அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி

அன்புள்ள ஐயாவுக்கு,

இதுவரை தங்களிடம் எவ்வளவோ கேள்விகள் கேட்டிருக்கிறேன். ஆனால், கேட்க நினைத்து கேட்காத கேள்வி ஒன்றுண்டு. இப்போது மட்டுமல்ல, அதை எப்போதும் கேட்காத கேள்வியாகவே நினைக்கிறேன். ஆம்! ஐயா.

சிறுவயது முதல் நம்மைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடிகள் ஆரம்பித்து வாழ்வின் மிகமுக்கிய முடிவுகள் வரைக்கும் தங்களிடம் எவ்வித தயக்கமும் இல்லாமல் மனதில் பட்டதை உடனுக்குடன் கேட்டிருக்கிறேன். நீங்களும் அதற்கு எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால், இவ்வொரு கேள்வியை மட்டும் என்னால் உங்களிடம் கடைசிவரை கேட்கவே முடியவில்லை. ஒருவேளை துணிந்து கேட்டிருந்தால் பதில் சொல்லியிருப்பீர்கள். என்றபோதும் அதற்கான பதிலை உங்களுக்குப் பதிலாக, உங்கள் ஆருயிர் நண்பர்களில் ஒருவர் சொல்லிவிட்டார். அதுவும் நான் கேட்காமலேயே. ஆம்! ஐயா.

எனக்குத் தெரிந்து நண்பர்களையும், நட்பையும் உங்கள் அளவுக்கு கொண்டாடியவர், நேசித்தவர் யாரும் இல்லை என்பேன். அந்தளவுக்கு உங்கள் நண்பர்களையும், அவர்களது நட்பையும் கொண்டாடியிருக்கிறீர்கள், மதித்திருக்கிறீர்கள்.

அவர்களில் முத்துசாமி ஐயா, அருணாச்சலம் செட்டியார் மாமா, மண்ணாங்கட்டி தாத்தா, கருப்பக்கவுண்டர் மாமா, ராமு தாத்தா போன்றவர்களை மிக முக்கியமானவர்கள் என்பேன்.

எனினும் சட்டென ஏதோவொரு தருணத்தில் உங்கள் உயிர் நண்பர்களில் ஒருவரான ராமு தாத்தாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டீர்கள். ஆரம்பத்தில் ஏதோ மனவருத்தத்தில்தான் பேசாமல் இருக்கிறீர்கள், நாளடைவில் சரியாகிவிடும் பேசிவிடுவீர்கள் என அனைவரும் நினைத்தோம்.

ஆனால் காலப்போக்கில் அது ஒருநாளும் மாறாதப் பிளவு என்பதை உணர்ந்தபோது என் அளவுக்கு யாரும் வருத்தப்பட்டிருப்பார்களா தெரியாதய்யா.

அவரை பார்க்கும்போதெல்லாம் அவருக்கும் உங்களுக்குமான நட்புக்காலங்கள் கண்முன் வந்துபோகும். அதிலும் அவரது வீட்டைக் கடந்து போகும்போது… எவ்வளவு நாட்கள் நீங்களும் அவரும் அத்திண்ணையில் உட்கார்ந்து கதை பேசியிருப்பீர்கள், எத்தனை தடவை இத்தெருவில் ஒன்றுசேர்ந்து நடந்திருப்பீர்கள், காடு மேடு மலை குட்டை கால்வாய் நிலம் கிணறு ஆறு என எங்கெல்லாம் சுற்றித்திரிந்திருப்பீர்கள், கோயில் திருவிழா நாடகம் சாமி என எத்தனை இரவுகளை ஒன்றாகக் கழித்திருப்பீர்கள் என மனம் எதையெதையோ யோசிக்க ஆரம்பிக்கும்.

இத்தனைக்கும் அவர் நம் உறவினர். உங்களுக்கும் அவரது சொந்தக்காரப் பெண்ணான நம் அம்மாவுக்கும் திருமணம் செய்து வைத்தவர். உங்கள் உயிர் நண்பர்களில் முத்துசாமி ஐயாவுக்கும், அருணாச்சலம் செட்டியாருக்கும் அடுத்தபடியானவர்.

