அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 18 : பின்னோக்கும் கலை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு

அன்புள்ள ஐயாவுக்கு,

அடிக்கடி ஒன்றைச் சொல்வீர்கள்,

‘எப்பா… நேரம் கெடக்கிறப்பலாம் ஒன் வாழ்க்கய கொஞ்சம் திரும்பிப் பாரு. நீ வாழ்ந்த வாழ்க்கய மட்டுல்ல… வாழப்போற வாழ்க்கயயும் அது ஒனக்கு சொல்லித்தரும். வாழ்க்க கத்துத்தர்ற பாடத்த படிச்சின்னாதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..’

நிஜம்தான் ஐயா!

இதை பலதடவை உணர்ந்திருக்கிறேன். அதிலும் இரு தினங்களுக்கு முன், சென்னை – பல்லாவரத்திலுள்ள நண்பர் வீட்டுக்கு அவசர வேலையாக செல்லவேண்டிய சூழல். பேருந்து, மின்சார ரயில் எதுவும் இல்லை. சென்றால் ஒன்று ஆட்டோவில் செல்லவேண்டும், இல்லையெனில் நடந்து. பதினாறு கிலோமீட்டர் தூரம்.

பெரிதாக யோசிக்கவெல்லாம் இல்லை. இரண்டாவதை தேர்ந்தெடுத்து, அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்துக் கிளம்பி, 5.45-க்கு நுங்கம்பாக்கத்திலிருக்கும் என் அறையிலிருந்து நடக்க ஆரம்பித்தேன்.

மெல்ல உஸ்மான் சாலை வழியாக சென்று, நான் பலதடவை நடந்துபோக ஆசைப்பட்ட மேம்பாலத்தின்மீது இரு பக்கமும் தெரியும் பெரும் கட்டிடங்களையும் வணிக வளாகங்களையும் பார்த்தபடி ஏறியிறங்கி, தி.நகர் பேருந்து நிலையம் கடந்து நேராக அண்ணாசாலையைத் தொட்டு வலதுபக்கம் திரும்பி, சாலையோரமாக சைதாப்பேட்டை சப்வே அருகிலுள்ள என் விருப்ப தேநீர்க் கடையில் போய் நின்றேன்.

நடத்தல் எப்போதும் பிடித்த விஷயமாக இருந்தாலும், இதுபோல் அதிகாலையில் எழுந்து நீண்டதூரம் நடப்பது மிகப் பிடித்தமானதென்பேன். காரணம், சிறுவயது முதல் தங்களோடு எத்தனையோ தடவை பத்து கிலோமீட்டர் தாண்டியுள்ள தண்டராம்பட்டு சந்தைக்கும், தானிப்பாடி சந்தைக்கும் நடந்துசென்று வந்ததும், காடு மேடென சுற்றித் திரிந்ததும், பள்ளிக்கு நடந்துபோய் பழக்கப்பட்டதும்தான் ஐயா.

வானம் சற்று மேகமூட்டத்துடன் இருந்தது. அதை ரசித்தபடி ஒரு தேநீர் வாங்கி மெல்லப் பருகிக் கொண்டிருந்தேன். ஒருசில வாகனங்கள் தவிர சாலை முழுக்க வெறிச்சோடி இருந்தது. எதிரில் நான் பி.எட் படித்த கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திற்குப் போகும் வழியருகில் நான்கைந்து பெண்கள் நின்றிருந்தார்கள். அதில் ஒரு பெண் என் பக்கத்தில் நின்றிருக்கும் கட்டம்போட்ட சட்டை போட்டப் பையனையே அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். 

இரண்டு மூன்று நிமிடங்கள் சென்றிருக்கும். அதற்குள் அருகில் வந்துநின்ற வெள்ளை நிற இண்டிகோவில் ஏறி அவர்கள் சென்றுவிட்டார்கள். உடனே பக்கத்திலிருந்த பையனும் தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக விரைந்துவிட்டான். 

சட்டென நீங்கள் சொல்லும்,

‘எப்பா… நேரம் கெடக்கிறப்பலாம் ஒன் வாழ்க்கய கொஞ்சம் திரும்பிப் பாரு. நீ வாழ்ந்த வாழ்க்கய மட்டுல்ல… வாழப்போற வாழ்க்கயயும் அது ஒனக்கு சொல்லித்தரும். வாழ்க்க கத்துத்தர்ற பாடத்த படிச்சின்னாதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..’

