அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்
அன்புள்ள ஐயாவுக்கு,
தாங்கள் இதுவரை என்னிடம் அதிகமாக சொன்ன விஷயம் எதுவாக இருக்குமென நேற்றிரவு முதல் யோசித்தேன்.
‘என்னிக்கி, எந்த நெலமிக்கி போனாலும் பழச மட்டும் மறக்காத’
ஆம்! ஐயா, இவ்வார்த்தைகளைத் தான் அதிக தடவை நீங்கள் என்னிடம் சொன்னதாகத் தோன்றுகிறது.
மேலோட்டமாகப் பார்க்க மிகச் சாதாரணதோர் அறிவுரை போன்றிருந்தாலும்… யோசிக்க யோசிக்க வாழ்ந்த வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி, எத்தனையோ பாடங்களை சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகின்றன இவ்வார்த்தைகள்.
நன்றாக நினைவுள்ளதய்யா. புத்தாடை என்றால் அப்போது எங்களுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருதடவை பொங்கலுக்கு வாங்கித் தரும் புதிய ஆடை.
அதுவும் எவ்வளவு மண் பட்டாலும் தெரியாத ஒரு வண்ணத்தில், எவ்வளவு நாட்கள் போட்டுத் திரிந்தாலும் எளிதில் கிழியாத மொத்தத்தில் டவுசரும், பூப்போட்ட அல்லது கோடு போட்ட சட்டையும், தானிப்பாடி, தண்டராம்பட்டு அல்லது ஊருக்கு வரும் துணிமூட்டைக் காரரிடம் வாங்கிப் போய் பக்கத்தூர் தனபால் அண்ணன் கடையில் தைக்கச் சொல்லி தந்துவிட்டு வருவீர்கள்.
அளவைத் தவிர எங்கள் ஐவருக்குமான புத்தாடையில் வேறு எந்த வித்தியாசமும் இருக்காது. ஒரே மாதிரி டவுசர், ஒரே மாதிரி சட்டை.
பொங்கல் எப்போது வருமென ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டிருப்போம். ஒட்டடையடித்து வீட்டை சுத்தமாக்குவது, புது மண் எடுத்துவந்து உடைந்த வீட்டுச் சுவர், திண்ணை மற்றும் வாசல் பூசி மொழுகுவது. சுண்ணாம்படிப்பது. கோலமாவுக் கல் பொறுக்கிவந்து குத்துரலில் போட்டு கடப்பாரையால் இடிப்பது என ஒருபக்கம் பொங்கல் முன்னேற்பாடுகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தாலும், அதைத் தாண்டிய எதிர்பார்ப்பை, ஏக்கத்தை எப்போதும் எனக்கு புத்தாடைகள் தந்தன.
அதிலும் பொங்கலுக்கு முன்னான நாட்களில் என் வயது சிறார்களுடன் கூடிக்கொண்டுபோய் டைலர் கடையில் புதுத்துணி தைத்துவிட்டார்களா என அடிக்கடி கேட்டும், பார்த்தும் வருவது. நண்பர்களிடம் என் துணியைக் காட்டி,
‘அதோ அங்க இருக்குப் பாரு, அதான் என் துணி..’ என மகிழ்ந்தது, இப்போதும் நினைவுள்ளதய்யா.
பொங்கலுக்கு எத்தனை நாட்கள் முன்னால் வாங்கிப் போய் தைக்கத் தந்தாலும், முன்தின முன்னிரவு அல்லது பொங்கலன்று காலையில்தான் பெரும்பாலும் தைத்துத் தருவார்கள்.
தனபால் அண்ணன் கடையில் மட்டுமல்ல, பிறகு அவரிடமிருந்து தையல் கற்றுக் கொண்ட பெரிய அண்ணனும், நடு அண்ணனும், அவர்களிடமிருந்து கற்ற சின்ன அண்ணனும் கடை வைத்தபோதுகூட இது மட்டும் மாறவே இல்லை.
பாட்டி அல்லது சித்தி ஊருக்குப் போகும்போதும், எங்கேனும் திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தங்களோடு அல்லது அம்மாவோடு வரும்போதும், அந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு அவ்வாடையையே திரும்பத் திரும்ப அணிந்து வருவது வழக்கம்.
காரணம், அதற்கு முன் தைத்துத்தந்த ஆடைகள், அடுத்த புத்தாடை வாங்கித் தைப்பதற்குள் பெரும்பாலும் கிழிந்திருக்கும்.