அப்படிப்பட்டவரை சட்டெனத் தூக்கிப்போட என்ன காரணமாக இருக்கும்? எவ்வாறு உங்களாலது முடிந்தது? என பலதடவை உங்களிடம் வந்து கேட்க நினைத்திருக்கிறேன். ஆனாலும் ஏதோவொன்று தடுக்கக் கேட்பதை ஒவ்வொரு தடவையும் தவிர்த்திருக்கிறேன்.

அதிலும் ஒருநாள் யாரோ ஒருவரிடம் கட்டுத்தெருவோர துரிஞ்சி மரத்தடியில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது,

‘எப்பவும் பாத்துப் பேசனா மட்டும்தான் கூட்டாளியா..’ என்றது,

பூவரச மரத்தடியில் களிமண் எடுத்துவந்து விநாயகர் சிலை செய்துகொண்டிருந்த என் காதில் தற்செயலாக விழுந்தது.

அவ்வார்த்தைகள் தங்களது நட்பின் ஆழத்தைச் சொல்வதுபோல் இருந்தாலும், என் கேள்விக்கான பதிலாக இல்லை என்பதை உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அதுமுதல் எத்தனையோ தடவை கேட்கவேண்டுமென வந்தும் முடியாமல் போய்விட்டது. சரி உங்களிடம்தான் கேட்க முடியவில்லை, அவரிடமாவது கேட்டுவிடலாம் என நினைத்தால் அதுவும் முடியவில்லை.

கடைசியாக அவரை 2011-ல் நம்மூர் கோயில் படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும்போது பார்த்தது. எப்போதும் என்னைக் கண்டால் கண்டும் காணாததுபோல் கடந்துபோகும் அவர், அன்று மட்டும் ஏனோ அதிசயமாகப் புன்னகைத்து,

”இங்க வாடா பய்யா..’’ என்றதும், மகிழ்வோடு அவரருகில் போனேன்.

என் உடையையும், முகத்தையும் உற்றுப் பார்த்தவர்,

”வடுவரசுதான நீ? எங்கப் படிக்கற?’’ என்றார்.

சொன்னேன்.

உடனே, ”நான் யாருன்னு தெரிதா?” என்றார், லேசாகச் சிரித்தபடி.

இது நான் எதிர்பார்த்த கேள்வி என்பதால் பதிலுக்குப் புன்னகைத்து,

”தெரியும்… ராமு தாத்தா..’’ என்றேன்.

அதைக் கேட்டு மகிழ்ந்தவராய்,

”ஒன் அப்பன் எப்டி இர்க்கான். என்னப் பத்திலாம் பேசுவானா?’’ என்றார்.

அவர் உங்களையும், உங்கள் நட்பையும் எவ்வளவு நேசிக்கிறார், எவ்வளவு இழந்து தவிக்கிறார் என்பதை அக்கேள்வியிலிருந்து என்னால் எளிதில் உணரமுடிந்ததய்யா.

அதோடு, பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் என்னை அழைத்துப் பேசியதை நினைத்து உள்ளுக்குள் துள்ளி குதித்தேன்.

கூடவே, கடைசியாக அவர் நிலத்தில் ஏர் ஓட்டும்போது நுங்கு வெட்டித்தந்தது, நீங்களும் அவரும் காட்டுவள்ளிக் கிழங்கு தோண்டிவரப் போனபோது உடன் வந்திருந்த எனக்காக வீட்டிலிருந்து எடுத்துவந்த கொழுக்கட்டையை தந்தது, வழிநெடுக்க என்னோடு கதைகள் பேசியபடி நடந்து வந்தது… யாவும் நினைவுக்கு வந்துபோனது. 

அவ்வழியாக நடந்துபோன எதிர்வீட்டு பார்த்தசாரதி அண்ணன், அவர் பின்னாலேயே மாடு பிடித்துப்போனவர், ஆலமரக் கிளைகளில் உட்கார்ந்து கத்திய காக்கைகள், சற்று தள்ளியிருக்கும் செடிசெட்டுகளில் கேட்ட சலசலப்பு சத்தம் எதையும் பொருட்படுத்தவில்லை.

”நல்லார்க்காரு… எப்பயாவது பேசுவாரு..’’ என்றேன்.

”ஒன் அப்பனும் நானும் பெரிய கூட்டாளிங்க…’’ என்று எதையோ சொல்ல நினைத்தவராய், அதோடு நிறுத்திக்கொண்டார்.

