ஐயா (எ) 95 வயது குழந்தை! – 5

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 1

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 2

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 3

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 4

ஐயா – சாதி மதமெல்லாம் பெரிதாகப் பார்க்கமாட்டார். அவரைப் பொருத்தவரை அனைவரும் சமம்.

அதுமட்டுமல்ல… ஆடு, மாடு, காக்கா, குருவி, மரம், செடி, கொடி, புல், பூண்டு, புழு, பூச்சி என அனைத்தும் அவருக்கு சக உயிர்தான்.

அப்படித்தான் பார்ப்பார்; அப்படித்தான் நடந்துகொள்வார்.

ஐயாவின் பெயர் சாமிக்கண்ணு. முதலில் அது ‘சாமிக்கண்ணு கவுண்டர்’ என்றுதான் இருந்தது. இருந்ததெனில், அதை சொந்தக்காரர்கள் பத்திரிகையில் அப்படிப் போடும்போதுதான் பார்த்திருக்கிறேன். அத்தோடு, சிறு வயதில் பலர் அவரை ‘கவுண்டரே’ எனச் சொல்லி அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். இப்போதும் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் அப்படித்தான் அழைப்பார்கள்.

ஒருதடவை யாரோ என்னிடம் ”யார் மவன்ப்பா நீ?” எனக் கேட்க, ”சாமிக்கண்ணு கவுண்டர் மவன்” என நான் சொல்வதை ஐயா பார்த்துவிட்டார். உடனே என்னிடம் வந்து ”என்ன சொன்ன?” என்றார். நானும் சொன்னதைச் சொல்ல… கேட்டுவிட்டு அமைதியானவர், ”இனிமே யார் கேட்டாலும் சாமிக்கண்ணு மவன்னு சொல்லு’’ எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை என்றாலும், பின்னாளில் புரிந்தபோது ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் ஒருங்கே உண்டானது.

இது நடந்து எப்படியும் பதினைந்து வருடங்களுக்கு மேலிருக்கும்.

ஒரு மனிதர்; அதுவும் படிக்காதவர்; பேருந்து வசதிகூட சரிவர இல்லாத ஓர் உட்கிராமத்தைச் சேர்ந்தவர். அதிலும்… சாதி, மத அடையாளங்கள் விஷமாய்ப் பரவிக்கிடந்த சூழலில் பிறந்தவர், வளர்ந்தவர், வாழ்பவர். எப்படி போகிற போக்கில் இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிவிட்டுப்போனார் என இப்போது நினைத்தாலும் பெரு வியப்பாக இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில் பாயும் தென்பெண்ணை ஆற்றங்கரையின் தென் புறத்தில்தான் எங்கள் கிராமம் (திருவடத்தனூர்) இயற்கை வளங்கள் சூழ அமைந்துள்ளது.

கிராமத்தில் சரிபாதியினர் முஸ்லிம்கள். மீதிப் பாதிபேர் வன்னியர், யாதவர், செட்டியார், பிராமணர், ஆதி திராவிடர், பழங்குடியினர்… என பல சாதியினர் (கிறிஸ்தவர்கள் யாரும் கிடையாது) இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட கிராமத்தில் சாதிப் பிரச்சனைகள் எப்படியெல்லாம் இருந்திருக்குமென சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஆம்! உங்கள் கற்பனை நூறு சதவிகிதம் எனில், அதில் ஒரு சதவிகிதம் மட்டுமே நிஜம் எனலாம்.

என்ன வியப்பாக இருக்கிறதா?

எங்கள் கிராமத்தில் பெரும்பாலும் சாதி, மதத்தை மையமாக வைத்து பிரச்சனைகள் எதுவும் வந்தது கிடையாது. அப்படியே வந்தாலும் அதை உடனடியாகத் தடுத்து நிறுத்திவிடுவார்கள்.

ஐயாவுக்கு முஸ்லிம் நண்பர்கள் அதிகம். அதைவிட அதிகம் முஸ்லிம் சொந்தங்கள். கிட்டத்தட்ட எங்கள் ஊரில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஐயாவை ஏதோவொரு உறவுமுறை சொல்லித்தான் அழைப்பார்கள். அவரும் அவர்களை அப்படித்தான் அழைப்பார். அதைப் பார்த்து வளர்ந்த நாங்களும் அப்படியே.

