அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 22 : ஐயா முதல் ஐயா வரை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 21 : மணவினா
அன்புள்ள ஐயாவுக்கு,
இன்று தங்களின் 96-வது பிறந்தநாள். என் வாழ்வின் மிக முக்கிய தினங்களில் ஒன்றிது. ஆம்! ஐயா.
இதுவரை தங்கள் பிறந்தநாளில் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து உங்களைப் பார்த்து வாழ்த்து சொல்லி, உங்கள் ஆசிபெற்று, என்னால் முடிந்த ஏதாவதோர் எளிய பரிசு தருவதை வாடிக்கையாக வைத்திருந்தேன்.
அவ்வகையில் உங்கள் 94-வது பிறந்த நாளுக்கு, உங்களையும் அம்மாவையும் சற்றும் எதிர்பாரா வண்ணம் விமானத்தில் கூட்டிப் போனேன். 95-வது பிறந்தநாளுக்கு, உங்களைப் பற்றியே ஒரு நூல் எழுதி உங்கள் கையில் பரிசாகக் கொடுத்தேன். இதோ, இன்று உங்களின் 96-வது பிறந்தநாள்.
சிறுவயது முதல் எனக்காக எவ்வளவோ செய்த உங்களுக்கு, இந்த பிறந்த தினத்தில் பரிசாக உங்களைப் பற்றி எழுதிய ‘ஐயா 96’ எனும் தனிப்பாடலை இவ்வுலகம் காணும் வண்ணம் வெளியிட்டிருக்கிறேன் ஐயா.
அதுவும் பழம்பெருமை வாய்ந்த ‘கோடைப் பண்பலை’யில் முதல் தடவையாகவும், அதைத் தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு உங்களின் இப்பிறந்ததினத்தை முன்னிட்டுத் தொடங்கிய ‘வரிவியம்’ (variviyam) என்னும் எனது புதிய யூடியூப் சேனலிலும் ஐயா.
கடந்த பத்தாண்டுகளில் தங்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் எடுத்த ஒளிப்படங்களையும், ஒளிப்பதிவையும் கொண்டு இப்பாடலுக்கான காட்சியை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறேன்.
இதில்,
‘கோபுரத்து ஒசரமய்யா –
ஒம்பாசம் ஒசத்தியய்யா..
ஊரெல்லாம் கும்பிட –
ராசாவா வாழுமய்யா..
இன்னும் பல ஆண்டு நீ –
சொகமாக வாழவேணும்..
இங்கிலீசு மருந்தெல்லாம் –
ஒனக்கண்டு நோகவேணும்..’
எனும் வரிகள் மட்டும் அடங்கிய பாடலின் முன்னோட்டத்தை… இரு தினங்களுக்கு முன் வெளியிட்டதைப் பார்த்த பலரும் நெகிழ்ந்துபோய் மனதார தங்கள் அன்பினை பகிர்ந்தார்கள் ஐயா.
வாழ்க்கை எத்தனை மகிழ்வானது என்பதை… சிறுவயது முதல் யாதொரு எதிர்பார்ப்புமற்று பிள்ளைகளுக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர்களுக்கு வளர்ந்த பிள்ளைகள் திருப்பிச் செய்யும் சின்னச் சின்னக் கைமாறுகளில் உள்ளதென ஒவ்வொரு தடவையும் என்னால் உணரமுடிகிறதய்யா.
அவ்வகையில் தங்களின் இப்பிறந்தநாளுக்கு நான் எழுதி வெளியிட்ட இப்பாடலோடு சேர்த்து, 96 பேர் உங்களுக்கு பேரன்போடு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அதில் உங்கள் மகன் நான் உட்பட, தங்களைப் பார்க்க நினைத்த என் நண்பர்கள், எனது நலம் விரும்பிகள், நான் பெரிதும் மதிக்கும் ஆளுமைகள், தங்களைப் பற்றி எழுதிய நூலை வாசித்துவிட்டு உங்களையும் என்னையும் பெரிதும் நேசிக்கும் வாசகர்கள், நூலினை அடுத்த தளத்திற்கு கொண்டுசென்ற நள்ளுள்ளங்கள் என இத்தொண்ணூற்றாறு பேரும் எங்களின் அடிமனத்திலிருந்து சொல்லெடுத்து வாழ்த்து மாலை கோத்து உங்களுக்காக தந்திருக்கிறோம்.
