நூற்றாண்டு மனிதர்!

(ஐயாவின் நூறாவது பிறந்தநாளுக்கு (01-09-2024) எழுதிய கடிதம்.)                            

*

அன்புள்ள ஐயாவுக்கு,   

இன்று தங்களது நூறாவது பிறந்தநாள் என்பதால் அதிகாலை சீக்கிரமே எழுந்து குளித்துக் கிளம்பி, சென்னையிலிருந்து நம் கிராமத்துக்கு வந்து தங்களைக் கண்டு வாழ்த்து கூறி ஆசிபெற்று நீண்டநேரம் உரையாடிவிட்டு இதோ, சரியாக நள்ளிரவு 11:42-க்கு வீட்டுக்கு (சென்னைக்கு) வந்து பத்திரமாக சேர்ந்திருக்கிறேன்.

இந்த நாள் எனது வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாத நாள். இரண்டு காரணங்கள். ஒன்று, நூறாம் பிறந்தநாளில் தங்களை நேரில் கண்டு வாழ்த்து கூறி ஆசி பெற்றது. இரண்டு, தன் வாழ்நாள் முழுக்க மற்ற உயிர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தம்மால் இயன்றதை தந்துகொண்டே; செய்துகொண்டே இருந்த தங்களின் நூறாவது அகவை தினத்தில்… இளைய மகனாக என்னால் தரக்கூடிய மிக உச்சபட்சமான ஒன்றை நாம் வாழும் இச்சமூகத்துக்காகத் தந்தது. ஆமாம், ஐயா.

இன்று காலை வீட்டிலிருந்து கிளம்பி பேருந்து ஏறுவதற்கு முன்பாக மனைவி கோமதிக்கும், மகன் ஐ’க்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன்.

‘காதல் மனைவி (கோ)மதி மற்றும் மகன் க்கு,

இன்றைய தினம் எனது வாழ்நாளில் மிக மிக முக்கியமான நாள். ஐயாவின் நூறாவது பிறந்த தினம். ஆதலால் இந்நன்னாளில் தனது வாழ்நாள் முழுக்க மற்ற உயிர்களுக்காக தன்னால் இயன்றதை எல்லாம் தந்து தந்து வாழ்ந்த; வாழும் அவ்வுன்னத மனிதருக்கு, அவரது இளைய மகனாக எனது முழு உடலையும்; உறுப்புகளையும் தானம் செய்கிறேன்.

நாளை என்றாவது நான் மரணிக்கும் சமயத்தில், எனது உடல் உறுப்புகளில் எந்தெந்த உறுப்புகள் யார் யாருக்கு வேண்டுமோ (அவர்களில் ஏழை பணக்காரன், சாதி மதம் முதலான எந்தப் பாகுபாடும் பார்க்காமல்) எடுத்துக்கொள்ள வழங்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

அதுமட்டுமின்றிஎனது மொத்த உடலையும் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டுக்காக தந்துவிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தங்களது பரிசோதனைகள் போக உடலின் ஏதாவது ஒரு சிறு பகுதியையோ / உடலின் எரிக்கப்பட்ட பிடி சாம்பலையோ தரும் பட்சத்தில், அவற்றைக் கொண்டுபோய் எம் சொந்த ஊரருகில் ஓடும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் / ஆற்றில் புதைக்குமாறு / கரைக்குமாறு பெரும் காதலோடு வேண்டிக்கொள்கிறேன்.

மிக்க அன்புடன்,

வடிவரசு.

(01 – 09 – 2024)’

கூடவே, என் மனத்துக்கு மிக நெருக்கமானவர்களுக்கும் தெரியப்படுத்த எண்ணி இந்தத் தகவலை பகிர்ந்திருந்தேன். பலரும் எனது செயலை மெச்சியதோடு, தங்களை மனத்தார வாழ்த்தி வணங்கவும் செய்தார்கள். ஆமாம், ஐயா.

திருவண்ணாமலைக்குப் பேருந்து ஏறி வரும் வழி நெடுகிலும் சிறுவயது முதலான தங்களது வாழ்வை மனத்துள் அசைபோட்டபடிதான் வந்தேன். அதுவும், என்னை முதன் முதலில் நம்மூர் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் சேர்த்த நாள், அதன் பிறகு அவ்வப்போது பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் என் குறித்து எனக்கே தெரியாமல் கேட்டறிந்தது, விடுமுறை தினங்களில் விறகு வெட்டக் கூட்டிப்போனது, கோயில்களில் பொங்கல் வைக்கையில் அழைத்துச் சென்றது, நான் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் (அதிலும் குறிப்பாக, தாவரங்கள் குறித்தும், பண்பாடு பழக்க வழக்கங்கள் குறித்தும்) மனம் கோணாமல் பதில் சொன்னது, அடுத்தவேளை உணவுக்கு அல்லல்பட்ட போதும் உடைந்துபோகாமல் இருப்பதை எங்களுக்குத் தந்துவிட்டு வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு இரவு படுத்தது… என எத்தனையோவற்றை எண்ணிப் பார்த்துக்கொண்டே வந்தேன்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா, ஐயா? இன்றைய உங்களது நூறாவது பிறந்தநாளுக்கு, நீங்கள் ஒருபோதும் அறிந்திடாத; கண்டிடாத ஒரு நூறு பேராவது உங்களுக்காக பிரார்த்தித்திருப்பார்கள்; மனத்தார வாழ்த்து கூறியிருப்பார்கள். ஆமாம், ஐயா. யாவும் உங்களைப் பற்றி எழுதிய நூலால் நிகழ்ந்தது.

அடிக்கடி என்னிடம் ஒருவித பயத்தோடு அதுவும், அதனை துளியும் சொற்களில் காட்டிக்கொள்ளாமல் கேட்பீர்கள். ”ஏன் சாமி, என்னுமோ எழுதறன்… அதான் வேலன்னு சொல்ற. இதுக்குலாம் பணம் வருமா? அத வச்சிக்கினு நல்லபடியா வாழ முடிமா?’’

ஒவ்வொரு தடவை இதைக் கேட்கும்போதும் தங்களது தவிப்பையும், பயத்தையும் புரிந்துகொண்டவனாய் பதில் உரைப்பேன். ”பெருசா வரலனாலும்… நிம்மதியா வாழற அளவுக்கு வரும்யா. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். தாக்குப்புடிச்சி நின்னுட்டம்னா… பேரோட சேந்து பணமும், புகழும் தானா வரும்.’’

உடனே பயம் களைந்த மலர்ச்சியுடன், ”எல்லாம் அந்த ஆண்டவன் புண்ணியத்துல நல்லபடியா நடக்கும்’’ என்பீர்கள்.

நீங்கள் இருக்கும் நம்மூர் இருக்கிறதே, அது நீங்களும் அம்மாவும் இருப்பதால் மட்டும்தான் இன்னும் சிறிது உயிர்ப்போடு உள்ளதாக உணர்கிறேன் ஐயா. உங்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வருவேனா என்பது சந்தேகம்தான். ஏனெனில், நான் பார்த்த; வாழ்ந்த; மகிழ்ந்து ரசித்த; விளையாடிக் களித்த அவ்வூர் இப்போது துளியும் இல்லாமல் அடியோடு மாறிவிட்டது.

முன்பெல்லாம் வெளியூருக்குப் போனால் எப்போது நம்மூருக்கு வருவோம் என்று இருக்கும். ஆனால், இப்போது நம்மூருக்கு வந்தாலே எப்போது அங்கிருந்து கிளம்புவோம் என்றுதான் தோன்றுகிறது ஐயா. அந்தளவுக்கு ஊரும், மக்கள்தம் மனமும் சீரழிந்து கிடக்கிறது.

நீங்கள் கவனித்திருப்பீர்களா, தெரியாது. நான் எப்போது வந்து உங்களைப் பார்த்தாலும், உங்கள் கால்களை அதிலும் குறிப்பாக, பாதத்தை தவறாமல் காண்பதுண்டு (அதனை ஒளிப்படங்கள்கூட எடுத்து வைத்திருக்கிறேன்). அவ்வாறு காணும்போதெல்லாம், ‘இந்தக் கால்கள் இதுவரை எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடந்திருக்கும், எவ்வளவு அரிய செயல்களைச் செய்திருக்கும், எத்தனை எத்தனை உயிர்களுக்கு ஓடியோடி உதவியிருக்கும்?’ என்று தோன்றும்.

நம் தமிழ் மொழியின் உன்னதங்களில் ஒன்றான திருக்குறள்,

‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை’

என்கிறது (1031). அதாவது, பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகமானது, ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே, எவ்வளவுதான் துன்பம் இருந்தாலும் உழவுத் தொழிலே அனைத்திலும் சிறந்தது என்று சொல்கிறது.

