அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அன்புள்ள ஐயாவுக்கு,

அடிக்கடி ஒன்றை சொல்வீர்கள்.

‘நாம வாழற இந்த பூமி மனுசங்களுக்கு மட்டுமானதில்ல. செடி கொடி மரம் பறவ மிருகம் பாம்புன்னு எல்லாத்துக்கும் சொந்தமானது. இத புரிஞ்சிக்காத ஒரே ஜீவன் மனுசன் மட்டும்தான்..’

தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகள் நினைவுக்கு வரும்போதெல்லாம் சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்றுதான் மனக்கண்முன் வந்துபோகும் ஐயா.

அப்போது நான் எடத்தனூரில் ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். மதியம் மூன்றுமணி வாக்கில் பள்ளிக்கூடத்திலிருந்து அரைநாள் விடுமுறை விட்டதால் சீக்கிரமாக வந்து வீட்டுக்குள் நுழைந்தபோது, உள் வாசப்படி மீது பெரிய பாம்பு ஒன்று படுத்திருக்கப் பார்த்து பயந்துபோய் கையிலிருந்த புத்தகப் பையை கீழேபோட்டுவிட்டு கத்திக் கூச்சலிட்டு அழுதபடி கட்டுத் தெருவுக்கு ஓடி வந்தேன்.

அங்கே கட்டிலில் உட்கார்ந்து முத்துசாமி ஐயாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தீர்கள்.

என்னையும் என் அழுகையையும் பார்த்து, ‘என்னாச்சோ ஏதாச்சோ’ எனப் பதறி எழுந்து,

”ஏன்டா அழ்வுற? என்னாச்சு, சொல்லு?” என்றீர்கள்.

பாம்பைக் கண்ட பயத்தில் இன்னும் அதிகமாக நடுங்கி அழுதேன்.

”அழுவாம சொல்லு, என்னாச்சு?’’ என்று கேட்டபடி பக்கத்தில் வந்து, கண்களை துடைத்துவிட்டு கேட்டீர்கள்.

”பாம்பு… பாம்பு… உள்ளார… அருகால்ல..’’ என்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டு ஒவ்வொரு வார்த்தையாகச் சொன்னேன்.

மிகச் சாதாரணமாக,

”நீ பாத்தியா?’’ என்றீர்கள்.

”ஆமா… இவ்ளோ பெர்சா… நீட்டா… நான் பாத்தன்… அருகாலு மேல படுத்திர்ன்ச்சி..” கைகளை அகல விரித்துக் காட்டிச் சொன்னேன்.

”எங்க… வா..’’ என்று என் கண்களை மீண்டும் துடைத்துவிட்டு கூட்டிப் போனீர்கள்.

பாம்பைக் கண்ட இடத்திற்கு மீண்டும் வர பயமாக இருந்தாலும், தங்களுடன் வரும் தைரியத்தில் உங்கள் கையை இறுகப் பிடித்துக் கொண்டு பின்னால் பதுங்கிப் பதுங்கி வந்தேன்.

டைலர் கடை, கோழிக்கூண்டு, வாசலில் ஓரமாக வைத்திருந்த சுள்ளி விறகுக் கட்டு, நட்டுவைத்து லேசாகத் துளிர்த்திருந்த ரோஜாச் செடி என ஒவ்வொன்றாக தாண்டிப் போய் வீட்டுக்குள் நுழையும் முன்,

”அது… அது… அங்கதான் இர்க்கும்… கோலு எடுத்துக்கலாம்… கடிச்சிடும்… அடிச்சிட்லாம்..’’ என்றேன் பதற்றத்தோடு.

”கம்முனு பேசாம வாடா… அது நம்மள ஒண்ணும் பண்ணாது..’’ என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தீர்கள்.

நானோ பயந்து நடுங்கி முன் வாசல்படியிலேயே நின்றுவிட்டேன்.