அது மட்டுமல்ல ஐயா… இணையமென்றால் என்ன, முகநூல் என்றால் என்னவென்றே தெரியாத உங்களுக்கு… நேற்று மாலை முதல் முகநூல், வாட்ஸப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என இணையவுலகமெங்கும் பலநூறு பேர் உங்களது ஒளிப்படத்தையும், தங்களைப் பற்றி நான் எழுதிய நூலின் முகப்பையும் பகிர்ந்து உங்களை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மனதார வாழ்த்தி வருகிறார்கள்.
இங்கே மகிழ்வான இன்னோர் எதிர்பாராத விஷயம் யாதெனில்… புகழ்பெற்ற பழம்பெருமை வாய்ந்த ‘கோடை பண்பலை’யின் கலையும் கானமும் நிகழ்ச்சியில், உங்கள் பிறந்த தினத்தில் உங்களைப் பற்றி லட்சக்கணக்கானவர்கள் கேட்க பேசவும், தங்களைப் பற்றி எழுதிய பாடலை முதல் தடவையாக வெளியிடவும் வாய்த்ததுதான் ஐயா.
இதுவரை எத்தனையோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருந்தாலும், இதழ்களிலும் நாளிதழ்களிலும் பேட்டி கொடுத்திருந்தாலும், தங்களின் 96-வது பிறந்த தினத்தில் பங்கேற்றுப் பேசிய இந்நிகழ்வை மனத்துக்கு மிக நெருக்கமானதென்பேன். முதன்மையானதென்பேன். ஆம்! ஐயா.
இதுநாள் வரை தங்களின் பிறந்தநாள் பரிசாக நான் தந்த விமானப் பயணமாக இருக்கட்டும், தங்களைப் பற்றி எழுதிய நூலாக இருக்கட்டும், இன்று வெளியிட்ட பாடல் மற்றும் 96 பேர் வாழ்த்துக் காணொளியாக இருக்கட்டும், யாவும் தங்களுக்குத் தெரியாமல் ஆச்சர்யமூட்டும் வகையில் நிகழ்த்தி சட்டென உங்களை மகிழ்வில் ஆழ்த்தியது.
ஆனால் இனிவரும் உங்கள் பிறந்ததினங்களில் பிறந்தநாள் பரிசாக, நான் உங்களுக்கு தரவுள்ளதை தங்களிடம் சொல்லிவிட்டு செய்யலாம் என்றிருக்கிறேன் ஐயா. ஆம்!
அடுத்தடுத்து வரும் உங்கள் பிறந்தநாளில்… நம் சிறு கிராமத்தில் உங்களின் அன்புக்குரிய பாதம்பட்ட பூமியில், நீங்கள் பேரன்பு கொண்ட மக்களுக்காகவும், அவர்தம் சந்ததிகளுக்காகவும் பயன்படும் வகையில் உங்களது சார்பாக, உங்களின் சேவை மனப்பான்மையின் தொடர்ச்சியாக, ஆயிரம் புத்தகங்களோடு சிறு நூலகம் ஒன்றை உருவாக்க நினைத்திருக்கிறேன் ஐயா.
அதுவும் தங்களின் பெயரில் ‘ஐயா நூலகம்’ அல்லது ‘ஐயா படிப்பகம்’ என்று.
ஒவ்வொரு வருடமும் நம்மூரிலிருந்து நன்றாகப் படித்தும் மேற்கொண்டு படிக்க வசதி வாய்ப்பற்ற, வழிகாட்ட ஆளில்லாத ஒரு மாணவரை தேர்வு செய்து, அவர்களின் மேற்படிப்புக்கு என்னாலான அனைத்து உதவிகளையும் செய்து, அவர்களை நன்னிலைக்கு கொண்டுபோய் சேர்க்கும் நற்செயல் ஒன்றையும் வரும் காலங்களில் செய்யவிருக்கிறேன் ஐயா.
தங்களைப் பற்றி எழுதி கடந்தாண்டு பிறந்தநாள் பரிசாகத் தந்த ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூலை வாசித்த பலரும் தங்கள் தாய் – தந்தையரை கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். தாய் – தந்தையர்களும் தம் பிள்ளைகளை கூடுதலாக நேசிக்கவும், வழிநடத்தவும் தொடங்கியிருக்கிறார்கள். இளையவர்கள் தாம் வாழும் வாழ்வு குறித்தும், வாழப்போகும் வாழ்க்கை குறித்தும் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவ்வகையில் பல சிறப்புகளுக்கும், மேன்மைக்கும் சொந்தமான அந்நூலை நம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் முதல் கட்டமாக கொண்டுசெல்ல திட்டமிட்டிருக்கிறேன் ஐயா.
வாய்ப்பிருப்பின் நண்பர்களின் உதவியோடு அடுத்த கட்டமாக வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள்தோறும் கொண்டுபோய் சேர்க்கவும் முயற்சிப்பேன் ஐயா.