சிலநொடி மௌனத்துக்குப் பின்,

”நல்லாப் படிக்கிறீயா?’’ என்று கேட்டார்.

”ம்… படிக்கிறன் தாத்தா..’’ என்றேன்.

எதையோ யோசித்தவர்,

”ஒருநாளு ஒன் பெரிய அண்ணன்காரன் இர்க்கான்ல ஆறுமொகமா சண்மொகமா, அவன் பேண்ட்டு சட்டப் போட்டுனு வந்ததப் பாத்து, ‘என்னடா துலுக்கப் பய்யா… துலுக்கன் மாரியே சொக்காப் போட்டுனு ஆட்டினு வர்ற’ன்னு சொல்லி பைசிய காட்டிட்டன். அதப்பாத்த ஒன் அப்பன் கோவப்பட்டு, ‘வாடா’ன்னு ஒன் அண்ணனக் கூட்டுனு வூட்டுக்குப் போனவன்தான், அதுக்கப்றம் என்கிட்ட இன்னிக்கி வரிக்கும் பேசல..’’

சிறிதுநேரம் பேச்சை நிறுத்திவிட்டு, என்னைப் பார்த்தார்.

”நான் ரண்டுமூணு நாள்ல ஒன் அப்பன் பேசிடுவான்னுதான் நெனச்சன். அப்பயும் பேசாததுக்கப்றம்தான், நான் செஞ்சது எவ்ளவு பெரிய தப்புன்னு ஒறக்க ஆரம்பிச்சது..’’ என்று சொல்லியபடி,

என்னை தன் பக்கத்தில், படிக்கட்டில் வந்து உட்காரச் சொன்னார். போய் உட்கார்ந்தேன்.

”என்னதான் நெருங்கன கூட்டாளிங்களா இர்ந்தாலும் பெத்தப் புள்ளய பைசி காட்னா எந்த அப்பனா இர்ந்தாலும் கோவதானப்படுவான். ஒன் அப்பன் கோவப்பட்டது சரிதான், ஆனா அதுக்குனு சாவற வரிக்கும் பேசாம இர்க்க தண்டனய தந்தததான் என்னால ஜீர்ணிக்க முடில..’’ என்றவரின் கண்கள் லேசாகக் கலங்க ஆரம்பித்தது.

”யார் கிட்டயோ சொல்லிர்க்கான், ‘பாத்துப் பேசனாதான் கூட்டாளியா. பேசலனாலும் கூட்டாளிதான்னு’. அதக் கேட்டதுலர்ந்து அவனயும் அவன் கூட்டயும் தொலச்சத நெனச்சு பலவாட்டி ஒடஞ்சிர்க்கன். எந்த மூஞ்சிய வச்சினுப் போய் அவன்கிட்டப் பேசுவன். அதான் அவன் கூட இர்ந்த நாளுங்கள நெனச்சினு அப்டியே இர்க்கன்..’’ என்றதும், என்னையறியாமல் என் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.

சட்டென என் கையைப் பிடித்தவர்,

”ஒன் அப்பன மாரி ஒழப்பாளிய நான் எங்கயும் பாத்ததில்ல. அவன் பட்டக் கஷ்டத்த ஒர்த்தனும் பட்ருக்கமாட்டான். அப்டிலாம் இர்ந்து ஒங்கள வளத்து ஆளாக்கிர்க்கான். அதலாம் நெனச்சி நல்லாப் படிச்சு பெரியாளா வர்ணும், சரியா..’’ என்றார், கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு.

”ம்..’’ என தலையாட்டினேன்.

”நான் ஒன்னக் கூப்ட்டு பேசனதலாம் ஒன் அப்பன்கிட்ட சொல்லாத. என்னிக்காது நான் செத்ததுக்கப்றம் ஒருநாளு சொல்லு. அதுபோதும்..’’ என்றார், எதையோ நினைத்துப்பார்த்து தலையாட்டியபடி.

”கண்டிப்பா தாத்தா..’’ என்றேன்.

சட்டென மனத்துக்குள் ‘அவருக்கு ஏதாவது வாங்கித் தந்தால் என்ன?’ என்று தோன்ற… தயக்கத்தோடு, அதேசமயம் உங்களின் உயிர் நண்பர் எனும் உரிமையோடு,

”எதாது சாப்ட ஒங்குளுக்கு வாங்கினு வந்து தரவா தாத்தா?’’ என்றேன்.