மற்றொரு பொக்கிஷமான சங்க இலக்கியம்,

‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர் தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே…’

என்கிறது (புறம் – 192). அதாவது, இங்கிருக்கும் எல்லா ஊரும் நமக்கு ஊர்தான்; எல்லோரும் நமது சொந்தங்கள்தான். தீமையும் நன்மையும் பிறர் தர வருவதில்லை. நோதலும் அது தீர்தலும் அவற்றையொப்பத் தாமே வருவது. இங்கே சாதலும் புதிது கிடையாது; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது. வாழ்தலை இனிதென்று உவந்ததும் இலம் என்று சொல்கிறது.

இவற்றை ஏன் இங்கே இத்தனை மெனக்கிட்டுச் சொல்கிறேன் என்றால், இதையெல்லாம் நானாகப் படித்துத் தெரிவதற்கு முன்பாகவே, இது பற்றி துளியும் அறியாத நீங்கள் அத்தனை அழகாக; வாழும் நாள் முழுக்க மறக்க முடியாத அளவுக்கு வாழ்நாள் பாடமாகச் சொல்லித் தந்ததுதான் ஐயா.

நன்றாக நினைவுள்ளது. அப்போது எடத்தனூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் திடீரென்று ஆற்றில் அதிகமாக தண்ணீர் வந்துவிட்டது. அதை எப்படியோ கேள்வியுற்று ஏர் ஓட்டிக்கொண்டிருந்த நீங்கள் பாதியில் விட்டுவிட்டு, ஆற்றைக் கடந்து மறுகரைக்கு என்னைக் கூட்டிப்போக வந்துவிட்டீர்கள்.

பள்ளி முடிந்து வந்த என்னையும், உடனிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நண்பன் ஒருவனையும், ”சீக்கிரம் ஓடியாங்க. தண்ணி ஏறிடப்போது’’ என்று கூட்டிக்கொண்டு போய், ஒருவர் பின் ஒருவராக தோள் மீது உட்கார வைத்து, நீரில் இறங்கி நடந்து மறுகரைக்கு பத்திரமாகக் கூட்டிவந்து சேர்த்தீர்கள்.

அதைப் பார்த்த பக்கத்து ஊரைச் சேர்ந்த பாய் ஒருவர், ‘எதுக்கு மாமா… அந்தச் சேரிப் பையன போயி தோளு மேல ஒக்கார வச்சி தூக்கியாந்த?’ என்று கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே நீங்கள் சொன்ன, ‘ஒணுக்கு வேணா அவன் சேரிப் பையனா இருக்கலாம். என் மவன்கூட படிக்கற புள்ள. அவனும் எனுக்கு மவன் மாரிதான்’ என்ற பதில் இப்போதும் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது ஐயா.

இப்போதைய என் வாழ்வுக்கு பல விதங்களில் அடித்தளம் அமைத்தவர் என்றால் அது நீங்கள்தான். அதுவும் எங்கோ ஒரு குட்கிராமத்தில் இருந்துகொண்டு, எவ்வித பேராசையும் கொள்ளாமல், மிகச் சாதாரண ஒரு வாழ்க்கை வாழ்ந்தபடி, சுற்றியுள்ள உயிர்களையெல்லாம் நேசித்து, யாவற்றுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை மறுக்காமல் செய்து வாழ்ந்த; வாழும் உங்களது உன்னத வாழ்வுதான் எப்போதும் எனக்கு பெரும் படிப்பினையாக இருந்து வருகிறது ஐயா.

பலரும் என்னிடம் கேட்பார்கள். ”என்ன வடிவு… வார்த்தைக்கு வார்த்தை ஐயா ஐயான்னு சொல்ற. ஏன், ஐயாவ இந்த சென்னைக்குக் கூட்டி வந்து… கூடவே வச்சிக்கக் கூடாதா?’’

அப்போதெல்லாம் அவர்கள் ஒன்றும் அறியாமல் கேட்கிறார்கள் என்று புன்னகைத்துக்கொண்டு சொல்வேன். ”ஒரு பெரிய ஆலமரம். அதுவும், ஆயிரம் வேர் கொண்ட பிரமாண்ட மரம். அது வேர்விட்டு இருக்க; வாழற தனக்குப் பிடித்த மண்ணை விட்டு… அது தன்னோட கிளைகளில் இடமும், நிழலும், உணவும் தந்து எண்ணற்ற உயிர்கள காபுந்து பண்ற பொறுப்ப விட்டு… நம்மளோட சுயநலத்துக்காக இயற்கைய கூறு போட்டு விக்கற ஓர் எடத்துக்கு… அப்படியே பேத்துட்டு வந்து நட்டு வக்கறது எவ்வளவு பெரிய குற்றமோ, அதுபோலத்தான் ஐயாவ தான் நேசிக்கற மண்ணையும், மக்களையும், செடி கொடி மரங்களையும், ஆடு மாடு கோழிங்களையும் விட்டு கூட்டிட்டு வந்து, குடிக்கற தண்ணியகூட காசு கொடுத்து வாங்கற ஊருல குடி வக்கிறது.’’

அதற்குமேல் ஒருவரும் ஒரு வார்த்தையும் பேச மாட்டார்கள். தங்களை நூறு சதவிகிதம் புரிந்தவன் என்பதால்தான் இப்படியொரு பதிலை சொன்னேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன் ஐயா.

காலையில் ஊர் நோக்கி வந்துகொண்டிருக்கும்போது இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வந்தது ஐயா. சரியாக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெரம்பலூர் – ரோவர் கல்லூரியில் இளங்கலை – கணிப்பொறி அறிவியல் படிக்க வீட்டைவிட்டு முதல் தடவையாகப் பிரிந்து போகும்போது, நம் வீட்டு பூசையறைக்குள் கூட்டிப் போய் கற்பூரம் ஏற்றி கண்கள் மூடி கையெடுத்துக் கும்பிட்டு என் நெற்றியில் சிறிது திருநீறு இட்டுவிட்டுச் சொன்னீர்கள்.

”எய்யா… மொத தடவயா நம்மூர வுட்டு வெளியூருக்குப் போற. போற எடத்துல ஆயிரம் ஏத்தம் எறக்கம் இருக்கும். எப்பயும் மனசுல நம்ம குடும்ப தேவாதிய நெனச்சிக்க. அவ எப்பியும் ஒன் கூடயே இருந்து காபுந்து பண்வா. நம்மூருல மட்டும்தான் இருப்பான்னு நெனக்காத. இந்த ஒலகத்துல எங்க போனாலும்… நம்மக் கூடயே வருவா; இருப்பா. செரியா?’’

அன்றைக்கு சொன்ன இந்த வார்த்தைகள்தான் எப்போதும் என்னுடன் இருந்து வருகிறது. இதைத்தான் நாளை என் மகன் வளர்ந்ததும் சொல்லித் தருவேன். அவன் தன் பிள்ளைகளுக்குச் செல்வான். இப்படியே அது அறுபடாமல் தலைமுறைகள் கடந்து செல்லும். ஆமாம், ஐயா.

இப்படி ஒன்றல்ல. இரண்டல்ல. பல நூறு விஷயங்களை சிறு வயது முதல் சொல்லித் தந்திருக்கிறீர்கள். அதில் எந்த புத்தகமும் சொல்லாத; சொல்லித்தரவே முடியாத எண்ணற்ற படிப்பினைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அவற்றையெல்லாம் இதோ, இந்த நள்ளிரவில் மனத்துள் அசைபோட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இன்றைய தினம் உங்களோடு எவ்வளவோ பேச வேண்டும் என்று எண்ணி வந்தேன். ஆனால், அவற்றில் மிகச் சிலதை மட்டுமே பேச முடிந்தது. இந்த பூமியில் வாழக்கூடிய பலநூறு கோடி பேர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலருக்கு மாத்திரமே தன் தந்தையுடன், அவரது நூறாவது பிறந்தநாளில் இப்படி அருகமர்ந்து உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். அம்மிகச் சிலரில் ஒருவன் என நினைக்கும்போதே உள்ளம் சிலிர்க்கிறது ஐயா.

”போன ஜென்மத்துல செஞ்ச புண்ணியம்தான்… என்ன இந்த வயசு வரைக்கும் நல்லா வச்சி கீது’’ என்றீர்கள்.

இல்லை, ஐயா. நீங்கள் இந்த ஜென்மத்தில் செய்த; செய்யும் புண்ணியம்தான் உங்களை நன்முறையில் வைத்திருக்கிறது.

”இம்மாங்காலம் இருந்து என்ன புண்ணியம். என் புள்ளிங்களுக்கு பெருசா சொத்து பத்து எதுவும் சேத்து வக்கலயே’’ 

யாருக்கு எப்படியோ தெரியாது, ஐயா. எனக்கு நீங்கள்தான், உங்கள் வாழ்வுதான், அதன் மூலமாக இதுநாள் வரை கற்றுத்தந்த படிப்பினைகள்தான் மிகப் பெரிய சொத்து.

