அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை
அன்புள்ள ஐயாவுக்கு,
உங்களிடமிருந்து இதுவரை நான் கற்றுக்கொண்டதெனப் பார்க்கப்போனால் எத்தனையோவற்றை சொல்லமுடியும். என்றபோதும், அவற்றில் முதன்மையான ஒன்றாகப் பார்ப்பது நடக்கும் பழக்கத்தைதான் ஐயா.
நடத்தல் எத்தனை சுகமானது, எத்தனை எத்தனை படிப்பினைகளை தரக்கூடியதென சிறு வயது முதல் தங்களோடு நடந்து திரிந்த காலங்களையும் இடங்களையும் நினைத்துப் பார்க்கையில் இப்போது தோன்றுகிறதய்யா.
அதிலும் மனமானது ஏதோவொன்றால் காயப்பட்டு உடையும்போதும், எதையோ நினைத்துக் குழப்பத்தில் உழலும்போதும் நடத்தல் எவ்வளவு பெரிய மாமருந்தாக இருக்கும் என்பதை தாங்கள் சொல்லித்தான் முதல் தடவையாக தெரிந்து கொண்டேன் ஐயா.
அப்போது நான் மாந்தோப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். நெல்லிக்குப்பத்தில் உள்ள பாட்டி வீடும், அவ்வூரும் பிடித்த இடங்களில் எப்போதும் ஒன்றென்பேன். அதிலும் அங்குள்ள நம் தாய் மாமன்களில் நடராசு மாமா, செவடன் மாமா தாண்டி சக்கர மாமா மீது அளவுகடந்த பாசம் கொண்டிருந்தேன்.
ஒருநாள் மாலை பள்ளிவிட்டதும் அங்கிருந்து நம்மூர் பசங்களோடு எடத்தனூர் கால்வாய்க்கரை வழியாக நடந்து மலையை ஒட்டிய மண்பாதை வழியாக வந்து கொண்டிருந்தேன். எதிரில் தற்செயலாக தன் டி.வி.எஸ் எக்ஸ்.எல் பைக்கில் வந்துகொண்டிருந்த சக்கர மாமா, என்னைப் பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தி,
”என்னடா ஸ்கூல்ல இர்ந்து வர்றியா?’’ என்றார்.
”ஆமா மாமா..’’ என்றேன்.
மெல்ல பல் தெரிய சிரித்தபடி,
”நல்லாருக்கியா, வீட்ல எல்லாம் எப்டி இருக்காங்க?’’ என்றார்.
”எல்லாரும் நல்லாருக்காங்க. நீங்க எப்டி இருக்கீங்க மாமா?’’ என்றேன்.
”எனக்கென்ன, நான் நல்லாருக்கன்..’’ என்று சொல்லிவிட்டு, அம்மாவைப் பற்றியும் உங்களைப் பற்றியும் தனியாக விசாரித்தவர், போகும்போது கையில் ஐந்து ரூபாய் தாள் ஒன்றைத் தந்துவிட்டு போனார்.
இது நடந்து சரியாக ஒரு வாரமிருக்கும். யாரிடமோ சொல்லியனுப்பி என்னையும், அம்மாவையும், உத்திரம் அண்ணனையும் சனிக்கிழமை புறப்பட்டு தண்டராம்பட்டுக்கு வரச்சொல்லியிருந்தார்.
போனதும், எனக்காக அழகான குருதி செந்நிறத்தில் கருப்பு புள்ளிபோட்ட சின்ன சைக்கிள் ஒன்றை தன் சைக்கிள் கடைக்குள்ளிருந்து வெளியே எடுத்துவந்து தந்தார்.
எனக்கும் அம்மாவுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.
உடனே அம்மா, ”எதுக்குடா இப்ப இதெல்லாம்… காசில்லாத நேரத்துல..’’ என்றார்.
அதைக்கேட்டு மென்மையாகப் புன்னகைத்த மாமா, ”நான் இப்ப ஒன்கிட்ட காசு கொடுன்னு கேட்டனாக்கா. படிக்கிற பையன் தெனம் நாலஞ்சி கிலோமீட்டர் நடந்துபோறான். பாத்துனு சும்மாருக்கச் சொல்றியா. எடுத்துனுப் போக்கா..’’ என உரிமையோடு சொன்னதும், அம்மா மறுக்காமல் உத்திரம் அண்ணனிடம் சொல்லி ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு போகச்சொன்னார்.