எதிர்வரும் காலங்களில் ஆண்டுதோறும் தங்களின் பிறந்த நாளான இந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியை… உங்கள் வாழ்வையும், சமூகத்துக்காக நீங்கள் ஆற்றிய நற்செயல்களையும் அன்போடு நினைவு கூர்ந்து, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்லும் நன்நோக்கில் ஐயா நூலின் வாசகர்களுடன் இணைந்து ‘உங்கள் தினமாக’ (ஐயா தினமாக) கொண்டாடவும்…
இத்தினத்தில் தங்களைப் போன்று எவ்விதக் கைமாறும் கருதாது, எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு இயற்கையை நேசித்து, சக உயிர்கள்மேல் பேரன்பு கொண்ட, சுயநலம் இல்லாமல் பொதுநலம் விரும்பும் அறுபது வயது கடந்த ஒரு குழந்தையை உங்கள் பெயரில் வணங்கி மரியாதை செலுத்தவும் நினைத்திருக்கிறேன் ஐயா.
இவற்றோடு… வருங்காலத்தில் வீட்டைவிட்டு பிள்ளைகளால் துரத்தப்பட்ட அல்லது அவர்களாகவே வீட்டை விட்டு வெளியேறிய தாய் – தந்தையர் மட்டுமின்றி, சிறுவர்கள் நடுவயதினர் என யாவரும் ஓரிடத்தில், ஒரு குடையின் கீழ் கூடி, ஒற்றைக் குடும்பமாக தாய் – தந்தை – மகன் – மகள் – பேரன் – பேத்திகள் என உறவுகளாக, அன்பொன்றையே பிரதானமாகக் கொண்டு வாழ தங்களின் பெயரில் ‘ஐயா இல்லம்’ என்றொன்றை அமைக்கவும் ஆசைப்படுகிறேன் ஐயா.
திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில், தென்பெண்ணை ஆற்றின் தென் கரையோர சிறு கிராமமொன்றில் இருந்துகொண்டு, உலகின் கடைகோடி உயிர்கள் வரைக்கும் நேசித்த உங்களின் ஆத்மார்த்தமான பேரன்புக்கு… உங்கள் மகனாக, உங்களிடம் எத்தனையோவற்றை கற்றுக்கொண்ட மாணவனாக, உங்களோடு காடு – மேடு- ஏரி – ஆறு – மலை – குட்டை என எங்கும் சுற்றித் திரிந்த சக நண்பனாக செய்யும் அன்பின் எளிய கைமாறு மட்டுமே இவையெல்லாம் ஐயா.
இன்னும் இன்னும் இதுபோல் எவ்வளவோ வருங்காலத்தில் செய்யவும் நினைத்திருக்கிறேன் ஐயா.
இதுவரை என்னிடம் குறைந்தது நூறு பேராவது என் எழுத்தின் மூலமாக தங்களை அறிந்துகொண்டு, பெரிதும் நேசிக்க ஆரம்பித்து, உங்களை தங்களது ஐயாவாக நினைத்து சந்தித்து ஆசிபெறக் கேட்டவர்கள் இருப்பார்கள் ஐயா.
காலமும் சூழலும் அனுமதித்தால் தங்களின் நூறாவது பிறந்த நாளுக்கு அல்லது அதற்கு முந்தைய 99-வது பிறந்தநாளுக்கு… அவர்களில் நூறூ பேரை நம் சிறு கிராமத்திற்கு கூட்டி வந்து, உங்கள் முன்நிறுத்தி வாழ்த்துச் சொல்லி, உங்கள் பாதம் பணிந்து வணங்குவேன் ஐயா. ஆம்!
தங்களின் இத்தொண்ணூற்றாறாவது பிறந்த நாளில் இதோ இப்போது, யோசித்துப் பார்க்கிறேன் ஐயா…
‘எப்பயும் எதச் செய்றதுக்கு முன்னாடியும் ஒரு தடவைக்கு பத்து தடவை யோசி… எது சரின்னு படுதோ அதச் செய்’
‘என்னிக்கும் நாம பொறந்த இந்த ஊர்க்கும், நம்மள சுத்தி இர்க்க மக்களுக்கும் நம்மளால முடிஞ்ச எதனா செஞ்சினே இர்க்கணும். அப்பதான் நாம நல்ல வாழ்க்க வாழறம்னு அர்த்தம்..’
