கன்னு. ஆனா, ஐம்பது வருசம் கழிச்சி இங்கக் கூட்டிட்டு வந்து காதல சொல்ல சொல்வாங்கன்னு கனவுலக் கூட நெனச்சிப் பார்க்கல. ரொம்ப ஈசியான விஷயமாதான் அப்போப் பட்டுச்சி. ஆனா, இன்னைக்கி அத செய்ய முடியாம தோத்துப் போய் இங்க வந்து நிக்கிறேன்..’’
லேசாக கண் கலங்க ஆரம்பித்தார்.
”sorry sir..” என்றேன்.
உடனே கீழ் பாக்கெட்டிலிருந்து கைக் குட்டையை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டவர், மென்மையாகப் புன்னகைத்துவிட்டு,
”Hey அதெல்லாம் ஒண்ணுமில்ல Man. அவங்க ஞாபகம், அதான்..’’ என்றார்.
”சார், நான் ஒண்ணுக் கேக்கலாமா..’’ என்றேன் மீண்டும்.
”அதான் Already கேட்டுட்டயே Man..” எனச் சொல்லி சத்தமாக சிரித்தவர், லேசாக தலையாட்டியபடி, ”சும்மா… தாராளமா கேட்கலாம்..’’ என்றார்.
”எனக்கென்னமோ அவங்களோட உயிர் இன்னிக்கி இங்கதான் இருக்குமோன்னு தோணுது சார். ப்ளீஸ் நீங்க தப்பா எடுத்துக்கலனா, போட்டோவுக்கு அவங்க இருக்கறதா நெனச்சிட்டு போஸ் கொடுத்த மாதிரி ஏன் அந்த இடத்துல அவங்க இருக்கறதா நெனச்சி நீங்க உங்க காதல சொல்லக் கூடாது..?’’ என்றேன்.
எதுவும் சொல்லாமல் மென்மையாகப் புன்னகைத்தார்.
நிச்சயம் நான் இப்படிக் கேட்பேன் என அவர் நினைத்திருக்கமாட்டார் என்பது, அவரது அப்புன்னகையின் மூலம் என்னால் உணரமுடிந்தது. அதோடு அவசரப்பட்டு தவறாகக் கேட்டுவிட்டோமோ என்ற கேள்வியையும் எனக்குள் எழுப்பியது.
அதனால் உடனே நான், ”சார், நான் எதாவது தப்பா சொல்லிருந்தா என்ன..’’ என்று முடிப்பதற்குள் இடைநிறுத்தி,
”Hey Man அதெல்லாம் சரியாதான் சொல்லியிருக்கீங்க..’’ என்றவர், எதையோ யோசித்துவிட்டு,
”மனசு… இந்த மனசுதான் இதையெல்லாம் நம்புது’ல்ல. என் பையனக் கேட்டா, Dad இதெல்லாம் சுத்த முட்டாள்தனம்ன்னு சொல்வான். அதான் யார்க்கிட்டயும் சொல்லல, நேரா வந்துட்டன். yes… நீங்க சொல்றது Correct..” என்று சொல்லிவிட்டு கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் திரும்பவும் நேரம் பார்த்தார்.
”Fifty years back. Same day, Same time..” எனச் சொல்லிவிட்டு, அன்றைக்கு நடந்தது போன்று நடந்து சென்று, அவரது காதலி (மனைவி) அங்கே இருப்பதாய் கற்பனை செய்துகொண்டு, தன் பாக்கெட்டிலிருந்த செந்நிற ரோஜாப்பூவை வெளியில் எடுத்து நீட்டி தன் காதலை சத்தமாக சொன்னவர், சொல்லி முடித்ததும் அழ ஆரம்பித்துவிட்டார்.
சற்று தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த நான் அருகில் ஓடிப்போய் ”Sir.. sir..” என அவரை பிடித்துக் கூட்டிவந்து அங்கிருந்த இருக்கையில் உட்கார வைத்தேன். எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தார்.
லேசாகப் புன்னகைத்துவிட்டு கண்களை துடைத்துக்கொண்டவர்,
”Thank you, young man..” என்றார்.
உடனே நானும் லேசாகப் புன்னகைத்து, ”உங்கக் காதல நெனச்சா ரொம்பப் பெருமையாவும் பொறாமையாவும் இருக்கு சார்..’’ என்றேன்.
