அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

அன்புள்ள ஐயாவுக்கு,

இரு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் காலை எட்டுமணி இருக்கும், வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து நகர்பேசியில் எதையோ வாசித்துக் கொண்டிருந்தேன்.

புதுப்புது இடங்களுக்குப் போய் அமர்ந்து வாசிப்பதும், எழுதுவதும் மிகப் பிடித்த ஒன்றெனக்கு. அப்படி நான் தேர்ந்தெடுக்கும் இடங்களில் எப்போதும் பேருந்து நிறுத்தங்களுக்கு முதன்மை இடமுண்டு.

அவ்வகையில் அன்றைய தினம் காலை ஏழரை மணி முதல் அங்கே உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஏதோவொரு சத்தம் கேட்க ஆரம்பித்தது. அதுவும் ஏற்கனவே எங்கோ கேட்டுப் பழகிய சத்தம்.

சிறிதுநேரம் மெல்லமாக கேட்ட சத்தம், ஒரு கட்டத்துக்குப் பிறகு அதிகமாகக் கேட்க, படிப்பதை நிறுத்திவிட்டு அது என்ன சத்தம், எங்கிருந்து வருகிறது என சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தேன்.

பக்கத்திலிருந்த பட்டுப்போன பெரிய மரத்தின் பாதிக்கிளையின் பக்கவாட்டில் உட்கார்ந்திருந்த அணில் ஒன்று, அவ்வழியாக வருவோர் போவோரைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தது. அக்குரலையும், அது உட்கார்ந்து கத்தும் விதத்தையும் பார்த்ததுமே உள்ளுக்குள் பதட்டமாக ஆரம்பித்தது.

அணில் கத்தி பலதடவை கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். ஒரு தடவை நம் வீட்டில் பிடித்துவந்து அட்டைப்பெட்டியில் வைத்துகூட சில நாட்கள் வளர்த்திருக்கிறேன். ஆனால், இப்படியெல்லாம் அது கத்தி ஒருபோதும் பார்த்ததில்லை. அதுவும் இவ்வளவு தீனமாக பெருங்குரலெடுத்து கத்துகிறதென்றால், ஒன்று ஏதேனும் பெரிதாக காயம்பட்டிருக்கவேண்டும். இல்லையெனில் பசி தாளாமல் இருக்கவேண்டும்.

அதைப் பார்த்தால் காயத்தால் கத்துவதுபோல் தெரியவில்லை. நிச்சயம் பசியால்தான் கத்தவேண்டும் என ஒருவாரு யூகித்துவிட்டேன். பசி… அதுவும் பெரும்பசி… அதனால்தான் மொத்த உயிரையும் தன் தொண்டையில் கொண்டுவந்து நிறுத்தி பெருங்குரலெடுத்து கத்துவதாய்த் தோன்றியது.

சுற்றிலும் பார்க்கிறேன். இரு தேநீர்க் கடை, ஓர் உணவகம் தாண்டி எக்கடையும் அங்கே திறந்திருக்கவில்லை. எழுந்து நின்று இருபக்கமும் சாலையின் முனை வரைக்கும் பார்க்கிறேன். வீடடைவு காலம் என்பதால் மக்கள் நடமாட்டமும், அவ்வழியாக வாகனத்தில் செல்வோரின் எண்ணிக்கையும் எப்போதைக் காட்டிலும் மிகக் குறைவாகவே இருந்தது.

இரண்டு கோடிக்கும் அதிகமானோர் வாழும் இச்சென்னை பெருநகரில் ஓருயிர் இப்படிப் பசியால் கத்துகிறது. அதைக் கேட்டும் கேட்காமலும் ஒரு கூட்டம் கடந்து போகிறது. பார்க்கப் பார்க்க மனம் கனத்தது. ஏதாவது செய்யவேண்டுமென பக்கத்தில் இருந்த உணவகத்திற்கு போய்,

”அண்ணா, தக்காளி இருந்தா ஒண்ணு கொடுங்கண்ணா..’’ என்றேன், வழியருகே உட்கார்ந்திருந்த கடையின் உரிமையாளரிடம்.

