அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அன்புள்ள ஐயாவுக்கு,

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கடைசியாக ஊருக்கு வந்திருந்தபோது, நிலத்தில் கிணற்றுமேட்டிலிருக்கும் எட்டிமரத்தடி நிழலில் போட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து தங்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், பேச்சுவாக்கில் தங்களைப் பற்றி எழுதிய நூல் குறித்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தேன்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த நீங்கள், பேசி முடித்ததும்,

”ஆமா புஸ்தகத்துக்கு என்னமோ பேர் வச்சிர்ந்தன்னு சொன்னியே என்னப் பேரு?’’ என்றீர்கள்.

”ஐயா (எ) 95 வயது குழந்தை!’’ என்றேன், என் நகர்பேசியில் இருந்த  புத்தகத்தின் முகப்பு அட்டைப்படத்தை எடுத்துக் காட்டி.

சில நொடிகள் எதையோ யோசித்த நீங்கள்,

”ஏன் தொண்ணத்தஞ்சி வயசு கொழந்தன்னு பேர் வச்சிர்க்க?’’ என்றீர்கள்.

இது நான் ஒருபோதும் உங்களிடமிருந்து எதிர்பாராதக் கேள்வி. அதனால் என்ன சொல்வதெனத் தெரியாமல் சில நொடி யோசனைக்குப்பின்,

”உங்கள நான் கொழந்தயாதான் பாக்கறன், அதான்..’’ என்றேன்.

கேட்டுவிட்டு சற்று சத்தமாக சிரித்த நீங்கள்,

”ஏன் என்னக் கொழந்தயா பாக்கறன்னு சொல்லு..’’ என்றீர்கள்.

சட்டென நான், ”பதனாலு பதனஞ்சு வயசு வரிக்கும் புள்ளைங்கள சின்னக் கொழந்தயா எல்லா அப்பா அம்மாங்களும் பாப்பாங்கல்ல. அதுமாரி அறுவது வயசுக்கப்பறம் புள்ளைங்க நாங்க அப்பா அம்மாவ கொழந்தயாப் பாக்கறம். அதான்..’’ என்றதும், என் பதிலில் திருப்தியுற்றவராய், லேசாகத் தலையசைத்து புன்னகைத்தீர்கள்.

அந்நிகழ்வையும், அப்புன்னகையையும் இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஏதேதோ தோன்றுகிறதய்யா.

ஒரு குழந்தை தாயின் கருவறையிலிருந்து பிறந்து வரும்போது இவ்வுலகம் பற்றிய யாதொரு அறிதலுமற்று வருகிறது. பின் தாயை அடையாளம் காண்பதில் ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமாக சிரிக்க, தவழ, நடக்க, பேச, எழுத, படிக்க என்று ஒவ்வொன்றாக அறிகிறது.

அவ்வறிதலின் தொடர்ச்சியாக வளர்ந்து பெரிதாகி, திருமணமாகி குழந்தைபெற்று வளர்த்து, அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து அறுபது வயதில் முதுமையை எட்டி ஓய்வுபெற்றதும், பிறந்ததுமுதல் கற்ற ஒவ்வொன்றையும் மறக்கவும் இழக்கவும் ஆரம்பித்து, முதுமையின் இறுதிமையை நோக்கி செல்லச் செல்ல சிறிது சிறிதாக குழந்தைமை பெருகி முழுக்குழந்தையாக, பூமிக்கு தாயின் கருவறையிலிருந்து வரும்போது எப்படி வந்ததோ அந்நிலையை வேறோர் உருவில் அடைகிறது.

அவ்வகையில் பார்க்கப்போனால் 95 வயதான தங்களின் 95-வது பிறந்தநாளுக்கு, உங்களைப் பற்றி எழுதிய நூலுக்கு ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ எனப் பெயர் வைத்ததுதான் மிகப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

சிறுவயது முதல் எத்தனையோ சிறுகுழந்தைகளையும் அறுபது வயது கடந்த முதுகுழந்தைகளையும் ஒருசேரக் கண்டிருக்கிறேன். அவர்களுடன் பேசியிருக்கிறேன். பழகியிருக்கிறேன். இருவரும் சிரிக்கும்போது உருவம் தவிர்த்து வேறு எவ்வித வேறுபாடும் தெரியாத அளவுக்கு குழந்தையாகவே கண்டிருக்கிறேன்.

அதனால் முதியவர்கள் யாரை, எங்கே கண்டாலும் குழந்தையைக் காண்பதுபோல் அன்புடனும், அக்கறையுடனும், பரிவுடனும் குறைந்தது சிறு புன்னகையையாவது அவர்களுக்குப் பரிசாகத் தந்துவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன்.

அந்த வகையில் என் இதுநாளைய வாழ்வில் கண்ட (காணும்) மிக முக்கியமானக் குழந்தையாக உங்களைச் சொல்வேன். அதிலும், தங்களது 94-வது பிறந்தநாளுக்கு விமானப் பயணம் கூட்டிப்போய் கோவையிலிருந்து காட்பாடி நோக்கி ரயிலில் வருகையில் சன்னலோர இருக்கையில் தங்களை உட்கார வைத்தபோது, வழிநெடுகிலும் தெரிந்த மரங்களையும், மலைகளையும், செடிகொடிகளையும், ஊர்களையும், ஆறுகளையும், ஏரிகளையும், மனிதர்களையும் தங்களை மறந்து, வயதிழந்து, பெயரிழந்து, ஒரு முழுக்குழந்தையாகப் பார்த்து ரசித்ததைக் கண்டு அவ்வளவு மகிழ்ந்தேன் ஐயா.

அதை உங்களுக்கே தெரியாமல் வழியெங்கும் எனைமறந்து ரசித்து வந்தேன் ஐயா. ஓரிடத்தில் நீங்கள் அறியாவண்ணம் என் நகர்பேசியில் நான்கைந்து ஒளிப்படங்கள் கூட எடுத்துவைத்தேன். அதை பின்பொருநாள் முகநூலில்,

’94 வயதுக் குழந்தை உலகை ரசிக்குது.

30 வயது தந்தை அதனை ரசிக்கிறான்.’

என எழுதி பதிவிட்டிருந்தேன்.

அதைப் பார்த்த பலரும் மகிழ்ந்து நெகிழ்ந்தார்கள். தமது பக்கங்களில் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்தினார்கள். தங்களது நகர்பேசியில் சேமித்துவைத்து உங்கள் நினைவு வரும்போதெல்லாம் எடுத்துப் பார்த்து ரசிப்பதாகவும், மகிழ்வதாகவும் சொன்னார்கள். 

என்னைப் பொறுத்தவரையில் அறிதலை நோக்கி உலகில் பிறக்கும் குழந்தைகளும், மறத்தலை நோக்கி பூமியில் பயணப்படும் முதியவர்களும் குழந்தைகள்தான் ஐயா.

இவ்விடத்தில் தங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை சொல்லலாமென நினைக்கிறேன் ஐயா.

முதலில் நூலுக்கு வெறும் ‘ஐயா’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். ஏனோ அது முழுமை பெறாததாக உள்ளுணர்வு சொன்னது. நூலை வாசித்துவிட்டு முன்னுரை தந்த மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஐயாவும் அதையே வழிமொழிந்தார். அதனால், ‘ஐயா’வுடன் சேர்த்து மொத்தம் பத்து வெவ்வேறு தலைப்புகள் உருவாக்கி, அதிலிருந்து ஒவ்வொன்றாக குறைத்து, கடைசியில் வைத்ததுதான் இப்போதிருக்கும் இத்தலைப்பு.

தலைப்பு இதுதான் என முடிவுசெய்ததும் நண்பர் ஒருவர்,

‘குழந்தை என்பது சரியாக இருக்குமா?’ என்றார்.

புன்னகையோடு அவரிடம், ‘அதுதான் சரியாக இருக்கும்..’ என்றேன்.

ஆம்! ஐயா, நான் நினைத்தது போலவே இச்சொல்லும் இத்தலைப்பும் சரியாகவே இருந்தது. நூல் வெளியான பிறகு வாங்கிப் படித்த பலரும் நூலின் தலைப்பு குறித்தும் முகப்பு ஓவியம் குறித்தும் சொல்லி சிலாகித்தனர். தமிழின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் மட்டும் ஏனோ நூலின் தலைப்பில் இருக்கும் ‘குழந்தை’ எனும் சொல்லைத் தவிர்த்திருக்கலாம் என்றார். அவர் எதை மனதில் வைத்து அப்படிச் சொன்னாரெனத் தெரியவில்லை. என்றபோதும் இந்நூலுக்கு இத்தலைப்புதான் பொருத்தமானது, நிறைவானது, சரியானது என்று தோன்றுகிறதய்யா.

அதையும் முழுமையாக உணர்ந்தது அன்று நிலத்திலிருந்து நான் கிளம்பும்போது தாங்கள் சொன்ன வார்த்தைகளில் இருந்துதான் ஐயா.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரத்திற்கும் மேல் அன்று உங்களுடன் பேசியிருப்பேன். மேற்கில் சூரியன் இறங்கிக்கொண்டிருந்தது. அதிகாலையில் இரைதேடி கிழக்கில் போன பறவைகள் வரிசையாக மேற்கிலிருக்கும் தம் கூடுகள் நோக்கி பறக்க ஆரம்பித்திருந்தது. ஓடையோர காட்டுவா மரத்தின் பின்னாலிருந்து உத்திரம் அண்ணன் பால் கறக்க பாத்திரத்துடன் வந்துகொண்டிருந்தார். மெல்ல எழுந்து வேட்டியை அவிழ்த்து கட்டில் மீது மடித்து வைத்துவிட்டு அருகிலிருந்த ஈய குண்டானிலிருந்து மோர் சொம்பில் தண்ணீர் மொண்டு வாய் கொப்புளித்துவிட்டு குடித்தீர்கள்.

நானும் நேரமாகிவிட்டதை உணர்ந்து எழுந்து கிளம்பத் தயாரானதைப் பார்த்த நீங்கள்,

”கெளம்பிட்டியாய்யா..’’ என்றீர்கள்.

”ஆமாய்யா, நேரம் ஆச்சி..’’ என்றேன்.

”சரி, பாத்து பத்தரமா இருக்கணும். ரோட்ல போவ வர கவனமா இருக்கணும். போய்ட்டு காலில அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லு..’’ என்று வழியனுப்பிவைத்தீர்கள்.

நானும் பதிலுக்கு, ”நீயும் பாத்து பத்தரமா இருய்யா. வேளிக்கி வேள நல்லா சாப்டு..’’ என்று சொல்லிவிட்டு, கிணற்றுமேட்டிலிருந்து  இறங்கி மரிசி மீது கால்வைத்தேன்.

”எப்பா வடுவரசு..’’

பின்னால் உங்கள் குரல் கேட்டதும் நின்று திரும்பிப் பார்த்தேன்.

”புஸ்தகத்துக்கு நீ வச்ச பேரு நல்லாருக்குய்யா..’’ என்றீர்கள், லேசாக உதடசைத்து சிரித்துவிட்டு.

நீங்கள் அப்படிச் சொன்னதும், உயர வானில் கையிரண்டை சிறகாக விரித்துப் பறப்பது போலிருந்தது.

சிறுவயது முதல் எத்தனையோ தடவை என்னைப் பாராட்டியிருக்கிறீர்கள். என்றபோதும் ஓர் எழுத்தாளனாக நான் எழுதிய முதல் புத்தகத்திற்கு நீங்கள் பாராட்டியது, ஒரே நேரத்தில் நான்கைந்து சாகித்ய அகாதமி விருது வாங்கியது போலிருந்தது.

பதிலுக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் சிறு புன்னகையை மட்டும் பதிலாக சிந்திவிட்டு வந்தேன். ஆம்! ஐயா, நீங்கள் அப்படி சொன்னதும்தான் அப்புத்தகமும், அதன் தலைப்பும் பல மடங்கு முழுமை பெற்றதாக மனம் உணர ஆரம்பித்தது.

குழந்தைமை என்பது முழுமை நோக்கிய கற்றல் பருவம் என்றால், முதுமை என்பது இல்லாமை அல்லது பூஜ்ஜியமை நோக்கிய இழத்தல் பருவம் எனலாம்.

இதில் விந்தை என்னவென்றால் பூஜ்ஜியத்திலிருந்து வயது கூடக் கூட குழந்தைமையை தொலைக்கும் யாவரும், முதுமையைத் தொட்டதும் வயதுக் கூடிக்கொண்டு போனாலும் தொலைத்த குழந்தைமையை திரும்பப் பெற்றுவிடுவதுதான்.

கட்டைவண்டி ஓட்டி நடை பழகியது குழந்தைப் பருவம் என்றால், ஊன்றுகோல் பிடித்து நடக்க முற்படல் முதுமைப்பருவம். பல் முளைத்து விழுந்து பின் முளைத்தல் குழந்தைப் பருவம் என்றால், முளைத்த பல் விழுந்து முளைக்காதிருத்தல் முதுமைப்பருவம். பேசக் கற்றல் குழந்தைப் பருவம், பேச்சை மறத்தல் முதுமைப்பருவம்.

இப்படி இரு பருவங்களும் எதிரெதிர் முனையிலிருக்கும் நிகர்பருவங்கள். அதாவது, கற்றல் – இழத்தல், முழுமை நோக்கிய – இல்லாமை நோக்கிய.

பார்க்க ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் எதிர்மையில் இருந்தாலும் தொடர்புடையது. அதனால்தான் வயதானவர்களை என் மனம் எப்போதும் குழந்தையாகப் பார்க்கிறது, நடத்துகிறதய்யா.

ஆனால் இச்சமூகத்தின் பெரும்பான்மையோ… ஒருபக்கம் குழந்தைகளை, அவர்கள் செய்யும் தவறுகளை குறும்புகளை ஏற்று  மன்னித்து ரசித்துக் கொண்டாடிக்கொண்டு, மறுபக்கம் முதியவர்களை அவர்களது முதுமையை, இயலாமையை, சிறு சிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி புறக்கணிக்கிறது, ஒதுக்குகிறது. கடும் சொற்களை மாறிமாறி அவர்கள் மேல் பொழிகிறது. காயங்களையும் வலிகளையும் கொட்டுவதில் மகிழ்ச்சி  காண்கிறது.

சென்னையில் தினமும் குறைந்தது ஐம்பது முதல் நூறு முதியவர்களையாவது எதிர்கொண்டுவிடுவேன். அவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு வீட்டைவிட்டு துரத்தப்பட்ட அல்லது  அவர்களாக வெளியேறி வந்தவர்கள்.

அவர்களில் பலரிடம் பல்வேறு தருணங்களில் பேசியிருக்கிறேன்.  அவர்களுக்குத் தேவையான சிறுசிறு உதவிகளை கேட்டும் கேட்காமலும் மகிழ்வுடன் செய்திருக்கிறேன். அப்படிப் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகள் மதிக்காமல் வீட்டைவிட்டு துரத்தியபோதும், அவர்களை கடும் சொற்களால் திட்டாமல், இன்னமும் அவர்களை தம் சிறு குழந்தையாகப் பார்ப்பதை, தெரியாமல் இப்படி நடந்துகொண்டதாக நினைப்பதை அவர்களது பேச்சிலிருந்து என்னால் உணரமுடிந்தது.

