ஐயா (எ) 95 வயது குழந்தை! – 7

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 1

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 2

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 3

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 4

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 5

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 6

ஐயாவைப் பற்றி இதுவரை சொல்லாத ஆச்சர்யத் தகவலொன்றை இப்போது சொல்லப்போகிறேன்.

ஐயா – நன்றாகப் பாடுவார். அதைவிட நன்றாக ஆடுவார்.

”என்னது ஐயா பாடுவாரா? ஆடுவாரா?” எனக் கேட்பின், ஆம்.

பாட்டென்றால் ஏதோ சினிமாப் பாடல் பாடுவதல்ல… ஆட்டமென்றால் சினிமாவில் வருவது போன்ற ஆட்டம் கிடையாது.

‘முந்திப் பிறந்தவனே –

முக்கண்ணன் தன்மகனே…

கந்தனுக்கு முன்பிறந்த –

கணபதியே முன்னிடவா…’

– இப்படிப் பாடுவார்.

இதை அவர் தன் முன்னோர்களிடம் இருந்துக் கற்றுக்கொண்டாலும், இதையும் தாண்டி அந்தந்த நேரத்தில் நிகழும் சூழலுக்கு ஏற்ப உடனுக்குடன் வார்த்தைகளைக் கோத்து அழகாகப் பாடுவார்.

அது வெறுமனே பாடலாக மட்டுமல்லாது, எதிராளிக்குத் தக்க பதிலாகவும் கேள்வியாகவும் அமைய… ஆட்டமும் பாட்டமும் இன்னும் இன்னும் களைகட்டும்.

ஊரில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ”ஒங்க அப்பன் வேசங்கட்டி ஆடுனா, அதப்பாக்க சுத்துப்பட்டுல இருக்க மொத்த சனமும் குடும்பத்தோட வந்துடுவாங்க. என்னமா ஆடுவாருத் தெரிமா… அவர் கொரலுக்கும் ஆட்டத்துக்கும் அப்பவே சினிமா பக்கம் போயிருந்தாருன்னா சிவாஜி எம்.ஜி.ஆருலாம் தோத்திருப்பாங்க…” என்பார்கள்.

நான் மிகச் சிறு வயதாக இருக்கும்போது தெருக்கூத்தில் ஐயா வேசம்கட்டி ஆடிப் பார்த்ததாக நினைவு. அப்போதெல்லாம் ஊரில் வருடந்தோறும் தவறாது தெருக்கூத்து நடக்குமாம். அந்த சமயத்தில் தெருக்கூத்து நடத்துபவர் (அவர்தான் எல்லோருக்கும் சொல்லித்தருவார். அவரை வாத்தியார் என அழைப்பார்கள்) இறந்துவிட… அவருக்குப் பின் அதை எடுத்து நடத்த ஆளில்லாது நின்றுபோக, அதன்பிறகு ஐயா வேசம்கட்டி ஆடுவதையே நிறுத்திவிட்டார்.

ஐயாவின் ஆட்டத்தைப் பார்த்த பக்கத்து ஊர்க்காரர்கள் உட்பட பலரும் தங்களுடன் சேர்ந்து ஆட்டமாட ஐயாவை அழைத்தும் அவர் ஏனோ அவர்களுடன் சென்று ஆட மறுத்ததோடு… அதன் பின் தெருக்கூத்தில் வேசம்கட்டி ஆடுவதையே முற்றிலும் நிறுத்திவிட்டார்.

இருந்தாலும் வருடந்தோறும் சித்திரை மாதம் எங்கள் ஊரில் நடக்கும் ‘மன்மதன் தகனம் திருவிழா’வில் ஐயா தவறாது ஆண் வேசம் கட்டுவார். அதனால் ஆடலும் பாடலுமென சித்திரா பவுர்ணமி இரவு முழுக்க ஊரே களைகட்டும்.

