ஐயா (எ) 95 வயது குழந்தை! – 12

ஐயா () 95 வயது குழந்தை! – 1

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 2

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 3

ஐயா () 95 வயது குழந்தை! – 4

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 5

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 6

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 7

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 8

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 9

ஐயா () 95 வயது குழந்தை! – 10

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 11

ஐயா அடிக்கடி வருத்தப்பட்டு சொல்லும் ஒரு விஷயம், ”நான் ஒங்களுக்குன்னுப் பெருசா சொத்து பத்து எதுவும் சேத்துவக்காமப் போயிட்டன்” என்பதுதான்.

அவர் அப்படிச் சொல்லி வருத்தப்படும்போதெல்லாம், ”விடுய்யா… பணம், சொத்து பத்துலாம் நாமளாப் பாத்து சம்பாதிக்றது தான். அது இன்னிக்கி இருக்கும் நாளிக்கிப் போயிடும். மனுஷங்களயும் பேரயும் சம்பாதிச்சிருக்கீங்க. இதவிட என்னய்யா வேணும்?” என்பேன்.

இருந்தாலும் அவர் இந்த விஷயத்தில் மட்டும் சமாதானம் ஆகாமல் மனத்துக்குள் தன் வருத்தத்தை எப்போதும் வைத்திருக்கிறார் என்பதை நான் நன்கறிவேன்.

ஏற்கனவே எங்கள் கிராமத்தின் வடிவமைப்பு குறித்து சொல்லியிருக்கிறேன். ஊரின் தொடக்கத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதி உள்ளது. ஊருக்குத்தான் அது ஒதுக்கப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட பகுதியே தவிர எனக்கு கிடையாது. அங்கெனக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளார்கள். அதனால் அவர்களைப் பார்க்க அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அப்படிச் செல்கையில் என்னை புதிதாக அல்லது ஏற்கனவே பார்த்து மறந்துபோன வயதானவர்கள் யாராவது பார்த்தால் மேலிருந்து கீழ்வரை ஏறயிறங்கப் பார்ப்பார்கள். பார்த்துவிட்டு,

”யார் மவன்பா நீ?” என்பார்கள்.

”சாமிக்கண்ணு மவன்” என்றதும்,

”ஓ… சாமிக்கண்ணு ஐயா மவனா நீ? சின்னப் பையனா… எவ்ளோ வளந்திட்ருக்க…” என்பதோடு, சிலர் அருகில் வந்து கண்பட்டதற்கு திருஷ்டி சுத்துவதுபோல் கைவிரல்களை மடக்கி கன்னம் அருகில் வைத்து நெட்டிமுறிப்பார்கள் (அன்பின் வெளிப்பாடாக).

பிறகு, ”ஐயா நல்லாருக்காரா?” எனக் கேட்டுவிட்டு, ”தோ… நாங்களாம் இப்போ இருக்க இருவது ஏக்கரா எடமும் ஒங்க ஐயாக் கொடுத்த எடம். அந்த மனுஷனுக்கு எவ்ளோ நல்ல மனசிருந்தா இவ்ளோ எடத்த ஊருக்குக் கொடுத்திருப்பாரு…” என்று சொல்லி, ”ஒங்க ஐயா மகராசனா இருக்கணும்” என வாழ்த்துவார்கள்.

முதல் தடவை இதைக் கேள்விப் பட்டதும் ஐயாவிடம் சென்று கேட்டேன். ”அதுவா… நீ பொறக்குறதுக்கு முன்னாடி டேம் ஒடஞ்சி வெள்ளம் வந்தப்போ, ஆத்தோரமா இருந்த வீடெல்லாம் அடிச்சிட்டுப் போச்சு. அதுல வீடில்லாம இருந்தவங்க எல்லாம் மேட்டுமேல வீடு கட்டிக்கிட்டா வெள்ளம் வராதுன்னு நெனச்சி வந்தாங்க. அப்போ அரசாங்கமும் மேடான எடம் எது, அவங்கள எங்க தங்க வக்கலாம்னு பாத்திட்டிருந்தது. நம்மோட நெலம்தான் மேடான எடமா இருந்துச்சு. அதனால அதிகாரிங்க வந்துப் பேசுனாங்க. ஆரம்பத்துல எதுக்கு நம்ம நெலத்தக் கொடுக்கணும்னுதான் நெனச்சன். அப்பறம் நம்ம மக்கதான சரி போனாப் போகட்டும்னு மேட்டுல இருந்த மொத்த எடத்தயும் கொடுத்துட்டு ஊர் ஓரமா பள்ளத்துல இருக்க ஒன்ற ஏக்கர மட்டும் நமக்குன்னு வச்சிக்கிட்டன்.

