அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…
அன்புள்ள ஐயாவுக்கு,
உங்கள் மகன் வடிவரசு எழுதுவது. நலமாக உள்ளீர்களா? நான் இங்கு நலமாக இருக்கிறேன். தங்களை நேரில் சந்தித்துப் பேசி இன்றோடு 198 நாட்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட ஆறரை மாதங்கள். என் வாழ்நாளில் இதுவரை இவ்வளவு நாட்கள் தங்களைப் பார்க்காமல் இருந்ததில்லை.
இந்தப் பிரிவும், தூரமும் தினம்தினம் என்னை வருத்தமடையச் செய்கிறது. அதுவும் வயதான தந்தையை பிரிந்திருத்தல் பெரும் கொடுமையென்றே தோன்றுகிறது.
எல்லா பெற்றோர்களும் தம் பிள்ளைகள் தங்களுடன், தம்மருகே இருக்கவேண்டும் என்றே விரும்புவார்கள். அதிலும் தங்களைப்போன்ற தொண்ணூறைக் கடந்தவர்கள் இன்னும் அதிகமாகவே நினைப்பார்கள். என்ன செய்ய ஐயா… காலமும், சூழலும் நம்மை இப்படி பிரித்துவைத்து விளையாடுகிறது. விரைவில் யாவும் சரியாகி தங்களை ஓடோடி வந்து சந்திப்பேன் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறேன். அதற்காக ஒவ்வொரு நாளும் காத்தும் கொண்டிருக்கிறேன்.
இன்னொரு பக்கம் இப்பிரிவானது வாழ்வில் தேவையென்றே தோன்றுகிறது. முன்பை விட அதிகமாக தங்களைப் பற்றி சிந்திக்கிறேன். அதிலும் குறிப்பாக தங்களுடன் சுற்றித்திரிந்த சிறுவயது காலங்களை தினந்தோறும் அசைபோடுகிறேன். சொன்ன வார்த்தைகளை திரும்பத் திரும்ப நினைவடுக்கிலிருந்து பொறுக்கியெடுத்து ஓட்டிப்பார்க்கிறேன்.
இவ்வாழ்க்கை பற்றியும், மனிதர்கள் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள மரம் செடி கொடிகள், புல் பூண்டுகள், ஆடு மாடு கோழிகள் என ஒவ்வொன்றைக் குறித்தும் யோசிக்கிறேன். பார்க்கும் யாவற்றிலும் தங்களைக் காண்கிறேன். ஏற்றம் – இறக்கம், இன்பம் – துன்பம், இரவு – பகல் எதிலும் ஏதோவொரு வகையில் நீங்களும், நீங்கள் சொன்ன வார்த்தைகளும் கலந்திருப்பதை நினைத்து வியக்கிறேன்; மகிழ்கிறேன்.
’ஒரு தந்தையால் ஒரு மகனின் வாழ்வில் இவ்வளவு கூட நிறைந்திருக்கமுடியுமா?’ என பலதடவை யோசித்திருக்கிறேன். அதுவும் தந்தையாக மட்டுமல்லாமல், நல்லாசானாய், நல்ல நண்பனாய், நலம் விரும்பியாய், சக பயணியாய். இன்னும்… இன்னும்… இன்னும்…
ஐயா, உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் நினைத்திருந்தால் இக்கொரோனாவிடமிருந்தும் இச்சென்னையிடமிருந்தும் தப்பித்து எப்போதோ நம் ஊருக்கு வந்திருக்கமுடியும். ஆனால் தாங்கள் சொன்ன வார்த்தைகள்தான் என்னை அவ்வாறு செய்ய விடாமல் முதலில் தடுத்தது.