அன்று இரவு சரியாக பதினொரு மணிக்கு மன்மதன் உடலைச் சுமந்து கோயிலில் புறப்படும் தேர் (பாடை), அதிகாலை ஐந்து மணிக்கு மன்மதன் உடலை எரிக்கும் இடத்திற்கு வரும்வரை கொஞ்சம் கூட சோர்வோ, குறைவோ இல்லாது ஐயா அவ்வளவு அழகாக ஆடுவார், பாடுவார்.

ஒவ்வொரு பாடலையும் அவர் பாடி முடிக்கையில் பறையில் ஒலிக்கும் ‘டண்டாங் கட்டிங் டண்டாங் கட்டிங்’ இசைக்கு, அவர் ஆடும் ஆட்டமும், கையிலிருக்கும் வில்லும், அவர் காலில் கட்டிய சலங்கையில் இருந்து எழும் ஒலியும் பார்ப்போரை, கேட்போரை மெய்சிலிர்க்கவைக்கும்.

இதை வருடந்தோறும் பார்ப்பதற்காகவே ‘எப்போ சித்தர மாசம் வருமென’ காத்திருந்த காலமெல்லாம் உண்டு.

அதன்பிறகு வயது முதிர்வு காரணமாகவும், இளையோருக்கு சொல்லிக்கொடுத்தும், வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்கவும் நினைத்து ஐயா வேசம் கட்டி ஆடுவதை நிறுத்திக்கொண்டார்.

என் உட்பட பலருக்கு அதில் வருத்தம் இருந்தாலும், இன்றுவரைக்கும் அவர் பாடலோடுதான் வருடந்தோறும் ஊரில் திருவிழா தொடங்குகிறது என்பது சற்று ஆறுதலான விஷயம்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை விடிய விடிய காற்றில் இடைவிடாது கலந்துவந்த அவர் குரலும், வார்த்தைகளும், சலங்கை ஒலியும் இப்போது நினைத்தாலும் அப்படியே காதில் கேட்கிறது; கண்முன் நிற்கிறது.

சென்ற வருடம் தீபாவளிக்கு ஊருக்குச் சென்றிருந்தபோது ஐயாவிடம் வழக்கம்போல் வயல்வெளி அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் பாடல் குறித்த பேச்சு வந்தது. உடனே ஐயாவிடம்,

”எழுதப் படிக்கத் தெரியாம எப்டிய்யா இவ்ளோ பாட்டுப் பாடுறீங்க..?” என்றேன்.

”அதுவா… அது, எனக்கு முன்னாடிப் பாடுனவங்களப் பாத்துக் (கேட்டுக்) கத்துக்கிட்டதுதான்” என்றவர், சிறிது இடைவெளி விட்டு,

”அதுக்கப்புறம் நானே புதுசா மனசுல படறதலாம் பாட ஆரம்பிச்சன். ஒரு கட்டத்துல கத்துக்கிட்டத விட நானா பாடுன பாட்டு அதிகமாயிடிச்சு…” எனச் சொல்லி குழந்தைபோல சிரித்தார்.

உடனே நானும், எங்கள் ஊர் வார்த்தைகளில் (வட்டார வழக்கில்) மழையை நம்பி ஏமாந்த விவசாயியின் குரலாக எழுதிய,

//காலங் கடந்துடிச்சு –

பொட்டு மழப் பெய்யலயே…

சொனக் கூடக் காஞ்சிடிச்சு –

சொட்டுத் தண்ணி விழ்ழலயே…

கொலசாமிப் பொங்க வச்சும் –

கால்வயிறு ரொம்பலயே…

பஞ்சம் மட்டும் கூடுதம்மா –

பசிப் பொட்டும் தீரலயே…//

எனப் பாடிக்காட்ட… அமைதியாகக் கேட்டவர் லேசாகத் தலையாட்டியபடி,

”நல்லாருக்கே… இப்டிலாம் கூட பாட்டு எழுதுவியா நீ? நம்ம ஊரு வார்த்த… நம்ம மண்ணு வாசம்ல…” எனச் சொல்லி உளமார மகிழ்ந்ததை அவர் கண் கலங்கியதைப் பார்த்து அறிந்தபோது, ஒரே சமயத்தில் நான்கைந்து தேசிய விருது வாங்கியதுபோல் சிலிர்த்துப்போனேன்.