‘யார்ரா இவன், இங்க வந்து தக்காளி கேக்கறான்’ என்பது போல் பார்த்தவர்,

”தம்பி இது ஹோட்டல் கட..” என்றார்.

உடனே நான், ”தெரியுண்ணா, அங்க மரத்துல ஒரு அணிலு பசி தாங்காம ரொம்ப நேரமாக் கத்திட்டிருக்கு, பாவம். அதுக்கு தர்றதுக்குதான் கேக்கறன்..’’ என்றேன்.

என்னை மேலும் கீழும் பார்த்தவர், ”இல்ல..” என்றார், தலையாட்டியபடி.

சட்டெனப் பாக்கெட்டிலிருந்த பத்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவர் முன்னால் மேசைமேல் வைத்து,

”ண்ணா, இங்க பக்கத்துல எதும் கடைங்க இல்ல, அதான் உங்கக்கிட்ட வந்து கேக்கறன். சமயக் கட்ல இருந்தா ஒண்ணேயொண்ணு கொடுங்கண்ணா, நசுங்கிப் போனது இர்ந்தாக்கூட பரவால்ல. இந்தக் காச வேணா வச்சிக்கோங்க..’’ என்றதும்,

நான் ஏதோ அவரை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு,

”என்னப் பாத்தா உனக்கு கேணப்பய மாரி தெரியிதா? அவன்அவன் சோத்துக்கு வழியில்லாம செத்துட்டு இருக்கான். நீ என்னடான்னா அணிலுக்கு தக்காளி கொடு, மயிரு கொடுன்னு காலிலயே வந்ட்ட. ஒழுங்கு மரியாதயாப் போயிடு..’’ என்றார், இருக்கையிலிருந்து எழுந்து குரலை உயர்த்தி.

இவரிடம் கேட்டால் இனி வேலைக்காகாது என நினைத்துக்கொண்டு வெளியில் வந்து மரத்தடியில் நின்று பார்க்கிறேன். அந்த அணில் அதே இடத்தில் அதேபோல் இன்னமும் விடாமல் கத்திக்கொண்டிருந்தது. விட்டால் இன்னும் அரைமணி நேரத்தில் கத்தியே உயிரை விட்டுவிடும் போலிருந்தது.

என்ன செய்வதெனத் தெரியாமல் ஏதேதோ யோசிக்கிறேன். சட்டென நினைவு வந்தவனாய் அங்கிருந்து சற்று தொலைவில் சிக்னலுக்கு போகும் வழியிலிருக்கும் பழமுதிர்ச்சோலை நினைவுக்கு வர, வேகமாக அதைநோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நான்கைந்து கடைகள் தள்ளி வந்திருப்பேன். அதற்குள் யாரோ பின்னாலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தேன். யாரோ ஒருவர், வயதானவர். மெலிந்த உடலும், லேசான நரைத்த முடியும், மங்கிப்போன பழைய வேட்டியும் கட்டியிருந்தார். வேகமாக என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

‘என்னைதான் கூப்பிட்டாரா?’ என சைகையால் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன்.

பக்கத்தில் வந்தவர், மடித்துக் கட்டியிருந்த வேட்டிக்குள் கைவிட்டு, நன்கு பழுத்திருந்த தக்காளிப்பழம் ஒன்றை வெளியில் எடுத்து என்னிடம் நீட்டினார்.

‘யார் இவர், எதற்காகத் தருகிறார்?’ என்ற கேள்வியோடு, அவரைப் பார்த்தேன்.