‘எதுக்கு இம்மாம் எடத்த தூக்கி ஊருக்குக் கொடுக்கணும்’னு எல்லாரும் திட்னாங்கதான். என்ன பண்றது நான் ஒருத்தன் நெலத்த வச்சிட்டு சந்தோஷமா இருக்கறத விட அதுல அம்பது குடும்பம் வீடு கட்டினு புள்ளக் குட்டியோட இருந்தா சரின்னுப் பட்டுச்சி. அதனால அதிகாரிங்கக்கிட்ட எதுக்கு வாக்குவாதம் பண்ணணும்னு எடுத்துக்க சொல்லிட்டு வந்துட்டன். இப்ப அந்த நெலம் மட்டும் நம்மக்கிட்ட இருந்திருந்தா இந்த ஊருலயே நாமதான் பெரியப் பணக்காரங்க…” என்றார் லேசாக உதட்டசைத்து புன்னகைத்தவாறு.

ஓரடி இடத்திற்காக சொந்த அண்ணன் தம்பியையே வெட்டிக் கொன்றவர்கள், கொல்பவர்கள் பெருகிக் கிடக்கும் இதே மண்ணில்தான்… தன் இத்தனை ஏக்கர் நிலத்தையும் ஒருவர் ஊருக்காக கொடுத்திருக்கிறார் என்றால் அது வெறுமனே கடந்துபோகும் சாதாரண விஷயம் கிடையாது.

இத்தனைப் பெரிய காரியத்தை ஐயா செய்துள்ளது எங்கள் கிராமத்தில் உள்ளவர்களில் எண்ணி ஐம்பது பேருக்குத் தெரிந்தால் (கிட்டத்தட்ட 1500 பேர்கள் வாழும் ஊரில்) ஆச்சர்யம்தான். அந்தளவுக்கு ஐயா இதை ஏதோ பெரிய விஷயமாகவோ சாதனையாகவோ நினைக்காது மிகச் சாதாரண ஒன்றாக கடந்துவந்துவிட்டார்.

‘வலது கை கொடுப்பதை இடது கை அறியாது’ என்பார்களே… அதற்கு தக்க உதாரணமாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

இன்றைக்கு மரம் நடுவதைக் கூட விளம்பரத்துக்காகவும், பேருக்காகவும், புகழுக்காகவும் நினைத்து செய்பவர்கள் மத்தியில் ஐயா தான் செய்த மிகப்பெரும் காரியத்தை தன் பெற்றப் பிள்ளைக்குக் கூடத் தெரியாமல் வளர்த்தார் என்றால் அது எத்தனை பெரிய விஷயம். இதுபோன்ற பெரிய பெரிய காரியங்களை ஐயா போன்றவர்கள் யாருக்கும் தெரியாமல் ஆங்காங்கே இன்னமும் நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதெல்லாம் வெளியில் தெரிவதில்லை. காரணம் அவர்கள் அதனை பெரும் சாதனையாகவோ, பேருக்காகவோ, புகழுக்காகவோ செய்யாமைதான்.

ஐயா தன் நிலத்தை ஊருக்குக் கொடுத்தபின் தனக்கென வைத்துக்கொண்ட ஒன்றரை ஏக்கர் நிலத்தில்தான் (அதுவும் புஞ்சை நிலம். மழை பெய்தால்தான் விளையும்) பயிரிட்டும் அறுவடை செய்தும் அதுபோக கூலி விவசாய வேலை செய்தும் மிக கஷ்டப்பட்டு எங்களையெல்லாம் வளர்த்துவந்தார்.