உள்ளே சென்ற நீங்கள்… உள் வாசல்படி, அருகால், கதவு, ஒரை, கொடிக்கை, திண்ணை, எரவாணம், அடுக்குப்பானை, குத்துரல் எங்கும் பார்த்துவிட்டு,

”பாம்பும் இல்ல ஒண்ணும் இல்ல உள்ள வாடா..’’ என்றீர்கள்.

”இல்ல… நான் வரமாட்டன். அது அங்கதான் எங்கனா இர்க்கும்..’’

”நான்தான் சொல்றன்ல… அது நம்மள ஒண்ணும் பண்ணாது வா..”

உங்கள் பேச்சை என்றும் மீறியதில்லை. அது தரும் நம்பிக்கையில் மெதுவாக அடியெடுத்து வைத்து, வெளிக்கதவு, அதன் பின்னாலுள்ள ஆட்டுரல், திண்ணை, எரவாணம், மாடம், உள்கதவு, நெல்ஒரை, கொடிக்கை என எங்கும் பார்த்தபடி சாமி படத்தருகில் நின்றிருந்த தங்களிடம் வந்து கையைப் பிடித்துக்கொண்டு,

”இங்கதான் இருந்துச்சுயா… இத்தன தடியா… இவ்ளோ நீட்டா… அது என்ன நல்லாப் பாத்துச்சி… என்னத் தேடிவந்து கடிக்கப்போது… நான் சாவப்போறன்… என்ன வுடாது..’’ என மீண்டும் மீண்டும் நடுங்கும் குரலில் அழுதபடி ஏதேதோ சொன்னேன்.

என் வலது கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு,

”அட மடயா, அது நம்மள ஒண்ணும் பண்ணாது… வா..’’ என கூட்டிப்போய் தாழ்வாரத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு, அடுப்பங்கரை மேலிருந்த சிறுபித்தளை தவலையிலிருந்து ரோட்டா செம்பில் தண்ணீர் மொண்டுவந்து தந்து குடிக்கச் சொன்னீர்கள், குடித்தேன்.

பாம்பைக் கண்ட பயத்தில் போட்டுவிட்டு வந்த புத்தகப்பை வாசலோரத் திண்ணையில் விழுந்து கிடந்தது. அதை எடுத்து வந்து பக்கத்தில் வைத்துவிட்டு,

”பாம்புனா அவ்ளோ பயமா ஒனக்கு?’’ என்றீர்கள்.

”ஆமா” என தலையை ஆட்டினேன்.

”ஒன்கிட்ட ஒன்னு சொல்வன். பயப்புடாமக் கேக்கணும்..’’ என்று சொன்னதும், அப்போதே இன்னும் அதிகமாக பயப்பட ஆரம்பித்துவிட்டேன்.

வெளியில் காட்டிக்கொள்ளாமல் உங்கள் கையைப் பிடித்துக்கொண்டு, நடுநடுவில் கதவிடுக்கு, கொடிக்கை, உரல், எரவாணம், ஒரை எங்கேனும் பாம்பிருக்கிறதா, அது என்னைப் பார்க்கிறதா எனப் பார்த்தேன்.

”பத்துப் பதனஞ்சு வர்சமா அந்தப் பாம்பு நம்மூட்லதான் இருக்கு. நல்லபாம்பு. அஞ்சாறு வாட்டி நானும் பாத்திருக்கன். அதும் என்ன பாத்திர்க்கு. அம்மாகூட ஒர்வாட்டி பிர்மணக்கிட்ட பாத்திருக்கா. அது பாட்டுக்கு நம்மளப் பாத்ததும் கம்முனு பரணமேல ஏறிப் போய்டும். யாரயும் ஒண்ணும் பண்றதில்ல..’’ என்றதும்,

பயம் குறைந்தவனாக, ”அப்ப அதுக்கும் நம்மூடுதான் வூடாய்யா..?’’ என்று கேட்டேன்.

