”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

சில ஆண்டுகள் முன் உறவுகளின் புரிதலின்றி மன அவசம் தந்த பெரும் வலியோடு மயிலாப்பூர் பூங்காவில் அமர்ந்திருந்தபோது என் நலன் விரும்பும் நண்பன் சையது மகிழ்வோடு உடனே வா என்று மூணு மணி நேர ப்ரயாணம் ஒன்றிற்கு அழைத்தான். அவனுக்கு என்னை சற்று அதிகம் தெரியும். நைந்த மனசு பதிலின்றி பின் தொடர்ந்தது. 

எனக்குப் ப்ரியமான பண்டங்கள், பிடித்த அசைவ உணவு வகைகள், தண்ணீர் போத்தல், கை துடைக்கும் காகிதம், பண்டங்களை பிரிக்க தேவையான உபகரணங்கள், பாத்திரங்கள் எல்லாம் இருந்தன. அயல் நாட்டு மது போத்தலும். தேவையெனதான்பட்டது. இதை எல்லாம் எனக்கும் அவனுக்கும் பரிமாற அவனது இன்னொரு நண்பனும் கூடவே. 

எல்லாம் சிறிது சிறிதாய் துவங்கி, பேச்சோடு உண்ணவும் குடிக்கவும் துவங்க பயணம் மெல்ல விமானம் போல் மாறிய நேரம் கண்கள் சற்றே மெல்ல திறந்து மூடும் போதை ஆட்கொள்ளும் நேரத்தில் பாடல்களை ஒலிக்கவிட்டான் சையது. அதுவரை கேட்டிராத புதுவகைப் பாடல்கள். எனக்காக எங்கோ தேடிப்பிடித்து அந்தப் பாடல்களை பென் டிரைவில் பதிவு செய்து எடுத்து வந்திருந்தான். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களின் நாட்டுப் புறக்கலைஞர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. அவை தந்த அந்த அனாதி ஏகாந்தமும் சொடுக்கி போல் பாய்ந்து மனசை செருகி இழுக்கும் வெவ்வேறு வகைக் குரல்களும் அதுவரைக் கேட்டிராததாக இருந்தது. சுத்த துல்லியமில்லாமல் ராவான வாத்தியக்கருவிகளின் இசையும் கலங்க வைக்கும் உணர்வு நிறைந்த அதன் களங்களும் அந்தப் பயணத்தை எனக்கு வேறொன்றாய் ஆக்கியது. 

அந்த உணர்வைத்தான் அந்த மனநிலையைத்தான் அந்த காலச்சூழலைத்தான் வடிவரசு – ஷ்ரவண் உருவாக்கிய பாடல் தொகுப்பை கேட்கையில் நான் மறுபடி உணர்ந்தேன். அப்படி விதவிதமான பாடல்கள் இசை அமைப்பு, மொழியின் ருசியுணர்த்தும் வரிகள். இந்தப் பாடல்கள் சில கைக்குழந்தையாய் என் விரல்களை விட மறுக்கிறது. வரிகளால், மெட்டால், குரலால், ஒலிப்பதிவால், புதுமையால் அல்லது இவை சிலவற்றின் கலவையால் இந்தப் பாடல்களை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

