அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அன்புள்ள ஐயாவுக்கு,

இப்பெரும் பூமியில், கிடைத்தற்கரிய இம்மனித வாழ்வில், காதல் எத்தனை அழகானது, எத்தனை எத்தனை சுகமானது, எத்தகைய பரவசங்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து அனுபவித்து ஒரு பறவையைப் போல பறந்து திரிந்த காலங்களை அவ்வளவு சீக்கிரத்தில் என்னால் மறக்க முடியாதய்யா.

அதுவும் என்னை நேசிக்கும் ஒருத்தி, என்னைத் தேடி என் கல்லூரி வாசலில் முதல்தடவையாக வந்து நின்ற காட்சி… இப்போதும் மனக்கண் முன்னால் அப்படியே உள்ளதய்யா.

இச்சின்னஞ்சிறு வாழ்வில் ஆகப்பெரும் இன்பத்தை அனுபவித்த அழகிய காலமது. நினைக்க நினைக்கப் புன்னகையை வரவழைத்து தித்திப்பு மழையில் நனைத்து போவது. ஆம்! ஐயா.

எனது காதலையும், அதற்கு காரணமானவரையும் நன்கறிந்தவர் நீங்கள். எனக்குத் தெரியாமல் வீட்டுக்கு வந்திருந்த அவரிடம் போய்,

‘பெருசா பணம் வசதிலாம் இல்லன்னாலும், என் புள்ளக்கி நல்லது பொல்லது சொல்லிக்கொடுத்து நல்லப் புள்ளயா வளத்திருக்கன். அவனப் பாத்து பத்தரமாப் பாத்துக்கம்மா..’ என்றதற்கு,

‘வடிவரச எனக்கு ரொம்பப் புடிக்கும். நீங்க பாத்துக்கிட்டத விட நல்லாவே பாத்துப்பன்..’ என்றவர்.

இதைச் சொல்லி சரியாக நான்கு மாதமிருக்கும். என்னைப் பற்றியும் எங்கள் காதல் பற்றியும் அவர் வீட்டுக்குத் தெரிந்து பெரும் பிரச்சனை அரங்கேற, பயந்து நடுங்கியவர், என்னை ‘வெறும் நண்பனின் நண்பன் மட்டும்தான்’, ‘அவன் சாதி என்ன… நம்ம சாதி என்ன… போயும் போயும் அவனக் காதலிப்பனா?’ போன்ற வசனங்களை உச்சரித்துவிட்டு, கடைசியாக ஒருதடவை என்னைப் பார்க்க அதே என் கல்லூரி வாசலுக்கு வந்திருந்தார்.

எப்போதும் பார்த்ததும் வழக்கமாக உதிர்க்கும் மென்னழகு சிரிப்பை உதிர்க்காமல் அல்லது உதிர்க்க விரும்பாமல், மெல்ல என் அருகில் வந்து,

”இனிமே நாம பாக்க வேண்டாம்… பேச வேண்டாம்..’’ என்றார்.

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

”இந்த காதல்லாம் சரிப்பட்டு வராது. எல்லாத்தயும் மறந்துடலாம்..”

இப்படி ஏதேதோ சொன்னார்.

ஒரு கட்டம் வரைக்கும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நான், அவரது முகத்தை நேருக்கு நேர் பார்த்து,

”அப்போ காதலே இல்லன்னு சொல்றீங்க… அப்டிதான?’’ என்றேன்.

”ஆமா’’ என்று தலையாட்டினார்.

உடனே நான், ”எங்க, என் தலயில அடிச்சி ஒங்க மனசுல காதல் இல்லன்னு சொல்லுங்க..’’ என்றதற்கு,

ஒருநொடி கூட யோசிக்கவில்லை. சட்டென எதிரில் நின்றிருந்த என் தலையில் கைவைத்து,

”எனக்கு உங்கமேல காதல் இல்ல..” என்றார், ஒவ்வொரு வார்த்தையாக.

இதை மட்டும் சொல்லவில்லை. இதோடு சேர்த்து,

”எனக்கு என் சாதியும், குடும்ப கவுரவமும்தான் முக்கியம்..’’ என்றதும்,

சுக்கு நூறாய் உடைந்துபோய் திரும்பியவன்தான்.