‘நம்மள சுத்தி பெரிய சோதன ஒண்ணு வரும்போதுதான் நம்மளால முன்னவிட இன்னும் நல்லா எதயும் செய்ய முடியும். நம்மளோட கொறய நெறயாவும், நெறய இன்னும் நெறயாவும் ஆக்க முடியும். எப்ப என்ன சோதன வந்தாலும் எதுக்க மட்டும் தயங்காத. எதயும் துணிஞ்சி எதுத்து நின்னுப் பாரு. செய்ற எல்லாம் முன்னய விட பல மடங்கு வீர்யமா இருக்கறதப் பாக்கலாம்..’ என்பீர்கள்.
அதனால்தான் ஐயா, இக்கொரோனா காலங்களையும் அது தந்துவரும் பல்வேறு விதமான இன்னல்களையும் மகிழ்வோடு எதிர்கொண்டு ஒவ்வொரு நாளையும் பயனுள்ள விதத்தில் எனக்கான கனவை நோக்கி செயலாக்கிவருகிறேன்.
‘உழைப்பு பெருமருந்து; பேராயுதம்’ என்பீர்கள் அடிக்கடி. அதை பலதடவை உணர்ந்திருக்கிறேன். என்றபோதும், இக்காலங்களில் சற்று கூடுதலாகவே உணர்ந்து வருகிறேன்.
‘ஒரு மனிதனால் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு உழைக்க வேண்டும். உழைப்பு சோறு மட்டுமல்ல, அதைத் தாண்டிய மனநிறைவை, உன்னத உணர்வை, நல்லாரோக்கியத்தை, பெருமேற்றத்தை தரும்’ என்பீர்கள்.
ஆம்! ஐயா, தங்களது இவ்வார்த்தைகள் எவ்வளவு மேன்மை வாய்ந்தது, சக்தியுடையது என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து வருகிறேன். தொடர் செயலினூடாகக் கிடைத்த தன்னம்பிக்கையையும், உயர்வினையும் எண்ணி பெருமகிழ்வுறுகிறேன்.
‘எதச் செய்றதுக்கு முன்னாடியும் ஒரு தடவைக்கி பத்து தடவ யோசி’ என்பீர்கள். ‘மத்தவங்கள மாறியே யோசிக்காம நீ நீயா யோசி, தனிச்சி யோசி, எப்பயும் எதுக்கும் யார் பின்னாலயும் போவாத’ என்பீர்கள். இதைத்தான் என் வாழ்வின் வேதவாக்காக நினைத்து ஒவ்வொரு தருணத்திலும் பின்பற்றி வருகிறேன் ஐயா.
பாடல், புத்தகம், பயணம் என எதை எடுத்துக்கொண்டாலும் மற்றவர்களைக் காட்டிலும் தனித்து யோசிப்பதை, அதுவும் நான் நானாக இருந்து, என் மனமும் புத்தியும் சொல்வதைக் கேட்டு, யார் பின்னாலும் செல்லாமல் சிந்தித்து செயலாற்றக் கற்றுக்கொண்டது தங்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பிறகுதான் ஐயா.
‘தந்தையே நல்லாசானாக அமைவதெல்லாம் பெரும் வரம்’ என்பார்கள், நிஜம்தான் ஐயா. இப்பெரும் வரம் பெற யான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. பெற்றோம், வளர்த்தோம், படிக்க வைத்தோம், வேலைக்கு அனுப்பினோம், திருமணம் செய்து வைத்தோம். அதோடு ஒரு தந்தையின் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கும் கோடான கோடி தந்தைகள் மத்தியில் வாழ்வின் சிறுசிறு செயல்கள் தொடங்கி, பெருபெரு முடிவுகள் வரை யாவற்றிலும் ஏதோ ஒரு பாடத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் கற்றுத் தருவதை இந்நாள்வரைக்கும் தனிப்பழக்கமாகவே வைத்துள்ளீர்கள்.