ஒரு கட்டத்தில் அக்காவுக்குத் திருமணம் செய்ய போதிய வசதியின்மையால் அந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் விற்கவேண்டிய சூழல் வர, வேறு வழியின்றி விற்று அக்காவிற்கு திருமணம் செய்துவைத்தார். அதன்பிறகு தொடர் கூலி வேலைதான் என்றாலும் ஒருநாளும் ஐயாவும், அம்மாவும் (அவர்களுடன் சேர்ந்து சில நாட்கள் அண்ணன்களும்) மனம் கோணாது உழைத்து வந்தார்கள்.

ஐயாவும், அம்மாவும் பட்ட கஷ்டங்களை சிறுவயதுமுதல் பார்த்து வளர்ந்தவன் என்பதால் கஷ்டமென்றால் என்ன அதன் வலி யாது, சுகம் யாது என அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டேன்.

ஒரு தடவை நண்பன் சீனுவைப் பார்க்க (அவன் இப்போது உயிருடன் இல்லை. ஒரு விபத்தில் இறந்துவிட்டான்) ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றிருந்தேன். எதிர்பட்ட பாட்டி ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு, ”வடுவரசுதான நீ?(கிராமத்தில் பலரும் அப்படித்தான் அழைப்பார்கள்) இங்க வாய்யா…” என அழைத்தார்.

அவரால் எழுந்து நடக்கமுடியவில்லை. திண்ணையில் அமர்ந்திருந்தவர் என்னிடம் இரண்டு ரூபாயைக் கொடுத்து, ”கோச்சிக்காமப் பாட்டிக்கி வெத்தலப் பாக்கு வாங்கிட்டு வர்றீயாய்யா…?” என்றார்.

புன்னகைத்தவாறு, ”ம்… சரி பாட்டி” என்று சொல்லிவிட்டு, தெரு முனையில் உள்ள கடைக்குச் சென்று வெற்றிலைப் பாக்கு வாங்கி வந்து அவரிடம் கொடுக்க, அதை வாங்கிப்பார்த்து வெற்றிலைக்குள் அவர் கொடுத்த காசும், ஐந்து ரூபாய்க்கு வாங்கிய (அதிகமான) வெற்றிலையையும் பார்த்துவிட்டு கண்கலங்கிவிட்டார்.

”அப்டியே ஒங்கப்பன்தான் நீ… மொத்த நெலத்தயும் ஊருக்கு கொடுத்துட்டு இன்னிக்கி ஒத்த சென்ட் எடம் இல்லாம நிக்கிறாரு. இதெல்லாம் இந்த மக்கிங்களுக்கு எங்கத் தெரியப்போது. நீ நல்லாருக்கணும்யா” என வாழ்த்தி அனுப்பினார்.

இதனை வெறும் வாழ்த்தாக நான் பார்க்கவில்லை. அவர் மனத்தின் வார்த்தைகளாகத்தான் பார்த்தேன்.

இப்படி பலரின் வாழ்த்துகளும் அன்பும்தான் ஐயாவை இந்த 94 வயதிலும் தன் வேலைகளைத் தானே செய்துகொண்டும் தினம் நான்கைந்து கிலோமீட்டர் தூரம் நடக்கவைத்தும் தன்னால் முடிந்த சின்னச் சின்ன விவசாய வேலைகளை செய்யவைத்தும் தன் பேரப் பிள்ளைகளோடு மகிழ்வோடு கதைகள் பேசி விளையாடவும் வைப்பதாக நினைக்கிறேன், நம்புகிறேன்.

ஐயாவிடமிருந்து எத்தனையோ விஷயங்களை நான் இதுவரை கற்றிருந்தாலும் நடத்தல் அதில் முதன்மையானதென்பேன். நடக்க அவர் ஒருபோதும் யோசிக்கவே மாட்டார். அது எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி. இந்த 94 வயதிலும் அதை அவர் பின்பற்றி வருகிறார்.