திரும்பிப் பார்க்காமல் கல்லூரிக்குள் நுழைந்து, முதன்மைக் கட்டிடம் முன்பு நடந்து, உள்ளுக்குள் கதறி அழுதபடி எப்போதும் உட்காரும் ஸ்டோன் பெஞ்ச்சில் போய் உட்கார்ந்தேன்.

மரம், செடி, கொடிகள், பறவைகளின் மெல்லொலி, காற்றில் அசைந்தாடும் கிளைகளும் இலைகளும், எதிரில் பூத்துக்குலுங்கும் காகிதப்பூக்கள் எதையும் கவனிக்கவில்லை அல்லது அவை எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை.

அதிக சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் முதலில் தேடிப்போய் உட்காரும் இடமது. கல்லூரி வளாகத்தில் அதிகமாக உட்கார்ந்த இடமென்றால் அதுவாகத்தான் இருக்கும். ஒரு தந்தையைப் போல, தாயைப்போல, நண்பனைப் போல, காதலியைப் போல, ஆசானைப் போல எப்போதும் எனக்கு ஆறுதல்  தரக்கூடியது. 

‘எனக்கு உங்கமேல காதல் இல்ல. எனக்கு என் சாதியும், குடும்ப கவுரவமும்தான் முக்கியம்..’

திரும்பத் திரும்ப அதே வார்த்தைகள்.

ஒட்டுமொத்த வாழ்க்கையே முடிந்துவிட்ட எண்ணம். ‘இனியும் உயிரோடு இருக்கவேண்டுமா?’ என்ற கேள்வி.

நினைத்து நினைத்து, தேம்பித் தேம்பி அழுகிறேன்.

‘நம்மள இவ்வளவு நேசிச்சவங்களே… கடைசி வரைக்கும் கூடவே இருப்பன்னு சொன்னவங்களே… வேணான்னு தூக்கிப் போட்டுட்டு போனதுக்கு அப்றம் எதுக்கு வாழணும்?’

மனம் திரும்பத் திரும்பக் கேட்டது.

எனக்கு முன்னால் அப்போது மரணவழி மட்டும்தான் இருப்பதாகத் தோன்றியது.

அவர் சொல்லிய வார்த்தைகள், அது தந்த வலி, ஒரே நேரத்தில் நூறுபேர் சுற்றி நின்று செந்நிற பிடிபோட்ட கத்தியால் குத்திக் குத்தி சத்தம் போட்டு சிரிப்பதாய்க் கேட்டது.

சுற்றியிருந்த மரங்கள், கட்டிடங்கள், ஸ்டோன் பெஞ்ச்சுகள் அனைத்தும் என்னைப் பார்த்து கைகொட்டி ஏளனிப்பதாய் தெரிந்தது.

கிடுகிடுவென அங்கிருந்து எழுகிறேன். வேகவேகமாக நடக்கிறேன். எங்கே செல்கிறேன், என்ன செய்யப் போகிறேன் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் நடக்கிறேன்.

கல்லூரி தேவாலயம் கடந்து, இடது பக்கம் திரும்பி கால்பந்து மைதானம் தாண்டி, கிரிக்கெட் மைதானத்தை ஒட்டிய சாலை வழியாக நடந்துபோய் மறுபடியும் இடதுபக்கம் திரும்பி மகளிர் விடுதியை ஒட்டிய சிறுபாதை வழியாக விரைந்துபோய் பூச்சியியல்துறை முன்னால் நிற்கிறேன்.

சட்டென நினைவு வந்தவனாய் நிற்கும் இடத்தைப் பார்க்கிறேன். என் நலம் விரும்பிகளில் ஒருவரான அருட்தந்தை இஞ்ஞாசிமுத்து அவர்கள் இருக்குமிடம். அங்கிருந்தே பார்த்தேன், அறைக்குள் அப்போதவர் இல்லை.

மறுபக்கமிருந்த ஆய்வகமும், அதில் வைக்கப்பட்டிருந்த கெமிக்கல் பாட்டில்களும் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆம்!