நான் சொல்வதைக் கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் மென்மையாகச் சிரித்த நீங்கள், எழுந்து குடித்துவிட்டு வைத்திருந்த ரோட்டா சொம்பை எடுத்துப் போய் தவலைமீது வைத்துவிட்டு வந்து அதேஇடத்தில் அதேபோல் கால்மீது கால்போட்டு உட்கார்ந்தீர்கள்.

எரவாணத்தில் வரிசை வரிசையாகத் தெரிந்த ஒட்டடை படிந்த மூங்கில் கழிகள், கதவுக்குப் பின்னால் சுவரோடு சாய்த்துவைத்திருந்த உலக்கை, சில்லாக்கோல், பாரக்குச்சி, கடப்பாரை… அடுப்பருகே தொங்கும் உரி மற்றும் ஆப்பக்கூண்டு, மாடத்தின் மேல் அசையும் துண்டுக் கயிறு, கொடிக்கையில் தொங்கும் அண்ணனின் கருவண்ண பெல்ட், வாசலோரம் காற்றிலசையும் சுள்ளிக் குச்சி, யாவும் அப்பாம்பை நினைவுபடுத்தின. 

”நாம இர்க்கமாரி அது பாட்டுக்கு ஓர் ஓரத்துல இர்க்குது. பாவம் இர்ந்துட்டு போவட்டுமே..’’ என்றீர்கள்.

தங்களின் அப்பேச்சு எனக்கு முதலில் விந்தையாகப் பட்டாலும், சற்றுநேரம் கழித்து யோசிக்கையில் சரியாகவும் பட்டது. அதிலும், அன்று தாங்கள் சொன்ன,

‘நாம வாழற இந்த பூமி மனுசங்களுக்கு மட்டுமானதில்ல. செடி கொடி மரம் பறவ மிருகம் பாம்புன்னு எல்லாத்துக்கும் சொந்தமானது. இத புரிஞ்சிக்காத ஒரே ஜீவன் மனுசன் மட்டும்தான்..’

இவ்வார்த்தைகள் எனக்குள் ஏதோ செய்து என்னைப் புரட்டிப் போட்டதாக உணர்ந்தேன். கசப்பும் சுவைதான், கருப்பும் வண்ணம்தான், முள்ளும் அழகுதான், வலியும் சுகம்தான் என என்னவெல்லாமோ தோன்றியது எனக்குள்.

புல்லின் மீதிருக்கும் சிறு பனித்துளியில் தெரியும் சுகக்காட்சியை மெய்மறந்து பார்க்கிறேன். தூரத்தில் கத்தும் தூக்கணாங்குருவியின் ஈர்க்கும் குரலைக் கூர்ந்து கேட்கிறேன். தீண்டிப்போகும் காற்றின் மென்விரலை உள்ளச்சுவரில் லயித்துணர்கிறேன். கிளையிலிருந்து உதிர்ந்து சுற்றிச் சுழன்று மண்சேரும் இலைகளையும் பூக்களையும் வியந்து ரசிக்கிறேன்.

ஆம்! ஐயா, தங்களின் அவ்வார்த்தைகள் எனக்குள் நுழைந்து நாடி நரம்பெங்கும் பல்கிப் பரவி ஏதேதோ செய்தது. சொல்லமுடியவில்லை. உணர மட்டும் முடிந்தது.

அதுமுதல் ஒருவாரம் வீட்டுக்குள் இருக்கும்போது பயமாக இருந்தாலும், அதன்பின் பயம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது. நான் பார்த்ததுபோல் சண்முகம் அண்ணனும் ஒருநாள் பார்த்துவிட்டு சொன்னதாகச் சொன்னீர்கள். நானும் ஈராண்டு கழித்து ஒருநாள் மாலை வாக்கில் நெல்ஒரை மீது படுத்திருக்கப் பார்த்தேன்.

