ஐயா (எ) 95 வயது குழந்தை! – 8

ஐயாவைப் பற்றி எப்போதும் பாசிட்டிவ்வாகவே பேசுகிறேன் (எழுதுகிறேன்) என பலர் நினைக்கலாம்.
ஆம்! அவரைப் பற்றிப் பேச பாசிட்டிவ்வான விஷயங்கள் அதிகமாக இருப்பதே அதற்கான காரணமாக இருக்கலாம்.
ஆனால் இன்று… ஐயாவைப் பற்றிய நெகட்டிவ்வான விஷயத்தைப் பேசலாம் (எழுதலாம்) என்றிருக்கிறேன்.
ஐயா, பெரும் குடிகாரர். குடிகாரர் எனில் ஏதோ பீர், பிராந்தி, விஸ்கி எனக் குடிப்பவரல்ல; சாராயம், கள்ளென தினந்தோறும் குடிப்பவர்.
‘தினந்தோறுமா?’ – ஆம். இதெல்லாம் கடந்த 22 அல்லது 23 ஆண்டுகளுக்கு முன்பு.
ஐயாவுக்கு இரு வகையான நண்பர்கள் இருந்தார்கள். ஒரு வகையினர் மிக ஆக்கப்பூர்வமான விஷயங்களில் தங்கள் வாழ்வை மகிழ்வோடு கழிப்பவர்கள். இன்னொரு வகையினர், என்னதான் ஓடியாடி ஓய்வின்றி உழைத்தாலும், அதற்கு சரிசமமாகக் குடித்து வீண் வம்புச் சண்டைகளில் ஈடுபட்டு காலத்தை வெறுமனே கழிப்பவர்கள்.
ஐயா… நாளின் முக்கால்வாசியை முதல் வகையினரோடும், குடும்பத்தோடும் கழித்தாலும், மீதமுள்ள கால்வாசியை இரண்டாம் வகையினரோடு சேர்ந்துகொண்டு குடித்துவிட்டு ஏதாவது பிரச்சனையில் ஈடுபடுவது, அம்மாவைப் போட்டு அடிப்பது போன்றவற்றை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் எங்கள் வீட்டில் அடிக்கடி அம்மாவுக்கும், ஐயாவுக்கும் சண்டை நடக்கும்.
எனக்கது புரியாத வயதாக இருந்தாலும், ஓரளவு புரியத்தொடங்கி ஐயாவின் மேல் பெரும் கோபமாக வரும்.
என்னதான் ஒரு மனிதன் வேர்வை சிந்தி ஓடாகத் தேயத்தேய உழைத்தாலும், குடிப்பழக்கம் உள்ளவரெனில் அந்த உழைப்பின் பலன் வந்த வேகத்தில் சென்றுவிடும் என்பது உலகநியதி. அதுதான் ஐயா விஷயத்திலும் நடந்தது.
அவர் சாராயம் குடிப்பதற்காக தினந்தோறும் மாலை தன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பக்கத்து ஊருக்கோ அல்லது அருகில் உள்ள மலைகளுக்கோ (அங்குதான் சாராயம் விற்பார்கள்) செல்வார். அப்போதெல்லாம் அவர் செல்வதை பலநாட்கள் தூரத்திலிருந்து பார்த்துவிட்டு ஓடிவந்து அம்மாவிடம் சொல்வேன்.
அவருக்கது பழகிப்போன விஷயம் என்பதால், எதுவும் சொல்லாது ‘நீ போய் வெளையாடு’ எனச் சொல்லி என்னை அனுப்பிவிட்டு எப்போதும்போல் வீட்டுவேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்.
நானும் அத்தோடு அதை மறந்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்தோ அல்லது வீட்டின் பக்கத்தில் உள்ள இடங்களில் தனியாக வீடுகட்டிக்கொண்டோ, கோயில் கட்டிக்கொண்டோ விளையாடிக்கொண்டிருப்பேன்.
சரியாக விளக்கு வைத்த சிறிது நேரத்தில் (கிராமத்தில் கையெழுத்து மறையும் நேரம் என்பார்கள் மாலை நேரத்தை; எங்கள் வீட்டில் அப்போது ஒத்த சர்வீஸ்தான் என்பதால் ஒரேயொரு குண்டு பல்ப் மட்டுமே இருக்கும்) ஐயா குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். வந்ததும் அம்மாவிடமும், எங்களிடமும் எதுவும் பேசாது அமைதியாக உட்கார்வார். அம்மாவும் எதுவும் சொல்லாது தன் வேலைகளை செய்துகொண்டிருப்பார்.
சட்டென எங்கே தொடங்கி எங்கே முடியுமெனத் தெரியாது. அம்மாவுக்கும், ஐயாவுக்கும் சண்டை நடக்கும். நான் ஒரு பக்கம் அழுதுகொண்டு அம்மாவைப் பிடிக்க, அண்ணன்கள் அம்மாவையும், ஐயாவையும் பிரித்து சண்டையை முடித்துவைப்பார்கள்.