வெங்கட்ராமன் மாமாவோ அல்லது வேறு யாரோ கேட்டதாக நினைவு. ”எதுக்கு மாமா, வைத்தியம் பண்றதுக்கு போயி காசு தந்தா வாங்க மாட்ற? சொம்மா ஒண்ணும் வாங்கலயே… செஞ்ச வேலக்கிதான வாங்கற. நீ மட்டும் வைத்தித்துக்கு காசு வாங்கிருந்தா… இந்நேரம் நாலு மெத்த வூடு கட்டிருக்கலாம்.’’

அப்போது நான் ஆறாவது அல்லது ஏழாவது படித்திருப்பேன். பதிலுக்கு சொன்னீர்கள். ”வைத்தியன்றது ஒரு கொடுப்பன. அத அந்த ஆண்டவன் ஒங்க யாருக்கும் கொடுக்காம… எனுக்குக் கொடுத்திருக்கான். அதப் போயி காசுக்கு செஞ்சன்னா… நானு மனுசனே இல்ல. பாவம் மக்கிங்க… தாயா புள்ளயா வளத்த ஆடு மாடுக்கு ஒண்ணுன்னு துடிச்சிப் போயி… என்ன நம்பி ஓடியாறாங்க. அவுங்கக்கிட்ட போயி, ‘இம்மாங் காசு கொடு; அம்மாங் காசு கொடு’ன்னு கேட்டன்னா… என்னவுட கொடுமக்காரன் இருக்க மாட்டான்.’’

எல்லோரும் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் தனித்துத் தெரிந்தீர்கள். அதன் பிறகு சில நாட்கள் கழித்து ஊர் மக்களுக்காக தாங்கள் நிலம் தந்தது பற்றி அறிந்தபோது மிக உயர்ந்த மனிதராய் மிளிர்ந்தீர்கள். ஆமாம், ஐயா.

அப்போது ஒருநாள் நம்மூர் அரசங்கல் மலைக்கு விறகு வெட்டப் போயிருந்தபோது கேட்டது இப்போதும் நினைவில் உள்ளது. ”ஏன்யா, அம்மாம் எடத்தப் போயி… ஊராருக்கு வூடு கட்டிக்க தந்த?’’

சின்னதாய் சிரித்துவிட்டு சொன்னீர்கள். ”ஊரே வெள்ளத்துல அடிச்சிட்டுப் போயிரிச்சி. எல்லாத்தயும் வுட்டுட்டு வந்து மக்க நடுத்தெருவுல நிக்கிறாங்க. அதிகாரிங்க மோட்டுல கீற நம்ம எடத்தத் தரலாம்னு பேசிக்கிறாங்க. என்கிட்டயும் கேக்கறாங்க. மொத முடியாதுன்னுதான் சொன்னன். ஆனா, மக்கப் படற பாட்ட பாத்ததும்… செரி நம்ம மக்கதான, வூடு கட்டதான கேக்கறாங்க. கட்டிக்கிட்டு நல்லபடியா வாழட்டும்னு தந்துட்டு வந்ட்டன்.’’

பிறகு பத்தாவது படிக்கையில், பத்தாண்டுகளுக்கு முன்பு தங்களிடம் கடன் வாங்கிய பக்கத்தூரார் ஒருவரிடம் (அவர் மகள் என் வகுப்பில் படித்தார்) அசலும் வேண்டாம், வட்டியும் வேண்டாம் என்று சொல்லி, எழுதிய பத்திரத்தை திருப்பித் தந்துவிட்டு வந்தது குறித்து கேட்டதற்கு சொன்னீர்கள்.

”பாவம் ரண்டு பொண்ணுங்கள வச்சிக்கிட்டு என்ன பண்வான். இத்தன வருசமா தர முடியாதவன்… இனிமேலா தரப்போறான். அந்தப் பொண்ணுங்க மொகத்தப் பாத்ததும்… வேணாஞ் சொல்ட்டு வந்ட்டன்.’’

இதற்கெல்லாம் எத்தனைப் பெரிய மனது வேண்டும் என்று அப்போது மட்டுமல்ல… இதை எழுதும் இப்போதும் எண்ணிக்கொள்கிறேன் ஐயா.

வீட்டுக்கு வந்து தங்களிடம் வாழ்த்து சொல்லிவிட்டு மகனின் காணொளி ஒன்றைக் காட்டியதும் கையெடுத்துக் கும்பிட்டு, ”என் சாமி… எப்பயும் நல்லா இருக்கணும்’’ என்று கண் கலங்கி அழுததைக் கண்டதும், என் கண்களும் கலங்கிவிட்டது ஐயா.

நீங்கள் சொன்ன இவ்வார்த்தைகளை அவனுக்கு அதுவும், உங்களது நூறாவது பிறந்த நாளில் கூறிய மிக உன்னத; உயர்ந்த வாழ்த்தாக; ஆசியாகவே எடுத்துக்கொண்டேன் ஐயா. அதோடு, உங்கள் பார்வைக்கு அவன் யாராக; என்னவாகத் தெரிந்தான், ஏன் கையெடுத்துக் கும்பிட்டீர்கள்; அழுதீர்கள் என்றும் கேட்க நினைத்துக் கேட்கவில்லை. அதை அடுத்த தடவையோ அல்லது அதற்கு அடுத்த தடவையோ பார்க்கையில் நீங்களாகவே சொல்லிவிடுவீர்கள். அல்லது கனவில் வந்தாவது சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும் ஐயா.

பேச்சின் நடுவில் தங்களுக்கு சில நாட்களாக வரும் கனவுகள் பற்றி கூறினீர்கள். அதுவும் தங்களது ஐயா, அம்மா, அண்ணன்கள், அக்கா யாவரும் வந்ததைச் சொல்லிவிட்டு, கடைசியாக உங்கள் உயிர் நண்பரான முத்துசாமி ஆச்சாரி முன்னிரவு வந்ததை அத்தனை மகிழ்வோடு பகிர்ந்தீர்கள்.

”ராத்திரி கனவுல முத்துசாமி வந்திருந்தான். நானு தோ, இங்கதான் கட்டுல்ல ஒக்காந்துனு இருந்தன். வந்தவன், ‘என்னடா, சாமிக்கண்ணு… நல்லா கீறியா?’ன்னு கேட்டான். நல்லாதான்டா கீறன்னன். நீ எப்பயும் நல்லாதான்டா இருப்ப… ரொம்ப சந்தோசம்டான்னான். நானு என்னடான்னு கேட்டதுக்கு, சொம்மா ஒண்ண பாத்துட்டுப் போலாம்னுதான் வந்தன்… கூட்டுனு போவலாம் வரமாட்டன்ட்டு போயிட்டான்.’’

இதை நீங்கள் சொல்லி முடித்ததும் என் கண்கள் தானாகக் கலங்கி தாரை தாரையாக நீர் கொட்டியதை கவனித்தீர்களா, தெரியாது ஐயா. இதனை அப்போதே சொல்ல வேண்டும் என்று தோன்றியது. சொல்லாமல் வந்துவிட்டேன். உங்கள் நட்பைவிட உயர்ந்த ஒரு நட்பை இந்த பூமியில் எங்குமே கண்டதில்லை; கேட்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை; கேட்கப் போவதில்லை.

அதுவும் இறந்துபோன ஒரு நண்பர், தனது நண்பரின் நூறாவது பிறந்தநாளன்று கனவில் வந்துப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, ‘சொம்மா ஒண்ண பாத்துட்டுப் போலாம்னுதான் வந்தன்… கூட்டுனு போவலாம் வரமாட்டன்’ என்று சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள், இதுவரையான எந்த உயரிய இலக்கியங்களிலும் பதிவு செய்யப்படாதவை. அவசியம் பதிவு செய்யப்பட வேண்டியவை. ஆமாம், ஐயா.

உங்கள் நண்பர்களில் எனக்கு மிகவும் பிடித்தது முத்துசாமி ஐயாதான். அதனால்தான் அவர் எனக்காக செய்துகொடுத்த எழுத்து மேசையை, எங்கே ஊரில் இருந்தால் அதன் மகத்துவம் தெரியாமல் உடைத்துவிடுவார்கள், மற்ற பொருட்களைப் போல தூக்கிப் போட்டுவிடுவார்கள் என பயந்துபோய் என்னோடவே எடுத்துவந்து பத்திரமாக வைத்திருக்கிறேன். இன்று அதை உங்கள் பேரன், தினந்தோறும் தொட்டு விளையாடிக்கொண்டிருக்கிறான். அவன் ஒவ்வொரு தடவை தொடும்போதும் முத்துசாமி ஐயாவுடன் விளையாடுவது போலத் தோன்றும்.