நம்மூர் பள்ளிக்கூடமும் சத்தார் வாத்தியாரும் மட்டும் இல்லையென்றால், எங்கள் ஐவருக்கும் வருடத்திற்கு இரண்டு மூன்று காக்கி டவுசரும், வெள்ளை சட்டையும் கிடைத்திருக்காது. அதை பள்ளிக்கூடத்திற்கு போகும்போது மட்டுமல்லாமல், இரவு பகல் எந்நேரமும் போட்டுத் திரிந்திருக்கவும் முடியாது.
அதிலும் நான் நான்காவது படிக்கும்போது நீங்கள் வாங்கித்தந்த கருப்புச் சட்டையையும், கருப்பு டவுசரையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.
தாங்கள் வாங்கித்தந்த உடைகளில் எப்போதும் அதையே மிகப் பிடித்ததென்பேன். யார் செய்த நற்செயலோ, பாபு அண்ணன் தயவில் அவ்வாடையில் ஒளிப்படம் ஒன்றும் அப்போது எடுக்கப்பட்டது.
அப்படத்தை இப்போது கையிலெடுத்துப் பார்க்கையில், அவ்வுடையோடு சேர்த்து சிறுவயதில் போட்டுக்கொள்ள நல்ல சட்டை இல்லாமல் வெறும் கிழிந்த டப்பால் டவுசரை போட்டுக்கொண்டு விளையாடிய நாட்களும், இடங்களும் கண்முன் வந்துபோகிறது.
இன்றை போல் இல்லாமல் அன்றெல்லாம் புத்தாடை வாங்குவதென்பது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டதை நன்கறிவேன் ஐயா. அதனால்தான் இப்போது கூட இஷ்டப்பட்ட நேரத்திற்கு புதுத் துணிகள் வாங்கிக் குவிக்காமல் ஒரு தடவைக்கு பத்துதடவை யோசித்துவிட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
2006 ஆம் ஆண்டு பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் இளங்கலை சேர்ந்தபோது, கல்லூரிக்கு போட்டுச் செல்ல என்னிடம் இரண்டு மூன்று நல்ல உடைகள் கூட கிடையாது. பழனி அண்ணனும், உத்திரம் அண்ணனும் அவர்கள் சட்டையில் ஆளுக்கொன்றை எடுத்துத் தந்தார்கள். அடுத்த தடவை ஊருக்கு வரும்போது இன்னுமிரண்டு பேண்டும், சட்டையும் வாங்கித் தருவதாகவும் சொன்னார்கள்.
மொத்தம் இரண்டு கால்சட்டை, நான்கு மேல்சட்டையோடு ஊரிலிருந்து புறப்பட்டு கல்லூரி விடுதிக்குப் போனேன். அதிலிரண்டு சட்டையில், காலரருகே லேசாக கிழிந்திருந்தது.
திங்கள்கிழமை போட்டுப் போகும் உடையை இரண்டுநாள் கழித்து வியாழக்கிழமை போடுவேன். செவ்வாயன்று போடுவதை வெள்ளிக்கிழமை, புதனன்று போடுவதை அடுத்த திங்கள்கிழமை என மாற்றி மாற்றி துவைத்துக் காயவைத்து போட்டுப் போவேன்.
பார்க்கும் யாராலும் நான் வெறும் மூன்று உடைகளை மட்டும்தான் வைத்திருக்கிறேன். அதைத்தான் திரும்பத் திரும்ப அணிந்து வருகிறேன் என அவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்க முடியாது.
இப்போது கூட என்னிடம் எண்ணி ஏழெட்டு செட் உடைகள் இருந்தால் ஆச்சரியம்தான் ஐயா.
‘என்னிக்கி, எந்த நெலமிக்கி போனாலும் பழச மட்டும் மறக்காத’
தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகளை நினைக்கும்போதெல்லாம்… சிறுவயதில் நீங்கள் வாங்கித்தந்த புத்தாடைகளும், அதற்காக வருடக்கணக்கில் காத்திருந்த நாட்களும், அதை ஆசை ஆசையாக போட்டுத் திரிந்த தெருக்களும், வாங்கித்தராத வருடங்களில் சாப்பிடாமல் அழுது அடம்பிடித்த பொழுதுகளும், ஒரு கட்டத்துக்குமேல் குடும்பச் சூழலைப் புரிந்துகொண்டு பொறுத்துக்கொண்ட வருடங்களும்தான் முதலில் நினைவுக்கு வரும் ஐயா.
அடுத்ததாக… பள்ளிக்குப் போகும்போது டவுசர் பாக்கெட்டிலிருந்து எடுத்துத் தந்தனுப்பிய நாலணா, ஐம்பது பைசா, ஒரு ரூபாய், அதிகபட்சமாக எப்போதாவது கொடுத்தனுப்பிய இரண்டு ரூபாய் நாணயங்களும்தான் நினைவுக்கு வரும் ஐயா.