”Yes… Fifty years Love. My Love..” என்றார் மெல்லமாக, பெருமிதத்தோடு.
தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
”அன்னைக்கி என் காதல சொல்லிட்டு இப்போ வருதே இந்த ரயில்லதான் குன்னூர் வரைக்கும் ஒண்ணா ஒரே பெட்டியில உட்காந்துப் போனோம். அன்னைக்கி சொன்னேன் அவங்ககிட்ட, ஐம்பது வருசம் கழிச்சு ஒரே சீட்ல உட்காந்து நாம இந்த ரயில்ல இதேநாள் போவோம்ன்னு…’’ என்றவர், தன் பாக்கெட்டிலிருந்து இரண்டு குன்னூர் செல்லும் ரயில் டிக்கெட்டை எடுத்துக்காட்டினார்.
ரயில் வந்து நின்றது. இருவரும் போய் அதில் ஏறினோம். சொன்னதுபோல் இருவர் உட்காரும் சீட்டில் அவர் மட்டும் தனியாக உட்கார்ந்துகொண்டு சன்னலோரச் சீட்டை அவரது காதலிக்காக காலியாக விட்டுவிட்டு, அவரங்கு இருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு பயணிக்க ஆரம்பித்தார்.
சரியாக அவருக்குப் பின்னால் நான்கு சீட்டுகள் தள்ளி உட்கார்ந்தவாறு சன்னலில் தெரியும் பசுமை போர்த்திய மலைகளையும் மரங்களையும் நடுநடுவில் கடந்துபோகும் ஊர்களையும் பார்த்தவாறு, கண்முன்னால் ஓர் ஐம்பதாண்டுக் காதலை நான் மட்டும் தனியாகக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தேன்.
ரயில் குன்னூரில் சென்று நின்றதும் எதுவும் பேசாமல் இறங்கிப் போனவர், அங்கே அவருக்காக வெளியில் காரில் காத்திருக்கும் நண்பரிடம் போய் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக செல்லும் என்னை அழைத்து அவரது நண்பரிடம்,
”My Lovedale friend.” என அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின் அருகில் வந்து தன் பர்சை எடுத்து அதிலுள்ள தன் அமுதாவை அவ்வளவு மகிழ்ச்சியோடு என்னிடம் காட்டினார்.
”உங்கக் காதலி ரொம்ப அழகா இருக்காங்க சார்..’’ என்றேன்.
”Yes… Young Man. Thanks for the day..” என புன்னகைத்து கை குலுக்கிவிட்டு, அவரது நண்பரோடு விடைபெற்றார்.
காலமும் காதலும் எத்தனை அழகானது என்பதை உணர்ந்த அத்தினத்தை (15.09.2017) அவரோடு சேர்ந்து நானும் கொண்டாட ஆரம்பித்தேன். ஆம்!
அன்றைய தினம் யாதொரு திட்டமிடலும் இல்லாமல் தொடங்கியது. ஆனால் நினைத்துப் பார்க்காத விதத்தில் அவ்வளவு அழகாக முடிந்தது. காரணம் இருவரும் மனத்தின் பேச்சைக் கேட்டோம். புத்திக்கு நிச்சயம் இது முட்டாள்தனமாகத் தான் தெரியும். ஆனால் மனத்துக்கு அப்படியல்ல.
என்னைக் கேட்டால் புத்தியைக் காட்டிலும் மனம்தான் எப்போதும் உயர்ந்தது என்பேன். எதிலும் காரணகாரியம் தேடும் புத்திக்கு இவரைப் போன்றவர்களின் மனதும், அதிலிருக்கும் உன்னதக் காதலும், அதனால் அவர் செய்தவையும் ஒருபோதும் புரியாது. ஆனால் மனத்துக்கு நன்கு புரியும். என் மனத்துக்குப் புரிந்தது.
இயற்கையின் படைப்பில் மனிதர்கள் மகத்தானவர்கள் என்பதற்கு முக்கிய காரணமே இந்த மனம்தான் என்று சொல்லத்தோன்றுகிறது. ஆம்!
மனம்தான், மனிதரின் உயர் கடவுள்!
மனம்தான், மனிதனை மனிதனாக்குகிறது!
மனம்தான், மனிதனில் உன்னதமானது!
ஆகவே சொல்வேன், நான் எப்போதும் மனத்தின் கட்சிதான்!
அப்போ, நீங்கள்?
(ஏப்ரல் 15, 2020)
*