இன்றைக்கு பக்கத்துத் தெருவில் இருக்கும் கடைக்குச் சென்றுவர கூட வாகனத்தைத் தேடுவோர்க்கு இதெல்லாம் பெரும் ஆச்சர்யமாக இருக்கும். அவர் இயற்கையோடு இயற்கையாக வாழ்கிறார். அவருக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கும் தண்ணீர் தெரியாது. இரண்டு நிமிடத்தில் சாப்பிடத் தயாராகிவிடும் மேகி தெரியாது. அத்தோடு மிக முக்கியமாக இன்றைக்கு விஷமாகப் பரவியுள்ள துரித உணவுகளும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பாலும், தயிரும், மோரும் தெரியவே தெரியாது.

அவருக்குத் தெரிந்ததெல்லாம் கிராமம். அங்குள்ள எளிய மக்கள். மரம், செடி, கொடிகள்; ஆடு, மாடு கோழி, குருவிகள்; நிலங்கள், பயிர்கள் அவ்வளவே.

விகடனில் பணிபுரியும்போது போரூர் கார்டனில் தங்கியிருந்தேன். அங்குள்ள என் அறைக்கும் அண்ணா சாலையில் உள்ள விகடன் அலுவலகத்திற்கும் பதினான்கு அல்லது பதினைந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும். மாலை அலுவலகம் முடிந்து எதுவும் அவசர வேலைகள் இல்லாமல் இருப்பின், ‘வேகமா ரூமுக்குப் போய் என்ன பண்ணப்போறோமென’ யோசித்து, நடந்தே சாலையோரமாக பாடல் கேட்டுக்கொண்டும், வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் வழியில் டீ, பிஸ்கட், சில நாட்கள் இரவு உணவு சாப்பிட்டுமென பொறுமையாக அவசரமின்றி சந்தோஷமாக செல்வேன். அதுமட்டுமின்றி இன்றளவும் தினமும் குறைந்தது மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்துசெல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன்.

பலரும் இதை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் காலையிலோ, மாலையிலோ பூங்காவில் சுற்றிவந்து அல்லது ஜிம்மில், ரன்னிங் மெஷினில் ஓடிவிட்டும், நடந்துவிட்டும் வருகிறார்கள். இதை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கும்.

சில வருடங்களுக்கு முன் ஐயாவுடன் காலையில் வீட்டிலிருந்து நிலத்திற்கு நடந்து செல்லும்போது, ‘ஏன்யா இந்த வயசுல இவ்ளோ தூரம் நடந்து வர்றீங்க. வீட்லயே ஒக்காந்து ஓய்வெடுக்கலாம்ல’ என்றேன். உடனே ஐயா,

”அட மடயா… நான் தெனமும் நடந்து வந்து என்னால முடிஞ்ச வேலய செஞ்சிட்டு இருக்கறதாலதான் இந்த வயசுலயும் நடமாடிட்டிருக்கன். நீ சொல்றமாரி வீட்டுலயே ஒக்காந்திருந்தா எப்பவோ படுத்தப் படுக்கயா ஆயிருப்பன்” என்றார்.

‘நடத்தல்’ எவ்வளவு பெரிய மருத்துவம் என்பதை 94 வயதிலும் ஐயா விடாமல் இந்த உலகத்திற்கு தன் செயலின் மூலமாக சொல்லிவருகிறார். பாவம் அற்ப மனிதர்களான நாம் எதையும் பிரபலங்கள் சொன்னால்தானே ஏற்போம்; பின்பற்றுவோம்.

ஐயா பிரபலம் கிடையாது; அத்தோடு அவர் இந்த உலகிற்கு எதையும் முனைந்து சொல்லவில்லை. செய்கிறார்; செயலாக வாழ்கிறார்; அவ்வளவே.

‘உலகின் தலைசிறந்த சொல் செயல்’ என்பார்கள்.

ஐயா – செயல்;

செயல்தான் ஐயா!

[இன்னும்]

*

ஐயா (எ) 95 வயது குழந்தை!

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=