பலதடவை இதுகுறித்தெல்லாம் யோசித்ததுண்டு. நான் மட்டும் அல்ல, தங்களைப் பற்றி எழுதிய ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூலை வாசித்த பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
‘மண்ணோடயும் மக்களோடயும் எப்பயும் இருக்கணும்’ என்பீர்கள். இவ்வார்த்தைக்காகத்தான் இதுநாள் வரை தங்களை கிராமத்திலிருந்து பெயர்த்துவந்து சென்னை மாநகரில் வைத்து துன்புறுத்தாமல் இருந்து வருகிறேன் ஐயா.
மனிதர்களோடு மட்டுமன்றி… மண்ணோடு, மரத்தோடு, ஆடு மாடு கோழி குருவிகளோடெல்லாம் பேசுவீர்கள். அதை பல தடவை கண்டிருக்கிறேன். அதனால்தான், பெற்றெடுத்த தாய் தந்தையிடம் கூட பேச நேரமில்லாமல் வேலை வேலை, பணம் பணம் என அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இம்மாநகர வாசிகளின் வாசம்கூட தங்கள் மீது படாமல் அங்கேயே வைத்திருக்கிறேன்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு நன்றாக நினைவுள்ளதய்யா. 12-வது படிக்கும் வரைக்கும் ஒருநாள் கூட நான் எங்கும் வெளியில் யார் வீட்டிலும் தங்கியது கிடையாது. அப்படியே தங்கிய ஓரிரு நாட்களும் தங்களுடன் அல்லது அம்மாவுடன் தங்கியதாகத்தான் இருக்கும்.
அப்போது நான் ஏழாவது படித்ததாக நினைவு. ஏதோ தவறு செய்துவிட்டேன் என்பதற்காக என்னை நீங்கள் கோபத்தில் திட்டிவிட, கோபித்துக் கொண்டு கோயிலுக்கு சென்றுவிட்டேன். அங்குள்ள பொர்ச மரத்தடியில் பலமணி நேரமாக அமர்ந்து ‘யாராவது வீட்டிலிருந்து சமாதானப்படுத்திக் கூட்டிப்போக வருகிறார்களா’ என நடுநடுவில் பார்த்தபடி எதுவும் செய்யாமல் இறுக்கமாக உட்கார்ந்திருந்தேன்.
அரசங்கல்லின் பின்னால் சூரியன் இறங்கி செவ்வானம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி எங்கும் இருள் படர ஆரம்பித்தது. அருகிலுள்ள புதரில் மெல்லிய சலசலப்பு சத்தம். ஒருபக்கம் பயமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கோபத்தில் ‘வீட்டுக்குப் போகவே கூடாது, எங்காவது ஓடிவிட வேண்டும்’ எனத் தோன்றியது.
ஒருமணிநேரம் சென்றிருக்கும். அடிவயிறு லேசாக வலியெடுத்து பசிக்க ஆரம்பித்தது. கோபத்தை தூர வீசிவிட்டு வீட்டுக்கு ஓடிவிடலாம் என வயிறு சொன்னாலும், புத்தி கோபத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு கூடவே கூடாதென்றது.
ஒருகட்டம் வரைக்கும் பார்த்தவன் யாரும் என்னைத் தேடி வீட்டிலிருந்து வராததால் தெருவிளக்கு வெளிச்சத்தில் விளையாடிக்கொண்டிருந்த என் வயது சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்கள் உறங்கும் புதிதாக கட்டிய மெத்தை மீது போய் நானும் பசியோடு படுத்துக்கொண்டேன்.
எவ்வளவு முயன்றும் தூக்கம் வரவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் அழுகைதான் வந்தது. அங்கே அழுதால் அவர்களின் உறக்கம் கெட்டுவிடும் என சத்தம் போடாமல் மெல்ல எழுந்து படியிறங்கி லேசான சத்தத்துடன் அழுதபடி கீழே வந்தேன். ஊர் மொத்தமும் அடங்கி தெருமுனை வரைக்கும் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது.
மெதுவாக நடந்து கோயிலின் முன்னால் வர, எதிரில் என்னைத் தேடி வந்துகொண்டிருந்தீர்கள். தங்கள் கண்ணில் படக்கூடாதென நினைத்து ஓரமாக இருளில் ஒதுங்கி காட்டுவா மரத்தின் பின்னால் மறைந்து நின்றேன்.