பின் இரவு முடிய ஐயா வழக்கம்போல் விடியற்காலையில் எழுந்து நீசத்தண்ணி (இரவு மீதமாகும் சோற்றில் ஊற்றி வைத்த தண்ணீர்) குடித்துவிட்டு, விவசாய வேலைகள் பார்க்கக் கிளம்பிவிடுவார்.
அப்போதெல்லாம் இதுதான் தினந்தோறும் எங்கள் வீட்டில் நடக்கும் வாடிக்கையான விஷயமாக இருக்கும்.
இதனால், ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் என்ன செய்வதெனத் தெரியாது கோபமாக வரும்.
ஐயா பார்க்க என்னைப் போலவே ஒல்லியாக இருப்பார் (இல்லை இல்லை… இதை, அவரைப் போலவே நான் ஒல்லியாக இருக்கிறேன் எனச் சொல்லவேண்டும்… ஹாஹா). ஆனால், மனுஷன் பெரும் உழைப்பாளி. வெறும் உழைப்பாளி என்பதைவிட திறமையான உழைப்பாளி எனச் சொல்லலாம்.
எந்தவொரு விஷயத்தையும் அவ்வளவு நேர்த்தியாக, முழுமையாக, அர்ப்பணிப்போடு செய்வார். அதனால் ஐயாவை எல்லோருக்கும் பிடிக்கும்; பிடிக்காதவர்களுக்கும் பிடித்துவிடும்.
அப்படிப்பட்ட ஐயாவிடம் இந்தக் குடிப்பழக்கம் மட்டும் இல்லாதிருந்தால் எப்படி இருக்குமென பலதடவை நான் யோசித்திருக்கிறேன்.
ஒருநாள் வழக்கம்போல ஐயா தன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பக்கத்து ஊருக்கு குடிக்கப் போய்க்கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் தெரியாமல் நானும் பின்னாலேயே போக, ஊரின் மேற்குப்புறத்தில் உள்ள ஏரி, மலைகளைத் தாண்டி பக்கத்து ஊரை அடைந்தவர்கள் சரியாக ஒரு வீட்டின் அருகில் சென்று அவ்வீட்டின் திண்ணையில் வட்டமாக உட்கார்ந்தார்கள்.
உள்ளிருந்து வந்த பெண் ஒருவர் ஏதோ அவர்களிடம் பேசிவிட்டு உள்ளே சென்றவர், சிறிது நேரத்தில் ஆளுக்கொரு டம்ளரென சாராயம் எடுத்துவந்து வைத்தார். (இதையெல்லாம் மறைந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன்.)
அப்போதங்கே சரியாக நான் போய் நிற்க, என்னை சற்றும் எதிர்பார்க்காதவர்கள் அதிர்ந்துபோனார்கள்.
சட்டென ஐயாவின் நண்பரொருவர், ”ஏய்… இங்கென்னடா பண்ற?” எனக் கோபத்தோடும் அதட்டலோடும் கேட்க, பதிலுக்கு நான் பயத்தோடும் ஒருவித துணிச்சலோடும் (ஐயா அங்கே இருப்பதால்) அவர்களைப் பார்க்காது ஐயாவைப் பார்த்து,
”சாயாரம் குடிக்காதய்யா… வாய்யா…” என்றேன். (அப்போதெனக்கு சாராயம் என சரியாகச் சொல்லக்கூடத் தெரியாது)
கிட்டத்தட்ட அழுகை வந்துவிட்டது. அழத் தொடங்கிவிட்டேன்.
”ஏய்… வீட்டுக்குப்போடா” என மீண்டும் ஐயாவின் நண்பர்கள் அதட்ட, ஐயா எதுவும் பேசாதிருந்தார்.
”வரப்போறயா, இல்லயாய்யா…” என அழுதுகொண்டே ஐயாவின் கையைப் பிடித்து இழுக்க, ஐயாவின் நண்பர் அருகில் இருந்த கோல் (குச்சி) ஒன்றை எடுத்து என்னை அடிப்பதற்காக ஓங்க, அதுவரை எதுவும் பேசாதிருந்த ஐயா…
”ஹே இர்றா…’” என சொல்லிவிட்டு எழுந்து வந்து, வேட்டியை ஒதுக்கி டவுசர் பாக்கெட்டிலிருந்த ஒரு ரூபாய் நோட்டை (அப்போதெல்லாம் ஒரு ரூபாய் நோட்டாகவும் இருந்தது) எடுத்துக் கொடுத்து,
”வீட்டுக்குப் போ… நான் வர்றன்…” எனச் சொல்ல,
”இல்ல போ மாட்டன்… நீயும் வா…” என அடம்பிடித்து இன்னும் கத்தி அழ,
”ஒழுங்கா நான் சொல்றதக் கேளு… வீட்டுக்குப் போ…” என்றார் மீண்டும்.
