ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை

‘மக்கட்பேறு’ அதிகாரத்துக் குறள், ‘அறிவறிந்த மக்கட்பேறு அல்லாது பெறும் அவற்றுள் யாம் அறிந்து வேறு இல்லை’ என்கிறது. ‘எழு பிறப்பும் தீயவை தீண்டாது, பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெற்றால்’ என்கிறது. ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது’ என்கிறது.
வடிவரசின் இந்தச் சிறிய நூலை வாசித்து முடித்ததும், அந்தத் திருக்குறள் தீர்மானத்தையே எம் மனம் முன்மொழிந்தது. ஆம்! என் நோற்றான் கொல் எனும் சொல்லும், ஈன்ற பொழுதின் பெரிது உவத்தலும், அவையத்து முந்தி இருப்பச் செயலும்.
தந்தையை ‘பெரிசு’ என்றும், ‘கிழம்’ என்றும், ‘Old Man’ என்றும், ‘புட்டா’ என்றும் துச்சமாகவும் எள்ளலாகவும் பேசும் மகன்கள் உண்டு. ‘எனக்குண்ணு வந்து வாய்ச்சிருக்கு பாரு, உசிரை எடுக்கதுக்குண்ணே!’ என்று சலித்துக் கொள்ளும் தந்தையரும் வாழும் காலத்தில் தான் வடிவரசு என்ற மகனையும், அவரை ஈன்று புறந்தந்த தாயையும், சான்றோனாக்கிய தந்தை சாமிக்கண்ணு கவுண்டரையும் சந்திக்கிறோம், இச் சிறு நூல் வாயிலாக.
தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், அவரையும் அம்மையையும் சென்னையில் இருந்து கோவைக்கு – அவர்களின் வாழ்நாளில் முதன் முறையாக – விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும் இந்நூல். மிகுந்த பெருமிதத்துடன் எழுதப் பெற்றுள்ளது அந்த சம்பவம். அந்தப் பெருமிதத்துக்கு வடிவரசுக்குத் தகுதியுண்டு.
இந்த இடத்தில், சொந்த விடயம் ஒன்று பேசலாம் என்று தோன்றுகிறது. என் அப்பா கணபதியா பிள்ளை உயிருடன் இருந்தால், இப்போது அவருக்கு 98 வயது ஆகியிருக்கும். மூதாய் கி.ரா.வுக்கும் சற்று மூத்தவர். சாமிக்கண்ணு கவுண்டருக்கும் மூன்று வயது மூத்தவர். பம்பாய்க்கு வேலை தேடிப் போயிருந்த நான், மூத்த மகனாக இருந்தும், அவருக்குக் கொள்ளி வைக்கக் கொடுத்து வைத்திருக்கவில்லை நான். அவர் இறந்த போது அவருக்கு வயது ஐம்பத்து ஐந்து. ஏழு மக்களைப் பெற்றிருந்த அவர், வட்டச் சம்மணம் போட்டு அமர்ந்து, நல்ல சோறு தின்ன வாய்ப்பற்றுப் போனார்.
2017-ம் ஆண்டு இறுதியில், என் மகனுக்கு ஸ்ரீகாகுளத்தில் பெண்பார்த்து, திருமணம் ஏற்பாடாயிற்று. சபரிமலை கூட்ட நெரிசல் காரணமாக, குறுகிய கால அவகாசத்தில், மணப்பெண் ஊருக்குப் போக, எங்களுக்கு எந்த ரயிலிலும் முன்பதிவு கிடைக்கவில்லை. யாவற்றுக்கும் துணிந்து, கோவை – சென்னை – விசாகப்பட்டினம் மார்க்கமாக விமானத்தில் போக இருப்பத்தைந்து பேருக்குப் பயணச் சீட்டு வாங்கினேன். என் தகுதிக்கு மீறிய செயல் என்றாலும், சூழலின் நெருக்கடி. பயணித்தவர்களில் சிலர், வாழ்வில் முதல் முறை விமானம் ஏறியவர். அவர்கள் முகத்தில் தெரிந்த ஆர்வம் எனக்குப் பொருளாயிற்று.