மாமா எனக்காக அன்று பேசிய வார்த்தைகளை நினைத்து நினைத்து மகிழ்ந்தேன். அதுவும், ‘படிக்கிற பையன் தெனம் நாலஞ்சி கிலோமீட்டர் நடந்துபோறான். பாத்துனு சும்மாருக்கச் சொல்றியா..’ என்ற வார்த்தைகள், அவர்மீதான மதிப்பையும், பாசத்தையும் பலமடங்கு அதிகமாக்கியதாக உணர்ந்தேன்.
சக்கர மாமாவை எனக்கு மிகப் பிடிக்க எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், முதன்மையான ஒன்றாக நினைப்பது… அவர் தங்களைப் போன்று யாருக்கு என்ன தேவையென தெரிந்துகொண்டு, அதை அவர்கள் கேட்கும் முன்னமே ஓடோடி போய் உதவும் பண்புதான். அன்றவர் எனக்காக சைக்கிள் தந்ததையும் அப்படித்தான் பார்க்கிறேன் ஐயா.
அதுவும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையிலிருந்த நம் குடும்பச் சூழலை நன்கறிந்தவர். இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும்போது சைக்கிள் வாங்குவது என்பது நம்மால் இயலாத காரியம் என்பதை உணர்ந்துதான், அவராக நான் பள்ளிக்கு தினமும் நடந்துபோய் வருவதைப் பார்த்துவிட்டு மனம் கேட்காமல் தன் சைக்கிள் கடையிலிருந்து சைக்கிள் ஒன்றை வரவழைத்து தந்தனுப்பினார்.
அது தொடங்கி அவரை நான்கைந்து தடவை மட்டுமே பார்த்ததாக நினைவு. அதிலும் ஒருதடவை தன் மனைவியையும், இரு மகன்களையும் கூட்டிக்கொண்டு நம் வீட்டுக்கு வந்திருந்தபோது பார்த்தது. அவர் மகன்கள் கார்த்திக், விஜய் இருவரையுமே மிகப் பிடிக்கும் எனக்கு. அவர்களுடன் விளையாடிய நாட்களை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.
அதன் பின்பொருநாள் மாலைநேரம் நம்மூர் மஜித்துக்குப் பின்னாலிருந்த கரம்பில் லேசாக தூறும் மழையில் நனைந்தபடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். மாலை ஐந்தரை மணியிருக்கும். திருவண்ணாமலையிலிருந்து வந்துபோகும் டவுன் பஸ்ஸில் வந்திருந்த நூருல்லா பாய் என்னிடம் வந்து,
”ஒங்க மாமா விஜி சைக்கிள் ஷாப் ஓனர் தூக்குப்போட்டு செத்துட்டாராம்..’’ என்றார்.
திடீரென வந்து அவர் அப்படி சொன்னதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருபக்கம் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இன்னொரு பக்கம் என்ன செய்வதெனத் தெரியாமல் அங்கிருந்து கிடுகிடுவென வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தால் நீங்களும் அம்மாவும் அங்கே இல்லை. பெரிய அண்ணனும் பழனி அண்ணனும் மட்டும்தான் இருந்தார்கள்.
ஓடிவந்த என்னையும் என் முகத்தையும் பார்த்த பெரிய அண்ணன்,
”சக்கர மாமா தூக்குமாட்டி செத்துட்டாராம். ஐயாவும் அம்மாவும் காலில நம்மல வரசொல்ட்டு இப்பதான் நெல்லிக்குப்பத்துக்கு கெளம்பிப் போனாங்க..’’ என்றார்.
அதைக் கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியில் வந்து, டைலர் கடை வாசலில் நிறுத்தியிருந்த அவர் எனக்காகத் தந்த சைக்கிள் அருகில் போய் உட்கார்ந்து, அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நன்கு இருட்டி ஊரடங்கும் வரைக்கும் அங்கேயே உட்கார்ந்து மாமாவைப் பற்றியும் அவரது இரு மகன்கள் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தேன்.