இவ்வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

இப்படித்தான் ஐயா, எங்காவது தூரமாக நடக்கும்போது, பயணிக்கும்போது, தனியாக உட்கார்ந்திருக்கும்போது, எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது சட்டென எதிர்பாராத சமயத்தில் இவ்வார்த்தைகள் நினைவுக்கு வரும்.

அன்றபடி நினைவுக்கு வந்ததும் என்னையும் அறியாமல் கால்சட்டைப் பையில் வைத்திருந்த நகர்பேசியையும், ஹெட்ஃபோனையும் வெளியில் எடுத்து செருகி காதில் வைத்துக் கொண்டு, நான் முதன்முதலில் பாட்டென்றால் என்ன, எழுத்தென்றால் என்னவென்று தெரியாத நாட்களில் எழுதிய ‘அடி நீ வந்ததும்..’ பாடலைப் போட்டுக் கேட்டபடி சாலையோரமாக நடக்க ஆரம்பித்தேன்.

மெல்ல மனக்கண்ணில் காட்சி விரிந்து அப்பாடல் உருவான இடமும் சூழலும், அதற்கு இசை கோக்கப்பட்டு என்னிடம் முதல் தடவையாக போட்டுக் கட்டப்பட்ட நிமிடங்களும், அதைக்கேட்டு நான் கண் கலங்கிய நினைவுகளும் வந்துபோனது.

பனகல் மாளிகை கடந்து, ஆற்றுப்பாலத்தின் மீது பக்கத்தில் தெரியும் சிறுசிறு வீடுகளையும், அங்குள்ள மனிதர்களையும், அதற்கப்பால் தெரியும் ரயில்வே பாலத்தையும் பார்த்தபடி நடக்கும்போது, என் முதல் தனிப்பாடலான ‘தொப்புள்கொடி’ பாடலைக் கேட்க ஆரம்பித்தேன்.

‘அகரத்தில் முதலெழுத்து –

அது உயிரெழுத்து..

அவள் நேரதற்கு..

அகிலத்தில் பல தெய்வமுண்டு –

அதில் உண்மையுண்டு..

அவள் மேலதற்கு..’

சட்டென சிறுவயது நினைவுகள் வர பாடலை அதோடு நிறுத்திவிட்டு, அதுகுறித்து யோசித்தபடி சின்னமலை பேருந்து நிறுத்தம் தாண்டி கிண்டி நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

நம் பழைய கூரைவீடு, அதற்குப் பக்கத்திலிருந்த ஆட்டுக் கொட்டகை, அதன் ஒருபக்கத்தில் எனக்காக நீங்கள் கட்டிய மூங்கில் பரண், அதில் உட்கார்ந்து நான் விளையாடிய பொழுதுகள், வரைந்த ஓவியங்கள், வீட்டுப்பாடங்கள் எழுதிய நாட்கள் யாவும் கண்முன் வந்தது.

மெல்ல நடந்துபோய் அங்குள்ள வெப்பாலை மரத்தடியில் நின்று அதன் இரட்டைக் காய்களைத் தொட்டு வருடிப்பார்த்துவிட்டு, இன்னும் ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் பள்ளியிலிருந்து எடுத்துவந்த சாக்பீஸ் துண்டுகள் கொண்டு நானும் வெங்கடேசும் கோனார் வீட்டுச் சுவரில் தெரியாத்தனமாக கோடு போட்டுவிட்டோம் என்பதற்காக, அவரது மகன் வந்து என்னை ஓங்கி உதைத்துக் கீழே தள்ளி,

‘ஏன்டா பொறம்போக்கு நாயே, ஒனக்கு கிறுக்கர்துக்கு என் வூடுதான் கெடச்சதா?’ என வாய்க்கு வந்தபடி திட்டும்போது, தற்செயலாக அப்பக்கம் வந்த நீங்கள், பதறி ஓடிவந்து கீழே விழுந்துகிடந்த என்னைத் தூக்கிவிட்டு, நடந்ததைக் கேட்டறிந்து தங்கள் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்துப் போய் நான் கிறுக்கியதை துடைத்துவிட்டு,

‘இனிமே எம்புள்ள இதுமாரி செய்ய மாட்டான், வுட்ருப்பா..’ என கையெடுத்து கும்பிட்டுவிட்டு, வீட்டுக்கு கூட்டி வந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

கூடவே… அன்று மதியம் சண்முகம் அண்ணனிடம் சொல்லி நம் வீட்டு தாழ்வாரச் சுவரில் மூன்றடிக்கு மூன்றடி கருநிற பெயிண்ட் அடிக்கச் சொல்லி, வெளியில் சுவரோரக் கோழிக்கூண்டு மீது உட்கார்ந்திருந்த என்னிடம் வந்து,