சரியாக இரண்டாண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து வந்திருந்த நண்பன் ஒருவனை எங்கள் ஊருக்கு அழைத்துப்போயிருந்தேன். அப்போது எங்கள் அண்ணன் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஊருக்குச் சென்றதும் வீட்டில் உள்ளவர்களிடம் பேசிவிட்டு, ஊரின் மேற்குப்புறத்தில் உள்ள ஏரிக்கரையில் குலதெய்வத்துக்குப் பொங்கல் வைத்து மொட்டையடித்து பூசையிடும் இடத்துக்கு நண்பனையும் அழைத்துப்போனேன்.

அதற்கு முன் அவனும் நானும் அருகிலிருந்த மலையில் ஏறியிறங்கி குலதெய்வத்தை வணங்கிவிட்டு, கொஞ்ச நேரம் பூசை நிகழ்வில் இருந்துவிட்டு, சரியாக மாலை இருட்டும்போது ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

இம்முறை வந்த வழியில் செல்லாமல் ஊருக்குள், அதாவது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி வழியாக அவனை அழைத்துச்சென்றேன். அப்போது செல்லும் வழியெங்கும் எதிரே வந்தவர்கள், என்னைப் பார்த்தவர்கள் ”என்ன மச்சான் எப்ப வந்த?, என்ன ஓய் சவுக்கியமா? (ஓய் என்பதற்கு எங்கள் ஊரில் மச்சான் என்றே அர்த்தம்), என் மாமன் மவன் வடிவரசா நீ… என்ன இப்படி எளச்சிப் போயிட்ட?, என்ன மாப்ள… எப்ப என் பொண்ணக் கட்டிக்கப்போற?” என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறவின் பெயரை வைத்து அழைப்பதைப் பார்த்த நண்பன் ஆச்சர்யப்பட்டான்.

அதன் பின் அவனிடம்… எங்கள் கிராமம் பற்றியும், அங்குள்ள மக்கள் பற்றியும், இந்து முஸ்லிம் உறவு பற்றியும் சொல்ல வியந்தான்.

ஆம்! உண்மையில் இந்து, முஸ்லிம் என்னும் பிறப்பால் ஏற்பட்டப் பிரிவை நாங்கள் யாரும் ஒரு பிரிவாக நினைப்பதில்லை. முடிந்தவரை அதை அழித்து ஒன்றாகத்தான் பழகிவருகிறோம்.

இது எங்கள் ஊரில் மட்டுமல்ல… கிட்டத்தட்ட இந்து, முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊர்களிலும் இப்படித்தான். ஆனால், இந்த சினிமாவும் ஊடகமும் மட்டும் ஏனோ முஸ்லிம்களை தீவிரவாதிகள் போலவும், இந்துவும் முஸ்லிமும் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆகாதவர்கள் போலவும் காட்டும்போது வருத்தமாக இருக்கும்.

இங்கே பலருக்கு ஒரு கேள்வி எழலாம். ”இவங்க சும்மா வாயால மட்டும்தான் உறவுப்பேர சொல்லிக் கூப்டுக்குவாங்க” என்று. இல்லவே இல்லை.

எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எல்லா சொந்தங்களைப் போல் அவர்களும் வருவார்கள். இருக்கும் வேலைகளை எடுத்துப்போட்டு செய்வார்கள், சாப்பிடுவார்கள், தங்களால் முடிந்ததை அன்பளிப்பாகச் செய்வார்கள். அதேபோல்தான் நாங்களும்.

ஐயாவுக்கு எப்படி முஸ்லிம் நண்பர்கள் அதிகமோ… அதேபோல் தான் அவரைப் பார்த்து வளர்ந்த என் அண்ணன்களுக்கும், எனக்கும்.

ஐயாவுடன் சிறுவயதில் அதிகமாக சுற்றியிருக்கிறேன். அப்போது ஐயாவிடம் பலர் உருதுவில் பேசுவதையும், ஐயா அதைப் புரிந்துகொண்டவராய் பதிலுக்கு தமிழில் பேசுவதையும் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அண்ணன்கள் அப்படிக் கிடையாது. பதிலுக்கு உருதுவில் நன்றாகப் பேசுவார்கள். நானோ… பாதி ஐயா போல, பாதி அண்ணன்கள் போல உருதுவிலும், தமிழிலும் கலந்துகட்டிப் பேசுவேன்.

