அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அன்புள்ள ஐயாவுக்கு,

சிறுவயது முதல் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டவை பற்றி யோசித்துப் பார்க்கிறேன். உண்மையில் நீங்கள் நேரடியாக சொல்லித்தந்து கற்றதைக் காட்டிலும், மறைமுகமாக தங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் மிக அதிகமாக இருக்குமென இப்போது தோன்றுகிறதய்யா.

அதிலும் குறிப்பாக வீட்டிலிருக்கும் பொருட்களை, அவை உயிரற்றதென்று தெரிந்தும் உயிருள்ள மனிதர்களைப் போன்று உயர்வாகப் பார்க்கும் பார்வையும், நடத்தும் விதமும் என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவது.

கொடுவாள், அருவாள், ஆக்கருவாள், மண்வெட்டி, களைவெட்டி, உளி, கடப்பாறை, பாரக்குச்சி, சில்லாக்கோல், சொண்டி, ஊத்தா, தேர், காவடி, பொனக்கட்ட, ஏணி, கலப்பை, நுகத்தடி, உலக்கை, மத்து, மணக்கட்ட, ஊதாங்கோல்… இப்படி எத்தனையோவற்றை அதற்கு உதாரணமாக சொல்லலாம் ஐயா.

ஒரு தடவை வீட்டிலிருந்த பெரிய கொடுவாளை துரிஞ்சி மரத்தடியில் போட்டிருந்த தீட்டுக்கல்லில் கொஞ்சமாக மண்ணள்ளிப் போட்டு ‘ச்ரக் ச்ரக்… ச்ரக் ச்ரக்..’ என தேய்த்து தீட்டிக்கொண்டிருந்தீர்கள்.

பல தடவை பார்த்திருக்கிறேன், அந்தக் கொடுவாளை மட்டும் கூடுதல் அக்கறையோடும், பொறுப்போடும், ஆசையோடும் நீங்கள் கையாள்வதாகத் தோன்றும்.

‘எனது இச்சந்தேகத்தை தங்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டால் என்ன?’ என்று தோன்ற, வாசலோரத்தில் போட்டிருந்த கல்மீது உட்கார்ந்து ஆட்டுக்குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நான், ஓர் ஆட்டுக்குட்டியை மட்டும் தூக்கிக்கொண்டு வந்து தங்கள் அருகில் உட்கார்ந்தேன்.

உட்கார்ந்து நீங்கள் தீட்டுவதையும், அப்போது உங்கள் முகம் கொள்ளும் மகிழ்ச்சியையும் சற்றுநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்,

”ஐயா..” என்றேன்.

தீட்டுக்கல்லில் கொடுவாளை சாய்த்து வைத்துக்கொண்டு, அதன் நுனிமீது ஒரு கையை லேசாக அழுத்திப்பிடித்து இன்னொரு கையால் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தீட்டிக்கொண்டிருந்த தாங்கள், தீட்டுவதை நிறுத்திவிட்டு மெல்ல தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்து,

”என்னய்யா..” என்றீர்கள்.

உடனே நான், ”ஏன்யா எப்பயும் இந்தக் கொடுவாள மட்டும் இவ்ளோ பாசமாப் பாத்துக்கற?’’ என்றேன்.

இக்கேள்வியை நான் கேட்பேனென எதிர்பார்க்கவில்லை என்பதை உங்கள் முகமாற்றத்தை வைத்தே என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது.

”என்ன கேட்ட..?’’ என்றீர்கள், சிலநொடிகள் என்னைப் பார்த்துவிட்டு.

மீண்டும் எனது கேள்வியைக் கேட்டேன்.

