அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அன்புள்ள வாசகர்களுக்கு,

‘என்னிலிருந்து ஐயாவையும், ஐயாவிலிருந்து என்னையும் ஒருபோதும் பிரிக்கமுடியாது’ என்பதை என்னை அறிந்தவர்களும், எனது தந்தை குறித்து நான் எழுதிய என் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’யை வாசித்தவர்களும் நன்கறிவர்.

அப்படிப்பட்ட ஐயாவை பார்த்துப் பேசி கிட்டத்தட்ட ஆறரை மாதமாகிறது. என் வாழ்நாளில் இதுவரை இவ்வளவு நாட்களெல்லாம் பார்க்காமல், பேசாமல் இருந்ததில்லை. இக்கொரோனோ வீடடைவு காலத்தில் இப்பிரிவும், இத்தூரமும் எனக்குள் இன்னும் இன்னும் அதிகமாக அவரைப் பற்றி சிந்திக்கவும், செயலாற்றவும் வைத்தது. ஆம்!

இந்நிலையில் சிறுவயது முதல் கடிதங்கள் மீது பெரும் ஈர்ப்பும், ரசனையும் கொண்ட எனக்கு… அவரிடம் பகிர எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. அதில் பாதிக்குப் பாதி அவருக்குத் தெரிந்த, அவரின் – என்னின் வாழ்ந்த வாழ்க்கை. மீதிப் பாதி அவருக்குத் தெரியாத எனது வாழ்ந்த – வாழும் – வாழப்போகும் வாழ்க்கை.

இதையெல்லாம் தினமொரு கடிதமாக அவரது 96-வது பிறந்த தினமான செப்டம்பர் 1, 2020 வரைக்கும், ஆகஸ்ட் 11-லிருந்து தொடர்ந்து 22 நாட்கள் எழுதினால் எப்படியிருக்கும் என என் மனதுக்குள் தோன்ற, அதை சில நண்பர்களிடம் பகிர்ந்தேன். அவர்களும் ஆர்வத்தோடு ‘கடித முறையில் வாழ்க்கைப் பதிவு… கேட்கவே நல்லாருக்கே’ என என் எண்ணத்தையும், ஆர்வத்தையும் இன்னும் அதிகமாக்கினார்கள்.

அதன்பின் பெரிதாகவெல்லாம் யோசிக்கவில்லை. உடனே ஒருநாள் முன்னால்… ஆகஸ்ட் பத்தாம் தேதி மாலை வாக்கில் முகநூலில் ஒரு பதிவு போட்டுவிட்டு, தினந்தோறும் ஒரு கடிதமென எழுதி சரியாக காலை பதினொரு மணிக்கு பதிவு செய்தேன்.

கவிதை, பாடல், கட்டுரை, கதை என யாவற்றை எழுதும்போதும் இல்லாத தனிச்சுகத்தை ஒவ்வொரு கடிதம் எழுதுகையிலும் உணரமுடிந்தது. வாசித்தவர்களும், ‘இப்படிக்கூட கடிதம் எழுதலாமா? ஒவ்வொரு கடிதமும் ஓர் அத்தியாயம் போல வாழ்வின் பெரும் படிப்பினைகளை கற்றுத் தருகின்றனவே’ எனத் தொடர்ந்து என்னுடன் வாசித்து கொண்டாடித் தீர்த்தார்கள்.

கடிதங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து எடுத்துக் கோத்திருக்கிறேன். வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவும், வாழப்போகும் வாழ்க்கையை அழகுற பட்டைதீட்டவும் இக்கடிதங்கள் யாவும் எழுதிய என் உட்பட யாவருக்கும் உதவக்கூடியதாக நினைக்கிறேன். நம்புகிறேன்.

22 நாட்கள் தொடர்ந்து 22 கடிதங்கள் எழுதியதன் மூலமாக, எழுதுவதற்கு முன்னிருந்த இடத்திலிருந்து நெடுந்தொலைவுக்கு வந்திருப்பதாக உணர்கிறேன்.

இன்னொரு பக்கம், இக்கடிதங்கள் யாவும் என் ஐயாவுக்கு எழுதியதாக மட்டும் நினைக்கவில்லை. எனக்கு நானே என்னைப் பற்றி எழுதிக் கொண்டவை. திரும்பத்திரும்ப நானே வாசிக்க வேண்டியவையாக நினைக்கிறேன். ஆம்!

சுயசரிதை எழுதும் அளவுக்கு வாழ்வில் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை என்றாலும், அர்த்தமுள்ள ஒரு வாழ்வை இதுநாள் வரை வாழ்ந்திருப்பதாக உணர்க்கிறேன். அதனால் சுயசரிதை எழுதும் தகுதியுள்ளதாகவே கருதுகிறேன்.

அவ்வகையில் ‘அன்புள்ள ஐயாவுக்கு’ என ஆரம்பிக்கும் இக்கடிதங்கள் யாவும் என் தந்தைக்கு நான் எழுதிய எனது சுயசரிதை. அகத்திரியில் ஏற்றிய நெருப்பு. ஆம்!

இதை வாசிக்கும் எங்கோ, யாரோ ஒருவரின் வாழ்வில் சிறு ஏற்றமேனும் நிகழ்ந்தால்… அதையே இந்நூலுக்கான பெருவெற்றியாக கருதுவேன்.

செப்டம்பர் 02, 2020                                                   நம்பிக்கையுடன்,

சென்னை – 34                                                                       வடிவரசு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=