வடிவரசின் இந்த நூலை வாசிக்கும்போது, எனக்கது நினைவில் ஆடியது. பெற்றோரை முதியோர் காப்பகங்களில் அடைத்துப்பூட்டும் காலத்தில், பெற்றோர் மரணம் அறிந்து வெளிநாட்டில் இருந்து பயணம் துவங்கும் போதே – முதல் நாள் மின் தகனம் – அன்றே பால் – மறு நாள் கருமாதி – அன்றிரவே திரும்புகால் பயணம் – என்று திட்டமிடும் காலத்தில், வடிவரசின் தகப்பனார் பற்றிய பரிவு, கனிவு, பாசம் அனைத்திலும் நம் தொல் மரபுகளின் தடம் தெரிகிறது.
பெரியதோர் குடும்பத்தின் பொறுப்பான தந்தையாக, பகோபகாரியாக, மரபு வைத்தியம் அறிந்தவராக, அனைத்து மூலிகைச் செடிகளையும் தெரிந்து வைத்திருப்பவராக, மத – இன நல்லிணக்கம் பேணுகிறவராக இருக்கும் தகப்பனைத் தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப் படுத்துகிறார்.
வடிவரசின் சொற்களைப் பயன் படுத்தினால் – ‘’முற்போக்குப் பெரியாரிசம் என வாயில் வட சுட்டுத் திரியும் பொய்யர்கள் மத்தியில், இவரைப் போன்ற எளிய முற்போக்கர்களும் நற்தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்’’.
திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில், தென் பெண்ணை ஆற்றின் தென்புறத்துக் கிராமமான திருவடத்தனூர், வடிவரசால் தமிழிலக்கிய வரைபடத்தில், இந்நூல் காரணமாகக் குறிக்கப் பெறுகிறது.

சமகால இளைய இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கும் வாய்த்திராத செடி, கொடி, மரங்கள் பற்றிய அறிவு இவருக்கு வாய்த்திருக்கிறது. எனக்குத் தெரிந்து கண்மணி குணசேகரனும், என்.ஸ்ரீராமும் இரண்டு விதிவிலக்குகள். வடிவரசு, தானறியும் தாவரங்கள் பற்றிய புகைப்படங்களையும் தகவல்களையும் தொகுக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
பல தமிழ்ச் சொற்கள், இச் சிறு நூல் மூலம் அறிமுகம் ஆகின்றன. கண்மணி குணசேகரனின் ‘நடு நாட்டுச் சொல்லகராதி’யில் தேடினால் கிடைக்கக் கூடிய சொற்கள். எடுத்துக்காட்டுக்கு ‘தளவு’ என்றொரு சொல். அது பற்றிய விளக்கம். எமக்கது புதிய செய்தி.
எண்ணற்ற மருத்துவக் குறிப்புக்கள். அவற்றில் ஒன்று எருக்கஞ் செடியின் பால். எருக்கலங் குச்சி, எருக்கலம் பால் எனில் நமக்கு கருக்கலைப்பு மட்டுமே நினைவுக்கு வரும். நான் இதுவரை கேள்விப்பட்டிராத, பார்த்தும் கூட இராத, ‘காட்டு வள்ளிக் கிழங்கு’ அகழ்ந்தெடுத்தல் பற்றி, வாய்த்த சந்தர்ப்பத்தில் பேசுகிறார்.
தனது தந்தையாரை முகாந்திரமாகக் கொண்டு எழுதப் பெற்ற மிக ஆத்மார்த்தமான பதிவு இந்நூல். இன்னும் சற்று விரிவாக எழுதி இருக்கலாமே எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது.
குறுந்தொகை கூறும், ‘செய்வினை முடித்த செம்மல் உள்ளம்’, ஐயா நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன். நடு நாட்டு வாழ்க்கையையும் மானுட உன்னதங்களையும் இயற்கைத் தகவல்களையும் மேலும் பல படைப்புக்கள் மூலம் தமிழுக்குத் தரவேண்டும் என்று வடிவரசையும் வாழ்த்தலாம் நாம்.
கவிஞர்கள் அறிவுமதி, பழநிபாரதி, நா.முத்துக்குமார் போல, தமிழ்த் திரைப்படத்துக்கு தரமான பாடல்களைத் தர வடிவரசை வாழ்த்துவோம் நாம்.
– நாஞ்சில் நாடன்,
(15/07/2019)
*