லேசாக உதடசைத்து சிரித்த நீங்கள்,

”இங்க இருக்க எல்லாப் பொருளுக்கும் ஒரு கத இருக்கு. அத எப்ப வாங்கனம், எங்க வாங்கனம், யார் கூட வாங்கனம், யார் வாங்கித் தந்தாங்க, யார் செஞ்சதுன்னு. இது எங்கைய்யா வச்சிர்ந்த கொடுவா. எப்டியும் செஞ்சி நூறு வருசத்துக்கு மேல ஆயிருக்கும். எங்கைய்யா புடிச்சி வெட்னது… அவரு கை பட்டது… அவர் நெனவா நம்மக்கிட்ட இருக்க ஒன்னு இதான்..’’ என்றீர்கள்.

நீங்கள் அப்படி சொன்னதைக் கேட்டதும், கையில் வைத்திருந்த ஆட்டுக்குட்டியை சட்டெனக் கீழே விட்டுவிட்டு, மெதுவாக அக்கொடுவாளை தொட்டுப் பார்த்தேன். ஆம்! ஐயா.

என் தாத்தாவின் கரம் பட்ட கொடுவாள், அவர் கரம் போலவே, அவரது கரத்தை தொட்டது போன்றே இருந்தது. அதுவும் நான் பிறக்கும் முன்னமே இறந்துபோன தாத்தாவின் கரம். உடல் சிலிர்க்க உணர்ந்தேன்.

அதுமுதல் பார்க்கும் எப்பொருளிலும் வெளியில் தெரியாத உயிரொன்று உள்ளிருப்பதாய்த் தோன்ற ஆரம்பித்தது. அப்படி என்னிடம் இருந்துகொண்டு, என்னுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பயணப்படும் ஒன்றாக, அதுவும் நீங்கள் வாங்கித் தந்த உயர்பொருளாக என் ஹீரோ பேனாவைச் சொல்வேன். ஆம்! ஐயா.

ஊரிலிருந்து பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி விடுதிக்கு என்னை விட்டுவர உடன் வந்த பழனி அண்ணனிடம், தாங்கள் சேர்த்து வைத்த காசிலிருந்து ஐம்பது ரூபாயை தனியாக எடுத்துத் தந்து, ‘இதல தம்பிக்கு எழுதர்துக்கு நல்ல பேனா ஒண்ணு வாங்கித் தந்துட்டு வா..’ எனச் சொல்லி, அப்பணத்தில் அண்ணன் வாங்கிவந்து தந்துவிட்டுப் போன ஹீரோ பேனாவை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டேன் ஐயா.

அதுவும் உங்களையெல்லாம் விட்டுவிட்டு, அவ்வளவு தூரம் சென்றிருந்த எனக்கு, அந்த ஹீரோ பேனாவைப் பார்க்கும்போது நீங்களே உடன் இருப்பதாகத் தோன்றும். அதை கையிலெடுத்து ஒவ்வொரு தடவை எழுதும்போதும், உங்கள் கை பிடித்து எழுதுவது போன்றிருக்கும்.

2006-ல் இருந்து இப்பேனா என்னுடன் பயணித்து வருகிறது. வகுப்பில் ஆசிரியர் நடத்துவதை நோட்டில் எழுதுவது தொடங்கி, அனைத்து தேர்வுகளையும் இப்பேனாவில்தான் எழுதியிருக்கிறேன். பலரும் என்னைக் கிண்டல் செய்வார்கள், ‘என்னடா ஸ்கூல் பையன் மாரி இன்னும் இங்க்கு பேனாவுல எழுதிட்டிருக்க..?’.

சில பேராசிரியர்கள் கூட சொல்லியிருக்கிறார்கள், ‘இங்க் பேனாவுல எழுதனா வேகமா எழுதமுடியாது. மை பேனாவுல எழுது..’.

என்றபோதும் நான் தொடர்ந்து அப்பேனாவில்தான் எழுதினேன். யாவரும் சொன்னதற்கு மாறாக மிக வேகமாக, அழகான கையெழுத்துடன் பக்கம் பக்கமாக எழுதினேன். என் அளவுக்கு தேர்வில் ஒருவரும் என்வகுப்பில் வேகமாகவும், அதிகமாகவும் எழுதியதில்லை. மூன்று மணி நேரத்தில் ஐம்பது பக்கம் தாண்டியெல்லாம் கூட பல தடவை எழுதியிருக்கிறேன்.

