ஐயா (எ) 95 வயது குழந்தை! – 2

ஐயா (எ) 95 வயது குழந்தை – 1

ஐயா கடந்த வாரம் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது என்னிடம் வந்து, ”எப்பா… நான் ஒன்னு சொல்லனும். நான் செத்ததுக்கப்பறம் ஐஸ் பொட்டியிலலாம் என்ன வக்காதீங்க. அப்பறம் வண்டியில வச்சிலாம் தூக்கிட்டுப் போவாமப் பாடக்கட்டி நாலுபேர் தூக்கிட்டுப்போய் அடக்கம் பண்ணனும். இத மட்டும் மறக்காம எனக்கு செய்ங்க போதும்…” என்றார்.

”இப்ப எதுக்குய்யா அதப் பத்திலாம் பேசிட்டு” என்றேன் கோபமாக.

”என்னிக்கா இருந்தாலும் நடக்கதானப்போவுது” என்றார் சிரித்தபடி.

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

”94 வயசாவுது. இந்த வாழ்க்கயில எத்தனப் பொறப்பயும் எறப்பயும் கண்ணாலப் பாத்திருப்பன். ஆனா, நான் செத்துப்போறதப் பாக்கமுடியாது. அதான் இந்த வாழ்க்கயோட விசித்திரம்ல. இப்பவே சொல்லிட்டன். இதுக்கப்பறம் எந்தக் கவலயும் இல்லாம நெறவா போய் சேரவேண்டியதான்” என்றார்.

கண் கலங்கிவிட்டேன். என்ன சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக எழுந்து வயல்வெளிப் பக்கம் சென்றுவிட்டேன்.

இறப்பை எதிர்கொள்ள எவ்வளவு பெரும் துணிச்சல் வேண்டும்? அதிலும் வாவென எதிர்நோக்கி காத்திருக்க எவ்வளவு மன தைரியம் வேண்டும்?

எல்லோரும் இறப்பைக் கண்டு அஞ்சுவோராகவும், அதனிடமிருந்து எப்படியேனும் தப்பிக்கவுமே எண்ணுகையில் இவரைப் போல் வெகு சிலருக்குத்தான் இறப்பை காதலிபோல் நினைக்கத் தோன்றுகிறது. அதற்காக யாதொரு பயமும் தப்பிப்புமின்றி புன்னகையுடன் காத்திருக்கத் தோன்றுகிறது. ஆம்! இவர் சாதாரணர் அல்லர்.

‘ஏன் இவர் மட்டும் இப்படி இருக்கிறார்’ என அடிக்கடி வியப்பதுண்டு. அதிலும் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வு ஒன்று வியப்பின் உச்சம் என்பேன்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமாக இருக்குமென நினைக்கிறேன். நிலத்தில் உள்ள மாமர நிழலில் அவரும் நானும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டிருந்தோம். திடீரென பேச்சு வாக்கில்.. ”ஆமா… எப்பக் கல்யாணம் பண்ணிக்கப்போற?” என்றார்.

நானும் உடனே, ”அடுத்த வருசம்” என்றேன்.

‘ம்…’மென தலையாட்டியவர் அமைதியானார்.

சிறிது நேர மவுனத்திற்குப் பின், ”நீங்க நெனக்கிறமாரி என் கல்யாணம் நடக்காது” என்றேன்.

என்ன என்பதுபோல் பார்த்தவரிடம் ”பத்திரிக்க அடிச்சி, ஊரக் கூட்டி, மேளம் தாளம் தாலி சடங்கு சம்பரதாயம் லொட்டு லொசுக்குன்னு எதுவும் இருக்காது. நான் நல்லாருக்கனும் நெனக்கிற நாலுபேரு, அவங்க நல்லாருக்கனும் நெனக்கிற நாலுபேரக் கூட்டிட்டுப்போயி சிம்பிளா ரிஜிஸ்ட்டர் கல்யாணம் பண்ணிப்பன். சாப்பாட்டுக்கு கஷ்டப்படுற நூறு பேருக்கோ, இருநூறு பேருக்கோ ஒருவேள நல்லா சாப்பாடு போடுவன். இதான் என்னப் பொறுத்தவரக்கும் கல்யாணம்…” என்றேன்.