‘அதல ஒண்ண எடுத்துக் குடிச்சா செத்துடலாம்..’

மனம் சொல்கிறது. புத்தியும் அதை ஆமோதிக்கிறது.

கடகடவென நடந்து படியேறி வலதுபக்கம் திரும்பிப் போய் அறைக்குள் நுழைகிறேன். என்நேரம் அங்கே ஒருவருமில்லை. பத்தடி தூரம் கூட இருக்காது, எனக்கும் கெமிக்கல் பாட்டில்கள் வைக்கப்பட்டிருக்கும் அலமாரிக்கும்.

மேசைமீது தனியாக கண்ணாடி பாட்டில் ஒன்றில் பாதியளவுக்கு மேல் வெண்ணிற கெமிக்கல் வைக்கப்பட்டிருந்தது.

அது எனக்காகவே வைத்திருப்பதாய் நினைத்து அருகில் போன நேரம் பார்த்து வெளியில் யாரோ வந்து நிற்கும் சத்தம் கேட்க, திரும்பாமல் அப்படியே நின்றேன்.

”ஃபாதரப் பாக்கதான வந்திர்க்கீங்க?’’

குரல் கேட்டு மெல்ல திரும்பினேன்.

வாட்டசாட்டமான உடல் வாகுடன், கையில் நான்கைந்து தடிதடியான நோட்டுகளை வைத்துக்கொண்டு, கருப்புநிற கால்சட்டையும் கடல் நீலநிற கோடுபோட்ட வெள்ளை சட்டையும் அணிந்திருந்த தாடி மீசை வழித்திருக்கும் ஆய்வு மாணவர்.

ஏற்கனவே அருட்தந்தையை பார்க்கவரும்போது இரண்டு மூன்று தடவை அவரை பார்த்திருக்கிறேன். என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி,

”உங்களத்தான் பிரதர்… ஃபாதரப் பாக்கத்தானே வந்திர்க்கீங்க?’’

திரும்பவும் அதையே கேட்டார்.

”ஆமாம்” என, எனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் மிக மெதுவாக சொல்லி தலையாட்டினேன்.

”ஃபாதர் ரூம்க்கு வந்துட்டாரு… போய்ப் பாருங்க. இங்க நிக்கிறதப் பார்த்தா திட்டுவார் எங்கள..’’ என்றதும்,

என் தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்த வருத்தத்தோடு அறையிலிருந்து வெளியே வந்தேன்.

‘எனக்கு உங்கமேல காதல் இல்ல. எனக்கு என் சாதியும், குடும்ப கவுரவமும்தான் முக்கியம்..’

திரும்பவும் அவர் சொல்லிவிட்டுப் போன அதே வார்த்தைகள்.

இம்முறை எதிரில் வரிசையாக நின்று ஐம்பது பேர் பெருங்குரலெடுத்து ஒரேநேரத்தில் கத்திச் சொல்வதுபோல் கேட்டது. ஆம்! ஐயா.

மீண்டும் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம். முன்னால் மரணவழி தெரிந்தது. வேகமாக முன்னேறி மூன்றடி வைத்திருப்பேன். அதற்குள் தன் அறைக்குள்ளிருந்து வெளியில் வந்த அருட்தந்தை என்னைப் பார்த்துவிட்டார்.

”வா கண்ணா, எப்ப வந்த?’’ என்றார்.

அவரது மயிலிறகு போன்ற மெல்லியகுரல், உங்கள் குரல் போன்றே எப்போதும் கேட்கும். அதுவும் அன்று, நீங்களே அவருருவில் வந்து கேட்டதாய்த் தோன்றியது.

எதுவும் சொல்லாமல் அவரருகில் போய் நின்றேன்.

என்னையும் என் முகத்தையும் பார்த்துவிட்டு ஓரளவு யூகித்தவராய்,

”வா வடிவு… பேசிட்டே போகலாம்..” என்றார்.