”அந்த ஓட்டல்லதான் வேல செய்யறன் தம்பி. நீங்கப் பேசனத கேட்டுட்டிருந்தன். மனசு கேக்கல, அதான் ஓனருக்குத் தெரியாம சமயக்கட்ல இருந்து எடுத்தாந்துட்டன்..’’ என்றதும், நெகிழ்ந்து போய் அதை வாங்கிக்கொண்டு,

”ரொம்ப நன்றிய்யா..’’ என்று சொல்லிவிட்டு, எட்டி வேகமாக நடந்துபோய் அணில் கத்திக் கொண்டிருந்த அப்பட்டமரத்தின் பக்கவாட்டில் இருந்த சிறு முட்டின் மீது பார்ப்பதுபோல் அப்பழத்தை வைத்துவிட்டு, ஏற்கனவே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த இடத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன்.

சிறிதுநேரம் என்னையும், அங்கே வைத்துவிட்டு வந்த தக்காளியையும் மாறி மாறிப் பார்த்த அணில், கத்துவதை நிறுத்திவிட்டு மெல்ல இறங்கி பழத்திடம் வந்தது. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்பதுபோல் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, சட்டென அதனை தூக்கிக் கொண்டு வேகவேகமாக கிளையின் உச்சிக்குப் போய் அங்கிருந்த பொந்துக்குள் நுழைந்து கொண்டது.

மகிழ்வோடு அதைப் பார்த்துக்கொண்டிருந்தவன், ‘அப்பாடா, அதோடப் பசிய தீத்தாச்சி’ எனும் திருப்தியுடன், பாக்கெட்டிலிருந்த நகர்பேசியை எடுத்து விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.

நான்கைந்து நிமிடம் சென்றிருக்கும். மீண்டும் அவ்வணில் கத்தும் சத்தம். இம்முறை கூடுதல் குரல்களோடு. உடனே தலையை நிமிர்த்தி கிளையின் உச்சியில் பார்த்தேன். பொந்துக்குள் இருந்து வெளியேவந்த அவ்வணிலோடு சேர்ந்து இன்னுமிரண்டு சிறு அணில்கள் கத்துகின்றன.

சில நொடிகள் எதுவும் புரியவில்லை. பிறகுதான் புரிந்தது, இவ்வளவு நேரம் கத்தியது தாய் அணில். அது அதற்காக மட்டும் கத்தவில்லை, அதன் இரு பிள்ளைகளின் பசிக்காகவும் கத்தியிருக்கிறது. பசியைப் போக்கக் கிடைத்த ஒற்றைத் தக்காளியை தாயும், பிள்ளைகளும் சேர்ந்து பகிர்ந்து உண்டிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லத்தான் இப்போது கத்துகிறது. ஆம்! ஐயா.

இது புரிந்ததும் என்னையறியாமல் கண்கலங்க ஆரம்பித்தது. அப்படியே நகர்பேசியை அணைத்து பாக்கெட்டில் வைத்துவிட்டு, மெல்ல எழுந்து வடதிசை நோக்கி சாலையோரமாக நடக்கிறேன். ஏதேதோ கேள்விகள். எதை எதையோ யோசிக்கிறேன்.

திரும்பவும் பின்னால் யாரோ கூப்பிடும் குரல். திரும்பிப் பார்த்தால், அதே பெரியவர்.

”நில்லு தம்பி..” என பக்கத்தில் வந்தவர்,

”தம்பி எல்லாத்தயும் பாத்துனுதான் இருந்தன். கவலப்படாமப் போங்க. தெனம் ஒரு தக்காளி அதுக்கு நான் வச்சிடுறன்..’’ என்றதும்,

என் கண்கள் இன்னும் அதிகமாக கலங்க ஆரம்பித்துவிட்டது. உள்ளிருந்து வார்த்தைகள் எழவில்லை. கையெடுத்துக் கும்பிட்டபடி, ”நன்றி” சொன்னேன்.

லேசாகப் புன்னகைத்தவர், பக்கத்தில் வந்து என் கைகளைப் பிடித்துக் கீழே தாழ்த்தி,

”எதுக்கு தம்பி பெரிய வார்த்தலாம் சொல்றீங்க. அதும் எனக்குப் புள்ளமாரி தான. பாத்து பத்தரமா போங்க தம்பி..’’ என்று சொல்லிவிட்டு, திரும்பி வந்த வேகத்தில் தான் வேலைபார்க்கும் உணவகம் நோக்கி நடந்து போனார்.