கூடவே… அம்மா கடுகு டப்பாவில் இருந்தும், பருப்பு அல்லது அரிசிப் பானையிலிருந்தும், சிலநேரம் புடவையில் முடித்துவைத்திருந்தும் கொடுத்தனுப்பிய நாணயங்களும்.
பணத்தின் மதிப்பு தெரியவும், புரியவும் இதுதான் காரணமாக இருக்குமென இப்போது யோசிக்கையில் தோன்றுகிறதய்யா.
அதுவும் தாங்கள் தந்த நாலணா, எட்டணாவை வைத்துக்கொண்டு, பார்த்துப் பார்த்து ஐந்து பைசா, பத்து பைசா மிட்டாய் வாங்கித் தின்றது. அடுத்தடுத்த நாட்களுக்கு அக்காசை மறைத்து வைத்திருந்து நண்பர்களோடு சேர்ந்து குச்சி மிட்டாய், காசு மிட்டாய், வாச்சி மிட்டாய், பெட்டுகல் மிட்டாய் வாங்கி துணிக்குள் வைத்து கடித்துப் பகிர்ந்துகொண்டது.
இராயிண்டபுரம் ஆற்றுத் திருவிழாவில் ஆசை ஆசையாய் வாங்கி வந்த உண்டியலில் ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என போட்டு சிறுக சிறுக சேமித்து வைத்தது.
ஐஸ், கேக், ஜவ்வு மிட்டாய், பஞ்சி மிட்டாய் ஏதேனும் விற்கவந்தால் ஓடிவந்து உண்டியலைக் கவிழ்த்து துடைப்பக் குச்சியால் ஐம்பது பைசாவோ, ஒரு ரூபாயோ எடுத்துப் போய் வாங்கித் தின்றது.
எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாதய்யா.
அதிலும் உச்சமாக, ஏழாவது படிக்கும்போது வேப்பங்கொட்டை பொறுக்கி சேர்த்த காசில், ஆற்றுத் திருவிழாவில் ஆசைப்பட்டு வாங்க நினைத்த பைனாக்குலருக்குப் பதிலாக தங்களுக்கு தேங்காய்ப் பூ துண்டும், அம்மாவுக்கு பச்சை கலர் ஜாக்கெட் பிட்டும் வாங்கிவந்து தந்தது, இப்போதும் அப்படியே கண்முன்னால் உள்ளதய்யா.
அதை சற்றும் எதிர்பாராத நீங்கள் பெருமகிழ்வோடு வாங்கி தோளில் போட்டுப் பார்த்து,
”எதோ பண்ணாக்கலர் வாங்கப் போறன்னு சொல்ட்டு போன… வாங்காம எனக்கு துண்டு வாங்கினு வந்திர்க்க?’’ என்று கேட்டதற்கு,
”அத வாங்கி அதுக்குள்ளார ஊரப் பாக்றதுக்கு, அப்டியே பாக்கலான்னு அந்தக் காசுல துண்டு வாங்கினு வந்ட்டன்ய்யா..’’ என்றதைக் கேட்டு மகிழ்ந்துபோய், எனதிரு கைகளைப் பிடித்துக்கொண்டு,
”நல்லப் புள்ளடா நீ..’’ என்றது, இப்போதும் நினைவுள்ளதய்யா.
அதன்பிறகு முதுகலை இரண்டாமாண்டு படிக்கும்போது, விகடன் மாணவப் பத்திரிகையாளராக எழுதிய கட்டுரைகளுக்கு கிடைத்த பணத்தில் தங்களுக்கும் அம்மாவுக்கும் முதல் தடவையாக போத்தீஸிலிருந்து வேட்டியும் புடவையும் வாங்கிவந்து தந்தேன்.
அதைத் தொடர்ந்து நான்கைந்து தடவை தங்களுக்கு சட்டையும், டவுசரும், டீ- சர்ட்டும் வாங்கி வந்திருப்பேன். கடைசியாக ஊருக்கு வரும்முன் தாங்கள் கேட்ட வண்ணத்தில் மழைகோட் ஒன்று வாங்கிவந்து தந்தேன்.
என்றபோதும், அன்று ஆற்றுத் திருவிழாவில் அறியாத வயதில் வேப்பங்கொட்டை பொறுக்கிச் சேர்த்த பணத்தில் வாங்கித் தந்த எளிய தேங்காய்ப் பூ துண்டுக்கு ஒருபோதும் இவை ஈடாகாதய்யா.
உண்டியலில் காசு சேர்த்து வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் நீங்கள்தான் எனக்கு சிறுவயதில் சொல்லித் தந்தீர்கள். அதனாலோ என்னவோ இந்நாள்வரை அப்பழக்கம் என்னுடன் வருகிறது.