எதுவும் சொல்லாமல் என்னையே பார்த்தவர், எதையோ யோசித்துவிட்டு,

”ம்..’’ என்றார், தலையை லேசாக ஆட்டி.

உடனே நான், ”ஒங்குளுக்கு என்னவேணும்னு சொல்லுங்க தாத்தா, வாங்கினு வர்றன்..’’ என்றதும்,

”ஜில்லுனு எதயோ வாங்கியாந்து குடிக்றாங்களே… அது பேரென்ன… பச்சயாக் கூட இர்க்குமே… அது ஒன்னு வாங்கினு வந்து தா போதும்..’’ என்றார்.

மகிழ்வோடு போய் செட்டியார் கடையிலிருந்து செவன்அப் வாங்கிவந்து தந்தேன்.

வாங்கி மிடரு மிடராகக் குடித்தவர், குடித்து முடித்துவிட்டு பாட்டிலை என் கையில் தந்து,

”எந்த சூதுவாதுக்கும் போவாம நல்லபுள்ளயா இர்க்கணும். அதான் எங்குளுக்கு என்னிக்கும் சந்தோசம்..’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து எழுந்து அவர் வீட்டைநோக்கி மெதுவாக தாங்கித் தாங்கி நடந்துபோனார்.

அதுதான் அவரை கடைசியாகப் பார்த்ததய்யா.

இது நடந்து சரியாக ஒன்பதாண்டுகள் ஆகிறது. சில வருடங்களுக்கு முன் அவர் இறந்துவிட்டதாக அம்மா சொல்லிக் கேள்விப்பட்டேன். நீங்களும் போய் அவரது உடலைப் பார்த்துவிட்டு, சில நொடிகள் அவரருகில் மவுனமாக நின்றுவிட்டு வந்ததாகச் சொன்னார்கள்.

அப்போதே உங்களிடம் வந்து இதையெல்லாம் சொல்லவேண்டுமென நினைத்தேன். ஆனால், ஏதோவொன்று சொல்லவிடாமல் தடுக்க இதுநாள்வரை சொல்லாமல் இருந்துவிட்டேன்.

திரும்பவும் நேற்றிரவு முதல் அதே நினைவாக இருக்க, எப்படியாவது இதை உங்களிடம் சொல்லவேண்டுமென்று நினைத்து, இதோ இக்கடிதம் வழியாகச் சொல்கிறேன் ஐயா.

நீங்கள் எந்தளவுக்கு உங்கள் நண்பர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தீர்களோ, அதே அளவுக்கு அவரும் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதை அவர் பேச்சின் மூலமாக என்னால் மனதார உணரமுடிந்ததய்யா.

அதிலும் நீங்கள் சொன்ன,

‘எப்பயும் பாத்துப் பேசனா மட்டும்தான் கூட்டாளியா..’

இவ்வார்த்தைகளை நினைத்து அவர் கண்கள் கலங்கியதைப் பார்த்து என் கண்களும் தானாக கலங்கிவிட்டதய்யா.

உங்களைப் பார்த்து சிறுவயது முதல் எத்தனையோ விஷயங்களை கற்றிருந்தபோதும், அவற்றில் நட்பின் மேன்மை குறித்தும், நண்பர்களை நடத்தும் விதம் குறித்தும் கற்றுக்கொண்டதை எப்போதும் முதன்மையான ஒன்றென்பேன்.

அதோடு, உங்களிடம் பல்லாண்டுகள் கேட்க நினைத்து கேட்காமல்போன வினாவுக்கு, உங்கள் நண்பரிடமிருந்து எதிர்பாராத விதமாக விடை கிடைத்ததை நினைத்தால் இப்போதும் வியப்பாகத்தான் இருக்கிறதய்யா.

கடந்த 2015-ஆம் ஆண்டு விகடனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, என் உயிர் நண்பன் திரு, அன்று தங்கள் நண்பர் செய்ததுபோல் மனத்துக்கு ஒவ்வாத காரியம் ஒன்றைச் செய்தான் என்பதற்காக அதோடு அவனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.