வந்தவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ”எப்பா வடுவரசு’’ என குரலுடைந்துபோய் கூப்பிட்டதும், என்னையே அறியாமல் ஓடிவந்து தங்களைக் கட்டிக்கொண்டு அழுதது இப்போதும் நினைவுள்ளதய்யா.
அதுவும், சாப்பிடாமல் ஊர்முழுக்க என்னைத் தேடிவிட்டு கடைசியாக அங்கே வந்ததாக சொன்னதும் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்துவிட்டேன்.
யாருமற்ற தெருவில் தேம்பித் தேம்பி அழுதபடி தங்களுடன் நடந்து வீட்டுக்கு வரும்போது, ”சிரிப்பு அழுவ மாரி கோவமும் ஒரு மனுசனுக்கு இர்க்கவேண்டியதான். ஆனா, அது சரியானதுக்கு, சரியான நேரத்துலதான் இருக்கணும். அது எங்க, யாரா இருந்தாலும் சரி. இல்லன்னா அது அழிவதான் தரும்’’ என்று சொன்னதை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமுடியாது ஐயா.
இந்த கோபம்தான் நான் லயோலாவில் முதுகலை இரண்டாமாண்டு படிக்கும்போது வந்து என் படிப்பை பாதியில் இடைநிறுத்தம் (discontinue) செய்யச் சொன்னது. ஆம்! ஐயா.
சிறுவயது முதல் என்னை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கியவர் நீங்கள். அதனால் இளங்கலை முடித்ததும் முதுகலை கல்விக்கடன் பெற்று என் கனவுக் கல்லூரியான லயோலாவில் படிக்கப் போவதாக சொல்லிவிட்டு வந்தேன். பல போராட்டங்களுக்குப் பிறகு தண்டராம்பட்டு – இந்தியன் வங்கியில் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணத்தில் 75 சதவீதம் கல்விக் கடன் பெற்று படித்துக்கொண்டிருந்தபோது, கல்லூரியில் ஏழை எளிய மாணவர்களுக்காக வழங்கப்படும் கட்டணச் சலுகைக்காக (fees concession) நானும் விண்ணப்பித்திருந்தேன்.
மழை மெல்ல விட்டுவிட்டு பெய்துகொண்டிருந்த அன்றைய தினம் காலையில் குடை பிடித்தபடி ஆவலோடு போய் அறிவிப்புப் பலகையைப் பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்னைத் தவிர மற்ற யாவருக்கும் கட்டணச் சலுகை தந்திருந்தார்கள். ‘ஏன் எனக்கு மட்டும் தரல?’ என்ற கேள்வியோடு கல்லூரி இணை முதல்வரைப் போய் சந்தித்தேன்.
”நீ லோன் போட்டு படிக்கிறதால உனக்கு concession இல்ல’’ என்றார்.
உடனே நான், ”அப்ப லோன் போட்டுப் படிக்கிறவங்கலாம் பணக்காரப் பசங்களா Father?” என்றேன்.
என் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ”உனக்கு concession இல்ல. நேரத்த வேஸ்ட் பண்ணாமப் போ..’’ என்றார்.
”எதுக்கும் வழி இல்லாதவன்தான் என்னமாரி லோன் போட்டு படிக்கிறான். கேட்ட லோன பேங்க்ல சரியா தந்திருந்தா நான் ஏன் father உங்ககிட்ட வந்து concession கேக்கப் போறன்..” என்று சொல்ல, கோபத்தில் எழுந்து,
”இப்ப வெளியில போறியா இல்லையா?’’ என்று கத்தினார்.
எனக்கும் கோபம் தலைக்கேறியது.