‘நம்ம மனசுக்குப் பட்ற சின்னச் சின்ன விசயத்தயும் ரசிச்சி செஞ்சம்னா, நாம நெனச்சிப்பாக்காத எத்தனயோ விசயங்கள அது நமக்கு கேக்காமலயே தரும்..’
‘எதுவும் பண்ணாம சும்மா ஒக்காந்துனுர்ந்தா ஒடம்பு சோம்பலாவும்… மனசு கண்டதலாம் நெனக்கும். இது ரண்டும் நல்லாக்கீற நம்ம வாழ்க்கய நாசமக்கிடும். அதான் எப்பயும் எதனா பண்ணினே இருக்கன்..’
‘நேரம் கெடக்கிறப்பலாம் ஒன் வாழ்க்கய கொஞ்சம் திரும்பிப் பாரு. நீ வாழ்ந்த வாழ்க்கய மட்டுல்ல… வாழப்போற வாழ்க்கயயும் அது ஒனக்கு சொல்லித்தரும். வாழ்க்க கத்துத்தர்ற பாடத்த படிச்சின்னாதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..’
இப்படி எத்தனை எத்தனை உயர் வார்த்தைகளை என்னிடம் சொல்லியிருப்பீர்கள்? எத்தனை எத்தனை மரம், செடி, கொடிகளை எனக்கு அறிமுகப்படுத்தியிருப்பீர்கள்? எத்தனை எத்தனை படிப்பினைகளை இந்நாள் வரை கற்றுத்தந்திருப்பீர்கள்?
அதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் எத்தகைய பெருவாழ்வினை நீங்கள் இதுநாள்வரை வாழ்ந்துள்ளீர்கள் என்பதை மனதார என்னால் உணரமுடிகிறதய்யா.
நேற்றிரவு அமெரிக்காவில் இருக்கும் பத்துவயது தமிழ்ச் சிறுவன் ஒருவன்… நான் உங்களைப் பற்றி எழுதிய நூலினைப் படித்துவிட்டு அவர் தந்தை தங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் இரு மாதங்களுக்கு முன் சொன்னதைக் கேட்டு, உங்களை அவனின் நிஜ ஹீரோவாகவும், சொந்த தாத்தாவாகவும் நினைத்துக் கொண்டு, உங்களின் இப்பிறந்த நாளினை மனத்தில் பதித்து வைத்திருந்து,
‘அப்பா நாளைக்கு சாமிக்கண்ணு தாத்தாவோட 96-வது பிறந்தநாள்தானே? நாம எல்லாரும் சேர்ந்து அவருக்காக ப்ரே பண்லாமா?’ என்று சொல்ல, அச்சிறுவனின் தந்தை அதைக் கேட்டு நெகிழ்ந்துபோய் என்னிடம் பகிர்ந்திருந்தார்.
இதுதான் ஐயா நீங்கள். உங்களின் வாழ்வானது ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் படிப்பினையை தரக்கூடியது. வாழ்வோடு ஒன்றரக் கலந்து அவர்களை கைபிடித்துக் கூட்டிப் போகக் கூடியது. ஆம்! ஐயா.
அதற்கான சிறு காரணமாக நானும், நான் எழுதிய நூலும் இருக்கிறது என நினைக்கையில் பெரும் மகிழ்வாகவும், பெருமையாகவும் உள்ளதய்யா.
வாழ்வில் பணம், பதவி, அந்தஸ்து போன்றவற்றை எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால், நமக்கான மனிதர்களை நல்வாழ்வின் மூலமாக, எளிய அன்பின் மூலமாக, நற்செயலின் மூலமாக மட்டுமே சம்பாதிக்க முடியும்.
அவ்வகையில் இதுவரை நூற்றுக்கணக்கான மனிதர்களை சம்பாதித்த உங்களுக்கு… ஆயிரக்கணக்கான மனிதர்களை உலகம் முழுக்க சம்பாதித்துக் கொடுத்திருக்கிறேன் ஐயா. ஆம்!
இதைவிட ஒரு மகனாக இவ்வுலகில் வேறென்ன ஐயா, என்னால் பெரிதாகச் செய்துவிட முடியும்?!
தங்கள் பாதம் பணிந்து ஆசிபெற்று, என் இதயத்திலிருந்து இதோ உங்களுக்கு ’96-வது முதலழுகை தின வாழ்த்துக்களை’ சொல்கிறேன் ஐயா.
வாழ்க! வாழ்க! ஐயா, நீங்கள்… வளமுடனும், நலமுடனும், இன்றும், என்றும்!
வாழ்த்துகளோடு,
உங்கள் வடிவரசு
(September 1, 2020)
*
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்
அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 18 : பின்னோக்கும் கலை
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 19 : இருமந்திரம்