”எப்பா, வடுவரசு… இங்க வாய்யா..’’ என்று உள்ளேக் கூட்டிப்போய்,

”இனிமேலு ஒனக்கு எதனா கிறுக்கணும், எழுதணும்னா இதல எழுது. இன்னிக்கி சொல்றன்… இனி என்னிக்கும் ஒன்னக் கீழ தள்ளி ஒதச்சவங்க வூட்டு வாசப்படிய மெதிக்கக் கூடாது..’’ என்றதும், கண்கலங்கியபடி ஓடிவந்து தங்களைக் கட்டிக்கொண்டு அழுததும் நினைவுக்கு வந்தது.

சற்று தள்ளியிருக்கும் கிண்டி ரயில்வே மேம்பாலம்மீது போய் நின்றுகொண்டு, ரயில் தண்டவாளத்தையே சில நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தேன். எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை அதிக வாகனங்களின்றி விடுமுறை தினம் போன்றிருந்தது.

உடனே நான் எட்டாவது படிக்கும்போது, பள்ளியிலிருந்து சாத்தனூர் அணைக்கு கூட்டிப்போன ஒருநாள் சுற்றுலாவுக்கு 25 ரூபாய் கட்டணம் செலுத்தி போக முடியாத வருத்தத்தில், துரிஞ்ச மரத்தடியில் உட்கார்ந்து ஆட்டுக் குட்டியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அதனிடம் எதையோ பேசி விளையாடிக்கொண்டிருந்தேன்.

அப்போது அங்கே வந்த நீங்கள்,

”எப்பா, வடுவரசு… வா என்கூட..’’ எனக் கூட்டிக் கொண்டு, எதுவும் சொல்லாமல் அரசங்கல்லுக்குப் போனீர்கள்.

நன்றாக நினைவுள்ளது, அது காரையும், சூரையும் கொத்துக் கொத்தாய் காய்க்கும் ஜனவரி மாதம். ஏறும் வழியிலிருந்த காரப்பழங்களையும், சூரப்பழங்களையும் பறித்து துண்டில் வைத்துக் கட்டி முடிபோட்டுக் கொண்டு, உச்சிமலைமீது கூட்டிப்போய் பாறைமேல் உட்காரச் சொல்லி, துண்டை அவிழ்த்து விரித்து நடுவில் வைத்துவிட்டு, நான்கைந்து காரப்பழத்தை கையில் எடுத்து நீட்டி,

”எப்பா… இந்தாய்யா இத தின்னுனு அதோ புதூர் மலக்கிப் பக்கத்துல தெர்துபாரு, அதான் சாத்தனூர் டேமு… அடுத்தவாட்டி கண்டிப்பா ஒன்ன டூருக்கு அனுப்பறன். சங்கடப்படாத..’’ என்று வருத்தத்தோடு சொன்ன காட்சி வந்து போனது.

மெல்ல அங்கிருந்து நடந்து, சாலையோர மரத்தடி நிழலில் உட்கார்ந்து பட்டினத்தார் பாடல் பாடிக்கொண்டிருந்த வயதான பெரியவர் கையில் ஐந்துரூபாய் நாணயத்தை கொடுத்துவிட்டு, கிண்டி தொழிற்பேட்டை தாண்டி வரிசையாக நின்றிருக்கும் மரங்களைக் கடந்து கத்திப்பாரா மேம்பாலத்தின் முன்னால் போய் நின்றேன்.

நம் முரம்பு நிலத்தில் மல்லாட்டையும், கம்பும், சாமையும் பயிரிட்ட நாட்கள், பின் அக்காவின் திருமணத்திற்காக அந்நிலத்தை விற்றுவிட்டு கூலிவேலை செய்தது, அதன்பின் முபாரக் பாய் நிலத்தை போகியத்திற்கு எடுத்து சில ஆண்டுகள் நெல் பயிரிட்டது, பின் சோமாசம்பாறை தாண்டியுள்ள கிட்டாபாய் நிலத்தை குத்தகையெடுத்து ஐந்தாண்டுகளுக்கு மேல் மல்லாட்டையும், கம்பும், எள்ளும் பயிரிட்டது, அதன்பின் நீண்ட காலம் கூலிவேலை செய்துவிட்டு, கடந்த பத்தாண்டுகளாக பாலு செட்டியார் நிலத்தில் போகியத்திற்கு நெல், மல்லாட்டை, சோளம், எள், சூரியகாந்தி, தைலம்பில் பயிரிட்டு வருவது,

‘அவ்ளோ நெலத்த அன்னிக்கி வச்சிர்ந்தும் கடைசி காலத்துல நமக்குன்னு கால்காணி நெலங்கூட சொந்தமா இல்லாமப் போச்சில்ல..’ என்று அடிக்கடி நீங்கள் சொல்லி வருத்தப்படுவது… என எதை எதையோ மனமானது யோசிக்க ஆரம்பித்தது.