”உங்ககிட்ட வந்து என்னோட நெலமய சொல்லி concession கேக்காம ரோட்ல போறவங்ககிட்டயா father போய் கேக்கமுடியும்?’’ என்று பதிலுக்கு நானும் கத்தி சொல்ல,
”அதான் concession இல்லன்னு சொல்றன்ல. வெளியில இப்ப நீயா போறியா… இல்ல உன் கழுத்தப் புடிச்சித் தள்ளவா?’’ என்றதும், கோபத்தின் உச்சியில் வெளியே வந்து கையில் வைத்திருந்த நோட்டின் நடுமத்தி தாளைக் கிழித்து,
‘எனக்கு இந்த கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை. அதுவும் என் பிரச்சனையை காதுகொடுத்து கேட்காமல் மரியாதைக் குறைவாக நடத்தியவரின் கீழ் படிக்க விருப்பமில்லை. அதனால் நான் எனது படிப்பை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்’ என கடிதம் எழுதி கையெழுத்திட்டு, அதே கோபத்தோடு அப்படியே போய் கல்லூரி முதல்வரிடம் கொடுத்தேன்.
வாங்கிப் படித்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. நடந்தது யாவற்றையும் கேட்டவர், என் கல்லூரி வழிகாட்டியை (mentor) வந்து சந்திக்கும்படி சொல்லி அனுப்பினார். போய்ச் சொன்னேன். அவரும் போய் சந்தித்து என்னைப் பற்றியும், நம் குடும்பச் சூழல் பற்றியும், நான் கல்விக் கடன் வாங்கிப் படிப்பது குறித்தும் சொல்லியிருக்கிறார்.
அதற்குள் என் நலம் விரும்பிகளில் ஒருவரான இன்னோர் அருள்தந்தையிடம் வருத்தத்தோடு போய் நடந்ததைச் சொல்ல, அவர் பங்குக்கு கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு இதை எடுத்துப்போக, ஒட்டுமொத்தத்தில் என்னால் பெரும் கலவரமே உள்ளுக்குள் நடந்திருக்கிறது.
இரண்டு நாள் கழித்து வகுப்பறையில் உட்கார்ந்திருந்த என்னை இணை முதல்வர் அழைப்பதாக வந்து அவரது உதவியாளர் கூட்டிப் போனார். உள்ளேநுழைந்ததும் மரியாதையோடு வரவேற்றுப் பேசியவர், தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து நான் எதிர்பார்த்ததை விட பெரும் கட்டணச் சலுகை தந்தனுப்பினார்.
அந்த நிமிடம் தாங்கள் சொன்ன ‘சரியானதுக்கு, சரியான நேரத்துல கோவப் படணும். அது எங்க, யாரா இருந்தாலும் சரி’ என்ற வார்த்தைகள்தான் என்னை வழிநடத்தியதாக மனதார உணர்ந்தேன் ஐயா.
இப்படி என் வாழ்வில் எத்தனையோ சம்பவங்களை தங்கள் வார்த்தைகள் என்னை வழி நடத்தியதற்கு உதாரணமாக சொல்ல முடியும் ஐயா.
அதிலும் தங்களை விட்டும், வீட்டை விட்டும், ஊரை விட்டும் ஒருநாளும் பிரிந்திராத என்னை பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் இளங்கலை சேர்த்துவிட்டு வந்த முதல்வாரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் என்னால் மறக்க முடியாதய்யா.
வீட்டைவிட்டு, ஊரைவிட்டு இவ்வளவு தூரம் வந்திருப்பதை நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. யாருமற்ற அனாதை போன்று உணர ஆரம்பித்தேன். போர்க்களத்தில் வாள் வீச்சாளனுக்கு கை போனால் எப்படி இருக்குமோ, ஓட்டப்பந்தய வீரனுக்கு விபத்தில் கால் துண்டானால் எப்படித் துடிப்பானோ அப்படி இருந்தது எனக்கு.