அவர் சொன்ன வார்த்தைகள் என்னை மேலும் நெகிழ வைத்தது. நிச்சயம் அவர் நம்போல் கிராமத்தவராகத்தான் இருக்கவேண்டும் எனத் தோன்றியது. சட்டென சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்றை மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது. ஆம்! ஐயா.

அப்போது நாம் குத்தகைக்கு பயிரிட்டுவந்த நிலத்தின் கிணற்றோரம் இருந்த மாமரத்தில் நூற்றுக்கும் அதிகமான காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தது. முற்றியதும், எல்லாக் காய்களையும் பறித்துவிட்டு, கிளைக்கு நான்கைந்து காய்களை மட்டும் பறிக்காமல் அப்படியே விடச் சொன்னீர்கள்.

பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த நான்,

”ஏன்ய்யா அத மட்டும் பறிக்காம வுடச்சொல்ற?’’ என்றதற்கு,

”பறிச்சதலாம் நாம தின்னப்போறம்ல… அதுமாரி பறிக்காம வுட்றது… அணிலு கிளி காக்கா குருவிங்கலாம் தின்றதுக்கு..’’ என்றீர்கள்.

அதைக் கேட்டதும் ஒருபக்கம் வியப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ‘நாம தின்னாம, காக்கா குருவிங்களுக்குலாமா வுடுவாங்க..?’ என்றும் தோன்றியது. அதை உடனே கேட்டுவிட்டேன் உங்களிடம்.

சத்தமாகச் சிரித்து நீங்கள், ”அட மடயா… இந்த மண்ணும், இதல வெளயிறதும் எல்லா உயிருங்களுக்கும் சொந்தமானது. நமக்குத் தேவயானத எடுத்துக்குனு மத்தத மத்த உயிருங்களுக்கு உட்டுடனும். அதான் மொற. அதான் மனுசத்தனம்..’’ என்றதும், ஏதோ அரைகுறையாகப் புரிந்தவனாக தலையாட்டினேன்.

அதன்பிறகான ஆண்டுகளில் இவ்வார்த்தைக்கான முழுமையான அர்த்தத்தை கொஞ்ச கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஆம்! ஐயா.

மாமரத்தில் காய்க்கும் காய்களை எல்லாம் பறித்துக்கொண்டு, ஆங்காங்கே தெரிந்தும் தெரியாமலும் விட்டுவிடும் காய்களை நம்மூரில் தப்புக் காய்கள் என்போம். உண்மையில் அதுதான் சரியான காய்கள் எனத் தோன்றும்.

அதேபோல் நெல்லறுக்கும்போது உதிரும் நெல்மணிகள், வேர்க்கடலை பிடுங்கும்போது மண்ணோடு பிய்ந்து நின்றுவிடும் மல்லாட்டைகள், குச்சி வள்ளிக்கிழங்கு பிடுங்கியெடுக்கும்போது உடைந்து மண்ணில் நின்று விடும் கிழங்குகள் என ஒவ்வொன்றையும் உற்று கவனிக்க ஆரம்பித்தேன்.

அவை யாவும் நம்மைச் சுற்றியுள்ள உயிர்களுக்கானது. எறும்பு முதல் காக்கா, குருவி, எலி உள்ளிட்ட சக உறவுகளுக்கானது. ஆம்! ஐயா, இதை முழுமையாக உணர்ந்தபோது, உயிர்கள் மீதான நேசமும் அக்கறையும் பல மடங்கு எனக்குள் கூடியிருந்ததை அறியமுடிந்தது.