அவரது அன்பும் ஆசியும் எனக்காக அவர் ஆசையோடு செய்துகொடுத்த எழுத்து மேசை வழியாக என் மகனுக்கும் வந்து சேர்வதாக உணர்கிறேன் ஐயா. இரண்டு மூன்று தடவை இதை அவனுக்குச் சொல்லியும் இருக்கிறேன் ஐயா. ஆம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதுவும், தங்களது 98 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி ஆசி பெற வந்திருந்தபோது கேட்டது உங்களுக்கு நன்றாக நினைவிருக்கும் என நம்புகிறேன்.

”ஏன்யா… உங்களுக்கு எத்தனயோ நண்பர்கள் இருந்திருக்காங்க. சாதி, மதம் பாக்காம எல்லாருகூடயும் நட்பு பாராட்டி இருக்கீங்க. ஆனா, இன்னிக்கி அவங்கள்ள ஒருத்தருகூட உயிரோட இல்ல. இத எப்படிப் பாக்கறீங்க; எடுத்துக்கிறீங்க?’’

பெரும் தயக்கத்துக்குப் பிறகுதான் இந்தக் கேள்வியை கேட்டேன். காரணம், இது எத்தனை வலி மிக்கது என்பதை நன்கு அறிவேன். இருந்தாலும் தவிர்க்க முடியாமல் மனது உந்தியதால் கேட்டேன். அதனைப் புரிந்துகொண்டவராய் மிகச் சாதாரணமாக (அப்படித்தான் தங்களது பேச்சை வைத்து புரிந்துகொண்டேன்) பதில் கூறினீர்கள்.

”ஆமாம்… எங்க ஐயாகூட கேப்பாரு. எதுக்குடா, இம்மாம் கூட்டாளி புடிச்சி வச்சிகீறவன்? அதுவும், நம்ம சாதியானுங்க மட்டுல்லாம… துலுக்கன், அம்டன், பறையன்னு எல்லா சாதிலயும் போயி புடிச்சி வச்சிக்கீறவன். அப்பலாம் ஒண்ணும் சொல்லாம… சொம்மா சிரிச்சிட்டுப் போயிடுவன். இப்ப நெனச்சிப் பாத்தா… எல்லாம் வேடிக்கையா கீது. எம்மாம் கூட்டாளின்னு வாயப் பொளந்துக் கேட்டாரு. இன்னிக்கி அந்த எல்லாக் கூட்டாளியோட சாவயும் பாத்துட்டன்.’’

இதைச் சொன்னபோது தங்களது கண்கள் கலங்கினதை கவனித்தேன் ஐயா. அது எனக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, சட்டென்று வேறு பக்கமாகத் திரும்பி மாடு மேய்வதை பார்ப்பது போல துடைத்துக்கொண்டு, முகம் நோக்கிச் சொன்னீர்கள்.

”இந்த பூமிலயே கொடுமையான விசியம் என்ன தெரிமா? கூட்டாளிங்க இல்லாம ஒருத்தன் வாழறதுதான். ஆமாம்… அந்தக் கொடுமய நானு அனுபவிக்கணும்னுதான், அந்த ஆண்டவன் ஆசப்பட்டு விதிச்சிக்கீறான். அதான் அதயும் அனுபவிப்பம்னு தெனம் அனுபவிச்சினு கீறன்.’’

உடனே என்ன சொல்வதென்று தெரியாமல் அப்போது சொன்ன, ”எனக்கு என்னமோ உங்க எல்லா நண்பர்களும்… அதுலயும் குறிப்பா, முத்துசாமி ஆச்சாரி. எப்பயும் உங்கக் கூடதான் இருக்கறதா தோணுதுய்யா’’ என்ற வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொண்டீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால், என் மனத்திலிருந்து சொன்னது என்பதை மட்டும் இப்போது கூற விரும்புகிறேன் ஐயா.

அதேபோல, உங்களைப் பற்றி எழுதிய நூலை வாசித்துவிட்டு பலரும் சொன்னார்கள். ‘உங்க ஐயாவ நெனச்சா… ரொம்ப ஆச்சரியமா இருக்கு’. அப்போதெல்லாம் அவர்களிடம் மனத்தில் இருப்பதை பதிலுக்குச் சொன்னதில்லை. ஆனால், இப்போது அதுவும் இத்தினத்தில் அதை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா.

‘நீங்கள் எப்போதுமே எனக்கு ஆச்சரியம்தான். அதோடு, நான் கண்ட பெரும் உழைப்பாளியும், உன்னத மனிதரும், திறமையாளியும் நீங்கள்தான்.’

சென்றாண்டு பேசுகையில் சொன்னீர்கள். ”என் வாழ்க்கையில நானு பாக்காத விசியமில்ல. எத்தனப் பொறப்பு, எறப்ப பாத்திருப்பன். ஏத்த, எறக்கத்த பாத்திருப்பன். பசி, பஞ்சம், பட்டினி, நோவு அது இதுன்னு இப்ப நெனச்சிப் பாத்தா… எல்லாம் ஆச்சிரிமா கீது. அம்மாத்தரம் பாத்துகீறன். இன்னிக்கி இந்த சுத்துப்பட்டுலயே என் வயிசு ஆளுங்க யாருமே இருக்க மாட்டாங்க. நானு பாத்துப் பொறந்த எத்தினியோ பேரு செத்துப் போயிட்டாங்க. ஆனா, என்ன மட்டும் இன்னும் எதுக்கோ அந்த ஆண்டவன் வுட்டு வச்சிக்கீறான்.’’

இதை நீங்கள் சொல்லி முடித்ததும் கேட்டேன். ”ஏன்யா, இத்தன வருச வாழ்க்கையில… இப்ப உங்களுக்கு இருக்க ஒரே வருத்தம்னா, என்ன சொல்வீங்க? மிகப்பெரிய சந்தோசம்னா, எத சொல்வீங்க?’’

உடனே ஒன்றும் சொல்லாமல் மெல்லிதாய் முறுவலித்துவிட்டு, ”எனுக்குப் போயி என்ன வருத்தம் இருந்துடப்போது?’’ என்றுவிட்டு, சில நொடி யோசனைக்குப் பின் கூறினீர்கள்.

”முன்னமாரி நடக்க முடில. தெனம் காலில ஏன்ச்சதும் நடந்து கொல்லிக்கிப் போயி… மாடுங்களப் பாத்து அதுங்கக்கூட பேசிட்டு, அங்கக் கீற என்னால மாலன வேலங்கள செஞ்சிட்டு… கட்டுல்ல ஒக்காந்து சுத்திலும் கீற பயிருங்களயும், மரம் மட்டைங்களயும் பாத்தாதான் நிம்மிதியா இருக்கும். அதுமாரி இப்ப போவ முடில. வூட்டாண்டயே கீற மாரி ஆச்சி.

அப்பறம் சந்தோசம் பத்திக் கேட்ட. வாழ்க்கயில எல்லாத்தயும் பாத்த எனுக்குப் போயி என்ன பெரிய சந்தோசம் இருந்துடப் போது?’’ மறுபடியும் சிந்தையில் ஆழ்ந்து, ஏதோ நினைவுக்கு வந்தவர் போல தொடர்ந்தீர்கள்.

”பழ்னிக்கி (எனது நான்காவது; கடைசி அண்ணன்) ஒரு கல்யாணம் காச்சி நடந்து பாக்கணும். ஒனுக்கு ஒரு புள்ள பொறந்தா… அத இந்தக் கையால தொட்டுத் துக்கணும். அவ்ளோதான் இனிமேலு எனுக்குக் கீற ஆச; சந்தோசம்லாம்.’’

பின்பு ஒருநாள் மூன்றாவது தடவையாக என்னிடம் மரணம் குறித்து பேசினீர்கள். ”மனுசன் நல்ல நடமாட்டத்தோட கீறப்பயே சட்டுனு செத்துடணும். அதான் நல்ல சாவு. நானு என்னிக்கி செத்தாலும் செரி… என்ன ஐசு பொட்டிலலாம் வக்காதீங்க. அதேமாரி, வண்டிகிண்டி வச்சிலாம் தூக்கினு போவாம… சின்னதா ஒரு பாட கட்டி நாலு பேரு தூக்கினு போயி பொதிங்க.’’

வழக்கம் போல மவுனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தேன். என் முகத்தை ஒரு தடவை நோக்கிவிட்டு, ”ஒன்கிட்டயும் உத்தரத்து கிட்டயும்தான் (எனது மூன்றாவது அண்ணன்) இத சொல்லிகீறன்.’’ என்றீர்கள். ”சரிய்யா’’ என்று மட்டும் தலையசைத்தேன்.

இன்று பேச்சின் நடுவில் வயது முதிர்ந்து இறந்தவர்களை (அதிலும் குறிப்பாக, நூறு வயது கடந்தவர்கள்; நெருங்கியவர்கள்) வைத்துப் புதைக்கும் முதுமக்கள் தாழியான ‘மதமதக்கசாலை’ குறித்து கேட்க எண்ணி, மிகுந்த தயக்கத்தோடவே கேட்டேன்.