எப்போதும் அவரிடம் எதையாவது கேட்டுப் பேசும் நான், அன்று எதுவும் பேசாமல் உடைந்திருப்பதைக் கண்டு,

”கண்ணா, நம்மளோட வாழ்க்கையில எப்பவும் பல பக்கத்துல இருந்தும் பலவிதமான பிரச்சனைகள் வந்துகிட்டேதான் இருக்கும். பிரச்சனை மட்டும்தான் வாழ்க்கைன்னு நினைச்சம்னா, அதுக்குப் பின்னால இருக்கிற அழகான வாழ்க்கை நம்மக் கண்ணுக்கு தெரியாமலே போயிடும்..’’ என்றார்.

அவர் அவ்வார்த்தைகளை, ஏதோ எனக்காகவே உருவாக்கி சொன்னது போல் இருந்தது.

ஆம்! ஐயா, அவை எனக்கான வார்த்தைகள். எனக்கு மட்டுமேயான வார்த்தைகள். அதுவும் அருட்தந்தை வடிவில் நீங்களே வந்து சொன்னது போல் ஒலித்த வார்த்தைகள்.

முன்னாலிருந்த மரணவழி மெல்ல மெல்ல மறைந்தது. தற்கொலை எண்ணம் கொஞ்ச கொஞ்சமாக அழிந்தது.

வலி… வலி… அப்படியொரு வலி. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. சட்டென ஒரு கணத்தில் உடைந்து அழுதபடி,

”ஃபாதர்…’’ என அழைத்து, தங்களிடம் சொல்வதாக நினைத்து, அவரை முதல்தடவையாக நண்பனின் அண்ணன் திருமண வரவேற்பில் பார்த்தது தொடங்கி, அவர் என் தலையிலடித்து, ‘எனக்கு உங்கமேல காதல் இல்ல. எனக்கு என் சாதியும், குடும்ப கவுரவமும்தான் முக்கியம்..’ எனச் சொன்னது வரைக்கும் ஒவ்வொன்றாக சொன்னேன்.

அமைதியாகக் கேட்டவர், தாங்கள் அடிக்கடி சொல்லும்,

”எல்லாம் நல்லதுக்குனு எடுத்துப்போம்..’’ என்னும் அதே வார்த்தைகளைச் சொல்லிவிட்டு,

கூடவே, ”காலம் எதையும் சீக்கிரம் ஆத்திடும். வருத்தப் படாம ஹாஸ்டல்க்கு போ கண்ணா..’’ என்ற வார்தைகளையும் சொல்லி, ஆறுதலுரைத்து விடுதிக்கு அனுப்பி வைத்தார்.

அங்கிருந்து நேராக என் ஸ்டோன் பெஞ்ச்சில் வந்து உட்கார்ந்து, நான்கைந்து நிமிடங்கள் உள்ளுக்குள் கத்தி அழுதிருப்பேன். கல்லூரி விடுமுறைதினம் என்பதால் எவரும் இல்லை. கண்ணீர் மட்டும் நிற்காமல் சாரை சாரையாகக் கொட்டியது.

சட்டென ஏதோவோர் உள்ளுணர்வு தூண்ட, என்னையறியாமல் பேப்பரும் பேனாவும் எடுத்து,

‘அடி நீ வந்ததும் –

என் வாழ்வில் பூத்தது புதுமலர்..

அடி நீ சென்றதும் –

என் வாழ்வே இல்லாமல் போனதே..

ஜூன் மாதப் பூவாய் வந்தாய் –

ஆறே மாதத்தில் சென்றாய்..

வந்தது எதற்காக?

போனது எதற்காக?’

என ஆரம்பித்து, மனத்தில் தோன்றிய வார்த்தைகளையெல்லாம் வரி வரியாக எழுதி முடித்தேன்.

பெருவலி சிறுவலியாகி, சாதாரணன் தனித்தவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டவனாய் உணர்ந்தேன். ஆம்! ஐயா.

சிறு நிகழ்வொன்று, ஒருவரின் வாழ்வையே அடியோடு புரட்டிப் போட்டுவிடும் என்பார்களே… அப்படி என் வாழ்வில் நடந்ததுதான் அன்று நான் என்னையறியாமல் எழுதிய இவ்வரிகள்.