அதிலும் அவர் கடைசியாக நம் வீட்டுக்கு வந்திருந்தபோது சொன்ன,
‘நல்லாப் படிச்சி பெரியாளா வரணும். குடும்பக் கஷ்டத்தலாம் எப்பயும் மனசுல வச்சி நடந்துக்கணும்..’
என்ற வார்த்தைகள், திரும்பத் திரும்பக் காதில் கேட்டபடி இருந்தது.
அண்ணன் வந்து இரவு உணவு சாப்பிடக் கூப்பிட்டார். பசியும் எடுக்கவில்லை, சாப்பிடவும் தோன்றவில்லை. அப்படியே போய் வெறும் வயிற்றோடு படுத்துக்கொண்டேன்.
‘நல்லாப் படிச்சி பெரியாளா வரணும். குடும்ப கஷ்டத்தலாம் எப்பயும் மனசுல வச்சி நடந்துக்கணும்..’
அவர் சொன்ன இவ்வார்த்தைகளையும், அவரையும் மறுபடி மறுபடி நினைத்துக்கொண்டு வெகுநேரம் தூங்காமல் இருந்த நான் சட்டென ஒருகட்டத்தில் தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலையில் எழுந்து அண்ணனோடு அவர் வாங்கித்தந்த சைக்கிளில் ஊரப்பாக்கம் போய், ஆற்றில் இறங்கி மறுகரை ஏறி எடத்தனூர் கோயில் மலையை ஒட்டிய மண்பாதை வழியாக நெல்லிக்குப்பம் வந்தபோது, பாட்டி வீட்டின் முன்னால் பெரும்கூட்டம் கூடி அழும் சத்தம் கேட்டது.
தெருமுனையில் இருந்த கூரை வீட்டின் பக்கத்து சந்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு நடந்து வருகிறோம். எப்போதும் லேசாக பல் தெரிய மென்மையாக சிரித்துப் பேசும் சக்கர மாமாவை உயிரற்ற பிணமாகப் பார்க்கும் தைரியம் இருப்பதாய் தோன்றவில்லை.
அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. என்னுடன் வந்த அண்ணன்கள் இருவரும் என்னைக் கடந்து போய் கூட்டத்துக்குள் நுழைந்து கட்டிலில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் மாமாவின் உடலை பார்க்கிறார்கள்.
நானோ வந்து பார்க்கும் தைரியமற்றவனாக பக்கத்திலிருந்த கோயிலோர திட்டருகில் ஒதுங்கி நிற்கிறேன்.
‘நல்லாப் படிச்சி பெரியாளா வரணும். குடும்பக் கஷ்டத்தலாம் எப்பயும் மனசுல வச்சி நடந்துக்கணும்..’
திரும்பத் திரும்ப அவர் சொன்ன அதே வார்த்தைகள் காதில் கேட்கிறது. அடுத்த நொடியே இதைச் சொன்ன மாமா இப்போது உயிரோடு இல்லை எனும் நினைவு வர, அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.
உடனே, ‘இல்ல… மாமா சாவல… அவர் இங்கதான் எங்கயோ பக்கத்துல இருக்காரு… மறஞ்சிருந்து நம்மளப் பாத்து சொல்றாரு..’ என என்மனம் உள்ளுக்குள் பெருங்குரலெடுத்து கத்திச் சொல்கிறது.
‘இங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கே ஓடிவிடலாமா? இல்லை எங்காவது யாருக்கும் சொல்லாமல் போய்விடலாமா?’
இப்படி ஏதேதோ நினைக்கிறேன்.
அருகிலிருந்த மெத்தை வீட்டின் திண்ணையில் கூட்டத்தோடு உட்கார்ந்திருந்த நீங்கள் என்னைப் பார்த்துவிட்டு, நான் இன்னமும் மாமாவின் உடலை வந்து பார்க்காமல் பயந்துகொண்டு தூரமாகவே நிற்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு மெல்ல எழுந்து அருகில் வந்தீர்கள்.
”எய்யா வடுவரசு, ஏன்ய்யா இங்கயே நிக்கற?’’ என்றீர்கள்.