அதுமட்டுமல்ல… ஒருநாள் அணிலோ, கிளியோ கடித்துப்போட்ட இரு கொய்யாக் காய்களை எடுத்து வந்து உங்களிடம் காட்டி,

”இத ஏன்ய்யா பாதி மட்டும் தின்னுட்டு மீதிய போட்டுட்டு போயிடிச்சி?’’ என்றதற்கு,

”எல்லா உயிரும் இங்க அதுக்கு தேவயானத மட்டும்தான் தின்னும். வேண்டிது போக மத்தத மத்த உயிருங்களுக்கு வுட்டுட்டுப் போயிரும். அப்டி வுட்டதுதான் இது..’’ என்றீர்கள்.

உடனே நான், ”அப்ப நாம மட்டும்தான் எல்லாத்தயும் நாளிக்கி, நாளான்னிக்கின்னு சேத்து வக்கறமாய்யா?’’ என்றதும், எதுவும் சொல்லாமல் மெல்ல எழுந்து, ‘ஆமாம்’ என்பதுபோல் தலையசைத்து சிரித்துவிட்டுப் போனீர்கள்.

இன்னொருநாள் மதியம் தென்னை மரத்தடியில் போட்டிருந்த கல்மீது உட்கார்ந்து, இரு மாம்பழங்களை துண்டு துண்டாக வெட்டிக் கடித்துக்கொண்டு கூழ் குடித்தபோது, கால்வாய் ஓரத்திலிருந்த பப்பாளி மரத்திலிருந்து நடுநடுவில் கத்தியபடி நம்மையே பார்த்துக்கொண்டிருந்த அணிலைப் பார்த்துவிட்டு, மெல்ல எழுந்துபோய் இரண்டு மாம்பழத் துண்டுகளை கரைமீது வைத்துவிட்டு வந்தீர்கள்.

அதை நீங்கள் அணிலுக்காகத் தான் வைத்தீர்கள் எனத் தெரிந்தும்,

”ஏன்ய்யா எடுத்துனு போய் அங்க வச்சிட்டு வந்த?’’ என்றேன்.

தெரிந்துதான் நான் அக்கேள்வியை கேட்கிறேன் என்பதை அறிந்தவராய், ”அணிலு திங்கறதுக்கு எதுவும் இல்லாம பாவம் பசில நாம தின்றதப் பாத்துக் கத்துது. அதான் போய் அதுக்கும் ரண்டு துண்டு வச்சிட்டு வந்தன்..’’ என்றீர்கள்.

பாதி மரத்திலிருந்த அணில் மெல்ல இறங்கி வந்து, கீழே வைத்திருந்த மாம்பழத் துண்டுகளில் ஒன்றை அங்கேயே கடித்துத் தின்றுவிட்டு, இன்னொன்றை எடுத்துக்கொண்டு வேகவேகமாக மேலேறி உச்சியில் போய் உட்கார்ந்தது.

அதையே பார்த்துக்கொண்டிருந்த என்னைக் கூப்பிட்ட நீங்கள்,

”ஒன்னமாரி அதும் ஒரு புள்ளதான… அதான் மனசு கேக்காமப் போய் வச்சிட்டு வந்தன்..’’ என்றதும், நெகிழ்ந்துபோனேன்.

இப்போதிதை நினைத்துப் பார்க்கையில், எத்தகைய உயர்ந்ததொரு வாழ்க்கையை நீங்களும், நம் முன்னோர்களும் வாழ்ந்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறதய்யா.

வெறும் ஈராயிரம்பேர் வாழும் நம் சிறுகிராமத்தில், ஒருநாளும் ஓருயிரும் இப்படிப் பசியால் பெருங்குரலெடுத்து கத்தியதைப் பார்த்ததில்லை ஐயா. ஆனால் இரண்டு கோடிபேர் வாழ்வதாக சொல்லும் இச்சென்னை பெருநகரில், தினந்தோறும் இப்படி ஆயிரக்கணக்கான சிற்றுயிர்கள் (மனிதர்கள் தனிக்கணக்கு) பசியால் துடித்துக் கத்துகிறது. பசி பொறுக்காமல் மாய்ந்தும் போகின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், அவ்வுயிர்கள் பசியால் கத்தும் இடங்கள்தோறும் சுவர்களில் எத்தனை எத்தனையோ தானபிரபுக்களின், வள்ளல்களின், புரட்சியாளர்களின் சிரிக்கும் சரித்திர சுவரொட்டிகள் ஒட்டியிருப்பதுதான் ஐயா.