எழுத்தென்றால், பாடலென்றால் என்னவென்றே தெரியாத எனக்குள்ளிருந்து வெளிப்பட்ட சொற்கள், நண்பர்களால் பாடலென  சொல்லப்பட்டு, அடுத்தடுத்த தினங்களில் அதற்கு இசை கோக்கப்பட்டு, முதல்தடவை கேட்டபோது என்னையே அறியாமல் கண்கலங்கி அழுதது இப்போதும் நினைவுள்ளதய்யா.

என்றபோதும் என்னால் நடந்ததை நம்ப முடியவில்லை. எழுதிய வரிகளையும் பதிவுசெய்த பாடலையும் எடுத்துக்கொண்டுபோய் அருட்தந்தையிடம் காட்டுகிறேன். இரண்டையும் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு,

”எழுத்து எல்லோருக்கும் எளிதா வரக்கூடியதில்ல. அதுலயும் பாடல் எழுதுறது எளிய விஷயம் கிடையாது. எத்தனையோ பேர் முயற்சி செய்துபார்த்தும் வராத ஒரு விஷயம், எந்தவொரு முயற்சியும் செய்யாம உனக்குள்ள இருந்து வந்திருக்குன்னா, சம்திங் ஸ்பெஷல். ஒருவேளை நாளைக்கு இதுவே உன் வாழ்க்கையா கூட மாறலாம்..’’

என்று சொன்ன வார்த்தைகள், என் அத்தனை ஆண்டுகால வாழ்க்கைக்கு அர்த்தம் சொன்னதாய், இனி வாழப் போகும் வாழ்க்கைக்கு வழிகாட்டியதாய் உணர்ந்தேன்.

அத்தோடு… இப்பூமியில் வெறுமே பிறந்து வளர்ந்து உழைத்து உண்டு குழந்தை பெற்று வளர்த்து மறையும் மானுட இனத்தின் தொடர்ச்சியாக நீடிப்பதைத் தவிர எப்பொறுப்புமற்ற பலநூறு கோடி பேர்களில் ஒருவனல்ல நான், இவ்வொட்டுமொத்த மானுட இனத்திற்கும் ஏதேனும் ஒருவகையில் அதன் மேன்மைக்காகவும், உயர்வுக்காகவும் ஒருதுளியேனும் பங்காற்றக்கூடிய அறிவுத்திறனும், நுண்ணுணர்வும் கொண்ட சில நூறு பேர்களில் ஒருவன் என்றும் உணர ஆரம்பித்தேன்.

என் உள்ளத்தில் அந்நாள், அந்நிகழ்வின் மூலம் பெரும் தீயொன்று ஏற்றப்பட்டதாக உணர்ந்தேன். ஆம்! ஐயா, அகத்திரியில் காலம் ஏற்றிய நெருப்பது.

சாதாரண தீ போன்று எளிதில் ஊதினாலோ, காற்றடித்தாலோ, மழைபெய்தாலோ அணையக்கூடிய தீயல்ல அது. இவ்வுடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, நான் என்னும் உணர்வு இல்லாமலாகும் இறுதி கணம்வரை சுடர்விட்டு ஆங்காரமாய் எரியும் தனித்தீ. அறிவும், நுண்ணுணர்வும் கொண்ட படைப்புத்தீ. பொறுப்பும் தகுதியும் கொண்ட செயல்தீ.

இத்தீயானது எனக்குள் எரிய, இவ்வாழ்க்கை முழுக்க நான் பலவித இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எத்தனை எத்தனையோ தியாகங்கள் செய்தாக வேண்டும். கண்ணீரும் ரத்தமும் சிந்தவேண்டும். தொடர் ஏளனத்திற்கும் புறக்கணிப்புக்கும் ஆளாக நேரிடும். என்றபோதும், சிறு புன்னகை மட்டுமே சிந்திவிட்டு யாவற்றையும் கடந்து செல்லவேண்டும்.

இப்படி ஏதேதோ சிந்திக்க ஆரம்பித்தேன். முற்றிலும் புதியதொரு மனிதனாய் மாறியிருப்பதை உணர்ந்தேன். சுற்றியிருக்கும் மரங்கள், செடிகள், கட்டிடங்கள் யாவும் மகிழ்வுடன் என்னை ஏந்த கரம் நீட்டுவதைப் பார்த்தேன்.

