ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘கண்மணி குணசேகரன்’ பின்னுரை

”கொடுத்து மகிழ்ந்தவர்களின் வரலாற்றை பதியவைக்கும் எழுத்து.”
அண்ணன் ‘தோழர் செ’ அவர்கள் ”உங்கள மாதிரி அவரும் பிரிய சகோதரர்தான்…” என தொலைபேசியில் அறிமுகப் படுத்தி வைத்தார். எட்டிக் காலடியை மிதிக்கிறமாதிரியான இடைவெளியில் உடன் நண்பர் வடிவரசுவும் இணைப்பில் வந்தார். முன்னுரையில் நாஞ்சில்நாடன் என்னைக் குறிப்பிட்டிருப்பதாக உற்சாகமாக சொன்னார். அதனால் நானும் ஒரு பின்னுரை எழுதித் தரவேண்டுமாய் கேட்டார். ‘’எழுதுவது கிடக்கட்டும். எங்களின் முன்னத்தி ஏர் நாஞ்சில்நாடன் கண்ணில் போய் எப்படி இவர் விழுந்தார்’’ என எனக்கு ஆச்சரியம். அதேநேரம் நாஞ்சிலாரின் உயிர்த்தண்ணீரில் வடிவரசு வேர் ஊன்றி வெளிச்சம் பட்டுக் கொள்வார் என்பது மட்டும் படித்தபின் புரிந்துகொண்டது.
பொதுவாக ”ஆக்கறம், வடிக்கிறம், ஆளுவகூட கெடந்து கொல்லக்காட்ல லோலு படறம்…” என அழுது வடிகிற அம்மா புராணங்களுக்கு கொடுக்கற முக்கியத்துவத்தை வெளியில் தெரியாமல் குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம் என நாயாய் அல்லல்படுகிற அப்பா புராணங்களுக்கு ஒருபோதும் நாம் தருவது இல்லை. அரிதாய் இப்படி மண்ணை, உறவுகளை விட்டுவிட்டு படிப்பு, வேலை என வெளியே நாலுகாசுக்கு சின்னபடுகிறபோது வானத்திலிருந்து குதித்தமாதிரியிருக்கிற பிறர் புறந்தள்ளுகிற தருணங்களின்போதுதான் இந்த அப்பாக்களின் அருமை, பெருமை புரிகிறது. அப்படி நெக்குறுகிப் போகும் நேரங்களில் பலர் அப்பாவை நினைத்து ஏக்கப் பெருமூச்சி விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிலர் கடந்து கண்ணீர் விடுகிறார்கள். அதையும் தாண்டி வடிவரசு போன்றவர்கள் அதை இணையத்தில், இதழ்களில் எழுதுகிறார்கள். உச்சமாய் இப்படி நூல்வடிவம் கொடுத்து காலாகாலத்துக்குமான பதிவாய் ஆவணமும் படுத்துகிறார்கள்.
இந்நூலில் வரும் சாமிக்கண்ணு கவுண்டர், வாழுங்காலத்தையெல்லாம் விவசாயத்தையே தலைமேல் தூக்கித்தூக்கி சுமந்து சொட்டை விழுந்துபோன ஒட்டுமொத்த உழுகுடிகளுக்குமான ஓர் குறியீட்டு ஆன்மா. ஆடுமாடுகள், பயிர்பச்சிலைகள், சனஞ்சாதிகள் என ஒவ்வொன்றின் மீதும் ஆழ இழை பாய்ச்சியபடி, எல்லா மண்ணிலுமாய் விரவிக் கிடக்கிற மனிதர் அவர். தன்னைப்போல் தன் பிள்ளைகள் மண்ணில் உழண்டு கிடக்கக்கூடாதென்கிற அக்கறையில்தான் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றவனை இன்னும் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ஐந்தாம் வகுப்பிலேயே கிடத்துகிறார். (கண்ண மட்டும் வுட்டுட்டு தோலை உரிச்சி எடுங்க… சொல்லியிருக்கவும் கூடும்.) மலைகளில் பசங்களுடன் போய் எதாவது ஆபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாதென்று வைத்து வாங்குகிறார்.