முதலில் ஐயாவிடம் இருந்துதான் சாதியையும், மதத்தையும் துறக்கக் கற்றுக்கொண்டேன். இன்றைக்கு சாதி, மதம் பார்க்காமல் எல்லோரிடமும் பேசுகிறேன், பழகுகிறேன் என்றால் அதற்கு முழு முதற்காரணம் ஐயாதான்.

இந்த இடத்தில் 2011-ல் நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னால் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

அப்போது எங்கள் வீட்டில் நடந்த காதணிவிழாவுக்கு என்னுடன் என் காதலியையும் சென்னையிலிருந்து அழைத்துப்போயிருந்தேன். அப்போது நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சாப்பிட்டுவிட்டு விடைபெறுகையில் அண்ணனின் நெருங்கிய முஸ்லிம் நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, ”வடிவரசு… மதியம் நீயும் அவங்களும் வீட்டுக்கு லன்ச் சாப்பிட வாங்க” எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

”என்னடா இது… புதுசாக் கல்யாணம் ஆனவங்களத்தான வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிடுவாங்க (எங்கள் ஊரில் உள்ள வழக்கம் இது). நாம இப்போதான லவ் பண்றோம்” என்ற கேள்வியோடும், குழப்பத்தோடும் ஐயாவிடம் சென்று நடந்ததைச் சொல்ல… அவர் சர்வ சாதாரணமாகப், ”போயிட்டு வாங்க. நம்மள அவங்க சொந்தமா நெனச்சிக் கூப்புடுறாங்க. போகலன்னா சங்கடப்படப் போறாங்க” என்றார்.

அவர் சொன்னதுபோல் அன்றைக்கு இருவரும் விருந்துக்குப் போயிருந்தோம். எப்படி திருமணம் ஆனதும் நெருங்கிய சொந்தத்தினர் நம்மை விருந்துக்கழைத்து கவனிப்பார்களோ… அதேபோல் எங்களை மகிழ்வோடு கவனித்து அனுப்பியது மனத்தில் இன்னமும் நீங்காமல் இருக்கிறது.

ஐயா பொதுவாக தனக்கென எதுவும் கேட்கமாட்டார். அதேபோல் எங்கள் விருப்பத்திலும் தடையாக இருக்கமாட்டார். ஆனால், அடிக்கடி அவர் சொல்லும் வார்த்தை, ”எத செய்றதுக்கு முன்னாடியும் ஒரு தடவைக்குப் பத்து தடவ யோசி. எது சரின்னு படுதோ அதச் செய்” என்பார்.

ஆம்! அப்படித்தான் திடீரென ஒருநாள் அவரிடம் போய், ‘வேலையை விட்டுவிட்டு, என் கனவை நோக்கிப் பயணப்படப்போவதாக’ சொன்னேன். கோபப்படாமல், அதேசமயம்… தடையெதுவும் சொல்லாது, அமைதியாகக் கேட்டவர், புன்னகையோடு தட்டிக்கொடுத்தார்.

அத்தோடு அவரிடம்… என் கனவு எத்தகையது, நான் போகும் பாதை எப்படிப்பட்டது, அங்கே வரக்கூடிய போராட்டங்கள், நான் எதிர்கொள்ளப்போகும் சவால்கள், அதனால் பின்னாளில் நடக்கப்போகும் விஷயங்கள் என ஒவ்வொன்றாக எடுத்துச்சொன்னேன். ஒரு குழந்தையைப் போல அமைதியாகக் கேட்டவர்,

”கஷ்டப்படுறதுல தப்பில்ல… நல்லாக் கஷ்டப்படு. நம்மளமாரி தூக்கிவிடவும், வழிகாட்டவும் ஆளில்லாதவங்களுக்கு கஷ்டம்தான தொண. கஷ்டப்படு பாத்துப்போம்” என என்னைவிட நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் சொன்னார்.

அந்த வார்த்தைதான்… இன்றைய என் கனவை நோக்கியப் போராட்ட வாழ்வுக்கு பெரும் நம்பிக்கையாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது.

இது இன்று மட்டுமல்ல… இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இருக்கும்.

ஏனெனில், இது ஐயாவின் வார்த்தை; வேர்வையின் வார்த்தை; உழைப்பின் உன்னத வார்த்தை.

அன்பும் நன்றியும் ஐயா.  

[இன்னும்]

*

ஐயா (எ) 95 வயது குழந்தை!

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=