வெகு நாட்களாக எதிர்பார்த்த கடிதம் ஒன்று வந்தது போல முகம் மலர்த்தி, ”ஆமாம்… வயிசாயி செத்துப்போனவங்கள வச்சி பொதைக்கிறது’’ என்றுவிட்டு கேட்டீர்கள்.

”ஆமாம்… இது எப்பிடி ஒணுக்குத் தெரியும்?’’

நான் சொன்னேன். ”நான்தான் நம்மூருல பேசற வார்த்தைங்கள மட்டும் வச்சி… ஒரு அகராதி எழுதிட்ருக்கன்னு சொன்னனேய்யா. அதுக்காக தேடும்போது கேள்விப்பட்டன். அதுமட்டும் இல்லாம… முன்னாடி எப்பயோ நீங்க சொல்லி கேட்டதாவும் நெனவு.’’

”ஓ… நானா? சொல்லிருப்பன்… சொல்லிருப்பன்…’’

மேற்கொண்டு எதுவும் கேட்காமல், நீங்களாக ஏதாவது அது பற்றி சொல்வீர்கள் எனக் காத்திருந்தேன். நினைத்தது போல அடுத்த சில மணித் துளிகளில் ஆரம்பித்தீர்கள்.

”நானு ஒண்ணமாரி சின்னப் புள்ளயா கீறப்ப பாத்துகீறன். அப்ப என் கூட்டாளியோட தாத்தா ஒருத்தரு செத்துட்டாரு. அவுங்க ஒடையான்மூட்டாரு. ஒடையான்னா தெரியுல்ல… சட்டி பானை செய்றவங்க. அவுருக்கு நூறு வயிசு கிட்ட. ஆனா, ஆளு பாக்க அப்டி இருக்க மாட்டாரு. நல்லா தெடமா அறியாப்புள்ளமாரி ஓடியாடினு இருப்பாரு. அப்ப ஒருநாளு பேரப் புள்ளிங்களுக்கு திண்ணயில ஒக்காந்து கத சொல்லினு இருந்தவரு… அப்டியே சாஞ்சி உயிர வுட்டுட்டாரு. புள்ளிங்களாம் தாத்தா ஏதோ சொம்மா வெளாடுறாருன்னு நெனச்சிக்கீதுங்க. அப்றம் பாத்தா, அவுரு செத்துட்டாருன்னு… தடபுடலா தூக்கினு போயி, மதமதக்கசாலைல வச்சி பொதச்சிட்டு வந்தாங்க. அப்பதான் பாத்தன். அதுக்கப்றம் யாரயும் அதுமாரி பொதச்சிப் பாத்ததில்ல.’’

உங்களிடம் மிகப் பிடித்ததே இதுதான் ஐயா. எது பற்றி கேட்டாலும் சரி. ஒரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி கடந்து போகாமல், அதை வாழ்நாளில் என்றுமே மறக்காதவாறு இப்படி ஏதாவது கதையோடு; நிகழ்வோடு பிணைத்துச் சொல்வீர்கள். அதனால்தான் என்றோ சிறுவயதில் கேட்டதைக் கூட, இத்தனை ஆண்டுகள் ஆகியும் மறக்காமல் அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்.  

நான் எப்போது ஊருக்கு வந்தாலும், நீங்கள் கண்ட கனவுகள் பற்றி தவறாமல் சொல்வீர்கள். அப்படி கடந்த ஆண்டு வந்தபோது சொன்ன இரண்டு கனவுகளுமே என்னை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஐயா. ஆம்.

முதல் கனவு. நம்மூரின் ஒரு பகுதியாக இருக்கும் கீழ் திருவடத்தனூரில் (பேச்சு வழக்கில் ஊரப்பாக்கம் என்போம்) உள்ள கோயிலில் இருக்கும் சாமி சிலையை யாரோ மேற்கு திசையிலிருந்து வந்த கள்வர்கள் திருடப் பார்த்தது பற்றியது.

”நாலஞ்சி பேரு இருப்பாங்க. நடு ராத்திரில வந்து… ஊராருங்க யாரும் ஏந்திரிக்காத மாரி ஏதோ மந்தரம் போட்டுட்டு… கடப்பாரையாள சாமி செலைய நோண்டி, கயிறு கட்டி மேல ஈக்கறாங்க. வூட்டுல தூங்கினு கீற எனுக்கு மட்டும் அந்த சத்தம் கேட்டு… கையில கெடச்ச ஒரு குச்சிய எடுத்துனு போயி அவுங்கள அடிச்சித் தொறத்தறன். பயத்துல அப்டியே வுட்டுட்டுப் போனவங்க… அடுத்த நாளு இன்னும் நாலு பேர கூட கூட்டுனு மறுபிடியும் அதேமாரி வர்றாங்க.

வந்தவனுங்க நானு வூட்டுக்குப் போவாம… அங்கயே சாமி பக்கத்துல ஒக்காந்துனு கீறத பாத்து பயிந்து போயி… ‘தெரியாம வந்துட்டம் சாமி… இனி ஒங்க ஊரு பக்கமே வரமாட்டம்… எங்கள ஒண்ணும் பண்ணிடாத, வுட்டுடு’ன்னு கையெடுத்து கும்டுட்டு ஓடறாங்க.

இதென்னடா கனவுன்னு நெனச்சி யாருகிட்டயும் சொல்லாம… காலில ஏன்ச்சி எப்பயும் போல கொல்லிக்கிப் போயி மாட்டுக்குத் தண்ணி காட்டினு கீறன். அப்பதான் ஊரப்பாக்கத்துல இருந்து ரண்டுபேரு தேடினு வந்தாங்க. என்னடா சமாச்சாரன்னு கேட்டதுக்கு… நடந்தத சொன்னாங்க. அப்பிடியே நானு கனவுல கண்டது அங்க உண்மயாலுமே நடந்துகீது. என்ன சொல்றதுன்னு தெரியாம… கண்ண மூடி கையெடுத்துக் கும்டுட்டு, ‘எல்லாம் அந்த ஆண்டவன் என்னக் கொண்டு செஞ்சிகீறான்’னு சொல்லி அனுப்புனன்.’’

இரண்டாவது கனவு. நம் உத்திரம் அண்ணனின் மூத்த மகள் ஹாசினி பற்றியது. ”அப்டியே என் அக்காதான் இந்தப் புள்ளயா வந்து பொறந்துகீது. இதோட நட, சிரிப்பு எல்லாமே என் அக்காகாரிதான். இத நானு நெனச்சிக்கினு படுத்த அன்னிக்கி ராத்திரியே… என் அக்கா கனவுல வந்து, ‘ஆமான்டா… நானுதான் ஒனுக்கு பேத்தியா வந்து பொறந்துகீறன்’னு சொல்ட்டு போச்சி.’’

உங்களுக்கு ஒன்று தெரியுமா, ஐயா? சிறுவயதில் ஒருதடவை எங்கள் பள்ளி தலைமையாசிரியர் கேட்டார் என்று வந்து, உங்களிடம் நம் தாத்தா – பாட்டி பெயர் தொடங்கி, அவர்களது தாத்தா பாட்டி பெயர்கள் வரைக்கும் கேட்டு எழுதி வைத்து மனனம் செய்து, இதோ, இத்தனை ஆண்டுகள் கழித்து எனக்குக் குழந்தை பிறக்கும்போது, அதன் கையில் தந்து வரவேற்பதற்காக எழுதிய ‘மகவே வருக’ நூலில் அதனை அப்படியே பதிவு செய்து ஐந்து தலைமுறையின் பெயர்களையும் சொல்லித் தந்திருக்கிறேன். ஆமாம், ஐயா.

இன்றைக்கு இருக்கும் பிள்ளைகளில் மேலதிகமானவர்களுக்கு அவர்களது பாட்டி – தாத்தா பெயர்களைத் தாண்டி தெரிவதில்லை. ஆனால், நானோ நீங்கள் சொன்னதை வைத்து சேயோன் – சேயோள் பெயர்கள் வரைக்கும் சொல்லித் தந்திருக்கிறேன். கூடவே, ஒரு தடவை நேர் பேச்சில் சொன்ன, ”நாம யாரு, நம்ம முன்னோருங்க யாரு, அவங்களாம் என்ன பண்ணாங்க, எப்படி வாழ்ந்தாங்கன்னு தெரிஞ்சிக்கணும். அப்பதான் நாம வாழற வாழ்க்கயும், வாழப்போற வாழ்க்கயும் நல்லபடியா அர்த்தத்தோட இருக்கும்’’ என்ற வார்த்தைகளையும் அவன் வளர்ந்ததும் சொல்லித் தருவேன் ஐயா. ஆம்.