எதுவும் சொல்லாமல் உங்கள் முகத்தையும், உங்களுக்குப் பின்னால் இரண்டு வீடுகள் தள்ளி பாட்டி வீட்டின் வாசலில் கிடத்திவைக்கப்பட்டிருக்கும் மாமாவின் உடலை சூழ்ந்து நிற்கும் கூட்டத்தையும் மாறி மாறிப் பார்க்கிறேன்.
என்னையும் எனதச்செயலையும் சட்டெனப் புரிந்துகொண்ட நீங்கள்,
”ஏன்ச்சி வா, கொஞ்ச தூரம் நடந்துபோய் வரலாம்..’’ என்று சொல்லி, கை பிடித்துக் கூட்டிக்கொண்டு தெருமுனைக்குப் போய் இடதுபக்கம் திரும்பி, சற்று நடந்து வலதுபக்கம் போகும் தார்ச் சாலை வழியாக தண்டபாணி மாமன் வீட்டைக் கடந்து ஊருக்கு வெளிப்புறம் இருக்கும் சேந்து கிணற்றைத் தாண்டி, தென்முடியனூர் செல்லும் சாலை வரைக்கும் எதுவும் பேசாமல் நடந்துபோய், பின் அங்கிருந்து திரும்பவும் வந்தவழியே நடந்து ஊருக்குள் வந்தோம்.
அதே கோயிலோரத் திட்டு. நான் முன்பு நின்றிருந்த அதே இடம்.
என்னை அங்கேயே விட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாகப் போய் ஏற்கனவே உட்கார்ந்திருந்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டீர்கள்.
எனக்குள் கடலெனப் பெருகியிருந்த வலியும் பயமும், சிரித்துப் பேசிய மாமா இறந்து கிடப்பதை போய்ப் பார்ப்பதிலிருந்த தயக்கமும் முற்றும் விலகியிருந்தது.
உடனே அங்கிருந்து மெதுவாக நடந்துபோய் கூட்டத்தின் உள்புகுந்து நடுவில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் மாமாவின் உடலைப் பார்த்ததும் நேற்றுமாலை முதல் முட்டிக்கொண்டிருந்த அழுகை உடைந்து பீறிட சத்தம் போட்டு அழ ஆரம்பித்தேன்.
அவர் கையைப் பிடித்துக்கொண்டு ‘மாமா மாமா… ஏன்ச்சி வா மாமா..’ என்று ஏதேதோ சொல்லி கத்தி தேம்பித் தேம்பி அழுகிறேன். என் பக்கத்தில் மாமாவின் இரு மகன்களும் வந்து நின்று எதுவும் புரியாமல் பார்க்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் எனதழுகை இன்னும் அதிகமானது.
பின்னாலேயே வந்து சற்று தள்ளி நின்றபடி நான் அழுவதைப் பார்த்துக்கொண்டிருந்த நீங்கள், சிறிது நேரம் அழட்டும் என விட்டுவிட்டு பிறகு மெல்ல என்னருகில் வந்து,
”எப்பா, மாமன் எங்கயும் போவல ஏன்ச்சி வாய்யா. அவன் எப்பயும் நம்மக் கூடதான் இருப்பான் வாய்யா..’’ எனச் சொல்லி, தோளைப் பிடித்து தூக்கிக் கூட்டிப்போய் கோயிலோரத் திட்டின் மீது உட்கார வைத்தீர்கள்.
மாமாவைப் பற்றியும் அவர் எனக்கு வாங்கித்தந்த சைக்கிள் குறித்தும் ஏதேதோ சொல்கிறேன் உங்களிடம். திரும்பத் திரும்ப. மெல்லத் தலையசைத்து கேட்டுக் கொண்டிருந்தீர்கள் அனைத்தையும்.
அடுத்த சிறிது நேரத்தில் மாமாவின் உடலைக் குளிப்பாட்டி செய்யவேண்டிய சடங்குகள் யாவும் செய்கிறார்கள். பின் மூங்கில் கொண்டு கட்டிய பாடையில் உடலை எடுத்துவைத்து தூக்கிப் போகிறார்கள். உடன் செல்ல எழுந்த தங்களோடு நானும் சுடுகாடு வருவதற்காக எழுந்தேன்.
அதைப் பார்த்த நீங்கள், ”போய் அம்மாக் கூட இருய்யா..’’ என்றீர்கள்.
சொல்லி முடிக்கும் முன்பே, ”நானும் வரன்ய்யா..’’ என்றேன்.