சட்டென கத்தாரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கும் பெரிய விமானம் ஒன்று, சத்தம் போட்டபடி தலைக்கு மேலாக மிகத் தாழ்வாகப் பறந்துபோவதை அன்னார்ந்து பார்த்தேன்.

உடனே ஈராண்டுகளுக்கு முன்பு தங்களையும், அம்மாவையும் விமானத்தில் கூட்டிப்போக ஊரிலிருந்து அழைத்துவந்து, விமான நிலையத்திற்குள் கூட்டிப் போய் உட்கார வைத்து, எதிர்பாராத சமயத்தில் விமானப் பயணச்சீட்டை உங்கள் கையில் தந்து,

”இதான் ஃப்ளைட் டிக்கெட்..’’ என்றதும்,

அதுவரை நான் விமான நிலையத்தை சுற்றிக் காட்டத்தான் கூட்டிவந்தேன் என நினைத்திருந்த நீங்கள் வெள்ளந்தியாய்,

”நாம பிளைன்ல போறமா?’’ என்று கேட்டதும்,

”ஆமாம்’’ என லேசாகப் புன்னகைத்து நான் தலையாட்டியதைப் பார்த்துவிட்டு பெரிதாக மகிழ்ந்ததும்,

அதன்பின் அன்றிரவு கோவையிலுள்ள செந்தில் அண்ணன் வீட்டில் இருக்கும்போது,

”விமானப் பயணம்லாம் எப்டி இருந்ததுய்யா?’’ என அண்ணன் கேட்டதற்கு,

”அதெல்லாம் நல்லார்ந்தது..’’ என மகிழ்வோடு சொல்லிவிட்டு, என்னைப் பற்றி ஏதோ கவலையோடு பேசியதும்,

அதற்கு அண்ணன்,

”தம்பியப் பத்தி ஒரு கவலயும் படாதீங்க. அவன் இன்னிக்கி வந்தீங்கள்ல… அதுமாதிரி நாலு ஃபிளைட்ட வாங்கற அளவுக்கு பெரியாளா வருவான்..’’ என்றதைக் கேட்டு, கண் கலங்கிய காட்சியும் கண்முன் வந்து போனதய்யா.

நேரம் பார்த்தேன், சரியாக 7: 55. எப்படியும் இந்நேரம் நிலத்திலிருப்பீர்கள் என நினைத்து, உடனே நகர்பேசியில் உத்திரம் அண்ணனுக்கு அழைத்து, உங்களிடம் தரச் சொன்னேன்.

”லைன்லயே இருடா… அங்க கெணத்து மோட்டுக்கிட்ட மாட்டப் புடிச்சிக் கட்டினுகீராரு… நான் ஓடக்கிட்ட இர்க்கன், போய் தர்றன்..’’ எனச் சொல்லிவிட்டு, உங்களிடம் வந்து தந்தார்.

வாங்கியதும், ”எப்பா, வடுவரசு… எப்டிய்யா இர்க்க? அங்கதான் கொர்னா நறயா இர்க்குன்னு டிவில பயங் காட்றாங்க. பாத்து பத்தரமா இர்க்கியா? இல்லனா இங்க கெளம்பி வந்துர்றயா?’’ என்றீர்கள்.

உடனே நான், ”நான் நல்லாருக்கன்ய்யா. ஒன்னும் கவலப்படவேணாம், பத்தரமாதான் இர்க்கன். ஒடம்புலாம் பரவால்லயாய்யா?’’ என்றதற்கு,

”எனக்கிங்க ஒன்னும் கொறவில்ல… ஒக்காந்து எந்திரிக்கறப்பயும், நடக்கறப்பயும்தான் கால் முட்டியாண்ட வலிக்குது. மத்தபடி ஒன்னுல்ல, நல்லார்க்கன்..’’ என்றீர்கள்.