முதலில் கேலி பேசிய பலரும் வியந்து பார்க்க ஆரம்பித்தார்கள். சிலர் என்போன்று ஹீரோ பேனா வாங்கி எழுதவும் தொடங்கினார்கள். பெரும் வில்லாளனின் பலம் அவன் பயன்படுத்தும் வில்லைப் பொருத்தும் அமையும் என்பார்கள். அப்படித்தான் ஐயா இருக்கும் நீங்கள் வாங்கித் தந்த பேனாவை ஒவ்வொரு தடவை எடுத்து எழுதும்போதும்.

அதுவும் மனம் உடையும் தருணங்களிலும், வீட்டு ஞாபகம் அதிகமாக வரும்போதும், தங்களைப் பார்க்க வேண்டுமென்று தோன்றும்போதும் பாக்கெட்டில் இருக்கும் பேனாவை கையிலெடுத்து பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன்.

இப்போது யோசித்துப் பார்க்கையில் 2006 முதல் இப்பேனாவைக் கொண்டு குறைந்தது பத்தாயிரம் பக்கமாவது எழுதியிருப்பேன் என்று தோன்றுகிறது.

அதிலும் இளங்கலை முடித்துவிட்டு முதுகலை லயோலாவில் சேர்ந்த புதிதில், நான் ஹீரோ பேனா வைத்து எழுதுவதைப் பார்த்த பலரும் ‘சரியான ஊர்க்காரன்’ என நினைத்தையும், ஓரிருவர் வாய் திறந்து கேட்டதையும் நினைத்துப் பார்க்கையில் இப்போது சிரிப்புதான் வருகிறதய்யா.

இது வெறும் பேனாவல்ல. என் முதல் ஹீரோவான நீங்கள் வாங்கித் தந்த பொக்கிஷம். பள்ளியில் எப்போதும் சராசரி மாணவனாக இருந்த என்னை, முதல் தடவையாக வகுப்பில் முதல்மதிப்பெண் வாங்கவைத்து ஹீரோவாக்கி ரசித்தது. ஆம்! ஐயா.

ஒரு பொருள், பொருள் என்பதைத் தாண்டி… அதற்குப் பின்னாலுள்ள அதை தந்தவர், தந்த சூழல், தந்த காரணம், வாங்கிய இடம் போன்றவற்றால் அதன் மதிப்பானது பலமடங்கு கூடுவதை மனதார உணர்ந்த தருணங்கள் பல உண்டு. அதில் ஒன்றுதான் நான் முதல் தடவையாக இப்பேனாவைக் கொண்டு எழுதிய தேர்வில் வகுப்பில் முதல்மதிப்பெண் வாங்கியது.

அதிலும் ஒருதடவை இப்பேனாவைத் தொட்டு நீங்கள் உங்கள் கையெழுத்தைப் போட வேண்டும், அதைப் பார்த்து நான் ரசிக்க வேண்டுமென ஆசைப்பட்டு, வெறுமனே என் நோட்டு ஒன்றை எடுத்து வந்து நீட்டி,

”இங்க ஒரு கையெழுத்துபோடுய்யா..’’ எனச் சொன்னபோது,

மகிழ்வோடு என் கையிலிருந்த பேனாவை வாங்கியதும், அதைக் கொண்டு கையெழுத்து போட்டதும் இப்போதும் மனக்கண்ணில் உள்ளதய்யா.

அதுவும் அன்று இப்பேனா தாங்கள் சொல்லி அண்ணன் வாங்கித் தந்த பேனாதான் எனப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டவராய் உற்சாகத்தோடு வாங்கி எழுதிய காட்சியை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டேன் ஐயா.