அதிலும் கடந்த 2012 முதல் உண்டியலில் சேர்த்து வைக்கும் பணத்தைக் கொண்டு புத்தகங்கள் வாங்குவதை ஒரு நற்பழக்கமாக நினைத்து தொடர்ந்து வருகிறேன்.
அப்படி உண்டியல் பணத்தில் வாங்கிய புத்தகங்கள் மட்டும் என்னிடம் நூற்றுக்கும் அதிகமாக இருக்கும். எல்லாம் சங்க இலக்கியம், கம்பராமாயணம், திருமந்திரம், திருவாசகம், தொல்காப்பியம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், முத்தொள்ளாயிரம் போன்ற பெரும் பொக்கிஷங்கள்.
‘சேத்து வைக்கற காசு, சந்தோசக் காசு..’ என்பீர்கள்.
‘அதல வாங்கறதெல்லாம் மனசுக்கு எப்பயும் நெருக்கமா இருக்கும்..’ என்றீர்கள் ஒருதடவை.
ஆம்! ஐயா, இதை பலதடவை நான் உணர்ந்திருக்கிறேன்.
கடந்தாண்டு மட்டும் இரண்டு உண்டியல் முழுக்க சேர்த்து வைத்த பணத்தில், பலநாள் வாங்க நினைத்த கம்பராமாயணம் மொத்தத் தொகுப்பையும் வாங்கினேன். அதோடு சேர்த்துப் படிக்க நினைத்த இன்னும் ஐந்து புத்தகங்களும் வாங்கினேன். இப்போதும் இரண்டு தனித்தனி உண்டியல்களில் காசு சேர்த்து வருகிறேன். அதில் ஓர் உண்டியல் மூன்று மாதங்களுக்கு முன்பே நிரம்பிவிட்டது.
‘பணத்தோட அரும தெர்ஞ்சாதான், பணத்து மதிப்பு என்னன்னு புரியும்..’ என்பீர்கள் அடிக்கடி.
பணத்தின் அருமை நன்கு தெரிந்தவன் நான். அதனால்தான் ஐயா, ஒரு ரூபாயை செலவு செய்யும் முன்னரும், ‘இத கண்டிப்பா வாங்கணுமா? அவசியம் தேவதானா? இதில்லாம நம்மால இர்க்க முடியாதா?’ போன்ற பல கேள்விகளை எனக்குள் கேட்டுவிட்டு வாங்குவதை, செலவழிப்பதை ஒரு நற்பண்பாக வைத்திருக்கிறேன்.
‘என்னிக்கி, எந்த நெலமிக்கி போனாலும் பழச மட்டும் மறக்காத’
பெருநிலத்தை ஊர் மக்களின் நலனுக்காக கொடுத்துவிட்டு, இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் அக்காவின் திருமணத்திற்காக விற்றுவிட்டு, ஐந்துக்கும் பத்துக்கும் கூலிவேலை செய்து, ஒழுகும் வீட்டுக்குள் இரவெல்லாம் விழித்திருந்து ஏனம் வைத்து நிரம்ப நிரம்ப வெளியிலெடுத்து ஊற்றி எங்களையெல்லாம் தூங்க வைத்து, கொடும் பசியிலும் வெறும் தண்ணீரை மட்டும் மகிழ்வோடு குடித்து, இருக்கும் கொஞ்ச நஞ்சத்தைக் கொண்டு எங்கள் பசியைத் தீர்த்து, ஒன்றுக்கு ஆறு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, இந்த 96 வயதிலும் ஓய்வறியாமல் தினம் இரண்டு கிலோமீட்டர் நடந்துபோய் தங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளை நிலத்தில் செய்துவிட்டு, மீண்டும் இரண்டு கிலோமீட்டர் நடந்து வீட்டுக்குவந்து பேரப் பிள்ளைகளோடு விளையாடிவிட்டு உறங்கி, அடுத்தநாள் காலையில் எழுந்து நிலத்தை நோக்கி நடந்துபோகும் உங்கள் மகனாகப் பிறந்துவிட்டு, எப்படி ஐயா இவ்வார்த்தைகளை என்னால் மறக்க முடியும்?
உழைப்பின் முகவரி நீங்கள்;
பேரன்பின் இருப்பிடம் நீங்கள்;
செயலின் உருவம் நீங்கள்.
ஆம்! ஐயா.
‘என்னிக்கி, எந்த நெலமிக்கி போனாலும் பழச மட்டும் மறக்காத’
பழசை மட்டுமல்ல… நீங்கள் சொன்ன எவ்வார்த்தைகளையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டேன் ஐயா.
என்றும் நினைவுகளுடன்,
உங்கள் வடிவரசு
(August 15, 2020)
*
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்