அதே சமயம் கோபத்தில் அடித்துவிட்டாலும் தவறு என தெரிகிறபோது உடன் மன்னிப்புக் கேட்டுவிடுவதில் மட்டும் மற்ற சராசரி அப்பாக்களைக் காட்டிலும் மனதில் மிக நெருக்கமாக நின்றுவிடுகிறார். அதற்குமேல் குடியிலிருந்து திருத்துவதற்கு என்ன ஆனாலும் ஆகட்டுமென குடிசாலைக்கே போய் வீட்டுக்கு வந்தே ஆகவேண்டுமென நிலைகால்மேல் நின்றுவிடுகிற இடத்திலும் சரி, சககுடிகாரர்கள் போடும் அடிபாடங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் எழுந்து வந்து இனி குடிக்க மாட்டேன் என நடுவழியில் சொல்கிறபோதும் சரி அப்பாவும் மகனுமாய்… இத்தொகுப்பின் உணர்வு பிழம்பாகிறார்கள்.
காதலைப் பற்றி சொல்கையில் எது மனதுக்கு சரியென்று படுகிறதோ அதுபடியே செய் என்கிறார். உண்மையில் படித்து, வாழ்க்கை என்ன என்கிற புரிதலில் இருக்கிற வயதில் இருப்பதால் அப்படி சுயமாய் முடிவெடுக்க அனுமதிக்கிறார். அதுதான் நியாயமுங்கூட. ஆனால் அதை விடுத்து நொளுவ வயதில் காதலிப்பதும் வீட்டில் விளக்கமாத்தை எடுத்ததும் ஓடி சேர்க்கை சரியில்லாத இடத்தில் நின்றுகொண்டு பங்கப் படவைப்பதும் பெருங் கொடுமை. அப்படிப்பட்ட செறுவயது சேர்க்கையாக போய் கேட்டிருந்தால் அப்பா நிச்சயம் புள்ளுக்கழியை எடுத்திருப்பார். அந்த வகையில் சமூகத்திற்கு தற்போதைய சூழலுக்கு உகந்த நல்ல அப்பாதான் வடிவரசுவின் அப்பா.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொன்று. தாழ்த்தப் பட்டவர்களுக்காக இருபது ஏக்கரை தானமாக கொடுத்துவிட்டு வெறும் ஒன்றரை ஏக்கரில் ஒடுங்கிக் கொள்கிற வள்ளல் குணம்தான். இப்படித்தான் மற்றவர்களுக்காக கொடுத்து கொடுத்து ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர், பிடி செங்கல்வராய நாயகர் என வரலாறுகளில் இவர்கள் நிற்கிறார்கள். கொடுத்து மகிழ்ந்தவர்களின் வரலாற்றை பதியவைக்கும் எழுத்து இது.

புதுவை சு.ஆ. வெங்கடசுப்ராய நாயகர் தனது அத்தையை பற்றிய ‘அத்தையின் அருள்’ என்கிற நூலின் நான் இரண்டாவது பதிப்பிற்கு முன்னுரை எழுதுகிறபோது இவரின் அத்தையை போன்று அவரவர்களின் தாய், தந்தை உறவுகளை ஒவ்வொருவரும் ஒரு நூலை எழுதுகிற ஆவலை உண்டாக்குகிறது இப்படைப்பு என எழுதியிருந்தேன். ஆனால் அதைப் போன்றதொரு நூலுக்கு இப்போது நானே பின்னுரை எழுதுவேன் என நினைக்கவில்லை.
இந்த நூலுக்கும் அதையேதான் சொல்கிறேன். ஒரு படைப்பு வெற்றி பெறுவது என்பது படிப்பவரின் உள்ளத்தில் ஏற்படுத்தும் தனதாக உணரும் அனுபவத்தை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் இந்த சிறுநூலை படிக்கும் ஒவ்வொருவரது மனதிலும் தனது அப்பாவை நினைக்க வைக்கிற வகையில் முற்றிலுமாய் வெற்றியடைந்துகொள்கிறது.
வாழ்த்துக்கள் வடிவரசு.
அன்புடன்.
கண்மணிகுணசேகரன்.
மணக்கொல்லை.
(23.07.19)
*