சரிவர சாப்பிடப் பிடிக்கவில்லை; சரியான உறக்கமில்லை; வகுப்பில் பாடங்களும் கவனிக்க முடியவில்லை. என்ன செய்கிறேன், ஏது செய்கிறேன் என எதுவும் தெரியாமல் தனியாக அங்குமிங்கும் நடக்கிறேன். யாருமற்ற தனியிடம் தேடிப்போய் கத்தி அழுகிறேன். எப்போதும் தங்களைப் பற்றியும் வீட்டைப் பற்றியும்தான் ஞாபகம்.
அதிலும் நம் கிராமத்தில் என் வயதொத்த சிறுவர்களுடன் காடு, மேடு, ஏரி, மலை, ஆறென சுற்றித்திரிந்த என்னால் அவ்வளவு சீக்கிரத்தில் அங்கிருந்த விடுதி மாணவர்களுடனும், உடன் படித்தவர்களுடனும் பேசிப் பழக முடியவில்லை. அருகிருந்த மரம் செடிகள் கூட மிக அந்நியமாகப் பட்டது. யார் முகத்தையும் எதிர்கொள்ள பயமாக இருந்தது.
யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு ஓடி வந்துவிடலாமா என யோசித்தேன். பையை தூக்கிக்கொண்டு பேருந்து நிலையம் வரைக்கும் வந்துவிட்டேன் ஒருநாள். என்றபோதும், என்னால் துணிவோடு பேருந்தேற முடியவில்லை.
‘எப்பா, எங்களப் பத்தி எந்தக் கவலயும் படாம நல்லாப் படிக்கணும். நீ நல்லார்ந்தனா அதான் எங்குளுக்கு பெரிய சந்தோசம்..’ என்று ஊரிலிருந்து கல்லூரிக்குப் புறப்பட்டு வரும்போது தாங்கள் சொன்ன வார்த்தைகள்தான் திரும்பத் திரும்பக் கேட்டன. அதுதான் என்னை அங்கிருந்து வரவிடாமலும் தடுத்தது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முழுக்க கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இருந்தும் தனியாக, அதுவும் யாருமற்ற பொட்டல் காட்டில் இருப்பதாக உணர்ந்தேன். கண்ணுக்குத் தெரியாத பெருமிருகமொன்று தன் கோரப் பற்களைக் காட்டி தன் கொடுங்கரத்தால் என்னைத் தாக்கி விழுங்க காத்திருப்பதாகத் தோன்றியது.
மேற்கு வானம் கதிரவனை அனுப்பிவைத்து எங்கும் இருளை கவிழ்த்துக்கொண்டிருந்தது. சுற்றிலும் இருந்த விளக்குகள் யாவும் ஒற்றை நொடியில் உயிரூட்டப்பட்டு ஒளியை சிந்த ஆரம்பித்தது.
என்முன் அப்போது இரு வழிகள் மட்டுமே இருந்தன. ஒன்று, பேருந்தேறி ஊருக்கு வந்துவிடுவது; அல்லது, திரும்பி கல்லூரி விடுதிக்கே சென்றுவிடுவது.
‘எப்பா, எங்களப் பத்தி எந்தக் கவலயும் படாம நல்லாப் படிக்கணும். நீ நல்லார்ந்தனா அதான் எங்குளுக்கு பெரிய சந்தோசம்..’
திரும்பவும் தாங்கள் சொன்ன அதே வார்த்தைகள்.
கரும்புகையை வெளிவிட்டபடி திருச்சி நோக்கி செல்லும் அரசுப்பேருந்து, எதிரில் வரிசையாய் நின்றிருக்கும் பெயர்தெரியா மரங்கள், கூவி வறுத்த வேர்க்கடலை விற்றுப்போகும் ஓலப்பல் பாட்டி, எதையோ தவறவிட்டு தேடிக்கொண்டிருக்கும் பச்சை சட்டை போட்ட நடுவயதுக்காரர் என எல்லாம் சேர்ந்து ஒற்றைக் குரலில் சொல்வதுபோல் கேட்டது.