முதல்தடவை பார்த்தபோது கத்திக் கூச்சலிட்டதுபோல் அப்போது செய்யவில்லை என்றாலும், உள்ளுக்குள் லேசாக பயந்தபடி வெளியே வாசலில் உட்கார்ந்து யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் அம்மாவை சத்தமாகக் கூப்பிட்டபடி திண்ணையில் வந்து உட்கார்ந்து, அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நீங்கள் சொன்னதுபோல் அதுவாக மெல்ல மேலேறி செல்வதைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன்.

அப்போது தாங்கள் ஏற்கனவே சொன்ன,

‘நாம எதுவும் பண்ணாத வரைக்கும் பாம்பு கீம்பு எதுவும் நம்மள ஒண்ணும் பண்ணாது…’ என்ற வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்துபோனது.

இப்படிக்கூட பாம்புகள் இருக்குமா? அதுவும் மனிதர்கள் வாழும் வீட்டில், பல வருடங்கள் யாரையும் ஒன்றும் செய்யாமல். ஏதேதோ யோசித்தேன். வியப்பும் கேள்வியும் மாறி மாறி வந்தது.

அதிலும் உச்சமாக, நாம் மெத்தைவீடு கட்டிய பிறகு கூரை வீட்டைப் பிரித்து காலி செய்தபோது, எவ்வளவு தேடியும் கடைசிவரை யார் கண்ணிலும் அப்பாம்பு படாததைப் பார்த்துவிட்டு தங்களிடம் வந்து கேட்டதற்கு,

”நாம நெனக்றம் மனுசன் மட்டும்தான் புத்திசாலி பலசாலின்னு. அப்டிலாம் ஒரு மண்ணும் கெடயாது. நாம வீடு காலி பண்றம்னு அதுக்கு முன்னாலயே தெரிஞ்சிர்க்கு. அதான் அது நம்ம கண்ல படாம வேற எடம் பாத்துப் போயிட்ருக்கு..’’ என்றீர்கள்.

ஒருபக்கம் பாம்பின் அச்செயல் நினைத்து வியப்பாக இருந்தாலும், இன்னொருபக்கம் இவ்வளவுநாள் இருந்த நம் வீட்டைவிட்டு எங்கோ போனதை நினைத்து வருத்தமாகவும் இருந்தது.

உடனே நான், ”நம்மள மாரி அதுவும் நம்ம புது வூட்டுக்கு வந்திர்ந்தா நல்லாந்திர்க்கும்லயா..’’ என்றதற்கு, எதுவும் சொல்லாமல் லேசாக உதடசைத்து சிரித்துவிட்டு எழுந்து போனீர்கள்.

அச்சிரிப்பு எனக்குள் ஏதேதோ சொல்லிவிட்டுப் போனதாக உணர்ந்தேன் ஐயா.

‘அது எங்கயும் போயிருக்காது. நம்மக் கூட, நம்ம புதுவூட்லதான் ஒர் ஓரமா எங்கனா இருக்கும்..’

‘அது திரும்பயும் அதோட பழய வூட்டுக்கே போயிருக்கும்..’

இன்னும்… இன்னும்.

அதன்பிறகு எத்தனையோ தடவை அப்பாம்பு குறித்த நினைவு வந்து வந்து போயிருக்கிறது. அப்படி ஒவ்வொரு தடவை வந்துபோகும் போதும், அப்பாம்போடு சேர்த்து நம் புது வீட்டின் மெத்தை அறையில் பல்லாண்டுகள் இருந்த பெரிய கரும்பல்லியும் நினைவுக்கு வரும்.