சட்டென வானம் கருத்து லேசாக தூர ஆரம்பித்தது. என்மேல் விழும் ஒவ்வொரு துளியும் வான் மகிழ்வோடு தூவிய மலர்களாய் விழுந்தது. பறந்துபோகும் பறவைகளும் தன்மொழியில் வாழ்த்திவிட்டுப் போவதாய் மனம் சொன்னது.

ஆம்! ஐயா, நான் முழுக்க முழுக்க வேறவனாய் ஆகியிருந்தேன். அகம், புறம் யாவற்றிலும் மாறுதல் தெரிந்தது. முன்னை விட வலிமையானவனாக, நம்பிக்கை நிறைந்தவனாக, செயலூக்கம் பெற்றவனாக, எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்கவனாக மாறியிருந்தேன்.

அதுமுதல் எனக்கான நூல்களை தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன். காடு, மேடு, ஏரி, மலை என எங்கும் சுற்றித் திரிந்தேன். ஊர் ஊராக அலைந்தேன். புதுப் புது இடங்களுக்கு பயணித்தேன். இதுவரை பார்க்காத மனிதர்களையும், அவர்களது வாழ்வையும் திறந்த மனத்தோடு ஊன்றிப் படிக்கத் தொடங்கினேன்.

வாழ்க்கை எவ்வளவு அழகானது, வாழ்தல் எத்தனை சுகமானது என கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தேன்.

நாட்கள் செல்லச் செல்ல காதலும் அது தந்த பரவசங்களும் அந்தந்த வயதுக்குரிய களியாட்டங்கள் மட்டுமே என்றும், அவை இம்மாபெரும் வாழ்வில் ஒரு சிறிய அங்கம் மட்டுமேயென்றும் மெல்லப் புரிந்தது.

அதோடு, என் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் அர்த்தமளிப்பது எழுத்து மட்டும்தான் என்றும் தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஆம்! ஐயா.

‘எனக்கு உங்கமேல காதல் இல்ல. எனக்கு என் சாதியும், குடும்ப கவுரவமும்தான் முக்கியம்..’

அவர் கடைசியாக சொல்லிவிட்டுப் போன இவ்வார்த்தைகள், என்னையும் என் அகத்திரியில் எரியும் நெருப்பையும் அப்போதென் முன்னால் இருந்த ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின்’ பக்கம் திருப்பியது.

ஒரு கட்டுரை கூட எழுதாமல் கடைசி இடத்தில் இருந்த நான், கடைசி ஆறு மாதத்தில் வெறித்தனமாக செயல்பட்டு, சரிவர தூங்கவும் சாப்பிடவும் கூட நேரமில்லாத அளவுக்கு எழுதி எழுதிக் குவித்தேன்.

அதன் விளைவாய் 150-க்கும் அதிகமான கட்டுரைகள் வெளியானது. கடைசி இடத்தில் இருந்த நான் முதல் இடத்திற்கு வந்து, ‘தலைசிறந்த மாணவ நிருபர்’ விருது வாங்கினேன்.

‘காலத்த மாரி ஒரு மருந்து, ஒலகத்துல எங்கயுமே இல்ல..’ என்பீர்கள் அடிக்கடி.

நிஜம்தான் ஐயா!

இக்காலம்தான் காதலால் வாழ்க்கையே முடிந்து விட்டதாக வாழ்வை முடித்துக்கொள்ளப் போன என்னைத் தடுத்து நிறுத்தி, காயத்திற்கு நல்மருந்திட்டு, அகத்திரியில் பெரும் நெருப்பை ஏற்றி, அர்த்தமுள்ள ஒரு வாழ்வை முன்னைவிட இன்னும் அழகாய் வாழப் பணித்துள்ளது. ஆம்! ஐயா.

இதுநாள் வரை இதை தங்களிடம் சொல்லாமல் மறைத்திருந்தேன். இதோ இப்போது சொல்லிவிட்டேன். ஏதேனும் தவறிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் ஐயா.

மாறா நேசத்துடன்,

வடிவரசு

(August 16, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=