”சரி வா..” என யாதொரு எதிர்ப்பும் சொல்லாமல் கைபிடித்து கூடவே கூட்டிப்போனீர்கள்.
ஊரின் ஒதுக்குப்புறமாக பாட்டி வீட்டு நிலத்தருகில் கல்லாக்குட்டை ஓரத்திலிருந்த சுடுகாட்டில் விறகுகள் அடுக்கப்பட்டிருந்தது. பாடையை இறக்கி, அதிலிருக்கும் மாமாவின் உடலை தூக்கிப்போய் அதன் மீது கிடத்தி வைத்து, மேலேயும் சிறுசிறு விறகுகளை வரிசையாக அடுக்கி, அதன்மேல் எருமுட்டை வைத்து உடல் தெரியாத அளவுக்கு முழுக்க மூடிவிட்டு சீமெண்ணெய் ஊற்றி நெருப்பிட்டார்கள்.
அதற்காகவே காத்திருந்தது போல் வந்திருந்த கூட்டம் மெல்லக் களைந்து ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தது. எரியும் மாமாவின் உடலையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த என் தோளைத் தொட்டு,
”வா போலாம்..” என்றீர்கள்.
எதுவும் சொல்லாமல் தங்கள் பின்னாலேயே வந்தேன்.
சற்று தூரம் கூட்டத்தோடு நடந்து வண்டிப்பட்டை வந்ததும், திரும்பி நம்மூர் நோக்கி நடக்க ஆரம்பித்தீர்கள்.
உடனே நான், ”அம்மா, அண்ணன்லான்ய்யா..’’ என்றதற்கு,
”அம்மா ரண்டுமூணு நாள் கழிச்சுதான் வருவா. அண்ணனுங்க சைக்கிள்ல வந்துருவாங்க..’’ என்றீர்கள்.
அதன் பிறகு எதுவும் பேசாமல் மாமாவைப் பற்றியே நினைத்துக்கொண்டு நடந்து வந்தேன்.
தொம்பக்கல் கடந்து, கால்வாய்க்கரை தாண்டி, கோயில் மலை ஒட்டிய வழியோரம் நடந்து கவுன்சிலர் வீட்டுக்குப் பின்னால் போகும் மரிசி வழியில் நடந்துபோனோம்.
உண்மையில் சக்கர மாமாவின் மரணத்தைதான் என் வாழ்வில் நான் உணர்ந்த முதல் பெருமரணம் என்பேன். அதுவும் அவருடைய இறுதிச் சடங்கில் சுடுகாடு வரைக்கும் வந்ததும், அவரது உடலை விறகின்மீது கிடத்திவைத்து முழுக்க மூடி நெருப்பிட்ட காட்சியும் இன்னமும் அப்படியே கண் முன்னால் உள்ளதய்யா.
மெல்ல ஆஞ்சநேயர் கோயில் கடந்து சுடுகாட்டோர வழியில் ஆற்றில் இறங்கி அணிந்திருந்த ஆடையுடன் இடுப்பளவு நீரில் மூழ்கி தலை குளித்துவிட்டு எழும்போதுதான் அக்கேள்வி மனதுக்குள் அரும்பியது.
சட்டென எழுந்து பக்கத்திலிருந்த பாறைமீது நின்றுகொண்டு கட்டியிருந்த சோமத்தை அவிழ்த்து பிழிந்துகொண்டிருந்த தங்களிடம்,
”என்ன ஏன்ய்யா காலில கூட்டுனு அவ்ளவு தூரத்துக்கு நடந்துனு போய் வந்த?’’ என்றேன்.
நான் எப்படியும் ஒருநாள் இக்கேள்வியைக் கேட்பேன் என நினைத்துக் கொண்டவராய், லேசாகப் புன்னகைத்துவிட்டு,
”நடக்கர்து ஒரு எடத்துலருர்ந்து இன்னொரு எடத்துக்கு போறதுக்குன்றத தாண்டி பெரிய மருந்துன்னு சொல்லலாம். அதும்… சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம மனசு கெடந்து தவிக்கறப்பயும், ஒரு முடுவும் எடுக்கமுடியாத கொழப்பத்துல இருக்கறப்பயும் கால்வலிக்க தூரமா நடந்தம்னா மனசு பட்டுனு லேசாயிடும். அதான் ஒன்ன காலில நடக்கவச்சி கூட்டுனு போனன்..’’ என்று சொன்னதும்,
இவ்வுலகத்தின் ஆகப்பெரும் ரகசியமொன்றை அறிந்ததுபோல் இருந்ததய்யா எனக்கு.