கூடவே… கடிகாரம், கேபிள் சாமான்கள் வைத்திருக்கும் மேசை, அலமாரி, கதவிடுக்கு, பழைய காற்றாடி, ஆச்சாரி ஐயா செய்து தந்த எழுத்து மேசை, என் நோட்டு புத்தகங்கள், சன்னலில் மாட்டியிருக்கும் முகம்பார்க்கும் பெரிய கண்ணாடி போன்றவற்றில் ஏதோ ஒன்றின் பின்னால் அல்லது மேலே இருந்து எட்டிப்பார்க்கும் பல்லியின் முகமும், அப்பாம்பின் முகமும் ஒன்றைப் போல அல்லது ஒன்றேபோலத் தோன்றும்.

அதிலும் கடந்தாண்டு ஊருக்கு வந்திருந்தபோது நம் வீட்டின் நடுவீட்டில் இருக்கும் பெரிய மின்விளக்கில் குருவிகள் கூடுகட்டி இருப்பதையும், நடுநடுவில் இரு குருவிகள் வெளியிலிருந்து மகிழ்வோடு வந்து வந்து போவதையும் பார்த்துவிட்டு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த உங்களை திரும்பிப் பார்த்தேன்.

எதுவும் சொல்லாமல் மெல்லிதாக உதடசைத்து சிரித்தீர்கள்.

அச்சிரிப்பானது, முதல் தடவையாக கூரை வீட்டில் பாம்பை கண்டபோது சொன்ன,

‘நாம இர்க்கமாரி அது பாட்டுக்கு ஓர் ஓரத்துல இர்க்குது. பாவம் இர்ந்துட்டு போவட்டுமே..’

என்ற வார்த்தைகளை மெல்லிய குரலில் காதோரம் வந்து சொல்லிவிட்டுப் போனதாய் உணர்ந்தேன்.

ஆம்! ஐயா, இப்பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. சிற்றெறும்புகள் புழுபூச்சிகள் தொடங்கி, மரம் செடிகொடி புல் பூண்டு பாம்பு பறவை ஆடு மாடு யானை என யாவற்றுக்கும் சொந்தமானது.

நமக்கிங்கே வாழ எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவுக்கு உரிமை அவற்றுக்கும் இருக்கிறது. நாமிங்கே சுற்றித்திரிய எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ, அதேஅளவுக்கு சுதந்திரம் அவைகளுக்கும் உள்ளது.

எனக்குள் இவ்வுயரிய பார்வையை, பண்பை விதைத்தவர் நீங்கள். சக உயிர்கள் மீதான அன்பையும் நேசத்தையும் சொன்னவர் நீங்கள். அதனால்தான் ஐயா, கடிக்கும் எறும்பைக் கூட மன்னிக்க கற்றுக் கொண்டேன். எதிர்படும் மரம் செடி கொடிகள் புல் பூண்டு யாவற்றையும் சொந்தமாக நினைக்க ஆரம்பித்தேன்.

பறக்கும் பட்டாம் பூச்சி, கரையும் காகம், ரீங்கரிக்கும் வண்டு, கூவும் குயில், பிளிறும் யானை, அகவும் மயில், ஓடும் நதி, தொட்டுப்போகும் காற்று, கடலலை, அருவி, மலை, வானம், மழை என அனைத்தையும் மதிக்கவும் நேசிக்கவும் கற்றுக் கொண்டேன்.

இவ்வுயரிய பார்வையை, பண்பை என்னோடு நிறுத்திக்கொள்ளவில்லை. என்னைச் சுற்றியுள்ள பலருக்குள்ளும் விதைத்திருக்கிறேன். ஆம்! ஐயா.

இப்போதெங்கள் அறைக்கு வெளியே செங்குளவிகள் கூடு கட்டியுள்ளன. அதைப் பார்க்காமல் சில தினங்களுக்குமுன் துணி காயப்போடப் போன நண்பனை, தன் கூட்டை உடைக்க வந்ததாக நினைத்து பயந்துபோன ஒரு குளவி கடித்துவிட்டது. வலி தாங்க முடியாமல் துடித்தவன், கோபத்தில் அக்கூடை உடைத்து குளவிகளை துரத்த நினைத்து நீளமான பழுப்பு ஒன்றை எடுத்துப் போனான்.