‘இங்க இருக்க எல்லாப் பொருளுக்கும் ஒரு கத இருக்கு. அத எப்ப வாங்கனம், எங்க வாங்கனம், யார் கூட வாங்கனம், யார் வாங்கி தந்தாங்க, யார் செஞ்சதுன்னு..’

தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகளின் முழுமையான அர்த்தத்தை, இந்த ஹீரோ பேனாவை எடுத்தெழுதும் ஒவ்வொரு தடவையும் மனதார உணர்ந்திருக்கிறேன் ஐயா.

இப்போதும் இந்த ஹீரோ பேனாவை என்னுடன் பத்திரமாக வைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக. ஒரு நற்துணையாக, பேராயுதமாக, பொக்கிஷமாக என்னுடன் இருந்து வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தடவையாக வெளிநாட்டுக்கு விமானத்தில் பயணித்தபோது துணையாக உடன் எடுத்துப் போயிருந்தேன். பல ஆயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, இது என்னிடம் வந்தது முதலான நினைவுகளை அசைபோட ஆரம்பித்தேன்.

மலேசியாவின் கோலாலம்பூரில் 36-வது மாடியில் தனியறையில் தங்கியிருந்தபோது, இரவின் மின்னொளியில் மிளிரும் பெருநகரை ரசித்துக்கொண்டு, இப்பேனாவில் தங்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருக்கிறேன். இன்னும் பல தேசங்களுக்கும் என்னுடன் எடுத்துச் செல்ல நினைத்திருக்கிறேன். ஆம்! ஐயா.

பொருள் என்பது வெறும் பொருள் மாத்திரமல்ல… நினைவு சார்ந்தது. உணர்வு சார்ந்தது. உயிர்ப்பு சார்ந்தது. எதிலும் பயனை மட்டுமே பார்க்கும் கண்களுக்கு இது ஒருபோதும் புலப்படாது. புரியாது.

அதிலும் பயனோடு சேர்த்து பொருளின் மதிப்பை, அதன் விலையை வைத்து மதிப்பிடும் மனத்துக்கு எந்நாளுமதன் மேன்மை புரியப் போவதில்லை.

தாங்கள் வாங்கித் தந்த ஹீரோ பேனாவின் விலை வெறும் முப்பது ரூபாயாக இருக்கலாம். ஆனால் இது நீங்கள் வாங்கித் தந்தது. அதுவும் ஆசை ஆசையாக சேர்த்து வைத்தப் பணத்தில். அன்போடும், மகிழ்வோடும். அதனால் விலைமதிப்பற்றது. பத்து பவுன் தங்கத்தில் செய்த பேனாவானாலும் இதற்கு ஒருபோதும் நிகராகாதய்யா.

பொருளின் மதிப்பை உணர்ந்த கடைசி தலைமுறை நானாகத்தான் இருப்பேன் ஐயா. இப்போதிருக்கும் இளம் தலைமுறையினர் யாரும் பொருட்களை மதிப்பதாகத் தெரியவில்லை. அதிலும் அண்மையில் கண்ட காட்சி ஒன்று என் மனத்தை பதைபதைக்கச் செய்தது.

நண்பனின் மாமா பையன் நாற்காலியில் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தான். சட்டென அவன் கையிலிருந்த பேனா தவறி கீழே விழுந்து விட்டது. குனிந்தெடுக்க சோம்பல் பட்டுக்கொண்டு, காலால் விரலிடுக்கில் பிடித்துத் தூக்கி கையருகில் கொண்டுவந்து எடுத்து எழுதுகிறான்.

அதுவோர் எழுதும் பொருள், அதற்கு மதிப்பளிக்க வேண்டும், இறைக்கு நிகரானது என்ற எண்ணமே அவனிடம் கடுகும் இல்லை. பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டேன். சொன்னாலும் புரியாது அவனுக்கு. அவனைப் பொறுத்தவரைக்கும் எழுதிவிட்டு தூக்கிக் குப்பையில் போடும் ஒரு பொருள் அது, அவ்வளவுதான்.