சிறிதுநேர மவுனத்திற்குப் பின் ஐயாவிடம், ”ஏதாது ரெண்டுப் பாட்டு பாடுய்யா… நான் ரெக்காட் பண்ணி வச்சிக்கிறன்” என்றதும்,

”பாட்டா… ஹாஹா (ஐயாவின் சிரிப்பே தனியழகு)… என்ன பாட்டுப் பாடுறது? முன்னமாரி இப்போலாம் பாட்டு நெனவுல இல்ல” என்றவரை பாட வைக்க,

‘முந்திப் பிறந்தவனே –

முக்கண்ணன் தன்மகனே…’ எனப் பாடி எடுத்துக்கொடுக்க…

சட்டெனப் பிடித்துக்கொண்டவர், தொடர்ந்து இருபது நிமிடத்துக்கும் மேல் விடாமல் வரிசையாகப் பாடினார்.

அதை அமைதியாகக் கேட்டபடி, அவர் பாடுவதைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவன்… என்ன சொல்வதெனத் தெரியாது தவித்தேன். புரிந்துகொண்டவர் சட்டென என்னிடம்,

”சரி… நீ எப்டி பாட்டுலாம் எழுதக் கத்துக்கிட்ட…?” என்றார்.

இது நான் சற்றும் எதிர்பாராதக் கேள்வி. இப்படி பல தடவை ஐயா என்னிடம் இதுபோன்ற எதிர்பாராக் கேள்விகளை சட்டெனக் கேட்டிருக்கிறார்.

உடனே ஐயாவிடம் ”நானா… அது, ஒங்கக்கிட்ட இருந்துதான்” என்றதும்,

”என்னது… எங்கிட்டயிருந்தா…?’’ என்றார் அதிர்ச்சியோடும், ஆச்சர்யத்தோடும்.

”ஆமாய்யா… சின்ன வயசுல இருந்து ஒங்கக்கூட அதிகமா இருந்திருக்கன். நீங்க பாடுறதக் கேட்டிருக்கன், பாத்திருக்கன், இதுபோதாதா” என்றேன்.

நான் சொன்னதையே கண் சிமிட்டாதுப் பார்த்தவருக்கு (கேட்டவருக்கு) எப்படியும் உள்ளுக்குள் லட்சம் சிறகுகள் முளைத்திருக்கும். இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாது, சில நொடிகள் அமைதியாக இருந்தவர்…

”எங்க ஐயா… நானு… இப்போ நீ…” என்றதும், உளமார மகிழ்ந்துபோய்…

‘ம்’ என தலையாட்டினேன்.

பின் அங்கிருந்து புறப்பட்டு சென்னை வரும்வரைக்கும் அவர் பாடிய பாடல்கள் மெல்ல மெல்லமாய் மனத்தில் கேட்டுக்கொண்டிருந்தது.

அறைக்கு வந்ததும் அவர் பாடிய பாடலொன்றின் வரிகளை எழுதிப் பார்த்து வியந்துபோனேன்.

அதில் நல்ல சந்தம் இருந்தது, எதுகை இருந்தது, மோனை இருந்தது. அத்தோடு பாடலுக்குத் தேவையான அனைத்து இலக்கணங்களும், அர்த்தச் செறிவும் நேர்த்தியாக இருந்தது.

பள்ளிக்கூடம் பக்கம் கூடப் போகாதவர்; தன் பெயரைத் தவிர வேறெதுவும் எழுதப்படிக்கத் தெரியாதவருக்குள் இப்படியோர் திறமையும், புலமையும் என நினைத்து வியந்துபோனேன்.

அதோடு… இப்படியோர் ஆசானை, குருவை கடவுள் (எனக்கு இயற்கை) எனக்கு கேட்காது தந்தது நினைத்து பெருமையுற்றேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாய் உணர்ந்தேன்.

உடனே அவரை நினைத்து சில மாதங்களுக்கு முன் நான் எழுதியப் பாடலை எடுத்து,

// என்னாத்தா துடிதுடிக்க –

ஒத்தாளா தவிதவிச்ச…

ஏதேதோ பேர் சொல்ல –

அழகுப்பேர் நீ வச்ச…

என் வயித்த நிரப்பத்தான் –

உடல்தேய ஒழச்சியே…

என்னாச நடக்கத்தான் –

தூக்கத்தத் தொலச்சியே…

*

நான் உண்ண ரசிச்சு –

வெறுந்தண்ணிக் குடிப்பியே…

கை புடிச்சுக் கூட்டிப்போய் –

காடுமேடுப் படிப்பியே…

கால் வலிக்க நின்னாக்கா – 

தோள் கொடுத்து சுமப்பியே…

என் சாமி ஒசரமுன்னு –

ஊருக்கெல்லாம் சொல்வியே…

*

காடைக்கும் குருவிக்கும் –

வித்தியாசங் காட்டி நீ…

காலத்துக்கும் ஏருழுது –

எறும்புக்கும் உணவிட்ட…

இடியிடிச்சு மழபெஞ்சா –

ஒழுகல்ல ஏனம்வச்சு…

ராமுழுக்க முழிச்சிருந்து –

என் தூக்கம் வளப்பியே…

*

நீச்சலும் கத்துத்தந்த –

உசுரெல்லாம் வித்துத்தந்த…

நான் படிச்சுப் பட்டம்வாங்க –

மார்தட்டிப் பெருமப்பட்ட…

என்ன நான் படிச்சன் –

சொல்லவும் தெரியாதே…

தாம்பேரத்தவிர வேற –

சொல்லெழுதத் தெரியாதே…

*

கோபுரத்து ஒசரமய்யா –

ஒம்பாசம் ஒசத்தியய்யா…

ஊரெல்லாம் கும்பிட –

ராசாவா வாழுமய்யா…

இன்னும் பல ஆண்டு நீ –

சொகமாக வாழவேணும்…

இங்கிலீசு மருந்தெல்லாம் –

ஒனக்கண்டு நோகவேணும்…

*

எங்கையப் புடிச்சு நீ –

கத்துத்தந்த அகரம்போல்…

எம்புள்ளக் கை புடிச்சு –

சொல்லித்தர வேணுமய்யா…

நானெழுதும் சொல்லெல்லாம் –

நாலுபேரப் பேசவைக்கும்…

அதக்கேட்டுப் பெருமப்பட்டு – 

துளி கண்ணீர் சிந்தவேணும்…

*

எனப்பெத்த ராசா நீ –

நிகரில்லா ரோசா…

ஓய்வேது ஒனக்கு –

வயநோக்கிக் கெளம்பு… //

ஐயா 96 பாடலின் ஒலி / ஒளி வடிவம்

எனக்குள் மெல்லமாய்ப் பாடிப் பார்த்தேன்.

அது நிச்சயம் இருநூறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள வயல்வெளியில் இந்த 94 வயதிலும் ஓய்வறியாது விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கும் ஐயாவுக்கு கேட்டிருக்கும்.

நிச்சயம் அதை ரசித்திருப்பார். உடன் அன்போடு என்னை தட்டிக்கொடுத்திருப்பார்.

ஐயா, நான் உங்களின் துளி. நீங்கள் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்கிறேன். நான் செல்லவேண்டிய தூரம் மிக மிக நீண்டது, நெடியது. கூடிய விரைவில் உங்கள் ஆசியோடும், அன்போடும் அதனைத் தொடுவேன்.

லவ் யூ ஐயா.

[இன்னும்]

*

ஐயா () 95 வயது குழந்தை!

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=