”அவன்கிட்ட என்ன மாமா பேசிட்டு. நாலு கொடுத்தாப் போப் போறான்…” என ஐயாவின் நண்பர் சொல்ல,
”ஒழுங்கா வீட்டுக்குப் போ… நான் வந்துட்றன் சரியா…” என்று சொல்லிவிட்டு, என் கையில் அந்த ஒரு ரூபாய் நோட்டை திணித்துவிட்டுப் போனவர், அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
நான் அழுதபடி மீண்டும் அவர்கள் அருகில் போக, ஐயாவின் நண்பர், ”ஹேய்… நீ இன்னும் போலயா… ஒன்ன என்னப் பண்றன் பாரு…” என எழ,
சட்டென நான், ”இத நீ குடிச்சன்னா… நானும் குடிப்பன்…” என ஐயாவின் முன்னிருந்த சாராய டம்ளரை கையில் எடுத்துக் குடிக்கப் போக, அதுவரை பொறுமையாக இருந்த ஐயா, ‘டப்பென’ டம்ளரை தட்டிவிட்டு, என் கையைப் பிடித்து வேகவேகமாக அங்கிருந்து கூட்டிக்கொண்டு (இழுத்துக்கொண்டு) எங்கள் ஊரை நோக்கி நடக்கத்தொடங்கினார்.
கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் எதுவும் பேசாது வந்தவர் சட்டென ஓரிடத்தில் நின்று,
”இனிமே நான் குடிக்கமாட்டன்… இது என் புள்ளமேல சத்தியம்…” என என் தலைமீது அடித்து கண் கலங்கியவாறு சத்தியம் செய்தார்.
அன்று குடியை விட்டவர் அதன்பிறகு ஒருநாளும் குடியின் பக்கம் செல்லவில்லை. அத்தோடு தன் குடிகார நண்பர்களையும் ஒருவாறு ஒதுக்கிவிட்டதோடு, புதியதொரு மனிதராகவே மாறிவிட்டார்.
இதனால் எங்களை விட அதிகமாக மகிழ்ந்தவர் எங்கள் அம்மாவாகத்தான் இருக்குமென பின்பொரு நாள் இதையெல்லாம் யோசித்துப்பார்க்கையில் உணர்ந்தேன்.
ஐயா… அதன்பிறகு அடிக்கடி பலரிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ”குடிக்கிறது தப்பில்ல… அது நம்மள மீறிப் போச்சுன்னாதான் தப்பு” என்று.
ஐயாவை அதற்குமுன்பே பிடிக்கும். அவர் இப்படி குடியை விட்டதன் பிறகு இன்னும் இன்னும் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்தது. அதிலும் அவர் குடியை விட நான்தான் காரணமென நினைப்பின் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இப்படிப்பட்ட ஐயா… கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு பொங்கல் தினத்தில் நான் வீட்டின் மாடியில் உட்கார்ந்து ஏதோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அமைதியாக என்னருகில் வந்து,
”எப்பா… நான் ஒண்ணு சொல்வன், திட்டக்கூடாது” என்றார்.
”சொல்லுய்யா…” என்றேன்.
”எனக்கென்னமோ இன்னிக்கி குடிக்கணும்னு ஆசயா இருக்கு… அண்ணன்கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்துக் கொடுக்குறியா…” என்றார் தயங்கித் தயங்கி, கூச்சத்தோடு, குழந்தையைப் போல.
நான் எதுவும் சொல்லாது, புன்னகைத்தவாறு ”சரிய்யா” என சொல்லிவிட்டு, அண்ணனிடம் போய் வாங்கிவரச் சொன்னேன். அவரும் வாங்கிவந்து தந்தார்.
தனியாக அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு குடித்த ஐயா… யாரிடமும் ஒரு வார்த்தைக்கூட பேசாது அமைதியாகப் போய் தான் உறங்கும் கட்டிலில் படுத்துக்கொண்டார்.
ஐந்தாண்டுகளுக்கு முன் ஜூனியர் விகடனில் மது பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தேன். அதன் தொடக்க வரிகளாக, ‘ ‘ம’கிழ்ச்சியில் தொடங்கி ‘து’ன்பத்தில் முடிவதால்தான் மதுவுக்கு ‘மது’ என பெயர் வைத்தார்களோ?’ என்று எழுதியிருப்பேன்.
மது எத்தகையது; அதனிடம் நாம் எப்படி ஒதுங்கியிருக்கவேண்டும்; உறவாடவேண்டும் என மது பற்றி ‘தன் வாழ்வின் மூலமாக’ எனக்குப் பாடமாக சொல்லித்தந்த ஐயா, கடைசியாக என்னிடம் கேட்டு வாங்கிவரச் சொன்ன மதுவில் விஷத்தை விட என் அன்பும், புரிதலும்தான் மிகுதியாக இருந்திருக்குமென நிச்சயம் ஐயாவுக்குத் தெரிந்திருக்கும்.
‘குடிக்கிறது தப்பில்ல… அது நம்மள மீறிப் போச்சுன்னாதான் தப்பு…’ – இது ஐயா சொன்னது.
இப்போதிதை மதுவில் ஊறி சீரழிந்துபோய்க் கிடக்கும் இச்சமூகத்தைப் பார்த்து கத்தி சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது.
‘குடிக்கிறது தப்பில்ல… அது நம்மள மீறிப் போச்சுன்னாதான் தப்பு…’
[இன்னும்]
*