அன்றும் அப்படித்தான் யாரோ ஒருவரின் பிறந்த நாளுக்காக, வீதிகள்தோறும் வரிசை வரிசையாக சுவரொட்டி அடித்து ஒட்டியிருந்தார்கள். எப்படியும் பல லட்ச ரூபாய்கள் அதற்காக செலவழித்திருப்பார்கள். அதில் ஒரு பகுதியை நம்மைச் சுற்றியுள்ள சிறு உயிர்களுக்கு உணவுக்கு ஒதுக்கி இருந்தாலே போதும், அவர் மட்டுமல்ல… அவர் பரம்பரையே அவைகளின் வாழ்த்தால் சிறப்போடு வாழ்ந்திருக்கும்.

ஆனால் அவர்கள் யாரும் செய்ய நினைக்காத ஒன்றை, ஐந்துக்கும் பத்துக்கும் உணவகத்தின் மேசையைத் துடைத்து, சாப்பிட்டவர்களின் எச்சில் இலைகளையும், தட்டுகளையும் எடுக்கும் அப்பெரியவர் செய்வதாக சொல்லிவிட்டுப் போகிறார்.

உண்மையான வள்ளல் யார் என தெரிந்து கொண்டவனாய் அங்கிருந்து மெல்ல நடந்து அறைக்கு வந்து சேர்ந்தேன் ஐயா.

கடந்த இருவாரமாக இச்சம்பவம் குறித்து யோசிக்கும்போதெல்லாம்… தாங்கள் சொன்ன,

‘அட மடயா… இந்த மண்ணும், இதல வெளயிரதும் எல்லா உயிருங்களுக்கும் சொந்தமானது. நமக்கு தேவயானத எடுத்துக்குனு மத்தத மத்த உயிருங்களுக்கு உட்டுடனும். அதான் மொற. அதான் மனுசத்தனம்..’

இவ்வார்த்தைகளும்… அப்பெரியவர் சொன்ன,

‘எதுக்கு தம்பி பெரிய வார்த்தலாம் சொல்றீங்க. அதும் எனக்குப் புள்ளமாரி தான. பாத்து பத்தரமா போங்க தம்பி..’

இந்த வார்த்தைகளும்… திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்துபோகிறது.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறதய்யா.

மனிதர்களில் மனிதத் தன்மை கொண்டவர்கள் எங்கிருந்தாலும், எந்நிலையிருந்தாலும் மனிதர்களாகவே இருக்கிறார்கள்; மனிதர்களாகவே நடந்துகொள்கிறார்கள்.

மனிதத்தன்மையற்றவர்களோ… கோடியில் படுத்துறங்கினாலும், தேசத்தைக் கட்டியாண்டாலும் மனிதஉரு மிருகங்களாகவே இருக்கிறார்கள்; நடந்தும் கொள்கிறார்கள்.

அவ்வளவுதான் ஐயா, இருவருக்கும் வித்தியாசம்.

என் வேண்டுதல் எல்லாம் இங்கே ஒன்றே ஒன்றுதான் ஐயா. இவர்களில் என்றைக்கும் முன்னவனாய் இருந்துவிட்டு மடிந்து மண்சேரவே எப்போதும் விரும்புகிறேன் ஐயா.

உங்கள் மகனாகப் பிறந்துவிட்டு, இதைவிட வேறென்ன பெரிதாகக் கேட்டுவிடப் போகிறேன் ஐயா?!

என்றும் மனிதனாய்,

உங்கள் வடிவரசு

(August 23, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=