மழை வான் மறப்ப : https://youtu.be/WTJmCZ3gi2Q

ஓடிடும் கால்களே : https://youtu.be/SM8kAqAJ1-8

ஓட ஓட : https://youtu.be/AEPiELmwSF8

கானகா : https://youtu.be/9h8mzh42mX8

குறுந்தொகை கண்ணால : https://youtu.be/HB9t467uAbI

ஆகாசம் நீல நெறம் : https://youtu.be/hDESpLA0XRs

மஞ்சள் மேகமே : https://youtu.be/eVr7f_czu5M

உயிரும் உயிரும் : https://youtu.be/svPTND4gtP4

காதல் கிறுக்கிய : https://youtu.be/aodQM5yL96I

அவளும் நானும் : https://youtu.be/fxgyUPTcuVI

ஒரு வகையில் 20 திரைப்படங்களுக்கான ரெடிமேட் பாடல்களாகவும் இவைகளைக் கொள்ளலாம். நவீன படங்களின் பிராய்லர் தேவைக்கான மோஸ்தரில் இவை இருந்தாலும் சில பாடல்களில் கேட்ட ராகங்கள் ஆர்கானிக் ரகம். ‘ரீதிகெவுளை’, ‘மோகனம்’, ‘கல்யாணி’ போன்று அண்மையில் கேட்க முடியாத ராகங்களில் அமைந்த சில பாடல்கள் இருக்கின்றன. சிரமப்பட்டு நான் கேட்டு கேட்டு விசாரித்து தெரிந்துகொண்ட ஹிந்துஸ்தானியின் ‘பட்டியார்’ ராகப்பாடலும் இதில் இருக்கிறது. சுத்த ராக பாவமாய் சில. கலப்புகள் பல. சினிமா பாடல்கள் பாணியான இவ்வகைப்பாடல்களில் இந்த சதவிகிதமே எதேர்ஷ்ட்டம் தான். இவை தவிர இண்டீன் பாப், இண்டீ, நாட்டார் பாடல் போன்ற தமிழில் அதிகம் கேட்க முடியாததும் பாடல்கள் சிலவும் இந்த தொகுப்பில் இருக்கின்றன.

ஒரு பாட்டு உருவாக ஐந்து, ஆறு நாட்கள் ஆகும் இன்றைய சூழலில் இவ்வளவு சடுதியில் உருவான இந்தப் பாடல்கள் தொகுப்பில் கீழ்க்காணும் சில அபூர்வ அர்த்தபூர்வ ஆச்சர்யங்களும் உண்டு 

1. வார்த்தைகள் இல்லாமல் ஸ்வரங்கள் மட்டுமே சகரிக சகரிக சுரமாகவும் மெட்டாகவும் ஒரு பாடலில் அமைந்துள்ளது.

2. இசையமைப்பாளரே மெட்டமைத்ததோடு நில்லாமல் இசைக்கோர்வைகளின் ஒருங்கிணைப்பாளராக, பாடகராக, ஓவியக்கலைஞராகவென சில முகங்களை காத்திரமாக காட்டுகிறார்.

3. ஸ்லோ மெலடி கிளாசிக்கில் அமைந்த ‘நோக்கும் நோக்கும்’ செமி கிளாசிக்கில் அமைந்த ‘குளம்பி காதல்’ போன்ற பாடல்கள்.

4. ‘கானகா’ என்ற பாடலில் எப்படிப் பாடினாலும் ஒரே வார்த்தை திரும்ப திரும்ப வரும் சரிகப பகரிஸ என்று மெட்டு ஏற்படுத்தும் மெல்வியப்பு.

5. ‘குறுந்தொகை கண்ணால’ பாடலில் தமிழ் இலக்கியங்களின் பெயர்கள் இடம் பெற எடுத்த வித்யாசமான முயற்சி போல பாடல்களில் விதம் விதமாக வடிவரசு கையாண்ட சில தமிழ் அருஞ்சொற்கள் மொழிக்கான கொடை என்றே சொல்லவேண்டும்.

6. முக்கியமாக தோய்ந்து உள்வாங்கி பாடிய பாடகர்கள் மீனாட்சி தேவராஜன், ரம்யா மேனன் போன்றோரின் உழைப்பு அவர்களின் குரல் வழி ஆளுமையின் ஊடே தீட்டும் வண்ணங்கள்.

இப்படி இன்னம் நீளும் பட்டியல். இருக்கட்டும். பாடல்களால் கவரப்படாத மனித ஜீவன் பெரும்பாலும் உலகில் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் அந்தப் பாடல்கள் உருவாக அது சார்ந்த கலைஞர்கள் படும் பாடு சொல்லில் அடங்குவதில்லை. பல நேரம் அவை சந்தோஷம்தான் எனினும் சில நேரம் அந்த அவஸ்தைகள் தூக்கத்தையும் துளைத்து களைக்க வைக்கும் அனுகூல சத்ருக்கள். சவால்களும் நெருக்கடிகளுமே கண்டுபிடிப்புகளின் தாய் என்பது போல ஜனவரி 2014இல் இசையமைப்பாளர் ஷ்ரவன் மற்றும் பாடலாசிரியர் வடிவரசு ஆகியோரின் தோழி விதார்த்தி நூறு நாள் நுறுபாடல்கள் முடியுமா உங்களால் என்று ஒரு சவாலை பேசாமலே அவர்கள் முன் வைக்கிறாள். நம்பிக்கையில்லைதான் ஆனாலும் அவர்கள் மனசில் சாதுர்யமாய் அதை விதைத்து அவள் வளரவிட்டுவிட்டாள். அது முளைத்து கனி தந்தது 2020இல். ஆறு ஆண்டுகள் துளிர்விட்டு, படர்ந்து, முளைத்து, அடர்ந்து, அரும்புவிட்டு கனிந்து விளைந்தவை இந்த நூறு நாள்கள் நூறு பாடல்கள். 2020 டிசம்பர் 31இல் நிறைவுற்ற இந்தப் பாடல் முயற்சியில் இவர்கள் எண்ணற்ற அனுபவங்களை பெற்றிருக்கிறார்கள்.