அடிக்கடி தங்களிடம் ஏதாவது பாடல் பாடச் சொல்லிக் கேட்பேன். அதுவும் குறிப்பாக, மன்மதன் பாடல். அவ்வாறு கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ, இன்று எந்தப் பொருளைப் பற்றி பாடல் புனையச் சொன்னாலும் அடுத்த சில நிமிடங்களில் புனைந்திடும் திறம் பெற்றிருக்கிறேன். அதன் வெளிப்பாடாகத்தான் மகன் பிறந்தபோது அவனை வரவேற்க, ‘மகவே வருக’ பாடலை எழுதி வெளியிட்டிருந்தேன். அதேபோல, அவனுக்கு தாலாட்டு தொடங்கி நீராட்டு வரைக்கும் பலவற்றுக்கும் பாடல் எழுதி தினந்தினம் பாடிக்காட்டி வருகிறேன். ஆமாம், ஐயா.

இதில் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்பும் மிக முக்கியமான விஷயம், அவனுக்கு நம்மூர் மன்மதன் தகனத்தின்போது ஒலிக்கக்கூடிய ‘டண்டாங் கட்டிங்… டண்டாங் கட்டிங்…’ என்னும் பறை இசையை வாயால் முதல் தடவை ஒலித்துக் காட்டியதும் மகிழ்ந்து கை கால்களை அசைத்து ஆடியதுதான் ஐயா.

முதலில் தற்செயலாக ஆடினான் என்றுதான் நினைத்தேன். ஆனால், அடுத்த நாள் இன்னொரு தடவை அதேபோல இசைத்துக் காட்ட, அதைவிட உற்சாகமாக ஆடின போதுதான் புரிந்துகொண்டேன். அவன் உங்களின் தொடர்ச்சியாக, என் வழி பாடலோடும், இசையோடும் கலந்தவன் என்று. ஆமாம், ஐயா.

அது முதல் வாய்க்கும் போதெல்லாம் இசைத்துக் காட்டி, அவனோடு சேர்ந்து நானும் ஆடி வருகிறேன். நாளை அவன் வளர்ந்ததும் நம்மூர் மன்மதன் தகனம் குறித்து சொல்லி, அதில் தாங்கள் பாடும் ஒன்றிரண்டு பாடல்களையும் பாடிக் காட்டி (அல்லது தங்களையே பாடச் சொல்லி கேட்கச் செய்து. அல்லது நீங்கள் பாடிப் பதிவு செய்து வைத்திருக்கும் ஒலிப்பதிவை போட்டுக் காட்டி), நிச்சயம் ஊருக்குக் கூட்டி வந்து நேரிலும் காட்டுவேன் ஐயா.

தாவர பந்தம் குறித்து முதன் முதலாக உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். அதுவும், நான் பிறந்தபோது பெயர் இடுகையில் அரசங்குச்சியை வெட்டி வந்து வைத்து சூட்டிய நிகழ்வுதான் தாவரங்களுடனான உறவை எனக்குள் ஆழ விதைத்ததாக உணர்கிறேன் ஐயா.

அதனால்தான் [;அதன் தொடர்ச்சியாகத்தான்] மகனுக்கு பெயர் வைக்கும்போது அரசங்குச்சி எடுத்து வந்து வைத்து பெயர் சூட்டினோம். அதோடு, அவனது பெயரை இவ்வுலகுக்கு அறிவித்ததும் அரச இலையில் பொறித்துதான். அதுமட்டுமின்றி, அவன் பிறந்த இரண்டாம் மாத 28 ஆம் தேதியில் முதலில் அறிமுகம் செய்ததும் ஒரு தாவரம்தான் (மா மரம்). ஆமாம், ஐயா.

அது தொடங்கி இதுவரை அரசு, வேம்பு, தென்னை, பனை, புங்கை, மூங்கில், பலா, முருங்கை, பப்பாளி, வாழை, ஆலம், நெல்லி, கொய்யா, அத்தி, புளியம், பூவரசு, நொச்சி, நாவல், சீத்தா, சப்போட்டா, ஆமணக்கு, மல்லி, செம்பருத்தி, கருவேலம், வன்னி, வில்வம்… முதலான எத்தனையோ தாவரங்களை அவனுக்கு அறிமுகம் செய்திருக்கிறோம். இனி வரும் நாட்களிலும் மிக முக்கியக் கடமையாக; பொறுப்பாக எண்ணி தொடர்ந்து செய்திடுவோம். ஏனெனில், தங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட ஓர் உயரிய பண்பாகவே இதனை எப்போதும் கருதுகிறோம் ஐயா. ஆம்.

தங்களை எண்ணி பெருமிதம் கொள்ள எத்தனையோ விஷயங்கள்; காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று இப்போது கூடியிருப்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன் ஐயா. நாங்கள் ஐயை முதன் முதலாக ஊருக்கு தூக்கிவந்து தங்களிடம் காட்டிவிட்டி வந்த பிறகு, பலரும் அவனுக்கு வைத்திருக்கும் பெயர் குறித்து ஏளனமாகப் பேசியதாகவும், ஆனால் நீங்கள் ஒருவர் மட்டும்தான் அதற்கு மாறாக, ‘தம்பி இப்டி ஒரு பேர வச்சிருக்கான்னா… அதுக்கு கண்டிப்பா எதனா காரணம் இருக்கும். அதத் தெரிஞ்சிக்காம கொறவா பேசறது தப்பு. என்னப் பொருத்தவரைக்கும் இது நல்ல பேருதான்’ என்றது எண்ணி மகிழ்வும் பெருமையும் கொள்கிறேன் ஐயா.

நீங்கள் படித்து பட்டம் பல பெறாதவராக இருக்கலாம். என் பொருத்தவரை அவர்களையெல்லாம்விட உயர்ந்தவர். பிள்ளைகளுக்காக பல நூறு ஏக்கர் சொத்து சேர்க்காதவராக இருக்கலாம். அதையெல்லாம்விட பெரிய சொத்து நீங்கள்தான்.

இதை ஏதோ வெறும் புகழ் வார்த்தைகளாக; சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. உள்ளத்திலிருந்து கூறுகிறேன். அதற்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம் ஐயா. நீங்கள் வாழ்ந்த உன்னத வாழ்வுதான் உங்களை இன்றைக்கு நூறாவது பிறந்தநாள் காண வைத்திருக்கிறது. எத்தனையோ கோடி பணமும், ஊர் ஊராகச் சொத்தும் சேர்த்து வைத்தவர்களுக்கும் ஒருபோதும் கிடைக்காதது, மிகச் சாதாரண மனிதராக வாழ்ந்த; வாழும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

இன்றைய தினம் நான் மட்டுமல்ல. நீங்கள் காப்பாற்றிய; உதவிய ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, மனிதர் முதலான உயிர்களும், அவற்றின் ஆன்மாக்களும் இப்பிரபஞ்ச அன்னையிடம் உங்களுக்காகப் பிரார்த்தித்து இருக்கும். தங்கள் மீது நேசம் கொண்ட முத்துசாமி ஆச்சாரி முதலான மரணித்த உயிர்கள்கூட இன்று தங்களைப் போற்றி வாழ்த்தியிருக்கும்; வணங்கியிருக்கும். ஆமாம், ஐயா.

இதுதான் என் பொறுத்தவரை உன்னத வாழ்வு; கொண்டாடப்பட வேண்டிய நாள். இதை விட்டுவிட்டு இங்கே இல்லாதவர்களின் நூறாவது பிறந்தநாளை, அவர்கள் என்றோ செய்த நாலு விஷயங்களை நானூறாக ஏற்றிக் கூறி, சுயலாபத்துக்காக வெற்றுப் பெருமை பேசுவதையெல்லாம் பார்க்கும்போது வேடிக்கையாகத்தான் இருக்கும்.

அதிலும் அவர்கள் சொல்லிவிட்டுப் போனதாகக் கூறும் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத வார்த்தைகளை, ஏதோ தெய்வ வாக்கு போல; பொன்மொழி போல பலரும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்தால், எங்காவது போய் முட்டிக்கொள்ளலாம் என்று தோன்றும். அப்போதெல்லாம் நீங்கள் சொன்ன வார்த்தைகளைத்தான்; மண்மொழியைத்தான் எண்ணிக்கொள்வேன். ஆமாம், ஐயா.

‘அடுத்தவங்க கண்டு சொல்றதுக்கு முன்னால, நீயே ஒன் கொற நெற என்னன்னு தெரிஞ்சி சரி பண்ணிக்கோ. அப்பதான் நீ வக்கற ஒவ்வொரு அடியும் நல்லத நோக்கி இட்டுனு போவும்.’

‘ஒன்னோட தேவைய எந்தளவுக்கு எந்தளவு சுருக்கிக்கறயோ, அந்தளவுக்கு அந்தளவு ஒன் வாழ்க்க நல்லாருக்கும், பாத்துக்க.’