ஆனால் தாங்களோ, தங்கள் ஐயா பயன்படுத்திய கொடுவாளை, அதுவும் நூறாண்டுகள் கடந்ததை உயர் பொக்கிஷமாக, உயிருள்ள உங்கள் ஐயாவாக நினைத்து, அன்போடு மதிப்பளித்து இன்னமும் பயன்படுத்தி வருகிறீர்கள்.

இப்படி தாங்கள் சிறுவயது முதல் சேர்த்து வைத்திருக்கும்  எல்லாப் பொருட்களுக்குப் பின்னாலும் யார் யாரோ இருக்கக்கூடும். எத்தனை எத்தனையோ அழகிய நினைவுகளும், நிகழ்வுகளும், கதைகளும் இருக்கக்கூடும். அதனை உணரும் என் போன்றவர்களால் மட்டுமே அறிய முடியும். ஆம்! ஐயா.

பொருளை வெறும் பொருளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு இது முட்டாள்தனமாகத் தோன்றலாம். அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். ஆனால், அதனை உணர்ந்தவர்களால் மிக எளிதில் அறியவும், புரிந்துகொள்ளவும் முடியும். அவ்வகையில் பார்த்தால் மிக மிகக் குறைவானவர்களே இப்பெரும் பூமியில் இருப்பதாக தோன்றுகிறதய்யா.

தங்களைப் போன்று நானும் உறவுகளின் நினைவுகளாய், நினைவுகளின் உயிர்ப்புகளாய் எத்தனையோ பொருட்களை என்னுடன் வைத்திருக்கிறேன். அதில் முதல் முக்கியமான மூன்று… தாங்கள் வாங்கித்தந்த ஹீரோ பேனாவும், முத்துசாமி ஐயா ஆசையாசையாய் எனக்காக செய்து தந்த எழுத்து மேசையும், என்னவள் தந்துவிட்டுப் போன சிறு கரடி பொம்மையும்.

‘இங்க இருக்க எல்லாப் பொருளுக்கும் ஒரு கத இருக்கு. அத எப்ப வாங்கனம், எங்க வாங்கனம், யார் கூட வாங்கனம், யார் வாங்கி தந்தாங்க, யார் செஞ்சதுன்னு..’

தாங்கள் சொன்னது எத்தனை உண்மையானது, உயிர்ப்பானது என்பதை முன்னைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இப்போது யோசிக்கையில் உணர்கிறேன் ஐயா.

சென்னையிலிருக்கும் என்னிடமிருந்து தாங்கள் இருநூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும், என்னுடன்தான் இருக்கிறீர்கள். ஏழாண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாக சொன்ன முத்துசாமி ஐயா இறக்கவில்லை, இப்போதும் என்னறையில் உயிரோடுதான் இருக்கிறார். ஒன்பதாண்டுகளுக்கு முன் என்னை வேண்டாமென தூக்கிப்போட்டுப் போனவள் எங்கும் செல்லவில்லை, இதோ என்னருகில்தான் இருக்கிறாள். ஆம்! ஐயா.

உயிரற்ற பொருளிலும் உயிரைப் பார்ப்பது கலைஞனின் குணம் மாத்திரமல்ல, நுண்ணுணர்வுள்ள எந்தவொரு மனிதரின் குணமும் என்பதை தங்களிடமிருந்து கற்றுக் கொண்டவன் நான்.

இதனை… இறப்பை நோக்கிப் பயணப்படும் மனிதர்களை இன்னும் இன்னும் அழகாக, இன்னுமின்னும் அர்த்தமுள்ளதாக வாழவைக்கும் மிக முக்கியப் பண்பாகப் பார்க்கிறேன். பின்பற்றுகிறேன். ஆம்! ஐயா.

எப்போதும் பெரிய ‘ஹீரோ’வின் நினைவில்,

இச்சின்ன ‘ஹீரோ’

(August 22, 2020)

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=