இப்படி ஆண்டுக்கணக்கில் இவ்வளவு விஷயங்கள் நடக்கின்றன. அவ்வளவும் ஆதார ரூபமாய் இணையவெளியில் கொட்டிக்கிடக்கின்றன. வீட்டுக்குத் தூரம் நின்றுபோன ஒரு கிழட்டு பாடலாசிரியர் இதை அப்படியே ஹய்ஜாக் செய்து – இது, இன்று இப்போது உலகத்தில் யாருக்கும் தோணாத என் மனசில் சுயமாய் உதித்து நான் செய்யப்போகும் முதல் முயற்சி என்று கூச்சமில்லாமல் பொதுவெளியில் வாணவேடிக்கை பட்டாசுகளோடு காலங்கடந்தும் தான் நம்பும் வித்தாரமான அலங்கார மொழியில் அறிவிக்கிறார். தெரியாமல்தான் சொல்லித்தொலைக்கிறாரோ என்று அறிவுருத்தப்பட்ட பின்னும் அதிகார போதையில் பணமிருக்கும் மமதையால் செல்வாக்கு செருக்கில் சொன்னதையே மீண்டும் சாதிக்கிறார். அதைவிட பெருங்கொடுமை இதை சாதித்த இந்த இளைஞர்கள் பயத்தில் தாங்கள் முதலில் சாதித்ததையும் சொல்ல தயங்கி தடியூன்றியவர் சொன்னதையே ஆமாங்கய்யா ஆமாங்கய்யா என்று ஆமோதிக்கும் நிலை.

பஞ்சுகிட்டங்கியின் ஏதோ ஒரு மூலையில் பயந்து கிடக்கிறது அறத்தின் கங்கு.

கண்ணாடி கூண்டுக்குள் விஷ ஜந்துக்களுடன் வாழ்வதோ, நூறு இட்லி சாப்பிடுவது போன்றோ நாள்கணக்கில் நில்லாமல் சைக்கிள் ஓட்டுவது போன்றோ அதிர்ச்சி விருப்பங்களுக்காக செய்யப்பட்டதல்ல இந்த முயற்சிகள். கலைக்காகவும் அறத்தோடு அதில் எழ வேண்டிய வெறும் எளிய வயிற்றுப் பிழைப்புக்காவும் வெற்றி தோல்விபற்றிய கவலையற்று குதூகலமாய் செய்யப்பட்ட ஓர் எளிய சிறு சாதனை. அதிலும் மண் அள்ளிப் போட்டால் என்னாகும்.

‘எழுத்து’ கால கவிஞன் ஷண்முக சுப்பையாவின் ‘திருட்டு’ என்ற கவிதை இப்போது ஏனோ ஞாபகம் வருகிறது.

தள்ளாத வயதிலும் இன்னும் எல்லாவற்றிலும் நான் நான் என்று நடுங்கும் கைகள் மறைத்து கூசும் வெளிச்சத்தில் கூசாமல் நிற்கும் சுய ஸ்தன மர்த்தனர்கள் வாழும் காலத்தில் இந்த குற்றாலீஸ்வரர்கள் சாதனைகள் நிகழ்த்தியுள்ளதையும் வரலாறு மறைக்காமல் துலாக்கோல் ஆதாரங்களோடு குறித்துதான் வைத்திருக்கிறது. 

(12. 2. 2021 வெள்ளி காலை 9 : 04 வீடு)

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=