அதைக் கேட்டதும், ”சின்ன வயசுலர்ந்து நறயா நடந்திர்க்கீங்கல்ல,  அதான்யா மூட்டுக்கிட்டலாம் வலிக்குது..’’ என்றதற்கு,

”விடாம இத்தன வர்சம் நடந்ததுனாலதான் இன்னமும் அந்த ஆண்டவன் நடமாட்டத்தோட என்னைய வச்சிர்க்கான்..’’ என்று சொல்லிவிட்டு,

என் வேலை குறித்தும், சாப்பாடு குறித்தும், கோவை செந்தில் அண்ணன் குடும்பம் பற்றியும் கேட்டுவிட்டு, நான் சற்றும் எதிர்பார்க்காத, எதைப் பற்றி நினைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்துவந்தேனோ, அதையே சொன்னீர்கள். ஆம்! ஐயா.

‘எப்பா… நேரம் கெடக்கிறப்பலாம் ஒன் வாழ்க்கய கொஞ்சம் திரும்பிப் பாரு. நீ வாழ்ந்த வாழ்க்கய மட்டுல்ல… வாழப்போற வாழ்க்கயயும் அது ஒனக்கு சொல்லித்தரும். வாழ்க்க கத்துத்தர்ற பாடத்த படிச்சின்னாதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..’

வியப்பாக இருந்தது. லேசாகப் புன்னகைத்துவிட்டு,

”நீ எங்கூட இங்க இல்லனாலும், எப்பயும் இர்ந்துனுதான்ய்யா இர்க்க..’’ என்றதைக் கேட்டு, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தீர்கள்.

எதையோ யோசிக்கிறீர்கள் எனப் புரிந்தது.

”ஐயா..’’ என்றேன்.

சில நொடிகள் கழித்து,

”ம், சொல்லுய்யா..’’ என்றீர்கள்.

அவ்வார்த்தையில் இருந்த லேசான தடுமாற்றம், நான் சொன்னதைக் கேட்டு நீங்கள் கண்கலங்கி விட்டதைச் சொல்லாமல் சொன்னது. ஆம்! ஐயா, அதனால்தான்,

”ஏன்யா கண் கலங்கற? நான் எதனா தப்பா சொல்லிட்டனா..?’’ என்றேன்.

அதைக் கேட்டதும் வியந்தவராய்,

”நான் இங்க ஊர்ல கொல்லில கண் கலங்கனது… ஒனக்கு அங்க வரிக்கும் தெர்ஞ்சிர்ச்சா… ஹாஹா..’’ என சத்தமாகச் சிரித்தீர்கள்.

சொன்னது புரியாமல், ”ஏன்ய்யா சிரிக்கற?’’ என்றதற்கு,

”ஒண்ணுல்லய்யா… பாத்து பத்தரமா இரு..’’ என்று சொல்லிவிட்டு வைக்கும்போது திரும்பவும்,

”எப்பா… நான் சொன்னதுலாம் நாபகம் இர்க்கட்டும்..’’ என்று சொல்லி, அதே வார்த்தைகளை இன்னொரு தடவை சொல்லிவிட்டு வைத்தீர்கள்.

சாலையோரமாக பல்லாவரம் நோக்கி நடந்தபடி, கடந்த நான்காண்டுகளில் நான் எழுதிய ஒவ்வொரு பாடலாகப் போட்டுக் கேட்டுக் கொண்டு, அதன் நினைவுகளில் மெல்ல நனைந்துபோனேன். ஆம்! ஐயா.

‘எப்பா… நேரம் கெடக்கிறப்பலாம் ஒன் வாழ்க்கய கொஞ்சம் திரும்பிப் பாரு. நீ வாழ்ந்த வாழ்க்கய மட்டுல்ல… வாழப்போற வாழ்க்கயயும் அது ஒனக்கு சொல்லித்தரும். வாழ்க்க கத்துத்தர்ற பாடத்த படிச்சின்னாதான் ஒன் வாழ்க்க என்னிக்கும் நல்லார்க்கும்..’

தங்களின் இவ்வார்த்தைகள்… இவ்வாழ்வை திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும், வாழ்ந்த வாழ்க்கையை மட்டும் சொல்லவில்லை. வாழப்போகும் வாழ்க்கையையும் சொல்லிவிட்டுப் போகிறதய்யா. ஆம்!

மரணத்தை நோக்கிப் பயணப்படும் இவ்வரிய வாழ்வில், இவ்வார்த்தைகளைத் தாண்டிய படிப்பினையை, வேறெந்த வார்த்தைகளும் சொல்லப் போவதாகத் தோன்றவில்லை ஐயா.

வாழ்வை திரும்பிப் பார்த்தபடி,

உங்கள் வடிவரசு

(August 28, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=