ஆனால் அவர்களது பிள்ளைகளோ… அறுபது வயதைக் கடந்த தாய் தந்தைகளை ஒரு குழந்தையாகப் பார்க்காமல், சிறு வயதில் தங்களை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கியதை மறந்துவிட்டு, அவர்களுக்கு திருப்பிச் செய்ய வேண்டிய பணிவிடைகள் எதையும் செய்யாமல், நன்றி மறந்து கடமை மறந்து அன்போடு பார்த்துக் கொள்ள வேண்டியவர்களை பெரும் சுமையாக நினைத்து தேவையற்ற குப்பைகளை வீசுவது போல் வீசியவர்கள்.

என்றபோதும் தந்தையாக இருந்து தங்களைக் குழந்தையாக நினைத்துப் பார்த்துக்கொள்ளாமல் கடும் சொற்கள் சொல்லிக் காயப்படுத்தி வீட்டைவிட்டு விரட்டிவிட்ட பிள்ளைகளை எங்கே தாம் ஒரு சொல் தவறாகச் சொல்லிவிட்டால் வலித்துவிடப்போகிறதோ என நினைத்து, வேளைக்கு வேளை உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி தம்மால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்தும், பசிபொறுக்காமல் யார் யாரிடமோ கையேந்தி வாழும் நிலையிலும் திட்டுவதில்லை, அவர்கள் மேல் கோபம் கூட கொள்வதில்லை. மாறாக சிறு வருத்தம் மட்டுமே மனதோரத்தில் கொண்டு, கடைசிமூச்சு வரை வாழ்ந்து அவர்கள் எப்போதும் நன்றாக இருக்கவேண்டும் எனும் வேண்டுதலோடு மறைய நினைக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் தங்களைப் பற்றி எழுதிய நூலைப் படித்துவிட்டு, அதில் இருக்கும் ‘குழந்தை’ எனும் சொல்லையும், அது தரும் அர்த்தத்தையும் புரிந்துகொண்டு தம் வயதான தாய் – தந்தையரை குழந்தையாக நடத்த ஆரம்பித்த எத்தனையோ பிள்ளைகளை நான் அறிவேன் ஐயா.

அவ்வகையில் தங்களைப் பற்றி எழுதிய நூலின் தலைப்பிலுள்ள குழந்தை எனும் சொல், வெறும் சொல் என்பதைத் தாண்டி, பிள்ளைகளின் மனத்துள் நுழைந்து உணர்வுக்குள் கலந்து அவர்களின் கடமையை உணர்த்திய உயர் மந்திரம், மாமருந்து என்பதை உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன் ஐயா.

குழந்தைமை நிறைந்த குழந்தைகள் மட்டும் குழந்தைகள் அல்ல;

குழந்தைமை சூடிய முதியவர்களும் குழந்தைகள்தான்!

குழந்தைகள் வளந்து தந்தையாவது போல், தந்தைகள் தளர்ந்து குழந்தையாவதும் என் பொறுத்தவரை படைப்பின் முக்கிய நிலையென்றே நினைக்கிறேன். ஆம்! ஐயா.

வயது முதிர்ந்த தாய் தந்தையரை குழந்தையாகப் பார்க்காத பிள்ளைகள், பிள்ளைகள் என்னும் தகுதியை மட்டுமல்ல… மனிதர் என்கிற அடிப்படைத் தகுதியையும் இழந்துவிட்டதாகவே கருதுகிறேன்.

அவ்வகையில் வயதான உங்களை குழந்தையாகப் பார்க்கும் தங்களின் தந்தையான எனக்கு,

சென்றாண்டு நீங்கள் 95 வயது குழந்தை!

இவ்வாண்டு நீங்கள் 96 வயது குழந்தை!

அடுத்தாண்டு நீங்கள் 97 வயது குழந்தை!

ஆம்! ஐயா, இதைவிட வேறென்ன பெரிதாக நான் சொல்லிவிடப்போகிறேன்?!

இப்படிக்கு,

உங்கள் தந்தை வடிவரசு

(August 19, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=