அதன்பிறகு யோசிக்கவெல்லாம் இல்லை. நேராக கிளம்பி சாலையோரம் பொடிநடையாக நடந்து வேர்க்க விறுவிறுக்க விடுதிக்கு வந்துசேர்ந்தேன்.
அதே இடம், அதே மரங்கள், அதே மலை, அதே மாணவர்கள். என்றாலும், சற்று நெருக்கமாக உணர முடிந்தது. வழியில் இருபக்கமும் இருந்த மரங்கள் யாவும் நேசக் கரம் நீட்டி என்னை அன்போடு அணைத்து, ‘கவலப்படாத நாங்க இருக்கம் ஒனக்கு’ என்று சொல்வதாகத் தோன்றியது. எதிர்கொள்ள பயந்து நடுங்கிய அயல்முகங்கள் அனைத்தும் பல வருடம் பேசிப்பழகிய இயல்முகங்களாக தெரிந்தன.
‘எப்பா, எங்களப் பத்தி எந்தக் கவலயும் படாம நல்லாப் படிக்கணும். நீ நல்லார்ந்தனா அதான் எங்குளுக்கு பெரிய சந்தோசம்..’
திரும்பவும் தாங்கள் சொன்ன அதே வார்த்தைகள்.
விறுவிறுவென அறைக்குப் போய் பையை வைத்துவிட்டு, பெட்டிக்குப் பின்னால் இருந்த தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்து, மைதானத்தில் இறங்கி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடந்தேன்.
மெல்லிருளில் இருபக்கமும் தெரியும் மலைகளையும், மரங்களையும், கீழ்வானில் முளைத்துவரும் இளமஞ்சள் நிலவையும் பார்த்து ரசித்தவாறு மகிழ்வோடு உணவறைக்குள் நுழைந்து மாணவர்களோடு மாணவனாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தேன்.
எவ்வளவு புரண்டு படுத்தும் ஒருவாரமாக வராத தூக்கம் அன்றிரவு படுத்த மறுகணமே வந்தது. எவ்வளவு முயன்றும் கவனிக்க முடியாத வகுப்புகள் அதுமுதல் இனிக்க ஆரம்பித்தன. தொண்டைக்குள் இறங்க மறுத்த உணவுகள் அனைத்தும் பிடித்துப்போனது.
ஆம்! ஐயா, பள்ளியில் சராசரி மாணவனாக இருந்த நான், அதுமுதல் வகுப்பில் முதல் மாணவனாக வர ஆரம்பித்தேன். யாருடனும் எளிதில் ஒட்டாமல் இருந்த நான், பெரும் கூட்டத்தோடு எப்போதும் வலம்வரத் தொடங்கினேன்.
‘எப்பா, எங்களப் பத்தி எந்தக் கவலயும் படாம நல்லாப் படிக்கணும். நீ நல்லார்ந்தனா அதான் எங்குளுக்கு பெரிய சந்தோசம்..’
இத்தனை மாற்றத்துக்கும், ஏற்றத்துக்கும் காரணம் தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகள்தான் என்பதை அப்போது மட்டுமல்ல, இப்போதும் என்னால் உணர முடிகிறதய்யா.
நீங்கள் அன்பின் ஆழ்கிணறு. சக உயிர்கள் மீதான பெருநேசம் கொண்டவர். சுயநலம் இல்லாதவர். பொதுநலம் ஒன்றையே எப்போதும் விரும்புபவர். அதிலும் என்மீது சொல்ல முடியாத அளவுக்கு அக்கறையும் பாசமும் கொண்டவர். அப்படித்தான் நானும் என தாங்களும் அறிவீர்கள். அதனால்தான் ஐயா தங்களை ஓடோடி வந்து சந்திக்க வாய்ப்பிருந்தும் வராமல் இங்கேயே இருக்கிறேன்.