அதுமுதல் பலதடவை அவனும் என்னிடம் பேச எவ்வளவோ முயற்சித்திருக்கிறான். என்றபோதும் மனமானது ஏனோ அவனிடம் பேச என்னை அனுமதிக்கவில்லை.

ஆரம்பத்தில் சில நாட்களில் சரியாகிவிடும் பேசிவிடுவேன் என நினைத்தவன், ஒருகட்டத்துக்கு மேல் நான் ஒருபோதும் அவனிடம் பேசப்போவதில்லை என்பதை உணர்ந்து வருத்தப்பட ஆரம்பித்தான். அதோடு நான் சொன்ன வார்த்தைக்கு மதிப்பு தந்து, தன் வீட்டாரை எதிர்த்து தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டான்.

ஒருநாள் தற்செயலாக வேறொரு நண்பரிடம் பேசுகையில்,

‘திருதான் என்னைக்கும் என் மொத உயிர் நண்பன். அவன்கிட்ட பேசனாலும் பேசாட்டாலும் என்னிக்கும் இது மாறாது..’ என்றதைக் கேள்விப்பட்டு, நெகிழ்ந்துபோய் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான்.

அதைப் படித்ததும் என்னையறியாமல் கண் கலங்கிவிட்டேன்.

நட்பு என்பதும், நண்பர்கள் என்பவர்களும் நம் வாழ்வில் எப்போதும் மிக முக்கியமானது, முக்கியமானவர்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் மனத்துக்கு ஒவ்வாத ஒரு காரியத்தை செய்யும்போது ஒரு வார்த்தையும் சொல்லி அவர்களை காயப்படுத்தாமல், அவர்களுடனான நட்பை மட்டும் அப்படியே சுமந்துகொண்டு, அவர்களை அங்கேயே அப்போதே தூக்கிப்போட்டு வருவதைக் காட்டிலும் பெரும் தண்டனை ஒன்று இவ்வுலகில் இருப்பதாகத் தெரியவில்லை ஐயா.

தாங்கள் அன்று உங்கள் நண்பரைத் தூக்கிப் போட்டு வரும்போது எவ்வளவு வலியை உணர்ந்திருப்பீர்களோ, அதற்கு நிகரான வலியை நான் என் நண்பனை தூக்கிப்போட்டு வரும்போதும் உணர்ந்தேன் ஐயா.

அதேபோல் நீங்களும் உங்கள் நண்பரும் என்னதான் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், உங்களுக்குள் இருந்த நட்பை அதே அளவுக்கு நேசித்து, ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவரைப் பற்றித் தெரிந்துகொண்டு, ஏற்றத்தில் மகிந்தும், இறக்கத்தில் வருத்தப்பட்டும் வந்ததைப் போலத்தான் நானும் என் நண்பனும் இருக்கிறோம் ஐயா.

வாழ்வின் எத்தனையோ தருணங்களை அவன் இருப்பமையில் உணர்ந்திருக்கிறேன். அதேபோல் இப்போதும் அவன் இல்லாமையில் அவனுடனான நட்புமையுடன் உணர்ந்து வருகிறேன். ஆம்! ஐயா.

நட்பென்பது அடிக்கடி பார்த்துப் பேசிச் சிரித்து, குடித்து கும்மாளமிட்டு, ஊர் ஊராகச் சுற்றித் திரிதல் மட்டுமல்ல… அவரவர் இடத்தில் இருந்துகொண்டு, அவரவர் வேலைகளை செய்துகொண்டு, ஒருவருக்கொருவர் பார்க்காமல் பேசாமல் மனத்துக்குள் நினைத்துகொண்டு, அதே நட்புடன் வாழ்வின் கடைசி மூச்சுவரை இருத்தலும் நட்புதான் ஐயா. ஆம்!

‘எப்பயும் பாத்துப் பேசனா மட்டும்தான் கூட்டாளியா..’

இது உங்களின் வார்த்தைகள்.

‘திருதான் என்னைக்கும் என் மொத உயிர் நண்பன். அவன்கிட்ட பேசனாலும் பேசாட்டாலும் என்னிக்கும் இது மாறாது..’

இது என்னின் வார்த்தைகள்.

அவ்வளவுதான் ஐயா!

என்றும் நட்புடன்,

வடிவரசு

(August 27, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=