அவனை தடுத்து நிறுத்தி,

”நாம இர்க்கமாரி அது பாட்டுக்கு ஓர் ஓரத்துல இர்க்குது. பாவம் இர்ந்துட்டு போவட்டுமே..’’

அன்று தாங்கள் சொன்ன அதே வார்த்தைகளைச் சொன்னேன்.

சில நொடிகள் எதையோ யோசித்தவனாய், கையிலிருந்த பழுப்பை தூரப் போட்டுவிட்டு வந்து அமைதியாக உட்கார்ந்தான்.

”நீ அதோட கூட்ட ஒடைக்க வர்றயோன்னு பயந்துபோய் கடிச்சிருக்கு. இல்லன்னா அது நம்மள ஒண்ணும் பண்ணிர்க்காதுடா..’’ என்றேன்.

அதைக் கேட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். 

”நாம எதுவும் பண்ணாத வரைக்கும் பாம்பு கீம்பு எதுவா இர்ந்தாலும் நம்மள ஒண்ணும் பண்ணாது..”

திரும்பவும் உங்கள் வார்த்தைகளையே சொன்னேன்.

மென்மையாக தலையசைத்து புன்னகைத்துவிட்டு எழுந்து வெளியே போய், பக்கத்திலிருக்கும் வேப்ப மரத்தின் பூவிலிருந்து தேனையும், தொட்டியிலிருந்து நீரையும் எடுத்துக்கொண்டு வரும் செங்குளவிகளையும், அவற்றின் சிறுகூட்டையும் தள்ளி நின்று ரசித்தான்.

அதைக் கண்டதும் மனம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததய்யா.

இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டு வளராத மனிதரூப மிருகங்கள்தான் ஊருக்குள் தண்ணீர் குடிக்க வந்த அப்பாவி கர்ப்பிணி யானையை குண்டு வைத்துக் கொன்றார்கள். சக உயிர்கள் மீதான நேசமும் அக்கறையும் இல்லாமல் பேராசை பிடித்து ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டுகிறார்கள். இயற்கை காடுகளை அழித்து கட்டிடக்காடாக மாற்றுகிறார்கள். சில்லறைக் காரணங்களை சொல்லிக் கொண்டு எறும்புகள் தொடங்கி சிங்கம், புலி வரைக்கும் கொல்கிறார்கள். குளங்கள் ஆரம்பித்து மலைகள் வரைக்கும் சிதைக்கிறார்கள்; அபகரிக்கிறார்கள்.

இக்கொடூரர்கள் மத்தியில் கடிக்கும் எறும்பையும் மன்னித்து மகிழ்வோடு எடுத்து கீழேவிடும் பக்குவத்தை பிள்ளைகள் மனத்துக்குள் விதைத்த தங்களைப் போன்ற எல்லாத் தந்தைகளுக்கும், தாய்களுக்கும் இந்நேரத்தில் மனதார நன்றி சொல்லத் தோன்றுகிறதய்யா.

‘நாம இர்க்கமாரி அது பாட்டுக்கு ஓர் ஓரத்துல இர்க்குது. பாவம் இர்ந்துட்டு போவட்டுமே..’

நேற்றிது உங்களின் வார்த்தை. இன்றிது என்னின் வார்த்தை. நாளையிது யாரோவின் வார்த்தை. ஆம்! ஐயா.

விதைக்கும் விதை வீரியத்துடன் இருந்தால், அறுவடை செழிப்புடன் இருக்கும் என்பார்கள். நீங்கள் என்னுள் விதைத்த விதைகள் யாவும் வீரியம் மிக்க நல்விதைகள். அதன் அறுவடை எப்போதும் செழிப்புடன்தான் இருக்கும் ஐயா.

மிக்க நன்றியுடன்,

உங்கள் மகன்

வடிவரசு

(August 13, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=