எங்கே இக்கொரோனா பெருந்தொற்று அதிகமாகப் பரவிவரும் இச்சென்னையிலிருந்து வந்து தங்களைப் பார்த்தால் என்னிடமிருந்து வயதான உங்களுக்கோ, அம்மாவுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ வரக்கூடும், ஊரில் பலரும் சங்கடப் படுவார்கள், நாலுவிதமாய்ப் பேசுவார்கள் என்றெல்லாம் யோசித்துதான் இத்தனை நாளும் வராமல் இருக்கிறேன் ஐயா. எனதிந்நிலையை தாங்கள் அறிவீர்கள், புரிவீர்கள் என உறுதியாக நம்புகிறேன் ஐயா.
பார்த்து பத்திரமாக இருங்கள். வேளைக்கு வேளை தவறாமல் சாப்பிடுங்கள். வீட்டில் அனைவரையும் கேட்டதாகச் சொல்லுங்கள். நிலத்திற்குச் செல்லும்போது தவறாமல் நான் வாங்கித் தந்த மழைக் கோட்டை எடுத்துச் செல்லுங்கள். மரிசி மீது நடக்கும்போது மிக கவனமாக நடங்கள். மழை ஈரத்தில் புல் வழுக்கக்கூடும்.
முடிந்தவரை கடினமான வேலைகள் எதுவும் செய்யாமல் உங்களால் முடிந்த எளிய வேலைகளை மட்டும் செய்யுங்கள்.
உங்களுக்காக தங்கள் விருப்ப வண்ணங்களில் இரண்டு டீ – சர்ட் ஆசை ஆசையாக வாங்கி வைத்திருக்கிறேன். தங்களிடம் பாடிக் காட்ட நான்கு பாடல்கள் எழுதியிருக்கிறேன். வழக்கம் போல் கேட்க சில கேள்விகளும் இருக்கின்றன.
மணலூர்பேட்டை அத்தை பற்றிய கதையை மீண்டுமொரு தடவை வரும்போது கேட்க நினைத்திருக்கிறேன். உடன் பூலா மற்றும் அவிஞ்சி மரம் பற்றியும், பூளைப் பூ மற்றும் சுக்கங்கொடி பற்றியும் கேட்கலாம் என்றிருக்கிறேன்.
சோமாசம் பாறை, படி சுனை, பாலு செட்டியார் கிணறு, எலந்தை மர ஓடை, மணங்கொல்லை ஒற்றை பனைமரம், கோயில் பொர்ச மரம், வீட்டு கறிவேப்பிலை மரம், பொரடியாத்தா, வேடியப்பன், கிரீன் குட்டை, கண்ணாறு, சட்டப்பாறை சந்து, கோடிக்கல் அனைத்தையும் கேட்டதாகச் சொல்லுங்கள்.
முடிந்தால் என் சார்பாக நம்மூர் பிள்ளையாரிடம் சீக்கிரம் இக்கொரொனா ஒழிந்து நாடும் நாட்டுமக்களும் பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். மறக்காமல் பதினோரு தேங்காய்களை நானே நேரில் வந்து உடைப்பதாகச் சொல்லுங்கள்.
‘மோடும் பள்ளமும் சேந்ததுதான் வாழ்க்க’ என்பீர்கள்.
‘பிரிவும் சேர்வும் எணஞ்சதுதான் ஒறவு’ என்பீர்கள்.
இப்பிரிவையும் அது தரும் நினைவுகளையும், ஏக்கத்தையும் அப்படித்தான் ஐயா எடுத்துக்கொள்கிறேன். கூடிய சீக்கிரத்தில் வந்து தங்களைச் சந்திப்பேன். அதே அன்போடும், ஆசையோடும் உங்கள் கரம்பற்றிப் பேசுவேன். கள்ளம் கபடமற்ற தங்களது வெள்ளந்திச் சிரிப்பைப் பார்த்து ரசிப்பேன். மணிக்கணக்காக உங்களை பேசச் சொல்லிக் கேட்பேன் ஐயா.
இப்படிக்கு.,
உங்கள் மகன் வடிவரசு
(August 11, 2020)
*