‘எது ஒண்ணயும் கேள்வியோட பாக்க கத்துக்க. அப்பதான் அதுக்கான பதிலு கெடைக்கும். பதிலு கெடைக்க கெடைக்கதான் ஒன் வாழ்க்க இன்னும் அழவாவும், அர்த்தமுள்ளதாவும் ஆவும்.’

‘என்னிக்கும் நமக்குத் தெரிஞ்ச நல்லது கெட்டத மத்தவங்களுக்கு எடுத்து சொல்ல தயங்கக்கூடாது. நாம சின்னதா நெனச்சி செய்ற ஒரு விசயம் இன்னொருத்தருக்கு பெரிய மாத்தத்த தரலாம்.’

எப்பயும் கூடயே சின்னதா ஒரு கெட்ட பழக்கம் வச்சிக்கிறது தப்பில்ல. ஏன்னா, அந்த சின்ன கெட்ட பழக்கம்தான் நம்மகிட்ட பெரிய கெட்டபழக்கம் எதுவும் நெருங்க வுடாம பாத்துக்கும்

ஒன்றல்ல. இரண்டல்ல. இப்படி பல நூறு விஷயங்களை போகிற போக்கில் சொல்லியிருக்கிறீர்கள். அவை அனைத்தும் உயரிய வாழ்க்கைப் பாடம் என்பதால்தான், அவற்றில் நூறினை தொகுத்து ‘ஐயன் சொல்’ என்று நூலாக்கியிருக்கிறேன். ஆமாம், ஐயா.

உங்களிடம் இதுவரை எத்தனையோ விஷயங்களை கேட்டிருக்கிறேன்; கற்றிருக்கிறேன். அதில் என்னை நினைக்குந்தோறும் வியத்தும் ஒன்று என்றால், எத்தனைப் பெரிய எதிரியாக இருந்தாலும் மன்னிக்கும் குணம்தான். அதிலும் அந்த எதிரி வளர்க்கும் ஆடுகளுக்கு ஓர் ஆபத்து என்றபோது, அவர் நமக்கு இழைத்த துரோகத்தை மறந்துவிட்டு உதவி காப்பாற்றியதை அறிந்தது முதல் இதோ, இதை எழுதும் இந்நொடி வரைக்கும் எண்ணி எண்ணி வியக்கிறேன் ஐயா.

நண்பர்களில் சிலர் கேட்டதுண்டு. ‘அது எப்டி வடிவு… எழுத்தாளர், பாடலாசிரியர், கவிஞர், பத்திரிகையாளர், இயற்கை ஆர்வலர், தொடர் பயணின்னு பல முகங்களோட உன்னால இருக்க முடியுது?’.

அப்போதெல்லாம் உங்களைத்தான் நினைத்துக்கொள்வேன் ஐயா. எத்தனை எத்தனை முகங்கள் உங்களுக்கு? எங்களுக்கெல்லாம் நற்தந்தையாக, ஊர் கோயிலில் பூசாரியாக, தெருக்கூத்துக் கலைஞராக, இயற்கை வைத்தியராக, விவசாயியாக…

இவற்றில் ஒன்றைக்கூட தங்களிடமிருந்து முழுதாகக் கற்கவில்லையே என்ற குற்றவுணர்வு அவ்வப்போது வரத்தான் செய்கிறது ஐயா. அதிலும் குறிப்பாக, இயற்கை வைத்தியத்தையும், தெருக்கூத்தையும் கற்காதது எதையோ பெரிதாக இவ்வாழ்வில் இழந்தது போல தோன்றும் ஐயா.

ஊரில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘ஒங்க அப்பா மாரி ஒருத்தரு நாடகத்துல வேசம் கட்டி ஆடி பாத்ததே இல்ல. அப்படி ஒரு தோரண, குரல், கம்பீரம், அசைவுன்னு… அதப் பாக்கவே சுத்துப்பட்டுல கீற ஜனங்கலாம் வந்துருவாங்க.’

‘நாங்க முஸ்லீமா இருந்தாலும், எங்கப் புள்ளிங்களுக்கு ஒண்ணுன்னா… மொத ஓடியாந்து ஒன் அப்பாருகிட்டதான் திந்நூரு புடிச்சிப் போட சொல்வன். அவுரு போட்டாருன்னா… எம்மாம் பெரிய நோவா இருந்தாலும் ஓடிப் போய்டும்.’

‘ஒன் அப்பன்கூட இருந்து பாத்துக்கறன். மனுசங்களுக்கு ஒண்ணுனா எப்டி துடிச்சிப் போவாங்களோ… அதுமாரி ஆடு, மாடுங்களுக்கு ஒண்ணுனா துடிச்சிப்போயி வைத்தியம் பாப்பான். என்னடா, வேலயலாம் வுட்டுட்டு வைத்தியம் பாக்கறவன்… அதுக்கு எதனா காசு கீசு கூலியா வாங்களாம்னு கேட்டா… அந்த ஆண்டவன் கொடுத்ததப் போயி யாருனா கூலி வாங்கினு செய்வாங்களா… போடான்ட்டு போவான்.’

‘ஒங்க ஐயா கோயில் பூசாரியா இருந்த வரைக்கும்… தைப்பூசத் தேரு, மன்மதன் தகனம்னு எல்லாம் அம்மாம் அழவா, ஜோரா நடந்தது. அதுக்கப்றம் ஒண்ணும் சொல்லிக்கற மாரி இல்ல.’

இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், ஒருவரும் உங்களை நெருங்க முடியாத அளவுக்கு அனைத்திலும் சிறந்து விளங்கியதுதான் ஐயா. ஆம்.

ஊருக்கு வரும்போதெல்லாம் கேட்பீர்கள். ”ஏன்யா… ரண்டுநாளு இருந்துட்டுப் போவலாம்ல?’’

நானும் அப்போதைக்கு ஒரு பதிலை சொல்வேன். ”இல்லய்யா… நாளிக்கி ஒரு முக்கியமான வேல இருக்கு. ஒருத்தரு பாக்க வர சொல்லிருக்காரு. போவணும்.’’

ஆனால் உண்மையில் முன்பு போல ஊரில் வந்து தங்காததற்குக் காரணம், உறவுகள் பிளவுண்டதுதான் ஐயா. எப்படியெல்லாம் இருந்த குடும்பம் இன்றைக்கு இந்த அளவுக்கு சிதைந்து கிடப்பது, எல்லோரும் சுயநலமாக மாரிப்போய் கடமைக்கு பேசுவதும், நடந்துகொள்வதும்தான் என்பது உங்களுக்கும் தெரியும் ஐயா.

இதுகுறித்து என்னைவிட அதிகமாக வருத்தம் கொண்டிருப்பீர்கள் என்பதும் எனக்குத் தெரியும் ஐயா. என்ன, செய்வது? இது ஏதோ நம் குடும்பத்தில் மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. நூறில் 99 குடும்பங்களில் இன்றைக்கு இதுதான் நிலைமை. ஆமாம், ஐயா.

ஆனபோதும் இந்த வாழ்வில் சில உண்மையான உறவுகளை சம்பாதித்திருக்கிறேன். அவர்களில் ஒருவரது வீட்டுக்குத்தான் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் உங்களையும் அம்மாவையும் விமானத்தில் கூட்டிப் போயிருந்தேன். அவர்கள் என்னிடம் உரிமையோடு நடந்துகொண்ட விதத்தையும், உங்களை அன்பாக கவனித்துக்கொண்டதையும் பார்த்துவிட்டு, ”இந்த காலத்துல இப்டியெல்லாம்கூட மனுசங்க கீறாங்களான்னு ஆச்சரிமா கீது’’ என்றீர்கள்.

உண்மைதான் ஐயா. முன்பு ஊரில் முக்கால்வாசி பேர் இவ்வாறு இருந்தார்கள். இன்றைக்கு ஓரிருவர் இருந்தாலே ஆச்சரியம் என்ற நிலைதான் உருவாகியுள்ளது.

ஒருதடவை நான் படிக்கும் கல்லூரியை பார்க்க ஆசைப்பட்டு தயக்கத்தோடு கேட்டீர்கள். அடுத்தநாளே உங்களை சென்னைக்கு வரவழைத்து, படித்த லயோலா கல்லூரிக்குக் கூட்டிப் போய் காட்டினேன். பார்த்துவிட்டு பெரிதும் மகிழ்ந்து வியந்தவர், புறப்படுவதற்கு முன் சற்றும் எதிர்பாராத ஒன்றைக் கேட்டீர்கள்.

”ஏன் சாமி, இம்மாம் பெரிய ஊருல… குடிக்கத் தண்ணிகூட யாரும் தரமாட்டாங்களா?’’

ஒன்றும் புரியாதவனாய், ”ஏன்யா, அப்டிக் கேக்கற?’’ என்றேன்.