அதுமுதல் என் வாழ்வில் நடத்தலை, உண்பது உறங்குவது போல் இயல்பான ஒன்றாக்கிக்கொண்டேன். தினமும் குறைந்தது நான்கைந்து கிலோ மீட்டர் தூரமாவது நடந்து விடுவேன். அதிலும் மனமுடையும் தருணங்களிலும், குழப்ப மனநிலையில் இருக்கும்போதும், எங்கே போகிறேன், எதற்குப் போகிறேன் என தெரியாத அளவுக்கு நடநடவென நடந்து கால் சோர்ந்து அடுத்த அடி எடுத்துவைக்க முடியாது எனும் நிலை வரும் வரைக்கும் நடப்பேன்.
அதன் பிறகுதான் நான் எங்கே இருக்கிறேன் என கவனிக்க ஆரம்பிப்பேன். அருகிலிருக்கும் மரத்தடியில் போய் உட்கார்ந்து சில நிமிடங்கள் இளைப்பாறுவேன். கிளையில் அசையும் இலைகள் தொடங்கி, அவ்வழியாக கடந்துபோகும் மனிதர்களின் முகங்கள் வரைக்கும் மவுனமாக சுற்றிலும் யாவற்றையும் வேடிக்கை பார்ப்பேன். சட்டென நடப்பதற்கு முன்பிருந்த குழப்ப நிலையோ, வலிகளோ இல்லாத ஒரு தெளிவும் சுகமும் உடலும் மனமும் கொண்டிருப்பதை உணர்வேன்.
‘அடுத்து செய்ய வேண்டியதென்ன? எடுக்க வேண்டிய முடிவு யாது?’ என நொடி நேரத்தில் யாதொரு குழப்பமும், தடங்கலும் இன்றி முடிவுசெய்வேன்.
அதன்பின் பக்கத்தில் ஏதேனும் உணவகம் இருந்தால் போய் வயிறுமுட்டச் சாப்பிடுவேன். அல்லது தேநீர்க் கடையில் போய் ஆற அமர உட்கார்ந்து சுடச்சுட ஒரு தேநீர் குடிப்பேன். சிலநேரம் அடுத்தடுத்து இரண்டு மூன்று தேநீர் கூட குடிப்பேன். ஆம்! ஐயா.
‘நடக்கர்து ஒரு எடத்துலருர்ந்து இன்னொரு எடத்துக்கு போறதுக்குன்றத தாண்டி பெரிய மருந்துன்னு சொல்லலாம். அதும்… சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம மனசு கெடந்து தவிக்கறப்பயும், ஒரு முடுவும் எடுக்கமுடியாத கொழப்பத்துல இருக்கறப்பயும் கால்வலிக்க தூரமா நடந்தம்னா மனசு பட்டுனு லேசாயிடும்..’
இதை பல தடவை நான் உணர்ந்திருக்கிறேன். உங்களிடமிருந்து கற்றுக் கொண்டவற்றில் எப்போதும் இதையே முதன்மையான ஒன்றாகப் பார்க்கிறேன் ஐயா.
நடக்கச் சொல்லி, நடத்தலில் இருக்கும் சுகத்தையும், ரகசியத்தையும் மருத்துவ குணத்தையும் உணர்த்திய தங்களை நடக்கும் ஒவ்வொரு நாளும் அன்போடு நினைவு கூர்கிறேன் ஐயா.
அதோடு, பக்கத்து தெருவுக்கு நடந்துபோகக் கூட சோம்பல் படுவோர் மத்தியில் தினமும் நடத்தலை எனக்குள் உயர்ந்ததொரு பழக்கமாக விதைத்து வளர்த்த உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் ஈடாகாதய்யா.
லட்சோப லட்ச நன்றிகளுடன்,
உங்கள் வடிவரசு
(August 20, 2020)
*
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்
அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி