அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி
அன்புள்ள ஐயாவுக்கு,
சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சின் நடுவில் மூதாதையர்கள் பற்றிய பேச்சு வந்தது.
‘தன் தந்தையைத் தாண்டி, அவர் செய்யும் தொழில்தாண்டி தனக்கு வேறெதுவும் தெரியாது’ என்றார் நண்பர்.
வியப்போடு, ”உங்க தாத்தாவோட பேராவது தெரியுமா?’’ என்றேன்.
”அம்மாவப் பெத்த தாத்தா பெயர்தான் தெரியும். அப்பாவப் பெத்த தாத்தாப் பெயர் தெரியாது..’’ என பதில் சொன்னார்.
”அதெப்படி அப்பாவப் பெத்த தாத்தா பேர் கூடத் தெரியாம இருக்கும்..?’’ என்றதற்கு,
”நான் பொறக்கறதுக்கு முன்னாடியே எங்க அப்பாவப் பெத்த தாத்தா – பாட்டி ரண்டுபேரும் எறந்துட்டாங்க. எங்கப்பா கூட சின்ன வயசுல இருந்தே சரியா பேசமாட்டன். ‘என்னன்னா, என்ன?’ அவ்ளவுதான் எங்களுக்குள்ள பேச்சு, அதான்..’’ என்றார், மிகச்சாதாரணமாக.
இப்படி அவர் பதில் சொன்னது ஒருபக்கம் எரிச்சலாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அதற்கான முழுக் காரணம் அவரது பெற்றோர்கள்தான் என்பதால் அத்தோடு அப்பேச்சை முடித்துக்கொண்டேன்.
அன்றிரவு என் அறைக்கு வெளியிலுள்ள மொட்டைமாடியின் உள்சுவர் மீது உட்கார்ந்து, ஆங்காங்கே கருநிற வானில் ஒளிரும் நட்சத்திரங்களையும், மெல்ல தொட்டுவிட்டுப் போகும் நவம்பர் மாதக் குளிர் காற்றையும் பெரிதாகப் பொருட்படுத்தாமல், வெகுநேரம் அவர் சொன்ன,
‘அம்மாவப் பெத்த தாத்தாப் பெயர்தான் தெரியும். அப்பாவப் பெத்த தாத்தா பெயர் தெரியாது..’
இப்பதிலையே யோசித்துக்கொண்டிருந்தேன்.
ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்ததய்யா. எதை வேண்டுமானாலும் புத்தகங்களும், கல்விச் சாலைகளும், ஆசிரியர்களும், இணையமும் சொல்லித்தர முடியும். ஆனால் ஒருபோதும் நம் மூதாதையர்களின் பெயர்களை, அவர்கள் வாழ்ந்த வாழ்வை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டை, நீட்சியை சொல்லித்தர முடியாது.
ஒன்று, பெற்ற தாய் – தந்தை சொல்லித்தரவேண்டும். அல்லது வயதான பாட்டி – தாத்தா போன்ற வெகு சிலரால் மட்டும்தான் சொல்லித்தர முடியும்.
ஆம்! ஐயா, இன்றைக்கு என் வயதொத்த பலருக்கும் அவர்களின் அம்மா – அப்பா, பாட்டி – தாத்தா தாண்டி முன்னோர் யார் பெயரும் தெரிவதில்லை. உறவுகளோடு சேர்ந்து உறவுகளின் பெயர்களையும், அதற்குப் பின்னாலிருக்கும் பாரம்பரியத்தையும், பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும், தொடர்ச்சியையும் தொலைத்துவிட்டார்கள்.
காரணம், வீட்டில் உள்ள வயதானவர்களை பெரும்பாலான வீடுகளில் இன்றைக்கு வாய் திறந்து பேசவே அனுமதிப்பதில்லை. அப்படியே பேசினாலும் அதற்கு மதிப்பளிப்பதில்லை, செவிகொடுத்து கேட்பதும் இல்லை.
‘ஏய் கெழவி, வயசான காலத்துல பேசாம சும்மாருக்கமாட்டியா?’
‘சாவப்போற வயசுல நீயெல்லாம் பேசி என்னப் பண்ணப்போற..?’
‘தின்னுட்டு ஓரமா தூங்காம எதுக்கும்மா வந்து சும்மா எதனா சொல்லினு இருக்க..’
இப்படி ஏதேதோ சொல்லி மூத்தவர்களின் பேச்சு உதாசீனப்படுத்தி முடக்கப்படுவதோடு, அவர்களின் பேச்சைக் கேட்காத, பேச்சுக்கு மதிப்பளித்து நடக்காத ஒரு தலைமுறை கண்முன்னால் வளர்ந்து நிற்பதை இன்றைக்கு எங்கும் பார்க்க முடிகிறதய்யா.
அடிக்கடி ஒன்றைச் சொல்வீர்கள்.
‘எங்கைய்யா சொல்பேச்சிய என்னிக்கும் நாங்க மீறனதில்ல..’
ஆனால் இன்றைக்கோ, பெரும்பாலான தாய் – தந்தையரிடம் பெற்ற பிள்ளைகள் சரிவர பேசுவதே இல்லை. அப்படியே பேசும் பிள்ளைகளில் சிலரோ நண்பர் சொன்னதுபோல் ‘என்னன்னா, என்ன’ எனும் ரீதியில் மட்டுமே பேசுகிறார்கள். அதிலும் சிலர், வயதானவர்களின் சொல்லை அழுகிப்போன பழம்போல் அடுத்தநொடியே குப்பையில் கடாசிவிட்டு கடந்துவிடுகிறார்கள்.
இன்னொரு பக்கமோ பெற்றோர் தம் குடும்பப் பின்புலத்தை, முன்னோர் பெயர்களை, வாழ்வை பிள்ளைகளுக்கு சொல்லித்தருவதைக் காட்டிலும், நகர்பேசியை எப்படி இயக்குவது என ஆரம்பித்து, எப்படி வீட்டிலுள்ள மின் சாதனங்களை கையாள்வது, புதிதாக வந்திருக்கும் படங்கள், தொடர்கதைகள் என அண்மையில் வந்திருக்கும் / வரவிருக்கும் ஆண்ட்ராய்டு செயலி வரைக்கும் சொல்லித்தந்து வளர்ப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.
இதன் விளைவாக இன்றைக்கு அத்தை – மாமா, சித்தி – சித்தப்பா, பெரியப்பா – பெரியம்மா என நீண்டு பெருகியிருந்த உறவுகளின் பெயர்கள் இரண்டாகச் சுருங்கி அங்கிள் – ஆன்ட்டி ஆனதுபோல், தாத்தா – பாட்டி, கொள்ளுத் தாத்தா – கொள்ளுப் பாட்டியின் பெயர்களை தெரிந்துகொள்வதைக் கூட ‘அதெல்லாம் தெரிஞ்சி வச்சி என்னப் பண்ணப்போறன்?’ எனும் ரீதியில் பிள்ளைகளை கொண்டு நிறுத்தியிருக்கிறது.
ஆனால் நீங்களோ இதற்கப்படியே நேர் எதிரானவர். நம் முன்னோர்களை, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை, செய்த தொழிலை, பாரம்பரியத்தை, பின்பற்றிய சடங்கு சம்பிரதாயங்களை, கண்டெடுத்த அனுபவங்களை வாய்க்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் சொல்லித் தந்தவர். அதுவும் வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போல் போகிறபோக்கில் மிக எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எவ்வளவு பெரிய விஷயத்தையும் கற்றுத் தருபவர். ஆம்! ஐயா.
அப்போது நான் எடத்தனூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் வகுப்பாசிரியர் வராத காரணத்தால் மாணவர்கள் அனைவரும் சத்தமாகப் பேசி விளையாடிக்கொண்டிருந்தோம்.
அப்பக்கமாக வந்திருந்த தலைமையாசிரியர் வகுப்பில் ஆசிரியர் இல்லாததைப் பார்த்துவிட்டு வந்து, ஒவ்வொரு மாணவராக எழுப்பி எங்கள் பெயரையும், தாய் – தந்தை பெயரையும், அவர்கள் செய்யும் தொழிலையும் சொல்லச் சொன்னார்.
முதல் வரிசையில் ஆரம்பித்து ஒவ்வொரு மாணவராக எழுந்து சொல்லிக்கொண்டு வந்தார்கள். மூன்றாவது வரிசையில் முதல் மாணவனாக உட்கார்ந்திருந்த நான் எழுந்து,
”என் பெயர் வடிவரசு. அம்மா பெயர் வெள்ளையம்மாள். ஐயா பெயர் சாமிக்கண்ணு. இருவரும் கூலி விவசாயத் தொழில் செய்கிறார்கள்..’’ என்று கடகடவென சொல்லிவிட்டு உட்கார்ந்தேன்.
எதையோ நினைத்தவராய் திரும்பவும் என்னை எழச்சொல்லி,
”அதென்ன கூலி விவசாயத் தொழில்?’’ என்றார்.
தெரிந்து கேட்டாரா, தெரியாமல் கேட்டாரா தெரியவில்லை.
நான் சொன்னேன், ”சொந்தமா எங்களுக்கு நெலம் கெடயாது. அதனால அடுத்தவங்க நெலத்துல போய் கூலி விவசாய வேல செய்வோம். அதான் சார் கூலி விவசாயத் தொழில்..’’ என்று.
மெல்லத் தலையை ஆட்டியவர்,
”உங்க தாத்தா என்ன தொழில் செய்தார்?’’ என்றார்.
தெரியாததால் எதுவும் சொல்லாமல் முழித்துக்கொண்டிருந்தேன்.
”உன்னதான் கேட்கிறன். உங்க தாத்தா என்ன தொழில் செய்தார்?’’ என்றார் மீண்டும்.
”எனக்குத் தெரியாது சார்..’’ என்றேன், பயத்தில் மெல்லிய குரலில் மெதுவாக.
உடனே அவர், ”உங்க தாத்தாவோட பேராவது தெரியுமா?” என்றார்.
சொன்னேன்.
அதோடு அறிமுகப்படலத்தை நிறுத்தியவர், அரசமரத்தோர மேட்டருகில் போடப்பட்டிருந்த கரும்பலகையின் கீழ்ப்பக்கத்தில் தன் பெயரை முதலில் எழுதினார். அதற்குப் பக்கத்தில் வரிசையாக தன்னுடன் பிறந்தவர்கள் பெயர். அதன் கீழ் அவர் மகள் பெயர். அவரது பேருக்கு மேலே அவரின் தாய் – தந்தை பெயர். அவர்களுக்கு மேல் அவர்களின் தாய் – தந்தை பெயர். அதற்கும் மேலே அவர்கள் தாய் – தந்தையர் பெயர் எழுதிவிட்டு,
”என் மகள், நான், என் அப்பா, என் தாத்தா, என் கொள்ளுத் தாத்தா. இப்படி ஒவ்வொருத்தருக்கும் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா, அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டின்னு கண்டிப்பா இருப்பாங்க. அவங்க ஏதாவது ஒரு தொழிலும் செய்திருப்பாங்க. அதையெல்லாம் ஒவ்வொருத்தரும் தெரிந்து வச்சுக்கணும்..’’ என்றவர், சில நொடிகள் எதுவும் பேசாமல் எங்களைப் பார்த்துவிட்டு,
”புத்தகப்பாடம் வெறும் கல்வியறிவ மட்டும்தான் கொடுக்கும். ஆனா, இது நம்மளோட வாழ்க்கைப்பாடம். பிறப்பறிவ கொடுக்கக் கூடியது. கல்வியறிவை வைத்து தேர்வுல மதிப்பெண் வாங்கலாம், வேலைக்குப் போகலாம், சம்பாதிக்கலாம், அவ்ளவுதான். ஆனா, பிறப்பறிவ வச்சி நாம யாரு? நம்மளோடக் குடும்பம் எப்படிப்பட்டது? நம் முன்னோர்கள் எப்படிப்பட்டவங்க? அவர்கள் பின்பற்றின பழக்கவழக்கங்கள் என்னென்ன?ன்னு அறியமுடியும்..”
மீண்டும் பேச்சை நிறுத்திவிட்டு எங்கள் முகத்தைப் பார்த்தார். ஒவ்வொருவரும் அமைதியாக அவர் அடுத்தென்ன சொல்லப்போகிறார் எனக் கேட்கும் ஆவலில் காத்துக்கொண்டிருந்தோம்.
சில நொடிகள் எதையோ யோசித்தவர்,
”போய் உங்க வீட்ல இருக்க பெரியவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. அடிக்கடி அவங்களோடப் பேசுங்க. அவங்க அனுபவங்களை, அறிவைக் கேட்டு வச்சிக்கோங்க. அது இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது ஒருநாள் உங்களுக்கு உதவும்..’’ என்றார்.
இப்படி அவர் சொல்லிமுடித்ததும் எனக்குள் யோசிக்க ஆரம்பித்தேன். எப்படி யோசித்தும் அம்மாவைப் பெற்ற தாத்தாப் பாட்டியின் பெயரும், உங்களைப் பெற்ற தாத்தாப் பாட்டியின் பெயரையும் தாண்டி ஒருவர் பெயரும் தெரியவில்லை.
அன்றைய தினம் பள்ளி முடித்துவிட்டு, வேகவேகமாக ஆற்றில் இறங்கி மறுகரை ஏறி அங்கிருந்து ஊருக்கு வரும் ஒத்தையடிப்பாதை வழியாக மெதுவாக நடந்து வழிநெடுகப் பயிரிடப்பட்டிருக்கும் நெல், மல்லாட்டை, கம்பு, எள். ஆங்காங்கே நின்றிருக்கும் தென்னை, வேம்பு, பூவரசு, வெப்பாலை, மாமரம் என எதையும் சரிவர கவனிக்காமல் தலைமையாசிரியர் வகுப்பில் சொன்னதையே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
ஆடு மேய்க்கப் போயிருந்த அண்ணனோடு ஆட்டை ஓட்டிக்கொண்டு பொழுதுசாயும் வேளையில் வந்த நீங்கள், பள்ளியிலிருந்து வந்து சட்டையைக் கூட கழட்டாமல் புத்தகப் பையை எடுத்துப் போய் வீட்டுக்குள் வைக்காமல் கட்டுத்தெருவருகே போட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருக்கும் என்னைப் பார்த்துவிட்டு அருகில் வந்து, அண்ணனுக்கு மதியம் கூழ் எடுத்துப்போன பொனக்கட்டையில் பறித்து வந்த காரப்பழத்தை தந்துவிட்டு, ஆட்டையெல்லாம் பட்டிக்குள் ஓட்டி மூடிவிட்டு, சாக்கடையில் போய் கை கால் முகம் கழுவிவிட்டு துண்டால் துடைத்தபடி என்னருகே வந்து உட்கார்ந்தீர்கள்.
எதுவும் பேசாமல் உங்களையே பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்துவிட்டு,
”என்னய்யா..’’ என்றீர்கள்.
அதற்காகவே காத்திருந்தவனாக, ”நம்ம தாத்தா பாட்டியோட பேரு நாராயணக்கவுண்டர் – நெல்லம்மா. அப்ப… தாத்தாவோட ஐயா – அம்மா பேரு என்னய்யா?’’ என்றேன்.
எனதக்கேள்வியையும், ஆர்வத்தோடு அதைக் கேட்பதையும் பார்த்து, லேசாக உதடசைத்து பல் வெளியே தெரியாமல் சிரித்துவிட்டு,
”ராமசாமிக்கவுண்டர் – ரேணுகாம்பாள்..’’ என்றீர்கள்.
அதைக் கேட்டுவிட்டு, ‘ராமசாமிக்கவுண்டர் – ரேணுகாம்பாள். ராமசாமிக்கவுண்டர் – ரேணுகாம்பாள்’ என உள்ளுக்குள் இரண்டு மூன்று தடவை சொல்லி பதித்துக்கொண்டேன்.
அடுத்தக் கேள்வியாக, ”நம்ம தாத்தாக் கூட பொறந்தவங்க எத்தனப் பேருய்யா? அவங்க பேர்லாம் சொல்லு..’’ என்றதும்,
‘ஏன் கேட்கிறேன், எதற்கு கேட்கிறேன்’ என எதுவும் கேட்கவில்லை. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றை நானாக முன்வந்து கேட்பதாக நினைத்துக்கொண்டு, அவ்வளவு மகிழ்வோடு,
”எங்கைய்யா கூட பொறந்தவங்க நாலு பேரு. பெரிவரு மொட்டையன்கவுண்டர், சின்னவரு பச்சையப்பன்கவுண்டர், அதுக்கப்பறம் காத்தமுத்துக்கவுண்டர், அப்பறம் கடைசியா எங்க அத்த சத்தி..’’
அதோடு விடவில்லை.
”ஒங்கக் கூட பொறந்தவங்கள்ல காத்தவராயன் பெரிய்யாவ மட்டும் நான் பாத்திருக்கன். மத்தவங்கலாம் யார் யார்யா?’’ என்றேன்.
முகம் கைகள் கால்கள் ஈரம் போக துடைத்துவிட்டு, துண்டை தோள்மீது போட்டுக்கொண்டு, இடதுகாலைத் தூக்கி வலதுகால் மேல் அட்டனக்கால் போட்டு என்னைப் பார்த்து,
”நாங்க மொத்தம் நாலுபேரு. அதல நான்தான் சின்னவன். ரண்டண்ணன், ஒரு அக்கா. சின்னவரு காத்தவராயன், அவர நீ பாத்திருப்ப. பெரிவரு சின்னப்பையன், நீ பொறக்கறதுக்கு முன்னாலயே செத்துட்டாரு. எல்லாத்துக்கும் பெரிவங்க அக்கா ஆரிருத்தமா..’’ என்று சொல்லிவிட்டு,
அடுத்தக் கேள்வியை நான் கேட்கும் முன்னமே,
”எங்க கொள்ளுத் தாத்தா பேரு காத்தவராயக் கவுண்டர். அததான் எங்கைய்யா எங்க சின்னண்ணனுக்கு வச்சாரு. கொள்ளுப்பாட்டி பேரு முத்தம்மா. அவங்குளுக்கு பொறந்தவருதான் எங்கத் தாத்தா ராமசாமிக்கவுண்டர். அவர் கூட பொறந்தவங்களப் பத்திலாம் எனக்குத் தெரில. ஆனா, நம்ம வகராவுல எல்லாரும் காலகாலமா ஏர் ஓட்டி மண்ணக் கீறி வெவசாயம் பண்ணவங்க. கூடவே ஊரு கோயில்ல பூசாரியாவும் இருந்திருக்காங்க..’’ என்றீர்கள்.
அதைக் கேட்டுவிட்டு மகிழ்வோடு அங்கிருந்து எழுந்து வீட்டுக்குள் போய் சாமி படத்தின் கீழே உட்கார்ந்து, சீமெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து, அதன் வெளிச்சத்தில் பையிலிருந்த தமிழ் நோட்டை வெளியிலெடுத்து அதன் கடைசிப் பக்கத்தில்,
‘காத்தவராயக்கவுண்டர் – முத்தம்மாள்,
ராமசாமிக்கவுண்டர் – ரேணுகாம்பாள்,
நாராயணக்கவுண்டர் – நெல்லம்மாள்,
சாமிக்கண்ணு – வெள்ளையம்மாள்’
என வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிவிட்டு, அதன் கீழே கடைசியாக ‘வடிவரசு’ என என் பெயரை எழுதி, ‘ஒண்ணு, ரண்டு, மூணு, நாலு, அஞ்சி’ என எண்ணி, நான்கு தலைமுறை முன்னோர் பெயரும், அவர்கள் செய்த தொழிலும் தெரிந்துகொண்ட உற்சாகத்தில் நோட்டை மூடி பைக்குள் வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தேன்.
வான் கறுத்து இருள் எங்கும் கவிழ்ந்திருந்தது. தெருவின் இரு பக்கமும் எரிகிற இரண்டு தெருவிளக்கு வெளிச்சமும், வரிசையாக வீடுகளில் எரியும் குண்டுபல்பு வெளிச்சமும், மண்ணெண்ணை விளக்கின் ஒளியும் தெரிந்தது.
பல்லாயிரம் ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த பெரும் பொக்கிஷம் ஒன்று என் கையில் கிடைத்ததாக உள்ளம் துள்ளிக் குதித்தது. வானில் ஒளிரும் நட்சத்திரங்களை அண்ணாந்து பார்க்கிறேன். கண்களால் பார்த்திடாத தாத்தா – பாட்டி, கொள்ளுத் தாத்தா – கொள்ளுப் பாட்டி, அவர்களின் அப்பா – அம்மா என… என் மூதாதையர்கள் ஒவ்வொருவரும் ஒளிர்ந்து கீழே நின்றிருக்கும் காக்கி டவுசரும் வெள்ளைச் சட்டையும் போட்டிருக்கும் என்னைப் பார்த்து புன்னகைத்து ஆசீர்வதிப்பதாகத் தோன்றியது.
ரஜினி – கமல், விஜய் – அஜீத் நடித்த படங்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லிப் பெருமைப்படும் பலருக்கும் இங்கே அவர்களின் தாத்தா – பாட்டி பெயர்களைத் தாண்டி முன் தலைமுறையைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் தெரிவதில்லை.
தனக்குப் பிடித்த நடிகரின் அடுத்த படத்தின் தலைப்பு நாளை வெளியிடுவதாக அறிவித்துவிட்டால் போதும் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்துக் காத்திருக்கும் எவருக்கும் இங்கே, தன் தாத்தா – பாட்டி என்னவேலை செய்தார்கள்? அவர்களின் அப்பா – அம்மா பெயர் என்ன? எனத் தெரிந்துகொள்வதில் எவ்வித ஆர்வமும் இருப்பதில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டியது மிக அவசியம், அது நம் அடிப்படைத் தெரிதல் என்னும் புரிதல் கூட இங்கே பலருக்கும் இல்லாமல் போனதுதான் ஐயா.