”இல்ல… வந்து எறங்கனதும் கடையில போயி காசு கொடுத்து வாங்கித் தந்தயே. அதான் கேட்டன்’’

ஓங்கிக் கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. இதை ஏதோ நீங்கள் ஒருவர் மட்டும் கேட்டதாகத் தோன்றவில்லை. ‘உணவும், நீரும் விற்பனைக்கல்ல’ என்ற உன்னதக் கொள்கையோடு வாழ்ந்த நமது ஒட்டுமொத்த மூதாதையர்களும் ஒன்றுகூடி தங்கள் வழி கேட்டதாகத் தோன்றியது. ஆமாம், ஐயா.

இங்கே உறவுகள் மட்டுமல்ல. நமது பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கம் யாவும் சிதைந்துவிட்டது. இதில் வேதனை என்னவென்றால், இவற்றை மீட்டெடுப்பதற்குப் பதிலாக பழைய பெருமைகளைப் பேசிப் பேசியே பலரும் திரிவதுதான்.

நான்காண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். கொல்லி கிணத்து மேட்டில் உள்ள எட்டிமர நிழலில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிகையில் ‘பொனக்கட்டை’ பற்றி கேட்டேன். சட்டென்று உற்சாகமாகி, ”நீ பொனக்கட்டலாம் பாத்துகீறியா?’’ என்று கேட்டீர்கள்.

உடனே, ”ம்… பாத்துக்கீறன்யா… நம்ம வீட்லகூட ஒண்ணு இருந்துச்சே’’ என்றேன்.

”ஆமா… இன்னும்கூட அது கீதுன்னு அண்ணங்காரன் சொன்னான்’’ என்றுவிட்டு, எழுந்துபோய் பெரிய குண்டானில் இருந்து ரோட்டா சொம்பில் தண்ணீர் மொண்டு குடித்துவிட்டு வந்து தொடர்ந்தீர்கள்.

”அன்னிக்கி காலத்துல பொனக்கட்ட வச்சிகீறதலாம் பெருமையா நெனச்சாங்க. இன்னிக்கி கீற யாருக்கும் அதப் பத்தி தெருல. எல்லாம் தொலஞ்சிப் போச்சி. ஒண்ணா, ரண்டா… எம்மாம் விசியம் காணாமப் போச்சி. இப்ப கீறவங்கலாம் இந்த செல்லுபோனையும், டீவியையும்தான் பெரிய விசிமா நெனிக்கிறாங்க. எனுக்குலாம் அதக் கண்டாலே… ஏதோ வரக்கூடாத பெசேசிங்க எல்லா வூட்டுவுள்ளயும் வந்து… குடிய கெடுக்கற மாரிதான் படுது.’’

நீங்கள் சொன்ன வார்த்தைகள் அப்போது எனக்கு சிரிப்பை வரவழைத்தாலும், அதன் பிறகான நாட்களில் நினைக்கும் போதெல்லாம் எத்தனைப் பெரிய உண்மை என்று புரிய வைத்தது ஐயா. ஆம்.

பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி பெற்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, சரியாகப் புறப்படுவதற்கு முன் தங்களது இந்நூறாவது பிறந்தநாளுக்குப் பரிசாக, எனது முழு உடலையும்; உறுப்புகளையும் தானம் செய்திருப்பது பற்றி சொன்னதும், எந்தச் சலனமும் காட்டாமல் சில நொடிகள் என் முகத்தை பார்த்துவிட்டு, கீழே குனிந்தவாறு சொன்னீர்கள்.

”என் நூறாவது பொறந்தநாளுக்கு… ஒன் ஒடல தானம் பண்ணிகீற. அப்ப… அது யாருக்கு வேணுமோ, அவுங்குளுக்கு எடுத்துப்பாங்க… செரிதான்.’’

ஒன்றும் பேசாமல் அடுத்த வார்த்தைகளுக்காக காத்திருந்தேன்.

சிறிது இடைநிறுத்தி தொடர்ந்தவர், ”ஆமாம், செத்ததுக்கப்பறம் வீணா மண்ணுக்குதான எல்லாம் போவப்போது. அது யாருக்கோ தேவப்பட்டவங்களுக்குப் போச்சின்னா… அது நல்ல விசியம்தான். நாளிக்கி நானு செத்தாகூட அப்டி யாருக்குனா… எதனா தேவன்னா எடுத்துக்க சொல்லு’’ என்றது என்னை பெரிதும் நெகிழச் செய்தது ஐயா. ஆம்!

அந்த நிமிடம், ‘இப்படியோர் ஐயா; தந்தை கிடைக்க என்ன தவம்; புண்ணியம் செய்தேனோ?’ என்று இந்தப் பிரபஞ்சத்திடம் கேட்டுக்கொண்டேன் ஐயா. 

இதோ, அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்திடாத நூற்றாண்டு வாழ்வு வாழ்ந்திருக்கிறீர்கள். இந்நூற்றாண்டு வாழ்வை இப்பூமியில் உங்களைப் போல எத்தனை பேர் வாழ்ந்திருப்பார்கள்? அவர்களில் எத்துனை பேருக்கு ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உதவும்; உயிர்கொடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்? அவர்களில் யாரின் வாழ்வாவது புத்தகமாகி யாரென்றே தெரியாதவர்கள் வாசித்திருப்பார்களா? அதன் மூலமாக படிப்பினைகள் பெற்றிருப்பார்களா?

இத்தனை அரிய; உன்னத பெருவாழ்வு வாழ்ந்த; வாழும் உங்களது இந்நூறாம் அகவை தினத்தில் வாழ்த்திப் பாட ஒரு வாழ்த்துப் பாடல் எழுதி எடுத்துக்கொண்டு வந்திருந்தேன். ஏனோ, அதை நேரில் பாடிக் காட்ட முடியவில்லை. அதனால், இந்தக் கடிதத்தின் இறுதியாக எழுதி அனுப்புகிறேன் ஐயா.

*

‘வானம் சிறுக்குது –

பூமி சிரிக்குது –

உந்தன் அன்பு முன்ன…

காற்று குதிக்குது –

நீரு களிக்குது –

உந்தன் பண்பு முன்ன…

காக்கைக் குருவி எங்கள் சாதி –

என்றான் அந்த பாரதி…

ஆலும் அரசும் உறவு என்றாய் –

எந்தன் தந்தையே…

வாழும் விந்தையே…

எல்லாம் தனக்காய் சேர்த்திடும் –

கடுகு மனிதர் மத்தியில்…

இருப்பதை எல்லாம் தந்து தந்து –

ஒசந்து நின்றாயே…

இமயம் வென்றாயே…

(வானம்…)

*

சின்னஞ்சிறு வயசுல –

மாத்திரை தேடும் கைகள் பெருக…

எல்லா மாத்திரையும் உன்னைத் தேடி –

தோத்த கதையை நானே அறிவேன்…

பட்டங்கள் படித்து சொத்து பெருக்கும் –

தன்னலம் மிக்க கூட்டம் நடுவில்…

பலபல ஆயிரம் உயிர்களைக் காத்த –

படிக்காத மா மருத்துவன் நீயே…

நூற்றாண்டு கண்ட மனிதா மனிதா –

இன்னும் நூறாண்டு உன்புகழ் இருக்கும்…

நூற்றாண்டு நடைபோடும் மனிதா மனிதா –

இன்னும் பல்லாண்டு வாழ்ந்திட வேண்டும்…

(வானம்…)

*

தெய்வச் சிலைகளை –

தொட்டுப் பூசித்த நீதான் தெய்வம்…

ராவெல்லாம் வேசம் கட்டி ஆட்டம் ஆடிய –

நீயே என்றும் என் நாயகன்…

தனக்குத் தானே சிலைகள் வைத்து –

பெருமை பேசும் மூடர்கள் முன்னால்…

எத்தனையோ செய்து அமைதி காக்கும் –

உன்முன் நோபலும் சிறிதிலும் சிறிதே…

நூற்றாண்டு கண்ட மனிதா மனிதா –

இன்னும் நூறாண்டு உன்புகழ் இருக்கும்…

நூற்றாண்டு நடைபோடும் மனிதா மனிதா –

இன்னும் பல்லாண்டு வாழ்ந்திட வேண்டும்…

(வானம்…)’

*

நிச்சயம் இந்த வாழ்த்துப் பாடலை நான் பாடியது போல, என் குரலில் கேட்டிருப்பீர்கள் என்னும் நம்பிக்கையோடு இதோ, இக்கடிதத்தை இவ்விடத்தில் இவ்வாறு முடிக்கிறேன் ஐயா.

‘இப்பூமியில் தாங்கள் வாழ விரும்பும் கடைசி நொடி வரை நோய்நொடியின்றி மகிழ்வோடு வாழ்ந்திட வேண்டும். அது மட்டுமே இப்பேரியற்கை அன்னையிடம் யான் பிரார்த்திப்பது.’

வாழ்க ஐயா;

வளர்க உங்களது எளிய புகழ்!

என்றும் அன்புடன்,

உங்கள் மகன் வடிவரசு.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=