சட்டென எதையோ யோசித்தவாறு, ”ஆமாம்… நீ சொல்றதான் சரி. கல்யாணத்துக்கு வர்றவங்களாம் வாழ்த்தவா வர்றாங்க. நல்லாருக்கனும் நெனைக்கிற நாலுபேரு போதும்ல. சரிதான்…” என நான் சற்றும் எதிர்பாராத ஆச்சர்ய பதிலை உதிர்த்தவர் சிறிது நேரம் கழித்து,

”ஆமா… கல்யாணத்துக்கு என்னயக் கூப்புடுவியா?” என்றார் சிரித்தவாறு.

நான் சற்றும் எதிர்பாராதக் கேள்வியது. இருந்தும் உடனே, ”கூப்புடுவனான்னுத் தெரில (உடல்நிலையைக் கருத்தில் கொண்டு)… ஆனா, கண்டிப்பா சொல்லிட்டுத்தான் பண்ணுவன்” என்றேன்.

”ம்… பாத்து சீக்கிரம் பண்ணிக்கோ” என்றார்.

‘என்னடா இந்த மனுசன்… கோயில் கொளம் சடங்கு சம்பிரதாயம் சாதி மதம்னு இருந்தவறு இப்படி முற்போக்கா நான் சொன்னத சரின்னு ஏத்துக்கிட்டாரே’ என வியந்துபோனேன்.

சாதிக்காக பிள்ளைகளை வெட்டிக் கொல்லும் பெற்றோர்கள் மத்தியில், முற்போக்கு பெரியாரிசம் என வாயில் வடசுட்டுத் திரியும் பொய்யர்கள் மத்தியில் இவரைப்போன்ற எளிய முற்போக்கர்களும் நற்தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘யான் என்ன தவம் செய்தேனோ இவரைப்போன்ற தந்தையை, தந்தையுரு நண்பரை, தந்தையுரு ஆசானைப் பெற’ என பல தடவை யோசித்திருக்கிறேன்.

ம்… இதை எழுதும் (டைப்பும்) இப்போது கூட.

இப்படிப்பட்டவரின் 94 ஆவது பிறந்தநாளுக்கு ஆச்சர்யப் பரிசு வழங்க நினைத்து விமானத்தில் அழைத்துச் சென்றதை, (ஒரு)சிலர் ஆடம்பர வீண் செலவென்றும், பிழைக்கத்தெரியாதவனென்றும் தூற்றியதாகக் கேள்வியுற்றேன்.

அதேசமயம் எக்கச்சக்கமானோர் (தெரிந்தவர்கள், தெரியாதோர்கள்) நான் செய்த சேவகத்திற்கு, புதுமைப் பரிசுக்கு வாழ்த்து மழையில் நனைத்தார்கள். இங்கே குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயம். என்னைப் பார்த்து எனக்குத் தெரிந்த இருவர் தங்கள் வயதானப் பெற்றோரை விமானத்தில் அழைத்துச்சென்றது.

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் இதைவிட எனக்கென்னப் பேரு வேண்டும் சந்தோசம் வேண்டும்.

மகிழ்ந்திருப்போம். முடிந்தவரை பிறரையும் மகிழ்ந்திருக்கச்செய்வோம்.

வாழ்க்கை மிகமிகச் சிறிது. அது ஒவ்வொருநாளும் ரசித்து வாழ்வோர்க்கோ மிகமிகப் பெரிது. ஆம்! நான் ரசித்து ரசித்து வாழ்பவன். தேடித் தேடி… சிறுகச் சிறுக… அன்பின் வழியில்!!

[இன்னும்]

*

ஐயா (எ) 95 வயது குழந்தை!

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=