நம் தந்தை – தாய், பாட்டன் – பாட்டி, பூட்டன் – பூட்டி, ஓட்டன் – ஓட்டி, சேயோன் – சோயோள், பரன் – பரை… என நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளவில்லையென்றால் கூட பரவாயில்லை. குறைந்தது அவர்களின் பெயர்களையாவது தெரிந்து வைத்திருக்கலாமே என்றால் அதுவும் இல்லை.
‘எப்பதான் பொழுது விடியுமோ?’ என அன்றிரவு முழுக்க தூங்காமல் விழித்தபடி காத்திருந்தேன். விடிந்ததும் எழுந்துபோய் குளித்துவிட்டு, வேகவேகமாக கிளம்பி பையைத் தூக்கிக்கொண்டு பொடி நடையாக நடந்துபோய் முரம்பு மேடு ஏறியிறங்கி, ஆத்தோர பாய் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு, ஆற்றில் இறங்கி மறுகரையில் உள்ள பள்ளிக்குப் போய் அரசமரத்தடியில் பையை வைத்துவிட்டு, முதல் வேலையாக முன்தினம் விளக்கொளியில் உட்கார்ந்து எழுதிய தமிழ்நோட்டை எடுத்துக்கொண்டு, பள்ளிக்கு எப்போதும் சீக்கிரமே வந்துவிடும் தலைமையாசிரியர் அறைக்குப் போய், நம் குடும்பத்தின் ஐந்து தலைமுறையின் பெயர்ப் பட்டியலைக் காட்டி,
”தலமுற தலமுறயா எங்கக் குடும்பத்துல எல்லாரும் வெவசாயம்தான் பண்ணிருக்காங்க சார். நேத்தே போய் எங்கைய்யா கிட்டக் கேட்டு எல்லாத்தயும் தெரிஞ்சிக்கிட்டன்..’’ என்றதும்,
புருவம் உயர்த்தி லேசாகத் தலையாட்டியபடி எழுந்தவர், தோளில் மகிழ்வோடு தட்டிக்கொடுத்துவிட்டு, பின் கை குலுக்கியபடி,
”வெரி வெரி குட். இப்படித்தான் எப்பவும் இருக்கணும்..” என்று சொல்லி புன்னகைத்து அனுப்பிவைத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் இரண்டாம் மணியடித்து பள்ளி மைதானத்தில் இறைவாழ்த்துக் கூட்டம் தொடங்கியது.
அறிவிப்பு நேரத்தில் பேசிய தலைமையாசிரியர், என்னைப் பற்றியும், எனது ஆர்வம் பற்றியும், எனதிச்செயல் பற்றியும் சொல்லி அனைவரையும் எனக்காக கைத்தட்ட சொன்னார்.
உடனே அனைவரும் கைதட்ட, அக்கரவொலி கேட்டு உடம்பெல்லாம் சிலிர்க்க மகிழ்ந்து போனேன் ஐயா.
என்னதான் நீங்கள் படிக்கவில்லை என்றாலும், என்னை நல்லறிவோடு, நம்மைச் சுற்றியிருக்கும் மரங்கள், செடிகள், கொடிகள் தொடங்கி, நம் மூதாதையர்களின் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை, செய்த தொழில்கள், பழக்க வழக்கங்கள் என நல்லது, கெட்டது அனைத்தும் சொல்லித்தந்து, பட்டம் பல படித்தவர்களின் பிள்ளைகளைக் காட்டிலும் தனித்துவத்தோடு வளர்த்துள்ளீர்கள்.
அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது, ஒரு தந்தையாக எனக்கு நீங்கள் வாய்த்தது நினைத்து பெருமைப்படுகிறேன் ஐயா.
அதோடு, நீங்கள் சொல்லித்தந்ததை என்னோடு நிறுத்திக்கொள்ளாமல் எனக்குப் பின்வரும் தலைமுறையினருக்கும் கொண்டுபோய் சேர்ப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன் ஐயா.
என்றும் நம் முன்னோர்களின் ஆசியோடு,
உங்கள் மகன் வடிவரசு
(August 18, 2020)
*
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்
அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு